http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 156

இதழ் 156
[ ஜூலை 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 1
இது செய்யேனாயின் இப்படி ஆவதாக
மதங்கேசுவரம் - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 2
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும் (ஐஹொளே தொடர்ச்சி)
அடியார் குலத்துக் கடைசி விளக்கு
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 3
இதழ் எண். 156 > இலக்கியச் சுவை
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 3
மா.இராசமாணிக்கனார்


2. போர்

பத்துப்பாட்டுள் முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை என்னும் மூன்று பாட்டுகளிலேதான் போர் பற்றிய செய்திகள் மிகுதியாயுள்ளன. ஏனையவற்றில் போரைப்பற்றிய சில குறிப்புகளே உள்ளன.

எயினர் அரண்

தொண்டைமான் திரையனது ஆட்சிக்கு உட்பட்ட தொண்டை நாட்டில் எயினரது அரண் சிறப்புக் கூறப்பட்டுள்ளது. பாலை நிலத்தில் எயினர் (வேட்டுவர்) வாழ்ந்தனர். அவர்கள் குடியுருப்புக்கு அப்பால் எயினர் அரண் இருந்தது. அதனுள் வீடுகள் இருந்தன. அவற்றில் பகைவரைக் குத்திக்குத்தி முனை மழுங்கின வேல்கள் பழுது பார்க்கப்பட்டு வரிசையாய்ப் பலகைகளிற்செருகி வைக்கப்பட்டிருந்தன; விற்கள் சார்த்தி வைக்கப்பட்டிருந்தன. அம்பறாத் தூணிகளில் அம்புகள் வைக்கப்பட்டிருந்தன. அவ்வில்லங்களுக்கு எதிரில் ஒரு பந்தல் இருந்தது. அதில் அம்புக் கட்டுகளும் கடிய ஓசையை உண்டாக்கும் ‘துடி’ என்ற இசைக்கருவிகளும் வைக்கப்பட்டிருந்தன. வேல், வில், அம்பு, துடி ஆகியவை வைக்கப்பட்டிருந்த இல்லங்களைக் காக்கக் காவல் இல்லம் ஒன்று இருந்தது. அவ்வில்லத்துத் தூண்களில் வேட்டைநாய்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தன. இத்துணை இல்லங்களையும் சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அதனைச் சுற்றிலும் காவற்காடு இருந்தது. எயினர் அரணுக்கு அமைந்த வாயில் கணைய மரத்தை உடையது; வாயில் நிலை செவ்விது. வாயிலின் முன்புறம் நெடிய கூரிய கழுக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன (பெரும்பாணாற்றுப்படை, அடி 117-128).

விரிச்சி கேட்டல்

வேந்தன் ஒருவன் மற்றொரு வேந்தன் நாட்டின்மீது படையெடுக்கக் கருதின், முதற்கண் பகைவர் நாட்டு ஆனிரையைக் கவரத் தன் படைத்தலைவரை ஏவுவான்; அவர்கள் ஏவலால், நற்சொல் கேட்டற்குரியவர் சென்று ஒரு பாக்கத்தில் தங்கித் தம் அரசற்கு மேல் வரும் ஆக்கத்தை அறிய நற்சொல் (விரிச்சி) கேட்பர். அவர்கள் காதில் விழுவது நற்சொல்லாயின், உடனே ஆனிரையைக் கவரும் முயற்சி மேற்கொள்ளப்படும். நற்சொல் கேட்பதற்குரியவர் ஊரை அடுத்த பாக்கத்துக் கோவிலில் தெய்வத்தின் முன்னிலையில் முல்லை மலர்களையும் நென்மணிகளையும் கலந்து தூவிப் பணிந்து நிற்பர். அப்பொழுது கோவிலையடுத்த தொழுவத்தில் இருந்த கன்றுகளை நோக்கி ஆய்மகள் ஒருத்தி, “உங்கள் தாய்மார் இன்னே வருகுவர்” என்று கூறுவள் (முல்லைப்பாட்டு, அடி 8-14).

பாசறை அமைத்தல்

ஒரு நாட்டின்மீது போர் தொடுக்கச் செல்லும் அரசன் தானும் தன் படைகளும் தங்கியிருக்கத் தன் நாட்டு எல்லைப் புறத்தில் பாசறை அமைத்தல் இயல்பு. சங்ககாலத்திற் பாசறை எப்படி அமைக்கப்பட்டது என்பது முல்லைப்பாட்டில் கீழ் வருமாறு கூறப்பட்டுள்ளது.

“காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டில் இருந்த பசிய தூறுகள் வெட்டப்பட்டன; பகைப்புலத்துக்குக் காவலாய் இருந்த வேட்டுவருடைய சிறிய வாயில்களையுடைய அரண்கள் அழிக்கப்பட்டன; கடல்போலப் பரந்த அவ்விடத்தில் முள்ளால் ஆன வேலியைக் காவலுறும்படி வளைத்துப் போடப்பட்டது. வீரர்கள் இருக்கத் தழைக்கூரையுடைய இல்லங்கள் அமைக்கப்பட்டன; பல தெருக்கள் அமைந்தன. நாற்சந்தியான முற்றத்தில் காவலாக யானைகள் நிறுத்தப்பட்டன. படைத்தலைவர்கட்குக் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் விற்களைச் சேரவூன்றி எறிகோல்களையும் ஊன்றிக் கிடுகுகளையும் நிரையாகக் குத்தி அரண் அமைக்கப்பட்டது. இங்ஙனம் அமைந்த கரி-பரி-காலாட்படை விடுதிகட்கு நடுவே அரசனுக்கு இருப்பிடம் அமைக்கப்பட்டது. நீண்ட குத்துக்கோல்கள் வரிசையாக நடப்பட்டன. அவற்றைச் சுற்றி மதில் திரை வளைத்துக் கட்டப்பட்டது. இல்லத்துச் சுவர்த்துணியில் புலி சங்கிலியால் பிணைக்கப்பட்டதைக் குறிக்கும் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. அந்த இல்லத்தினுள் புறவறையும் உள்ளறையும் அமைக்கப்பட்டன. உள்ளறையில் அரசன் துயில வசதி செய்யப்பட்டது (முல்லைப்பாட்டு, அடி 24-44).

பாசறையில் பருந்தும் பறக்க முடியாத உயர்ச்சியையுடைய அரண்கள் இருக்கும். அந்த அரணில் இருந்து சேய்மைக்கண் வரும் பகைவரைக் காணலாம். பாசறையில் காலையில் பள்ளியெழுச்சி முரசம் முழங்கும் (மதுரைக்காஞ்சி, அடி 231).

இரவில் பாசறை

அரசனது இல்லத்தைச் சட்டையிட்ட மெய்காப்பாளர் காவலாகச் சூழ்ந்து நின்றனர். குறுந்தொடியையும் கூந்தல் அசைந்து கிடக்கின்ற அழகினையுமுடைய மங்கையர் ஒளிவீசும் வாளை இடுப்பிற்செருகியிருந்தனர். அவர்கள் இரவில் விளக்குகளுக்கு எண்ணெய் வார்த்துக் கொண்டும் அவிந்த விளக்குகளை ஏற்றிக்கொண்டும் சுறுசுறுப்பாய் இருந்தார்கள். நாழிகை வட்டிலைக் கொண்டு நாழிகையைக் கணக்கிடும் மக்கள் இரவு முழுமையும் உறங்காமல் பணி புரிந்தார்கள். மன்னன் உள்ளறையைச் சுற்றிலும் சட்டையிட்ட யவன ஊமைகள் காவல் புரிந்தார்கள்.

பகலில் நடைபெற்ற போரில் புண்பட்டுக் களைத்த யானைகள் கரும்பையும் நெற்கதிர் இடையே நெருங்கப் பட்டுக் கட்டிப்போட்ட சாவியையும் அதிமதுரத் தழையையும் தின்னாது அவற்றால் தம் நெற்றியைத் துடைத்துக் கொண்டன. யானைப் பேச்சான வடமொழிகளைக் கற்ற பாகர், பலகாற்சொல்லிக் கவளத்தைத் தின்னும்படி கவைத்த முள்ளையுடைய பரிக்கோலால் குத்தினர்.

மன்னன் போரைப் பற்றிய நினைவால் உறக்கம் வாராமல் தவித்தான்; வாள் வெட்டுப்பட்டு வருந்தும் களிறுகளை எண்ணி வருந்தினான்; திறம்படப் போரிட்டுத் தங்கள் செஞ்சோற்றுக் கடனைக் கழித்து இறந்த வீரர்களை எண்ணினான்; புண்பட்ட உடம்புடன் புல் உண்ணாது தவித்த குதிரைகளை நினைந்தான்; ஒரு கையைப் படுக்கையின்மீது வைத்துக் கடகம் அணிந்த ஒரு கையை முடியோடே சேரவைத்து, மறுநாட்போரைப் பற்றி எண்ணலானான் (முல்லைப்பாட்டு, அடி 45-76).

படையெடுப்பு

அரசன் பகைவர் நாட்டைக் கைப்பற்ற அல்லது பகையரசனது வலிமையை ஒடுக்க அவனது நாட்டின்மீது படையெடுப்பான். படைத்தலைவர், வஞ்சிமாலை சூடிக் கள்ளுண்டு மார்பில் சந்தனம் பூசிப் போருக்கு எழுவர். அதிகமான் கொங்கு நாட்டுச் சிற்றரசன். அவன் முடிமன்னன் அல்லன். அங்ஙனமிருந்தும், அவனிடம் கடல் போன்ற படை இருந்தது (சிறுபாணாற்றுப்படை, அடி 102-103) எனின், கரிகாலன் நெடுஞ்செழியன் போன்ற முடிமன்னரிடம் பெருங்கடல் போன்ற தானை இருந்தது எனக்கோடலே பொருத்தமாகும். படையெடுக்கும் அரசன் மலைகளையும் காடுகளையும் கடப்பான்; தன் படைகளுடன் சென்று பகைவர் அரண்களைக் கவர்வான்; உள்நாடுகளிற் புகுவான்; மழையோடே மாறுபட அம்புகளைத் தூவிப் போர் புரிவான். அவன் குதிரைகள் ஓடும் விசையால் துகள்களை எழுப்பும்; சங்கம் முழங்கும்; கொம்பு ஒலிக்கும்; போர் முரசம் முழங்கும்; பகைவர் தம் பெருமை கெடும்படி கொல்லப்படுவர் (மதுரைக்காஞ்சி, அடி 147-149, 180-185). போர் புரியும் வீரர் (தும்பைப் போராயின்) பொன்னாற் செய்யப்பட்ட தும்பைப்பூவைச் சூடுவர்; வேல், வில், வாள், அம்புகளைக் கொண்டு போராடுவர். அப்படைக் கருவிகளில் கொற்றவை இருப்பதாக வீரர் நம்பினர் (சிறுபாணாற்றுப்படை, அடி 102-103). போர் கடுமையாய் நடைபெறின், பகைவர் தாக்குதலுக்கு ஆற்றாத படை பின் சரியும். அப்பொழுது அச்சரிந்த படையைத் தாங்கி வீரன் ப்ருவன் கல்லணைபோல நின்று பகைவரைத் தாக்குவான். அம்முயற்சியில் அவன் வெற்றி பெறின், அரசன் அவனுக்கு ஏனாதி என்ற பட்டம் வழங்குவான். ‘ஏனாதி மோதிரம்’ என்ற பெயருடைய மோதிரத்தையும் அணிவிப்பான் (மதுரைக்காஞ்சி, அடி 719-740).

முன்னணிப்படை தூசி எனப்படும்; அணி என்பது பின்னணிப்படை; கூழை - பின்படை (புறம் 88).

வேந்தர் மயிர்க்கண் முரசைப் பெற்றிருந்தனர். புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டுமண் கொண்ட எருது இறந்ததும் அதன் தோலை மயிர் சீவாமல் போர்த்த முரசு ‘மயிர்க்கண் முரசு’ எனப்பட்டது (மதுரைக்காஞ்சி, அடி 732-733).

கோட்டையை முற்றுகையிடும் வீரர் உழிஞைப்பூ மாலையை அணிவர்; யானைகளை ஏவிக் கோட்டைக் கதவுகளை உடைக்கச் செய்வர். யானைகள் தங்கள் கொம்புகளாற்குத்திக் கதவை உடைக்கும் (பட்டினப்பாலை, அடி 228-231).

- தொடரும்
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.