http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 158

இதழ் 158
[ செப்டம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

துடி, தமருகம், உடுக்கை
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு -3
சேக்கிழான் செல்வனும் மூன்று விழாக்களும்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 7
நண்பருமாய் நல்லாசிரியருமாய்
இதழ் எண். 158 > கலைக்கோவன் பக்கம்
துடி, தமருகம், உடுக்கை
இரா. கலைக்கோவன்

சிவபெருமானின் ஆடலொடு தொடர்புறும் தோலிசைக் கருவிகளுள் துடி, தமருகம், உடுக்கை இம்மூன்றும் முதன்மை யானவை. ஆடும் இறைவனின் கையில் இலங்கும் இடைசுருங்கு பறைகளான இவை, அமைப்பிலும் இயக்கும் முறையிலும் வேறுபடுவதுடன், அவரது செயற்பாட்டிற்கேற்பவே கைக்கொள்ளப்படுகின்றன. இப்பறைகளின் வரலாறும் அதை வரைந்து காட்டும் இலக்கியம், கல்வெட்டு, சிற்பப் பின்னணிகளும் சுவையானவை.

துடி

இம்மூன்று இசைக்கருவிகளுள் காலப் பழைமையது துடி. தமிழ்நாட்டுப் பண்பாட்டு வரலாற்றில் பண்டுதொட்டே மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிய தோலிசைக்கருவியாகத் திகழும் இது குறித்த தரவுகள் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் விரவியுள்ளன. துடியின் அமைப்பு, அதை இயக்கும் முறை, எவ்வக் காரணங்களுக்காக அது இயக்கப்பட்டது, அதனின்றெழும் ஒலியின் தன்மை, அதன் இசைக்கமைந்த ஆடல்முறை, அவ்வாடலை நிகழ்த்தியவர்கள், இயங்காக் காலங்களில் கருவி இருத்தப்பட்ட இடம் எனப் பல செய்திகள் சங்க இலக்கியங்களில் செறிந்துள்ளன.

துடியின் அமைப்பு

வலிய முகத்தினையுடைய கடிய துடி எனும் அகச்சுட்டலால் (261) கருவியின் திண்மையும், செறிந்தும் நெகிழ்ந்தும் இயையும் வள் (வார்) கொண்டது எனும் குறிப்பால் (அகம் 372), தாளத்தன்மையை மேம்படுத்தவும் குறைக்கவும் இக்கருவியில் விரல்களால் இயக்கும் வார் இருந்தமையும் தெளிவாகும். 'துடி அடி அன்ன தூங்குநடைக் குழவியொடு பிடி புணர் வேழம்' எனும் பாடலடி வழி, யானைக்குட்டியின் பாதம் போல் இது இருந்ததாகப் பொருநராற்றுப்படை (125) விளக்க, துடியின் முழக்கப்படும் பகுதியை வலிய வாய் (வல் வாய்), அழகிய வாய் (அவ் வாய்க் கடுந்துடி) என்கிறது அகம் (79). அதன் அடிபடும் கண், வரால்மீனின் துண்டம் போல் இருந்ததாக ('வராஅல் துடிக்கண் கொழுங்குறை-அகம் 196, கொழுமீன் குறைஇய துடிக்கண் துணி யல்'- ம. காஞ்சி 320) சங்கப்பாடல்கள் சுட்ட, வலிய அக்கண்ணில் (வன் கண்- புறம் 170) தட்டியே துடி முழக்கப்பட்டது. பயன்பாட்டில் இல்லாத காலத்தே துடி, வீட்டின் முன்னிருந்த திரண்ட கால்களுடைய பந்தலில் அம்புக்கட்டுகளுடன் தொங்கவிடப்பட் டிருந்தது (பெரும். 124). துடியைப் பெண்களின் இடைக்கு ஒப்பிடும் போக்கு அதன் இடைசுருங்கிய அமைப்பை ஒட்டியே வழக்கானது.1

துடியின் ஒலி

'கனைகுரல் கடுந்துடி', 'கனையும் கடுந்துடி' எனும் அகப் பாடலடிகள் (159, 79) துடியின் ஒலி, விலங்குகள் கனைத்தலால் வெளிப்படும் ஓசை போல் கடுமையாகவும் பெரும் ஆரவாரத்துடனும் இருந்தமை சுட்ட, அக, புறப்பாடல்கள் (19, 370), மிகு ஒலி எழுப்பும் தோலிசைக்கருவியாக விளங்கிய துடியின் குரலைப் பேராந்தையின் கூவலுடன் ஒப்பிட்டுத் துடியிசை அச்சம் தருவதாக விளங்கிய தென்கின்றன. ஒருகால் இணைந்தும் ஒரு கால் தனித்தும் அயலோர் அலர் கூறுமாறு போலத் துடியின் ஒலியும் பெருக விளைந்தும் சற்றே தணிந்தும் இருந்ததென்கிறது அகம் (62). மலைமீதிருந்து வீழும் அருவியின் பேரோசை போல் துடியொலி இருந்ததாகப் பழமொழி நானூறு (270) பகர, செந்நாயின் குரல் போல் ஒலித்ததாக நூலொன்றின் குறிப்பு சுட்டுகிறது.2

இயக்கும் முறை

ஒரு கையால் துடியைப் பற்றி மறு கையால் அதை இயக்கியவர்கள் தாழக் கொட்டியதாக அகம் பேச (89), வலிய கை சிவக்குமாறு வலிமையுடன் முழக்கிக் கொட்டியதாகப் புறம் கூறுகிறது.3 துடியின் தாளங்களைச் சுட்டும் பரிபாடல் (21), 'கேள்வன் உருட்டும் துடிச்சீர்' என்பதால், இயக்கம் உருட்டலாக வும் அமைந்தமை அறியப்படும். குறுந்தடி கொண்டும் துடி இயக்கப்பட்டது.4

இயங்கிய இடங்களும் இயக்கியவர்களும்

பசுக்களைக் கவரும் அல்லது மீட்கும் ஆகோள் பூசல்களும் (வெட்சி, கரந்தை) வழிச்செல்வாரை மறித்துக் கொள்ளையிடும் நிகழ்வுகளும் துடி இசைக்கப்பட்ட பொதுவான களங்களாக அமைந்தன. 'கொடுவில் ஆடவர் ஆகொள் பூசலிற் பாடு சிறந்தெறியும் பெருந்துடி', 'பூசல்துடி', 'ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக் கொடுவில் எயினர்' எனும் பாடலடிகள் (அகம் 372, 379) இதனை நிறுவும். பாலைமறவர்களும் எயினர்களும் துடியை முழக்கி ஆடினர். பாரம் மிக்க கழுதைகளின் நிரையைப் பின்பற்றி வரும் வணிகக்கூட்டத்தின் வாளுடை வீரர்களை வாட்டி, அவர்தம் தலையறுத்து, அரிய அணிகலன்களைத் திறையாகப் பெறும் போர்க்களத்தே, துடியினைத் தாழக் கொட்டி வென்றவர் ஆடிய காட்சியை அகப்பாலைப் பாடலொன்று (89) விரித்துரைக்கிறது. பெற்ற கொள்ளைப்பொருளைத் தமக்குள் அவர்கள் பிரித்துக்கொண்டதாகவும் அப்பாடல் கூறுகிறது.

எயினர்களாலும் பாலைமறவர்களாலும் அவர்தம் போர்ப்பறையாகவும் நடுகல் வழிபாட்டின்போது வீரத்தின் வெளிப்பாடாகவும் ஒலிக்கப்பெற்ற இடைசுருங்கு பறையான துடி, 'மறங் கடைக்கூட்டிய துடிநிலை' எனும் துறை உருவாக வழி வகுத்தது.5 அதை ஒலிப்பதற்கென்றே புறநானூற்றுக் காலத்தே சிலர் அமைந்தனர். பகலெல்லாம் வேட்டையாடித் திரிந்து தம் வில்லால் பெற்ற உணவைப் புழுக்கி உண்பாரின் நடுவே இழிபிறப்பாளனாகிய புலையன் தன் வலிய கை சிவக்க முடுக்கிக் கொட்டும் வலிய கண்ணையுடைய அச்சம் தரும் துடியின் ஒலி எனும் பொருள்பட அமைந்த புறப்பாடலும் (170) 'துடி எறியும் புலைய' எனும் பாடலடியும் இதை நிறுவுகின்றன. இதை இசைத்தவர்கள் துடியன் குடியினராய் அறியப்பட்டனர்.6

பரிபாடல் காலத்தில் (பொ. கா. 4 - 5ஆம் நூற்றாண்டு) விழாக்களின் போதும் துடி ஒலிக்கப்பெற்றது. புது வெள்ளம் வருவதைக் கொண்டாடிப் புனல் பரந்ததென்று துடி முழக்கினர் (7:28). கண வன் உருட்டிய துடியின் தாளத்திற்கு முத்துமாலை அசைய ஆடிய இல்லாளின் காற்சிலம்பின் பரல்கள் ஒலித்தன. அடி பெயர்த்து முறையாகத் தோளசைத்து அப்பெண் ஆடியமையை, 'துடிச்சீர்க்குத் தோளூழ் பெயர்ப்பவள்' என்கிறது பரிபாடல் (21:18-19, 60-66). தோளசைத்துத் தூக்கி அப்பெண் ஆடியபோது, அம்பு பிறழ்தல் போல அவள் கண்களும் பிறழ்ந்தனவாம். சங்ககாலத்தின் முற்பகுதியில் பெரும்பாலும் பாலைநில ஆடலாக ஆடவர்களால் நிகழ்த்தப்பட்ட துடிக்கான ஆடல், சங்க காலத்தைத் தழுவி மலர்ந்த பரிபாடல் காலத்தே, மருதநில ஆடலாகவும் வடிவெடுத்து மகளிர் அதில் பங்கேற்குமாறும் அமைந்தமை காலநிரலான இலக்கியச் சான்றுகளால் புலனாகிறது.7

காப்பியக் காலத்தில் முடுக்குத் தெருக்களில் ஊர்க்காப்பாளரால் ஒலிக்கப்பெறும் இசைக்கருவியாகவும் மாறிய துடி (மணி 7:69), எயினருடன் தொடர்ந்தமையைத் துடியுடனே சிறுபறையும் கொம்பும் வெடித்தல் ஓசையுடன் முழங்க, அரையிருளில் எயினர் தம் இருப்பிடத்தினின்றும் வந்தமை காட்டும் சிலம்பின் அடிகளால் (12:20) தெளிவாகிறது. வீரர், புலையர், காவலர் எனப் பலர் கை விளங்கிய துடி, சிலப்பதிகாரக் காலத்தில் முருகனைச் சேர்ந்தது. 'சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்' எனும் சிலம் படி (6:51), வெற்றியைக் கொண்டாடித் துடி முழக்கி முருகன் ஆடிய வெற்றிக்கூத்தைப் பதினொரு ஆடல்களுள் ஒன்றாக உயர்த்திப் பிடிக்கிறது. இத்துடிக்கூத்து எழுவர்அன்னையராலும் ஆடப் பெற்றதாகப் பிங்கல நிகண்டு (ப. 215) சுட்ட, கொற்றவையாலும் நிகழ்த்தப்பெற்றதாகக் கூறுகிறார் ஆளவந்தார்.8

தலைவனின் தூதாக ஊடல் தீர்க்க வந்த பாணனை நோக்கி, 'துடியின் இடக்கண் அனையம் யாம் ஊரற்கு, அதனால் வலக் கண் அனையார்க்கு உரை' என நகையாடிப் பாடிய நாலடியார் காலத் தலைவி, வலம், இடம் என இரு கண்கள் பெற்றிருந்த போதும் துடியின் வலக்கண்ணே முழக்கப்பட்டதென்பதை அழகுபடப் பதிவுசெய்துள்ளார்.9

துடியின் மாறுபட்ட பயன்பாடு

பகைவரை அச்சுறுத்தும் நோக்கில் ஆகோள் பூசலிலும்10 வணிகச்சாத்துகளை வழிமறித்துக் கொள்ளையிட்ட சூழல்களிலும் போர்ப்பறையாக ஒலித்த துடி, வெற்றியைக் கொண்டாட வும் வருகையைத் தெரிவிக்கவும் களிப்பை வெளிப்படுத்தவும் நடுகல் வழிபாட்டில் வீரம் போற்றியும் இயக்கப்பட்டதுடன், தற் காப்பு நோக்கில் போர்க்கருவியாகவும் பயன்பட்டது. அருவியெனப் பாய்ந்து வரும் அம்புகள் எனும் பேராற்றின் முன் நின்ற கரந்தைவீரன், தன் கையிருந்த துடியையே புணையாகக் கொண்டு பகைவரை வென்று நிரைமீட்டுக் கல்லானான் எனும் புறப்பாடல் (260) சுட்டும் துன்பியல் வரலாறு நடுகல்லின் பெருமையோடு துடியின் களம் சார்ந்த பயன்பாட்டையும் கண்முன் நிறுத்துகிறது.

பத்திமைக் காலத் துடி

பத்திமைக் கால முன்னோடியாகக் கருதப்படும் காரைக்காலம்மை தம் மூத்த திருப்பதிகத்தில் (11:2:9) இறையாடலுக்கு உகந்தனவாகப் பல புதிய இசைக்கருவிகளை அறிமுகப்படுத்துகிறார். அவற்றுள் தோல்கருவிகள் 9. சச்சரி, தக்கை, தகுணிச்சம், மத்தளம், கரடிகை, குடமுழா, மொந்தை, துந்துபி, தமருகம் எனும் அவை ஒன்பதுமே சங்க, காப்பிய வழக்குப் பெறாதவை. காற்றுக் கருவியாகக் கொக்கரையும் (சங்கு) நரம்புக்கருவியாக வீணையும் கஞ்சக்கருவியாகத் தாளமும் அம்மையால் இணைக்கப்பட்டுள்ளன. அம் மையின் இப்பட்டியலில் துடி இல்லை. ஆனால், தம் பதிகத்தின் வேறோரிடத்தில் (11:2:2:9), 'படு வெண் துடியும் பறையுங் கறங்கப் பரமன் ஆடுமே' என்று துடியின் இசைக்கு இறைவன் ஆடியதாகக் குறிக்கிறார். அம்மை சுட்டும் தோலிசைக்கருவிகளுள் சிறப்புப் பெறுவது தமருகம். பிற கருவிகளைப் பெயர் மட்டும் சுட்டிச் சொல்லும் அம்மை, தமருகத்தைக் குறிக்கையில், 'வன்கை மென் தோல்' என்று பெருமைப்படுத்துகிறார்.

அம்மையைப் பின்தொடர்ந்து பத்திமை இலக்கியங்கள் படைத்த நாவுக்கரசரும் சம்பந்தரும் இறையாடலைப் பெரிதும் போற்றுவதுடன், அவ்வாடலுக்கு இசையளித்த கருவிகளையும் இறைவன் கைப்பிடித்த கருவிகளையும் தத்தம் பதிகங்களில் பதிந் துள்ளனர். இருவருமே இறையாடலுக்குத் துடியின் முழக்கம் துணையிருந்ததாகக் கூறுகின்றனர். 'துடிகளோடு முழவும் விம்மவே' என்ற சம்பந்தரின் சுட்டல் (1:28:6), இறையாடலுக்குப் பல துடிகள் கறங்கியமை காட்ட, 'கறங்கு துடியின் முழக்கும்', 'துடியாம் துடியின் முழக்கந்தானாம்' என்றெல்லாம் இறையாடலின் சூழல் காட்டும் நாவுக்கரசர், (4:2:6, 6:15:8) 'துடி கொண்ட கையும்' (4:81:6) என்று தொடங்கி, இறைவன் எந்தெந்தக் கோலங்களில் துடி கொண்ட கையராய் விளங்கினார் என்ப தையும் கூறுகிறார்.

இறைவன் பிச்சையேற்ற கோலத்தில் துடி முழக்கிச் சென்றமையை, 'துஞ்சிடையே வந்து துடியும் கொட்டத் துண்ணென்று எழுந்திருந்தேன்' என்று பெண் பாடுமாறு (6:13:6) கூறுவதுடன், 'துடியுடை வேடராகி' (4:50:1) எனச் சொல்வதன் வழி, கிராதார்ச்சுனக் கோலத்தில் சிவபெருமான் துடி கொண்டவராய் இயங்கியமையையும் பதிவுசெய்கிறார். திருமாளிகைத்தேவர், 'கணிஎரி விசிறு கரம் துடி விடவாய்க் கங்கணம் செங்கை மற்றபயம் பிணிகெட இவை கண்டுன் பெருநடத்தில்' என்று தம் கோயில் திருப்பதிகத்தில் (9:16) ஆடும் இறைவனின் கைப்பொருளாய்த் துடியைக் காண்கிறார்.

தமருகம்

அம்மை வழி அறிமுகமாகும் தமருகம் இறைக்கோலத்தில் இணைவதை, 'சங்கக் கலனும் சரி கோவணமும் தமருகமும் அந்திப்பிறையும் அனல்வாய் அரவும்' எனக் காட்டும் நாவுக்கரசர் (4:111:2), அது இறைவனின் வேழம் உரித்த காலபைரவக் கோலத்தில் அவர் கைப்பொருளாய் இருந்தமையை, 'சூலம் வெடிபடும் தமருகம் கை தரித்து ஓர் கோல காலபைரவனாகி வேழம் உரித்து' எனும் பாடலடியால் (4:73:6) பதிவுசெய்கிறார். இறைவனின் கைப் பொருள்களைக் குறிக்குமிடத்து, 'மழுவும் தமருகமும் எரியும் கையில் தோற்றவன்' என்று தமருகம் இறைவன் கையில் இருந்த மையை உறுதிசெய்கிறார் (6:64:3).

இறைக்கோல வண்ணனைகளின்போது, 'தலையிலங்கும் பிறை தாழ்வடம் சூலம் தமருகம் அலையிலங்கும் புனல் ஏற்றவர்' என்றும் (3:9:4), முத்தலைஈட்டி மழு மான் முறைமுறை ஒலி தமருகம் முடைதலை கணிச்சி தீகொண்ட கைகள் என்றும் கூறித் தமருகத்தை இறைவன் கைப்பொருளாய் சம்பந்தரும் உறுதிப் படுத்துகிறார் (1:22:6). இறைவன் ஆடும்போது அவர் கையில் தமருகம் விளங்கியதை, 'கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரியகலும் கரியபாம்பும்' எனச் சுந்தரரும் (7:90:1) 'தழலும் தமருக மும் பிடித்தாடி' என்று கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில் நம்பியாண்டார் நம்பியும் (11:32:63) சுட்ட, 'தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு இன்னகை மழலை கங்கை கொங்கிதழி இளம்பிறை குலைவளர் இளமான் கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர் மன்னவன் மணியம்பலத்துள் நின்றாடும் மைந் தன்' என்று இறைவனோடு இணைந்திருந்த தமருகத்தைக் கருவூர்த்தேவரின் திருவிசைப்பா அடையாளப்படுத்துகிறது (9:10:8). பட்டினத்துப் பிள்ளையார் தம் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில், 'மூவிலை வேலும் பூவாய் மழுவும் தமருகப் பறை யும்' என்றும் (11:28:35), கல்லாடம், 'எரி நவ்வி மழு தமருகம் அமைந்த நாற்கரம்' என்றும் ((60:27-28)) தமருகம் இறைவன் கை இசைக்கருவியாய்ப் பிற்காலத்தும் தொடர்ந்தமை காட்டும்.

வெடிபடும் தமருகம், முறைமுறை ஒலி தமருகம் எனும் தொடர்கள் இறைவன் அவ்விசைக்கருவியை இயக்கியபோது தோன்றிய ஒலியின் அளவையும் கருவி இயக்கப்பட்ட பாங்கையும் சுட்டுகின்றன. 'கரைகடல் ஒலியின் தமருகத் தரையிற் கையினிற் கட்டிய கயிற்றால் இருதலை ஒரு நா இயங்க' எனும் கரு வூர்த் தேவரின் திருவிசைப்பாப் பாடலடி (9:14:3) தமருகத்தின் வடிவத்தையும் அது இயங்குமாற்றையும் அது எழுப்பிய ஒலியின் அளவையும் தெற்றெனத் தெரிவிக்கிறது.

இரு வாய்களிலும் தோலால் மூடப்பெற்று வார்களால் இணைக்கப்பெற்ற இடைசுருங்கிய சிறு பறையான இதன் இடையைச் சுற்றியுள்ள கயிறு, வார்களின் மேல் சுற்றியிருக்கும். இதன் முனையிலுள்ள நெட்டி அல்லது உலோகத்தாலான உருண்டை, கருவியைக் கையில் வைத்துப் பக்கவாட்டில் அசைத்தாட்டுகையில் தமருகத்தின் இருவாய்களிலும் மோதி ஒலி எழுப்பும். இணைப்பு வார்களின் மேல் நிகழும் விரலழுத்தம் வேண்டும் தாள ஒலி தரும்.


தமருகத்துடன் ஆனந்ததாண்டவர்


தமருகத்துடன் ஆனந்ததாண்டவர்


தமருகத்துடன் ஆனந்ததாண்டவர் - கங்கைகொண்டசோழபுரம்


தமருகத்துடன் ஆனந்ததாண்டவர் - கரந்தை


தமருகத்துடன் ஆனந்ததாண்டவர் - கூகூர்

உடுக்கை

உடுக்கப்பெற்ற ஆடையைக் குறிக்க சங்க, காப்பியக் காலத்தே வழக்கிலிருந்த உடுக்கை எனும் சொல், பத்திமைக் காலத்தே தோலிசைக்கருவியையும் சுட்டியது. சிவபெருமானின் ஆடலுக்குத் தாளம் தக்கையோடு உடுக்கையும் இசையளித்ததாக சம்பந்தர் பாடுவார் (1:65:10). சம்பந்தரின் இந்த ஒரு சுட்டல் தவிர உடுக்கையைப் பிற பத்திமையாளர்களின் பாடல்களில் காணக்கூடவில்லை. பல்வேறு தோலிசைக்கருவிகளைக் குறிக்கும் கல்லாடமும் துடி என்ற சொல்லையே பெய்துள்ளது. பிங்கலம், 'துடியே உடுக்கை' எனச் சுட்டுவதால்,11 சங்ககாலத்தில் பெருவழக்காயிருந்த துடியே காலப்போக்கில் உடுக்கை என்றும் அழைக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.

மண், மரம் அல்லது பித்தளையால் செய்யப்பட்ட உடல் கொண்ட இடைசுருங்கிய பறையான உடுக்கையின் இரு வாய்களிலும் தோலடைத்து அதன் துளைகள் வழி இரு வாய்களிலும் மாறி மாறி நீள்கயிற்றால் பிணைத்துக் கயிற்றைச் சுற்றி நடுவில் நாடாவை இணைத்து உடுக்கை அமையும். இடக்கையால் கருவியைப் பற்றி விரல்களால் நாடாவை அழுத்தியவாறே வலக்கையால் முழக்குவதன் வழி வேண்டிய தாளங்கள் பெறப்படும். தமருகம் போலன்றி உடுக்கையை இயக்கத் துடி போலவே இரு கைகள் தேவை.

இலக்கிய வழக்கில் அருகியுள்ள உடுக்கை, சோழர் காலக் கல்வெட்டுகளில் இசை, ஆடலுடன் தொடர்புடைய தோலிசைக் கருவியாகக் குறிக்கப்படுகிறது. திருவிடைமருதூர்க் கோயிலிலுள்ள முதல் பராந்தகரின் 27ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (ளுஐஐ5:721), இறைவன் திருமுன் மூன்று வேளையும் உடுக்கை வாசித்த கலைஞருக்கு வாழ்வூதியமாக விளங்குடியிலிருந்த இறைவன் நிலத்தில் முக்கால் வேலி தரப்பட்டமை கூறுகிறது. மூன்றாம் குலோத்துங்கசோழரின் 12ஆம் ஆட்சியாண்டுக் காலம்வரை ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் இக்கோயிலில் உடுக்கைக் காணி தொடர்ந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுள்ளது (ளுஐஐ5:706).

சிராப்பள்ளி மாவட்டம் திருஎறும்பியூர்க் கோயிலிலுள்ள கண்டராதித்த சோழரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (ளுஐஐ13:51), நான்கு அடிகள்மார் உடுக்கை, தாளஇசையுடன் மூன்று சந்தியும் அங்குத் திருப்பதியம் பாடியதாகக் கூறுகிறது. தஞ்சாவூர் ராஜராஜீசுவரத்திலுள்ள இரண்டு கல்வெட்டுகளுள் (ளுஐஐ2: 65, 66) ஒன்று, அங்குப் பணியாற்றிய 48 பிடாரர்களும் இறைத்திருமுன் திருப்பதியம் பாடியபோது, சூரியதேவ கிரமவித்தனான ஆலாலவிடங்க உடுக்கை விச்சாதிரனான சோமசிவன் உடுக்கை வாசித்ததாகக் கூற, சோழர் கால ஆடற்கலை உறைவிடப்பள்ளிகள் குறித்து விரிவான தரவுகளை வழங்கும் தளிச்சேரிக் கல்வெட்டு, அங்கு ஆடல்நிகழ்த்திய 400 ஆடலரசிகளுக்கும் இசைவழங்கிய கலைஞர்களுள், உடுக்கை வாசித்தவர்களாக வீரசோழன் விடங்கனான ராஜராஜ ஸ்ரீஹஸ்தனையும் கூத்தன் ஆதித்தனான ராஜராஜ சஹஸ்ரபாகுவையும் குறிக்கிறது. முதல் ராஜராஜர் காலத்தே தாதபுரம் குந்தவை விண்ணகரத்தில் திருவிழாநாள்களில் அவ்வூர் ரவிகுலமாணிக்க ஈசுவரத்தைச் சேர்ந்த 32 தளிச்சேரிப் பெண்டுகளும் பாடி, ஆடியபோது பாடவியமும் உடுக்கையும் வாசிக்கப்பெற்றன.12

திருவையாறு ஐயாறப்பர் கோயில் வளாகத்தின் வடகயிலாயத்திலுள்ள முதலாம் ராஜராஜரின் 24ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டில் ஒன்று, அங்கு உடுக்கைக் கலைஞர்கள் இருந்தமை சுட்ட,13 மற்றொன்று (ளுஐஐ 5: 521), 'செம்பில் மேற் பொந் கடுக்கின பாவைக்கண்ணாடியில் ஆடுகிற பாவை ஒன்று மத்தளம் கொட்டுகிற பாவையொன்று உடுக்கை வாசிக்கிற பாவையொன்று பாடுகிற பாவையொன்று பீடமொன்று உள்பட கண்ணாடியொன்று' என்பதன் வழி, இடைச்சோழர் காலத்தே மத்த ளத்துக்கு இணையாக ஆடலுக்கு உகந்த இசைக்கருவியாக உடுக்கை விளங்கியமை தெரிவிக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சிவபுரம் சிவன்கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்ட முதலாம் ராஜாதிராஜரின் 27ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (ஹசுநு 1961-62 :234), ராஜராஜஈசுவரம் எனும் பெயருடன் விளங்கிய அக்கோயிலில் ஆதித்தவாரப் பெரும்பலி தோறும் (ஞாயிறு) நிகழ்ந்த ஊர்வலத்தில், 24 பதியிலார் ஆடியதையும் அதற்குப் பாடவியம், வீணை, உடுக்கை முதலிய இசைக்கருவிகள் இசையளித்ததையும் தெரிவிக்கிறது.14

உடுக்கையைக் குறிக்குமாறு போலத் துடி சுட்டும் கல்வெட்டுகள் இல்லாமையின், பிங்கல மொழிவுக்கேற்பச் சோழர் காலத் தில் துடி உடுக்கையாகப் பெயர் மாற்றம் கொண்டதாகக் கொள்ள லாம். முதலாம் ராஜராஜர் காலத்தில் தஞ்சாவூர் ராஜராஜீசுவரத்துக்குப் பொன்னால் செய்தளிக்கப்பெற்ற சேத்ரபாலர் திருமேனியைக் குறிக்கும் கல்வெட்டு (ளுஐஐ2: 1), இறைவன் நான்கு திருக்கைகளிலும் பிடித்திருந்த பொருள்களாகச் சூலம், பாசம், கபாலம், தமருகம் ஆகியவற்றைக் குறிக்கிறது.


உடுக்கையுடன் கங்காளர் - காமரசவல்லி


உடுக்கையுடன் கங்காளர் - திருச்செங்காட்டாங்குடி


உடுக்கையுடன் கங்காளர் - திருவலஞ்சுழி

சிற்பங்களில்

தமிழ்நாட்டில் காணக்கிடைக்கும் காலத்தால் முற்பட்ட இறையாடல் சிற்பம் முதலாம் மகேந்திரவர்மரின் சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவர கிருகத்தில் தூண் சிற்பமாகக் காட்சி தருகிறது. சிவபெருமானின் புஜங்கத்ராசிதக் கரணக் கோலமான இதில், இறைவனின் நான்கு கைகளிலுமே இசைக்கருவிகள் இல்லை. இதையடுத்துப் பல்லவர் பகுதியில் ராஜசிம்மரின் கற்றளிகளில்தான் இறையாடல் சிற்பங்கள் தோற்றம் தருகின்றன. சிவபெருமானின் குஞ்சிதம், ஊர்த்வஜாநு, தண்டபட்சம், அர்த்த சுவஸ்திகம் உள்ளிட்ட கரணங்களும் ஊர்த்வதாண்டவமும் மாமல்லபுரம் உலக்கணேசுவரத்திலும் காஞ்சிபுரம் இறவாதான், பிறவாதான், திரிபுராந்தக ஈசுவரங்கள், ஐராவதேசுவரம், மதங்கேசு வரம், கயிலாசநாதர் கோயில் ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் நந்திவர்மர் காலத்ததான முக்தேசுவரத்திலும் இறையாடல் சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்களுள் பல சுதைப்பூச்சு ஏற்றிருந்தாலும் சில சிற்பங்கள் சுதைநீங்கிய நிலையில் எழில் காட்டுகின்றன.

சிவபெருமானின் இவ்வாடல் தோற்றங்கள் பெரும்பாலானவற்றில், அவரது வலக்கைகளுள் ஒன்றில், (பெரும்பாலும் வல மேற்கை) இடைசுருங்கிய பறை உள்ளது. தமருகத்துக்கான கயிற்றிலிணைத்த உருண்டையை அவற்றில் காணமுடியவில்லை எனினும், அவற்றின் சிறுத்த அளவும் இறைவன் அவற்றைப் பற்றியுள்ள பாங்கும் இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த செப்பு இறையாடல் திருமேனிகளின் கையில் உரிய வடிவமைப்பில் தமருகம் இருப்பதும் இத்தோலிசைக் கருவியைத் தமருகமாகக் கொள்ள உதவுகின்றன.

பரங்குன்றம், குன்றக்குடி ஆகிய முற்பாண்டியர் காலக் குடைவரைகளிலுள்ள சிவபெருமானின் ஆடற்சிற்பங்களிலும் அவர் தம் கற்றளியான திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் கபோதக் கூட்டிலுள்ள ஆனந்ததாண்டவச் சிற்பத்திலும் இறைவனின் வலமேற்கையில் உருண்டையற்ற இடைசுருங்கு பறையே உள்ளதெனி னும், அவற்றையும் அளவு, பற்றியுள்ள பாங்கு கருதித் தமருகமாகவே கொள்ளலாம்.

திருஎறும்பியூர், சீனிவாசநல்லூர், திருப்பழனம், துடையூர், பாச்சில், புள்ளமங்கை, திருச்செந்துறை உள்ளிட்ட முற்சோழரின் தொடக்கக் கால இறையாடல் சிற்பங்களிலும் இந்நிலை தொடர்ந்தாலும் கண்டராதித்தர் காலம் தொட்டு மாற்றத்தைக் காணமுடிகிறது. கருந்திட்டைக்குடி, கீழப்பழுவூர், கூகூர், திருநறையூர், திருப்புறம்பியம், காமரசவல்லி, கங்கைகொண்ட சோழபுரம், மானம்பாடி, திருச்செங்கட்டாங்குடி, முதலிய கோயில்களிலுள்ள ஆடவல்லான் சிற்பங்களில் வலமேற்கையில் அடிக்கும் உருண்டையுடன் தமருகம் கண்காட்டுகிறது.

செப்புத்திருமேனிகளில்

தமிழ்நாட்டிலுள்ள ஆடல்திருமேனிகளில் காலத்தால் முற்பட்டதாகக் கூரம் ஊர்த்வஜாநு கரணரைக் குறிக்கலாம். பொருப்புமேட்டுப்பட்டியில் கிடைத்ததாகச் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால்மாறி ஆடிய சிவத்திருமேனியைச் சிலர் முற்பாண்டியர் காலத்ததென்பர். இவ்விரண்டிலுமே சிவபெருமானின் கையில், அடிக்கும் உருண்டையுடன் தமருகம் இடம்பெற்றுள்ளது. கூரம் திருமேனி வலக்கையிலும் பாண்டியர் திருமேனி இடக்கையிலும் அதைக் கொண்டுள்ளன.

முற்சோழர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட வயலூர், கொடுமுடிச் சதுரதாண்டவர்கள், திருவரங்குளம் லலிதகரணர், திருவக்கரை ஊர்த்வஜாநு கரணர், நல்லூர், குழித்தலை, கிளக்காடு ஆட வல்லான் திருமேனிகளிலும் இறைவனின் வலமேற்கையில் தமருகம் கயிற்றில் பிணைத்த உருண்டையுடன் உள்ளது. சென்னை அருங்காட்சியகத்திலும் தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களிலுமுள்ள சிவபெருமானின் ஆடல்திருமேனிகளிலும் தமருகமே தனிப்பெரும் இசைக்கருவியாய்க் கொள்ளப்பட்டுள்ளது. இவை நோக்க, பல்லவர், சமகாலப் பாண்டியர், முற்சோழரின் தொடக்கக் கால ஆடற்திருமேனிகள் கொண்டுள்ள இடைசுருங்கு பறையை அதன் அளவு, இறைக் கை அதைப் பற்றியிருக்கும் பாங்கு கொண்டும் தொடர்ந்து கிடைக்கும் சிற்ப, செப்புத்திருமேனிகளின் காட்சி கொண்டும் அடிக்கும் உருண்டையற்ற நிலையிலும் தமருகமாகக் கொள்வதே சரியெனத் தோன்றுகிறது.

பிற சிவத்தோற்றங்களில்

சிவபெருமான் ஆடும்போது கைக்கொள்ளும் இத்தமருகம் அவரது பைரவர், சேத்ரபாலர் வடிவங்களிலும் அரிதாக யானையை அழித்த கோலத்திலும் காணப்படுகிறது.15 உடுக்கையாகப் பெயர்மாற்றம் பெற்ற துடியை இறைவன் கையாலோ, கோலொன்றாலோ தட்டி முழக்குவதைக் கங்காளர் கோலங்களில் காணமுடிகிறது. இக்கோல் வளைந்திருப்பின் குணில் என் றழைக்கப்படுகிறது. குணிலுடன் உடுக்கை வாசிக்கும் கங்காளரைச் சோழபுரம், காமரசவல்லி, குடந்தை நாகேசுவரர், திருச்செங் கட்டாங்குடி, திருவலஞ்சுழிக் கோயில்களில் பார்க்கலாம். அவர்களுள் காமரசவல்லியார் வலமேற்கையில் தமருகமும் பெற்றுள்ளார். உடுக்கையைக் கையால் முழக்கும் கங்காளர்களைச் சிறுபழுவூரிலும் திருவிசலூரிலும் காணமுடிகிறது. பழுவூர்க் கங்காளரின் வலமேற்கையில் தமருகமும் உள்ளது. பேரூர்ப் பட்டீசுவர ஊர்த்வதாண்டவர் இடக்கையில் உடுக்கை கொண்டு வலக்கைக் குணிலால் முழக்க, தில்லை நடராசர் கோயில் குளக்கரைத் தூணிலுள்ள ஊர்த்வதாண்டவர் தம் இடக்கைகளுள் ஒன்றிலுள்ள உடுக்கையை, மற்றோர் இடக்கையால் தட்டி முழக்கி அதிசயிக்க வைக்கிறார்.

கண்டியூர்க் கங்காளர் வலமேற்கையில் உடுக்கையை அதன் இடைநாடாவைப் பிடித்தபடி காட்சிதர, அண்ணாமலையார் கோயிலிலும் இறைவனை அதே பாங்கில் காணமுடிகிறது. தமருகம் எனில் அதன் இடையை இறை விரல்கள் பற்றியிருக்கும். முழக்காது கொண்டிருக்கும் உடுக்கை எனில் இறைக் கை அதன் நாடாவைப் பிடித்திருக்கும். கருவியைக் கைக்கொள்வதில் சிற்பிகள் காட்டியிருக்கும் இவ்வேறுபாடு, முழக்காத நிலையில் இறைவன் கைக்கொண்டிருப்பது உடுக்கையா தமருகமா என்றறிய, அதன் அளவு உதவுமாறு போலவே துணையாகிறது.

முடிவுரை

சங்க, காப்பியக் காலத்தில் பெருவழக்குப் பெற்றிருந்த துடி, பத்திமைக் காலத்தில் உடுக்கை என்றும் அழைக்கப்பெற்றுச் சோழர் காலத்தில் ஆடலுக்குகந்த இசைக்கருவியாகத் திகழ்ந்ததுடன், சிவபெருமானின் சில கோலங்களிலும் இடம்பெற்றது. இடைசுருங்கு பறையான இதை ஒரு கையால் பற்றி மற்றொரு கையாலோ அல்லது கைக்கோலாலோ இயக்கினர். முழக்காத காலங்களில் இடைநாடாவைப் பற்றிய நிலையில் அவர்தம் கையில் அது இலங்கியது.

காரைக்காலம்மை காலத்தில் அறிமுகமான தமருகம், பத்திமைக் காலத்தில் இறைவன் ஆடும்போது கைக்கொள்ளும் இன்றியமையாத இசைக்கருவியாகி, அவரது ஆடல்தோற்றங்களில் தவறாது இடம்பெற்றது. பைரவர், சேத்ரபாலர் முதலிய பிற சிவத்தோற்றங்களிலும் தமருகம் கொள்ளப்பட்டது. அளவில் சிறியதாகவும் விரல்களால் பற்றி இயக்கக்கூடியதாகவும் கருவியின் இடைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கயிற்றுடன் இணைந்த உருண்டை கருவியின் இரு முகங்களிலும் மோதி ஒலியெழுப்புவ தாகவும் அமைந்த தமருகம், உடுக்கையினின்று அமைப்பிலும் பயன்பாட்டிலும் மாறுபட்டதாகும். துடியும் உடுக்கையும் இருமுகம் பெற்றிருந்தபோதும் அவற்றின் ஒரு முகமே இசைக்குப் பயன்பட்டது. ஆனால், தமருகம் இருமுகங்களிலும் உருண்டை மோத இசை தந்தது.

குறிப்புகள்

1. 'துடியிடையோயே', சிலம்பு 6: 26, 'துடியார் இடை உமையாள்', திருமுறை 6:57:8 , 'துடியார் இடையாள்', திருமுறை 1:34:3 , 'துடி நடுவன்ன துளங்கிய நுசுப்பிற்' பெருங்கதை 2: 15: 66.
2. ஆர்.ஆளவந்தார், தமிழர் தோற்கருவிகள், ப. 72.
3. 'கருங்கை சிவப்ப வலி துரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி', புறம் 170.
4. 'துடி எறியும் புலைய, எறிகோல் கொள்ளும் இழிசின', புறம் 287.
5. தொல். பொருள், புறத்திணை இயல், நூற்பா எண் 62.
6. மு.கு.நூல், ப. 72.
7. பரிபாடல், 21, 22.
8. மு.கு.நூல், ப. 73.
9. நாலடியார், 388.
10. நிரைகோடலில் துடியும் பறையும் தொடர்ந்து இடம்பெற்றமையை சீவகசிந்தாமணி உறுதிசெய்கிறது. பா. எண் 1147.
11. பிங்கல நிகண்டு, ப. 223.
12. ARE 1919:14; ஆவணம் - 17 பக். 56, 57.
13. இரா. கலைக்கோவன், சோழர் கால ஆடற்கலை, பக். 248-252.
14. இரா. சிவானந்தம், காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு, ப. 185.
15. இத்தமருகம் காளியாலும் கைக்கொள்ளப்பட்டிருப்பதைப் பல சிற்பங்களில் காணமுடிகிறது. எ. கா. புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள்.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.