![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 176
![]() இதழ் 176 [ மார்ச் 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 今はただ 思ひ絶えなむ とばかりを 人づてならで 言ふよしもがな கனா எழுத்துருக்களில் いまはただ おもひたえなむ とばかりを ひとづてならで いふよしもがな ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் மிச்சிமசா காலம்: கி.பி. 992-1054. இத்தொடரின் 54வது பாடலை (இன்றே இனிய நினைவுடன்) இயற்றிய புலவர் தகாக்கோவின் பேரனும் தகாக்கோவின் மகன் கொரேச்சிகாவின் மகனும் ஆவார். இவரது தாத்தா மிச்சிதகாவுக்கு (தகாக்கோவின் கணவர்) இரண்டு தம்பியர். பேரரசர் கசானின் அரசவையில் மிகவும் அதிகாரபலம் கொண்டவராக விளங்கிய மிச்சிதகாவின் மரணத்துக்குப் பின் முதல் தம்பி மிச்சிகனே அதிகாரியாகிறார். ஆனால் அவரும் 7 நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். அதன்பின் இரண்டாவது தம்பி மிச்சிநாகா அதிகாரியாக விரும்புகிறார். ஆனால் மிச்சிதகாவின் மகன் கொரேச்சிகா அதற்குத் தடையாக இருக்கிறார். கொரேச்சிகா ஏற்கனவே அரசவையில் புகழ்பெற்றவராக இருப்பதாலும் சகோதரி தெய்ஷி பேரரசர் இச்சிஜோவை மணந்திருப்பதாலும் அவரது புகழைக் குறைக்கவும் களங்கம் கற்பிக்கவும் மிச்சிநாகா திட்டமிடுகிறார். பேரரசர் இச்சிஜோவின் தாயாருக்கும் ஏதோ காரணத்தால் கொரேச்சிகாவைப் பிடிக்காமல் போகிறது. எனவே இருவரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுகிறார்கள். பேரரசர் கசான் அரசபதவியைத் துறந்து துறவறம் பூணுகிறார். ஒருநாள் அரண்மனைக்கு வெளியே சென்றுகொண்டிருந்தபோது எங்கிருந்தோ ஓர் அம்பு அவரது சட்டையின் கைப்பகுதியில் வந்து தைக்கிறது. ஒரு துறவியின்மீது அம்பெய்வது மாபெரும் குற்றம். மிச்சிநாகா தீட்டி வைத்திருந்த திட்டத்தின்படி கொரேச்சிகாவின்மீது கொலைப்பழி சுமத்தப்படுகிறது. அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுகிறார். மிச்சிநாகா அந்தப் பதவியில் அமர்கிறார். கொரேச்சிகாவின் மகன் மிச்சிமசா பேரரசர் சான்ஜோவின் அரசவையில் பணியிலிருந்தபோது ஒருநாள் அவரது மகள் இளவரசி மசாகோ துறவியாவதற்காக இசேவிலுள்ள கோயிலுக்குச் செல்லும்போது உடன் காவலுக்குச் செல்லப் பணிக்கப்படுகிறார். அப்போது இருவரும் காதல்வயப்பட்டிருப்பது பேரரசருக்குத் தெரியவருகிறது. கடுங்கோபம் கொள்கிறார். இளவரசி மசாகோவை இசே கோயிலுக்குள்ளேயே சிறைவைக்கிறார். காவலுக்குப் பெண் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கிறார். மிச்சிமசாவால் மசாகோவைக் காண இயலவில்லை. அப்போது இயற்றப்பட்டதுதான் இப்பாடல். இருப்பினும் அவரால் மசாகோவை மீண்டும் சந்திக்கவே முடியவில்லை என்கிறது எய்காவின் கதைகள் என்னும் புதினம். பின்னர் கி.பி. 1024ல் பேரரசரின் தாயார் கொல்லப்படுகிறார். சந்தேகத்தின்பேரில் பிடிபட்டவன் மிச்சிமசாவின் ஆணைப்படியே கொன்றதாகக் கூறவும் அரண்மனையின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் இறக்கப்படுகிறார். பின்னர் 30 ஆண்டுகள் கழித்து கி.பி. 1054ல் இறந்துவிடுகிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 7 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாடுபொருள்: காவல் தாண்டிக் கடைசியாக ஒருமுறை காதலியைச் சந்திக்க விரும்புதல் பாடலின் பொருள்: உன் நினைவுகள் எல்லாமே அழிந்துபோய்விடும் என்று பிற மனிதர் இடையூறின்றி உன்னிடம் நான் சொல்ல விரும்பியே அதற்கான வழிகளைத் தேடுகிறேன். இசே கோயிலினுள் கடுங்காவல் வைக்கப்பட்ட காதலி மசாகோவுக்கு வெளியிலிருந்து இப்பாடலைத் தூதாக அனுப்புகிறார். எப்படி அனுப்பினார் என்ற விவரங்கள் தெரியவில்லை. கடைசியாக ஒருமுறை பார்க்க இயலாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று இளவரசிக்கு உணர்த்தும் இப்பாடல் இடையில் வேறொருவர் கையில் கிடைத்துவிட்டால் என்ன செய்வது? எனவே இறந்து விடுவேன் என நேரடியாகச் சொல்லாமல் உன் நினைவுகள் அழியும் என்று சொல்கிறார். மற்றவர் படித்தால் இளவரசியை மறக்கப்போகிறார் என்று பொருள்படும். இதில் முரண் என்னவென்றால் சிறை வைக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே இளவரசி மசாகோ இறந்துவிடுகிறார். ஆனால் சந்திக்க முடியாவிட்டாலும் இவர் சுமார் 40 ஆண்டுகாலம் வாழ்ந்து வந்தார். வெண்பா: விரும்பியே உள்ளம் கலப்பினும் பெற்றோர் வருந்தியே கூட்டில் சிறைவைத் - திருத்தியே காக்கினும் உன்முகம் காணாது போயின் அழிந்திடும் உந்தன் நினைவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |