http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 176

இதழ் 176
[ மார்ச் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 3
கீழ்வேளூர் மாடக்கோயில் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 66 (எனக்கெனவே மலர்ந்தாயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 65 (அலரினும் கொடிது உண்டோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 64 (பனிவிலகலில் அக்கரை வெண்மை)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 63 (காவலும் தாண்டுவது காதல்)
இதழ் எண். 176 > கலையும் ஆய்வும்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 3
இரா.கலைக்கோவன், மு.நளினி

வலஞ்சுழி

இடைச்சோழர் காலத்தில் வலஞ்சுழி, ‘உய்யக்கொண்டான்’ எனும் முதல் இராஜராஜரின் விருதுப்பெயரை ஏற்றமைந்த உய்யக் கொண்டார் வளநாட்டின் கீழிருந்த பாம்பூர் நாட்டின் உட்பிரிவு ஊர்களுள் ஒன்றாக விளங்கியது. பல வளநாடுகளின் பெயர்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த மன்னர்களின் விழைவுக்கேற்ப மாறியபோதும், உய்யக்கொண்டார் வளநாடு சோழர்களின் இறுதிக்காலம்வரை அதே பெயரில் தொடர்ந்து வழங்கியமையை அனைத்துச் சோழர் கல்வெட்டுகளும் உறுதிசெய்கின்றன. வளநாடு போலவே நாட்டின் பெயரும் இறுதிவரை மாறவில்லை. பொ. கா. 1464ஐச் சேர்ந்த வீரவிருப்பாக்ஷர் காலக் கல்வெட்டும் வலஞ்சுழியைப் பெற்றிருந்த நாடும் வளநாடும் அதுநாள்வரை பெயர் மாற்றம் பெறாதிருந்தமைக்குச் சான்றாகிறது.

இக்கோயில் வளாகத்துள்ள கல்வெட்டுகளுள் சில, பாம்பூர் நாட்டுப் பெயருக்கு அடுத்துத் திருக்குடமூக்கின் பெயரைச் சுட்டிப் பின் வலஞ்சுழிக் கோயிலைச் சுட்டுகின்றன. இவ்வழக்கு வீரவிருபாக்ஷர் கல்வெட்டிலும் தொடர்வது நோக்கத்தக்கது. ஊரார், மகாசபையார், நகரத்தார் எனும் நிர்வாக அமைப்புகள் எவற்றுடனும் தொடர்பற்ற நிலையிலேயே வலஞ்சுழிச் சுட்டப்படுவதால், அதன் வருவாய்த் தகுதி நிலையை உறுதிபடக் கூறமுடியவில்லை. குடமூக்கிற்கு உட்பட்ட நிலையிலேயே வலஞ்சுழியின் செயற்பாடுகள் இருந்தன எனக் கருதுமாறு, ‘குடமூக்கின் பால்’ என்ற தொடர் அமைந்துள்ளது.

இக்கருத்தை உறுதிப்படுத்துமாறு இக்கோயில் சார்ந்த செயற்பாடுகளில் குடந்தை மகாசபையார், குடந்தை மூலபருடையார் ஆகிய நிர்வாகக் குழுக்களின் பங்களிப்பு இருந்தமையைப் புதிதாகக் கண்டறியப்பட்ட சில கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. சேத்ரபாலர் கோயிலுக்கு உலகமாதேவி வழங்கிய நகைகள், பாத்திரங்கள், இன்ன பிற பொருட்களை நிறை பார்த்துக் கல்வெட்டும் பொறுப்பில் குடந்தை சபை வாரிய உறுப்பினர்களான சங்கர திவாகரன், இளையநக்கன், சோமவாமனன் ஆகியோரும் இருந்தனர்.

முதல் இராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டில் இப்பணியைச் செய்தவர்களாகக் குடமூக்கில் மூலபருடையாருக்காகக் கணிவாரியஞ் செய்த தாமோதரன் சங்கரநாராயணன், உதயணன், முத்துக்கிருஷ்ணன் நாராயணன் ஆகியோருடன் மூலபருடையாருக்காக சேத்ரபாலர் கோயிலில் கணக்காக இருந்த வேளான் கூத்தன் ஆயர்கொழுந்தின் கரணத்தான் பல்லாரி கிருஷ்ணன் நக்கன் பெயரும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. முன்னவர்கள் வாரியமாகவும் நக்கன் கண்காணியாகவும் இருந்து சேத்ரபாலருக்கு அளிக்கப்பட்ட கொடைகளைக் கல்வெட்டாகப் பதிவுசெய்தனர்.

சேத்ரபாலர் கோயிலில் பண்டாரம் செய்யப் பொன் பண்டாரி ஒருவரையிடும் பொறுப்புக் குடந்தை மூலபருடையாரிடம் தரப்பட் டிருந்தது. முதல் குலோத்துங்கர் காலத்தில் இவ்வூரில் அமைந்த இராஜேந்திரசோழன் திருமடத்திற்கு மடப்புறமாக அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய ஆவணத்தைக் கல்வெட்டாக்கும் பொறுப்பில் குடந்தை மூலபருடை சபையின் சார்பில் கண்காணி மகாதேவன் தாழையும் இணைந்திருந்தார்.18

வளநாடுகள்

முதல் இராஜராஜர் காலத்தில் அவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலப்பகுதிகள் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் வலஞ்சுழியை உள்ளடக்கிய உய்யக்கொண்டார் வளநாடு, விஜயநகர அரசர்கள் காலம்வரை தன் பெயரைத் தக்க வைத்திருந்தது. இது தவிர, பதின்மூன்று வளநாடுகளின் பெயர்கள் வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் இடம்பெற்றள்ளன. அவற்றுள் க்ஷத்ரியசிகாமணி வளநாடு, நித்த விநோத வளநாடு, பாண்டி குலாசனி வளநாடு, ஜயங்கொண்ட சோழ வளநாடு, மும்முடிச் சோழ வளநாடு, இராஜேந்திரசிங்க வளநாடு, அருமொழிதேவ வளநாடு என்பன முதல் இராஜராஜரின் பல்வேறு பெயர்களை ஏற்றிருந்த பிரிவுகளாகும்.

இராஜேந்திரசோழ வளநாடு முதல் இராஜேந்திரர் பெயரில் அமைந்திருந்தது. குலோத்துங்க சோழ வளநாடும் விருதராஜ பயங்கர வளநாடும் முதல் குலோத்துங்கர் பெயரை ஏற்றிருந்தன. குலோத்துங்கசோழ வளநாடு க்ஷத்ரியசிம்ம வளநாட்டின் புதிய பெயராக அமைந்தது. சுத்தமல்லி வளநாடு முதல் குலோத்துங்கரின் திருமகள் பெயரில் அமைந்திருந்தது. விக்கிரம சோழ வளநாடும் இராஜாதிராஜ வளநாடும் முறையே விக்கிரம சோழர், இராஜாதிராஜர் பெயர்களைப் பெற்றிருந்த நாட்டுப் பிரிவுகளாம். இராஜேந்திரசிங்க வளநாடே விக்கிரமசோழர் காலத்தில் அவர் பெயரை ஏற்று விக்கிரமசோழ வளநாடாக அறியப்பட்டது.

சோழ மண்டலத்து வளநாட்டிற்கு இணையாகத் தொண்டை மண்டலத்தில் கோட்டம் எனும் பெயரில் விளங்கிய பெருநாட்டுப் பிரிவுகளையும் வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. அந்நாளில் ஜயங்கொண்டசோழ மண்டலமாய் அறியப்பட்ட தொண்டை மண்டலத்தின் உட்பிரிவுகளாக ஆமூர்க் கோட்டம், காலியூர்க் கோட்டம், மணவிற் கோட்டம் என்பன இருந்தன.

நாடு, கூற்றம்

வளநாட்டிற்குள் அடங்கிய இடைநிலை வருவாய்ப் பிரிவுகள் நாடு, கூற்றம் எனும் இருவேறு பெயர்களில் அமைந்தன. வலஞ்சுழிக் கல்வெட்டுகள் இத்தகு இடைநிலைப் பிரிவுகள் முப்பத்திரண்டின் பெயர்களைத் தருகின்றன. அவற்றுள் பெரும்பான்மையன வளநாட்டுப் பெயர்களுடன் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உய்யக்கொண்டார் வளநாட்டின் கீழிருந்த நாட்டுப் பிரிவுகளாகப் பாம்பூர், வெண்ணாடு, திரைமூர், பேராவூர் ஆகியன குறிக்கப்படுகின்றன. அவற்றுள் பேராவூரின் ஒரு பகுதி ஜயங்கொண்ட சோழ வளநாட்டிலும் இணைக்கப்பட்டிருந்தது.

இராஜேந்திரசிங்க வளநாடாக அமைந்து பின் விக்கிரமசோழ வளநாடாகப் பெயர் மாற்றம் பெற்ற பெருநாட்டுப் பிரிவின் கீழ் இன்னம்பர், அண்டாட்டுக் கூற்றம் ஆகியன இருந்தன. அவற்றுள் இன்னம்பர் வடகரை, தென்கரை என இருபிரிவுகளைக் கொண் டிருந்தது. நித்த விநோத வளநாட்டின் கீழ் நல்லூர் நாடும் ஆவூர்க் கூற்றமும் அமைய, பாண்டிகுலாசனி வளநாட்டில் தஞ்சாவூர்க் கூற்றமும் எயில்நாடும் இருந்தன. அவற்றுள் நல்லூர் நாட்டின் ஒரு பகுதி மும்முடிச்சோழ வளநாட்டிலும் இணைக்கப்பட்டிருந்தது.

திருமுனைப்பாடி நாடு, வலிவலக் கூற்றம், புறங்கரம்பை நாடு, நென்மலி நாடு ஆகிய பிரிவுகளை இராஜேந்திர சோழ வளநாடு, உள்ளடக்கியிருந்தது. இராஜாதிராஜ வளநாட்டின் கீழ்த் திருவாலி நாடும் சுத்தமல்லி வளநாட்டின் கீழ் வெண்ணிக் கூற்றமும் இணைந் திருந்தன. குலோத்துங்க சோழ வளநாடு திருநறையூர் நாடு, வேளா நாடு ஆகியவற்றைக் கொண்டிருக்க, விருதராஜ பயங்கர வளநாடு நல்லாற்றூர், மேற்காநாடு ஆகிய பிரிவுகளைப் பெற்றிருந்தது.

மேன்மலைப் பழையனூர், அம்பர், இங்காநாடு, திருஇந்தளூர் நாடு, பன்றியூர் நாடு, மிறைக்கூற்றம், கானநாடு, சிறுகுன்ற நாடு, மண்ணி நாடு, பாம்புணிக் கூற்றம், பராந்தக நாடு ஆகியவை வளநாட்டு இணைப் பின்றிக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள பிற நாடுகளாகும். இந்த முப்பத்திரண்டு இடைநிலை வருவாய்ப் பிரிவுகளுள் ஏழு மட்டுமே, ‘கூற்றம்’ என அழைக்கப்பட்டமை இங்குக் கருதத்தக்கது.19

ஊர்கள்

வலஞ்சுழிக் கல்வெட்டுகள் முந்நூற்றுப் பதின்மூன்று ஊர்களின் பெயர்களை வழங்கியுள்ளன. அவற்றுள் மங்கலம் எனும் பின் னொட்டுடன் முடியும் ஊர்ப் பெயர்கள் முப்பத்தைந்து. ஊர் எனும் பின்னொட்டுடன் முடியும் பெயர்கள் நூற்றிரண்டு. குடி எனும் பின்னொட்டுடன் முடியும் பெயர்கள் முப்பத்துநான்கு. இருபத்தைந்து பெயர்கள் நல்லூர் எனும் பின்னொட்டுக் கொண்டுள்ளன. புரம் எனும் பின்னொட்டுடன் ஆறு ஊர்ப் பெயர்கள் அமைந்துள்ளன. பல்வேறு பின்னொட்டுகளுடன் முடியும் பெயர்களாக நூற்றுப் பதினொன்று கிடைத்துள்ளன. அவற்றுள் பெரும்பான்மையன ஆவணச் சான்றாளர்களின் உறைவிடங்களாகவும் கொடையாளிகளின் வாழிடங்களாகவும் கொடைநிலங்களின் இருப்பிடங்களாகவுமே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில ஊர்கள் இரண்டு பெயர்களை ஏற்றுள்ளன. ஆடிப்புலியூர் தண்ணப்பைக் கரம்பயம், ஆலைவேலி குன்றம் என்பனவற்றைச் சான்றுகளாகக் கூறலாம். சில ஊர்கள் பின்னாளில் மங்கலங்களாகவும் சதுர்வேதிமங்கலங்களாகவும் மாற்றப் பட்டமையால் பழைய பெயருடன் புதிய பெயரையும் கொண்டு விளங்கின. நெடுமணலான மதனமஞ்சரிச் சதுர்வேதிமங்கலம், கவித்தலமான எந்த்ர வியாகரண பண்டித சதுர்வேதிமங்கலம், பேராவூரான வீரசோழச் சதுர்வேதிமங்கலம், வேம்பற்றூரான அவனிநாராயண சதுர்வேதிமங்கலம், திருவாலியான எதிரிலி சோழ மங்கலம், தளியசுகூரான குலோத்துங்கசோழ மங்கலம் எனும் ஆறு ஊர்கள் இவ்வகையின. இவற்றுள் தளியசுகூர் முதல் இராஜராஜர் காலத்தில் நாராயணமங்கலமாகிப் பிற்சோழர் காலத்தில் குலோத்துங்க சோழ மங்கலமாகப் பெயர் மாறிற்று.

மங்கலம்

மங்கலம் என முடியும் பெயருடைய ஊர்கள் பொதுவாக அந்தணர் குடியிருப்புகளாகவே அமைந்தன. வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் வெளிப்படும் முப்பத்தைந்து மங்கலங்களுள், சதுர்வேதிமங்கலங்கள் பதின்மூன்று. அப்பதின்மூன்று சதுர்வேதிமங்கலங்களுள் ஆறு, சில சிறு ஊர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டிருந்தன. அப்படி இணையும் சிற்றூர்கள், கல்வெட்டுகளில் பிடாகை அல்லது படாகை எனக் குறிக்கப்பட்டுள்ளன. அகிலநாயகச் சதுர்வேதிமங்கலத்தின் கீழ்க் கொற்றங்குடியான குலோத்துங்கசோழ நல்லூரும் வெள்ளை விநாயகச் சதுர்வேதிமங்கலத்தின் கீழ்ச் சேனையும் நெறியுடைச்சோழச் சதுர்வேதிமங்கலத்தின் கீழ்க் கொற்றங்குடியும் பராந்தகச் சதுர்வேதிமங்கலத்தின் கீழ் ஜனநாதநல்லூரும் இராஜராஜச் சதுர்வேதிமங்கலத்தின் கீழ்ப் பனங்கன்று ஐயாயிரவனும் பாதிரிக்குடியும், இராஜேந்திரசோழச் சதுர்வேதிமங்கலத்தின் கீழ்க் கருணாகரநல்லூர், ஆலைவேலி, சிறுகடம்பனூர், ஆரலூர், பாப்பநல்லூர், மணக்குடி, கூத்தனூர் கொடியாலம், சிறுகடம்பூர் ஆகிய ஊர்களும் பிடாகைகளாக இருந்தன.

இந்த முப்பத்தைந்து மங்கலங்களுள் அகிலநாயகச் சதுர்வேதி மங்கலமே அதிக அளவில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. அதை அடுத்து இராஜராஜச் சதுர்வேதிமங்கலமும் அடுத்த நிலையில் இராஜேந்திரசோழச் சதுர்வேதிமங்கலமும் குறிக்கப்படுகின்றன. இந்த முப்பத்தைந்து மங்கலங்களுள் அரசர் பெயரேற்றிருந்தவை பத்து. அவற்றுள் முதல் பராந்தகரின் பெயர்களில் அமைந்தவை மூன்று. பஞ்சவன் மாதேவி, கிழாநடி என அரசியர் பெயரேற்றிருந்தவை இரண்டு. இம்மங்கலங்களுள் மிகச் சிறிய பெயருடையதாகக் கோமங்கலம் விளங்க, அடுத்த நிலையில் ஈரெழுத்துப் பெயர்கள் உடையனவாய் ஆதமங்கலம், பூதமங்கலம், பெருமங்கலம், மாறமங்கலம், குளமங்கலம், புதுமங்கலம், கீழைமங்கலம், ஞானமங்கலம், ரவிமங்கலம் ஆகியன திகழ்ந்தன. மூன்றெழுத்துப் பெயர்களாய்ப் புள்ளமங்கலம், விண்ணமங்கலம், சிங்கமங்கலம், சேந்தமங்கலம், குட்டமங்கலம், தூவேலிமங்கலம், வாளுவமங்கலம் ஆகியவை அமைந்தன. மிகப் பெரிய பெயராக இராஜேந்திரசோழச் சதுர்வேதிமங்கலமான துர்க்கையார் அகரம் அமைந்தது. அகரம் எனும் சொல்லை முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ கொண்ட நிலையில் ஆறு மங்கலங்கள் இருந்தன.

இந்த முப்பத்தைந்து மங்கலங்களுள் ஒன்றிலிருந்து பிரிந்து தனியாகி, அந்த நிலையிலும், ‘மங்கலம்’ எனும் பின்னொட்டு உடைய பெயரையே ஏற்றுத் திகழ்ந்த ஊராகக் கலிகடிந்த சோழ மங்கலத்தைக் குறிக்கலாம். இது குலோத்துங்கசோழ மங்கலத்திலிருந்து பிரிந்து வேறான ஊராகக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறது.20 இம்மங்கலங்களுள், வலஞ்சுழி இறைவனுக்கு மிக நெருங்கிய ஊராக அகிலநாயகச் சதுர்வேதிமங்கலம் திகழ்ந்தது. ‘திருவலஞ்சுழி உடையார் கண்ணோக்கு அகரம் அகிலநாயகச் சதுர்வேதிமங்கலம்’ என்று மிகுந்த நேயத்துடன் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது இவ்வூர். இது போல் குறிக்கப்படும் மற்றோர் ஊர் வெள்ளை விநாயகச் சதுர்வேதிமங்கலம்.21

ஊர்

ஊர், குடி என முடியும் பெயர்களை உடைய ஊர்கள் பழமை வாய்ந்தன என்பர் அறிஞர். வலஞ்சுழிக் கல்வெட்டுகளில், ‘ஊர்’ என முடியும் பெயர்களைக் கொண்டனவாக நூற்றிரண்டு ஊர்கள் வெளிப்படுகின்றன. அவற்றுள் உயிரெழுத்துக்களில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவை இருபத்து மூன்று. அவற்றுள்ளும் ஆகாரத் தொடக்கப் பெயர்களே அதிக அளவில் உள்ளன (9). அகர, இகரத் தொடக்கப் பெயர்கள் எழுத்திற்கு நான்காக உள்ளன. உகரத் தொடக்கப் பெயர்கள் மூன்று அமைய, ஏ, ஒ, ஓ எனும் உயிரெழுத் துக்களில் தொடங்கும் பெயர்கள் எழுத்துக்கு ஒன்றென உள்ளன.

உயிர்மெய் எழுத்துக்களுள், ‘க’ மற்றும் அதன் வருக்க எழுத் துக்களில் தொடங்கும் பெயர்களே அதிக அளவில் உள்ளன (19). அடுத்த நிலையில் ‘த’ வருக்க எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் (13) காணப்படுகின்றன. ‘ ந’ வின் வருக்க எழுத்துக்களில் தொடங்கும் ஊர்ப்பெயர்கள் பதின்மூன்றாகவும், ‘ப’ வின் வருக்க எழுத்துக்களில் அமைந்த ஊர்ப்பெயர்கள் பன்னிரண்டாகவும் உள்ளன. அடுத்த நிலையில் வகர வருக்கத்தில் எட்டும் மகர வருக்கத்தில் ஏழும் உள்ளன.

அவற்றுள், ‘ஊர்’ எனும் பின்னொட்டையும் சேர்த்து, மூன் றெழுத்துக்களில் அமைந்த சிறிய பெயர்களைக் கொண்டிருப்பவை யாக ஆவூர், நாலூர், நீடூர், மேலூர் எனும் நான்கு மட்டுமே அறிமுகமாகின்றன. நான்கெழுத்துப் பெயர்களை நாற்பத்திரண்டு ஊர்கள் கொண்டுள்ளன. ‘திரு’ எனும் முன்னொட்டுடன் இணைந்த நிலையில் திருநின்றவூர், திருவொற்றியூர், திருமணலூர், திருப்புத்தூர், திருக்கருகாவூர், திருநல்லூர், திருநறையூர், திருவிசலூர் எனும் எட்டு ஊர்கள் பெயர் கொண்டுள்ளன.

இந்த நூற்றிரண்டு ஊர்ப்பெயர்களுள் அதிக அளவில் கல்வெட்டில் இடம்பெற்றிருக்கும் பெயர்களாக இராயூர், தளியசுகூர், திருநின்றவூர் ஆகியவற்றைக் குறிக்கலாம். இராயூரும் திருநின்றவூரும் சான்றாளர்களின் ஊர்களாக அதிக அளவில் இடம்பெற, தளியசுகூர் சேத்ரபாலர் கோயில் நிவந்தங்களுக்கு அதிக அளவில் நிலமளித்த ஊராக முன்னணியில் உள்ளது.22 இன்னம்பர் நாட்டின் கீழ் இணைக்கப்பட்டிருந்த இவ்வூர், பின்னாளில் மங்கலம் என்னும் பின்னொட்டைப் பெற்றுப் பெயர் பெருகியது. அது போலவே வேம்பற்றூரும் பேராவூரும் பின்னாளில் மங்கலங்கள் ஆகியமையைக் கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன.

இந்த நூற்றிரண்டு ஊர்களுள் பெரும்பான்மையன கோயில்களைப் பெற்றிருந்தன. ஏறத்தாழ இருபதிற்கும் மேற்பட்ட ஊர்களில் பழம் பெருங்கோயில்கள் இன்றும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத் தக்கனவாய் திருவொற்றியூர், திருவிசலூர், தஞ்சாவூர், நாங்கூர், திருக்கருகாவூர், திருநல்லூர், திருநறையூர், திருப்புத்தூர், ஆவூர், ஆமாத்தூர், கொட்டையூர், நாலூர் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றுள் திருநல்லூர், நாங்கூர், நாலூர், ஆவூர், திருநறையூர் ஆகிய ஊர்களில் மாடக்கோயில்கள் உள்ளன. தஞ்சாவூர், தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய விமானமாம் இராஜராஜீசுவரத்தைக் கொண்டுள்ளது. பார்வையற்றவர்கள் பதிகம் பாடியதும் அவர்களுக்கு வழிகாட்டக் கண்காட்டிகள் இருவர் பணியிலிருந்ததும் ஆமாத்தூர்க் கோயிலில்தான்.

வலஞ்சுழிக் கல்வெட்டுகளால் வெளிப்படும் நூற்றிரண்டு ஊர்களுள் தொண்டைமான் ஆற்றூர் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வூரின் உள்ளிருக்கைக் காவணத்திலிருந்து முதல் இராஜராஜர் வலஞ்சுழிக் கோயிலுக்குக் கொடையளித்திருக்கிறார். இவ்வூரில்தான் சோழர்குலப் பெருவீரரும் தமிழ்நாட்டில் சோழர்களின் ஆட்சியை நிலைநிறுத்திய மாமன்னருமான ஆதித்தசோழரின் பள்ளிப்படைக் கோயில் உள்ளது. காளஹஸ்திக்கு மிக நெருக்கத்தில் உள்ள இக்கோயில் இன்றும் நன்னிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கூழையூர், இரண்டு மங்கலங்களை உள்ளடக்கி இருந்ததோ என்று கருதுமாறு, கூழையூர்ப் புதுமங்கலம், கூழையூர் ரவிமங்கலம் எனும் கல்வெட்டுச் சொல்லாட்சிகள் அமைந்துள்ளன. இவை கூழையூரிலிருந்து பிரிந்த ஊர்களாகவோ அல்லது கூழையூரின் வேறு பெயர்களாகவோ அமையாமையின், வேறு சான்றுகள் கிடைக்கும் வரை இவற்றைக் கூழையூருக்கு உட்பட்டிருந்த சிற்றூர்களாகவே கொள்ளவேண்டியுள்ளது.

மிலட்டூர் என்றழைக்கப்பட்ட இந்நாளைய மெலட்டூர் பாகவத மேளாவிற்குப் புகழ்பெற்ற ஊராக விளங்குகிறது. இவ்வூர்ப் பெயர் களுள் சற்று மாறுபட்ட பெயராக விளங்குவது காரிகைக் குளத்தூர். இந்த நூற்றிரண்டு ஊர்களில், ஓர் ஊரின் பெயர்கூட அரசமரபு சார்ந்த பெயராக இல்லாமை குறிப்பிடத்தக்கது. அது போலவே இவ்வூர்களின் பெயர்களில் எந்த இறைப்பெயரும் இடம்பெறாமலிருப்பதும் கவனத்தைக் கவர்கிறது.

குடி

முப்பத்து நான்கு ஊர்களின் பெயர்கள், ‘குடி’ என முடிகின்றன. ‘ஊர்’ போலவே குடியும் பழமையான ஊராகக் கருதப்படுகிறது. ‘ஊர்’ என முடியும் பெயர்களைப் போலவே ‘குடி’யைப் பின் னொட்டாகக் கொண்டு முடியும் ஊர்ப் பெயர்களிலும் அரச மரபினர் பெயர்களோ இறைப்பெயர்களோ இடம்பெறவில்லை. இவ்வூர்ப் பெயர்களுள் ஆறு மட்டுமே உயிரெழுத்துக்களில் தொடங்குகின்றன; அதுவும் எழுத்துக்கோர் ஊராக. அ - அண்டகுடி, ஆ - ஆலங்குடி, இ - இடையாற்றுக்குடி, ஈ - ஈங்கைக்குடி, ஊ - ஊரிக்குடி, ஒ - ஒதியன்குடி.

உயிர்மெய் எழுத்துக்களில் பகர வருக்க எழுத்துக்களில் அமைந்த பெயர்களே மிகுதியாக உள்ளன (8). அடுத்த நிலையில் ‘க’ வருக்கமும் (6), அதைத் தொடர்ந்து, ‘ம, த’ வருக்க எழுத்துக்களும் (4+4) ஊர்ப்பெயர்களை உருவாக்கியுள்ளன. ‘ந’ வில் தொடங்கும் ஊர்ப் பெயர்கள் மூன்றும் ‘செ’ வில் தொடங்கும் பெயர்கள் இரண்டும் வகரத்தில் ஒன்றும் உள்ளன. இவ்வூர்ப் பெயர்களுள் மிகச் சிறியன பின்னொட்டு விடுத்த நிலையில் ஈரெழுத்துக்கள் பெற்றுள்ளன. மூன்றெழுத்துப் பெயர்கள் பதினொன்று உள்ளன. மிக நீளமான பெயராகப் படக்கைக் கொற்றங்குடியைக் கூறலாம். இது பிற்சோழர் காலத்தில் குலோத்துங்கசோழ நல்லூர் எனப் புதிய பெயரும் கொண்டது.

குறிப்புகள்
18. பு.க. 1, 11 ; வரலாறு 14 - 15, பக். 17, 48 - 50.
19. வெண்ணிக் கூற்றம், அண்டாட்டுக் கூற்றம், வலிவலக் கூற்றம், ஆவூர்க் கூற்றம், தஞ்சாவூர்க் கூற்றம், மிறைக்கூற்றம், பாம்புணிக் கூற்றம்.
20. வரலாறு 14 - 15, பக். 4 - 6.
21. SII 8 : 229; திருவலஞ்சுழி கல்வெட்டுகள்: 203.
22. அசூர் என்று பெயர் மாறியுள்ள இவ்வூரில் இருதள வேசர விமானம் ஒன்று பிரதிபந்தத் தாங்குதளத்துடன் சிவன் கோயிலாய்த் திகழ்கிறது. இவ்வூரின் ஒதுக்குப்புறத்திலுள்ள சிறிய கோயிலில் சோழர் கால அய்யனார் சிற்பம் தேவியருடன் உள்ளது. பார்வையிட்ட நாள்: 15.10.2005.

-வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.