http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 170

இதழ் 170
[ ஆகஸ்ட் 2023 ]


இந்த இதழில்..
In this Issue..

பனைமலை ஓவியம் பகிரும் உண்மைகள்
நான் முதல்வன்
History of Dance in Tamil Land and Natya Sastra - 2
History of Dance in Tamil Land and Natya Sastra - 1
இராஜராஜீசுவரத்தின் 82 நந்தாவிளக்குகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு - 42 (மறவேன் பிரியேன் என்றவளே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 41(காற்றினும் கடியது அலர்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 40 (காதல் மறைத்தாலும் மறையாதது)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 39 (சொல்லாத காதல் எல்லாம்)
இதழ் எண். 170 > கலையும் ஆய்வும்
இராஜராஜீசுவரத்தின் 82 நந்தாவிளக்குகள் - 1
இரா.கலைக்கோவன், மு.நளினி

தஞ்சாவூர் இராஜராஜீசுவரச் சுற்றுமாளிகையின் வடபுறத்துள்ள இரண்டு விளக்குக் கல்வெட்டுகளுள் முதல் கல்வெட்டு, அக்கோயிலில் இராஜராஜர் ஏற்றிய 78 விளக்குகள் குறித்துப் பேச, இரண்டாம் கல்வெட்டு, இராஜராஜரும் பிறரும் தனித்தும் இணைந்தும் ஏற்றிய 82 நந்தாவிளக்குகளின் வரலாற்றுப் பின்னணியை விளக்குவதுடன், பல்வேறு காரணங்களுக்காக இக்கோயிலில் ஏற்றப்பட்ட பிற விளக்குகள் பற்றியும் தகவல் தருகிறது. இந்தப் பிற விளக்குகள் குறித்துப் பேசும் வேறெந்தக் கல்வெட்டும் இராஜராஜீசுவர வளாகத்திருந்து இதுநாள்வரை வெளிப்படவில்லை என்பதே இக்கல்வெட்டின் சிறப்பைப் பன்மடங்காக்குகிறது.

கொடைஞர்களும் கொடையும்

82 நந்தாவிளக்குகளின் வரலாற்றை விரித்துரைக்கும் இக்கல்வெட்டில், கொடையாளர்களாக இராஜராஜருடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட தனியர் சிலரும் படைப்பிரிவினரும் இடம்பெறுவதுடன், கொடைப்பொருள் கால்நடையாகவும் காசாகவும் அக்கமாகவும் அமைந்தது. இவ்விளக்குகளுக்கான நேரடிக் கொடைகளாகச் சிலவும் பல்வேறு காரணங்களுக்காகக் கோயிலில் ஏற்றப்பட்ட பிற விளக்குகளுக்கு அளிக்கப்பட்டிருந்த கால்நடைகள், காசு முதலிய தொகுப்புகளிலிருந்து இந்த 82 விளக்குகளுக்காக மாற்றப்பட்ட கொடைகளாகச் சிலவும் சுட்டப்பெறுகின்றன.

கால்மாடு - காசு - அக்கம்

'இராஜராஜதேவர் குடுத்த கால்மாட்டிலும் குடுத்தார் குடுத்த கால்மாட்டிலும் காசும் அக்கமும் குடுத்து முதலான கால் மாட்டிலும்' என்ற தொடர்வழி, இந்த 82 விளக்குகளுக்கான கொடைப்பொருள் கால்நடைகளாகவும் (கால்மாடு) காசு, அக்கம் ஆகியனவாகவும் அமைந்தபோதும், பின்னிரண்டும் அவற்றின் மதிப்பிற்கொத்த கால்நடைகளாக மாற்றப்பட்டே கொள்ளப்பட்டமை தெளிவாகும். இருவகை மதிப்புடைய காசுகளைக் கொடையாளர்கள் வழங்கியுள்ளனர். ஒரு காசு மூன்று ஆடுகளைப் பெற, மற்றொரு வகைக் காசு நான்கு ஆடுகளுக்கு விலையானது.

கோயில் சார்ந்த வேறு விளக்குக் கொடைகளுக்காக வழங்கியிருந்த காசுத் தொகுப்பிலிருந்து இவ்விளக்கேற்றலுக்கு ஒரு பங்கை அளித்த கொடையாளர்கள், 'திருவிளக்குக்கு வைத்த காசில் குடுத்த காசு' என்ற குறிப்புடன் வழங்க, கோயில் பண்டாரத்தில் கொடைக்குரிய காசைச் செலுத்தியவர்கள், 'பண்டாரத்து இட்ட காசு', 'பண்டாரத்து குடுத்த காசு', என்ற சுட்டலுடன் அடையாளப்படுகிறார்கள். இவ்வகையில் இவர்கள் பண்டாரத்திலிட்ட 34 காசுகள் 7 விளக்கேற்றல்களுக்கு உதவியது. ஒரு விளக்கேற்றலுக்கு அளிக்கப்பெற்ற காசு குறித்த பகுதி சிதைந்துள்ளது. அதையும் கணக்கில் கொண்டால், பண்டாரத்து வழங்கிய காசு 8 விளக்கேற்றல்களில் பங்கேற்றதாக ஆகும்.

அக்கம் எனும் சொல் அந்நாளில் வழக்கிலிருந்த குறைந்த மதிப்புடைய பொன்னைச் சுட்டியது. ஒரு காசு 3 அல்லது 4 ஆடுகளை வழங்கிய நிலையில் 2 அக்கம் ஓர் ஆட்டிற்கான விலையாக விளங்கியது. 5 அக்கம் 2 ஆடுகளைப் பெற்றது. கொடையாளர்களால் பண்டாரத்து இடப்பெற்ற 26 அக்கம் 7 விளக்குகள் ஒளிரத் துணைநின்றது.

இராஜராஜரும் இவ்விளக்கேற்றலில் பங்கேற்ற பிறரும் தங்கள் கொடைகளுக்கேற்பக் கால்நடைகளையும் காசுகளையும் தொகுப்பாக வழங்கியிருந்தமையால், ஒவ்வொரு விளக்கிற்குமான கொடைப்பொருளை விரித்துரைக்கையில், 'குடுத்த கால்மாட் டில் அடுத்த ஆடு', 'தந்த ஆட்டில் அடுத்த ஆடு' என்பன போன்ற தொடர்களையும், 'வைத்த காசில் குடுத்த காசு' என்ற தொடரையும் கல்வெட்டு பயன்படுத்தியுள்ளது.

கொட்டில்

கோயில் பண்டாரத்தில் காசும் அக்கமும் குடுத்தாற் போல கோயில் வளாகத்திருந்த பசுக்கொட்டிலில் கொடையாளர்கள் பசுக்களை வழங்கியுள்ளனர். சுரபி என்றழைக்கப்பட்ட இக்கொட்டிலுக்குப் பசுக்கள் தரப்பட்டபோது, 'சுரபியில் குடுத்த பசு', 'சுரபியில் அடுத்த பசு' எனும் தொடர்களைக் கல்வெட்டு பெய்துள்ளது. இச்சுரபியின் 139 பசுக்கள் 8 விளக்குகள் ஒளிரத் துணைநின்றன.

விளக்குக் கொடையாளர்கள்

இராஜராஜீசுவரத்தில் ஒளிர்ந்த 82 விளக்குகளில் பேரரசர் இராஜராஜர் தனித்தும் பிறருடன் இணைந்தும் அளித்த கொடைகளால் சுடர்விட்டவை 37. அவரது தேவியருள் ஒருவரான இலாடமாதேவியும் விளக்கேற்றலில் பங்கேற்றுள்ளார். அரசு உயர்அலுவலர்கள் 20 பேரும் மூலபரிவார விட்டேறான ஜனநாதத் தெரிந்த பரிவாரத்தார், இராஜராஜதேவர் மும்மடிசோழத் தெரிந்த பரிவாரத்தார், பலவகைப் பழம்படைகளிலார் ஆகிய மூன்று படைப்பிரிவினரும் வானவன்மாதேவிப் பெருந்தெரு வணிகர் ஆச்சன்கோனூர்க் காடனான இராஜவித்யாதர மாயிலட்டியும் குருக்கள் ஈசான சிவபண்டிதரும் உய்யக்கொண்டார் தெரிந்த திருமஞ்ச னத்தார் வேளத்துப் பெண்டாட்டி வரகுணன் எழுவத்தூரும் கோயில் நாயகமான சாவூர்ப் பரஞ்சோதியும் மிடூர்க் கிழான் பூதி சாத்தனும் இவ்விளக்கேற்றலில் பங்கேற்ற பிற கொடையாளர்கள்.

உயர்அலுவலர்களுள் கோவன் தயிலய்யன், உத்தரங்குடையான் கோன் வீதிவிடங்கனான வில்லவ மூவேந்தவேளான், மாராயன் இராஜராஜன், கண்டராச்சன் பட்டாலகனான நித்தவிநோத விழுப்பரையன், ஆலத்தூருடையான் காளன் கண்ணப்பனான இராஜகேசரி மூவேந்தவேளான், நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துச் செம்பங்குடிச் செம்பங்குடையான் அமுதன் தேவனான இராஜவித்யாதர விழுப்பரையன், நித்தவிநோத வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்து அரைசூருடையான் ஈராயிரவன் பல்லவரையனான மும்மடிசோழப் போசன், ஒலோகமாராயன், இராஜராஜ வாணகோவரையன், வயிரிசங்கரன், நம்பன் கூத்தாடியான ஜெயங்கொண்டசோழ பிரம்ம மகாராஜன், வயலூர்க் கிழவன் திருமலை வெண்காடன், வயிரி அருமொழியான கரிகாலக்கண்ணப் பல்லவரையன், கோன்சூற்றியான அருமொழிப் பல்லவரையன், நித்தவிநோத மகாராஜன் ஆகிய 15 பேர் பெருந்தரப் பொறுப்பிலிருந்தனர்.

இராஜேந்திரசிம்ம வளநாட்டு மிறைக்கூற்றத்துக் காமரவல்லிச் சதுர்வேதிமங்கலத்துக் கொட்டையூர்ச் சாவாந்திபட்டன் பூவத்தன் பூவத்தனாரும் கடலங்குடித் தாமோதிரபட்டரும் நடுவிருக்கைகளாகப் பணியாற்றியவர்கள். குரவன் உலகளந்தானான இராஜராஜ மகாராஜன் சோழச் சேனாபதியாவார். இராஜகேசரி நல்லூர்க் கிழவன் காறாயில் எடுத்தபாதம் திருமந்திரவோலைப் பணியிலிருந்தார். பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான் இராஜராஜீசுவரத்தின் ஸ்ரீகாரியமாவார்.

முந்தைய விளக்குக் கொடைகள்

இராஜராஜீசுவரத்தில் சுடர்விட்ட இந்த 82 விளக்குகளுக்குக் கொடையளித்தவர்களுள் சிலர், ஏற்கனவே வேறு சில காரணங் களுக்காக அக்கோயிலில் விளக்கேற்றத் தாங்கள் அளித்திருந்த கால்நடை அல்லது காசின் ஒருபகுதியை இவ்விளக்கேற்றலுக்கு மாற்றி வழங்கியுள்ளதாகக் கல்வெட்டு கூறுகிறது.

அத்தகு மாற்றத்திற்குள்ளான முந்தைய கொடைகள்

1. இராஜராஜதேவர் கோழிப்போரில் ஊத்தையட்டாமல் என்று கடவ (தீங்குறலாகாது என்ற வேண்டலுடன் அளிக்கப் பெற்ற) திருவிளக்குகளுக்கான கால்நடைகளும் காசும்.
2. இராஜராஜீசுவரத்தில் எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி களுக்கான திருவிளக்குகளுக்கென அளிக்கப்பெற்ற காசு.
3. கோயிலில் விளக்கேற்ற அளிக்கப்பட்ட கால்நடைகளும் காசும்.

கோழிப்போர் விளக்குகள்

சோழ அரசின் படைத்தலைவர், பெருந்தரம், நடுவிருக்கை ஆகிய அரசு அலுவலர்கள் இராஜராஜர் கோழிப்போரில் ஊத்தை யட்டக்கூடாது என்ற வேண்டலுடன் இக்கோயிலில் விளக்கேற்றக் காசும் கால்நடைகளும் அளித்திருந்தனர்.

கோன் வீதிவிடங்கன், மாராயன் இராஜராஜன், கோவன் தயிலய்யன், கண்டராச்சன் பட்டாலகன், அமுதன்தேவன், வயிரி சங்கரன், காளன் கண்ணப்பன் ஆகிய 7 பெருந்தர அலுவலர்களும் நடுவிருக்கைகளான பூவத்த, தாமோதிர பட்டர்களும் இதற்கென அளித்திருந்த காசிலிருந்து குறிப்பிட்ட அளவு காசினை 82 விளக்கு அறக்கட்டளைக்கு மாற்றியுள்ளனர். அப்படி மாற்றப் பட்ட தொகை 206 காசுகள். இதில், வீதிவிடங்கன் 55 காசுகள் வழி 6 விளக்கேற்றல்களிலும் அமுதன் 45 காசுகள் தந்து 5 விளக்கேற் றல்களிலும் பங்கேற்றனர். இக்காசுகள் வழிப் பெறப்பட்ட ஆடுகள் 618.

இராஜராஜர் கோழிப்போரில் தீங்குநேரக்கூடாதெனக் கால் நடைகள் தந்து விளக்கேற்றியவர்களுள், வீதிவிடங்கன் 220 ஆடுகளும் குரவன் உலகளந்தான் 198 பசுக்களும் காளன் கண்ணப்பன் 30 பசுக்களும் 10 எருமைகளும் அக்கொடையிலிருந்து மாற்றி இவ்விளக்கேற்றலுக்கு அளித்தனர். ஒலோகமாராயன் 168 ஆடுகளும் தாமோதிரபட்டர் 45 ஆடுகளும் வழங்க, 72 ஆடுகள் வழங்கிய கொடையாளியின் பெயர் சிதைந்துள்ளது. கால்நடைகள் அளித்த இப்பெருமக்கள் அறுவரே ஆயினும் அவர்கள் வழி 18 விளக்குகளும் காசளித்த ஒன்பதின்மர் வழி 24 விளக்குகளும் இராஜராஜீசுவரத்தில் ஒளிர்ந்தன.

திருமேனி விளக்குகள்

இராஜராஜீசுவரத்தில் செப்புத்திருமேனிகளை எழுந்தருளுவித்தவர்களுள் சிலர், அவற்றிற்கான விளக்குகளுக்காக வழங்கிய கால்நடை, காசு ஆகியவற்றில், ஒரு குறிப்பிட்ட அளவை இக்கல் வெட்டுக் குறிப்பிடும் விளக்குகளுக்காக மாற்றித் தந்தனர். அவர்களுள் ஆதித்தன் சூரியன் தந்த 4 காசில் 12 ஆடுகளும் ஈசான சிவபண்டிதர் தாம் குருக்களாக எழுந்தருளுவித்த வடிவத்துக்கான விளக்கிற்களித்த காசில் மாற்றித் தந்த 32 காசில் 96 ஆடுகளும் பெறப்பட்டன.

ஆடவல்லாருக்கு வைத்த திருவிளக்கிற்கான பசுக்களில் 96ஐ வழங்கிய மும்மடிசோழத் தெரிந்த பரிவாரத்தார் 2 விளக்கேற்றலில் பங்கேற்றனர். இராஜராஜரின் தேவியருள் ஒருவரான இலாடமாதேவி தாம் மாடாய் எழுந்தருளுவித்த பாசுபதமூர்த்திக்கான திருவிளக்கிற்கு அளித்த பசுக்களில் 16ம் எருமைகளில் 15ம் வழங்கி 2 விளக்குகளின் ஒளிர்வில் இணைந்தார். பட்டத்தரசியான ஒலோகமாதேவி எழுந்தருளுவித்த பிச்சதேவர் திருமேனிக்கான விளக்கிற்காகப் பலவகைப் பழம்படைகளிலார் வழங்கியதில் 64 காசு பெறப்பட்டு 2 விளக்குகளுக்கான ஆடுகள் வாங்கப்பட்டன. பட்டத்தரசியைக் குறிக்கும்போது கல்வெட்டு, 'நம் ஒலோக மாதேவி' எனச் சிறப்பிப்பது எண்ணத்தக்கது.

திருவிளக்குகள் - காசு

இராஜராஜீசுவரத்தில் திருவிளக்கேற்றச் சிலர் காசுகள் தந்திருந்தனர். அவர்களுள் அமுதன் தேவன், ஆதித்தன் சூரியன், காறாயில் எடுத்தபாதம், பூதிசாத்தன், வணிகர் கோனூர்க் காடன், சாவூர்ப் பரஞ்சோதி, பெண்டாட்டி வரகுணன் எழுவத்தூர் ஆகிய எழுவரும் ஜனநாதத் தெரிந்த பரிவாரம், மூலபரிவார விட்டேறான ஜனநாதத் தெரிந்த பரிவாரம் ஆகிய இரு படைப்பிரிவினரும் தாங்கள் வைத்த காசில் ஒரு பகுதியை இவ்விளக்குகளுக்காகத் தந்தனர். அப்படித் தரப்பட்ட மொத்தக் காசு 244. அதில் 60 பசுக்களும் 612 ஆடுகளும் பெற்று இடையர்களிடம் ஒப்புவிக்கப்பெற்றன.

இதில், மிகுதியான காசுகளை (44) வழங்கியவர் ஆதித்தன் சூரியன். குறைவான அளவில் (1) தந்த அமைப்பாக ஜனநாதப் பரிவாரம் அமைய, வரகுணன் எழுவத்தூர், கோனூர்க் காடன், காறாயில் எடுத்தபாதம், சாவூர்ப் பரஞ்சோதி ஆகிய நால்வரும் தலைக்கு 32 காசுகள் மாற்றியுள்ளனர். அதன் வழி, வரகுணன் எழுவத்தூர் 6 விளக்கேற்றலிலும் காறாயில் எடுத்தபாதம் 5லும் பங்கேற்க, பரஞ்சோதி 3லும் காடன் 1லும் இணைந்தனர்.

திருவிளக்குகள் – கால்நடை

இராஜராஜீசுவரத்தில் திருவிளக்குகள் ஏற்றச் சிலர் காசுகள் தந்திருந்தாற் போலவே சோழப்போசன், குரவன் உலகளந்தான், வாணகோவரையன், திருமலை வெண்காடன், நம்பன் கூத்தாடி, நித்தவிநோத மகாராஜன், அருமொழிப் பல்லவரையன், கரிகாலக்கண்ணப் பல்லவரையன் ஆகியோர் கால்நடைகள் தந்திருந்தனர். அவற்றுள் சில இவ்விளக்கேற்றலுக்கு மாற்றப்பட்டன. மாற்றிய இவ்வெண்மருள் அறுவர் தனித்துச் சில விளக்குகளையும் பிறருடன் இணைந்து சில விளக்குகளையும் ஏற்ற, குரவன் உலகளந்தானும் நித்தவிநோத மகாராஜரும் பிறருடன் இணைந்து தலைக்கு 2 விளக்குகள் ஏற்றியுள்ளனர்.

திருமலை வெண்காடர், வாணகோவரையர், அருமொழிப் பல்லவரையர் ஆகிய மூவரும் தலைக்கு 4 என 12 விளக்குகளைத் தனித்தேற்றியதுடன், பிறருடன் இணைந்தும் விளக்கேற்றலில் பங்கேற்றனர். அவர்களுள் வாணகோவரையர் பிறருடன் பங்கேற்ற நிலையில் 7 விளக்குகள் ஏற்றப் பிற இருவரும் தலைக்கு ஒரு விளக்குக் கொடையைப் பகிர்ந்துள்ளனர்.

கரிகாலக்கண்ணர் 2 விளக்குகளுக்குப் பொறுப்பேற்க, நம்பன் கூத்தாடியும் சோழப்போசரும் தலைக்கு ஒரு விளக்கேற்றக் கால்நடைகள் தந்தனர். இவர்கள் பிறருடன் இணைந்தும் விளக் கேற்றியுள்ளமை கல்வெட்டால் அறியப்படும். அருமொழிப் பல்லவரையரும் திருமலை வெண்காடரும் கரிகாலக்கண்ணரும் அவர்கள் தனித்தேற்றிய விளக்குகளுக்கு ஒரு விளக்கிற்கு 48 பசுக்கள் என வழங்க, வாணகோவரையரும் சோழப்போசரும் ஒரு விளக் கிற்கு 96 ஆடுகள் தந்துள்ளனர். இவர்களுள் தங்களுக்குள் இணைந்து விளக்கேற்றியவர்களாக இரு இணைகளைக் காண முடிகிறது. சோழப்போசரும் வாணகோவரையரும் தலைக்கு 48 ஆடுகள் தந்து ஒரு விளக்கேற்ற, கரிகாலக்கண்ணரும் அருமொழிப் பல்லவரையரும் 3:1 என்ற விகிதத்தில் பசுக்களைப் பகிர்ந்து ஒரு விளக்கேற்றினர். இவர்களுள் சோழப்போசர் பேரரசர் இராஜராஜருடன் இணைந்து விளக்கேற்றிப் பெருமையுற்றார்.

82 விளக்குகள்

இக்கல்வெட்டின் வழி இராஜராஜீசுவரத்தில் ஒளிர்ந்த 82 நந்தா விளக்குகளில், 28 விளக்குகள் அரசர் உள்ளிட்ட தனியர் கொடைகளால் அமைய, 41 விளக்குகளை இருவர் இருவராக இணைந்து ஏற்றினர். இந்த 41இல், 26க்கான கொடைகளை அரசி, பெருந்தரம், நடுவிருக்கை, பெண்டாட்டி ஆகியோருடன் அரசரும் இணைந்து அளித்துள்ளார். எஞ்சிய 15 விளக்குகளுக்கான கொடைப் பொருளை அரசி, அரசு அலுவலர்கள், பெண்டாட்டி முதலியோருடன் இராஜராஜீசுவரத்துச் சுரபியும் பகிர்ந்துகொண்டது.

10 விளக்குகள் மும்மூவராக இணைந்த கொடையிலும் 3 விளக்குகள் பலராய் ஒருங்கிணைந்து பகிர்ந்துகொண்ட நிலையிலும் ஏற்றப்பெற்றன. மூவர் கொடையில் ஒளிர்ந்த 10 விளக்குகளில் அரசர் இராஜராஜரின் பங்கேற்றலுடன் சுடர்விட்டவை 6. ஏனைய 4இன் கொடைப்பொருள் அரசி, அரசுஅலுவலர்களுடன் சுரபியும் இணைந்த நிலையில் அமைந்தது. அது போலவே பலர் கொடையில் ஏற்றப்பட்ட 3 விளக்குகளில் 1, இராஜராஜரின் பங்களிப்புக் கொள்ள, 2 விளக்குகளுக்கான கொடை அரசுஅலுவலர்களாலும் படைக்குழுக்களாலும் சுரபியாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இராஜராஜரின் தனி விளக்குகள்

பேரரசர் இராஜராஜர் தாம் தனித்து ஏற்றிய 4 விளக்குகளுக்காக 192 ஆடுகள், 12 எருமைகள், 26 காசுகள் வழங்கியதுடன், இராஜராஜீசுவரத்துச் சுரபியில் 9 பசுக்களும் அளித்தார். ஆயர்களிடம் ஒப்புவிக்க வாய்ப்பாக எருமைகள், பசுக்களுக்கு இணையாக ஓர் எருமைக்கு 6, ஒரு பசுவுக்கு 2 எனக் கணக்கிடப்பெற்று ஆடுகள் கொள்ளப்பட்டன. கொடைக்காசின் தகுதிக்கேற்பக் காசுக்கு 3 ஆக 2 காசுக்கும் காசுக்கு 4 என்று 24 காசுக்கும் 102 ஆடுகள் வழங்கப்பட்டன.

பிறர் தனித்து ஏற்றிய விளக்குகள்

இராஜராஜரைப் போலவே அரசி, பெருந்தரம், வணிகர், சிவபண்டிதர் உள்ளிட்ட சிலரும் படைப்பிரிவினரும் தனித்துப் பொறுப்பேற்று 24 விளக்குகள் ஒளிரக் காரணமாயினர். அவர்களுள் பெருந்தர அலுவலர்கள் அருமொழிப் பல்லவரையரும் திருமலை வெண்காடரும் தலைக்கு 192 பசுக்கள் வழங்கி 8 விளக்கு களுக்குப் பொறுப்பேற்க, மற்றொரு பெருந்தர அலுவலரான வாணகோவரையர் 384 ஆடுகள் தந்து 4 விளக்குகள் ஒளிரக் காரணமானார். பெருந்தர அலுவலர் கரிகாலக்கண்ணரும் இராஜராஜதேவர் மும்மடிசோழத் தெரிந்த பரிவாரத்தாரும் தலைக்கு 96 பசுக்கள் வழங்கி 4 விளக்குகளேற்ற, பழம்படைகளிலார் 64 காசுகள் அளித்து அதன் வழி 192 ஆடுகள் ஆயர்களை அடையச் செய்து இரு விளக்குகள் சுடர்விட உதவினர்.

3 விளக்குகள் இராஜராஜரின் தேவியார் இலாடமாதேவி, பெருந்தர அலுவலர்கள் நம்பன்கூத்தாடி, சோழப்போசர் ஆகியோ ராலும் 2 விளக்குகள் ஈசான சிவபண்டிதர், கோனூர்க் காடன் ஆகியோராலும் அவர்தம் தனித்த கொடைகளால் கோயிலில் ஒளிர்ந்தன. கோயில் சுரபி 48 பசுக்களை வழங்கி ஒரு விளக்குச் சுடர்விடப் பொறுப்பேற்றது. காடனும் சிவபண்டிதரும் தலைக்கு 32 காசளிக்க, நம்பன் 48 பசுக்கள் தந்தார். அரசியின் கொடை எருமை, நாகு கன்று, பசுவின் கன்று என அமைய, சோழப்போசர் 96 ஆடுகள் கொடுத்தார்.

இருவராய் இணைந்து ஏற்றியவை

ஒரு விளக்கிற்கான கொடைப்பொருளை இருவர் பகிர்ந்து விளக்கேற்றும் நிகழ்வு சோழர் காலத்தில் அருகியிருந்தபோதும் இராஜராஜீசுவரத்தில் அத்தகு இணைவு 41 விளக்குகள் சுடர்விடக் காரணமாயிற்று. அவற்றுள் 26இல் இராஜராஜர் பங்களிக்க, ஏனையவற்றில் அவர் அலுவலர்களும் பிறரும் இணைந்தனர்.

இராஜராஜர் இணைந்தவை

9 பெருந்தர அலுவலர்கள், நடுவிருக்கை பூவத்தனார், அரசி இலாடமாதேவி, பெண்டாட்டி வரகுணன் எழுவத்தூர் ஆகியோருடன் இணைந்து இராஜராஜர் ஏற்றிய 26 விளக்குகளில் 9இல் பங்கேற்றவர் வீதிவிடங்கர். அரசரின் பெருந்தர அலுவலரான இவர் அதற்கென ஆடு, காசு, அக்கம் என மூவகையிலும் கொடையளித்துள்ளார்.

இராஜராஜருடன் இணைந்து 4 விளக்குகளின் ஒளிர்வில் வரகுணன் எழுவத்தூர் பங்கேற்க, வாணகோவரையர், கண்டராச்சன் பட்டாலகர், ஒலோகமாராயர், காளன் கண்ணப்பன் ஆகிய நான்கு பெருந்தர அலுவலர்களும் தலைக்கு இருவிளக்குகள் வழி மன்னருடன் இணைந்தனர். அரசி இலாடமாதேவி, நடுவிருக்கை பூவத்தனார், பெருந்தர அலுவலர்கள் அமுதன் தேவன், வயிரிசங்கரன், காளன் கண்ணப்பன், சோழப்போசர் ஆகிய அறுவரும் இராஜராஜருடன் இணைந்து தலைக்கு ஒரு விளக்குச் சுடர்விடக் காரணமாயினர்.

இந்த 26 விளக்குகளுக்கான கொடைப்பொருளில் இராஜராஜரின் பங்களிப்பு பெரும்பாலும் ஆடு அல்லது பசு எனக் கால்நடைச் செல்வமாகவே விளங்கியது. ஒரு விளக்கிற்கு மட்டும் ஆடுகளுடன் 3 எருமைகள் இணைந்தன. அவையும் ஆயர்களை அடைந்தபோது ஓர் எருமைக்கு 6 ஆடு என 18 ஆடுகளாகவே கணக்கிடப்பட்டன. மற்றொரு விளக்கிற்கு 48 ஆடுகளுடன் 8 காசுகள் சேர்த்தளிக்க, அவையும் காசுக்கு 3 ஆடு என 24 ஆடுகளாகவே ஆயர்களை அடைந்தன. கொடையில் இராஜராஜருடன் பங்கேற்ற பெருமக்கள் பெரும்பாலும் காசுகளே அளித்துள்ளனர். வீதிவிடங்கரும் பூவத்தரும் காசுடன் அக்கமும் இணைத்தளிக்க, இலாடமாதேவி, கண்டராச்சன் பட்டாலகர், வாணகோவரையர், வீதிவிடங்கன் ஆகிய மிகச் சிலரே கால்நடைச்செல்வம் பகிர்ந்துள்ளனர்.

பிறர் இணைந்தவை

அரசர் அல்லாத பிற அலுவலர்கள் இருவராய் இணைந்து கொடையளித்து ஏற்றிய விளக்குகள் 15. அவற்றுள், இரு பெருந்தர அலுவலர்தம் பங்களிப்பால் ஒளிர்ந்தவை 3. கரிகாலக்கண்ணர் 36 பசுக்களும் அருமொழிப் பல்லவரையர் 12 பசுக்களும் அளித்து ஒரு நந்தாவிளக்கேற்ற, திருமலை வெண்காடர் 46 பசுக்களும் நம்பன் கூத்தாடி 2 பசுக்களும் வழங்கி ஒரு நந்தாவிளக்கேற்றினர். சோழப் போசரும் வாணகோவரையரும் தலைக்கு 48 ஆடுகள் தந்து ஒரு விளக்கு ஒளிரச் செய்ய, குரவன் உலகளந்தார் 5 விளக்குகளின் ஒளிர்வில் பங்கேற்றார். விளக்கிற்கு 36 பசுக்கள் என 4 விளக்குகளுக்கு அவர் தந்த கொடையுடன், எஞ்சியன அளித்து இணைந்தவர்களாகப் பெருந்தர அலுவலர்கள் இருவரும் (அமுதன் தேவன், வாண கோவரையர்) பெண்டாட்டி எழுவத்தூரும் காட்சிதர, ஒரு விளக் கேற்றலை அவரது 37 பசுக்களுடன் சுரபிப் பசுக்கள் 11 இணைந்து நிகழ்த்தின.

பெருந்தரம் ஒலோகமாராயர் விளக்கிற்கு 72 ஆடுகள் என 144 ஆடுகள் அளித்து 2 விளக்கேற்றலுக்குக் காரணமாக, எஞ்சிய 48 ஆடுகளைப் பெற 16 காசுகள் அளித்த காறாயில் எடுத்தபாதம் அவ்விளக்கேற்றலில் தம்மையும் இணைத்துக்கொண்டார். பெயர் அறியமுடியாத பெருந்தர அலுவலர் ஒருவருடன் 8 காசுகள் அளித்துத் தம்மை இணைத்து ஒரு விளக்கேற்றிய இக்காறாயில் எடுத்தபாதம், ஆதித்தன் சூரியருடன் இணைந்து தாம் 4 காசுகளும் அவர் 28 காசுகளும் எனக் கொடைப்பொருள் உருவாக்கி, அதன் வழி 96 ஆடுகள் அளித்து, மற்றொரு விளக்கொளிரக் காரணமானார். சாவூர்ப் பரஞ்சோதி 12, 15 காசுகள் அளித்து இரு விளக்கேற்றலில் பங்கேற்க, முதல் விளக்கேற்றலில் அவருடன் இணைந்த வாணவரையர் 60 ஆடுகள் தர, அடுத்த விளக்கிற்கு ஆதித்தன் சூரியன் 16 காசுகளுடன் இணைந்தார். கண்டராச்சன் பட்டாலகர் தம் 23 பசுக்களுடன் சுரபியின் 25 பசுக்களை இணைத்து நந்தாவிளக்கு ஒன்றொளிர உதவினார்.

மூவர் இணைந்த விளக்குகள்

ஒரு விளக்கிற்கான கொடைப்பொருளைக் கால்நடையாகவோ, காசாகவோ மூவர் பகிர்ந்துகொண்ட நிலையில் 10 நந்தா விளக்குகள் இராஜராஜீசுவரத்தில் ஒளிர்ந்தன. அவற்றுள் 6 விளக்குகளின் ஒளிர்வின் பின் இராஜராஜரும் ஒருவராக விளங்கியுள்ளார்.

இராஜராஜர் இணைந்தவை

இராஜராஜருடன் இருவர் இணைந்து ஏற்றிய 6 விளக்குகளில் பெருந்தர அலுவலர்களின் இணைவால் அமைந்தவை 3. காறாயில் எடுத்தபாதமும் சாவூர்ப் பரஞ்சோதியும் இராஜராஜருடன் இணைந்து ஒரு விளக்கேற்ற, 2 விளக்குகள் பெருந்தர அலுவலர் ஒருவரும் மூலபரிவார விட்டேறான ஜனநாதத் தெரிந்த பரிவாரமும் அரசருடன் இணைய ஒளிர்ந்தன.

கோவன் தயிலய்யனும் கண்டராச்சன் பட்டாலகனும் காசு, அக்கம் வழி 41 ஆடுகள் வழங்க, இராஜராஜர் 55 ஆடுகள் தந்து ஒரு விளக்கொளிர்வில் பங்கேற்றார். கண்டராச்சன் பட்டாலகன், வீதி விடங்கன் காசால் 48 ஆடுகள் பெறப்பட்டு இராஜராஜரின் 48 ஆடுகளுடன் இணைந்த நிலையில் மற்றொரு விளக்குச் சுடர்விட்டது. கண்டராச்சன் பட்டாலகன், காளன் கண்ணப்பர் காசு வழி 48 ஆடுகள் வர, இராஜராஜர் 48 ஆடுகள் தர இன்னொரு விளக்கு ஒளிர்ந்தது. ஜனநாதத் தெரிந்த பரிவாரம், பெருந்தர அலுவலர் அமுதன் தேவருடனும் வாணகோவரையருடனும் இணைந்து ஏற்றிய இரு விளக்குகளின் கொடையில் இராஜராஜர் பசுக்கள் வழங்கிப் பங்கேற்றார். காறாயிலும் பரஞ்சோதியும் 9 காசுகள் வழி 27 ஆடுகள் தர, இராஜராஜர் அளித்த 34 பசுக்களும் நாகு கன்று ஒன்றும் 69 ஆடுகள் கொள்ள உதவி ஒரு விளக்கு ஒளிவிடத் துணையாயின.

பிறர் இணைந்தவை

மூன்று விளக்குகள் சோழச் சேனாபதி குரவன் உலகளந்தா ரின் 59 பசுக்கள், பெருந்தர அலுவலர் அமுதன்தேவர் அளித்த 24 காசு வழி வந்த 72 ஆடுகள் ஆகியவற்றுடன் பிறர் கொடைகளும் இணைய ஒளிர்ந்தன. ஒன்றில் அமுதன்தேவரும் மற்றொன்றில் காளன் கண்ணப்பரும் இணைய மூன்றாம் விளக்குச் சுரபிப் பசுக் களால் ஒளிர்ந்தது. ஒரு விளக்கைப் பூதிசாத்தரின் 21 காசுகளும் வயிரிசங்கரரின் 6 காசுகளும் அமுதன்தேவரின் 5 காசுகளும் 96 ஆடுகள் வழி ஒளிரச் செய்தன.

பலர் இணைந்தேற்றிய விளக்குகள்

இந்த 82 விளக்குகளில் பலர் இணைவின் வழி ஏற்றப்பட்டவை 3. அவற்றுள் ஒன்றின் வெளிச்சத்தில் இராஜராஜரும் பங்கேற்றார். அவர் அளித்த 6 பசுக்கள் 12 ஆடுகளாக, வாணகோரையர் 27 ஆடுகள் தந்தார். வயிரிசங்கரர் 7 காசுகளும் ஜனநாதத் தெரிந்த பரிவாரத்தார் 12 காசுகளும் வழங்கி 57 ஆடுகள் கொள்ள வகைசெய்தனர். இந்நான்கு வழி வந்த 96 ஆடுகளும் இடைப்பெருமக்களிடம் அடைக்கலமாகி ஒரு நந்தாவிளக்கிற்கு நெய்யளித்தன.

ஜனநாதத் தெரிந்த பரிவாரத்தார் மற்றொரு நந்தாவிளக்கிற்கும் 1 காசு 2 அக்கம் தந்து 4 ஆடுகள் பெற வழிவகுத்தனர். பெண்டாட்டி எழுவத்தூரின் 4 காசுகள் வழி 12 ஆடுகளும் அரசி இலாடமாதேவியின் 16 பசுக்கள் வழி 32 ஆடுகளும் கொள்ளப் பெற்றன. நடுவிருக்கை தாமோதிரபட்டர் 45 ஆடுகள் அளித்த துடன் 1 காசும் தந்து 3 ஆடுகள் கொள்ள வைத்தார். இந்த 96 ஆடுகள் ஒரு நந்தாவிளக்கிற்கு வழி வகுத்தன.

பூதிசாத்தரின் 1 காசு, பூவத்தரின் 2 காசு, ஆதித்தன் சூரியரின் 4 காசு, அமுதன் தேவரின் 7 காசு இணைந்து 42 ஆடுகளாக, கோயில் பண்டாரம் 5 அக்கம் வழி 2 ஆடுகள் பெறவைத்தது. இராஜராஜீசுவரத்துச் சுரபியின் 26 பசுக்கள் எஞ்சிய 52 ஆடுகளாக மாற கோயிலில் நந்தாவிளக்கொன்று ஏற்றப்பட்டது.

- வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.