![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 22
![]() இதழ் 22 [ ஏப்ரல் 16 - மே 15, 2006 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
கல்வெட்டாய்வு
கல்வெட்டுகளில் ஊரோம், சபை, என்றெல்லாம் ஊர் நிர்வாகத்தைக் குறிப்பிடுவதையும், சபை என்பது பல்வேறு குழு அல்லது வாரியங்களை தன்னகத்தே கொண்டது என்றும், ஒரு சிவப்பிராமணனின் விண்ணப்பத்தின் பேரில் ஊர் சபையினர் எவ்வாறு அணை உடைந்து நதிநீர் பெருகியதால் பாழ்பட்ட கோயில் நிலத்திற்கு ஈடாக நல்ல விளை நிலத்தினை வழங்க உத்தரவிட்டனர் என்பது குறித்தும் பார்த்தோம்.
ஊரோம், சபையோம் என்ற சொற்கள் பொதுவாக ஊர் நிர்வாகத்தைக் குறிப்பிடப் பயன்பட்டாலும், அவற்றால் நிர்வாகம் செய்யப்படும் ஊர்வகைகள் மாறுபடுகின்றன. பொதுவாக மகாசபை, பெருங்குறி மகாசபை என்று குறிப்பிடப்படும் சபைகள் பிரமதேயம் எனப்படும் பிராமணக்குடியிருப்புகளை நிர்வகித்தன. ஊரோம் என்று குறிப்பிடப்படும் சபை, வெள்ளான் வகை ஊர்கள் அதாவது பயிர் செய்து வாழும் வெள்ளாளர்கள் குடியிருக்கும் ஊர்களை நிர்வகித்தனர். நாட்டார் எனப்படுவர்கள் நாடுகளை நிர்வகித்தனர். நகரங்களை நகரத்தார் நிர்வகித்தனர். ஊர் நிர்வாகத்தினரின் செயல்பாடுகள் எத்தகையதாய் இருந்தது? சபையினர் தங்கள் ஊர் கோயிலின் நன்மைக்காக கூடி ஆணை பிறப்பித்தனர் என்று அறிந்துகொண்டோம், ஆயினும் அவர்கள் ஊரின் நன்மைக்காக ஏதேனும் செய்தனரா? பல கல்வெட்டுகள் இக்கேள்விக்கு விடை தருகின்றன. குறிப்பாக திருவலஞ்சுழி கல்வெட்டுகள் அந்நாளைய சபை நிர்வாகம் பற்றிய பல செய்திகளை நமக்குத் தருகின்றன. வலஞ்சுழி கல்வெட்டுகளில் முப்பத்தைந்து மங்கலங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மங்கலங்களை நிர்வகித்த பெருங்குறிமஹாசபைகள் பற்றிய செய்திகள் இக்கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டுகளில் மூன்றாம் இராஜராஜர் காலத்திய கல்வெட்டொன்று விருதராஜ பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு துர்க்கையார் அகரமான இராஜேந்திரசோழச் சதுர்வேதிமங்கலம் என்ற கிராமத்தில் அவ்வூர் சபை கூடி, தங்கள் ஊர் நெடுங்காலம் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்ததால் (கல்வெட்டு வரிகள்: நம்மூர் நெடுங்காலம் உபத்திரமங்கள் பட்டும் பழிபட்டும் நோவுபட்டும் வருகையாலே), அதனை நினைத்து வருந்தி அத்துன்பங்களை களைவதற்காகவும் அவ்வூர் மேம்படவும் பல அறக்கட்டளைகள் நிறுவினார்கள். இக்கிராமத்துக்கு இரக்ஷாத்தமாகவும் விசையாத்தமாகவும் என்ற கல்வெட்டு வரிகள் மூலம் இச்செய்தியினை அறிகிறோம். மேலும் அவ்வூர் சபையினர் மன்னரின் நலத்திற்காகவும் அறச்செயல் செய்தமையை அக்கல்வெட்டில் வரும் 'உலகுடைய பெருமாள் திருமேனி கல்லியாணத் திருமேனி ஆகவும்) என்ற சொற்றொடர் தெரிவிக்கின்றது. மூன்றாம் இராஜராஜரின் மற்றுமொரு கல்வெட்டு, விக்கிரம சோழ வளநாட்டு ஸ்ரீபராந்தகச் சதுர்வேதிமங்கலத்து கிராம கூட்டப்பெருமக்கள் அவ்வூர் நலத்திற்காகவும் அரசரின் நலத்திற்காகவும் ஆற்றிய அறச்செயலைப் பற்றிய செய்தியைத் தருகிறது. 'நம் ஊர் நெடுநாள் பட அழிந்து பயிர் ஏறாது . . . அழிந்தமையில் நம் ஊரில் சர்வ உபத்திரமங்கள் சமிக்கவும் உலகுடைய பெருமாள் திருமேனி கல்லியாண திருமேனியாகவும் விசையாத்தமாகவும் நம் ஊர்க்கு இரக்ஷாத்தமாகவும்' என்ற வரிகளின் மூலம் இச்செய்தியினை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இக்கல்வெட்டில் திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார் கோயில் பூசைக்காகவும் பணியாரப் படையலுக்காகவும் சிறிது நிலத்தை ஊர்கீழ் இறையிலியாகத் (அதாவது வரி இல்லாத நிலமாக) தந்தனர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கல்வெட்டுகளும், ஆனாங்கூரைச் சேர்ந்த ஆண்டார் அரனென்பவரின் வழிகாட்டுதல்களை சபையினர் ஏற்று, ஊரின் நலத்திற்காக செயல் புரிந்ததை தெரிவிக்கின்றன. இதன் மூலமாக ஊர் சபையினர் அவ்வூரில் உள்ள (அல்லது வேற்றூரைச் சேர்ந்த) அனுபவம் வாய்ந்த நல்லவர்களின் யோசனைகளை செவிமடுத்து அவற்றை செயல்படுத்தவும் செய்கின்றனர் என்பது தெளிவாகிறது. ஊரின் நன்மைக்காக செயல்படும் சபையினர் அத்தகைய யோசனைகளையும் தீர ஆராய்ந்து, அவை நல்ல யோசனைகள்தான் என்று தெளிந்த பின்னரே செயல்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு கோயில் நன்மைக்காகவும் ஊர் நன்மைக்காகவும் செயலாற்றும் சபையினர், எத்தகைய பொறுப்பும் அதிகாரமும் படைத்தவர்களாக இருந்தனர்? அவர்களின் ஆணைகளை ஊரார் மதித்து ஏற்று செயல்பட்டனரா? இத்தகைய கேள்விகளுக்கும் கல்வெட்டுகளே பதிலளிக்கின்றன. திருவலஞ்சுழி கோயிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் பராந்தக சதுர்வேதிமங்கலத்து கூட்டப்பெருமக்களின் ஆணையைத் தெரிவிக்கின்றன. இவ்வாணைகளில் இக்கூட்டப்பெருமக்கள் அவ்வூர் கணக்கர்களுக்கு உத்தரவிட்டுள்ளதைக் கொண்டு அவர்கள் ஊர் சபையினரே என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு ஊருக்கும் கணக்கர்கள் இருந்ததையும் நாம் கல்வெட்டுகளின் வழி அறிகிறோம். அதில் ஒரு கல்வெட்டின் மூலம் வெள்ளைப்பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமாக ஊர்கீழ் இறையிலியாக இருந்த நிலத்துண்டு ஒன்றுக்கு மாற்றாக அவ்வூர் சபையினர் வேறு நிலத்துண்டினை அளித்தமையும், அந்நிலம் தொடர்பான வரியினங்களை நேர்செய்தமையும் தெரியவருகிறது. 'இந்நிலத்தால் சில்வரி பெருவரியும் சபாவிநியோகமும் நினைப்பிட்டு வரும் கடமை குடிமை உள்ளிட்டனவும் புஞ்சை நியோகப்படியே செய்யக் கடவதாகவும் சொன்னோம்' எனும் கல்வெட்டுத் தொடர் மூலம் வரியினை நேர்செய்த செய்தியை அறிகிறோம். வரியினை நேர்செய்தமை ஏனென்றால் மாற்றாக தரப்பட்ட நிலங்கள் 'வாம்பறைப் பாழாகவும் புன்பயிரிடு நிலமாகவும்' இருந்ததால் தான் என்பதும் அக்கல்வெட்டின் வழி அறிகிறோம். மூன்றாம் இராஜராஜனின் பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று, அவ்வூர் சபையினர் மன்னரின் பதினேழாம் ஆட்சியாண்டில் வெள்ளைப்பிள்ளையார் கோயிலுக்குக் கொடுத்த திருநாமத்துக்காணி நிலப்பகுதிக்கு மாற்றாக அதே அளவு விளைச்சல் தரத்தக்க பல்வேறு ஊர்களிலிருந்த நிலத்துண்டுகளை தொகுத்து வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டுகளின் வழி, ஒரு நிலத்திற்கு மாற்றாக வேறு நிலத்துண்டுகளை அளிக்கும் உரிமையும், அந்நிலத்திற்கான வரியினங்களை நீக்கும் அல்லது நேர் செய்யும் உரிமையும், கணக்கர்களுக்கு உத்தரவிடும் அதிகாரமும் சபையாரிடம் இருந்ததை அறிய முடிகிறது. இத்தகைய அதிகாரங்களை அவர்கள் கோயிலின் நன்மைக்காகவும், ஊரின் நன்மைக்காகவும் உபயோகித்ததையும், ஊரில் உள்ள நல்லவர்களின் யோசனைகளை ஏற்று செயல்பட்டமையையும் அறிந்துகொண்டோம். ஊர்சபையினரின் செயல்பாடுகள் குறித்து மேலும் சில செய்திகளை அடுத்த இதழில் காண்போம். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |