http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 160

இதழ் 160
[ டிசம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

அழுந்தூர் வரகுணீசுவரம் -1
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 1
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு - 3 (பீலியன்ன நீள் இரவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 2 (தோகை உலரும் வரை)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 5
இதழ் எண். 160 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 3 (பீலியன்ன நீள் இரவு)
ச. கமலக்கண்ணன்

பாடல் 3: பீலியன்ன நீள் இரவு

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
あしびきの
山鳥の尾の
しだり尾の
ながながし夜を
ひとりかも寝む

கனா எழுத்துருக்களில்
あしびきの
やまどりのをの
しだりをの
ながながしよを
ひとりかもねむ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: கவிஞர் ஹிதோமரோ.

காலம்: உறுதியாகத் தெரியவில்லை. புறச்சான்றுகளின் அடிப்படையில் கி.பி. 653-655 லிருந்து 707-710 வரை வாழ்ந்திருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் ஒரு பட்டியல் உள்ளது. ஒன்றல்ல, 3 பட்டியல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்திருக்கின்றன. அவற்றை நிஷி ஹொங்கான்ஜி, ந்யோபோ, ச்சூக்கோ எனக் காலவரிசைப்படி கூறலாம். இவற்றில் ந்யோபோ என்ற பட்டியல் 36 பெண்பாற் புலவர்களைக் கொண்டது. ச்சூக்கோ பட்டியலில் அரசர், அரசியர், நிலப்பிரபுக்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்தான் இப்பாடலின் ஆசிரியர் கவிஞர் ஹிதோமரோ.

இவர் பேரரசி ஜிதோ (2 - தோகை உலரும் வரை செய்யுளை இயற்றியவர்) வின் அரசவைக் கவிஞராக இருந்தவர். இவரது பிறப்பு இறப்புப் பற்றிய குறிப்புகள் எதிலும் ஆவணப்படுத்தப்படாததால் மான்யோஷு தொகுப்பில் இடம்பெற்றுள்ள இவரது செய்யுள்களை வைத்து ஆராய்ந்து 650களில் தற்போதைய யமாதோ மாகாணத்தில் பிறந்து கி.பி 709ல் தற்போதைய இவாமி மாகாணத்தில் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மான்யோஷு தொகுப்பில் இவரது பாடல்களும் இவரது மனைவி ஒதோமே இயற்றிய பாடல்களும் பெற்றுள்ள இடத்தை வைத்து இவரது காலத்தைக் கணிக்கின்றனர். இவருக்குக் கக்கினொமோதோ என்றொரு பெயரும் உண்டு. இவர் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையாவார். குளிர்காலம் தொடங்கும்முன் ஜப்பானில் கக்கி என்றொரு பருவகாலப் பழம் விளையும். உருவத்தில் தக்காளியைப் போல ஆனால் அளவில் பெரியதாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். தோலை நீக்கிவிட்டுச் சாப்பிட்டால் ஏறத்தாழ நுங்கின் சுவையில் இருக்கும். இவரது பெற்றோர் அந்தக் கக்கி மரத்தினடியில் (இந்தப் பொருளில்தான் கக்கினொமோதோ என்ற பெயர் வந்தது. மோதோ என்றால் அடி, அடிப்படை என்று பொருள். மரத்தடி, மலையடி போல எதன் அடியில் எனக்குறிக்கும்போது நிலைமொழியின் ஈற்றெழுத்தைப் பொறுத்து வருமொழியான இதன் முதல் எழுத்து மொ அல்லது மோ என உச்சரிப்புப்பெறும்) விட்டுச் சென்றுவிட்டனர். அபயே என்பவர் கண்டெடுத்து வளர்க்கத் தொடங்கினார். எனவே, பிறந்த ஆண்டு தெரியவில்லை. இவர் தனது கடைசிப் பாடலை எழுதியபோது இவாமி மாகாணத்தில் இருந்தார் எனத் தொகுப்பாளர் குறிப்பு மூலம் தெரியவருவதால் கி.பி 707ல் ஒரு பெருந்தொற்று இவாமி மற்றும் இசூமோ மாகாணங்களைக் கொள்ளை கொண்டபோது இவரும் இறந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

இவர் காலத்தில் அரச குடும்பங்களில் நிகழ்ந்த இறப்புகள் குறித்து இவர் பாடிய இரங்கற்பாக்கள் இவரைப் புகழ்பெறச் செய்தன. முந்தைய செய்யுளின் ஆசிரியர் குறிப்பில் பார்த்த கி.பி 685லிருந்து 707 வரையிலான காலகட்டத்தில் அரச குடும்பத்தில் பல மரணங்கள் நிகழ்ந்தன. பேரரசர் தென்ஜிக்கும் அவருக்குப் பின்வந்த பேரரசர் தெம்முவுக்கும் பிறந்த பல மகன்களும் மகள்களும் இளவயதிலேயே இறந்தனர். சிலரது இறப்புக்குக் காரணம் போர் என்ற தகவல் கிடைக்கிறது. பிறரைப் பற்றிய செய்திகள் ஏதுமில்லை.

மான்யோஷு பாடல் தொகுப்பில் இவரது 18 நெடும்பாடல்களும் 67 குறும்பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஜோக்கா எனப்படும் விருந்து மற்றும் பயணம் தொடர்பான பல்சுவைப் பாடல்களில் 6 நெடும்பாடல்கள், 29 குறும்பாடல்கள்; சோமொன்கா எனப்படும் காதல் பாடல்களில் 3 நெடு, 13 குறு; பன்கா எனப்படும் இறப்பைப் பாடும் பாடல்களில் 9 நெடு, 25 குறும்பாடல்கள் இவருடையது. இவர் பாடிய இரங்கற்பாக்களில் இறந்தவர்களைக் கடவுளாகவும் சூரியனின் குழந்தைகளாகவும் பாடியிருக்கிறார். பல புராண மற்றும் வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கியுள்ள இவரது பாடல்கள் வரலாற்றாய்வாளர்களுக்குப் பேருதவியாக இருக்கிறது. இலக்கியம் என்பது வரலாற்றைச் சுமக்கும் ஊடகம் என்பது ஜப்பான் வரலாற்றிலும் நிரூபணமாகி இருக்கிறது. பேரரசர் தெம்முவின் மகன் இளவரசர் தக்கேச்சி இறந்தபோது இவர் பாடிய உணர்ச்சிமிகு இரங்கற்பா இவருக்கு அழியாப்புகழைத் தேடித்தந்தது. அந்த இளவரசர் குறித்து ஒரு முன்கதைச் சுருக்கம்.

பேரரசர் தென்ஜி ஜப்பானை ஆண்ட காலத்தில் சீனாவை டாங் வம்சம் ஆண்டுகொண்டிருந்தது. இளவரசர் ஷோதொக்கு சீனாவுடன் தொடர்பை ஏற்படுத்தியபிறகு டாங் வம்ச மன்னருக்கு ஜப்பான் மீது படையெடுத்துக் கைப்பற்றவேண்டும் என்ற ஆசை வந்து அதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். எனவே, டாங்குக்கு இணையான பலம் தங்களுக்கும் உள்ளது எனக் காட்டிக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தென்ஜி ஆளானார். இளவரசர்களாக இருந்த தனது மகன்களில் யாரை அடுத்த அரசராக ஆக்கலாம் என யோசித்தார். பட்டத்தரசிக்குக் குழந்தை இல்லை. எனவே பட்டம் பெறாத மனைவியரின் குழந்தைகளில் ஒருவரைத்தான் நியமிக்கவேண்டும். அவர்களில் மூத்தமகன் பிறவி ஊமை. அடுத்த மகன் ஓதொமோ மிகவும் திறமையானவன். அடுத்த பட்டம் சூட்டப்பட எல்லாத் தகுதிகளையும் கொண்டவன். ஆனால் ஒன்றே ஒன்றைத் தவிர. அவனது தாய் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதுதான் அது. அரச குடும்பத்திலேயே பிறந்து தென்ஜிக்கு உறுதுணையாக இருந்த அவரது தம்பி தெம்முவுக்கும் அடுத்து அரசராக உள்ளூர ஆசை இருந்தது. தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்திருந்தாலும் ஓதொமோ தெம்முவின் (தனது சிற்றப்பாவின்) மகள் தோச்சியைத் திருமணம் செய்திருந்தார். ஜப்பான் வரலாற்றில் இதுபோன்று பல பெருந்திணை உறவுகள் இருந்திருக்கின்றன.

கி.பி 670ல் தென்ஜி நோய்வாய்ப்பட்டார். எனவே, ஓதொமோவுக்குப் பட்டம் சூட்டவேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதினார். ஆனால் இதற்குத் தெம்மு தடையாக இருப்பாரோ எனக்கருதி, அவருடன் ஆலோசனை நடத்த விரும்பித் தனது அறைக்கு அழைத்தார். ஒருவேளை தெம்முவுக்கு அரசராகும் எண்ணம் இருந்தால் ஏதாவது பொய்க்காரணம் சொல்லி மரணதண்டனை வழங்கத் திட்டமிட்டு இருந்தார். இதை எப்படியோ அறிந்துகொண்ட தெம்மு, தனக்கு அவ்வாறான ஆசை எதுவும் இல்லை எனவும், தான் ஒரு துறவியாக விரும்புவதாகவும் சொல்லித் தொலைவிலிருந்த யொஷினோ கோயிலுக்குச் சென்று தங்கிகொண்டார். ஓதொமோ அரசரான ஓராண்டுக்குள்ளேயே தென்ஜி இறந்துவிட்டார். எனவே, இதுதான் தக்க நேரம் எனக்கருதி அதுவரை தன் மகன் தக்கேச்சியின் உதவியுடன் தான் ரகசியமாகத் திரட்டி வைத்திருந்த படையை அரண்மனை நகரான ஓட்சுவை நோக்கிச் செலுத்தினார். இதை எதிர்பார்த்திருந்த ஓதொமோவும் வழியெங்கும் ரகசியமாகத் தன் படைகளை முன்பே நிறுத்தி வைத்திருந்தார். எனவே, கோட்டையை முற்றுகையிட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தெம்முவுக்கு ஒரு மாதகாலம் தேவைப்பட்டது. பின்னர்த் தெம்மு அரசரானதும் ஓதொமோ தப்பியோடி நாகரா என்னும் மலைக்குச் சென்று குரல்வளையை அறுத்துத் தற்கொலை செய்துகொண்டார்.

தெம்மு இறந்ததும் பேரரசி ஜிதோ பட்டத்தரசி ஆனார். போரை வென்று தந்த தெம்முவின் முதல் மகன் தக்கேச்சி இளவரசரானார். இவர் ஓதொமோவின் மனைவியும் தன் மாற்றாந்தாயின் மகளுமான தோச்சியைக் காதலித்தார். அவர் நினைவாக இவர் பாடிய மூன்று பாடல்கள் ஜப்பானிய இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. கி.பி 696ல் இளவரசர் தக்கேச்சி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இவருக்கு ஹிதோமரோ பாடிய உணர்ச்சியைத் தூண்டும் இரங்கற்பாவால்தான் பிற்காலத்தில் இவர் கவிதைக்கடவுள் என மக்களால் கொண்டாடப்பட்டார். கோபே என்ற நகருக்கு அருகில் இச்சினொமோதோ, அகாஷி என்ற இரு இடங்களில் இவருக்குக் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன.

பாடுபொருள்: இலையுதிர்காலத்தில் தனிமையில் கழிக்கும் நீண்டதோர் இரவு

பாடலின் பொருள்: மலையில் வசிக்கும் மயிலின் நீண்ட தோகையைப் போல நீளும் இந்த இரவானது என் தனிமையை அதிகரிக்கிறது.

நம் இலக்கியங்களில் கானமஞ்ஞை எனக் காட்டுமயிலும் பழனமஞ்ஞை என வீட்டில் வளர்க்கப்படும் மயிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அகநானூற்றில் ஒரு பாடலில் நன்னனுடைய ஏழில் மலைக்காட்டில் வாழ்ந்த மயிலைப் பற்றிய குறிப்பு வருகிறது. இப்பாடலிலும் மலையில் வாழும் ஒரு மயிலினத்தை உவமையாகக் கையாண்டுள்ளார் பாடலாசிரியர். அதுவும் ஒரே பொருளை இரண்டு உவமேயங்களுக்கு உவமானமாக ஒரே பாடலில் கூறியிருக்கிறார். மலைமயிலின் தோகையானது மிக நீண்டிருக்கும். அதுபோலத் தனிமையில் தவிக்கும் தலைவனது இரவு மிக நீளமாக இருக்கிறது. ஆண் மலைமயில் பகலில் தன் பெட்டையுடன் இருக்கும். ஆனால் இரவில் இரண்டும் தனித்தனியே உறங்கும் தன்மை கொண்டது. தலைவி உடனில்லாமல் தனிமையில் இருக்கும் தலைவன், இரவில் பெட்டையில்லாமல் இருக்கும் ஆண்மயிலைப் போல இருக்கிறான் எனத் தனிமைக்கும் மலைமயிலை உவமையாகக் கையாண்டிருக்கிறார்.

இப்பாடலின் 5 அடிகளில் முதல் மூன்றரை அடிகள் நீளத்தைப் பற்றியே பேசுகின்றன. கடைசி ஒன்றரை வரி மட்டும் இரவில் தனிமையில் இருப்பதாகக் கூறுகிறது. இப்பாடலில் மூன்று சிலேடைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 5 அடிகள் கொண்ட ஒரு பாடலில் 3 சிலேடைச் சொற்களைப் பயன்படுத்திய கவிஞரின் சொல்லாற்றல் வியக்க வைக்கிறது.

1. முதற்சொல்லான あしびき (அஷிபிக்கி) என்ற சொல். அஷி என்றால் கால், பிக்கி என்பது விலங்கினத்தைக் குறிப்பது. இறக்கைகளை அவ்வளவாகப் பயன்படுத்தாமல் கால்களைப் பயன்படுத்தும் பறவையினங்களையும் குறிக்கும் சொல் இது. மலை என்றொரு பொருளும் உண்டு. அஷிபிக்கியின் மலைப்பறவை என்பதை அஷிபிக்கி வகையைச்சேர்ந்த மலைமயில் என்றும் மலைமீதுள்ள மலைமயில் எனவும் இருபொருள் கொள்ளலாம்.

2. இரவைக் குறிக்க 夜 (யோ) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வாழ்க்கை என்று இன்னொரு பொருளும் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. எனவே, இப்பாடலுக்குத் தனிமையிலிருக்கும் இரவு நீளமானது என்றும் பொருள் கொள்ளலாம். தனிமையான வாழ்வு நீளமானது என்றும் பொருள் கொள்ளலாம்.

3. நான்காவது அடியில் வரும் ながし (நகாஷி) என்ற சொல். நீண்ட என்ற பொருளும் கழிதல் என்ற பொருளும் கொண்டது. தலைவி இல்லாமலேயே என் வாழ்வு தனிமையில் கழிகிறது என்ற பொருளையும் தருகிறது.

கடைசி அடியில் தனிமை குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமையில் இரவைக் கழிக்கும் மலைமயில் உவமையாகக் கூறப்பட்டிருப்பது பாடலின் சுவையை மேலும் கூட்டுகிறது. மூன்றாவது அடியில் வரும் しだり尾 (ஷிதாரிவோ) என்ற சொல்லுக்குத் தொங்கும் வால் அல்லது தொங்கும் இறகு எனப் பொருள் உண்டு. மயிலின் தோகையைக் குறிக்கத் தொங்கல் என்ற தமிழ்ச்சொல்லும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானுக்கும் மயிலுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஒரு சுவையான மேலதிகத் தகவல். பெரிய தோகையையும் அதில் அதிகக் கண்களையும் கொண்டிருக்கும் ஆண்மயிலுடன்தான் அதிகப் பெண்மயில்கள் இணைசேரும் என்பது நம் பொதுவான நம்பிக்கை. ஆனால் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 2006-07ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இதைத் தவறென்று நிரூபித்திருக்கிறது. பெரிய தோகை சேர்க்கையின்போது அதிக இடைஞ்சலைத் தருவதால் சிறிய தோகையைக் கொண்ட ஆண்மயில்களுடனேயே பெண்மயில்கள் அதிகம் சேர்கின்றன என 7 ஆண்டுகால ஆய்வுக்குப்பின் முடிவைத் தெரிவித்திருக்கிறார்கள்.

வெண்பா:

கட்சிப் புலந்தனில் காட்டும் களிநடத்தால்
பெட்டைகவர் ஆண்மயிலாய் அந்தியில் - ஒட்டாத்
தனிமையில் கானமஞ்ஞைப் பீலியாய் நீள்வன
வாழ்வும் இரவும் இரண்டு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.