http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 26
இதழ் 26 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2006 ] 2ம் ஆண்டு நிறைவு - மகேந்திரர் சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
மதுவைக்குடி
காதல் முகத்தை ரசி தன்னுணர்வின்றியே திகிலுடை தரி இதைச் சாதாரண மனிதன் சொன்னால், மக்களும் சாதாரணமாகவே எடுத்துக்கொள்வார்கள். ஆனால், கடவுளின் தூதராகக் கருதப்படும் ஒரு சாமியார் சொன்னால்? இன்று போலிச் சாமியார்கள் நம் நாட்டில் அதிகரித்ததற்குக் காரணம், அவர்கள் எதைச் சொன்னாலும் மறு கேள்வி கேட்காமல் நம்பும் மக்கள் இதையும் நம்பியதால்தான். சென்னையிலிருக்கும் மனநல மருத்துவர் ருத்ரன் அவர்கள் ஒரு பேட்டியில் சாமியார்களைக் குருட்டுத்தனமாக நம்பும் மக்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். "சோம்பேறித்தனமும் வேலை செய்ய விருப்பமின்மையும்தான் இதற்குக் காரணம். லாட்டரிச்சீட்டு வாங்குவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை. மனித வாழ்க்கை பிரச்சினைகளுக்கும் ஆசைகளுக்கும் நடுவில்தான் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு வீடு வேண்டும். கார் வேண்டும். என் மகளின் திருமணத்துக்குச் சீதனமாகத் தரவேண்டும். ஆனால் என்னிடம் ஒரு பைசா கூட இல்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. எங்கே போவேன்? சிறுவயது முதலே, கஷ்டகாலங்களில் கடவுள் உதவுவார் என்று கூறி வளர்க்கப்பட்டிருக்கிறேன். அவரை நாடுகிறேன். ஆனால் அவரை எங்கும் காண இயலவில்லை. பிறகு ஒரு மனிதரைச் சந்திக்கிறேன். தான் கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாகக் கூறுகிறார். என் சார்பாக இவர் கடவுளிடம் வேண்டுவார் என்று நம்பிக்கை பிறக்கிறது. என்னால் மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்திக்க முடியாதபோது அவரது உதவியாளரிடம் லஞ்சம் கொடுப்பதுபோல, கடவுளைக்காணச் சாமியார்களின் பின் செல்கிறேன்." மக்களின் இத்தகைய பலவீனத்தை அறிந்த சாமியார்களும் மடாதிபதிகளும் பாதிரியார்களும் வேடதாரிகளாக மாறிச் சுகபோகங்களை அனுபவிக்கத் தொடங்கி விடுகின்றனர். இப்போதைய சூழ்நிலையை முன்வைத்துக் கூறப்பட்டது இந்தப் பதில். இந்தியாவின் மீதான பிற நாட்டவரின் பூகோள மற்றும் கலாச்சார ரீதியிலான படையெடுப்பினால் பாரத மக்களின் மனம் மாசுபட்டதால்தான் இத்தகைய சீரழிவுகள் நடைபெறுகின்றன என்பது ஒரு சாராரின் வாதம். ஆனால், கறைபடாமல் இருந்த இன்றைக்குச் சுமார் 1400 வருடங்களுக்கு முந்தைய இந்தியாவில் சாமியார்கள் எப்படி இருந்தார்கள்? தோலுரித்துக் காட்டுகிறது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஒரு நாடகநூல். எழுதியவர்? விசித்திரச்சித்தர் என்றழைக்கப்படும் சகலகலாவல்லவரான பல்லவ மாமன்னர் மகேந்திரவர்மர்தான். மத்தவிலாசம் என்ற பெயரில் மதநையாண்டி (Religious satire) நாடகத்தை எழுதியுள்ளார். தமிழக வரலாற்றில் பல 'முதல்'களுக்குச் சொந்தக்காரர் இவர். அழியக்கூடிய பொருட்களான செங்கல், சுதை, மரம் மற்றும் உலோகம் ஆகியவை இல்லாமல், என்றும் அழிவில்லாத கடவுளுக்கு முதன்முதலில் என்றும் அழிவில்லாத கருங்கல்லைக் குடைந்து கோயில் எடுப்பித்த முதல் அரசர். 129 விருதுப்பெயர்களைப் புனைபெயர்களாக வைத்துக்கொண்டாலும், அதில் ஒன்றுகூடப் புனைந்துரைக்கப்பட்ட பெயராக ஆகிவிடாமல் இலக்கணமாக வாழ்ந்து காட்டிய முதல் இலட்சியவாதி. ஆயகலைகள் அறுபத்துநான்கிலும் சிறந்து விளங்கி, சிறந்த இசைக்கலைஞராகவும் வாத்தியக்கலை வித்தகராகவும் மாமண்டூர்க் கல்வெட்டுகள் கைகாட்டும் முதல் சக்கரவர்த்தி. இவற்றுடன், இசைவடிவில் மட்டுமே இருந்துவந்த இலக்கியங்களைத் தனது புதுமை விரும்பும் இயல்பால், நாடகம் என்னும் புதிய தளத்துக்கு மாற்றிய முதல் இலக்கியவாதி. இவரைப் பற்றிய பல்வேறு கோணங்களிலான படப்பிடிப்பை இவ்விதழின் மற்ற கட்டுரைகள் பதிவு செய்திருக்கின்றன. எனவே, மத்தவிலாச அங்கதம் நாடகத்தின் மூலம் இவர் காட்டும் சமூகத்தை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். தாம்பரம் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர்கள் திரு விஷ்ணுபட் மற்றும் திரு. ஜான் ஆசீர்வாதம் ஆகியோரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, டாக்டர். மைக்கேல் லாக்வுட் அவர்களால் கிறித்தவ இலக்கியச் சங்கம் மூலமாகப் பதிப்பிக்கப்பட்ட இந்நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இக்கட்டுரை. நாம் வாழ்க்கையில் முதன்முதலில் எழுத ஆரம்பிக்கும்போதே, பொன்னியின் செல்வன் போன்றதொரு நாவலை எழுதவேண்டும் என்று அமர்ந்தால், பத்தாவது வரிக்குமேல் எழுதக் கற்பனை பத்தாது. முதலில் துணுக்குகளை எழுதி, கடிதமாக மாற்றி, சிறு கட்டுரைகளைப் படைத்து, சற்றே பெரிய கட்டுரையாக முயற்சித்து, கதாபாத்திரங்களைப் புகுத்தி அதைக் கதையாக வடிவம் மாற்றி, பல அத்தியாயங்களாக விரிவு படுத்தி, எனக் கூட்டுப்புழு வாழ்க்கையிலிருந்து பட்டாம்பூச்சி உருமாறுவதுபோல் பல படிநிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. ஆனால், மகேந்திரரின் முதல் நூலாகக் கருதப்படும் மத்தவிலாசம், பாடல்களுடன் கூடிய நகைச்சுவை ததும்பும் நாடகமாக அமைந்திருப்பது, இன்னும் பல நூல்கள் இதற்கு முன்பு எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக்காட்டுகிறது. ஆனால், அவை தற்போது கிடைப்பதில்லை. இதற்காக எத்தனை முயற்சிகள் செய்திருப்பார்? எத்தனை நூல்களைப் படித்திருப்பார்? கட்டடக்கலை மற்றும் இசைக்கலைகளிலும் சாதனை படைத்துக்கொண்டு, இலக்கியத்திலும் புது முயற்சியைப் புகுத்துவது என்பது, எல்லோராலும் முடியக்கூடியதல்ல. இவருக்கு எப்படி இவ்வளவு ஞானம் தோன்றியது? சகல கலைகளிலும் ஆர்வம் பிறந்தது? எப்படி அனைத்தையும் கற்றுத்தேற முடிந்தது? இவருக்கு ஆசானாக விளங்கியவர் யார்? என்றெல்லாம் ஆராய மனம் துடிக்கிறது. சிவகாமியின் சபதம் புதினத்தில் மூன்றாம் பாகம் பிக்ஷுவின் காதல் பதினாறாம் அத்தியாயம் புலிகேசியின் புறப்பாட்டில் வரும் "புலிகேசியின் உள்ளத்தில் பல தீ மலைகள் ஏக காலத்தில் நெருப்பைக் கக்க ஆரம்பித்தன. மகேந்திரரை ஏறிட்டு நோக்கி, "பல்லவேந்திரா! அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும்!" என்றார். "எங்கள் தென்னாட்டிலும் ஒரு பிரபல இராஜ தந்திரி உண்டு. அவர் பெயர் திருவள்ளுவர்; அந்தப் பெரியார் எழுதிய பொருளதிகார நூலை உங்களுக்குப் பரிசளிக்க வேண்டுமென்று எனக்கு விருப்பம். ஆனால், எங்கள் செந்தமிழ் மொழியை இன்னும் நீங்கள் நன்றாய்ப் பயிலவில்லையே?" என்றார் சத்துருமல்லர்." என்ற காட்சியில் குறிப்பிட்டிருப்பதைப்போல, திருக்குறள் முதலான நூல்களைப் படித்திருக்க வேண்டும். பேரறிவாளன் கட்டுரையில் முனைவர் கலைக்கோவன் கூறுவதுபோல, உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் சிலப்பதிகாரத்தை மாதிரியாகக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லை. இடையிடையே வரும் பாடல்கள் பாட்டிடையிட்ட அங்கத நாடகம் என்று கூறவைக்கின்றன. மகேந்திரர் கவிதை இயற்றுவதிலும் வல்லவர் என்று நிறுவுகின்றன. இதன் தெளிவான நடையும் வியக்க வைக்கிறது. தற்போதைய திரைப்படங்களில் வரும் காட்சியமைப்புகளை ஒத்திருக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் நாடகத்தின் நோக்கத்தை விளக்கும் சூத்திரதாரியின் கதாபாத்திரம், தமிழகத்துக் கூத்துக்களில் வரும் கட்டியங்காரனை ஒத்தது. சூத்திரதாரியின் கட்டியத்திலேயே, இந்நாடகம் ஒரு புதுமையான முயற்சி என்பதையும், எழுதியவர் சிம்மவிஷ்ணுவர்மரின் மகன் மகேந்திரவிக்கிரமவர்மர் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டு விடுகிறது. முன்னுரை முடிந்து முதல் காட்சி ஆரம்பிக்கும்போது, இரண்டையும் இணைக்கும் விதமாக, 'பழகிவிட்டது' என்ற வார்த்தை கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சூத்திரதாரிக்கு மன்னரின் பெருமைகளைப் பாடியே பழகிவிட்ட செய்தி, கபாலிக்குக் குடித்தே பழகிவிட்டதுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே உத்தி கிட்டத்தட்ட எல்லாக் காட்சி மாற்றங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றைய பாலசந்தர் படங்களில் இத்தகைய உத்தியைக் காணலாம். சங்கீத வித்வான் ஜே.கே.பி யின் மனைவிக்கு சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கத்திரிக்காயை பேரம் பேசி வாங்கும் காட்சியுடன் ஒப்பிடலாம். புதிய திரைக்கதை முயற்சிகள் என்று நாம் இன்று நினைத்துக் கொண்டிருக்கும் பல உத்திகள், 1400 வருடப் பழமையானவை என்று மத்தவிலாசத்தைப் படிப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இன்று நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் பல சம்பவங்கள் இந்நாடகத்தில் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, முக்கியமான தருணங்களில் பெயரை மாற்றிச் சொல்லி மனைவியிடம் திட்டு வாங்குவது, அறிமுகக் காட்சியிலேயே இடம்பெறுகிறது. கபாலி குடிபோதையில் தேவசோமாவிடம் "அன்பே தேவசோமா, தவங்களின் மூலம் ஒருவன் தான் விரும்பிய வடிவத்தை அடையலாம் என்பது உண்மை. நீயோ ஒரு நொடியில் வியக்கத்தக்க புதுவடிவத்தை உன்னுடைய மிகப்பெரிய விரதத்தால் பெற்றுவிட்டாய்." என்று உளறுகிறான். இது ஒரு சிலருக்கு வெறும் உளறலாகத் தெரியலாம். ஆனால் சிலருக்கு ஒரு நகைச்சுவைத் துணுக்கை நினைவு படுத்தினால் வியப்பில்லை. "மாதாந்திர வரவு செலவுகளைக் கணக்குப் பார்த்துக்கொண்டிருக்கும் மனைவி, அலங்காரச் சாதனங்கள் அதிகம் செலவு பிடிப்பதால், இனிமேல் மேக்கப் போடுவதை நிறுத்திக் கொள்கிறேன் என்கிறாள். அடுத்த மாதம் கணவனின் பீர் செலவு அதிகரித்திருப்பது தெரியவரும்போது, 'இரண்டு செலவுகளும் ஒரே நோக்கத்துக்காகத்தான்' என்று சமாதானப்படுத்துகிறான் கணவன்." தான் குடித்துவிட்டுத் தள்ளாடுவதை உணராமல், தேவசோமா குடித்துவிட்டுத் தள்ளாடுவதாக எண்ணிக்கொண்டு 'என்னையா குடித்திருக்கிறேன் என்று சொல்கிறாய்?' என்று கேட்கிறான். 'அடப்பாவி! இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியலை?' என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய்க் கீழே விழப்போனவளைத் தாங்கிப் பிடிக்க முயன்று, தானே கீழே விழுகிறான். விழுந்ததோடல்லாமல், 'தாங்கிப்பிடிக்கும்போது விலகிக் கொள்கிறாயே, கோபமா' என்று வேறு கேட்கிறான். இந்தக் காட்சி, நாகேஷ் குடித்துவிட்டுத் தன் நிழலுடன் சண்டைபோட்டு, பிறகு நட்பாகி, 'சியர்ஸ்' சொல்லி, மதுக்கோப்பையை உடைப்பதை நினைவூட்டுகிறது. அடுத்த காட்சி மாற்றம் நாத்திகர்களை மையப்படுத்தி நகர்கிறது. கட்டுரையின் முதல் மூன்று வரிகள்தான் சைவசமயத்தின் ஒரு பிரிவான காபாலிகத்தின் கொள்கை. குடிபோதையில் மனைவியுடன் சண்டை ஏற்படுவதால், இனிமேல் குடிப்பதை நிறுத்தி விடுவதாகக்கூறி, காபாலிகர்களைக் குடிக்கச்சொன்ன சிவபெருமானை நிந்திக்கிறான். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சமண சமயத்தைச் சேர்ந்தவர்களை நாத்திகர்கள் என்று உரைக்கிறான். துறவறம் பூண்டு, தலையை மொட்டையடித்து, குளிக்காமல் அசுத்தம் கொண்டு, உண்ணக்கூட நேரம் நிர்ணயித்துக் கொண்டு, கந்தை உடுத்திக்கொண்டு, மக்களின் சுகபோக வாழ்வைக் கெடுக்கிறார்கள் என்கிறான். இந்த ஒரு விஷயம்தான் இன்றைய நாத்திகர்களுக்கும் அன்றைய நாத்திகர்களுக்கும் முரணாக இருக்கிறது. இவ்வாறு நாத்திகர்களைப் பற்றிப் பேசிய வாயை மதுவால் கழுவிக்கொள்ள வேண்டும் என்று கூறி, அடுத்த மதுக்கடைக்குக் காட்சி மாறுகிறது. போகும் வழியில் காஞ்சி நகர்க் கோயில்களைப் பற்றிப் பேசிக்கொண்டு போகிறார்கள். <கபாலி> : ஆ! காஞ்சிபுரத்தின் மிகுந்த வளம்; கோவில் விமான உச்சியில் தங்குகிற மேகங்களின் முழக்கத்தோடு கலந்து குழம்புகிற மிருதங்க ஒலி. வசந்தமே உருவாகக் காரணம்போல் விளங்குகின்ற பூமாலைக் கடைகள். எழிலுடைய இளம் பெண்களின் ஒலி செய்யும் மணிக்கச்சைகள், மலரம்புக் கடவுளின் வெற்றியை ஓதுகின்றன. மகேந்திரர் காலத்தில் காஞ்சியில் விண்ணை முட்டும் விமானம் கொண்ட கோயில் எதுவென்று தெரியவில்லை. இந்நாடகத்தில் ஏகாம்பரநாதர் கோயில் குறிப்பிடப்பட்டிருப்பதால், ஒருவேளை அதுவாக இருக்கலாம். அடுத்து வரும் காட்சி மிக சுவாரசியமானது. சைவ சமய யாகங்களைக் கிண்டல் செய்யும் இக்காட்சியின் மூலம், மகேந்திரர் சைவராக மாறுவதற்கு முன்பு இந்நாடகத்தை எழுதினார் என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் அதே சமயம் சமணர்களை நாத்திகர்கள் என்று குறிப்பிட்டிருப்பதால், சமணத்திலிருந்து விலகிய பின் எழுதினார் என்று கொள்ளலாம். இரண்டையும் இணைத்துப் பார்க்கும்போது, சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறும் இடைவெளியில் எழுதியிருக்கலாம் என்று கருத இடமுண்டு. திருநாவுக்கரசர்தான் மகேந்திரரை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார் என்ற கருத்துக்கு ஆதாரமில்லாததால், சமணத்திலிருந்து சைவத்திற்கு உடனடியாக மாறாமல், இடையில் சில காலம் எந்த சமயத்திலும் சேராமல் இருந்தார் எனக்கொண்டு, மேற்கண்ட கால நிர்ணயத்தை உறுதிப்படுத்தலாம். அப்படி என்னதான் சைவ சமய யாகத்தைக் கிண்டல் செய்கிறார்? மதுக்கடையையும் வேள்விக்கூடத்தையும் ஒப்பிடுகிறார். யாகங்களையும் வேள்விகளையும் புனிதமாக நினைப்பவர்களைப் படித்த மாத்திரத்தில் கோபங்கொள்ளச் செய்யும் இத்தகைய கருத்தை இன்றைய பகுத்தறிவாளர்கள்கூடச் சொல்வதில்லை. மகேந்திரர் சமயங்களைக் கிண்டல் செய்கிறாரா அல்லது சமயத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கிண்டல் செய்கிறாரா என்று பார்த்தால், சமயத்தைத்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், புத்தத் துறவியைத் தவிர, எந்தக் கதாபாத்திரமும் சமயத்தைத் தவறாகப் பயன்படுத்துபவராகச் சித்தரிக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்துள்ள சமயநெறிகளின்படி நடப்பவர்களாகவே இருக்கிறார்கள். போதை வெறியாட்டத்தைச் சிறந்த ஆடற்கலை என்று வருணித்துவிட்டு, 'முன்பு சிவன் மன்மதனை எரித்தார் என்பது பொய். மன்மதன் நீராய் உருகிட, நெற்றிக்கண்ணின் தீ ஒன்றும் செய்யவில்லை. அந்த நெருப்புதான் நம்மை இப்போது சுடுகிறது என்று கூறி, ஆடை நீக்க முற்படுகிறான். அதற்குள் கடைக்காரப் பெண் மதுவைப் பிச்சையிட, அதை வாங்க வைத்திருந்த மண்டையோடு காணாமல் போனதை உணர்கிறான். தற்போது, நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, சடங்கு சம்பிரதாயங்களைச் சரியாகப் பின்பற்ற முடியாமல் போனால், மக்கள் தமக்குத்தாமே ஏதாவது சமாதானம் கூறிக்கொண்டு பரிகாரம் என்ற மற்றொரு சடங்கைச் செய்து மனத்திருப்தி கொள்வதை, 'அவசர விதி' என்ற சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார் மகேந்திரர். காபாலிகர்கள் என்று சொல்லப்படுவதற்கான தகுதிகளில் ஒன்று, மண்டையோட்டைத் திருவோடாகக் கொண்டிருப்பது. அதை இழந்து விட்டதால், தான் ஒரு கபாலியாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று புலம்புகிறான். தானத்தை மறுப்பது பாவம் என்பதால், அவசர விதியினை உபயோகித்து, தேவசோமாவைப் பசுவின் கொம்பில் மதுவை வாங்கிக் கொள்ளச் சொல்கிறான். இதைவைத்துப் பார்க்கும்போது, தமிழர்களின் புனித விலங்காகப் பசு கருதப்படுவதும், கெட்ட காரியங்களைச் செய்பவர்களைக் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடையுமாறு சபிப்பதும் பிற்காலத்தில் தோன்றியது என்ற கருத்து வலுப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பசுவைப் புனித விலங்கு என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இதுவரை சமணத்தையும் சைவத்தையும் கேலி செய்த மகேந்திர வர்மர், புத்த மதத்தையும் ஒரு கை பார்க்கிறார். மற்ற மதங்களைக் காட்டிலும் பௌத்தத்தின் மீது அவருக்கு அப்படி என்ன கோபம் என்று தெரியவில்லை. புத்தத் துறவிகளை நாயுடன் ஒப்பிடுவதாலும், 'புத்தர்களை அழித்தவன்' என்ற விருதுப்பெயரைக் கொண்டிருப்பதாலும், ஏதோ ஒரு கசப்புணர்வு இருந்ததாகத் தெரிகிறது. <கபாலி> : அன்பே அதிலே பொரித்த கறி இருந்தது. ஒரு நாயாவது, ஒரு புத்த துறவியாவது எடுத்திருக்க வேண்டும். மதங்களிலும் சரி, சமூக வாழ்விலும் சரி. காலப்போக்கில் கொள்கைகள் நிறம் மாறுவதைக் கண்டிருக்கிறோம். ஆனால், மதத்தை நிறுவியவர் வலியுறுத்திய ஒரு கொள்கை சில நூறு வருடங்களில் தலைகீழாக மாறி, பின் அடுத்த சில நூறு வருடங்களில் மீண்டும் பழைய நிலைக்கே வருவது 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற வரலாறு காட்டும் உண்மையைப் பிரதிபலிக்கிறது. உயிர்களைக் கொல்லாமையை வலியுறுத்திப் புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட சமயத்தின் துறவிகள் இறைச்சியை விரும்பி உண்பதும் அதன் நிறம், குணம் மற்றும் சுவையைப் பாராட்டிப் பேசுவதும் கி.பி 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் நடந்திருக்க வேண்டும். அதனால்தான், அக்காலகட்டத்தில் ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் புத்தமதம் பரவியதால், இங்கிருக்கும் புத்தத் துறவிகளும் மாமிசம் சாப்பிடுவதைத் தவறாக எண்ணவில்லை போலும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இந்தியாவில் கால ஓட்டத்தில் புத்த மதம் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவும், புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராகவும் ஆக்கப்பட்டு விட்டதால், மீண்டும் புலால் உண்ணாமை நடைமுறைக்கு வந்து, புத்தகயாவில் இறைச்சியைத் தடை செய்யும் அளவுக்கு வந்துள்ளது. அடுத்து அந்தப் புத்த மதத் துறவி சொல்லும் கருத்து, இன்று பலர் இந்து மதத்தைப் போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் கைக்கொள்ளும் வாதத்தை ஒத்திருக்கிறது. இந்து மதத்தின் புனித நூல்களாகக் கருதப்படும் வேதங்கள் செவிவழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்பட்டு, பல நூற்றாண்டுகளாக எழுத்து வடிவம் பெறாமலேயே இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனால், எப்போது எழுத்து வடிவம் பெற்றது என்று தெரியவில்லை. அவ்வாறு எழுத்து வடிவம் பெற்றதை மாக்ஸ்முல்லர் போன்ற ஐரோப்பியர்கள் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளனர். அக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வேதத்தில் கூறப்பட்டிருக்கும் சில கருத்துக்கள் ஆபாசமானவை மற்றும் மேல்சாதியினரின் ஆதிக்க மனப்பான்மைக்குத் துணைநிற்பவை என்று சாடப்படுகின்றன. அதை மறுப்பவர்கள், அதற்கான விவாதத்தில் நேரடியாக ஈடுபடாமல், கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் இதுபோல் இல்லையா? என்றும், ஐரோப்பியர்கள் இந்து மதத்தைத் தாழ்த்தி, கிறிஸ்தவத்தைப் பரப்பும் தம் நோக்கத்துக்கேற்றவாறு வேதங்களை மொழிபெயர்த்து, இந்துக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டனர் என்றும் கூறுகின்றனர். அப்படியாயின், ஏன் சமஸ்கிருதம் தெரிந்த இந்துக்கள் யாரும் அதன் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தவில்லை? அப்படி யாராவது மொழி பெயர்த்திருந்தால், அவை ஏன் மேற்கோள் காட்டப்படுவதில்லை? இந்தநிலை இன்று நேற்றல்ல! 1400 வருடங்களுக்கு முன்பும் இருந்திருக்கிறது. <துறவி> : (வாடை பிடித்துக்கொண்டு) ஆ! அந்த உபாசகன்; வணிகன் தனதாசனின் திவ்விய தானம் எல்லா வீட்டுத் தானங்களையும் மிஞ்சிவிட்டது. அவன் தந்த தானம், என்ன அருமையான நிறமும் குணமும் சுவையும் கொண்டு மீனும் இறைச்சியுமாக அருமையான உணவு எனக்கு. ராஜவிஹாரத்திற்குத் திரும்பிச் செல்லுவேன். (தனக்குள்ளே பேசிக்கொண்டு திரும்பிச் செல்லுகிறான்) ஆகா! மாளிகை வாசம், மெத்தையுறக்கம், காலை உணவுக்குப்பின் மாலை சுவைமிக்க பானங்கள். பஞ்ச மணத் தாம்பூலம், அழகு ஆடைகள் முதலிய வசதிகள் - இரக்கம் நிறைந்த புனிதமான புத்தர் பெருமான் சங்கத்துத் துறவிகளுக்கு இவற்றையெல்லாம் அனுமதித்து விட்டு மதுவையும் மாதையும் மட்டும் ஏன் விலக்கி விட்டார்? இந்த உதவாத, கையாலாகாத பெரியவர்கள் இளைஞர்கள் மேல் பொறாமை கொண்டு மதுவையும் மாதுவையும் அனுமதிக்கிற விதிகளை பிடக புத்தகத்திலிருந்து மறைத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். சிதைக்கப்படாத மூலபாடம் எங்கே கிடைக்கும்? புத்தருடைய போதனைகளை முழுமையாக வெளியிட்டு பௌத்தர்களுக்கு உதவலாமே. ஒவ்வொரு மனிதனும் (இல்லறவாசியாக இருந்தாலும் சரி, துறவறவாசியாக இருந்தாலும் சரி) தன் எண்ணங்களுக்கேற்ற கோணத்திலேயே உலகத்தைக் காண்கிறான். மதுவையும் மாதுவையும் விரும்பும் இத்துறவி, அவற்றை விரும்பாத துறவிகளும் இருப்பார்கள் என்று எண்ணாமல், மற்ற பௌத்தத் துறவிகளும் அவ்வாறே எண்ணுவார்கள்! அதனால், சிதைக்கப்படாத மூலபாடத்தை முழுமையாக வெளியிட்டுப் பௌத்தர்களுக்கு உதவ நினைக்கிறான். இப்படி எண்ணிக்கொண்டே திரும்பிச் செல்லும்போது, கபாலி மற்றும் தேவசோமாவின் கண்களில் பட்டு விடுகிறான். இறைச்சி இருக்கும் பிச்சைப்பாத்திரத்தை மறைத்துக் கொண்டு செல்வது கபாலியின் திருவோட்டைத் திருடிக்கொண்டு செல்கிறான் என்று சந்தேகப்பட வைக்கிறது. தேவசோமாவைப் பார்த்தபோது, இன்றைய துறவிகளைப் போலவே மனதுக்குள், 'ஆகா! சகோதரி என்ன அழகு!' என்று ரசிக்கிறான். வாதாடிக் களைப்புற்ற கபாலியும் தேவசோமாவும் கபாலவோட்டை எளிதாகப் பெறமுடியாததால், பசுவின் கொம்பிலேயே மதுவைக் குடித்துக் களைப்பாற்றிக் கொண்டு, புதுத்தெம்புடன் வாதத்தைத் தொடருகிறார்கள். காபாலிகத்தின் பகிர்ந்துண்ணும் கொள்கைப்படி, புத்தத் துறவிக்கும் அம்மது பகிர்ந்தளிக்கப்படுகிறது. மதுவும் மாதுவும் துறவிகளிடமிருந்து கொள்கை அளவில் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, திரைமறைவில் செய்பவர்களும் இருக்கிறார்கள் என்று மகேந்திரர் எள்ளி நகையாடுகிறார். விருந்தினர் வீட்டில் தரப்படும் இனிப்பை, 'வேண்டாங்க! டாக்டர் ஸ்வீட்ஸ் எல்லாம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்' என்று சொல்லிக்கொண்டே, வாயில் எச்சில் ஊற, ஆசையுடன் உற்று நோக்குவதைப் போல, பின்வருமாறு பேசுகிறார் துறவி. <துறவி> : (தனக்குள்) என்ன எளிதாகக் கிடைத்து விட்டது அதிர்ஷ்டம். ஆனால் சிக்கல் இதுதான். மக்கள் கவனிப்பார்கள். (சப்தமாக) வேண்டாம். யாம் இந்தக் காரியம் செய்யக்கூடாது. (தனது உதட்டோரங்களை நாவால் வருடிக் கொள்கிறார்) பிறகு தொடரும் வாதத்தில் கோபம் தலைக்கேறி, துறவியின் தலை மொட்டை என்று உணராமல், முடியைப் பிடிக்கப் பாய்ந்து, ஒன்றும் அகப்படாமல் கீழே விழுகிறார்கள். தலையை மழிக்கும்படி விதித்த புத்தரை வாழ்த்திக்கொண்டே, இதுதான் வாய்ப்பென்று, தேவசோமா எழ உதவி செய்யும் பாவனையில் அவள் கையைப் பிடித்துத் தூக்கிவிடுகிறான். உடனே கபாலி கூச்சலிட ஆரம்பித்து விடுகிறான். துயரத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது தங்கள் கடமை என்று சமாதானம் கூறுகிறான். அதை ஏற்காத கபாலி, அப்படியானால், முதலில் நான்தானே விழுந்தேன்! என்னையல்லவா முதலில் தூக்கியிருக்கவேண்டும்? உன் மண்டையோடே எனக்குப் பிச்சைப்பாத்திரம் ஆகப்போகிறது என்று கூறி மோதுகிறான். அப்போது அவ்வழியாக வரும் பாசுபதன் ஒருவனைப் பஞ்சாயத்து செய்ய அழைக்கிறார்கள். ஏற்கனவே காபாலிகத்தின்மேல் கடுப்புடன் இருக்கும் அப்பாசுபதன் இப்பிரச்சினையை வைத்துக் கபாலியை அழிக்க முயற்சி செய்கிறான். புத்த துறவி அக்கபாலவோடு தன்னுடையது என்று எப்படி நிரூபித்தாலும் கபாலியும் தேவசோமாவும் ஏற்க மறுக்கிறார்கள். <துறவி> : ஆண்டவனே, நீங்கள் அதைக் காணாதது ஏன்? அதனுடைய நிறத்தை ஏன் கவனிக்கவில்லை? <கபாலி> : அங்கே கவனிக்க என்ன இருக்கிறது? நான் பார்த்தாயிற்று. அந்த கபாலவோடு ஒரு காகத்தை விடவும் கருப்பு. <துறவி> : அப்படியானால் அது என்னுடையது என்று ஒத்துக்கொள். <கபாலி> : மெய்தான், ஒத்துக்கொள்கிறேன் உன்னுடைய நிறம் மாற்றும் திறமையை! என்றும், மங்காத மது வாடையை உடைய அப்பாத்திரம், துறவியின் ஆடையின் அழுக்குவாடை மதுவாடையைவிட மோசமாக இருப்பதால், பாத்திரத்தின் வாடை மாறிவிட்டதாக தேவசோமாவும் விதண்டாவாதம் செய்கிறார்கள். இதற்குமேல் என்னதான் செய்வதென்று தெரியாமல், பிச்சைப்பாத்திரத்தைக் கபாலிக்கே அளிக்க முடிவு செய்து கொள்கிறான். ஆனால், வாதியும் பிரதிவாதியும் சமாதானமாவதை விரும்பாத கட்டப் பஞ்சாயத்து நடத்துபவனைப்போல, வழக்கு மன்றத்துக்குச் செல்ல யோசனை சொல்கிறான் பாசுபதன். இங்குதான் இன்றைய நிலை அப்படியே படம்பிடிக்கப் படுகிறது. <பாசுபதன்> : என்னால் இதைத் தீர்த்துவைக்க முடியவில்லை. வழக்கு மன்றத்துக்குச் செல்லலாம். <தேவசோமா> : ஆண்டவனே, நாம் அப்படிச் செய்தால் நமது கபாலவோட்டுக்குப் பிரிவு உபசாரந்தான். <பாசுபதன்> : நீ என்ன சொல்லுகிறாய்? <தேவசோமா> : மடத்திலே இந்த ஆசாமி வாழ்ந்த வசதி நிறைந்த வாழ்க்கையினால் சேர்த்துக் கொண்ட செல்வத்தைப் பயன்படுத்தித் தான் நினைத்தபடியே நீதிபதிகள் வாய்களையெல்லாம் மூடிவிடுவான். பாம்புத் தோலையே உடைமையாகக் கொண்ட ஒரு கபாலியினுடைய ஏழைப்பணிப்பெண் நான். வழக்கு மன்றம் செல்ல எங்களிடம் என்ன வைத்திருக்கிறோம்? இன்றைய சூழலுக்கு ஒத்துவரும் பல கருத்துக்களை மகேந்திரர் முன்வைக்கிறார். 'மடத்தில் வாழும் துறவிகள் எதையும் துறக்காமல் வசதியாக வாழ்வது', 'தீய வழியில் சேர்த்த செல்வத்தினால் நீதிதேவதையின் கண்களைக் கட்டுவது' மற்றும் 'ஏழைசொல் அம்பலம் ஏறாது என்ற வழக்கு' ஆகியன 1400 ஆண்டுகளுக்கு முன்பும் இருந்தன என்று தெரிகிறது. ஆனால், சிலப்பதிகாரத்தில் கூறப்படும் எளிய நீதிமுறைக்கு முரணாக அமைகிறது. சோழநாட்டில் பிறந்த கண்னகி, தான் வாழப்போகும் பாண்டிய நாட்டில் தன்னந்தனியாக வழக்குத் தொடுத்து நீதி பெறுவது, இரண்டு நிலைமைகளும் அச்சமுதாயத்தில் இடம்பெற்றிருந்தன என்று காட்டுகிறது. <பாசுபதன்> : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நிலைமையில் துணிவு நேர்மை தகுதி இருந்தும் இளமனம் உயர்குடி நடுநிலை காப்போர் சாற்றுதற் கரியோர் மண்டபந் தாங்குந்தூணது போலும் விண்டவர் தருவார் துணையே யாவும். என்று விளக்கிக் கூறியபின், நேர்மையான ஒருவருக்குச் சிறிதும் அச்சம் தேவையில்லை என்று நீதிமன்றத்துக்குப் புறப்படுகிறார்கள். அப்போது வருகிறான் ஒரு பைத்தியக்காரன். அவனுடைய தோற்றத்தை மகேந்திரர் வர்ணிக்கிறார். புழங்கிய ஒட்டுக் கிழிசல் கந்தை மழியாத் தூசுப் பரட்டைக் கேசம் பழகிய தாரைத் திரளாய்ச் சுற்றி விலக்கிய உணவுத் துகள்கள் கொள்ள வலஞ்செய் காகக் கூட்டஞ் சூழ மனுடர் உருவங் கொண்டே திரியும் நாட்டுக் குப்பைப் போலா வானே. இங்கு நாட்டுக்குப்பை என்று குறிப்பிடப்படுவது சற்றுச் சிந்திக்க வைக்கும் விஷயம். வீடுகளில் பொருட்களைப் பயன்படுத்தியபின் மீதமாகும் கழிவுகளைக் குப்பை என்று சொல்லி வெளியில் கொட்டுவதுபோல, பலதரப்பட்ட கொள்கைகளையுடைய மக்கள் வாழும் சமுதாயத்தில், தன் சுயத்தை இழந்து, அடுத்தவரின் கருத்துக்கு அளவுக்கதிகமாக மதிப்புக் கொடுத்து, எடுப்பார் கைப்பிள்ளையாக மாறும் ஒருவன் கடைசியில் குழம்பிப்போய், பைத்தியம் பிடித்து, அனைவராலும் உபயோகிக்கப்பட்டபின் தூக்கி எறியப்படும் குப்பைக்குச் சமம் என்று உருவகிக்கிறார். அவன் வைத்திருப்பது தங்களுடைய திருவோடு என்பதை உணர்ந்த கபாலி, அதைத் தரச்சொல்லிக் கேட்கிறான். பைத்தியக்காரன் அப்பொற்கிண்ணத்தைத் தர மறுக்கிறான். 'பொற்கிண்ணமா? இவன் என்ன பைத்தியக்காரனா?' என்று கபாலி சொல்லவும், அவன் பிடித்துக் கொள்கிறான். <பைத்தியக்காரன்> : நான் அடிக்கடி கேட்கிற சொல், பைத்தியக்காரன்; இதோ இதை வைத்துக்கொள், பைத்தியக்காரனை எனக்குக் காட்டு. முடி வெட்டிக்கொண்டு காசு தராமல் போன ஒசாமா பின்லேடனின் முகவரியை வைத்துக்கொண்டு தேடும் சலூன் கடைக்காரரிடம் மாட்டிக்கொண்ட வடிவேலுவைப் போலாகிறது கபாலியின் நிலை. உடனே சுதாரித்துக்கொண்டு, 'அந்தச் சுவருக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறான். சீக்கிரம் போனால் பிடித்து விடலாம்' என்று கூறித் தப்பிக்கிறார்கள். திருவோடு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் கபாலியும், சிக்கலிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் புத்த துறவியும், பிரச்சினையை மறந்து நண்பர்களாகி விடுகிறார்கள். அதுவரை சந்தேகம், கோபம், சபலம், போதை ஆகியவற்றுடன் இருந்த மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் நல்லவர்களாகி விடுவார்கள் என்று மாறுகிறது கதை. அதுவும் எத்தனை நல்லவர்கள் என்றால், <கபாலி> : ஓ, நாகசேனரே, என்னுடைய குற்றங்களை மன்னித்துவிடும்படி வேண்டுகிறேன். <துறவி> : அதில் என்ன இருக்கிறது? உன்னை மகிழச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? <கபாலி> : என்னால் நீங்கள் மகிழ்வீர்கள் என்றால் அதைவிட எனக்கு என்ன வேண்டும்? <துறவி> : நான் போகட்டுமா? <கபாலி> : நல்லது. மீண்டும் சந்திக்கலாம். மற்றவர்களின் மகிழ்ச்சியே தன் நோக்கம் என்று எண்ணும் உயர்ந்த மனநிலைக்கு வந்து விடுவார்கள் என்று மகேந்திரர் கூறுகிறார். உண்மைதானே! மற்றவர் செய்யும் செயல் தமக்குத் துன்பம் விளைவிக்குமோ என்று சந்தேகப்படும் வரையிலும், தம் செயலால் மற்றவர் துன்பப்பட்டாலும் பரவாயில்லை, தான் பலனடைந்தால் போதும் என்று எண்ணும் வரையிலும்தான் வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கும். ஓநாயின் பார்வையில் இருந்து பார்த்தால்தான் வேட்டையின் நியாயம் புரியும் என்று சொல்வதுபோல, ஒவ்வொருவரும் அவரவர் நிலைமைக்கேற்பத்தான் செயல்படுகிறார்கள் என்று புரிந்து கொண்டால், வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே! இறுதியாக, சூதும் வாதும் இல்லாதவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்றும், முறை முறை மானுடர் நலமது பெறுக குறையறு பலிகள் எரியிறை கொள்க மறைதனை அந்தணர் இடையற ஓதுக நிறைவாய் ஆவினம் பால் பொழிந்திடுக கறைவளர் மதி, மீன் நிலைக்கிற நாள்வரை நரைகிளர் பிணியின்று மனுக்குலம் மீள்க வருபகை தனைமிகத் திறமொடு களைந்திடு சத்ருமல்லர் ஆட்சியினுட் பட்டு கடமையே தாமாய் மக்களும் வாழ்க! கடமை என்ற மூன்றெழுத்துக்களையே மூச்சாகக் கொள்ள வேண்டும் என்றும் நாடகம் பார்க்க வந்த மக்களுக்கு அறிவுரை கூறி மகேந்திரர் நாடகத்தை முடித்து வைக்கிறார். இந்நாடகத்தைப் படிக்கும் நாமும் இதையே பின்பற்றி, வளமுடன் வாழ்வோமாக! this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
||||||||||||||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |