http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 167

இதழ் 167
[ நவம்பர் 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

திருமங்கலம் கல்வெட்டுகள் – 1
திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு - 25 (கொடிவழிச் செய்தி)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 24 (செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 23 (துயர் கூட்டும் நிலவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 22 (மலைவளி வீழ்த்து தருக்கள்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 21 (நீ வருவாயென!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 20 (உயிரையும் தருவேன் உனைக்காண)
இதழ் எண். 167 > கலையும் ஆய்வும்
திருமங்கலம் கல்வெட்டுகள் – 1
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலிலிருந்து இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு 13 கல்வெட்டுகளைப் படியெடுத்து 1929-30ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கையில் அவற்றின் சுருக்கங்களைப் பதிப்பித்துள்ளது. அக்கல்வெட்டுகளின் பாடங்களைப் பெற மேற்கொண்ட களஆய்வுகளில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் 6 புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

இப்பத்தொன்பது கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டனவாக முதல் ராஜராஜரின் 5ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் 2 அமைந்துள்ளன. இம்மன்னரின் 15ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றும் இங்குள்ளது. முதல் ராஜேந்திரரின் 2 கல்வெட்டுகள், வீரராஜேந்திரரின் கல்வெட்டு 1, முதற் குலோத்துங்கரின் கல்வெட்டுகள் 2 ஆகியவற்றுடன், விக்கிரமசோழர், இரண்டாம் ராஜராஜர், இரண்டாம் ராஜாதிராஜர் ஆகிய அரசர்களின் கல்வெட்டுகள் அரசருக்கு ஒன்றென மூன்றாய்ப் பதிவாகியுள்ளன. மூன்றாம் ராஜராஜர் கல்வெட்டுகள் 2. விசுவநாத கிருஷ்ணப்ப நாயக்கரின் பொ. கா. 1576ஆம் ஆண்டுக் கல்வெட்டு நாயக்கர் காலத்திலும் மங்கலத்துக் கோயில் புரக்கப்பட்டமை காட்ட, பிற புதிய கல்வெட்டுகள் அக்கோயில் தொடர்ந்து பெற்ற சிறப்பை உணர்த்துகின்றன.

இப்பதினெட்டுக் கல்வெட்டுகளுள் ராஜராஜரின் 5ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றும் விக்கிரமசோழரின் 13ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் தொடக்க வரிகளுடன் நின்றுள்ளன. மூன்றாம் ராஜராஜரின் 22ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, முதல் ராஜேந்திரரின் 30ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, அதே மன்னரின் ஆட்சியாண்டற்ற மற்றொரு கல்வெட்டு ஆகியன முற்றுப்பெறாதுள்ளன.

திருமங்கலம்

சோழர் காலத்தில் பிராமணர் குடியிருப்பாக பிரமதேயம் என்ற சுட்டலுடன் விளங்கிய திருமங்கலம் கலார்க் கூற்றத்தின் கீழ் இணைந்திருந்தது. முதல் ராஜராஜர் கல்வெட்டுகளில் வடகரை மழநாடாக அறியப்பெறும் பெருவருவாய்ப் பிரிவின் கீழ் இணைந்திருந்த பல நாடுகளுள் ஒன்றாகக் கலார்க் கூற்றம் குறிக்கப்பெறுகிறது. இவ்வளநாட்டின் பெயர் வீரராஜேந்திரர் கல்வெட்டில் ராஜாச்ரய வளநாடாகவும் முதற் குலோத்துங்கர் கல்வெட்டில் உலகுமுழுதுடை வளநாடாகவும் மாற்றம் பெறுகிறது. இரண்டாம் ராஜராஜர் ஆட்சிக்காலத்தில் உலகுடை முக்கோக்கிழானடி வளநாடாகச் சுட்டப்பெறும் இவ்வருவாய்ப் பிரிவு, மூன்றாம் ராஜராஜர் ஆட்சிக் காலத்தில் வடகரை ராஜராஜ வளநாடாகப் பெயர் மாறி தொடர்ந்து நிலைத்தது.வளநாட்டின் பெயர் மாற்றம் பெற்றாற் போல் கூற்றத்தின் பெயர் மாறவில்லை. ஆனால், திருமங்கலம் என்ற ஊரின் பெயர் பொ. கா. 1566இல் பதிவாகியுள்ள கிருஷ்ணப்ப நாயக்கர் கல்வெட்டில் மட்டும் திருவிருந்தமங்கலமாகக் குறிக்கப்பட்டுள்ளது.

வளநாடு, நாடு

திருமங்கலம் கல்வெட்டுகளில் சுட்டப்பெறும் பிற பெருவருவாய்ப் பிரிவுகளாக கெயமாணிக்கவளநாடும் புலியூர்க் கோட்டமும் அமைய, ஒரு கல்வெட்டுத் தொண்டை மண்டலத்தைச் சுட்டுகிறது. பட்டனக்கூற்றம், எயில்நாடு, முழையூர் நாடு, பிரமபுரிநல்லூர்க் கண்டம் ஆகிய அடுத்த நிலை வருவாய்ப் பிரிவுகளும் திருமங்கலம் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

ஊர்கள்

ஊர் (பெருங்காவூர், கருவூர்), மங்கலம் (மகேந்திரமங்கலம், ஏகவீரமங்கலம், தாமோதரமங்கலம்), குடி (தாழைக்குடி, பனங்காட்டங்குடி, கருக்கங்குடி), புரம் (தாடகபுரம், காஞ்சிபுரம்) எனும் பின்னொட்டுகளோடு முடியும் ஊர்ப்பெயர்கள் 10 உள்ளன. பல்வேறு பின்னொட்டுகளுடன் அமைந்த ஊர்ப்பெயர்களாகத் திருச்சிற்றம்பலம், நகர், சந்திரலேகை, திருவரங்கம், பட்டனம், நாகப்பட்டனம், திருமழபாடி, திருவிடைமருது, திருச்சிராப்பள்ளி ஆகிய 9 உள்ளன.

கோயில்

தொடக்கக் காலக் கல்வெட்டுகளில் பரசுராமீசுவரம் என அழைக்கப்படும் இக்கோயில் இரண்டாம் ராஜாதிராஜர், மூன்றாம் ராஜராஜர், கிருஷ்ணப்ப நாயக்கர் கல்வெட்டுகளிலும் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் மூன்றிலும் திருமழுவுடைய நாயனார் கோயிலாக அறியப்படுகிறது. கோயிலின் தற்போதைய பெயர் சாமவேதீசுவரர். இக்கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்ட 18 கல்வெட்டுகளில் ஒன்றிலேனும் இப்பெயர் இல்லாமையின், எக்காலத்திருந்து இப்புதிய பெயர் கோயிலுக்கு வழங்கப்பட்டதென்பதை அறியக்கூடவில்லை. கோயிலில் வழிபாடு நிகழ்த்தியவர்கள் தேவகன்மிகளாகவும் திருக்கோயிலுடையாராகவும் அறியப்பட்டனர். முதல் ராஜராஜர் காலத்தில் இக்கோயிலில் வழிபாடு நிகழ்த்தியவராக சுப்பிரமண்ணியன் மாதவபட்டன் வெளிப்படுகிறார். விக்கிரமசோழர் காலத்தில் இக்கோயிலில் பணியாற்றிய தேவகன்மிகள் நால்வரும் உடன்பிறந்தாராக அமைந்தனர். முன்னூற்றுவன், நமச்சிவாயன், சேந்தபட்டன், சுவாதித்தன் ஆகிய இந்நால்வரும் தங்கள் தந்தை பெயரான ஆச்சன் என்பதைத் தங்கள் பெயரின் முன்னொட்டாகக் கொண்டிருந்தனர்.

நிலவிற்பனை

திருமங்கலத்து பிராமணர்கள் எழுவர் இரண்டாம் ராஜராஜரின் மூன்றாம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1149) 10மா விரிவு நிலத்தைக் கோயிலுக்கு அன்றாடு நற்காசு பதினேழரையே அரைக்காலுக்கு விற்றனர். இந்நிலத்தின் எல்லைகளாகத் திருமங்கலவதி, மாஹாயணவாய்க்கால், இறைவனின் திருமஞ்சண ஒழுக்கை, கோயில் நந்தவனம், ராஜேந்திரப் பேராறு ஆகியன அமைந்தன. இதற்கான ஆவணத்தை எழுதியவர் பெருங்காவூருடையான் உளநிலவாழ்வுயிர் நாராயணன். இவ்விற்பனை நிலத்தை ஒட்டியிருந்த சபைப் பொதுநிலம் அரைக்காணிக் கீழ் முக்காலே மூன்று மா சபைப்பெருமக்களால் இறைவனுக்குக் கொடையாகத் தரப்பட்டதாகும்.

இதே மன்னரின் 12ஆம் ஆட்சியாண்டில் திருமங்கலத்து மகாசபை கோயிலுக்கு இறைவை நிலமொன்றை 26 அன்றாடுநற்காசுக்கு விற்றது. இந்நிலத்துண்டின் எல்லைகளாக முன்சுட்டிய திருமங்கலவதி, வாதாப்யாயண வாய்க்காய் அகியவற்றுடன் வடக்கு நோக்கி ஆற்றையொட்டிப் போன பிடாரிகோயில் ஒழுக்கை, இறைவன் நந்தவனம், இறைவனின் திருமஞ்சண ஒழுக்கை, ராஜேந்திரசோழப் பேராறு ஆகியனவும் சுட்டப்பட்டுள்ளன. சபை விற்ற இந்நிலம் திருமங்கலத்தில் குடியிருந்த ஸ்ரீராமபட்டனுக்குச் சொந்தமானது. அவர் வரி கட்டாது குடிமாறிச் சென்றமையால் ஊர்நியதிப்படி நிலம் சபைப் பொதுவாக்கப்பட்டு விற்கப்பட்டது. இந்நிலத்திற்கான விலைப்பொருளாக அமைந்த 26 காசு சபை விலைக்கு 13 காசு குடிவிலைக்கு 13 காசு என நிருணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. இதற்கான ஆவணத்தை ஊர்மத்யஸ்தர் முன்னூற்றுவன் எழுதினார்.

திருமங்கலத்து திருஅயோத்தி ஆழ்வார் கோயிலில் கூட்டம் குறைவறக்கூடிய பெருங்குறி மகாசபை கோயிலுக்கு மேற்கிலிருந்த, எண்முழக் கோலால் அளக்கப்பெற்ற புன்செய் நிலம் 375 குழியைக் கோயிலுக்கு 23 காசுக்கு விற்று, அவ்விற்பனைத் தொகை வழி வரும் ஆண்டு வட்டி கொண்டு நிலத்திற்கான இறை, எச்சோறு முதலிய வரிகளை சபையே இறுப்பதாக உறுதியளித்து நிலத்தை இறையிலித் தேவதானமாக அறிவித்தது.

எயில்நாட்டுச் சந்திரலேகையைச் சேர்ந்த அம்பலத்தாடுவான் ஸ்ரீராமதேவனான காலிங்கராயன் மூன்றாம் ராஜராஜசோழரின் 22ஆம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1238), இக்கோயிலில் திருக்காமக்கோட்டமுடைய உலகுடைய நாயகியாரை எழுந்தருளுவித்ததுடன், அவரது படையல், வழிபாட்டிற்காக சபையாரிடம் விலைக்குப் பெற்ற ஒரு வேலி நிலத்தைத் திருநாமத்துக்காணியாக அளித்தார். 'திருப்பள்ளி மயக்கல்' என்று பெயரிடப்பட்ட அந்நிலத்தின் எல்லைகளாகப் பனங்காட்டங்குடி ஊரும் உட்கிடை 8 மா நிலமும் குறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.

முதலாம் ராஜேந்திரரின் 30ஆம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1042) தாமோதிரமங்கலத்து சபையார் கோயிலுக்குரிய 3 மா 5 குழி நிலத்தை இறையிலியாக்கக் கோயிலாரிடம் 20 காசு பெற்றனர். இந்நிலத்தின் எல்லைகளாக வாமனவதி, ஸ்ரீமதுராந்தக வாய்க்கால், கண்ணாற்று வாய்க்கால் ஆகியன சுட்டப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட வரிகளாக இறை, திருவாசலில் போந்த குடிமை, சில்வரி, வெட்டிமுட்டை, கூற்றரிசி ஆகியன சுட்டப்பட்டுள்ளன. இந்நிலத்தில் ஆண்டுதோறும் கிடைத்த 30 கலம் நெல்லில் கோயிலிலிருந்த சந்திரசேகரர் இறைத்திருமேனிக்கு நாளும் ஒரு சந்தியில் 2 நாழி அரிசிக்கென 6 நாழியும் கறி-நெய்-பாக்கு ஆகியவற்றிற்கு 2 நாழியும் சந்திவிளக்கு ஒன்றினுக்கு நாழியுமாக நெல் அளக்கப்பட்டது.

இக்கோயில் இறைவன் மார்கழித் திருவாதிரை நாளில் திருவமுது பெற அரிசி தூணிப்பதக்கும் ஆடவல்லார் அமுது செய்ய அரிசி கலமும் அப்பம் கொள்ள அரிசி முக்குறுணியும் திருக்கொடிநாளன்று அமுது செய்ய அரிசி தூணிப்பதக்கும் பரஞ்சோதி மடத்தில் திருவிழா நிகழும் 7 நாட்களிலும் 3 கறி, நெய், மோர் வழங்க நாளும் 40 கலம் நெல்லும் வழங்க வாய்ப்பாக வேளான் சீராளன், ஆச்சன் சித்தன், குப்பை வேளான், ஏகம்பன் எச்சில், நாகனேர்முக்கை, நக்கநரசிங்கன் உள்ளிட்ட நகர் வாழ் ஊரார் கீழை 4 மா நிலத்தைக் கோயிலுக்குத் தந்தனர். நில எல்லைகளாக உலகுவாய், ஸ்ரீமதுராந்தக வாய்க்கால், கண்ணமா வாய்க்கால் ஆகியன சுட்டப்பட்டுள்ளன. கல்வெட்டு முற்றுப் பெறாமையுடன் ஆங்காங்கே சிதைந்துள்ளது.

திருமங்கலம் கோயிலில் மார்கழித் திங்களில், 'மூவேழு இருபத்தொன்றென்று' கொடியேற்றி, ரேவதி முதல் ஏழு நாள் திருவாதிரைத் திருவிழாக் கொண்டாடி இறைவனின் தீர்த்தமாடல் நிறைவேற்ற கோயில் சார்ந்த நிலமும் மனையும் திருமங்கலத்துப் பெருங்குறி சபையால் இறையிலியாக்கப்பட்டுத் திருவிழாப்புறமாக அறிவிக்கப்பட்டன. அந்நிலம் திருமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணாச்சுதன் கண்ணனிடம் கோயிலார் விலைக்குப் பெற்ற 'சண்டேசுவர மசக்கல்' எனும் பெயருடைய 7 மா அளவினதாகும். நிலத்தின் எல்லைகளாகக் கண்ணாற்று வாய்க்கால், ஸ்ரீஉத்தமசோழ வாய்க்கால், மதில் சுவர், தெரு ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட வரிகளாக இறை, வெட்டி, வேதினை, திருக்கொற்ற வாசலில் போந்த குடிமை ஆகியன குறிக்கப்பட்டுள்ளன.

முதற் குலோத்துங்கரின் 6ஆம் ஆட்சியாண்டில் திருமங்க லத்து திருஅயோத்தி ஆழ்வார் கோயிலில் கூடிய சபை,

1. நந்தீசுவரன் பிராமணி பள்ளிகொண்டான் திருமலை நாடிச்சானியிடம் விலைக்குப்பெற்ற நிலம் அரைமா
2. கோவிந்தன் பிராமணி உமையிடம் விலைக்குப் பெற்ற நிலம் இரண்டு மா
3. ஆத்ரையன் சிங்கன் நாராயணன் பிராமணி அமுதனிடம் விலைக்குப் பெற்ற நிலம்
4. ஆத்ரேயன் கொற்றன் சீரளங்கோ நிலம் ஒரு மா
5. ஆத்ரேயன் மாறன் நாராயணன் உள்ளிட்டார் பக்கல் விலைக்குப் பெற்ற நிலம் ஒரு மா
6. ஆத்ரேயன் சோமன் உள்ளிட்டார் நிலம் அரை மா

ஆகிய ஆறு நிலத்துண்டுகளை கோயிலுக்கு அர்ச்சனாபோகமாகப் பழந்தரம் தவிர்த்து விற்றது. திருமங்கலவதியும் திருநாராயண வாய்க்காலும் எல்லைகளாக அமைந்த இந்நிலத் துண்டுகளின் மீதான வரிகளும் நீக்கப்பட்டு, நிலத்தொகுதி சபையால் இறையிலித் தேவதானமாக அறிவிக்கப்பட்டது.

புதிதாகக் கண்டறியப்பட்ட முகமண்டபக் கல்வெட்டு தொடக்கமும் தொடர்ச்சியுமின்றிக் கிடைத்துள்ளதால், திருமழபாடியைச் சேர்ந்த திருச்சிற்றம்பல மூவேந்தவேளான் தாம் பலரிடம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டுகளைப் பண்படுத்தி, திருச்சிற்றம்பல மசக்கல் என்று பெயரிட்டுக் கோயிலுக்களித்ததையும் காலப்போக்கில் இந்நிலம் பாழ்பட்டுப் பயிரிடமுடியாத நிலை எய்தியதையும் மட்டுமே அறியமுறிகிறது. அம்மன் கோயிலருகே கண்டறியப்பட்ட புதிய துண்டுக் கல்வெட்டு, இறைவனின் வழிபாடு, படையல் ஆகியவற்றிற்காக மூன்றாம் ராஜராஜரின் 33ஆம் ஆட்சியாண்டில் திருமங்கலத்தின் வடபாலிருந்த நிலம் இறையிலியாக்கப்பட்டுக் கொடையளிக்கப்பட்டமை கூறுகிறது.

(தொடரும்)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.