http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 23
இதழ் 23 [ மே 16 - ஜூன் 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
சிராப்பள்ளியிலிந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நங்கவரம். சிராப்பள்ளிக் குழித்தலைச் சாலையில் பெருகமணி வரை பயணித்து அங்கிருந்து தெற்காகத் திரும்பும் நச்சலூர்ச் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் சென்றால் நங்கவரத்தை அடையலாம். சோழர்கள் காலத்தில் நங்கை பிரமதேயமான அரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம் என்றறியப்பட்ட இந்நாளைய நங்கவரத்தில் மூன்று பழங்கோயில்கள் உள்ளன. சுந்தரேசுவரர் திருக்கோயில் சைவப் பெருமக்களுக்கும் சுந்தரராஜப் பெருமாள் கோயில் வைணவப் பெருமக்களுக்கும் வழிபாட்டுத் தலங்களாக அமைய, சாத்தாயி அம்மன் கோயில் பெண்தெய்வ வழிபாட்டினருக்கு அடைக்கலம் தருகிறது. சுந்தரராஜப் பெருமாள் கோயில் நங்கவரம் நச்சலூர்ச் சாலையில் கிழக்குப் பார்த்த நிலையில் கோபுரம் ஏதுமின்றி, மதில்சுவர்களும் இல்லாமல், இறையகமும் மண்டபங்களுமாய்த் தனித்துக் காணப்படுகிறது. ஒருதள வேசர விமானம், முகமண்டபம், பெருமண்டபம், முன்மண்டபம் என அமைந்துள்ள இக்கோயிலின் இறைவன், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி துணையுடன் எழுந்தருளியுள்ளார். பின்கைகள் சங்கு சக்கரமேந்த, வலமுன்கை காக்கும் குறிப்புக் காட்ட இடமுன்கையைத் தொடையில் கடியவலம்பிதமாய் இருத்தி நிற்கும் பெருமாளின் இடையைப் பட்டாடை அலங்கரிக்கிறது. தேவியர் இருவரும் மார்புக் கச்சின்றி இடையில் பட்டாடையணிந்து ஒரு கையை நெகிழ்கரமாய் இருத்தி, மறுகையில் மலரேந்தி நிற்கின்றனர். இவர்கள் எழுந்தருளியிருக்கும் மேடைக்கு முன்னுள்ள மேடையில் செப்புத் திருமேனிகள். இறைவன் நடுநாயகமாக நிற்க வலப்புறம் கச்சணிந்தவராய் ஸ்ரீதேவி. இடப்புறம் கச்சற்றவராய் பூதேவி. இறைவனின் இடமுன்கை கதாயுதம் பிடித்திருக்கும் அமைப்பில் இருந்தாலும் கதை இல்லை. சாலைப்பத்தி முந்தள்ளலுடன் ஒருதள வேசரமாய் வடிவமைக்கப்பட்டுள்ள இறைவனின் விமானம் பாதபந்தத் தாங்குதளம் கொண்டுள்ளது. சுவரை நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. விமான ஆதிதளத்தின் முப்புறத்தும் சுவரில் கோட்டங்கள் உள்ளன. இவற்றைச் சட்டத் தலையுடனான நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. கோட்டங்களில் இறையுருவங்கள் இல்லை. தூண்களின் மேலமர்ந்துள்ள போதிகைகள் குளவும் பட்டையும் பெற்ற தரங்கக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன. மேலே வாஜனம், வெறுமையான வலபி, கூரை. கபோத நீட்டல் ஆழமற்ற கூடுவளைவுகள் பெற்றுள்ளது. பூமிதேசமோ, அமைப்பான வேதிகையோ பெறாத மேலமைப்பில் வேசர கிரீவமும் சிகரமும் செங்கற் கட்டுமானங்களாய் வெறுமையான கிரீவ கோட்டங்களுடன் உள்ளன. முகமண்டபம் விமானத்தின் அமைப்பையொட்டி, ஆனால், கோட்டங்களின்றி இருக்கப் பெருமண்டபம் பிரதிபந்தத் தாங்குதளமும் வேதிகையும் கொண்டுள்ளது. இதன் சுவரைச் சதுரபாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. போதிகை வெட்டுத்தரங்கமாய் அமையக் கபோதம் கீர்த்தி முகக் கூடுகளும் அழகிய கோணப்பட்டமும் பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் முன்னால் பின்னாளைய எழுப்பலாயச் செங்கல் சுவருடன் முன்மண்டபமொன்று வளைவு வாயிலுடன் அமைந்துள்ளது. வளைவில் பெருமாளும் தேவியரும் சுதை வடிவினராய் உள்ளனர். பெருமண்டபத்துள் ஆஞ்சநேயருக்குத் தனித் திருமுன் கட்டப்பட்டுள்ளது. இராமானுஜர், மணவாள மாமுனிகள், இலட்சுமி நாராயணர் ஆகியோர் பெருமண்டப வடசுவரை ஒட்டியுள்ள திண்ணையில் இருத்தப்பட்டுள்ளனர். இத்திருக்கோயிலில் உள்ள நான்கு கல்வெட்டுகளுள் மூன்று தமிழிலும் ஒன்று வடமொழியிலும் உள்ளன. தமிழ்க்கல்வெட்டுகளில் இரண்டு, பெயர் சுட்டப்பெறாத இராஜகேசரிவர்மரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளாக உள்ளன இவற்றின் எழுத்தமைதி, உள்ளீடு கொண்டு இவற்றைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட சோழவேந்தரான முதலாம் இராஜராஜருடையதாகக் கொள்ளலாம். கோயில் கட்டமைப்புக் கூறுகளும் இக்காலத்தை உறுதிபடுத்துகின்றன. முதற் கல்வெட்டு விமானத் தாங்குதளத்தின் தென்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. சுந்தரசோழரின் தந்தையான அரிஞ்சயர் பெயரிலமைந்த ஸ்ரீஅரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம் காவிரியின் தென்கரையிலிருந்த உறையூர்க் கூற்றத்தில் இணைக்கப்பட்டிருந்த பல ஊர்களுள் ஒன்றாகத் திகழ்ந்தமையை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. பிராமணர் ஊராக இருந்த இவ் அரிஞ்சிகைச் சதுர்வேதிமங்கலத்தைச் 'சபை' என்ற நிர்வாக அமைப்பு ஆட்சிசெய்தது. இவ்வூரில் முதல் இராஜராஜர் காலத்தில் ஓடம் இயக்குமளவிற்குப் பெரியதொரு குளம் இருந்தது. இக்குளத்தில் இயங்கிய ஓடத்தையும் குளத்தின் கரைகளையும் பராமரிப்பதற்காகக் கொடும்பாளூரைச் சேர்ந்த திரைலோக்கியனான கோதண்டராம மாராயர் என்பார் அரிஞ்சிகைச் சதுர்வேதிமங்கலத்துச் சபையாரிடம் நிலமொன்றை விலைக்குக் கேட்டார். சபை தன் பொறுப்பிலிருந்த, 'ஆத்தியுடையான் சூற்று' என்ற பெயரில் அமைந்த நிலத்துண்டை எண்பது கழஞ்சுப் பொன்னுக்கு விற்றுத்தந்தது. இந்நிலத்தின் எல்லைகளாகத் தவசிகள் நிலமும் நங்கைக்குடித் தேவதானமும் வண்ணார் நிலமும் சபை நிலமும் சுட்டப்படுவதுடன், அக்காலத்தில் நிலமளக்கப் பயன்படுத்தப்பட்ட கோலொன்றும் குறிக்கப்பட்டுள்ளது. காவிரியாறு மதுராந்தகத் தென்னாறு என்று கல்வெட்டில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாற்றிலிருந்து ஊருக்கு நீர் கொணர நீரோடுகாலொன்று அக்காலத்தில் வெட்டப்பட்டிருந்தது. இந்நிலத்தின் விளைச்சல் எத்தகு செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது எனும் தகவல் விமானத் தாங்குதளத்தின் மேற்குப்பகுதியில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டும் முதல் இராஜராஜரின் நான்காம் ஆட்சியாண்டிலேயே வெட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஓடத்தை இயக்குவதற்கும் குளக்கரையில் மண்ணிடுவதற்கும் ஆறு ஆட்கள் பணியிலிருந்தனர். இவர்கள் தூணிப்பதக்கு அளவு மண் கொள்ளும் கூடையினால் நாள்தோறும் 140 கூடை மண்ணிடவேண்டும். இதற்குக் கூலியாக நில விளைச்சலிலிருந்து ஆளொன்றுக்கு ஆண்டொன்றுக்கு அறுபது கலம் நெல் தரப்பட்டது. இவர்களைக் கண்காணிக்கப் பணியிலிருந்த மண்ணட்டுவிக்கும் கண்காணிக்கு ஆண்டுக் கூலியாக 45 கலம் நெல் தரப்பட்டது. ஓடத்திலேற்படும் பழுதுகளை நீக்கத் தச்சர் ஒருவரும் கொல்லர் ஒருவரும் பணியில் இருந்தனர். இவர்களுக்கு ஆண்டுக்குத் தலைக்கு இரண்டு கலம் தூணிப்பதக்கு நெல் வழங்கப்பட்டது. ஓடத்திற்குத் தேவையான மரமிடும் வலையர் ஆண்டுதோறும் இரண்டு கலம் நெல் பெற்றனர். நிலத்தை வாங்கிய கோதண்ட மாராயர் நிலத்தை உழும் பொறுப்பையும் விளைச்சலில் இருந்து இத்தொழிலாளிகளுக்கு உரிய ஊதிய நெல்லை வழங்கும் பொறுப்பையும் அரிஞ்சிகைச் சதுர்வேதிமங்கலத்துச் சபையாரிடமே ஒப்புவித்திருந்தார். இந்தக் கடமையிலிருந்து சபை தவறுமானால், சபை உறுப்பினர்களை தண்டிக்கும் பொறுப்பு, அந்தந்த காலத்தில் அரசாளும் அரசருடையது என்றும் மாராயர் தம் ஒப்பந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். விமானத்தின் தெற்குப் பட்டிகையில் வெட்டப்பட்டிருக்கும் வடமொழிக் கல்வெட்டு, கோதண்ட மாராயரின் கொடையைச் சுட்டுவதுடன் மும்மூர்த்திகளையும் வணங்கி இந்தக் கொடை எந்நாளும் மக்கள் பயன்பாட்டிலிருக்க வேண்டி வாழ்த்துகிறது. முகமண்டபத்தின் தென்புறத் தாங்குதளத்தில் வெட்டப்பட்டிருக்கும் சோழர் காலக் கல்வெட்டு, கோயில் தொடர்பான நிவந்தங்களுக்காகத் தரப்பட்ட நான்கரை வேலி நிலத்தைச் சுட்டுவதுடன், அந்நில விளைவு கொண்டு கோயிலில் நிகழ்த்தப்பட்ட வழிபாடு, படையல் பற்றிய செய்திகளையும் பரிமாறிக்கொள்கிறது. கோயிலுக்குத் தரப்பட்ட இந்நிலத்தில், ஒன்றரை வேலி நிலம் கோயிலில் பூசை செய்த கௌதமன் பட்டனுக்கு அர்ச்சனா போகமாகத் தரப்பட்டது. எஞ்சிய மூவேலி நிலமும் இறைவனுக்கான படையல் செலவினம், திருக்கோயில் தொழிலாளர்களுக்கான ஊதியம் இவற்றிற்காக ஒதுக்கப்பட்டது. இறைவனுக்கு மூன்று போதும் திருவமுது சமைத்துப் படைத்திட, போதிற்கு நான்கு நாழி நெல் ஒதுக்கீடு செய்து, ஓராண்டிற்கான செலவாக 112 கலம் தூணிப்பதக்கு நெல் கணக்கிடப்பட்டு, அதற்காக ஒன்றே அரைக்கால் வேலி நிலம் தரப்பட்டது. அமுது படைக்கப்படும் ஒவ்வொரு பொழுதும் ஆழாக்கு நெய்யிடவும் கோயிலில் நாளும் நான்கு நந்தாவிளக்குகள் ஏற்ற நாழி நெய் தரவும் வாய்ப்பாக 165 கலம் நெல் விளைச்சல் தரவல்ல ஒன்றரை வேலி மூன்றுமா அளவு நிலம் வழங்கப்பட்டது. படையலுடன், ஒவ்வொரு போதும் பன்னிரண்டு பாக்கு, மூவடுக்கு வெற்றிலை இடவும் நாள்தோறும் இறைத்திருமேனிக்கான கழஞ்சளவு சந்தனப் பூச்சிற்கும் ஒவ்வொரு பொழுதும் இருகழஞ்சரை குங்கிலியப்புகை இடவும் இறைவனைத் திருமுழுக்காட்டவும் இறைவனுக்கான பாத்திரங்களை விளக்கித் தூய்மை செய்யவுமான ஒரு பலம் புளி பெறவும் பாத்திரம் விளக்குவதற்கான மாவுக்கெனவும் (திருப்பிண்டி) ஆண்டிற்கு 30 கலம் நெல் வழங்கவல்ல நிலத்துண்டு ஒதுக்கப்பட்டது. இவை தவிர, கார்த்திகைத் திருநாளின்போது விளக்கேற்றவும் ஆடிமாத விழாவுக்குமாக ஒரு மாவரை நிலம் தரப்பட்டது. கோயில் படையலுக்குச் சட்டிகள் செய்து தந்த குயவருக்கு கால்வேலி நிலமும் நந்தவனம் பராமரித்த தோட்டத் தொழிலருக்கு நான்கரை மா நிலமும் கோயிலை பெருக்கி நீர் தெளித்துத் தூய்மை செய்த தொழிலர் இருவருக்கு நான்கரை மா நிலமும் நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கான மாலைகள் தொடுப்பார் இருவருக்கு மூன்று மா நிலமும் நிவந்தமாகத் தரப்பட்டது. இந்நிலத்தை உழுது விளைச்சலைப் பெற்று இத்தொழிலர்கள் வாழ்ந்தனர். கொடையளிக்கப்பட்ட நிலம் ஒரு வேலிக்கு நூறு கலம் நெல் விளைச்சலாகத் தந்தமையும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் செழிக்க வாழ்ந்த இத்திருக்கோயில், பின்னால் வந்த மன்னர்களின் அரவணைப்பைப் பெறாத நிலையிலும் வளமாகவே வாழ்க்கைத் தொடர்ந்தமையைப் பெரும் மாற்றங்களுக்கு ஆளாகாத இதன் கட்டமைப்பும் வளாகச் சூழலும் நிறுவுகின்றன. இன்று இத்திருக்கோயில் குடமுழுக்கு நோக்கி மக்களின் அன்பான கவனிப்பிற்காகக் காத்திருக்கிறது. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |