http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 170

இதழ் 170
[ ஆகஸ்ட் 2023 ]


இந்த இதழில்..
In this Issue..

பனைமலை ஓவியம் பகிரும் உண்மைகள்
நான் முதல்வன்
History of Dance in Tamil Land and Natya Sastra - 2
History of Dance in Tamil Land and Natya Sastra - 1
இராஜராஜீசுவரத்தின் 82 நந்தாவிளக்குகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு - 42 (மறவேன் பிரியேன் என்றவளே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 41(காற்றினும் கடியது அலர்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 40 (காதல் மறைத்தாலும் மறையாதது)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 39 (சொல்லாத காதல் எல்லாம்)
இதழ் எண். 170 > கலைக்கோவன் பக்கம்
நான் முதல்வன்
இரா. கலைக்கோவன்

நான் முதல்வன் என்று சொல்ல நினைக்கும்போதே பெருமிதம் பொங்குகிறது. எழுச்சியை உறுதிப்படுத்தும் நம்பிக்கைத் தொடர் அது. மாணவர் உயர்வுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சொல்லிணைவு கோயில்களுக்குப் பொருந்துமா? தமிழ்நாட்டுக் கோயில்களில் எவை எவை இப்படிப் பெருமையுடன் பூரிக்கமுடியும்? அந்தப் பெருமைகள் கலைவரலாற்று மெய்மைகளின் மேல் இவருமா? 'உறுதியாக' என்றுதான் உண்மைகள் அணிவகுக்கின்றன.

பல்லவர் மண்ணின் முதல் குடைவரையாக முதலாம் மகேந்திரரின் மண்டகப்பட்டு லக்ஷிதாயதனம் தன் மேனிக் கல்வெட்டைக் காட்டி நான் முதல்வன் என்று உரக்கப் பேசலாம். நாற்றிசையிலும் சுற்று மதிலொட்டிய இருதள விமானத் தொடர் என்னிடம் மட்டுமே என்று காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் நான் முதல்வனுக்கு உரிமை கோரலாம். விமானத்தின் நாற்புறத்தும் சுவரின் நடுப்பத்திகள் மட்டும் வெளியிழுக்கப்பட்டுத் தனித் திருமுன்களாய், முதன்மை விமான உடலோடு ஒட்டிய துணை விமானங்களாய் உருவாக்கப்பட்ட பெருமை எனக்குத்தான் முதலில் அமைந்தது என்று பனைமலை ஈசுவரம் நான் முதல்வன் வரிசைக்குப் போட்டியிடலாம்.

தமிழ்நாடு முழுவதும் இப்படிப் பல கோயில்கள் ஏதாவது ஒரு கட்டுமான உத்தியையோ, உறுப்பையோ முதலாவதாய்ப் பெற்றுச் சிறந்திருக்கும் பெருமை சுட்டி, அதில் நான் முதல்வன் என்று நம்பிக்கையோடு பேசமுடியும். ஆனால், ஒன்றல்ல, இரண்டல்ல பலவாய் முதல்களைச் சுமந்து கொண்டு அனைத்திலும் நானே முதல் எனச் சொல்லத்தக்க திருக்கோயில் தமிழ்நாட்டில் உள்ளதா எனின், நிமிர்த்திய தலையும் பூரித்த நெஞ்சுமாய், 'ஆம்' என்று மகிழ்ந்து சொல்ல நமக்கு வாய்த்திருக்கும் சிறப்புக்குரிய கோயில் இராஜராஜீசுவரம்!

தஞ்சாவூரில் சோழப் பெருவேந்தர் முதலாம் இராஜராஜரால், 'நாம் எடுப்பித்த திருக்கற்றளி' என்ற தெளிவான முகவுரையுடன் பொதுக்காலம் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டமைக்கப்பட்ட இராஜராஜீசுவரம், நான் முதல்வன் என்று பேசத் தொடங்கினால் தமிழ்நாட்டுக் கலைவரலாறு சிலிர்த்தெழும் அளவிற்கு உண்மைகள் ஊர்வலமாகும். இன்று அரசு ஆவணங்களில் பிரகதீசுவரமாய்ப் பெயர் மாற்றப்பட்டிருக்கும் இராஜராஜரின் நெஞ்சுக்கு நெருக்கமான இந்த இராஜராஜீசுவரமே இரண்டு திருவாயில்களைப் பெற்ற தமிழ்நாட்டின் முதல் திருக்கோயில். அந்த இரண்டு வாயில்களுமே கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயில் என்று கட்டியவர் பெயரேற்றுப் பெருமை கொண்டதும் அதுவே முதல்முறை.

கோபுரப் புறச்சுவர்கள் புராண, திருமுறைக் காட்சிகளைச் சிற்றுருவச் சிற்பத்தொடர்களாய்க் கொண்டமைந்த முதலிடம் இராஜராஜீசுவரம். இராஜராஜன் திருவாயிலின் நாற்புறச் சுவர்களிலும் சிவபெருமான் முப்புரம் எரித்தமை, அருச்சுனரோடு சண்டையிட்டமை உள்ளிட்ட பல புராணச் சித்தரிப்புகளும் நக்கீரதேவரின், 'திருக்கண்ணப்ப தேவர் திருமறம்' காட்டியிருக்கு மாறே கண்ணப்பரின் வாழ்வியலும் சேரமான் பெருமாளின் கயிலாய ஞானஉலாக் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இராஜராஜர் காலத்தே வழக்கிலிருந்த கண்ணப்பர் கதை சேக்கிழாரால் எப்படித் திருத்தி அமைக்கப்பட்டது என்பதை இத்திருவாயில் செதுக்கல்களைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். காலத்தின் தேவைக்கேற்பப் புராணங்களில் நிகழும் மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை என்பதையும் இதன் வழி விளங்கிக் கொள்ளலாம்.

இராஜராஜீசுவரத்தின் திருச்சுற்று மாளிகை மாறுபட்டது. கோயில் கலை வரலாற்றில் முதன்முறையாக எண்திசைக் காவலர்களுக்கான இருதள விமானங்களை உள்ளடக்கி எழுந்த முதல் சுற்றுமாளிகை அதுதான். இராஜராஜரின் படைத்தலைவர் பொறுப்பேற்றுக் கட்டிய அம்மாளிகையின் எண்திசைக் காவலர்களுள் சிலர் இன்றும் காட்சியாகின்றனர். தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் இராஜராஜருக்கு முன்னெழுந்த எந்தக் கோயிலும் இத்தகு பேரளவு திசைக்காவலர்களைப் பெறவில்லை. சோழர் காலச் சிற்பச் செழுமைகளான இக்காவலர்கள் கலைவரலாற்றில் உரிய இடம்பெறாமல் போனமை துன்பமான உண்மை.







இராஜராஜீசுவர விமானம் தமிழ்நாட்டின் தனிப்பெரும் முதல் கட்டுமானம். அதன் உயரமும் கம்பீரமும் தள எண்ணிக்கையும் இன்றளவும் முதல் நிலையிலேயே உள்ளன. இராஜராஜருக்குப் பின்னும் யாரும் அதை மீறமுடியவில்லை. விமானத்தில் அமையும் கருவறையைச் சுற்றி இருசுவரெடுத்து அவற்றிடையே உள்சுற்று அமைப்பது பல்லவப் பழைமையதுதான் எனினும், அதை இருதள நிலைக்கு உயர்த்தி இரண்டு சுற்றுகளாக மாற்றிப் பெற்ற முதல் கோயில் இராஜராஜீசுவரம்தான். இராஜராஜருக்கு முன்னும் பின்னும் இத்தகு சுற்று அமைந்தபோதும் இராஜராஜீசுவரமே அச்சுற்றுகளை வரலாற்றுக் களங்களாக்கிப் பெருமை கொண்டது.

கீழ்ச்சுற்றில் சுவரெங்கும் சோழ ஓவியங்கள். ஒரு சுவரை நிறைத்து ஆலமர்அண்ணலின் காட்டுக் காட்சி. அடுத்த சுவரிலோ சுந்தரர் வாழ்க்கை. மூன்றாம் சுவர், பெருங்கோயிலும் வழிபடுவோரும் கோயில் நடைமுறைகளும் என விரிய, நான்காம் சுவரில் முப்புரம் எரித்த கதை. மேல் சுற்று, சிவபெருமானின் 108 கரணங்களுக்கான கற்பதிவுகள் பெற்று எண்பத்தொரு சிற்பங்களுடன் பொலிகிறது.

எந்தத் தாங்கலும் இல்லாமல், சட்டக அமைப்புகள் கொள்ளாமல் கற்களை அடுக்கி இத்தனை உயரத்தில் ஒரு விமானமா? இரண்டாம் தளத்தில் நின்று பார்ப்பவரின் கண்முன் விரியும் அந்தக் காட்சி, தமிழர் கட்டுமானப் பொறியியலின் உச்சம். 'நான் முதல்வன்' என்று இராஜராஜரும் இராஜராஜீசுவரமும் இணைந்து புன்னகைக்கும் இடம் அது. சுற்றில் நின்று பார்த்தாலும் உள்ளிருந்து நோக்கினாலும் எல்லாருக்கும் ஒரே கேள்விதான், இந்த முதல்வனை எப்படி எழுப்பினார்கள்! இந்தக் கேள்வியைச் சுற்றித்தான் சாரப்பள்ளம் உள்ளிட்ட எத்தனை வீறுடைக் கதைகள் வளர்ந்துள்ளன! அதிலும் இந்தக் கோயில் முதல்வனே!

தமிழ்நாட்டுக் கோயில்களில் மிகப் பெரிதாய் இலிங்கம் பெற்ற முதல் கருவறை இராஜராஜீசுவரம்தான். இருதள உயரத்திற்குக் கருவறை பெற்ற முதல் கோயிலும் அதுதான். சண்டேசுவரருக்குத் தனிக் கோயில் காலப் பழைமையது எனினும், அதைப் பெருங்கோயிலாய் இருதள விமானமாய் முதலில் பெற்றுப் பெருமிதமுற்றது இராஜராஜீசுவரம்தான். அதற்கிணையான மற்றொரு திருமுன் ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாம் இராஜராஜரால் தாராசுரத்தில் உருவாக்கப்பட்டது.

கல்லெழுத்துக்களைக் கலைநயத்தோடு பொறிப்பது பல்லவர் காலத்திலிருந்து தொடர்ந்தாலும் இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் அலங்காரம் தவிர்த்த அழகியல் பொளிவுகள். இந்தக் கல்வெட்டுகள்தான் வரலாற்றிலும் இந்தக் கோயில் பல முதல்களுடன் திகழ்ந்தமை பேசுகின்றன. தமிழ்நாட்டிலேயே 400 தளிப்பெண்கள் தனி வீடு பெற்று ஊதியமாய் 100 கலம் நெல்லும் பெற்றுக் கலைவளர்த்த முதல் கோயில் இதுதான். 48 பதிகப் பாடகர்கள் இறைத்திருமுன் தேவாரம் பாடிய ஒரே கோயில் இராஜராஜீசுவரம்தான். 'நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்' என்று மன்னன் முதல் மக்கள் ஈறாக அனைவரும் ஒரே நிலையில் ஒளிரும் சமத்துவப் பொறிப்பும் தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டுமே களம் கண்டது.

தமிழ்நாட்டின் பல கோயில்கள் பல்லவர், சோழர் காலத்தும் தொடர்ந்த பிற மரபு அரசர் காலத்தும் வளமான இறைத் திருமேனிகளை உலாத்திருமேனிகளாகப் பெற்றுச் சிறந்தன. ஆனால், அவற்றுள் எந்தக் கோயிலும் இராஜராஜீசுவரம் போல் வழங்கப்பட்ட அனைத்துத் திருமேனிகளுக்கும் விரிவான வடிவ அமைப்பு விளக்கங்களைக் கல்வெட்டுப் பொறிப்புகளாய்க் கொள்ளவில்லை. அது மட்டுமன்று, இங்கு வழங்கப்பட்ட சில அரிய செப்புத்திருமேனிகள் வேறெங்கும் அமையவுமில்லை.

'நான் முதல்வன்' என்பது வெறும் பெருமைச் சொல்லாடல் அன்று. அப்படி வெறுமையாகச் சொல்லாடவும் முடியாது. முதல்கள் இல்லாமல் முதல்வனாவது எப்படி? இராஜராஜீசுவரம் முடிவில்லாத முதல்களின் முதல்வன். கட்டி அமைக்கப்பட்ட காலத்தும் இன்று கண்டுகளிப்போரின் கருத்து நிறைக்கும் காலத்தும் இராஜராஜீசுவரத்துக்கு இணை இராஜராஜீசுவரம்தான். அது என்றென்றும் கோயில்களின் முதல்வன்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.