http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 158
இதழ் 158 [ செப்டம்பர் 2021 ] இந்த இதழில்.. In this Issue.. |
சோமாஸ்கந்தர் சிவபெருமானும் உமையும் கணவன், மனைவியாக அமர்ந்திருக்க, அவர்தம் ஒரே திருமகனாய் உரிமையுடன் உமை சார்ந்து அமர்ந்தவராய்த் தந்தையிடம் தாவமுனையும் நிலையில் முருகன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இச்சிற்பத்தொகுதி பொ. கா. 8ஆம் நூற்றாண்டளவில் வடதமிழகத்தில் மேலோங்கியிருந்த சிவக்குடும்பச் சிந்தனைகளை அழுந்தப் பதிவுசெய்கிறது. இந்தக் குடும்பச் சூழலில் பிள்ளையாருக்கு யாண்டும் இடமில்லை. சம்பந்தர் பதிகம் சிவபெருமானும் உமையும் யானை வடிவில் கலந்து பிள்ளையாரைப் பெற்றெடுத்ததாகச் சொல்லி சிவக்குடும்பத்தில் பிள்ளையாரையும் இணைக்க முயற்சித்தபோதும் பல்லவர் காலச் சமுதாயம் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. பிள்ளையார் என்ற இறைவடிவத்தைப் பொ. கா. 8ஆம் நூற்றாண்டளவில் ஏற்றுக்கொண்ட பல்லவச் சிற்பிகள் மெல்ல மெல்ல அவரைத் தம் பதிவுகளில் சேர்த்துக் கொண்டனர். பூதவரி, கபோதக்கூடுகள், மகரதோரணங்கள் என்றே அவரது தோற்றப் பயணம் தொடங்கியது. பல்லவ மண்ணில் காஞ்சிபுரம் கயிலாசநாதரில்தான் அவரை முதன்முதலாகக் கோட்டச் சிற்பமாகக் காணமுடிகிறது. வல்லம் முதல் இரு குடைவரைகளிலும் இடம்பெற்றிருக்கும் பிள்ளையாரும் ஏறத்தாழ இதே காலத்தவர் எனலாம்.20 முருகனுக்கு இணையான நிலையைப் பல்லவராட்சியில் பிள்ளையார் பெறமுடிந்தமைக்கு ஒரே சான்றாகத் திகழ்வது சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரைதான். அதே காலகட்டத்தில் முத்தரையர், பாண்டியர் பகுதிகளில் முருகனினும் மிகுந்த மேலாண்மையுடன் பிள்ளையார் விளங்கியபோதும் அவருக்கென்று தனிக் குடைவரைகள் அந்தப் பகுதிகளில்கூட யாண்டும் அமையவில்லை.21 ஆனால், அதே சமயம் முருகனுக்கென்று அமைந்த தனிக்குடைவரையாக மதுரை மாவட்டத்திலுள்ள ஆனைமலைக் கந்தன் குடைவரை பொலிகிறது. சங்கத் தெய்வமான முருகனை சிவக்குடும்ப நாயகனாய்ப் பல்லவர் மரபு போற்றிய அளவிற்குப் பாண்டிய, முத்தரைய மரபுகள் போற்றிக் கொள்ளவில்லை எனினும், முருகனின் அழுத்தமான பதிவுகளை அப்பகுதிக் குடைவரைகளிலும் (பரங்குன்றம், திருமலை, மலையடிப்பட்டி ஆலத்தூர்த் தளி, குன்றக்குடி மூன்றாம் குடைவரை) காணமுடிகிறது. திருமலையில் தாய்ப்பாறைச் சிற்பமாக முருகன் மட்டுமே அமைய, ஆலத்தூர்த்தளியில் ஹரிஹரர், கொற்றவைக்கு இணையாக முருகன் பெருநிலையில் காட்சியளிக்கிறார். பிள்ளையாரோ இங்கு, எழுவர்அன்னையரின் காவலராகச் சாமுண்டியை அடுத்துள்ளார். பரங்குன்றமும் குன்றக்குடியும் இருவரையும் இணையான அளவில் பாறைச் சிற்பங்களாகக் கொண்டுள்ளன. பரங்குன்றில் பிள்ளையாரை எழுவர்அன்னையருடனும் காணமுடிவது குறிப்பிடத்தக்கது.22 சோமாஸ்கந்தர் வடிவம் சிவபெருமான், உமை, முருகன் எனும் சிவக்குடும்பத்தின் படப்பிடிப்பு என்ற போதும், அதில் மும்மூர்த்திகளில் இருவரான திருமாலையும் நான்முகனையும் இக்குடும்பக் காவலர்கள் அல்லது போற்றுநர்கள் அல்லது வணங்குநர்கள் போல் காட்டியிருக்கும் பாங்கு, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திலேனும் பல்லவச் சமுதாயத்தில் சைவம் மிக மேலோங்கியிருந்தமையை உணர்த்தவல்லதாகும். கழுக்குன்றம் குடைவரையில் தொடங்கும் இந்தச் சிந்தனை ஊட்டம் இரண்டாம் நந்திவர்மர் காலம்வரை தொடர்ந்தமைக்குப் பல்லவ மண்ணில் அமைந்த பல கோயில்களும் அதன் பிறகு கைக்கொள்ளப்படாமைக்குத் தக்கோலம் ஜலநாதீசுவரமும் தொடர்ந்தமைந்த சோழர் காலச் சிற்பங்களும் சோமாஸ்கந்தர் செப்புப் படிமங்களும் சான்றுகளாகின்றன. மாமல்லபுரக் குடைவரைகளிலுள்ள சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதிகளில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் இறைவடிவங்களின் இருக்கை, இடப்பகிர்வு, அமர்வு, கையமைப்பு, ஆடை, அணிகள், குடை, உடன்கூட்டம் ஆகியவை அனைத்திலும் ஒன்று போல் அமையாமல் வேறுபட்டுள்ளன. இறைவனை நோக்கிய உத்குடியில் உமை ஒருக்கணித்திருப்பினும், இடைக்கு மேற்பட்ட உடற்பகுதி நான்கு தொகுதிகளிலுமே சற்று முன் நோக்கிய பார்வையில் திரும்பியுள்ளது. இந்தத் திருப்பம் நான்கிலுமே குறிப்பிடத்தக்க அளவு மாறியுள்ளது. மகிடாசுரமர்த்தினி தொகுதியில் ஏறத்தாழ இவ்வுடற்பகுதி முழுமையுமே முன்னோக்கிய பார்வையில் திரும்பியுள்ளமையால் தலைச்சாய்வோ, அதன் இடத்திருப்பமோ அமையாமை கவனிக்கத்தக்கது. அதிரணம், மகிடாசுரமர்த்தினி கருவறைகளில் இடைக்கட்டுடன் உள்ள அம்மை மகிடாசுரமர்த்தினியில் முப்புரிநூலும் பெற்றுள்ளார். அதிரணத் தொகுதிகளில் இறைவனை நோக்கித் தாவுமாறு உள்ள முருகனின் கை அமைதிகளில் தெளிவில்லை. மகிடாசுரமர்த்தினியில் முருகன் வலக்கையைக் கடகத்தில் கொண்டு, இடக்கையை மார்பருகே இருத்தியுள்ளார். இத்தொகுதியில்தான் முருகனின் அணிகலன்களையும் சென்னி உள்ளிட்ட தலை அலங்கரிப்பையும் அடையாளம் காணமுடிகிறது. உமை, திருமால், நான்முகன் ஆகியோர் அதிரணம், மகிடாசுரமர்த்தினி கருவறைத் தொகுதிகளில்தான் தெளிவுறக் காட்சிதருகின்றனர். இந்நான்கு சோமாஸ்கந்தர் தொகுதிகளில் காணப்படும் இத்தகு நுட்பமான வேறுபாடுகளும் நந்தி, முயலகன் உள்ளிட்ட இத்தொகுதிகளின் உடன்கூட்டத்திடை காட்டப்பட்டுள்ள வேறுபாடுகளும் ஒரே தொகுதியை மீளக் காட்டும் இடங்களில்கூடப் பல்லவச் சிற்பிகள் ஒன்று போல் காட்சிப்படுத்தும் போக்கைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர்கள் படைத்தளித்த சிற்பங்கள் அனைத்துமே ஒன்றிலிருந்து ஒன்று குறைந்த அளவிலேனும் மாறுபட்டுள்ளன என்பதையும் நன்கு வெளிப்படுத்துகின்றன. இந்நான்கினுள் அளவு, அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பான தொகுதியாக மகிடாசுரமர்த்தினி தொகுதியை முதன்மைப்படுத்தலாம். இரண்டாவது இடத்தை அதிரணக் கருவறைத்தொகுதி பெறுகிறது. எனினும், இந்த நான்கிலுமே பல்லவருக்குரிய நளினமோ, இயல்பான உடலமைவோ, உணர்வு வெளிப்பாடுகளோ பொருந்த அமையவில்லை. மாமல்லபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சோமாஸ்கந்தர் சிற்பத்தைத் தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளில் பைஞ்ஞீலி, பரங்குன்றம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே காணமுடிகிறது. பரங்குன்றம் சோமாஸ்கந்தர்தொகுதி திருப்பணிகளின் விளைவாகத் தன் மூலவடிவிலிருந்து மாறியுள்ளது. தோற்றப் பேரெழிலைக் கிஞ்சித்தும் குறையாமல் தக்கவைத்துக் கொண்டுள்ளபோதும் காட்சிப்படுத்தலில் பல்லவ சோமாஸ்கந்தரிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளது பைஞ்ஞீலி. பல்லவர் பகுதியில் கற்றளிக் காலத்திலும் விழைந்து கொள்ளப்பட்ட இந்த இறைத்தோற்றம் பாண்டியர், முத்தரையர் கற்றளிகளில் கைவிடப்பட்டது. சிவபெருமான் தமிழ்நாட்டுக் குடைவரைக் கருவறைகளில் சிவபெருமானை உருவச் சிற்பமாகத் தனித்துக் காணமுடிவது மும்மூர்த்தியில் மட்டும்தான். பூதங்கள் போற்ற, அடியவர்கள் சூழ இங்குக் காட்சி தரும் சிவபெருமானின் கையில் மழு உள்ளமை குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டுக் குடைவரைகளின் மண்டபச் சுவர்களில் காணப்படும் சிவபெருமானின் பல்வேறு தோற்றங்கள் மழு கொண்டுள்ளன. சிவபெருமானின் கருவிகளாய்க் காட்டப்படுவனவற்றுள் மழு காலப் பழைமையதாய் அவருடைய பெரும்பாலான குடைவரைத் தோற்றங்களில் இடம்பெற்றுள்ளமை சிலப்பதிகாரச் சிந்தனைகளோடு இணைத்துக் கருதத்தக்கது. திருமால் மாமல்லபுரக் குடைவரைகளில் பூவராகராய்ப் பெருவராகரிலும் விஷ்ணுவாய் மும்மூர்த்தியிலும் கருவறைக்கோலம் கொண்டுள்ள திருமால் வராகரிலும் கருவறைத் தெய்வமாகவே கருதப்பட்டமை அங்குள்ள சக்கரத்தாழ்வார் சங்காழ்வார் சிற்பங்களால் உறுதிப்படுகிறது. சோமாஸ்கந்தரின் துணைவராக மாற்றப்பட்டபோதும் விஷ்ணுவின் தனித் தன்மையைக் காப்பாற்றவும் மாமல்லபுரக் காலச் சமயச் சிந்தனைகள் தவறவில்லை. முருகன் தனிப் பெருங் கடவுளாய் மும்மூர்த்தியிலும் சிவக்குடும்பச் சேயாய் மூன்று கருவறைகளிலும் முருகன் இடம்பெற்றுள்ளமை மாமல்லபுரக் குடைவரைகள் உருவான காலத்திலிருந்த முருகு சார்ந்த சமய மேலாண்மைச் சிந்தனைகளைப் படம்பிடிக்கிறது. ஆனைமலைக் கந்தன் குடைவரையில்கூட முருகனைத் துணைவியுடனேயே காணமுடியும் நிலையில் தனிப் பெருங் கருவறைத் தெய்வமாய் முருகன் காட்சிதருவது மாமல்லபுரத்தில் மட்டும்தான். நான்முகன் மாமல்லபுரம் குடைவரைகளில் நான்முகனை இரண்டிடங்களில் மட்டுமே காணமுடிகிறது. கழுக்குன்றத்தில் திருமாலுக்கு இணையாய் நின்று கருவறை இறைவனை மலருடன் போற்று பவராய்க் காட்சிதரும் நான்முகன், பெருவராகரில் காக்கும் குறிப்புடன் கங்காதரருக்கு இணையாய் முகமண்டபக் கோட்டத்தில் இணைந்துள்ளார். மகேந்திரர் காலத்துக் கருவறை முதன்மையை இழந்தபோதும் முற்றிலுமாய் நான்முகன் ஒதுக்கப்படாமையை மாமல்லபுரத்து தருமராஜரதமும் நிறுவுகிறது. சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை, திருமலைப்புரம் குடைவரை ஆகியவற்றிலும் பிற தெய்வங்களுக்கு இணையாக நான்முகன் இடம்பெற்றுள்ளமை தமிழ்நாடு முழுவதுமே நான்முகனுக்கு ஒன்று போல சமயத்தகுதி இருந்தமையை நிறுவவல்லது. பல்லவ, பாண்டியர் கால இறைச் சிந்தனைகளிலும், தொடர்ந்த சோழர் காலச் சமயக் கண்ணேhட்டங்களிலும் நான்முகன் மும்மூர்த்திகளில் ஒருவராகவே கருதப்பட்டமை மும்மூர்த்தி குடைவரைக் காட்சியைத் தற்காலிகமானதாக்குகிறது. சுவர்ச் சிற்பத்தொகுதிகள் மாமல்லபுரத்தின் நிறைவடைந்த குடைவரைகளுள் சுவர்த்தொகுதிகளாய்ச் சிற்பங்களைக் காணமுடிவது ஐந்தில்தான். அவற்றுள் நான்கு, கருவறையில் இறைவடிவம் பெற்றவை. அதிரணத்தின் முகமண்டப் பின்சுவர் சோமாஸ்கந்தர் தொகுதிகளைப் பெற்றுள்ளது. வைணவம் சார்ந்த பூவராகர், திரிவிக்கிரமர் தொகுதிகள் வராகரிலும் கொற்றவைத் தொகுதி வராகர், பெருவராகர், இராமானுஜர் குடைவரைகளிலும் யானைத்திருமகள்தொகுதி வராகர், பெருவராகர் குடைவரைகளிலும் அமைய, பாம்பணைப் பெருமாள், மகிடாசுரமர்த்தினி தொகுதிகள் மகிடாசுரமர்த்தினி குடைவரையில் காட்சியாகின்றன. வைணவத் தொன்மங்கள் சார்ந்து மூன்று தொகுதிகளும் கொற்றவை, மகிடாசுர மர்த்தினியுடன் தொடர்புடையனவாய் நான்கு தொகுதிகளும் அமைய, திருமகள் கோலம் காட்ட இரண்டு தொகுதிகள் பயன்பட்டுள்ளன. அதிரணத்தின் சோமாஸ்கந்தர் தொகுதிகளைத் தவிர்த்துவிட்டால், சைவம் சார்ந்த ஒரே தொன்மக் காட்சியாய் கங்காதரரையே குறிப்பிடமுடியும். இங்கும், கங்காதரர் காணப்படும் பிற மூன்று குடைவரைகளான சிராப்பள்ளி, கோகர்ணம், வடபரங்குன்றம் ஆகியவற்றிலும் கங்காதரர் உமையின்றித் தனித்தே நிற்பது கருத்தில் கொள்ளத் தக்கது. தருமராஜரதத்திலும்கூட கங்காதரர் உமையின் துணையின்றித் தனித்தே நிற்கிறார். கங்காதரருடன் உமை இணையும் காட்சியை இராஜசிம்மரின் கற்றளிகளில்தான் முதன்முறையாகக் காணமுடிகிறது. ஒரு தொன்மக் காட்சி கால ஓட்டத்தில் சமுதாயத் தூண்டல்களையும் சிற்பிகளின் கற்பனையையும் பெற்று எப்படியெல்லாம் விரிவாக்கம் பெறுகிறது என்பதற்குத் தமிழ்நாட்டின் கங்காதரர் கோலங்கள் சிறந்த சான்றுகளாக மிளிர வல்லன. சுவர்ச் சிற்பத்தொகுதிகளைக் காட்டும் மரபு மகேந்திரர் காலத்திலேயே உருவாகிவிட்ட போதும் அம்மரபை மாமல்லபுரக் குடைவரைகள் கைக்கொண்ட அளவிற்குப் பல்லவ மண்ணின் பிறபகுதிக் குடைவரைகள் கொள்ளாமை வியப்பூட்டுகிறது. பெருவராகர், வராகர் போல் மண்டபத்தின் அனைத்துச் சுவர்களும் முழுமையான அளவில் சிற்பத்தொகுதிகளுடன் இலங்கும் அமைப்பை அதியர் குடைவரைகள் கொண்டுள்ளன. பாண்டியர் பகுதியில் குன்றக்குடி மூன்றாம் குடைவரையும் முத்தரையர் பகுதியில் மலையடிப்பட்டி ஒளிபதி விஷ்ணு கிருகமும் நகரத் தார்மலைப் பதினெண்பூமி விண்ணகரும் இப்பெருமையைப் பெறுகின்றன. அவற்றுள் குன்றக்குடி தவிர்த்த, ஏனைய அனைத்தும் வைணவக் குடைவரைகள் என்பது குறிப்பிடத்தக்கது. உருவச் சிற்பங்கள் குடைவரைகளுடன் தொடர்புடைய அரசர்களின் உருவச் சிற்பங்களைக் கல்வெட்டுப் பொறிப்புடன் கொண்டுள்ள தமிழ்நாட்டின் ஒரே குடைவரையாகப் பெருவராகர் பொலிகிறது. 'சிம்ஹ விண்ண போத்தாதிராஜன்' என்ற பெயர்ப் பொறிப்புடன் இராஜசிம்மரின் உருவச் சிற்பமும் 'மகேந்திர போத்தாதிராஜன்' என்ற பெயர்ப் பொறிப்புடன் இராஜசிம்மரின் மகனான மூன்றாம் மகேந்திரரின் உருவச் சிற்பமும் இக்குடைவரையின் அர்த்தமண்டபப் பக்கச் சுவர்களில் இடம்பெற்றுள்ளமை மிகப் பெரிய வரலாற்றுப் பதிவாகும். இராஜசிம்மருக்கும் மகேந்திரருக்கும் வாய்த்த இந்தப் பெருமை குடைவரைக் கால அரசமரபுகளின் வேறெந்தத் தோன்றல்களுக்கும் கிடைக்காத பேறாகும். மாமல்லபுரம் குடைவரைகளின் சிறப்புக் கூறுகள் மகேந்திரர் காலத்திலேயே தமிழ்நாட்டுக் குடைவரைக் கலை பல வளர்நிலைகளைக் கடந்திருந்தபோதும் மாமல்லபுரம் குடைவரைகள் அம்மகேந்திரர் படைப்புகளில் காணப்படாத பல புதிய உருவாக்கங்களுடன் குடைவரைக் கலையில் பல்லவ பூமி கண்ட உயர்நிலைகளைப் பதிவு செய்துள்ளன. அவ்உயர்நிலைகளுள் சில தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரையிலும் இடம்பெறாமை, பல்லவர் கலையாற்றலின் தனித் தன்மையையும் கட்டடக்கலையில் அவர்கள் மேற்கொண்ட சோதனை முயற்சிகளையும் அவற்றின் விளைவாய்க் குடைவரைக் கட்டமைப்பில் நேர்ந்த எழுச்சிமிகு புத்தாக்கங்களையும் கண்முன் நிறுத்துகிறது. படியமைப்பு மேற்றளத்தைச் சந்திக்கும் இருபுறப் படியமைப்பு, முகப்பையோ அதன் முன்னுள்ள பாறைத் தரையையோ அடைய வாய்ப்பளிக்கும் முன் படியமைப்பு என மகேந்திரர் காலக் குடைவரைப் படியமைப்புகள் இருவகைத்தன. மாமல்லபுரம் குடைவரைகளிலும் தமிழ்நாட்டின் பிற குடைவரைகளிலும் இவ்விரண்டு வகையினவும் காணக் கிடைக்கின்றன. ஆனால், இராமானுஜர் மண்டபத்தின் முன் ஒரே வரிசையாக பக்கவாட்டில் அமைந்துள்ள செவ்விய படித்தொடர் மகேந்திரர் காலத்தில் காணப்படாதது. தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரை முகப்பின் முன்னும் இத்தகு வளமான படித்தொடரைக் காணக்கூடவில்லை. அது போலவே மும்மூர்த்தி குடைவரைத் தொகுதியில் உள்ள சிவபெருமான் கருவறைக்கான படித்தொடரும் மாறுபட்ட அமைப்பினதாகப் பெருந்தாமரை மேல் அமர்ந்த பிறைநிலாப் படிகள் என உள்ளமை தமிழ்நாட்டின் பிற குடைவரைகளில் காணக் கிடைக்காத காட்சியாகும். முகப்பு மகேந்திரர் குடைவரைகள் எவற்றிலும் காணப்பெறாத பேரளவிலான முகப்பைப் பஞ்சபாண்டவர் குடைவரை பெற்றுள் ளது. அதனினும் அளவில் பெரிய (16. 10 மீ. நீளம்) முகப்பைத் தமிழ்நாட்டின் விளாப்பாக்கம் குடைவரை மட்டுமே கொண்டுள்ளது. மகேந்திரர் முகப்புகளில் காணப்பெறாத பல புதிய உருவாக்கங்களை மாமல்லபுரம் குடைவரைகள் கொண்டுள்ளன. தாங்குதளம் முகப்பில் அமையும் பாதபந்தத் தாங்குதளம் மகேந்திரப் பழைமையது என்றாலும், தமிழ்நாட்டுக் குடைவரைகள் சிலவற்றின் முகப்பில் அது இடம்பெற்றுள்ளபோதும் முழுமை யான அளவில் அனைத்து உறுப்புகளும் பார்வையில் படுமாறு மிகத் திருத்தமாக அமைந்துள்ள பாதபந்தத் தாங்குதளம் மாமல்லபுரம் வராகர், இராமனுஜர் குடைவரைகளிலேயே காணக்கிடைக்கிறது. தூண்கள் மகேந்திரர் குடைவரைகள் சதுரம், கட்டு, சதுரம் அமைப்பிலான தூண்களை முகப்பிலும் பாலி, பலகை தவிர்த்த பிற அனைத்து உறுப்புகளையும் பெற்ற நான்முக அரைத்தூண்களைக் கருவறைச் சுவரிலும் பாலி, பலகை பெற்ற அரைத்தூண்களைக் கோட்ட அணைவு நிலையிலும் கொண்டமைந்தன. சஜூமல்லேசுவரத்தின் முன்றில் தூண்கள் கீழே சதுரமாகவும் மேலே எண்முகமாகவும் உள்ளன. மாமல்லபுரம் குடைவரைகளில் உள்ளாற் போல் முற்றிலும் எண்முகமாகவோ, இந்திரகாந்தமாகவோ, உருளையாகவோ அமைந்த தூண்களை மகேந்திரர் குடைவரைகளின் எப்பகுதியிலும் காணமுடியவில்லை. மலையடிப்பட்டி ஒளிபதி விஷ்ணுகிருகம் தவிர்த்த பிற தமிழ்நாட்டுக் குடைவரைகளிலும் இவ்வமைப்புத் தூண்களைக் காணக்கூடவில்லை. ஒளிபதியும் உருளைத்தூண்களை மட்டுமே பெற்றுள்ளது. மாமல்லபுரத்தின் இந்திரகாந்தத் தூண்களை அங்குள்ள ஒருகல் தளிகளில்தான் மீண்டும் சந்திக்கமுடிகிறது. மாமல்லபுரத்தின் வராகர், பெருவராகர், இராமானுஜர், பஞ்சபாண்டவர், கோனேரிச் சிறிய மண்டபம், புலிப்புதர் ஆகிய ஆறு குடைவரைகளின் முகப்புகள் எண்முக அமர்யாளித் தூண்களுடன் பொலிகின்றன. இவ்வமைப்பு மகேந்திரர் குடைவரைகளிலோ, பிற பல்லவர் குடைவரைகளிலோ, தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரையிலுமோ காணக் கிடைக்காத காட்சியாகும். மாமல்லபுரத்தில் சில குடைவரைகளிலும் கழுக்குன்றம் குடைவரையிலும் மகேந்திரர் கட்டமைப்பில் சதுரம், கட்டு, சதுரம் எனத் தூண்கள் அமைந்திருந்தபோதும் அவற்றின் சதுரங்கள் மகேந்திரர் பார்வையில் சிற்பச் செதுக்கல்களோ, கொடிக்கருக்குகளோ, தாமரைப் பதக்கங்களோ பெறாமை குறிப்பிடத்தக்க கலை மாற்றமாகும். அது போலவே மாமல்லபுரம் குடைவரைகளில் இவ்வகைத் தூண்களின் போதிகைகள் எவையும் மகேந்திரர் போதிகைகளில் உள்ளாற் போல் பட்டையோ, கொடிக்கருக்கோ பெறவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் உருவான இவ்வமைப்புத் தூண்கள் சிலவற்றில் மகேந்திரர் கலைமுறை பின்பற்றப்பட்டிருப்பது கருத்தில் கொள்ளத்தக்கது. மகேந்திரரின் மண்டகப்பட்டு, தளவானூர்க் குடைவரைகளில் முகப்பை அடுத்துப் பக்கங்களில் விரியும் பாறைச் சுவர்க் கோட்டங்களில் காணப்படும் குடைவரைக் காவலர்களையும் மகேந்திரரின் அவனிபாஜனத்தில் அதே இடத்தில் அமைந்துள்ள வீரர்களையும் மாமல்லபுரம் குடைவரைகளில் இராமானுஜர் தவிர, வேறிடங்களில் காணமுடியவில்லை. மாமல்லபுரத்தைப் பொருத்தமட்டில் இது கைவிடப்பட்ட உத்தியாகவே உள்ளது. இராமானுஜர் மண்டப முகப்பின் பக்கங்களில் காவலர்கள் மட்டுமல்லாமல் தனிக் கோட்டங்களில் விமான அமைப்புகளும் செதுக்கப்பட்டுள்ளமை பல்லவர் பூமியில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரையிலும் மேற்கொள்ளப்படாத புதிய உத்தியாகப் பதிவாகியுள்ளது. கூரையுறுப்புகள் மகேந்திரர் குடைவரைகளில் தளவானூர் தவிர பிறவற்றின் முகப்புகள் வலபி பெறவில்லை. அவரின் இரண்டே கருவறைகளில் இடம்பெற்றுள்ள வலபிகள் முதன்மை உறுப்பாய்ப் பொலியாமல் அளவில் சிறுத்தும் வரி அலங்காரம் பெறாதும் உள்ளன. மாமல்லபுரம் குடைவரைகளுள் முகப்பில் மகேந்திரர் அமைப்புத் தூண்கள் பெற்றுள்ள ஐந்து குடைவரைகளுள் கோனேரிப் பெரிய மண்டபம் தவிர்த்த ஏனைய நான்கும் வலபி பெறாமையும் வேறு வடிவத்தூண்களை முகப்பில் கொண்ட குடைவரைகளுள் பெரும்பான்மையன வலபி பெற்றிருப்பதும் அவ்வலபி அன்னவரி, பூதவரி பெற்றோ, கொடிக்கருக்கு அலங்கரிப்புக் கொண்டோ அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க கலை மாற்றமாகும். கூரையின் மேலமையும் ஆரஉறுப்புகள் மகேந்திரர் காலத்தில் உருவாகவில்லை. தமிழ்நாட்டின் வேறெந்தப் பகுதிக் குடைவரைகளிலும் அவற்றைக் காணமுடியவில்லை. மாமல்லபுரத்திற்கு மட்டுமே உரித்தான உறுப்பாக ஐந்து குடைவரைகளில் நிறைவுறவும் ஒரு குடைவரையில் ஒதுக்கீடாகவும் காட்சிதரும் ஆரம், மகேந்திரரைத் தொடர்ந்தமைந்த பல்லவக் கலைமுறையின் தனித்தன்மை வாய்ந்த முத்திரையாக ஒளிர்கிறது. தொடக்கநிலை ஆரங்கள் சாலைகளை மட்டும் கொள்ள, தொடர்ந்த ஆரங்கள் கர்ணகூடங்களைப் பெற்றுப் பொலிவதை மாமல்லபுரம் சிறக்கப் பதிவு செய்துள்ளது. ஆரஅமைப்பில் மேற்கொள்ளப்பட்ட படிநிலைகளைப் பயிலவும் மாமல்லபுரம் சிறந்த களமாகத் திகழ்கிறது. மண்டபம் மகேந்திரரின் கல்வெட்டுப் பொறிப்புடன் காட்சிதரும் ஏழு குடைவரைகளுள் மாமண்டூர் முதற் குடைவரை தவிர ஏனைய அனைத்தின் மண்டபங்களும் இரண்டாம் வரிசைத் தூண்களாலோ, தரையமைப்பின் உயரப் பாகுபாட்டாலோ இரண்டு பிரிவுகளாகக் காட்டப்பட்டுள்ளன. இதனால், குடைவரை மண்டபத்தை ஒன்றாகவோ, இரண்டு பிரிவுகளாகவோ அமைக்கும் உத்தி மகேந்திரர் காலத்திலேயே தோன்றிவிட்டமையை உணரலாம். மாமல்லபுரம் குடைவரைகளில் இந்த இரண்டு உத்திகளுமே கைக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், மகேந்திரர் காலத்தில் பெருவழக்குப் பெற்றிருந்த இரு பிரிவு அமைப்பு, மாமல்லபுரத்தில் மெல்லக் கைவிடப்படுவதைக் காணமுடிகிறது. நிறைவடையாத ஐந்து குடைவரைகளில் பஞ்சபாண்டவர் மட்டுமே மண்டபப் பிரிப்புப் பெற்றுள்ளது. நிறைவடைந்த ஆனால், கருவறையில் இறை வடிவம் பெறாத ஐந்தனுள் கொற்றவையும் வராகரும் பிரிப்புப் பெறவில்லை. கருவறையில் இறைவடிவம் பெற்ற ஐந்து குடைவரைகளில் மூன்றில் மண்டபப் பிரிப்பு இல்லை. மும்மூர்த்தியில் மண்டபமே காட்டப்பெறவில்லை. ஆக, மாமல்லபுரத்திலும் கழுக்குன்றத்திலும் உருவாகியுள்ள பதினைந்து குடைவரைகளுள் மூன்றில் இரண்டு பங்கு ஒரு மண்டபக் குடைவரைகளாகவும் ஐந்து மட்டுமே மண்டபப் பிரிப்புப் பெற்றவையாகவும் விளங்குவது நோக்க, மகேந்திரர் காலப் பெருவழக்கு மாமல்லபுரக் காலத்தில் வழக்கிழக்கத் தொடங்குவதை உறுதிசெய்யமுடிகிறது. முரண்கள் இந்த வழக்கிழப்புத் தொடர்பான சில முரண்களை இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது. மகேந்திரர் காலத்தில் காணப்படாத வளர்நிலை உறுப்புகளுடன் காட்சிதரும் பெருவராகரில் மண்டபம் இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அத்தகு உறுப்புகள் இடம்பெறாத தருமராஜர் மண்டபத்திலும் இரண்டு பிரிவுகளைக் காணமுடிகிறது. அது போலவே வளர்நிலை உறுப்புகளுடன் பொலியும் வராகர் மண்டபம் பகுப்பின்றி ஒரே மண்டபமாக விளங்க, அத்தகு உறுப்புகளற்ற கொற்றவைக் குடைவரையும் ஒரே மண்டபத்துடன் காட்சிதருகிறது. இந்த முரண்கள் இரு மண்டப வழக்கிழப்பையும் வளர்நிலைத் தோற்றங்களையும் இணைத்துக் காணத் தடையாகின்றன. மகேந்திரர், மாமல்லபுரம் தவிர்த்த தமிழ்நாட்டின் பிற குடைவரைகளுள் பெரும்பான்மையன ஒரு மண்டபக் குடைவரைகளாகவே உள்ளன. மண்டபச் சுவர்கள் மண்டபப் பக்கச்சுவர்களில் மட்டும் கருவறை அமைக்கும் மகேந்திர உத்தியைத் தளவானூரிலும் சிராப்பள்ளியிலும் காணமுடிகிறது. இது மாமல்லபுரத்தில் யாண்டும் பின்பற்றப்படவில்லை. ஐந்து கருவறைகள் பெற்ற கோனேரிப் பெரிய மண்டபத்தில்கூட அனைத்துக் கருவறைகளும் மண்டபப் பின்சுவரில்தான் உள்ளன. தமிழ்நாட்டளவில் இம்மகேந்திரர் உத்தியைப் பின்பற்றியிருப்பவையாக மலையடிப்பட்டியிலுள்ள தந்திவர்மர் கால முத்தரையர் குடைவரையான ஆலத்தூர்த்தளி, பாண்டியர்பகுதிக் குடைவரைகளான தென்பரங்குன்று, திருமலைப்புரம், செவல்பட்டி, கேரளத்துத் திருநந்திக்கரை முதலியவற்றைக் குறிக்கலாம். பக்கச்சுவர்களிலும் பின்சுவரிலுமாய்க் கருவறைகளைப் பகிர்ந்து கொண்டுள்ள குடைவரைகளாகப் பல்லவர்பகுதியில் மாமண்டூர் மூன்றாம் குடைவரை, குரங்கணில்முட்டம் ஆகியவற்றையும் பாண்டியர்பகுதியில் வடபரங்குன்றம், சொக்கம்பட்டி ஆகியவற்றையும் சுட்டலாம். சிற்பக்காட்சிகள் மண்டபச் சுவர்களில் சிற்பக்காட்சிகளை முதன்மைப்படுத்தும் போக்கு மகேந்திரரின் இலளிதாங்குரத்திலேயே தோற்றம் காட்டிவிட்டபோதும், அது மிகுந்த உத்வேகத்துடன் பதிவு செய்யப்பட்ட காலமாக மாமல்லபுரம் குடைவரைகள் உருவான காலத்தையே குறிப்பிடவேண்டும். தொன்மங்களைப் படக்காட்சி போல விரிவுபடுத்திக் காட்டும் இந்த மரபு தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் அரிதாகவே கைக்கொள்ளப்பட்டுள்ளது. மகேந்திரர் காலத்தில் வாஜனம் சூழ்ந்த வெறுஞ் சுவர்களாகவே காட்டப்பட்டுள்ள மண்டபச் சுவர்கள் முறையான தாங்குதளமும் முழு அளவிலான கூரையுறுப்புகளும் பெற்றுப் பொலிவதை மாமல்லபுரம் குடைவரைகளில் பார்க்கமுடிகிறது. இந்தக் காட்சி குரங்கணில்முட்டம்23 தவிர்த்த பிற பல்லவர் குடைவரைகளில்கூட இடம்பெறாதது. தமிழ்நாட்டளவில் வேறெந்தக் குடைவரையிலும் காணப்பெறாதது. அதனால், இவ்வமைப்பை மாமல்லபுரக் கலைமுறையாகக் கொள்ளலாம். கருவறை தாங்குதளமும் கூரையுறுப்புகளும் பெற்ற கருவறைகள் மகேந்திரர் காலத்திலேயே உருவாகிவிட்டபோதும் மகேந்திரரின் ஏழு குடைவரைகளில் ஒன்றின் கருவறைகூட வலபியில் சிற்பவடிப்புக் கொள்ளவில்லை. ஆனால், மாமல்லபுரத்தில் ஏழு கருவறைகள் வலபியில் சிற்பவடிப்புப் பெற்றுள்ளன. ஆறு அன்னவலபியும் வராகர் பூதவலபியும் பெற்றுள்ளன. பெரு வராகர் வலபியின் திருப்பங்களில் இடம்பெற்றுள்ள பாம்புத் தலையெhத்த கொடிக்கருக்கு எழுச்சிகள் தனித்தன்மையன. தமிழ்நாட்டின் வேறெந்தக் கட்டுமானத்திலும் காணவியலாதன. அது போலவே மகேந்திரர் கருவறைகள் ஒன்றுகூட பூமிதேச அமைப்புக் கொள்ளவில்லை. நிறைவடைந்துள்ள மாமல்லபுரம் குடைவரைகளுள் ஆறில் இவ்வுறுப்புச் சிறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் உள்ள குடைவரைகளின் கருவறைகளில் சொக்கம்பட்டி தவிர பிறவற்றில் பூமிதேச அமைப்பைக் காணக்கூடவில்லை. மண்டபத்திற்குள் கருவறை பிதுக்கமாக அமையும் மரபு மகேந்திரர் காலத்தில் உருவெடுத்தது எனினும், மாமல்லபுரக் காலத்தில் அந்தப் பிதுக்கத்தில் பெருவளர்ச்சியைக் காணமுடிகிறது. கருவறை முழுவதுமே மண்டபத்துக்குள் உருவாகியிருக்கும் பாங்கை வராகரில் காணலாம். சுவர்ச் சார்பின்றிச் சுற்றுடன்கூடக் கருவறை கருதப்பட்டமையைப் பஞ்சபாண்டவர் உணர்த்துகிறது. கருவறை முன்சுவரில் வாயிலடுத்து அமையும் பக்கத்திற்கொன்றான கோட்டங்கள் காவலர் அல்லது அடியவர் சிற்பங்கள் மட்டும் பெறும் மகேந்திரர் நிலையில் இருந்து மாறுபட்டு, முதன்மை இறைவடிவங்களைக் கொள்ளும் போக்கு மாமல்லபுரக் காலத்தில் மலர்வதைப் பெருவராகர் காட்சிப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் பிற குடைவரைகளில் காணப்பெறாத இப்போக்கு, கேரளத்து விழிஞத்தில் காணப்படினும், அங்குக் காவலர், அடியவர் சிற்பங்கள் இல்லை. வராகர் கருவறை மற்றொரு புத்தமைப்பாகப் பக்கப் புறச்சுவர்களிலும் சிற்பங்கள் பெற்று, மாமல்லபுரக் காலத்துப் புதிய சிந்தனையைக் கண்முன் நிறுத்துகிறது. இந்த அமைப்பு தமிழ்நாட்டின் பிற குடைவரைகளில் பின்பற்றப்படவில்லை. கருவறைக் காவலர்களை வாயில்நோக்கி, ஒருக்கணிக்கச் செய்யும் பாங்கு மகேந்திரவாடியில் தொடங்குகிறது. மாமல்லபுரத்தில், இந்த ஒருக்கணிப்பு முழுமை பெறுவதையும் அந்தக் கோலத்தில் பல உன்னதங்களைப் பல்லவ உளிகள் படைத்துத் தந்திருப்பதையும் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றின் பெருமைக்குரிய படிநிலைகளாகக் கொள்ளலாம். திருமலைப்புரம், செவல்பட்டி, சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை முதலியன மால்லபுரப் போக்கில் மனம் திரும்பியிருந்தாலும், சிராப்பள்ளியின் எழிலையும் ஒயிலையும் இயல்பான தோற்றநிலையையும் மற்ற இரண்டு இடங்களில் காணக்கூடவில்லை. ஒருக்கணிக்கச் செய்யவேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் செயற்கையாகத் திருப்பப்பட்ட உருவங்களாகவே செவல்பட்டி, திருமலைப்புரக் காவலர்கள் காட்சிதருகின்றனர். குடைவரையின் முகப்பிலோ, முன்றிலிலோ, கருவறைத் தூண்களின் மீதோ, ஆரத்திலோ தாவுயாளிகளைக் காட்டும் உத்தி மகேந்திரர் காலத்தில் காணப்படாதது. முற்றிலும் மாமல்லபுரக் காலப் புதிய சிந்தனையான இத்தாவுயாளிகள், மாமல்லபுரம் தவிர்த்த தமிழ்நாட்டின் வேறெந்தப் பகுதிக் குடைவரையிலும் காணக் கிடைக்காமை மாமல்லபுரத்தில் கலைவளர்த்த பல்லவத் தோன்றல்களின் கற்பனை வளத்திற்கும் கலையாற்றலுக்கும் சான்றாகின்றன. கருவறையில் தாய்ப்பாறைச் சிற்பங்களை அமைக்கும் பழக்கம் மகேந்திரர் காலத்தில் பல்லவர் வழக்கில் இல்லை. அம்மரபு மாமல்லபுரக் காலத்தில்தான் அரும்பியதென்பதை நிறைவடைந்த ஒன்பது குடைவரைகளுள் ஐந்தில் கருவறை இறைவடிவங்கள் உருவாகியுள்ளமை கொண்டு உறுதிப்படுத்தலாம். மாமல்லபுரம் தவிர்த்த பிற பல்லவர் பகுதிக் குடைவரைகளுள் சிங்கவரம், சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை, மேலச்சேரி, கீழ்மாவிலங்கை, ஆவூர் ஆகியவற்றில் மட்டுமே கருவறை இறைவடிவங்கள் தாய்ப்பாறையில் அமைந்துள்ளன. அதியர் குடைவரைகள் இரண்டுமே கருவறையில் தாய்ப்பாறைச் சிற்பங்கள் கொள்ள, முத்தரையர் பகுதியின் பத்தொன்பது குடைவரை களுள் பதினேழில் தாய்ப்பாறை வடிவங்கள் (இலிங்கம்) உள்ளன. பாண்டியர் பகுதியில் மாமல்லபுரம் போலவே ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு கருவறைகளிலேயே தாய்ப்பாறைச் சிற்பங்களைக் (இலிங்கம், பிற இறைவடிவங்கள்) காணமுடிகிறது. முத்தரையர், அதியர் கீழ்ப் பெருவழக்குப் பெற்றிருந்த கருவறைத் தாய்ப்பாறைச் சிற்பம் பல்லவர், பாண்டியர் பகுதிகளில் பெருநிலை கொள்ளாமை, அக்காலக்கட்டத்தில் அவ்விரு பகுதிகளிலும் நிலவிய சமுதாயக் காரணிகளை ஆராயத் தூண்டுகிறது. முத்தரையர் பகுதியில் பேரளவிலும் பாண்டியர் பகுதியில் ஓரளவிற்கும் என அமைந்த தாய்ப்பாறை இலிங்க வழிபாடு பல்லவர்பகுதியில் மேலைச்சேரி தவிர வேறெங்கும் அமையவில்லை. காலத்தால் பிற்பட்ட சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரை போன்ற பல்லவர் கருவறைகளில்கூடத் தாய்ப்பாறை இலிங்கம் உருவாகாமை, தாய்ப்பாறையில் சிவலிங்கம் அமைப்பதைப் பல்லவ மரபு விழையவில்லை என்பதையே முன் நிறுத்துகிறது. விஷ்ணுவையும் முருகனையும் தாய்ப்பாறைச் சிற்பங்களாக ஏற்ற பல்லவ மரபு, சிவபெருமானை உருவவடிவில் தாய்ப்பாறைச் சிற்பமாகக் கொள்ளத் தயங்காத பல்லவ மரபு, ஏன் அவரது அருவ வடிவமான இலிங்கத்திருமேனியை மட்டும் தாய்ப்பாறைச் சிற்பமாகத் தனது பெருமைக்குரிய குடைவரைகள் ஒன்றில்கூடக் கொள்ளவில்லை என்பது வியப்பூட்டும் கேள்வியாகவே விடைதேடி நிற்கிறது. பெருவராகர் குடைவரை - ஆதிசேஷனும் விஷ்ணுவும் பெருவராகர் குடைவரை - பிரம்மா பெருவராகர் குடைவரை - தேவியருடன் மூன்றாம் மகேந்திரர் பெருவராகர் குடைவரை - தேவியருடன் இராஜசிம்மர் பெருவராகர் குடைவரை - கங்காதரர் பெருவராகர் குடைவரை - ஹரிஹரரும் அடியவரும் பெருவராகர் குடைவரை - மஹிஷாசுரமர்த்தினி பெருவராகர் குடைவரை - யானைத்திருமகள் திருமூர்த்தி குடைவரை - ஆதிசேஷனும் விஷ்ணுவும் திருமூர்த்தி குடைவரை - ஆதிசேஷனும் விஷ்ணுவும் திருமூர்த்தி குடைவரை - விஷ்ணு வராகர் குடைவரை - பூவராகர் தொகுதி வராகர் குடைவரை - கொற்றவர் திரிவிக்கிரமர் தொகுதி வராகர் குடைவரை - யானைத்திருமகள் குறிப்புகள் 20. மு. நளினி, இரா. கலைக்கோவன், பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், ப. 197. 21. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாங்குடிக் குடைவரைக் கருவறைப் பின்சுவரில் பிள்ளையார் வடிவம் இருந்தபோதும் அதைக் குடைவரைக் காலச் சிற்பமாகக் கொள்ளக்கூட வில்லை. புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், பக். 269 - 270. 22. இத்தொகுதி வடபரங்குன்றம் களஆய்வின்போது இந்நூலாசிரியர்களால் கண்டறியப்பட்டு வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணரப்பட்டது. மதுரை மாவட்டக் குடைவரைகள், பக். 155-158. 23. இந்நூலாசிரியர்களின் 'மகேந்திரர் குடைவரைகள்' நூலில் குரங்கணில் முட்டத்தை மகேந்திரர் காலக் குடைவரையாகக் குறித்துள்ளமை சரியன்று. அக்குடைவரையை மீளாய்வுக்கு உட்படுத்தியதில் மாமல்லபுரக் கலைமுறைக் காலத்தின் தொடக்கநிலை உருவாக்கமாகவே குரங்கணில்முட்டத்தைக் கருதவேண்டியுள்ளது. - வளரும் |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |