http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 22

இதழ் 22
[ ஏப்ரல் 16 - மே 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழகத் தேர்தல்
பாராட்டுவோம்
வரலாற்றின் வரலாறு - 2
Perspectives On Hindu Iconography
கல்வெட்டாய்வு - 15
குடும்பில் குடவோலை
தரிசனமான தக்ஷ¢ணமேரு
ஆயிரம் வருஷத்துப் புன்னகை - 2
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 9
இதழ் எண். 22 > கலையும் ஆய்வும்
குடும்பில் குடவோலை
ச. கமலக்கண்ணன்
"பேரன்பார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே! இன்னும் சற்று நேரத்தில், சேவூர் முதலான போர்க்களங்களில் காட்டிய வீரத்தால், சக்கரவர்த்திகளின் ஆசி பெற்ற உங்கள் வேட்பாளர் சாகாவரம் பெற்ற சத்தியவான் பஞ்சவன் பிரமாதிராயர் ஓட்டுக் கேட்டு உங்கள்முன் வர இருக்கிறார்! அவருக்கு உங்கள் பொன்னான வாக்குகளைப் புலிச் சின்னத்தில் இட்டுப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க, தெரிஞ்ச கைக்கோளப் படையின் வலங்கைப் பிரிவின் முப்பத்தேழாவது வட்டம் சார்பில் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்."

சோழர் காலத்தில் இப்படியெல்லாம் வாக்குச் சேகரித்துத் தேர்தல் நடத்தி இருப்பார்களா? கல்வெட்டுகளின்படி பார்த்தால், நாம் நடத்துவதைப் போன்றதொரு தேர்தல் நடைபெற்றதில்லை. அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கக் குடவோலைமுறை என்றொரு வழியைப் பின்பற்றியிருக்கிறார்கள். ஆனால், நம் கதையாசிரியர்களும், சில அரைகுறை வரலாற்றாய்வாளர்களும் சோழர்களின் பெருமைகளை உலகுக்கு எடுத்துக் கூறுவதாக எண்ணிக்கொண்டு, இப்படியொரு தகவலைப் பரப்பி, அதைப் படிக்கும் பலரும் உண்மையென்றே நம்பி வந்திருக்கின்றனர். கதாசிரியர்களையாவது விட்டு விடலாம். அது அவர்களின் கற்பனைச் சுதந்திரம். கதை சொல்லும் திறத்தால், அக்கதையை உண்மையென்று நம்பி, 'சிவகாமி இங்கெல்லாம் நாட்டியமாடியிருப்பாளா?', 'ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டது கீழ்க்கடம்பூரா அல்லது மேலைக்கடம்பூரா?' என்றெல்லாம் வாசகர்கள் மண்டையை உடைத்துக்கொண்டால், அது படிப்பவர்களின் தவறுதான். ஆனால், வரலாற்றை எழுதுகிறேன் பேர்வழி என்று அரைகுறையாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களை வெளியிடுவதும், பரபரப்புக்காக அவசரப்பட்டு ஒரு செய்தியை வெளியிட்டுவிட்டுப் பிறகு அதையே உண்மை என்று சாதிப்பதும், மக்களுக்கு வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆர்வத்தையும் குலைத்துவிடும்.

நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது, உத்திரமேரூர்க் கல்வெட்டுகளைப் பற்றி ஒரு பாடம் இருந்தது. அதை எங்கள் தமிழாசிரியர் முதல் பத்தியில் சொன்னது போலத்தான் சுவாரசியமாகப் பாடம் நடத்தினார். அதை முழுக்க உண்மையென்று நம்பினோம். இது மட்டுமல்ல. தஞ்சை இராஜராஜீசுவரத்தைப் பற்றி எத்தனை பொய்யான தகவல்கள்! எல்லாவற்றையும் உண்மையென்று நம்பிவிட்டு, பிறகு உண்மையில்லை என்று தெரியவரும்போது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சோழர்களையும் இராஜராஜீசுவரத்தையும் பற்றி எந்தக் கதையையும் ஊகங்களையும் சொல்ல வேண்டியதில்லை. ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மட்டும் சொன்னாலே போதும்! அவற்றின் பெருமைக்கு எந்தநாட்டுச் சரித்திரமும் ஈடாகாது.

இப்படியெல்லாம் இருக்க, உத்திரமேரூர்க் கல்வெட்டைத் தவறாகப் பொருள் கொள்வதற்கு என்ன காரணம்? அதில் பயின்று வரும் சில சொற்கள்தான். உதாரணமாக 'குடும்பு' என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். முதன்முதலில் இக்கல்வெட்டைக் கண்டுபிடித்து, அதன் பொருளை விளக்கிச் சொன்ன அந்த மகானுபாவர் யாரென்று தெரியவில்லை. குடும்பு என்ற சொல்லுக்கு 'வட்டம்' (இன்றைக்கு இருக்கும் Ward என்னும் அர்த்தத்தில்) என்று பொருள் கூறிவிட்டார். அவரைப் பின்பற்றிய மற்ற ஆய்வாளர்கள், பாடப்புத்தகங்கள் ஆகியவை அதையே உடும்பாகப் பிடித்துக் கொண்டுவிட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரில் முனைவர். எ. சுப்பராயலு அவர்களின் தலைமையில் 'கல்வெட்டுச் கலைச்சொல்லகராதி' ஒன்று தயாரிக்கப்பட்டது. இதுவரை அரசால் படியெடுக்கப்பட்ட அனைத்துக் கல்வெட்டுகளிலும் வரும் சொற்களுக்கு, மற்ற கல்வெட்டுகளுடன் ஒப்புநோக்கிப் பொருள் கண்டறியப்பட்டது. அதில், குடும்பு என்ற சொல்லுக்கு, பிராமண ஊரின் விளைநிலங்களின் பாகுபாடு என்ற பொருளை அளித்துள்ளனர். அதாவது, பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊரிலுள்ள விளைநிலங்களின் பாகுபாடு. இதற்கு வலு சேர்க்கும் கல்வெட்டு,

ஆண்டு தோறும் குடும்பு மாறி இடவும்
இடும் மடத்துக் கட்டளைக்குப் பொருந்தினாரை இடவும்


(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 6, கல்வெட்டு எண் 58)

இதைத்தவிர, குடும்பாட என்றால், உழுகுடிப் பணிசெய்ய என்றும், குடும்பு என்ற சொல்லுக்குக் குடியைக் (குடும்பத்தைக்) குறிக்கும் சொல் என மதுரை தமிழ்ப் பேரகராதியும் பொருள் தருகிறது.

சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் பூலாங்குறிச்சி என்ற ஊரில் கண்டறியப்பட்ட கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் குடும்பாட என்ற சொல் பயின்று வருகிறது. மற்ற கல்வெட்டுகளில் குடும்பாட, குடும்பிட்டு, குடும்பிலார், குடும்பு செய்தார், குடும்பு வாரியம் போன்ற சொற்கள் இடம்பெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட உடையாளூர் கள ஆய்வின்போது, இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் கீழ்க்கண்ட கல்வெட்டு படியெடுக்கப்பட்டது.

இராஜராஜதேவர்க்கு யாண்டு 30வது
... ஐந்தாம் குடும்பில்
... வதிக்குக் கிழக்கு
... வாய்க்காலுக்குத் தெற்கு
... முதல் கண்ணாற்று முதல் சதிரத்து
ஐம்பத்து மூன்றாம் குடும்பில்
மூன்றாம் தரத்து நிலம்


ஆக, குடும்பு என்பது வார்டு அல்ல. ஒரு வகையான விளைநிலத்தின் பாகுபாடு என்பது தெளிவாகிறது. இதன் பின்னரும் இன்னும் சிலர் ஊடகங்களிலும் இணையத்திலும் (சமீபத்திய சன்டிவியின் தேர்தல் கவியரங்கத்தில் கலைஞர் உட்பட) ஜனநாயகத் தேர்தல் முறை எனக்கூறி வருகிறார்கள். உத்திரமேரூர்க் கல்வெட்டு அப்படி என்னதான் சொல்கிறது என்பதையும் காண்போம்.

ஸ்வஸ்திஸ்ரீமதுரை கொண்ட கோப்பரகேசரிவன்மர்க்கு யாண்டு பனிரண்டாவது உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம் இவ்வாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீமுகப்படி ஆணை

இதனால் தத்தனூர் மூவேந்த வேளான்இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலும் சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்

த பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானிலத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன் மனையிலே அ

கம் எடுத்துக் கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணர் என்னப் பட்டி

இருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்ம சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம் செய்தொழிந்த பெருமக்களுக்கு

அணைய பந்துக்கள் அல்லாதாராய் குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு

பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிருவரும் சவத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோ

லை வாங்கி பன்னிருவரும் தோட்டவாரியம் ஆவதாகவும் நின்ற அறுகுட வோலையும் ஏரி வாரியம் ஆ

வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும் முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இஇடும் வாரியங்கள் இவ்வியவஸ்தை ஓலைப்படியே குடும்புக்கு குடவோலையிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு

ம் குடவோலையில் பேர் எழுதி இடப்படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது குடவோலையிட்டு சேரியால் ஒருத்தரை குடவோலை பறித்து பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவாரவாரியம் ஆவதாகவும் அறுவர்பொன்வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத

வாரியங்கள் ஒருகால்செய்தாரை பின்னை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெறாதாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்னும் குடவோலை வாரியமேய் இடுவதாக தேவேந்திரன் சக்கரவர்த்தி ஸ்ரீவீரநாராயணன் ஸ்ரீபராந்தகதேவர் ஆகிய பரகேசவர்மர் ஸ்ரீமுகம் அருளிச் செய்து வரக்காட்ட

ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர்மூவேந்தவேளான் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கெட்டு சிஷ்டர்வர்த்தித்திடுவாராக வியவஸ்தை செய்தோம் உத்திரமேரு சதுர்மேரு சதுர்வேதி மங்கலத்துக்குச் சபையோம்.


(இந்தியத் தொல்லியல் துறை ஆண்டறிக்கை 1904-1905, பக்கம் 136-138)

இக்கல்வெட்டு, முதலாம் பராந்தகச் சோழர் (மதுரை கொண்ட பரகேசரியென்றாலே, முதலாம் பராந்தகர்தான்) காலத்தில் வெட்டப்பட்டது. இது வெட்டப்பட்டதன் நோக்கம், மூன்றுவகை வாரியங்களான சம்வத்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம் முதலானவற்றுக்கு வாரியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளைக் கூறுவது. அது எப்படிப்பட்ட முறை? உத்திரமேரூர்ச் சதுர்வேதிமங்கலத்தை முப்பது குடும்புகளாகப் பிரித்து, ஒவ்வொரு குடும்பிலும் தகுதியுள்ளவர்களின் பெயர்களை ஓலையில் எழுதி, ஒரு குடத்திலிட்டு, கள்ளம் கபடமற்ற பாலகன் (ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு பாலனைக் கொண்டு, ஆறு = அழுக்காறு) ஒருவனை எடுக்கச்சொல்லி, 30 பேரில், 12 பேர் சம்வத்சர வாரியத்தலைவர்களாகவும், 12 பேர் தோட்ட வாரியத்தலைவர்களாகவும், மீதமுள்ள 6 பேர் ஏரி வாரியத்தலைவர்களாகவும் பணியமர்த்தப்படுவர். சதுர்வேதிமங்கலத்தைச் சுற்றியிருக்கும் சேரிக்கு (புறநகர்க் குடியிருப்பு) ஒருவராக, 12 சேரிகளைச் சேர்ந்த 12 பேரையும் இதே குடவோலை முறையில் தேர்ந்தெடுத்து, அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, 6 பேர் பஞ்சவார (ஒரு வகையான வரி) வாரியத்துக்கும் 6 பேர் பொன் வாரியத்துக்கும் தலைவர்களாக ஆகவேண்டும். இங்கு பொன்வாரியம் என்பது எதைக் குறிக்கிறது என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. பொற்கொல்லர்களுக்கான வரியாக இருக்கலாம் அல்லது பொன்னை வாங்கும்போது செலுத்தும் வரியாக இருக்கலாம்.

இதில் போட்டியிடுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்?

1. குறிப்பிட்ட அளவு நிலம் வைத்திருப்பவர்கள் (கானிலத்துக்கு மேல் இறை நிலம் உடையான்)

2. சொந்த வீட்டில் குடியிருப்பவர்கள் (தன் மனையிலே அகம் எடுத்துக் கொண்டு இருப்பானை)

3. முப்பதிலிருந்து அறுபது வயதுக்குட்பட்டவர்கள் (அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார்)

4. வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவர்கள் (வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணர்)

5. உடல்வலிமையும் உள்ளவலிமையும் உள்ளவர்கள் (அர்த்த சௌசமும் ஆத்ம சௌசமும் உடையராய்)

6. இதுவரை வாரியத்தலைவராக இருந்திராதவர் (வாரியம் செய்திலாதார்)

7. அவ்வாறு வாரியம் செய்தவர்களுக்கு உறவினராக அல்லாதவர் (வாரியம் செய்தொழிந்த பெருமக்களுக்கு அணைய பந்துக்கள் அல்லாதாராய்)

உத்திரமேரூர்ச் சதுர்வேதிமங்கலத்தில் மட்டும்தான் இப்படிப்பட்ட தேர்தல் முறை இருந்ததா? இல்லை என்கிறார், காலஞ்சென்ற டாக்டர். கிஃப்ட் சிரோமணி அவர்கள். அதே காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்திலும் (சுரத்தூர் நாட்டு, புலியூர்க் கோட்டத்து, ஜெயங்கொண்ட சோழ மண்டலம்) கிராம சபையினரைத் தேர்ந்தெடுக்க இம்முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார். இந்தியத் தொல்லியல் துறை ஆண்டறிக்கை 1932-33, பக்கம் 75ல் உள்ள கல்வெட்டைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

The country was divided and subdivided into smaller units and Taampuram was located in Surattur nadhu, a subdivision of Puliyur kottam in Jeyankonda sola mandalam. The temples priests lived in villages called Chadurvedimangalam and there a lottery system (kudavolai) was used to select the village committee (sabhai). Some of the villages were renamed after the king but in most cases the earlier names prevailed.

இங்கு, கோயில் அர்ச்சகர்கள் குடியிருப்பைத்தான் சதுர்வேதிமங்கலம் என்று பெயர் எனும்படி பொருள் கொண்டிருக்கிறார் டாக்டர். கிஃப்ட் சிரோமணி. ஆனால், சதுர்வேதிமங்கலம் என்பது, நான்கு வேதங்களிலும் வல்லவர்களாக இருப்பவர்களுக்குக் கொடையளிக்கப்பட்ட கிராமம் என்பதே சரி. அர்ச்சகர்கள் மட்டுமின்றி, பிற தொழில்கள் புரியும் பிராமணர்களும் வசித்திருக்க வாய்ப்புண்டு.

ஆக, சோழர் காலத்தில் பின்பற்றப்பட்ட குடவோலை முறைக்கும், தற்போதுள்ள தேர்தல் முறைக்கும், அதிகாரிகளை/ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பதைத் தவிர, துளியும் தொடர்பில்லை என்பது புலனாகிறது. ஆனால், யோசித்துப்பார்த்தால், இப்போது இருப்பதைவிட, சிறந்ததொரு முறை என்பது தெரியவரும். அன்றைய சமுதாயத்தின் பக்குவப்பட்ட முதிர்ச்சி புலப்படும். இன்று தேர்தலில் நிற்க, வயது ஒன்றைத்தவிர, வேறெந்தத் தகுதியும் தேவையில்லை. குறிப்பிட்ட அளவு நிலம் வைத்திருப்பவர்களும் சொந்த வீட்டில் குடியிருப்பவர்களும் மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படமாட்டார்கள் என்று அக்காலத்தில் எண்ணியிருந்திருக்க வேண்டும். வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்பது ஒரு கல்வித்தகுதியாக இருந்திருக்கிறது. அவற்றைக் கற்றவர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியுமென விதித்திருப்பதால், வேதம் கற்காத பிராமணர்களும் அக்காலத்தில் இருந்தனர் என்பது தெரிய வருகின்றது. ஆக, சதுர்வேதிமங்கலத்தில் அர்ச்சகர்கள் மட்டுமே இருந்தனர் எனச்சொல்ல முடியாது.

ஒருவரே எத்தனைமுறை வேண்டுமானாலும் வாரியத்தலைவராக ஆகலாம் என அதிகாரத்தை ஏகபோக உரிமையாக்காமல், ஒருமுறைக்கு மேல் நிற்க முடியாமல் செய்திருப்பது நல்லது. இதனால், அனுபவக்குறைவு இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில், மற்ற பிற தகுதிகளும், முன்னர் தலைவராக இருந்தவரின் வழிகாட்டலும் இவ்வனுபவக்குறைவை ஈடுசெய்யும். முன்பு தலைவராக இருப்பவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, தற்போதைய தலைவரிடம் தோற்றால்தான், போட்டி மனப்பான்மையினால் ஒத்துழைக்காமல் போக வாய்ப்புண்டு. எனவே, இதிலும் சிக்கல் இல்லை. ஏற்கனவே தலைவர் பதவியை அனுபவித்தவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருப்பது ஒரு தகுதிக்குறைவு என்பதால், வாரிசு அரசியல் தடுக்கப்படுகிறது.

இன்றைய பல பிரச்சினைகளுக்கு வரலாற்றில் தீர்வு இருப்பதைப் பாருங்கள்! எந்த ராஜா எந்தப் போரில் எந்த ஆண்டு ஈடுபட்டான் என்ற புள்ளி விவரங்களைப் படிப்பது மட்டுமே வரலாறு அல்ல. சமூக வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் வழிகாட்டிதான் வரலாறு. அலுவலகத்தில் வேலை செய்யும்போது அனுபவம் உதவுவதைப் போலத்தான். அனுபவம் என்பது ஒரு தனிமனிதனின் வரலாறு. வரலாறு என்பது ஒரு இனத்தின் அனுபவம். முடிந்த கதையைப் படித்து என்ன ஆகப்போகிறது என எண்ணாமல், வரலாற்றைப் படித்துப் பயன்பெறுவோமாக!

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.