http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 26
இதழ் 26 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2006 ] 2ம் ஆண்டு நிறைவு - மகேந்திரர் சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
மகேந்திரவர்ம பல்லவர் (BC590 - 630) குடைவரை மகரதோரணம் நாம் உள்ளே நுழைய அமைந்துள்ள படிகளின் இரு பக்கத்திலும் உள்ள முழுத்தூண்களின் மேலே, இருதூண்களும் தாங்கிப்பிடித்தாற்போல இருக்கும் போதிகைகளையும், மேலே உள்ள வாஐனம் மற்றும் வலபி பகுதிகளையும் இணைத்தாற்போல மகரதோரணம் உள்ளது. ஒரு மகரதோரணத்தில் மூண்று கணங்கள் உள்ளன. நடுவில் உள்ள மகரத்தில் அமர்ந்த நிலையில் ஒரு கணமும், அதன் இரு பக்கமும் விரிந்துள்ள தோகையின் முடிவில் பக்கத்திற்கு ஒரு மகரம் எனவும், நடுவில் உள்ள மகரத்தைவிடச் சற்றுக் கீழே செதுக்கப்பட்டுள்ளன. இந்த மூண்று மகரங்களின் துதிக்கைகளும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள மகரத்தின் மீது அமர்ந்துள்ள கணங்களில் கிழக்கரின் வலக்கை மகரத்தின் மீதும், இடக்கை போற்றி முத்திரையிலும், காதுகளில் வலப்புறம் பூட்டுக்குண்டலமும், இடப்புறம் பனையோலைக் குண்டலமும் அணிந்துள்ளது. மேற்கே உள்ள கணத்தின் வலக்கை மகரத்தின் துதிக்கை மீதும், இடக்கை போற்றி முத்திரையிலும், காதுகளில் பூட்டுக்குண்டலமும் அணிந்துள்ளது. குடைவரை அமைப்பு உள்ளே நுழையும் எவரையும் தன்னை ஒருமுறையேனும் நின்று பார்க்கும் நிலையில் மிக அழகாக அமைந்துள்ளது. கபோதம் குடைவரையின் மேலே பாறை அழகாக வளைக்கப்பட்டுக் கபோதமாக அமைந்துள்ளது. இந்தக் கபோதத்தில் பாண்டவர்களைப் போல் ஐந்து கூடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நடுவில் உள்ள கூடு மட்டுமே நிறைவடைந்த நிலையில் உள்ளது. மற்ற நான்கு கூடுகளும் முழுமையடையாத நிலையில் உள்ளன. கூடுகளில் காணப்படும் தலைகளுள் கிழக்கே உள்ள முதல் தலையில் சடாபாரமும், கிழக்கிலிருந்து - மேற்கு நோக்கியுள்ள, மற்ற நால்வரும் தலைகளில் சடைமகுடமும் அணிந்துள்ளனர். அனைத்து தலைகளிலிருந்தும் தோளின் மீது சடைக்கற்றைகள் நன்கு தெரியும் வண்ணம் அமைந்துள்ளது. முதலில் உள்ளவரின் தலை உச்சியில் சூலம் காட்டப்பட்டுள்ளது. மற்ற படி, இதில் உள்ள நால்வரின் காதுகளில் பனையோலைக்குண்டலத்தை நாம் வெகு எளிதாக காணலாம். முகமண்டபம் மற்றும் அர்த்தமண்டபம் நாம் குடைவரையின் உள்ளே நுழைந்த உடன், நம் முன்னே மண்டபம் உள்ளது. இந்தக் குடைவரை மண்டபம், முன்றில்1 (இடது பக்கத்தில் கிழக்கு மேற்காக உள்ள முதல் பகுதி), முகமண்டபம், அர்த்தமண்டபம் என பல்வேறு அமைப்புகளைக் கொண்டுள்ளது. முகமண்டபத்திலிருந்து அர்த்தமண்டபம் சற்று உயரமாக அமைக்கப்பட்டு வேறுபடுத்தி காண்பிக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபத்தில் நுழையும் போது தரையில் சற்று உயரமாக ஒரு அரைவட்ட வடிவமாகச் சந்திரசீலம் செதுக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபத்தில் இரண்டு முழுத்தூண்களும், இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. முழுத்தூணின் பாதி உயரம் வரை நான்முகக்கட்டும், பாதி உயரத்திற்கு மேலே எண்முகக்கட்டாகவும் உள்ளன. இந்தத் தூண்களின் மேலே அனைத்துப் பக்கங்களிலும் போதிகைகள் உள்ளன. கருவறைக் காவலர்கள் கருவறைக்காவலர்கள் இருவருக்கும் பொதுவாக பல அம்சங்கள் உள்ளன. இருவருமே கருவறையை நோக்கிய வண்ணம் சற்றே திரும்பிய நிலையில் உள்ளனர். தலையில் சடைமகுடம் அணிந்துள்ளனர். சடைமகுடம் மீறிய கற்றைகள் தலையின் இருபக்கமும் சடைக்கற்றைகளாக பரவியுள்ளன. இருவரின் காதுகளிலும் பனையோலைக் குண்டலமும், கழுத்தில் சவடியும், உபவீதமாக துணியினாலான முப்புரிநூலும், தோள்களில் தோள்வளையும், கைகளில் வளையல்களும் அணிந்துள்ளனர். இருவரின் இடுப்பிலும் உள்ள இடையாடையை இடைக்கட்டு கொண்டு இறுக்கியுள்ளனர். தெற்கர் வலது கை இடுப்பிலும், இடது கை போற்றி முத்திரையிலும் உள்ளது. இவரின் உதரபந்தம் வேலைப்பாடுகளுடன் கூடி பட்டையாக உள்ளது. இடுப்பில் உள்ள இடையாடையை அரைக்கச்சு கொண்டு இறுக்கியுள்ளார். இதன் ஒரு பக்கம் நீண்டு வலது தொடையின் மீதும், நீளம் குறைந்த பக்கம் இடது தொடையிலும் முடிந்துள்ளது. இதிலும் வேலைப்பாடுகள் உள்ளன. வடக்கர் வலது கை போற்றி முத்திரையிலும், இடது கை இடுப்பிலும் உள்ளது. இவரின் உதரபந்தம் வேலைப்பாடுகள் இல்லாமல் பட்டையாக உள்ளது. இவரது இடுப்பில் இடைக்கட்டு உள்ளது. இதன் ஒரு பக்கம் நீண்டு வலது தொடையின் மீது முடிந்துள்ளது. இதிலும் வேலைப்பாடுகள் இல்லை. கோவணம் அணிந்துள்ளார். இந்த இருவரையும் உற்று நோக்கும்போது குடைவரை முற்றிலுமாக முடிக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது. கருவறை சிவபெருமான் இங்கு கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளார். உள்ளே சென்று பார்க்க வேண்டுமென்றால், நாம் மேற்கு நோக்கி உள்ளே நுழையவேண்டும். கருவறை அர்த்தமண்டபத்தைவிட சற்று ஆழமாக அகழப்பட்டுள்ளது. நாம் காணும் ஆவுடையார் தற்பொழுது பிளவுபட்ட நிலையிலுள்ளது. இதனால், லிங்கம் சரியாக அமரவில்லை. கல்வெட்டுகள் வடமொழி மற்றும் தமிழில் இங்கு கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளன. வடமொழி படிப்போரே அரிதாகி வருவது போல, இங்கு உள்ள வடமொழி கல்வெட்டுக்கள் வெகுவாக அழிந்து, படிப்பதற்கு அரிதாக உள்ளது. குடைவரைக்கு மேலே வயல்வெளிகளுக்கு இடையே அமைந்துள்ள குடைவரையை வெளியேயும் உள்ளேயும் சுற்றிப் பார்த்துவிட்டு, பாறைகளுக்கு மேலே சென்று பார்க்க விரும்பினோம். மேலே ஏறிப் பார்ப்பதற்கு வசதியாக, பாறையின் கிழக்கு பகுதியில், மேற்கு நோக்கி மிகச்சிறிய படிகள் உள்ளன. ஆனால் முதலில் சில அடிகளுக்கு பாறை மீது ஏறிச்செல்ல வேண்டும். வெற்றுப்பாறை மீதும் சரி, மிகச்சிறிய படிகள் மீதும் மிக கவனமாக ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. சிறிது தவறினாலும் பாறையிலிருந்து உருண்டு முள் புதரில் விழும் அபாயம் உள்ளது. மேலே சென்ற பிறகு காற்று நம்மை மிகக் குளுமையாக வீசி வரவேற்கிறது. நாம் அங்கே அமர்ந்து ஒய்வெடுப்பதற்கு ஏதுவாக குடைவரை பாறையின் மேலே இரண்டு பெரிய பாறைகள் ஒன்றின் மீது ஒன்று மோதிய வண்ணம் உள்ளது. இவ்வளவு பெரிய பாறையில், குடைவரையில், சிவாலயம் அமைத்து, ஏதோ சில காரணங்களால், பல இடங்களில் பணிகள் முழுமையடையாமல் நின்றுள்ளன. இதற்கான காரணத்தை மகேந்திரவர்மரே வேறு எங்காவது விட்டுச்சென்றிருந்தால்!!! காலம் விடை கொடுக்குமா? this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |