http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 23

இதழ் 23
[ மே 16 - ஜூன் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு
வரலாற்று வரைவுகள்
பழுவூர் - 11
வரலாற்றின் வரலாறு - 3
நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில் கட்டமைப்பும் கல்வெட்டுகளும்
தன்னிகரில்லாத தமிழ்
Perspectives On Hindu Iconography
சத்ருமல்லேஸ்வராலயம் - I
சிகரத்தை நோக்கி...
கடல்மல்லை ஜப்பானிலிருந்தால்...
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 10
இதழ் எண். 23 > கலைக்கோவன் பக்கம்
வரலாற்றின் வரலாறு - 3
இரா. கலைக்கோவன்
சமுதாயச் சீர்திருத்தப் பணிகளில் ஒன்றியிருந்த காலத்திலும் இராசமாணிக்கனார் தமிழ்த்தொண்டை மறக்கவில்லை. வண்ணாரப்பேட்டையில் தனலட்சுமி தொடக்கப்பள்ளியில் தொடங்கிய பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடர்ந்து நிகழ்ந்தது. மாணவர்களுக்கும் ஆர்வமுள்ள மக்களுக்கும் அங்கு அவர் தமிழ் வகுப்புகள் நடத்தினார். இந்நற்பணிகளுக்குச் சில அன்பர்கள் தொண்டர்களாக விளங்கினர். சொந்தப் பணத்தைச் செலவு செய்து இவ்வகுப்புகளை நடத்தி ஏழை எளியவர்களுக்குக் கல்வித் தொண்டு புரிந்த இராசமாணிக்கனார், 'இளம்பருவத்தில் கல்விபெற நான் பட்ட துன்பங்களே இப்பணியைத் தொடங்கவும் தொடர்ந்து நடத்தவும் என்னை ஊக்கின. நல்ல உள்ளம் படைத்த இளைஞர்கள் எனக்குத் துணைநின்றனர். மனம் இருந்ததால் பணம் ஒரு பொருட்டாக அமையவில்லை' என்று தம் வாழ்க்கைக் குறிப்பில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே காலத்தில் இந்தி எதிர்ப்பு அறப்போராட்ட வீரர் சுவாமி அருணகிரிநாதர், பேராசிரியரின் தமிழ் வளர்ச்சிப் பணிகளைப் பயன்படுத்திக் கொண்டார். தமிழ் மாமுனிவர் அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் போல் அக்காலத்தில் சுவாமி அருணகிரிநாதர் பணி தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அரணாக இருந்தது. அருணகிரிநாதரின் ஆசிரியர் சாது நாராயண தேசிகர் மடத்தில், பேராசிரியர் பலமுறை சமயச் சீர்திருத்தப் பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராய் இருந்தபோது பச்சையப்பன் பள்ளி விளையாட்டுத் திடலில் பேராசிரியர் மயிலை. சிவ. முத்து, பேராசிரியர் பாலூர் கண்ணப்பர், சிறுவை நச்சினார்க்கினியன் ஆகியோருடன் சேர்ந்து உரையாடுவது இவர் வழக்கம். அங்குப் பேராசிரியர்கள் மே.வீ.வேணுகோபால்பிள்ளை, கா.ரா.கோவிந்தன் ஆகியோரும் வந்து சேர்ந்து கொள்வர். உரையாடல் அனைத்தும், 'மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் அமைக்கும் விதம், மாணவர்களுக்கு எது தேவை, அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள், அன்றைய தினம் தாங்கள் பாடம் நடத்திய முறை' இவைகளைப் பற்றியதாகவே இருக்கும். 'அவ்வுரையாடல்களால் பல நூல்களைக் கற்ற அறிவினைப் பெறமுடிந்தது' என்று குறிப்பிட்டுளார் சிறுவை நச்சினார்க்கினியன்.

1947 ஜூலை முதல் 1953 ஜூலை வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய இராசமாணிக்கனாரை அப்பொறுப்பிற்குப் பணியமர்த்தியவர் அப்போது அக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் சி.ஜகந்நாத ஆச்சாரியார் ஆவார். அப்பெருந்தகை அதுபற்றிக் குறிப்பிடும்போது, 'பண்டிட்டிற்கு அப்போது சம்பள கிரேடு ஆரம்பம் 100 ரூபாய்தான். அவர் தகுதி நோக்கி மூன்று இன்கிரிமெண்ட் போட்டு 115 ரூபாய் அவருகு ஆரம்பத்தில் கொடுக்கும்படி பரிந்துரை செய்திருந்தேன். என் பரிந்துரையின்படியே மேன்மையான நிருவாகத்தார் 115 ரூபாய் அவருக்கு ஆரம்பத்தில் கொடுத்தார்கள்.

அக்காலத்துக் கல்லூரிகளில் வேலைசெய்த தமிழ்ப் பண்டிட்டுகளில் யாரும் தொடக்கத்தில் இந்தச் சம்பளம் வாங்கியதில்லை. எங்கள் கல்லூரியில், ஆறு ஆண்டுகள் (1947-1953) பணியாற்றினார். அங்குப் பணியாற்றும்போது இவர் சம்பளத்தை ஓரிரு ஆண்டுகளில் 130 ரூபாயாக உயர்த்தினோம். இவர் டாக்டர் பட்டம் பெற்றவுடன் இவர் சம்பளம் அந்தக் கிரேடின் முடிவான 150 ரூபாயாக ஆக்கப்பட்டது. இப்படிச் சம்பளத்தில் Meteoric rise ஆன வேறொருவரைஅ ஆசிரியர் துறையில் நான் கண்டதில்லை.

இராசமாணிக்கனார் கல்லூரிக்கு வந்தால், 'தாம் உண்டு தம் வேலை உண்டு' என்றிருப்பார். கடமைகளைத் தவறாமல், செவ்வனே செய்துவிடுவார். எல்லாவற்றிலும் ஒழுங்கு. வகுப்பிற்குச் சென்றால் மாணவர் முன்னரே வந்து காத்துக் கிடப்பர். நகைச்சுவை ததும்ப மாணவர் உள்ளம் கவரும்படி பாடம் நடத்துவதில் வல்லவர். எல்லோருடனும் மதிப்புடன் பழகுபவர். ஆசிரியர் அறையில் வீண்பேச்சுக்கு இடந்தராதவர். மெதுவாகப் பேசும் இயல்பினர். ஆனால், பேச்சிலேயே நகைச்சுவை ததும்பும்படி உட்கருத்து வைத்துப் பேசுவார்' என்று கூறியுள்ளார்.

விவேகானந்தர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில்தான் 'சைவ சமய வளர்ச்சி' என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்துக்குரிய ஆராய்ச்சியைச் செய்து 1951இல் அப்பட்டத்தையும் பெற்றார். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஊர்களுக்கு நேரில் சென்று அங்குள்ள கோயில்களில் கள ஆய்வு செய்தும் தேவையான நூல்களைப் படித்தும் தெளிந்த பிறகே தம்முடைய பெரியபுராண ஆராய்ச்சி, சைவ சமய வளர்ச்சி ஆய்வுகளை முழுமையுறச் செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 'தாம் படித்த அல்லது கேட்ட செய்திகளைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து அறிந்த பிறகே அவற்றைத் தம் நூல்களில் எழுதினார். பேரறிஞர் பலரிடத்தும் அயராது சென்று கலந்துரையாடி உண்மை காணுவதில் இவர் வல்லவராய் இருந்தார்'. இத்தகு ஆய்வு நெறிமுறைகள் அவரது படைப்புகளுக்குப் பெருமதிப்பைப் பெற்றுத்தந்தன.

இருபத்தைந்து ஆண்டுக்கால சென்னை வாழ்க்கையில் (1928-1952) இராசமாணிக்கனார் ஆற்றிய பணிகளும் அடைந்த வெற்றிகளும் பெருமைக்குரியவை. பள்ளி இறுதித் தேர்வில் தேறியவராக வந்தவர், உயர்ந்த பல பட்டங்களைப் பெற்ற இடம் சென்னை. சீர்திருத்தம் பற்றிய கனவுகளோடு வந்தவர் அவற்றைச் செயற்படுத்தி வெற்றிகண்ட இடம் சென்னை. 'சமயம் போற்றுதலுக்கு உரியது; சமய ஊழல்கள் களைதலுக்கு உரியன' என்னும் எண்ணத்தோடு வந்தவர், தம்முடைய இக்கொள்கையைப் பரப்பத் தொடங்கிய இடம் சென்னை. எழுத்தில் ஆர்வத்தோடு வந்தவர், சிறந்த எழுத்தாளராக மலர்ந்த இடம் சென்னை.

நீண்ட காலம் சென்னையில் வாழ்ந்த இராசமாணிக்கனாரை 1953இல் மதுரை வரவேற்றது. மதுரையில் கருமுத்து தியாகராசர் தொடங்கிய கல்லூரிக்குத் தமிழ்த்துறைத் தலைவராகவும் தலைமைப் பேராசிரியராகவும் அவர் அழைக்கப்பட்டார். விவேகானந்தர் கல்லூரியை நீங்கிச் செல்வதற்கு முன் தமிழ்த்துறை மட்டுமின்றிப் பிற துறைப் பேராசிரியர்களும் சேர்ந்து ஒருமுகமாக ஒரு பெரும் பாராட்டினை இயல்பியல் ஆய்வுக்கூடத்தில் அவருக்கு அளித்தனர். அதில் அனைத்துத் துறைத் தலைவர்களும் அவரைப் பாராட்டிச் சிறப்பித்தனர்.

அவ்விழாவில் இராசமாணிக்கனார் வழங்கிய ஏற்புரையைப் பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் சி.ஜகந்நாத ஆச்சாரியார், 'அந்த உரையின் ஓரு பகுதி என் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை. அவர் கூறியது: 'நான் மதுரைக்குப் பேராசிரியராகப் போகிறேன். மதுரை தமிழ் வளர்த்த இடம். சங்கத்துச் சான்றோர் தமிழ் வளர்த்த பதிக்குப் போகிறேன். என் மனதில் ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், எங்கேயோ உயர்நிலைப்பள்ளியில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஊன்றி அழுந்திக் கிடந்த என்னை விவேகானந்தர் பெயர் தாங்கும் இப்பெருங் கல்லூரியில் வேலைக்கு அமர்த்தி, இப்பொழுது அனைவருமாகப் பாராட்டுவது என்னை நெகிழச் செய்கிறது. இத்தனைக்கும் என் குடும்பத்திற்கு விளக்கேற்றி வைத்தவர் நமது C.J' என்று சொன்னபோது அவர் கண்களில் நீர் நிறைந்தது. அதைக்கண்ட என் கண்களும் கலங்கின' என்று உளம் உருகக் குறிப்பிட்டுள்ளார்.

(வளரும்)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.