http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 160

இதழ் 160
[ டிசம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

அழுந்தூர் வரகுணீசுவரம் -1
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 1
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு - 3 (பீலியன்ன நீள் இரவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 2 (தோகை உலரும் வரை)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 5
இதழ் எண். 160 > கலையும் ஆய்வும்
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
மு.நளினி, அர.அகிலா
திருச்சிராப்பள்ளி முசிறிச் சாலையில் 12 கி. மீ. தொலைவிலுள்ள திருவாசியில் விளங்கும் பாடல் பெற்ற மாற்றுரை வரதீசுவரர் கோயிலிலிருந்து மூன்று காலக்கட்டங்களில்1 16 கல்வெட்டுகளைப் படியெடுத்துள்ள நடுவணரசின் கல்வெட்டுத்துறை அவற்றுள் ஒன்றின் பாடத்தை மட்டுமே வெளியிட்டுள்ளது.2 பிற 15 கல்வெட்டுகளின் பாடங்களைப் படித்தறிய மேற்கொண்ட முயற்சியில், 1973-74ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கையில் பதிவாகியுள்ள 238, 240ஆம் எண்ணிட்ட கல்வெட்டுகளைத் தவிர, பிற அனைத்துக் கல்வெட்டுகளின் பாடங்களையும் பெறமுடிந்தது. இவ்விரண்டு கல்வெட்டுகளும் கல்வெட்டறிக்கைக் குறிப்பிடும் இடங்களில் இன்று காணுமாறு இல்லை.

புதிய கல்வெட்டுகள்

இப்பாடத் தேடலின்போது 17 புதிய கல்வெட்டுகளும் பல துண்டுக் கல்வெட்டுகளும் தச்சமுழமொன்றும் சில சதாசேவைக் கல்வெட்டுகளும் மைய ஆய்வர்களால் பல்வேறு காலக் கட்டங்களில் இவ்வளாகத்திலிருந்து படியெடுக்கப்பட்டன.3 அவற்றுள் சில ஆவணம் முதல் இதழிலும்4 மைய ஆய்விதழான வரலாறு தொகுதிகளிலும்5 பதிவாகியுள்ளன. சில கல்வெட்டுகள் முழுமையாகக் கிடைக்காத நிலையிலும் கிடைத்த பகுதிகளின் சிறப்புக் கருதி அவை படியெடுக்கப்பட்ட காலங்களிலேயே இதழ்களில் பதிவாயின. வளாக மீளாய்வுகள் அத்தகு கல்வெட்டுகளின் விடுபட்ட பகுதிகளைக் கண்டறிய உதவி அவற்றை முழுமையாக்கத் துணைநின்றன.6





அரசமரபுகள்

இங்குக் கிடைத்துள்ள கல்வெட்டுகளுள் 26 சோழர் காலத்தவை. பிற்பாண்டியர் பதிவாக 4ம் ஹொய்சள வீரசோமேசுவரரின் கல்வெட்டு 1ம் விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள் 2ம் இவ்வளாகத்துள்ளன. அரசர் பெயரற்ற கல்வெட்டுகள் 8. இவ்வளாகக் கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது முதற் பராந்தக ரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (பொ. கா. 919). அவரது 13, 19ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளும் இங்குள்ளன. கல்வெட்டறிக்கை சுட்டும் பராந்தகரின் ஆட்சியாண்டற்ற கல்வெட்டைக் காணக்கூடவில்லை.7

பராந்தகரை அடுத்து முதல் ராஜராஜரின் கல்வெட்டுகளையே காணமுடிகிறது. அவரது 5, 19, 16, 21ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளும் ஆட்சியாண்டற்ற நிலையில் 1 கல்வெட்டும் இங்குள்ளன.8 முதல் ராஜேந்திரர், இரண்டாம் ராஜேந்திரர், வீரராஜேந்திரர் கல்வெட்டுகள் 3ம், முதற் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகள் 3ம், மூன்றாம் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகள் 2ம் மூன்றாம் ராஜராஜர் காலக் கல்வெட்டுகள் 3ம் இவ்வளாகத்துள்ளன. ஒரு கல்வெட்டு சுட்டும் குலோத்துங்கரை அடையாளப்படுத்த முடியவில்லை. சோழர் கால எழுத்தமைதியிலுள்ள 4 கல்வெட்டுகள் மன்னர் பெயரை இழந்துள்ளன. கல்வெட்டறிக்கை சுட்டும் ராஜாதிராஜரின் மெய்க்கீர்த்தி அவரை முதலாம் ராஜாதிராஜராக அடையாளப்படுத்துகிறது.

இங்குள்ள 4 பாண்டியர் கல்வெட்டுகளுள் 2 முதலாம் மாறவர்மர் சுந்தரபாண்டியருக்குரியது (பொ. கா. 1216-1244). 1 எம்மண்டலமும் கொண்டருளிய முதலாம் சடையவர்மர் சுந்தரபாண்டியரின் (பொ. கா. 1250-1284) 5ஆம் ஆட்சியாண்டுக்குரியது. மற்றொரு கல்வெட்டில் மன்னர் பெயரின் முதற்பகுதி சிதைந்திருப்பதால் கல்வெட்டுக்குரியவர் விக்கிரமரா, பராக்கிரமரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. விஜயநகர அரசர்களுள் கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு முழுமையாக அமைய, பொ. கா. 1449க்குரிய சாயணதேவரின் கல்வெட்டுத் துண்டுக் கல்வெட்டாகக் கிடைத்துள்ளது. அரசர் பெயரற்ற துண்டுக் கல்வெட்டுகளுள் ஒன்று பொ. கா. 1483க்குரியது.

திருவாசி

முதற் பராந்தகரின் கல்வெட்டுகளில் பாச்சிலைச் சேர்ந்த திருவாச்சிராமமாக அறிமுகமாகும் இவ்வூர், முதலாம் ராஜராஜரின் 5ஆம் ஆட்சியாண்டுவரை அப்பெயரிலேயே அழைக்கப்பட்டது. அம்மன்னரின் 11ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு பாச்சிலை ராஜாச்ரய வளநாட்டின் கீழிருந்த கூற்றமாகக் காட்ட, 13ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, மழநாடாகிய ராஜாச்ரய வளநாட்டுப் பாச்சில் கூற்றத்து மீபிலாற்றுப் பாச்சில் என்று அடையாளப்படுத்துகிறது. இதன் வழிப் பழம்பெரும் நிலப்பகுதியாக விளங்கிய மழநாடே ராஜாச்ரய வளநாடாகப் பெயரேற்றமை அறியப்படும். முதற் குலோத்துங்கர் காலத்தில் இவ்வளநாடு தீன சிந்தாமணி, தியாகவல்லி என இரு பெயர்களை ஏற்றிருந்தது. மூன்றாம் ராஜராஜர் காலத்தில் வடகரை ராஜராஜ வளநாடாகப் பெயர் மாற்றம் பெற்ற இந்நிலப்பகுதி இவ்வளாகத்துக் கிடைக்கும் காலத் தால் பிற்பட்ட கல்வெட்டுளிலும் அப்பெயரிலேயே சுட்டப்பட் டுள்ளது. வளநாட்டின் பெயர் பன்முறை மாற்றப்பட்டும் கூற்றத் தின் பெயரும் ஊரின் பெயரும் கல்வெட்டுகளில் மாற்றம் கொள்ளவில்லை.

வளநாடுகள்

பாச்சில் உள்ளடங்கியிருந்த வளநாடு தவிர, பாண்டிகுலபதி வளநாடு, கேரளாந்தக வளநாடு எனும் இரு பெருநிலப்பரப்புகளும் இக்கோயில் கல்வெட்டுகளில் சுட்டப்பெறுகின்றன. பாண்டிகுலபதி வளநாடு சோழர் காலத்தில் பாண்டிகுலாசநி வளநாடாக அறியப்பட்டது.

நாடு - கூற்றம்

பாச்சில் கூற்றம் தவிர, தஞ்சாவூர், கலார், ஆன்மூர், மீமலை, உறையூர் ஆகிய 5 கூற்றங்களும் பொய்கை, இடையாறு, விளா, திருப்பிடவூர் ஆகிய 4 நாடுகளும் வெண்குன்றக் கோட்டமும் திருவாசிக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. நாடு, கூற்றம், கோட்டம் எனும் இம்மூன்றும் ஒரே தகுதிப்பாடுடைய வருவாய்ப் பிரிவுகளாகும். அவற்றுள் கோட்டம் பல்லவர் பகுதியில் பெருவழக்காய் இருந்தது. இம்மூன்று வருவாய்ப் பிரிவுகளுள் நாடு சங்க இலக்கியப் பாடல்களிலேயே வழங்கி வருகிறது.9

ஊர்கள்

இவ்வளாகக் கல்வெட்டுகளில் சுட்டப்பெறும் 28 ஊர்களுள் ஊர் எனும் பின்னொட்டுடன் முடியும் ஊர்ப்பெயர்கள் 6 (ஊற்றத்தூர், பாலையூர், நல்லாவூர், நாங்கூர், பெருதூர், தேவூர்). அவற்றுள் பாலையூர் பரமவிடங்கநல்லூராகவும் அறியப்பட்டது. குடி எனும் பின்னொட்டுடன் கம்போழங்குடியும், புரம் எனும் பின்னொட்டுடன் பிராந்தகபுரமும் (பராந்தகபுரம்?) நல்லூர் எனும் பின்னொட்டுடன் பொன்னருளாளநல்லூரும் விளங்க, பிராமணர் குடியிருப்புகளாக 8 ஊர்ளைக் காணமுடிகிறது. அவற்றுள் பெருமங்கலம், கிழார்மங்கலம், கொற்றமங்கலம், மாதானமங்கலம் ஆகிய 4ம் மங்கலம் எனும் பின்னொட்டுக் கொள்ள, அன்பில், துடையூர், திருவெள்ளறை, திருவரங்கம் ஆகியன பிரம தேயங்களாக அமைந்தன.

கடல்வாயில், குறுகாடி, திருத்தவத்துறை, திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, திருப்பராய்த்துறை, திருவையாறு, ஆடுதுறை, தொட்டியம், புஷ்பவனம், உலக்கிக்குண்டி ஆகிய 11 ஊர்களின் பெயர்கள் பல்வேறு பின்னொட்டுக்கள் கொண்டமைய, அவற்றுள் தொட்டியம் ராஜகேசரிபுரமாகவும் அறியப்பட்டது.

அரசாணைகள்

இங்குள்ள கல்வெட்டுகளில் 3 அரசாணைகளைக் காணமுடிகிறது. முதல் ஆணை மாறவர்மர் சுந்தரபாண்டியர் திருவரங்கம் கோயில் பள்ளியறைக்கூடத்துப் பள்ளிப்பீடம் மழவராயனில் அமர்ந்திருந்தபோது அரசரால் வழங்கப்பெற்றது.10 இக்கோயில் தானபதிகளுக்கு மன்னரின் திருவாய்மொழியாக அமைந்த இவ்வாணை, அரசர் பெயரால் இக்கோயிலில் அமைக்கப்பெற்ற சுந்தரபாண்டியன் சந்திக்கான திருப்படிமாற்று உள்ளிட்ட வேண்டும் நிவந்தங்களுக்குப் பாச்சில் கூற்றத்திலிருந்த பொன்னருளாளநல்லூரில் இருபோகம் விளையும் நிலத்தில் ஒரு வேலிநிலம் மன்னரின் 9ஆம் ஆட்சியாண்டிலிருந்து தேவதான இறையிலியாகத் தரப்பட்டமை கூறுகிறது. அரசரின் மைத்துனர் அழகப்பெருமாள் இதற்கான பரிந்துரையை மேற்கொண்டார்.11

பொ. கா. 1517ல் தன்மசாதன ராயசமாகப் பதிவாகியிருக்கும் கிருஷ்ணதேவராயர் கல்வெட்டு,12 மன்னரின் ‘பூர்வ திக்விஜயம்’ குறித்த தரவுகளைத் தருவதுடன், சோழமண்டல விஷ்ணு, சிவத் தலங்களுக்குச் சோடி, சூலவரி, நிலவரி, அரசுப்பேறு முதலியவற்றை சர்வமான்யமாக்கி மன்னர் ஆணையிட்டமை தெரிவிக்கிறது. திக்விஜயத்தில் முதல் வெற்றியாக உதயகிரிக்கோட்டை கைப்பற்றப்பட்டமை குறிக்கும் கல்வெட்டு, தொடர்ந்து வினிக்கொண்டை, நாகார்ச்சுனகொண்டை, வெல்லம் கொண்டை, கொண்டவீடு, கொண்டபள்ளி, ராஜமகேந்திரபுரம் முதலிய கோட்டைகளை அரசர் வென்றமை கூறுகிறது. திருமலை ராகுத்தராயன், பிரதாபருத்திரன் கஜபதி, குமார வீரபத்திர சென்னன் கஜபதி, ராஜகிரி சந்திரமல்லுகானன், உத்தண்டகான் ஆகியோரை வென்று சிங்காத்திரிக்கு எழுந்தருளிப் பொட்டுனூரில் வெற்றித்தூண் நாட்டிய அரசரின் பெருமைகள் பேசும் இக் கல்வெட்டுத் தமிழ்நாட்டின் பல கோயில்களில் காணப்படுகிறது.13

ஹொய்சள அரசரான வீரசோமேசுவரரின், ‘மலப்ரளகண்ட’ என்ற கையொப்பத்துடன் பதிவாகியுள்ள அரசாணை, ராஜராஜ வளநாட்டு முறிகரைக்குக் கிழக்கிலும் குத்துவாய்க்காலுக்கு மேற்கிலும் அமைந்திருந்தனவும் இடையாற்றுநாட்டுக் குறைப்பற்று, திருவெள்ளறை இவற்றுக்கு உட்பட்டிருந்தனவுமான பிரமதேயங்களின் கிழவர்களுக்கும் நாட்டாருக்கும் கடமை, குடிமை, ஆயம் ஆகிய வரிகள் குறித்த அரசின் அறிவுறுத்தiலைப் பகிர்ந்துகொள்கிறது.14

முறிகரைக்குக் கிழக்கு, இரட்டைப் பலாற்றுக்கு மேற்கு, இடையாற்றுநாடு, குறைப்பற்று ஆகிய பகுதிகளில் நிலம் பயிர் பார்த்து விளைவுக்கேற்ப ஏற்கனவே பெற்றவாறு கடமை கொள்க என்று அறிவுறுத்தும் ஆணை, இரட்டைப் பலாற்றுப்பகுதியில், ‘அகளங்க நாடாள்வார்களுக்கு இறுத்த மரியாதைப்படியே’ கொள்க என்று வழிகாட்டுகிறது.

இதன் வழிக் கிடைக்கும் இந்நாட்டின் விளைவருவாயான நெல்லில் 20,000 கலம் செலவுகளுக்கெனக் கொண்டு, 10,000 கலம் அரிசியை அரண்மனைக் கொட்டகாரத்தில் அளக்கவேண்டு மெனும் அரசாணை, ‘காருக்குப் பயிர் ஏறின நிலமும் நீர் ஏறி விளையும் நிலங்களும் பாழ்கிடவாதபடி’ பயிரேற்ற வேண்டுவ துடன், ‘நீர் பாய்ந்து விளையும் நிலம் காரும் பசானமும் வம்பும் போகந்தோறும் பாழ் கிடவாதபடி’ பயிரேற்றக் கூறுகிறது.

அரசுஅலுவலர்கள்

முதல் ராஜராஜர் காலக் கல்வெட்டொன்று ராஜாச்ரய வள நாட்டின் நாடு வகை செய்யும் அலுவராக விளங்கிய ஆவணமு டையான் மார்த்தாண்டன் உத்தமனை வெளிச்சப்படுத்துகிறது. முதற் குலோத்துங்கர் காலத்தில் இப்பொறுப்பில் உலகளந்த சோழ விழுப்பரையர் பணியிலிருந்தார்.15 இராஜராஜரின் மற்றொரு கல்வெட்டு, அரசரின் பெருந்தர அலுவலராக விளங்கிய பாரதாயன் காடன் ஆதித்தனான செம்பியன் பிரம்மமாராயரையும் அது போழ்து துடையூர் பிரமதேயத்தின் மத்யஸ்தராக விளங்கிய பெருமான் நானூற்றுவனான சாதுப்பிரியனையும் அறிமுகப்படுத்துகிறது.16 மன்னர் பெயரற்ற சோழர் காலக் கல்வெட்டொன்று ஆன்மூர் நாட்டுப் பெருந்திணையாக நக்கன் விழுப்பேரயனைக் காட்டுகிறது.17

வரிகள்

3 கல்வெட்டுகள் சோழர் காலத்தே வழக்கிலிருந்த வரிகளைப் பகிர்ந்துகொள்கின்றன.18 இறை அல்லது கடமை நிலம் சார்ந்த முதன்மையான நிலவரியாக அமைந்தது. குடிமை, உழுகுடிகள் செலுத்தும் வரியாகக் கொள்ளப்பட்டது. கோயில்தேவை, கொற்றவாசல் முதலியன அரண்மனை சார்ந்த வரிகளாக அமைய, நாட்டுவினியோகம் நாட்டார் அமைப்பின் பணிகள் சார்ந்த வரி யாகக் கொள்ளப்பட்டது.

குலை, குரம்பு இரண்டும் நீர்மேலாண்மைக்கான உடலுழைப்புகளாக அமைந்தன. ஆற்றுக்கரைகளை உயர்த்தத் தரப்பட்ட உடலுழைப்புக் குலையென்றும் சிறு அணைக்கட்டுகள் கட்டத் தந்த உடலுழைப்புக் குரம்பென்றும் குறிக்கப்பட்டன. பொது ஊழியர்களுக்குச் சோறு வழங்கப் பெறப்பட்ட வரியே எச்சோறு. நீர்ப்பாசனத்திற்காக வெட்டப்பட்ட நீரோடு கால்களைப் பராமரிக்கும் உழைப்பு செந்நீர்வெட்டியானது. இரண்டாம் ராஜேந்திரர் காலத்தில் பெறப்பட்ட அரசறிவெட்டி நீர் மேலாண்மைக்கான கட்டாய உடலுழைப்பாகலாம்.

வேளாண்மை

நெல் முதன்மைப் பயிராக அமைய, தென்னந்தோப்புகள் பலவாக விளங்கின. நன்செய், புன்செய் போலவே நீர்நிலம், இரு போகம் விளையும் கார்மறு நிலம் என வளமையின் அடிப்படையில் நிலங்கள் பிரித்தறியப்பட்டன. திடல் போன்ற விளைந்தறியா நிலத்துண்டுகளைப் பண்படுத்தி விளைச்சலுக்குக் கொணர்வதைக் கல்லி வசக்குதல் என்றனர். ‘கல்லி வசக்கின நிலம் இரண்டு மா’, ‘தேவர் நிலம் புன்செய் மேற்புலம் கல்லி வசக்கியது’ என்கின்றன கல்வெட்டுகள்.19 பண்படுத்தப்பட்ட இத்தகு நிலத்துண்டுகள் எதற்காக அல்லது யாரால் பண்படுத்தப்பட்டனவோ அதன் அல்லது அவர்தம் பெயருடன் மயக்கல், வயக்கல் எனும் பின்னொட்டுகளுள் ஒன்றைக் கொண்டன. வீராணி வயக்கல், கிளிமயக்கல், பூதிமசக்கல், திணையார் வயக்கல் என்பன அவற்றுள் சில. துண்டு நிலங்கள் விற்பனைக்காக அல்லது கொடைக்காக ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் இத்தனைத் தடி என்று கணக்கிடப்பட்டன.

நிலங்கள் உரிமையாளர் பெயர்களாலும் (கரணன் பங்கு, நக்கன் சோழங்கம் நிலம், தேவர் நிலம்) எதற்காகத் தரப்பட்டனவோ அதன் பெயராலும் (தேவர்அமுது நிலம், அப்பச்செய், நந்தவன நிலம், பஞ்சகவிய மயக்கல்) அழைக்கப்பட்டன. நிலங்களை வளப்படுத்த இப்பகுதியிலிருந்த பைங்கேணி ஆறு உதவினாற் போல தலைஓடையின் நீர்வளமும் துணையானது. துடையூர்ப் பகுதியிலிருந்த கேரளாந்தகப் பெருவாய்க்கால் பல ஊர் நிலங்களை வளப்படுத்தி விளைவு பெருக்கியது. இது தவிர, இப்பெருவாய்க் காலிலிருந்து பிரிந்த திருச்சிற்றம்பல வாய்க்கால், குத்துவாய்க் கால், தெற்கோடிய வாய்க்கால் முதலியன இப்பகுதியிலிருந்த பல ஊர் நிலங்களை வளப்படுத்தின.

அளவைகள், காசுகள்

திருவாசிப் பகுதியில் பொன்னை நிறுக்கப் பாச்சில் கல் பயன் பட்டாற் போலவே பிற உலோகங்களை நிறுக்கப் பாச்சில்கோல் பயன்படுத்தப்பட்டது. நெல்லை அளக்க அளவு நிர்ணயம் செய்யப்பெற்ற ராஜாச்ரயன் மரக்கால் கோயில் பண்டாரத்தில் வழக்கிலிருந்தது. இராஜராஜன் மாடை முதலாம் ராஜராஜர் காலத்தில் வழக்கிலிருந்த பொற்காசாகும். அன்றாடு நற்காசு அது வழக்கிலிருந்த காலத்தில் பெருஞ்செலவாணிக்குப் பயன்பட்டதாகலாம். கழஞ்சு, மஞ்சாடி என்பன பொன் அளவைகளாக அமைய, கலம், குறுணி, பதக்கு, உரி, ஆழாக்கு, உழக்கு, நாழி என்பன முகத்தலளவைகளாக இருந்தன. ஒரு கழஞ்சுப் பொன்னுக்கு ஆண்டு வட்டியாக ஒரு கலம் நெல் பெறப்பட்டது.20

விளக்குகள்

மாற்றுரை வரதீசுவரர் கோயிலில் நந்தாவிளக்குகளும் பகல், சந்திவிளக்குகளும் ஏற்றப்பட்டன. இக்கோயிலில் தீபமாலை விளங்கியமையைப் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டால் அறியமுடிகிறது. அத்தீபமாலையில் நாளும் உரி எண்ணெயால் 20 விளக்குகள் ஏற்றக் கூத்தாடி என்பார் 2அரை கழஞ்சுப் பொன்னளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட கோயில் சிவபிராமணர்கள் கௌசிகன் பட்டாலகன், காசியபன் நாகன் மாகாணி, கௌசியன் அப்பிக் குன்றுடையான், சிவலோகன் பொற்கிழவன் ஆகியோர் கொடைப்பொன்னின் வட்டியாக அமைந்த கால் பொன் கொண்டு அறக்கட்டளையை நிறைவேற்ற ஒப்புதலளித்தனர்.21

கோயிலின் கிழிகொடுத்த வாயிலில்22 சிறுகாலைச் சந்தியின் போது 14 விளக்குகளும் இரவு அர்த்தயாம வழிபாடு முடிய 18 விளக்குகளும் ஏற்றுவதற்காகப் புராதர் என்பார் திடலாய்க் கிடந்த இறைவன் நிலம் 400 குழியை விளையுமாறு பண்படுத்தித் தந்தார். கோயில் கண்காணி ஆண்டாரான பாலறாவாயர், மாகேசுவரக் கண்காணிகள் மேற்பார்வையில், புராதர் திருத்தித் தந்த நிலத்தின் விளைவு கொண்டு இவ்விளக்கேற்றக் கோயில் தேவகன்மிகள் இசைந்தனர்.23

உழக்கு நெய் கொண்டு இக்கோயிலில் ஏற்றப்பெற்ற நந்தாவிளக்குகளுள் ஒன்றுக்கு மட்டுமே ஆடுகள் கொடையாகத் தரப்பட்டுள்ளன. ஐநூற்றுவன் தமிலோக்கியைச் சாத்தி, கேசுவன் ஏற்றிய இவ்விளக்கு ஒளிர முச்சாண் நீளத்தில் தராவிளக்கொன்றும் கொடையாளியால் அளிக்கப்பட்டது. ஆடுகளுக்குப் பொறுப் பேற்ற பாச்சில் இடையர் கூத்தன் புகழன் நாளும் உழக்கு நெய்யளிக்க ஒப்பினார்.24 தளிப்பட்டுடையார் தாவான் தாமோதிரனிடம் பத்தரையே அரைக்கால் கழஞ்சுப் பொன் தந்த பிராந்தகபுரத்துக் கிழவர் பிடாரன், அது கொண்டு இறைத்திருமுன் நாளும் உழக்கு நெய் கொண்டு ஒரு நந்தாவிளக்கு ஒளிரச் செய்தார்.25

முதல் இராஜராஜரின் பெருந்தர அலுவலரான அன்பிலைச் சேர்ந்த காடன் ஆதித்தனான செம்பியன் பிரம்மமாராயர் துடையூர் சபையாரிடம் 30 கழஞ்சுப் பொன்னளித்துத் திருவாச்சிராமம் இறைவன் பெயரில் அரைவேலி நிலம் இறையிலியாக விலைக்குப் பெற்றார். இந்நிலவிளைவு கொண்டு கோயிலில் 2 நந்தாவிளக்குகள் ஏற்றப்பெற்றன. துடையூர் சபையாரால் உருவாக்கப்பட்ட இந்நிலவிலை ஆவணத்தை அவ்வூர் மத்தியஸ்தர் பெருமான் நானூற்றுவனான சாதுப்பிரியன் எழுதியுள்ளார்.26

திடலாய்க் கிடந்த இறைவனின் திருஅமுதுக்கான புன்செய் நிலத்துண்டு ஒன்றைக் கடல்வாயிலைச் சேர்ந்த திருவடிபூதி பெற்றுத் தம் செலவில் கல்லி, வயக்கிப் பூதிமசக்கல் என அதற்குப் பெயரிட்டு, இறைத்திருமுன் உழக்கு நெய் கொண்டு நாளும் ஒரு நந்தாவிளக்கேற்றக் கோயிலுக்களித்தார்.27 ஆன்மூர்நாட்டுப் பெருந் திணையான நக்கன் விழுப்பேரையன், திருவடிபூதி போலவே திடலாய்க் கிடந்த கால்வேலி நிலத்தைப் பண்படுத்தி நீர்நில மாக்கிக் கோயிலில் நந்தாவிளக்கொளிர உதவினார்.28 கல்வெட் டறிக்கையில் இடம்பெற்றுள்ள, ஆனால், வளாகத்தில் கண்டறிய வியலாத முதல் பராந்தகர், முதல் ராஜாதிராஜர் காலக் கல்வெட்டுகள் இரண்டினால்29 இக்கோயிலில் விளக்கேற்றக் கொடையளிக்கப்பட்டமை தெரியவருகிறது.

- வளரும்

குறிப்புகள்
1. ARE 1891: 34, 1972-1973: 342-346, 1973-1974: 232-241.
2. SII 4: 435.
3. The Hindu: 15. 11. 1991, Indian Express: 11. 9. 1991, 5. 11. 1991.
4. ஆவணம் தொகுதி 1, பக். 26-35.
5. வரலாறு தொகுதி 29-30, பக். 39-50.
6. The Hindu, Times of India 27. 10. 2021, New Indian Express: 28. 10. 2021. தினமணி 31. 10. 2021.
7. ARE 1973-1974: 238.
8. ARE 1972-1973: 344, 1973-1974: 239, பு. க. 16, 13, 14.
9. புறம் 89, 240.
10. ARE 1973-1974: 236.
11. ARE 1973-1974: 235.
12. ARE 1973-1974: 237.
13. கோ. வேணிதேவி, இரா. கலைக்கோவன், மலைக்கவைக்கும் மாடக்கோயில்கள், ப. 233, அர. அகிலா, மு. நளினி, இரா.கலைக்கோவன், சோழர் தளிகள் நான்கு, பக். 68-69.
14. SII 4: 435.
15. பு. க. 14, ARE 1972-1973: 346.
16. ARE 1973-1974: 239.
17. ARE 1973-1974: 241.
18. ARE 1973-1974: 234, 239. பு. க. 17.
19. ARE 1972-1973: 342, பு. க. 16.
20. பு. க. 16.
21. பு. க. 2.
22. கிழிகொடுத்த வாயிலைக் குறிக்கும் கல்வெட்டு இரண்டாம் கோபுரத்தின் அருகிலுள்ள மடைப்பள்ளி வடசுவரில் காணப்படுவதால், இரண்டாம் கோபுர வாயிலையே கிழிகொடுத்த வாயிலாகக் கருதலாம்.
23. பு. க. 4.
24. பு. க. 6.
25. ARE 1972-1973: 343.
26. ARE 1973-1974: 239.
27. ARE 1972-1973: 342.
28. ARE 1973-1974: 241.
29. ARE 1973-1974: 238, 240.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.