http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 22

இதழ் 22
[ ஏப்ரல் 16 - மே 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழகத் தேர்தல்
பாராட்டுவோம்
வரலாற்றின் வரலாறு - 2
Perspectives On Hindu Iconography
கல்வெட்டாய்வு - 15
குடும்பில் குடவோலை
தரிசனமான தக்ஷ¢ணமேரு
ஆயிரம் வருஷத்துப் புன்னகை - 2
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 9
இதழ் எண். 22 > பயணப்பட்டோம்
ஆயிரம் வருஷத்துப் புன்னகை - 2
கோகுல் சேஷாத்ரி

புள்ளமங்கை திரு ஆலந்துறையார் திருக்கோயில் பயண அனுபவங்கள்


(முன்பு திசைகள் டாட் காமில் வெளியான இந்த பயணக் கட்டுரை இங்கு சில புதிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களுடன் வரலாறு டாட் காம் வாசகர்களுக்காக மறுபதிப்பு காண்கிறது)


இராமாயணச் சிற்றுருவங்கள் (Miniatures) கோயிலின் கண்டபாதத்தில் அமைந்திருந்தமையால் அடியேனும் சீதாராமனும் அந்த முன்றடிக்குழியில் கீழே இறங்கினோம். கீழ் வரிசையில் பல்வேறு சிவ முர்த்தங்கள். அதற்கு மேல் இராமாயணக் காட்சிகள்.

எடுத்துக்கொண்ட இடம் கிட்டத்தட்ட கால் அடிக்குக் கால் அடி அமைந்த சதுரம். கைவிரல் அளவில் ஒரு ஜாணுக்கு ஒரு ஜாண் என்று சொல்லலாம். அதற்குள் ஒரு நிகழ்ச்சியை சொல்லியாக வேண்டும். அதுவும் காவிய நிகழ்ச்சி.முக பாவங்களை அத்துணை சிறிய இடத்தில் காண்பிக்க முடியாதாகையால் அந்தந்த பாத்திரங்கள் அமர்ந்திருக்கும் கோலமே முக்கால்வாசி செய்தியை சொல்லிவிட வேண்டும்.

அதில் கதை சொல்ல வேண்டும் - காவியம் செல்ல வேண்டும். இத்தனை நிர்பந்தங்கள்.

ஆனால் சிற்பி அசரவில்லை. நம்மை அயரவைத்துவிடுகிறான். இது அடியேனுடைய டிஜிட்டல் கேமராவில் பதிவாகி அதனை கணிப்பொறியில் பெரிதுபடுத்திப் பார்க்கையில்தான் "அடப்பாவி - இத்தனை சிறிய இடத்துக்குள்ளா இவ்வளவு செய்திகளைச் சொல்லியிருக்கிறாய் ?" என்று பிரமித்துப் போகிறோம்.

அத்தனை காட்சிகளையும் வர்ணிக்கும் தகுதி அடியேனுக்கில்லையென்பதால் ஒரே ஒரு காட்சியை எடுத்துக் கொள்வோம்.

வாலி இறந்துவிடுகிறான்.

நயவஞ்சகமான முறையில் பெருவீரனான வாலி மறைந்திருந்து தாக்கப்பட்டு கொல்லப்படுகிறான்.

எத்தனை துயரமான விஷயம் ? வெல்லமுடியாத அரசனாய்க் கோலோச்சிய மாவீரனல்லவா விழுந்துவிட்டான் ! இனி வானரப்படைளுக்கு இத்தகைய தலைவன் கிடைப்பது அடுத்த யுகத்தில்கூட சாத்தியமில்லையே - ஐயோ ! என்ன செய்வது ? வேறு யார்செய்திருந்தாலும் பரவாயில்லையே !அவதார புருஷனான இராமபிரானல்லவோ அம்பெய்துவிட்டான் ? தனக்கும் தான் பிறந்த இஷ்வாகு குலத்திற்கும் தீராப் பழியைத் தேடிக் கொண்டானே...

நமது அரசன் அம்புபாய்ந்து கடைசித்தறுவாயில் இருக்கிறான். அவனென்னவோ நிம்மதியாகத்தான் இருக்கிறான். No Regrets. ஆனால் நாமென்ன செய்யப்போகிறோம் ?

வார்த்தைகளாலேயே சரிவர வர்ணிக்கமுடியாத உச்சகட்ட சோகக் காட்சி இது. இதனை ஒரு Miniature Panel லுக்குள் முயற்சி செய்ய எத்தனை கற்பனை வேண்டும் ? தைரியம் வேண்டும் ?

வாலிவதம்


புகைப்படத்தைப் பாருங்கள். கூர்ந்து கவனித்தாலொழிய சரிவர இரசிக்க முடியாது.

வாலி தலை ஒரு வானரத்தின் மடியிலும் கால்களை தாரையின் மடியிலும் சோர்ந்துபோய்க் கிடக்கிறது.

தலையைத் தாங்கியுள்ள வானரம் ஆதூரத்துடன் வாலியை நோக்குகிறது - நடக்கக்கூடாதது நடந்துவிட்டது.

தாரை கைகளை கன்னத்தில் தாங்கிப் பிடித்திருக்கிறாள் - அப்போதே பிறன்மனை விழையாதே என்று சொன்னேனே - பாவிமனிதா, கேட்டாயா ?

மேலும் கீழும் உள்ள வானரங்களின் உணர்ச்சியைப் பாருங்கள்..

ஒன்று முட்டிகாலில் முகம்புதைத்துள்ளது. எல்லாம் நடந்துமுடிந்து விட்டது....செய்வதற்கு ஒன்றுமில்லை.

ஒன்று தலைக்குமேல் கைகளை உயர்த்திப் புலம்புகிறது - மிகச் சிறந்த தலைவனை இழந்தோமே !

ஒன்று தரையில் விழுந்து புலம்புகிறது - ஐயோ ! ஆறமாட்டேன் என்கிறதே - என்ன செய்வேன் ?

அந்த சிற்பத்தை பார்க்கப் பார்க்க சோகம் எப்படி நெஞ்சைக் கப்பிக் கொள்கிறது பாருங்கள் ! அதுதான் சிற்பியின் வெற்றி !

ஒரே ஒரு சிற்பத்துக்கே இத்தனை வியாக்கியானம் தேவைப்படுகிறது. அனைத்தையும் இரசித்து முடிக்க ஒரு பிறவிபோறாது சாமி என்று நகர்ந்தோம்.

இராமாயண வடிவங்களுக்கு சற்று கீழே விதவிதமாய் சிவ வடிவங்கள். ஆனை உரிச்ச தேவர் என்று சோழர்காலக் கல்வெட்டுக்கள் செப்பும் கஜஸம்ஹரமூர்த்தியின் அழகை மட்டும் பத்து பத்தி விவரிக்கலாம். "கூர்ந்து பாருங்கள் - யானையின் தோலும் நான்கு கால்களும் சிவபெருமானைச் சுற்றித் தெரியும் " என்றார் டாக்டர் நளினி. அடடா ! இவர்களுடன் வராவிட்டால் ஒன்றையுமே சரிவர பார்த்திருக்க முடியாது - அப்படியே பார்த்தாலும் ஒன்றும் புரிந்திராது. இதற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் ? என்றொரு எண்ணம் ஓடியது.

கஜஸம்ஹரமூர்த்தி. புகைப்பட உதவி - சந்திரா


கங்கைகொண்ட சோழபுரத்தில் மிகப்பெரிய அளவில் வடிக்கப்பட்டு உலகப்புகழ்பெற்ற சண்டேச அனுக்கிரகமூர்த்தியின் முன்னோடியையும் (Pioneer) இங்கு காணலாம்.

சண்டேச அனுக்கிரகமூர்த்தி


பசுவை அணைத்திருக்கும் மாதொருபாகன், அர்த்தநாரி, ருத்திர தாண்டவ மூர்த்தி, உமா சகிதர் - எத்தனையெத்தனை படிமங்கள் சிற்றுருவங்களாக ! ஒரு அமர சிற்பி "இத்தனை சிறிய இடம்தான் இருக்கிறதே என்றா கவலைப்படுகிறாய் ? இதற்குள் என்னென்ன வேலையெல்லாம் செய்யமுடியுமென்று காண்பிக்கிறேன் பார் !" என்று எவருடனோ பந்தயம் வைத்துவிட்டுச் செதுக்கியததைப்போலத்தான் காண்கிறது.

உமையணுக்கர். புகைப்பட உதவி - சந்திரா


பன்றியாழ்வார் என்றழைக்கப்பட்ட வராகமூர்த்தி. புகைப்பட உதவி - சந்திரா


நேரமின்மையால் மனமின்றி நகர்ந்தோம்.

இடையில் ஒரு கோஷ்டி கல்வெட்டுப் படிக்கிறேன் பேர்வழி என்று அந்த முயற்சியில் இறங்கி சொல்லத்தக்க வெற்றியும் அடைந்தது. டாக்டர் நிறைய உதவினார். அவருக்கு ஒரு இளைஞர் குழாம் இப்படியொரு முயற்சியில் இறங்கியிருக்கிறதே என்று பரம திருப்தி !

இந்தக் கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் விபரங்களையும் திரு.கலைக்கோவன் அவர்களின் புள்ளமங்கை ஆய்வு விபரங்களையும் வரலாறு ஆய்விதழில் விபரமாகத் தெரிந்துகொள்ளலாம்.

தென்பகுதியிலிருந்து மேற்குப்புறமாக அமைந்த கோயில் கருவறையின் பின்பகுதியை அடைந்தோம்.

இந்த இடத்தில் லிங்க புராணத் தேவர் என்று விளிக்கப்படும் லிங்கோத்பவ மூர்த்தியை அமைப்பது மரபு. சிற்பியும் ஒப்புக் கொண்டான்.

லிங்க புராணத் தேவர் தொகுதி


சிற்பிக்கும் அரசனின் மகனுக்கும் மிக நெருங்கிய தொடர்பு. வர்க்க பேதம் தாண்டிய ஆழ்ந்த நட்பு.

"உனக்குள் இத்தனை பெரிய கலையா ?" என்கிற வியப்பு இளவரசனுக்கு.

"என் வித்தையை இத்தனை மதிக்கிறீரே ? உமக்கு என்ன செய்யப்போகிறேன் ?" என்கிற உணர்வு சிற்பிக்கு.

ஒருநாள் சிற்பி தன்மை மறந்து லிங்கோத்பவரிடம் ஈடுபட்டிருந்தான். இரண்டு நாழிகையாய் பின்னால் வந்து நிற்கும் இளவரசனை கவனிக்க நேரமில்லை. லிங்கோத்பவரின் மூக்கை முடிக்க - ஆஹா! என்றொரு சப்தம் கேட்டது. சிற்பி திரும்பினான்.

வியர்வை வழியும் நிலையிலும் இளவரசன் மாறாத மந்தஹஸத்தோடு நின்றுகொண்டிருந்தான். அந்த புன்சிரிப்பு சிற்பியின் கண்கள் வழியாக இதயத்தில் அமரத்துவமாய்ப் படிந்தது. அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்பது தெரிந்தது.

"அடுத்த வாரம் இதே கிழமை தாங்கள் அவசியம் வரவேண்டும் இளவரசே!" என்றொரு கோரிக்கை வைத்தான் சிற்பி. எதற்காக என்று இளவரசன் கேட்க விரும்பினாலும் கேட்கவில்லை. சரியென்றான்.

அடுத்தவாரம் அங்கு வந்தபோது லிங்கோத்பவர் முடிந்து அருகில் வலப்பக்கத்து பிரம்மாவும் ஏறக்குறைய பூர்த்தியாகியிருந்தார்.

பிரம்மனை பாதத்திலிருந்து அங்குலம் அங்குலமாய் இரசித்துக்கொண்டு வந்த இளவரசனுக்கு முகத்தைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி ! இந்த முகம் மிக நெருங்கிய ஒருவரின் முகம்போல் தெரிகிறதே - அடக்கடவுளே ! நமது முகம் போல அல்லவா தெரிகிறது ?

அதிர்ந்துபோய் சிற்பியை நோக்கினான். சிற்பி ஒன்றுமே பேசவில்லை.

"அடடா - என்மீதுள்ள அன்பினால் தெய்வ அபச்சாரம் அல்லவா செய்துவிட்டாய் ? " என்று பதறினான் இளவரசன்.

"இல்லை இளவரசே - படைப்புக் கடவுள் முதிர்ந்தவராக மட்டும்தான் காட்டப்படவேண்டுமென்று எந்த ஆகமத்திலும் சொல்லப்படவில்லை. என் மனதில் ஆழப்பதிந்த நண்பனின் உருவத்தையே படைத்தேன். என் படைப்பின்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். சந்திர சூரியர் உள்ளவரை இந்த பிரம்ம வடிவம் மக்கள் மனதில் தனியிடம் பெறும் !" என்று ஆவேசமாய்ச் சொன்னான்.

அந்த அமர சிற்பியின் வாக்குப் பலித்தது. வேறு எந்தக் கோயிலிலும் படைப்புக்கடவுளை இத்தனை இளமையுடனும் பூரிப்புடனும் பார்க்கவேயியலாது. ஒரு முறை பார்த்துவிட்டால் அந்தப் புன்னகை அப்படியே பச்சக் என்று நெஞ்சில் வந்து ஒட்டிக்கொள்ளும்.

ஆயிரம் வருடங்கள் கழித்தும் அப்படியே புத்தம் புதுசாய் நமக்குக் கிடைத்திருக்கும் புன்னகை - காணக் கண்கோடி வேண்டுமையா !

ஆயிரம் வருஷங்களில் அழியாத புன்னகை


இன்னொன்று. பிரம்ம வடிவம் ஏறக்குறைய மூன்று வெவ்வேறு கற்களால் ஆனதைக் கவனியுங்கள். Alignment முக்கியமான விஷயம். சற்று பிசகினாலும் வடிவம் அசிங்கமாகிவிடும். ஆனால் ஏதோ ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்டதைப்போல் தோன்றுவதைக் கவனியுங்கள்.

பிரம்மா - முழுவடிவமும் மூன்று கற்களால் ஆனவை


மேலிருந்து பார்த்தேன். ஒரு உணர்ச்சி. கீழிறங்கிப் பார்த்தேன் - மற்றொரு உணர்ச்சி - எத்தனை பாவங்கள் ஒரே வடிவத்துக்குள் ? மற்றவர்களை திரும்பிப்பார்த்தேன் - நமது நண்பர் ஏறக்குறைய அழுதுவிடுவார்போல் தெரிந்தது... அவரைத் தேற்றி அழைத்துக்கொண்டு போனோம்.

அடுத்து மேற்கு கோஷ்டத்தில் தனி பிரம்மா. இதில் அத்தனை இளமையைக் காணோம் ! (இதை வைத்து அடியேன் ஒரு கதை கூட எழுதியதாக ஞாபகம் - எதற்கும் ஒருமுறை இந்தச் சுட்டிக்கு விஜயம் செய்து விட்டு வாருங்களேன் ? http://www.varalaaru.com/Default.asp?articleid=47)

வாண்டுகளோடு தரிசனம் தரும் மேற்கு கோஷ்ட பிரம்மா


பிரம்மனுக்கு முன்னதாக கொற்றவைக் கோட்டம். இந்தக் கொற்றவை வழிபாடு பற்றி டாக்டர் பிறிதோரிடத்தில் நிறைய சொன்னார்கள். அந்த விபரங்களை அவருடைய பெண் தெய்வ வழிபாடு புத்தகத்தில் விரிவாகக் காணலாம்.

அத்தனை ஆயுதங்கள் இருந்தாலும் கொற்றவை முகத்தில் ஆவேசத்தைக் காணோமே ? என்றேன்.

"மகிஷனை வதம்செய்து முடித்துவிட்டாளல்லவா ? அதனால்தான். மாமல்லபுரத்தில் அவனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தாள். அதனால்தான்
அங்கே அத்தனை ஆவேசம்" என்றார் டாக்டர்.

கொற்றவையை விளக்கும் டாக்டர் இரா.கலைக்கோவன்


அடிக்கடி புல்லரித்துப் போயிருந்ததால் நமக்கு புதிதாய் உணர்ச்சிகள் உண்டாகவில்லை.

கொற்றவையின் ஆயுதங்களும் தனித்தனியே விளக்கப்பட்டன.

கொற்றவைக்குக் கீழ் இரு அடியவர்கள். ஒருவர் நவகண்டம் கொடுக்க அடுத்தவர் அரிகண்டம் கொடுக்கிறார். நவகண்டம் என்பது உடலின் ஒன்பது பாகங்களை தானே அரிந்து கொற்றவைக்கு பலியிடுவது. இதுவாவது தேவலாம் - அரிகண்டத்தில் தன் கழுத்தை தானே பளிச்சென்று வெட்டிக்கொண்டு பலியாகவேண்டும் ! மார்க்கோ போலோ தன்னுடைய பயண அனுபவங்களில் தமிழரின் இந்தப் பழக்கத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இடையில் ஒரு கோஷ்டி ஏணியை எடுத்துக் கொண்டு விமானத்தில் ஏறியிருந்தது.

அடக்கடவுளே! இதென்ன வானர வேலை ? என்றேன்.

"அம்மையப்பரை தரிசனம் செய்ய வேண்டாமா ? வாருங்கள் !" என்று அழைத்துச் சென்றார் டாக்டர்.

மேலே ஏறினால்.... அர்த்த மண்டபத்தின் மேல் புனையப்பட்டிருந்த தட்டோடுகள் வஞ்சனையில்லாமல் அடித்துக்கொண்டிருந்த வெய்யிலில் பழுக்கச் சூடேறியிருந்தன ! வெப்பம் தாங்காமல் ஆளாளுக்கு நடராஜ நர்த்தனம் புரிய ஆரம்பித்துவிட்டோம். இரக்கம் மேலிட்டு டாக்டர் சில பனை ஓலைகளை வீசியெறிய அதற்கப்புறம்தான் அந்த சகிக்கமுடியாத நடனம் ஒருவாறு நின்றது.

அப்படியே விமானத்தின் அடித்தளத்தை நோக்குங்கள் என்றார் டாக்டர்.

நோக்கினோம். நோக்கியது நோக்கியபடியே நின்றோம்.

தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் கதைதான்.

இதென்ன ? கையிலாயத்தில் வீற்றிருக்கும் மாதொருபாகரான அம்மையப்பர் இங்கு எங்கு முளைத்தார் ? இதை சிற்பமென்கிறீர்களா என்ன ? ஐயோ ! நம்பமுடியவில்லையே ! எதற்கும் தொட்டுப்பார்த்துவிடுங்களேன் ! நிஜமாய் வந்திருந்தால் மீண்டும் இதே தேசத்தில் இதே சோழநாட்டில் புல்லாகவோ மரமாகவோ முளைக்க வரம் கேட்போமென்று அலறினோம்.

மாதொரு பாகரான அம்மையப்பர்


"உணர்ச்சி வசப்படாதீர்கள் - இந்த விமானம் பிற்காலத்தில் சுதையால் மூடப்பட்டு வெகுகாலத்திற்கு வெளிச்சம் படாமலே இருந்தது. நானும் குடவாயில் பாலு முதலான மற்ற ஆய்வாளர்களும் செய்த கடும் முயற்சியின் பயனாகத்தான் இது வெளிச்சத்திற்கு வந்தது. பலகாலம் சுதைக்குள் இருந்ததால் இது unspoilt beauty. அதனால்தான் இத்தனை அழகு" என்று விளக்கினார் டாக்டர்.

நெருங்கலாமா ? என்று கேட்டோம்.

ஆஹா - தொட்டுத் தொட்டு தடவியே பார்க்கலாம் என்றார் டாக்டர்.

அவ்வளவுதான் - அத்தனை பேரும் கொதிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாது மாதொருபாகரை நெருங்கினோம். புகைப்படத்தைப் பாருங்கள். வெய்யிலில் நிற்பதுமாதிரியா தெரிகிறது ? ஏதோ கைலாஸத்தையே பூவுடலோடு அடைந்ததைப்போல் அத்தனை பெருமிதம் !

மாதொரு பாகரான அம்மையப்பருடன் நமது குழு


மனமின்றி கீழே இறங்குகையில் ரிஷபாரூடர் (நந்தியணுக்கர்). இதிலும் சிற்பியின் கைவரிசை. பசு வாஞ்சையுடன் பெருமானைத் தொட்டுக்கொண்டிருக்கும் அற்புதத்தை கவனியுங்கள்.

இதில் புகைப்படத்தில் சரிவர தெரியாத ஒரு ஆச்சரியம் உள்ளது. பசுவின் நாவைச்சுற்றி ஓட்டை. அதாவது நாக்கு மட்டும் நீட்டிக்கொண்டிருக்கிறது. முன்புறமும் பின்புறமும் கல் செதுக்கப்பட்டுவிட்டது. எத்தனை துணிகரமான வேலையென்று பாருங்கள். சற்று பிசகினாலும் கல் உடைந்து நாவு மூளியாகி மொத்த சிற்பமும் வீணாகிவிடும் சிற்பி அசரவேண்டுமே - ம்ஹூம் !

ரிஷபாந்திகர் (நந்தியணுக்கர்) - பசுவின் நாக்கை கவனிக்க


ஒருவழியாய் கருவறைக்குள் நுழைந்தோம்.

அந்தகாரத்தில் உச்ச நிலை மோனத்தில் சிவம் நின்றது.

வந்தாயா ? பார்த்தாயா ? அழகில் இறை உண்டு. எல்லா அழகும் இறையின் பரிமாணங்களே. இதை உணர்ந்தவன் என்னை உணர்கிறான். ஆசிகள் ! சென்றுவா ! என்றது.

அர்த்த மண்டபத்தின் இருட்டில் நாட்டிய ஒலி கேட்டது.

"தித்தித்தை ! தித்தித்தை !" என்று சலங்கையும் ஜதிசப்தமும் விடாது கேட்டன. அதனைத்தொடர்ந்து கல் பொளிக்கும் உளியோசையும் கேட்டது.

டார்ச் வெளிச்சத்தில் அந்த மங்கையைப் பார்த்தோம்.

டார்ச் வெளிச்சத்தில் ஆடல் மங்கை


தேவரடியாள். விதவிதமான கரணங்களை அவள் ஆடிக் காண்பிக்க சிற்பி அவற்றை அப்படியே கல்லில் நிரத்தரமாக்கிவிடுகிறான்.

காலப்போக்கில் அந்தக் கோயிலைக் கட்டிய அரசன்கூட அழிந்துவிட அந்த தேவரடியாள் மட்டும் நிரந்தரமாய் சிவத்துக்கருகில் நிலைத்துவிட்டாள்.

கற்கள் சாதாரணமாய் பேசுவதில்லையென்று சொல்வார்கள். ஆனால் புள்ளமங்கையில் அந்த சிற்பம் வடிக்கப்பட்ட கற்கள் அன்று எங்களுடன் பேசின.

வாய் வார்த்தையால் பேசுவது மட்டும்தான் பேச்சா ? உணர்ச்சிகளால் பேச முடியாதா ? அந்தக் கற்கள் நிச்சயம் பேசின. அவற்றை வடித்த சிற்பிகளைப் பற்றிப் பேசின. அந்த அழகுக்கு மயங்கி அங்கே நிரந்தரமாய் குடிகொண்ட இறை பற்றி பேசின.

சிறியேனான என் எழுத்துக்களுக்கு அவற்றையெல்லாம் எடுத்தியம்புவது சாத்தியமா என்ன ?

எத்தனையோ பக்கங்கள் எழுதிவிட்டேன். ஆனால் மனம் நிம்மதியடையவில்லை. நாங்கள் அடைந்த அனுபவத்தில் ஒருசிறிதைக்கூட என்னால் சரிவர பகிர்ந்துகொள்ள முடியவில்லையென்றே நினைக்கிறேன்.

என் வார்த்தைக்களுக்கு அந்த சிற்பியின் அமரத்துவமில்லை.

கால தேச மாற்றங்களில் நான் காணாமல் போய்விடுவேன். என் எழுத்தும் காணாமல்போகலாம். புள்ள மங்கைகூட பல மாற்றங்களுக்கு
உள்ளாகலாம்.

ஆனால் அந்த தெய்வீக சிற்பிகளின் படைப்பு அழியாது.

ஏதோ ஒரு பாக்கியத்தால் அடுத்த ஆயிரம் வருடங்கள் கழித்து எவனாவது அந்தக் கோயிலைக் கண்டால் அவனும் என்னைப்போலவே பொங்கிப் பொங்கி எழுதுவான்.

தலைப்பு சற்று மாறியிருக்கும் - இரண்டாயிம் வருஷத்துப் புன்னகை என்று.

ஆனால் அந்த தெய்வீகப் புன்னகை ?

அப்படியேதான் இருக்கும் - புதுமெருகழியாமல். அன்றலர்ந்ததைப்போல.

(புள்ளமங்கை பயணம் நிறைந்தது)


this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.