http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 21

இதழ் 21
[ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

டாக்டர். மா. இராசமாணிக்கனார்
பழுவூர் - 10
வரலாற்றின் வரலாறு - 1
பல்லவர் யாவர்?
கீழ்மலையும் பொற்கோயிலும்
பல்லவர் வரலாறு - ஒரு பார்வை
இதழ் எண். 21 > பயணப்பட்டோம்
கீழ்மலையும் பொற்கோயிலும்
ச. கமலக்கண்ணன்
"ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாளாம்! அந்தப்பாட்டி ஒருநாள் மரத்தடியில உட்கார்ந்து வடை சுட்டுட்டு இருந்தப்ப, அந்த மரத்துமேல ஒரு காக்கா வந்து உட்கார்ந்துச்சாம். பாட்டி வேறபக்கம் திரும்பினபோது 'டபக்'குன்னு ஒரு வடையை எடுத்துட்டு மேலே போய் உட்கார்ந்திடுச்சாம்"

இப்படி ஒரு கதையை, புதிதாகப் பேசக்கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தை சொன்னால் கேட்க சுவாரசியமாக இருக்கும். ஆனால் ஒரு முப்பது வயது இளைஞர் சொன்னால்? ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்து விடுவோமல்லவா? ஆனால் இக்கதையை நான் ஒருவர் சொல்லக் கேட்டபோது வியப்பாக இருந்தது. காரணம் அம்மழலைத்தமிழுக்குச் சொந்தக்காரர் ஒரு ஜப்பானியர். பெயர் யசுதா டெட்சுனொட்சுகே. இவர் பெயரைச்சொல்வதற்கு நமக்குத்தான் நாக்கு சுளுக்கிக் கொள்ளுமே தவிர, தமிழ் பேசும்போது இவருக்கு இப்படி ஆவதில்லை. ஓரளவுக்குப் பேசமட்டும்தான் முடியுமென்று பார்த்தால், என் பெயரைச் சரியாக எழுதியே காட்டிவிட்டார். எனது தமிழ் நண்பர்களே கடிதம் எழுதும்போது 'ன', 'ண' மாற்றிப் போடுவதுண்டு. நாம் தமிழில் பேசுவன அனைத்தையும் சரியாகப் புரிந்து கொள்கிறார்.இவர் மட்டுமல்ல. இவரைப்போல் தமிழின் மீது ஆர்வம் கொண்ட இன்னும் 400 ஜப்பானியர்கள் இருக்கிறார்கள். அனைவரையும் தமிழின்பால் திருப்பிய ஒரே விஷயம் ரஜினிகாந்த். 'முத்து' படம் ஒஸாகாவில் வெளியானபோது, மீனாவின் அழகில் மயங்கி, திரும்பத் திரும்பப் பார்த்து, ரஜினி ரசிகர்களாக ஆனவர்கள். ரஜினி பாடல்களுக்கு அர்த்தம் அறியவேண்டித் தமிழ் படிக்க ஆரம்பித்து, முழுமையாகக் கற்க முனைந்துள்ளனர்.சுமார் 20 வருடங்களாக ஜப்பானில் வசித்து வரும் 'திலகா' தென்னிந்திய உணவக உரிமையாளர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த திரு. சுப்ரமணியம் என்பவர்தான் இவர்களுக்குத் தமிழ் ஆசான். ஒஸாகவாழ் தமிழர்களுக்குத் தமிழக உணவளிப்பதுடன், இவர்களின் தமிழ்ப்பசிக்கும் தீனிபோடும் இவர் மிகுந்த பாராட்டுக்குரியவர். ஜப்பானியர்களுக்கு வழக்கமாக, கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் வேலை தயாராகக் காத்துக்கொண்டிருக்கும். வேலையில் சேருவதற்கு முன் இரண்டு மாதங்கள் விடுமுறை. விரும்பும் நாட்டைச் சென்று பார்த்து வரலாம். இத்தகைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பெரும்பாலானோர் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கும்போது, தமிழ்மீது ஆர்வம் கொண்ட, கல்லூரிப் படிப்பை முடித்த யொஷிகோ யுகினகா என்ற இருபது வயதே நிரம்பிய மாணவி, தன்னந்தனியாக, எந்தவித அதிக முன்னேற்பாடுகளும் இன்றி, தமிழ்நாட்டில் பதினைந்து நாட்கள் சுற்றுலா சென்று வந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? விஜய் ரசிகையான இவர், திருச்சிக்கு வந்தபோது 'ஆதி' படத்தையும் தியேட்டரில் பார்த்திருக்கிறார், நம் நண்பர் மடிப்பு கலையாத (!) சீதாராமன் உதவியுடன். இவர்களின் தமிழார்வம் இத்தகையது. தமிழ்க்கலாச்சாரத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் பற்றை விவரித்தால், இதுபோல இன்னொரு கட்டுரை நீளும்.

இவர்கள் இப்படியென்றால், தமிழகக் கோயில்களுக்கும் ஜப்பானின் ஷிண்டோ மதக்கோயில்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அட்சுஹித்தோ என்ற நண்பர் கியோட்டோவுக்கு அழைத்துச் சென்று காட்டினார். ஹிகாஷியமா என்று பெயர். கிழக்கிலிருக்கும் மலை என்று பொருள். ஆகவே, நாம் தமிழில் கீழ்மலை என அழைக்கலாம். ஆச்சரியமாக இருந்தது. கி.பி 876ல் (நம் விஜயாலயன் மற்றும் முதலாம் ஆதித்தன் காலம்) கட்டப்பட்ட ஒரு கோயிலில் நம் மகேந்திரவர்மர் அறிமுகப்படுத்திய போதிகை இருந்தது. ஆனால் கி.பி 778ல் கட்டப்பட்ட கியொமிசுதெரா என்ற மற்றொரு கோயிலில் நம் முதலாம் குலோத்துங்கன் காலத்து 'பூமொட்டுப்போதிகை' இருந்தது. எப்படி சாத்தியம்? அப்படியானால் போதிகை வடிக்கும் கலையில் இவர்கள் பல்லவர்களுக்கு முன்னோடிகளா?மகேந்திரரைப் பற்றியும் குலோத்துங்கரைப் பற்றியும் சற்று விளக்கிச்சொல்லி விவரம் கேட்டால், 'இல்லை' என்கிறார் அட்சுஹித்தோ! இம்மண்டபம் பின்னாளில் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். தூண்களும் கூரை அமைப்பும் இந்தியக் கோயில்களை மாதிரியாகக் கொண்டுதான் பெரும்பாலும் கட்டப்பட்டிருக்கின்றன என்றார். சந்தோஷம் தாளவில்லை. அந்த அளவுக்குத் தமிழகக் கோயில்களைப் பற்றித் தெரியுமா என ஆவலுடன் கேட்டபோதுதான் அந்த அதிர்ச்சியான செய்தியைக் கூறினார். கியோட்டோ பல்கலையில் பணிபுரியும் திரு.தனகா என்ற வரலாற்றுப் பேராசிரியர் தனது முனைவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலைப்பு என்ன தெரியுமா? தில்லை நடராஜர். இரண்டு மூன்று ஆண்டுகள் சிதம்பரத்திலேயே தங்கி, ஆய்வை முடித்துள்ளார். அவரைச் சந்திக்க ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

போதிகையைத் தவிர, தமிழகக் கோயில்களுடனான இன்னொரு ஒற்றுமை வாயிற்காவலர்கள். கோபுரங்களிலும் கருவறை வாயிலிலும் இருபுறமும் நெடிதுயர்ந்த உருவத்துடன் வாயிற்காவலர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். இருப்பினும், சிற்ப அமைதி வேறுபடுகிறது. என்ன தத்துவம் என்று விளங்கவில்லை. ஏன் சிறைக்கதவு போன்ற கம்பிகளுக்குப் பின்னால் வைத்துப் பாதுகாத்திருக்கிறார்கள் எனவும் தெரியவில்லை. 'பரிய களிற்றை அரவு விழுங்கிய'தை உணர்த்திய இராஜராஜீசுவரத்து வாயிற்காவலரைக் கண்ட கண்களை இவர்கள் வசியப்படுத்தவில்லை. ஆனால் இக்கோயிலில் நான் கண்டு அதிசயித்த, தமிழகத்தில் காணவியலாத விஷயம் ஒன்றுண்டு. கருங்கல்லால் கட்டப்பட்ட காவியங்கள் நம் ஊரில் ஏராளம். ஆனால் முழுக்க முழுக்க மரத்தால் ஆன சுமார் 150 அடி உயரக் கட்டுமானம் பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. மரம் என்றால் மரம் மட்டுமே. இரு பலகைகளை இணைக்க ஒரு சிறு ஆணியைக் கூடப் பயன்படுத்தவில்லை. மரத்தினாலான ஆப்புதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புகைப்படத்தைப் பாருங்களேன்! நீங்களே அசந்து போவீர்கள்.இதேபோல நான் கண்டு அதிசயித்த இன்னொரு கோயில் சாஞ்சுசான் கெண்டோ என்பது. கி.பி 1164ல் கட்டப்பட்ட இதைப்பார்த்துவிட்டு அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்லை. நம் ஊரிலுள்ள ஆயிரத்தளி போல இங்கே ஆயிரம் புத்தர் சிற்பங்கள் இருக்கின்றன. சாஞ்சுசான் என்றால் முப்பத்தி மூன்று. ஆக, முப்பத்து மூன்று வரிசைகளில் ஆயிரம் சிற்பங்கள் இருப்பதால்தான் இந்தப்பெயர். இதில் சிரிப்பதற்கும் அழுவதற்குமான விஷயம், இங்கிருக்கும் இந்து சமயக் கடவுள்கள்தான். இருபத்தியெட்டு இந்துக்கடவுள்களை புத்தமதத்தின் காவலர்களாகச் சித்தரித்திருப்பதுதான் கொடுமை. அங்கே எழுதி வைக்கப்பட்டிருந்ததை அப்படியே கீழே தருகிறேன்.

These 28 guardian deities, who have their origin in ancient India, are followers of Senju-kannon and protectors of Buddhism.

இங்கு Senju-kannon என்பது போதிசத்வரைக் குறிப்பது. என்னதான் புத்தமதம் உயர்ந்தது என இவர்கள் நினைத்தாலும், மற்ற சமயக் கடவுள்களை ஒருபடி கீழிறக்குவதும் மதம் மாற்றுவதும் எந்த விதத்தில் நியாயம்? இதைக்கேட்கலாம் என நினைத்தால், அங்கிருப்பவர்கள் அனைவரும் இயந்திரத்தனமாகக் கொடுத்த வேலையை மட்டும் தினமும் செய்துவரும் பகுதிநேர ஊழியர்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. சுற்றுலாப்பயணி ஒருவர்தான் சொன்னார். புத்தகயாவிலும் இதேபோலத்தான் இருக்கிறதாம். அதை மாதிரியாகக் கொண்டுதான் இதைச் செய்தார்களாம். இந்தியாவிலேயே இப்படியா? எங்கே போய்ச் சொல்வது? இக்கொடுமையைக் கண்டுகொள்ளாமல் தம்மை இந்துமதக்காவலர்கள் என்று சொல்லிக்கொல்பவர்கள் இராமனும் கிருஷ்ணனும் தேசியச் சின்னங்கள் என்று சொல்வது வெற்றுக்கூச்சலாகவே தெரிகிறது. இத்தனைக்கும் இங்கிருக்கும் பெரும்பாலான சிற்பங்கள் வைணவக் கடவுள்களே! விஷ்ணு அசாதாரண பலம் பொருந்தியவர்தான். உலகைக்காப்பவர்தான். ஆனால் அதற்காக முஷ்டியை மடக்கிக்கொண்டு சண்டைக்குத் தயாராக நிற்கும் மல்யுத்த வீரராகவா சித்தரிப்பது? கருடன் புல்லாங்குழல் ஊதிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஒருவேளை கண்ணனாக இருக்குமோ என மீண்டும் பலகையைப் படித்துப்பார்த்தால், கருடன்தான். இறக்கையும் கூரிய அலகும்கூட இருக்கிறது. இதைவிட ஸ்ரீதேவியின் நிலைமைதான் மிகவும் மோசம். செந்தாமரையில் கம்பீரமாக வீற்றிருக்கும் நிலைமாறி, ஒரு பாறை மேல் ஜப்பானிய உடையான கிமோனோவை அணிந்து கொண்டு சோகமாக, ஏதோ ஒரு டிராகன் அரசனின் மகளாகக் காட்டப்பட்டிருக்கிறார். இவர்கள் போக வருணனும் வாயுவும் கூட இருக்கிறார்கள், கேலிச்சித்திரங்கள் போல. மகேஸ்வரன் கையில் திரிசூலத்திற்குப் பதிலாக வேலின் முனையில் ஒரு பறவை வைக்கப்பட்டிருக்கிறது. என்ன அர்த்தமோ! புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால் அங்கே வாங்கிய ஒரு புத்தகத்திலிருந்து படங்களை எடுத்திருக்கிறேன்.ஆயிரம் புத்தர்கள் ( முன்வரிசையில் இந்து சமயக் கடவுள்கள்)
விஷ்ணு (நாராயணன்)
ஸ்ரீதேவி
புல்லாங்குழலுடன் கருடன்


கீழ்மலைக் கோயிலில் என்னைக் கவர்ந்த மற்ற விஷயங்கள் அங்குள்ள தீர்த்தம் அருந்தும் சடங்கும் காதல் கற்களும்தான். மூன்று வெவ்வேறு நீர்நிலைகளிலிருந்து மூன்று தீர்த்தங்கள் வருகின்றன. கல்வியா? செல்வமா? வீரமா? அவரவர்க்கு எது வேண்டுமோ அதற்கான வரிசையில் நின்று, காசு கொடுத்துக் கரண்டி வாங்கி, அதில் தீர்த்தத்தைப் பிடித்துப் பருகினால் அவை கிடைக்குமாம். மக்களின் மூடநம்பிக்கைகளை வைத்துப் பணம் சம்பாதிப்பது இந்தியாவில்தான் என நினைத்திருந்தால், உலகம் முழுவதிலும் இருக்கிறது.இதைவிட, காதல் கற்கள் மிகச் சுவாரசியமானவை. சுமார் முப்பதடி தூரத்தில் இரு கற்கள் இருக்கும். ஒரு கல்லில் இருந்து கண்ணைக் கட்டிக்கொண்டு மற்றொரு கல்லை நோக்கி நடக்கவேண்டும். வழி தவறாமல் நடந்து அடுத்த கல்லைத் தொட்டுவிட்டால், காதல் நிறைவேறுமாம்! இது போதாதென்று காதல் சீட்டு என்று ஒன்று விற்கிறார்கள். 200 யென் கொடுத்து அதை வாங்கிப் பார்த்தால் நம் காதல் என்னவாகும் என இருக்குமாம். நிறைவேறாது என்று சீட்டு வந்திருந்தால் அதற்குப் பரிகாரமாக இன்னொரு சீட்டு விற்கிறார்கள். இன்னொரு 200 யென் கொடுத்து அதை வாங்கி, அருகில் பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீரில் போடவேண்டும். தண்ணீரில் அக்காகிதம் கரைய எத்தனை நேரம் பிடிக்கிறதோ, அத்தனை சீக்கிரத்தில் காதல் நிறைவேறுமாம். பெரும்பாலும் அவரவர் துணையை அவரவரே தேடிக்கொள்ளும் ஜப்பானில் எதற்காகக் காதல் நிறைவேறப் பிரார்த்தனை எல்லாம்? இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று காதலர் ஏமாற்றி விடாமல் இருக்க. இன்னொன்று? சாதிப்பிரிவினை. இந்தியாவிலிருக்கும் வர்ணாசிரம மனுதர்மம் இங்கேயும் அதே மனுவின் பெயரில் நான்கு பிரிவுகளுடன் இருக்கிறது. எனது ஜப்பானிய ஆசிரியை திருமதி ஹத்தோரி, அவரது கணவரைப் பெற்றோரை எதிர்த்துத்தான் மணம் புரிந்து கொண்டாராம். காரணம், இவர் முதலாவது வர்ணம். கணவர் மூன்றாவது வர்ணம். காதலர்கள் இருவரும் ஒரே வர்ணமாக இருந்தால் மணம் முடிப்பதில் சிரமம் ஏதும் இருப்பதில்லை.

இங்கு என்னை அதிர்ச்சியடைய வைத்த சில விஷயங்களும் இருக்கின்றன. சாமி தரிசனம் முடிந்ததும், பிரசாதம் தருகிறார்கள். சரி, நம் ஊரைப்போல விபூதி அல்லது குங்குமம் தருவார்கள் எனப்பார்த்தால், கையில் வாங்கிப் பார்த்தபிறகுதான் தெரிகிறது! காய்ந்த கருவாடு!அடக்கடவுளே! இதை நெற்றியில் ஒட்டிக்கொள்வதா? தலையில் போட்டுக்கொள்வதா? சாப்பிடுவதா? ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நம்மூரைப்போலவே இன்னொரு விஷயம் இங்கிருக்கிறது. நாம் மைல்கல்லுக்கு மாலை போடுவது போல, இங்கும் நடுகல் சிற்பங்கள் இருக்கின்றன. இவர்கள் யாரென்று கேட்டால், கிராமப்புறங்களில் வாழ்ந்து இறந்தபிறகு தெய்வமானவர்களாம். சரிதான்! வீட்டுக்கு வீடு வாசற்படி!இதைத்தவிர, பொற்கோயில் என்று மிகவும் பிரபலமான ஒன்று இருக்கிறது. நம் சிதம்பரம் போலவோ அல்லது திருப்பதி போலவோ கூரை முழுவதும் பொன்னால் வேயப்பட்டிருக்கும் என எதிர்பார்த்துப் போனால், மாறாக, சுவர் பொன்னால் செய்யப்பட்டிருக்கிறது. அதுகூடத் தங்கம் போலத் தெரியவில்லை. மரத்தால் செய்யப்பட்டு மஞ்சள் வண்ணம் பூசியது போலத்தான் இருந்தது. ஆனாலும் அதைச் சுற்றியுள்ள இடம் மிக ரம்மியமாக இருக்கிறது. என்னதான் இவர்களது கோயில்கள் அருங்காட்சியகம் போன்ற தோற்றத்தைத் தந்தாலும், பராமரிப்பதிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகள் செய்து தருவதிலும் இவர்களை மிஞ்ச எந்த நாட்டாலும் முடியாது. அமெரிக்காவில்கூட அமெரிக்கப் பயணிகளுக்குத்தான் அதிக முன்னுரிமையும் வசதி வாய்ப்புகளும். இவர்களைப் பார்த்து, இந்தியச் சுற்றுலாத்துறை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக, அராஷியமா என்ற இடம் உள்ளது. ஆஹா! அங்கு நாங்கள் சென்றவேளை சாரலும் தென்றலும் தவழ்ந்து கொண்டிருந்தன. காலை சுமார் 10 மணிக்கு நனையாத அளவுக்குச் சிறுதூறலும், மென்மையான காற்றும் அடுத்தமாதம் பூக்கக் காத்திருக்கும் செர்ரிப் பூமொட்டுக்களைக் கொஞ்சிக் கொண்டிருந்தன. வெப்பநிலை சுமார் 10 டிகிரி செல்சியஸ் இருக்கும். தாமரைப் பூக்களற்ற அந்தத் தடாகத்தில் துள்ளி விளையாடும் வண்ண மீன்களைப் பார்த்துக் கொண்டே காலத்தைக் கழித்து விடலாமா என்றுகூடத் தோன்றியது. ஒருபுறம் அழகான குளம். அதற்கு மறுபுறம் அடர்ந்த மரங்கள் கொண்ட காடு. வீராணத்தின் மேற்கரையில் உள்ள தீவுகளில் அமைந்திருந்த கடம்பூர் சம்புவரையரின் அந்தப்புரத்தை நினைவுபடுத்தியது. நந்தினியும் மணிமேகலையும்தான் இல்லை. என்ன செய்வது! நந்தினி மட்டும் இருந்திருந்தால்? காயம்பட்டுத் தப்பிய சிறுத்தையை அம்பெய்திக் கொன்று... ம்ம்! கற்பனை சந்தோஷத்தினால் என்ன பயன்?

கியோட்டோவில் உள்ள கோயில்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டும். ஒரு நண்பர் பெருமையாகக் கேட்டார். கோயில்களுக்குப் பெயர் போனதாகச் சொல்லிக் கொள்கிறீர்களே! உங்கள் ஊரில் இத்தனை கோயில்கள் உள்ளனவா? ஐயோ பாவம்! இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும், அதுவும் கல்வெட்டுக்கள் உள்ள கருங்கற்கோயில்கள் மட்டும் முப்பத்து மூன்றாயிரத்துக்கும் மேல். என்றதும் வாயடைத்துப் போய்விட்டார். ஜப்பானில் கடவுள்களின் எண்ணிக்கையும் அதிகம். சுமார் எண்பது லட்சம். முதலில் கேட்டபோது வியப்பாக இருந்தது. மக்கள்தொகையே அவ்வளவுதான் இருக்கும். ஆளுக்கொரு கடவுளா? பிறகுதான் விஷயம் தெரிந்தது. மனித சக்திக்கு மீறிய அனைத்தையும் கடவுளாக்கி அதற்கு ஒரு சிலையையும் நிறுவி விடுகிறார்கள். ஜப்பானை இதுவரை எந்த நாடும் படையெடுத்து வெற்றி கொண்டதில்லை. பல முறைகள் மங்கோலியர்கள் ஜப்பான் மீது படையெடுத்து வந்தாலும், இதன் கரையைக்கூடத் தொட்டதில்லை. காரணம், நடுக்கடலிலேயே சூறாவளிக்காற்று அவர்களை விரட்டியடித்து விடுவதுதான். பசிபிக் கடல் ஒரு எல்லையாக இருக்க, கிழக்கில் இன்னொரு எல்லையாக இருக்கும் ஜப்பான் கடல் சூறாவளிக்கும் சுனாமிக்கும் பெயர் போனது. இந்த நன்றிக்கடனுக்காக, சூறாவளிக்காற்றையும் ஒரு கடவுளாக்கி விட்டார்கள். அட, இதுவாவது பரவாயில்லை! இயற்கை வழிபாடு என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நீர்மூழ்கிக்கப்பலையும் ஒரு தெய்வமாக வணங்குகிறார்கள். என்ன, ஏது என விசாரித்தால், இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பானின் எதிரிப் படைகளுக்கு அதிக சேதத்தை விளைவித்ததாம் இந்த நீர்மூழ்கிக்கப்பல். அதனால் இதற்கொரு கோயிலாம்! அப்படியே, தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

மீண்டும் அடுத்த பயணத்திற்குப் பிறகு சந்திப்போம்.

நன்றி.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.