http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 175

இதழ் 175
[ ஃபிப்ரவரி 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

பண்டாரவாடை மாடக்கோயில்
கீழ்வேளூர் மாடக்கோயில் - 1
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 3
The Sankaracharya Temple at Kashmir
Decoding the Enigma of Shiva-the Supreme Dancer, from Karaikkal Ammai’s verses
ஜப்பானியப் பழங்குறுநூறு - 62 (பொய்யால் அடையுந்தாழ்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 61 (இடம் மாறினும் மணம் மாறுமா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 60 (தனிவழியில் கவிப்பயணம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 59 (நிலவினும் நெடிது)
இதழ் எண். 175 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 62 (பொய்யால் அடையுந்தாழ்)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
夜をこめて
鳥のそらねは
はかるとも
よに逢坂の
関はゆるさじ

கனா எழுத்துருக்களில்
よをこめて
とりのそらねは
はかるとも
よにあふさかの
せきはゆるさじ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் செய்

காலம்: கி.பி. 966-1027 (கிபி 965-1025 என்றும் கூறுகிறார்கள்).

இத்தொடரின் 42வது பாடலை (மறவேன் பிரியேன் என்றவளே!) இயற்றிய புலவர் கியோஹராவின் மகளும் 36வது பாடலை (கோடைநிலா எங்கே?) இயற்றிய புலவர் ஃபுகாயபுவின் பேத்தியும் ஆவார். முந்தைய பாடல்களின் ஆசிரியர்கள் முராசாகி ஷிகிபு, இசே ஆகியோரை அடுத்துப் பேரரசர் இச்சிஜோவின் அரண்மனையில் பட்டத்தரசிக்குச் சேடிப்பெண்ணாக இருந்தார். இவரது சமகாலத்தில் மிகுந்த அறிவாளியாகப் போற்றப்பட்டவர். பல தலைமுறைகளாகப் புலவர்களாக இருந்த குடும்பத்தில் பிறந்தவர் ஆதலால் இவரது புலமை பல பாடல்களில் வெளிப்படும். முராசாகி ஷிகிபுவுக்கும் இவருக்கும் புலமைப்போட்டி இருந்துகொண்டே இருந்தது. ஷிகிபு தனது நாட்குறிப்பு இலக்கியத்திலும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் புலமையும் அழகும் நிரம்பியவர் ஆதலால் இத்தொடரின் 9வது பாடலை இயற்றிய புலவர் கொமாச்சி ஓனோவுடன் ஒப்பிட்டு வந்தனர். ஒவ்வோர் ஆண்டின் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிறன்றும் ஹனேசு ஒதோரி என்றொரு நடனம் கொமாச்சியைப் போன்று அலங்காரம் செய்துகொண்ட பெண்களால் ஆடப்பட்டு வருகிறது என்று பார்த்தோமல்லவா? அதில் இவர் காலத்தில் கொமாச்சியாக நடித்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 15 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் தலையணைநூல் என்ற கவிதைகள், துணுக்குகள், கதைகள் அடங்கிய பல்சுவைத் தொகுப்பும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்கள் வரிசையிலும் 36 பிற்காலப் புலவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

பாடுபொருள்: காதலரின் பொய்யால் முடிவுற்ற காதல்

பாடலின் பொருள்: என்னைப் பிரியும்பொருட்டு சேவல்போல் கூவி விடிந்துவிட்டது எனக்கூறியதால் சுங்கச்சாவடியின் கதவு வேண்டுமானால் திறக்கலாம்; ஆனால் என் இதயக்கதவு ஒருபோதும் உனக்காகத் திறவாது.

இந்தப்பாடல் ஒரு பழங்காலச் சீனக்கதையுடன் தொடர்புடையது. இளவரசன் மெங்லியாங்ஜுன் க்யின் மாகாணத்துக்குள் நுழைந்ததால் தன் வீரர்களுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அடுத்தநாள் காலை விடிவதற்கு முன்பாகவே வீரர் ஒருவர் சேவலைப்போல் கூவவே, சுங்கச்சாவடியின் அதிகாரி விடிந்துவிட்டது என எண்ணிக் கதவைத் திறந்துவைக்கிறார். இளவரசனும் வீரர்களும் அதன்வழியே தப்பி விடுகின்றனர்.

அரச குடும்பத்துக் காதல்களில் காதலியின் இல்லத்தில் காதலன் விடியும்வரை தங்கியிருப்பார் என்று பார்த்தோமல்லவா? ஆனால் யுக்கிநாரி என்னும் அதிகாரி இவரது இல்லத்தில் தங்குவதற்காக வந்தபோது கருத்து வேறுபாடு அல்லது வேறு ஏதோ காரணத்தால் நடு இரவிலேயே வெளியேற விரும்புகிறார். எனவே சேவலைப்போல் கூவி விடிந்துவிட்டது என்றுகூறி வெளியேறிவிடுகிறார். அடுத்தநாள் காலை அவர் அனுப்பிய நன்றிக்கவிதைக்குப் பதிலாக இப்பாடலை இயற்றினார் புலவர் செய். சேவல் கூவியதாகப் பொய் கூறியதால் உன்னை நான் மீண்டும் சந்திக்க விரும்பவில்லை என்கிறார்.

வெண்பா:

விடியல் வருகுதெனச் சேவலாய்க் கூவிக்
கடிதம் எழுதினை நின்பால் - ஒடியும்
இதயமே கொண்டேன் குலவ விரும்பிலேன்
பொய்யால் அடையும் கதவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.