http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[175 Issues]
[1738 Articles]
Home About US Temples Facebook
Issue No. 34

இதழ் 34
[ ஏப்ரல் 16 - மே 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

அரும்பொருட்களும் காட்சியகங்களும்
நாவல் படிக்கும் கலை
திரும்பிப் பார்க்கிறோம் - 6
கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் - 2
கொடுமணல் தாழியில் பழந் தமிழ்ச்சொற்கள்
ஹாய் மதனுக்குக் கடிதம் - வாசகர் கருத்துகள்
சங்கச்சாரல் - 17
இதழ் எண். 34 > கதைநேரம்
நாவல் படிக்கும் கலை
கோகுல் சேஷாத்ரி
நாவல் படிப்பதென்பது தற்காலத்தில் ஒரு பழக்கம் என்ற நிலையிலிருந்து மாறி ஒரு கலை என்று சொல்லத்தக்க அந்தஸ்தை அடைந்திருக்கிறது. இந்தக் கட்டுரையைப் படித்து முடித்தபின் நீங்களே இதனை ஒப்புக் கொள்ளுவீர்கள். ஆய கலைகளில் அறுபத்தி ஐந்தாக இதனைச் சேர்க்கும்படி மத்திய மாநில அரசுக்கு மனுப்போடலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். எந்த இலாகாவில் கீழ் இதெல்லாம் வருகிறதென்று நிச்சயமாய்த் தெரியாததால் பொறுமையாயிருக்கிறேன்.

நாவல்களில் பல வகையுண்டு. குறு நாவல், சிறு நாவல், பாக்கெட் நாவல், தக்கணுண்டு நாவல் என்றெல்லாம் வாங்கினால் சமாளித்து விடலாம்தான். பல்லவனில் முச்சை ஒருமுறை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு உள்ளே சென்று உட்கார்ந்தால், வெளியே கசங்கிக் கந்தலாக வரும்போது நாவலையும் முடித்திருப்போம். பிரச்சனையில்லை.

ஆனால் நாவலின் சைஸ் அதிகமாக அதிகமாக பிரச்சனையும் அதிகமாகிறது.

அதிலும் இந்த சரித்திர நாவலாசிரியர்கள் இருக்கிறார்களே - அவர்களுக்கு கொஞ்சம்கூட ஈவிரக்கமென்பதே கிடையாது. பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுவதில் அப்படியொரு தனிப் பிரியம் ! கதாநாயகனாகிய இளவரசன் புரவியில் ஏறுவதற்குள் ஐந்தாறு பக்கத்தை கடத்தி விடுவார்கள். அதற்கப்புறம் அவன் சில பல கஷ்டநஷ்டங்களுக்கு ஆட்பட்டு கதாநாயகியான இளவரசியின் அந்தப்புறத்தை இரகசியமாக அடைவதற்குள் ஒரு பாகம் முடிந்துவிடும் !

இந்த மாதிரி பெரிய நாவல்களை பல்லவனிலும் பாரத்திபனிலும் படிக்க முடியாது - அதற்கென்று தனியே பலவிதமான ஏற்பாடுகள் செய்தாகவேண்டும்.

நாவல்களை கைக்காசை செலவழித்து வாங்குவதா - அல்லது நூலகத்தில் படிப்பதா என்பதும் ஒரு சங்கடமான விஷயம். இரண்டிலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன !

கைக்காசை கொண்டு வாங்கலாமென்றால் - எல்லா நாவல்களையும் வாங்கிவைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் படிக்க முடியாதே ! மேலும் நம்மை பார்க்கவரும் நண்பர்களின் கண்களிலிருந்தும் அதனை பத்திரமாய்க் காப்பாற்றியாகவேண்டும் ! இல்லையேல் அவர்களுடைய கழுகுப் பார்வைக்கு புதுப் பொண்டாட்டிமாதிரி வெட்கப்பட்டுக்கொண்டு ஒரு வாசனையோடு இருக்கும் நம் பொஸ்தகம் அகப்பட்டு - அப்படியே திருநெல்வேலி அல்வாக் கணக்காக அள்ளிக் கொண்டுபோய்விடுவார்கள் !

இப்படி எவர் கண்ணிலும் பட்டுத் தொலைக்கக்கூடாதென்று வீட்டின் பரணில் வீசி எறிந்தோமானால் அப்புறம் ஒருநாள் நம் கைக்கே கிடைக்காமல் போய்விடும் ! ஒரு செளகரியமான ஞாயிற்றுக்கிழமை எல்லாவித முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டு ஆவலுடன் பரணில் ஏறினோமானால் - அதைத்தவிர எல்லா களுதையும் கிடைக்கும் ! நாம் கிழித்தெறிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் பழைய காதல் கடுதாசிகூட கைகளுக்கு அம்பட்டுவிடும் - தேடிக் கொண்டிருப்பது கிடைக்காது!

சரி - இந்தப் பிரச்சனைகளெல்லாம் வேண்டாம், பேசாமல் நூலகத்திற்குச் சென்று இரவல் வாங்கி வருவோமென்று பார்த்தால் - அங்கும் நமது ஏழரை நாட்டுச் சனி விடாது !

பாகம் ஒன்றும் முன்றும் கிடைக்கும் - ஆனால் இரண்டு மட்டிலும் சல்லடை போட்டுச் சலித்தாலும் கிடைக்காது. அதை யாராவது ஒரு மகானுபாவர் "இந்திய சரித்திரக் களஞ்சியம்"(10 பாகங்கள்) "தில்லைக்கூத்தன் திருநடனம்"(1000 பக்கங்கள்) போன்ற எவருமே புழங்காத புத்தகப் பகுதிகளில் ஒளித்து வைத்திருப்பார்கள். பாவம், அவர்களின் சங்கடம் அவர்களுக்கு ! அடுத்த முறை நூலகத்திற்கு வரும்போது ரெண்டாம் பாகம் அப்படியே லட்டுக் கணக்காக ரெடியாக இருக்க வேண்டாமா ? அதது இருக்க வேண்டிய இடத்தில் வைத்தால் நிச்சயம் வேறெவராவது லவுட்டிக் கொண்டு போய்விட மாட்டார்களா ? நான் போய்வந்துகொண்டிருந்த கிளை நூலகத்தில் இப்படிப்பட்ட ஆர்வலர்களின் அன்புத்தொல்லை ரொம்ப அதிகமாகி - நல்ல நாவல்கள் வேண்டுமென்றால் தூசிபடிந்த தடி தடி பொஸ்தகங்களுக்கு நடுவில் தேடிப் பார்க்கலாம், கண்டிப்பாய்க் கிடைக்கும் - என்கிற நிலைமை உண்டாகிவிட்டது !

ஒரு வழியாய் இப்படி ஏழுமலை எட்டு கடலெல்லாம் தாண்டி நாவலை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தோமானால் - வேறுவிதமான பிரச்சனைகள் அங்கே காத்திருக்கும் !

நாவல்களுக்கு பெரும்பாலான வீடுகளில் இருவிதமான எதிரிகள் உண்டு. திருமணமாகாத இளைஞர் இளைஞிகளுக்கு அம்மா (அல்லது அப்பா). திருமணமானவர்களுக்கு மனைவி (அல்லது கணவன்). (பெரும்பாலான என்று எச்சரிக்கையோடு சொல்லியிருக்கிறேன் - எல்லா வீடுகளிலும் என்று சொல்லவில்லை - எனவே விதிவிலக்குகள் என்மேல் கேஸ்போடுவதை பற்றி யோசிக்காதீர்கள் - தள்ளுபடியாகிவிடும் !) இந்த சாராருக்கு நாவல் படிப்பது என்பதைப்போல ஒரு வீண்வேலை உலகத்தில் வேறெதுவும் கிடையாது. அதனால் முடிந்தவரை அதற்கு இடைஞ்சலோ தொந்தரவோ செய்வார்கள். பரீட்சை நேரமாயிருந்தால் "படிக்காமல் என்ன கதைப் பொஸ்தகம் வேண்டிக் கிடக்குங்கறேன் ?" என்பார்கள். அவர்களுக்கு சிற்றிலக்கியம், பேரிலக்கியம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், வெகுஜன நாவல் என்றெல்லாம் பகுத்துணரும் பொறுமை கிடையாது - கிடக்கிற எல்லா களுதையும் கதைப் பொஸ்தகந்தேன் ! அதிலும் இந்தப் முழுப்பரீட்சை நேரம் இருக்கிறதே - அது நெருங்க நெருங்க நாவல் படிக்கும் ஆசையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் அரட்டையடிக்கவும் ரொம்ப சுவாரஸ்யமான விஷயங்களெல்லாம் கிடைக்கும். படிக்கும் காலங்களில் இதெல்லாம் மேலிருந்து சாத்தான் செய்கிற சதியோ என்றுகூட யோசித்திருக்கிறேன்...

இவர்களையெல்லாம் ஒருவழியாக சரிக்கட்டிவிட்டு (அதாவது ஓரளவிற்கு சிறிய நாவலாயிருந்தால் சினிமாவிற்கோ, ரொம்ப பெரியதாயிருந்தால் வேறு ஊர்களுக்கோ அனுப்பிவிட்டு) - படிக்கலாமென்று உட்கார்ந்தால்.. அடுத்த பிரச்சனை : இடம்.

நாவல்களுக்கு - அதுவும் குறிப்பாக சரித்திர நாவல்களுக்கு - பெரிய சோபாவோ அல்லது கட்டிலோதான் சிறந்த இடம் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இதில் சில / பல அழுக்குத் துணிமணிகளையோ போர்வைகளையோ போட்டு "அளகு"படுத்திக் கொள்ளவும். குளிக்காமல் உடம்பை சற்று சோம்பலுடன் மசமசவென்று வைத்துக் கொள்வது. நாவல் கொடுக்கும் இன்ப லாகிரியை சற்று தூக்கிக் காட்டும்.

இடம் ரெடியா ?

அடுத்து சாப்பிடுவதற்கு சில ஐட்டங்களை தயார் செய்து அமரப்போகின்ற இடத்தைச் சுற்றி வைத்துக் கொள்ளவேண்டும். வயிற்றைக் கெடுக்கும் நொறுக்குத் தீனி, தீபாவளி பட்சணம், சிப்ஸ் - வேர்க்கடலை முதலானவற்றை அமரப்போகின்ற இடத்தைச் சுற்றி வைத்துக் கொள்ளவும். ஏன், சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும் ? ஒரே இடத்தில் வைத்துக் கொள்ளக்கூடாதா - என்கிறீர்களா ? அட, அப்பாவி மக்கா! நாவல் பாதி படித்துக்கொண்டிருக்கும்போது கிடைக்கும் திசையில் கையை நீட்டினால் அங்கு ஏதாவது அம்புட வேண்டாமோ ? அதற்காகத்தான் !

சரி, இடமும் தயார், நொறுக்குத் தீனியும் தயார்.

இப்போது ஒழுங்காக உட்காராமல் உடம்பை முடிந்தவரை அஷ்டகோணலாக மடித்து எண்கோணமாய் படுத்துக் கொள்ளவும். கால் வைக்கும் இடத்தில் தலையையும் தலை வைக்கும் இடத்தில் காலையும் வைத்துக் கொள்வது நல்லது. சற்று இளவட்டமாயிருந்தால் காலை முடிந்தவரை திருவாலங்காடு ஈசரைப் போல் மேலேதூக்கி ஆகாயத்தில் வைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப விசேஷம். நாவல் படிக்கப் படிக்க நல்ல விறுவிறுப்பாயிருந்தால் இந்த கோணல்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்கும். படித்து முடிக்கும்போது கால் எங்கே கை எங்கே என்று தெரியவில்லையானால் நாவல் ரொம்ப பிரமாதம் ! என்று அர்த்தம். நல்ல சுவாரஸ்யமான கட்டங்களில் வலிப்பு வந்ததைப்போல் கால்களை விறுவிறுவென்று ஆட்டுவதில் தப்பில்லை - என்ன, வெளிமனிதர்கள் பார்வையில் படாமல் இருக்கவேண்டும்.. ஏனெனில் அவர்கள் வலிப்புக்காக சாவியை வலுக்கட்டாயமாக கைகளில் திணிக்கக்கூடும் !

நாவலின் ரொம்ப ரசமான பகுதியைப் நாம் படித்துக்கொண்டிருப்பது எப்படித்தான் அந்த பாழாய்ப்போன தொலைபேசிக்குத் தெரியுமோ - கிணி கிணியென்று அழைக்கும். சரி - ஏதாவது முக்கியமான செய்தியாக இருக்கப்போகிறதென்று எடுத்தால் - அழைப்பது நம் பொழுது போகாத நண்பர் ! "அப்புறம் சொல்லுங்க!" என்பார் விடாமல். அழைத்ததோ அவர் ! பின் நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்கிற எளிய லாஜிக்கெல்லாம் அங்கே செல்லுபடியாகாது. நாம் உள்ளுக்குள் நம் கதாநாயகனை எதிரிநாட்டு அந்தப்புறத்தில் இளவரசியுடன் தனியாய் விட்டுவிட்டு பதைபதைப்புடன் இருப்போம் - ஆனால் அதையெல்லாம் அவரிடம் சொல்லிப் புரியவைக்கமுடியுமா என்ன ? ஏதாவது ஊர்க்கதை உலகக்கதையெல்லாம் அளந்து அவரை திருப்தி செய்தால்தான் தப்பிக்கமுடியும். ஒரு வழியாக அவரை சரிக்கட்டிவிட்டு - கதவைத்தட்டும் மார்க்கெட்டிங் ரெப்ரசென்டேடிவை துரத்தி - பால் காய்ச்சிவையுங்களென்று மனைவி போட்ட உத்தரவையெல்லாம் ரத்துசெய்துவிட்டுத்தான் எதிரி நாட்டு அரசனைக் கொன்று மருத நாட்டு இளவரசியை நாயகன் கைப்பிடிக்க முடியும்.

இந்த சங்கடங்களெல்லாம் இல்லாமல் நிம்மதியாய் நாவல்களைப் படிக்க மற்றொரு சிறந்த இடமுண்டு. அதுதான் நமது அலுவலகம் ! ஆனால் இங்கு வசதிகளைப்போலவே ஆபத்துக்களும் அதிகம். அம்புட்டுக்கொள்ளும் ஆபத்தைத்தான் சொல்கிறேன் ! நீங்கள் மாட்டிக் கொள்வதும் மாட்டிக்கொள்ளாததும் உங்கள் இருக்கை அமைந்துள்ள இடத்தில்தான் உள்ளது. எல்லா அலுவலகங்களிலுமே தொந்தரவற்ற சில இருக்கைகள் ஈசான்ய மூலைகளிலோ அல்லது ஒதுக்குப்புறமான வேறிடங்களிலோ அமைந்திருக்கும். அரசு அலுவலகங்களென்றால் இதுபோன்ற இடங்கள் பலதும் கிடைக்கும் - தனியார் நிறுவனமென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். இப்படிப்பட்ட "விகடன் - குமுதம்" இடங்களுக்கு இருக்கும் போட்டா போட்டியைப் பார்க்க வேண்டுமே ! நீ முந்தி நான் முந்தி என்று அடித்துக் கொள்ளாத குறை ! இப்படிப்பட்ட ராஜபோக இடம் தப்பித்தவறி கிடைத்தால் அதனை நழுவவிடாதீர்கள் - அங்கே நீங்கள் எழுத்தாளராகவோ இலக்கியவாதியாகவோ மலர்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் ! அதற்கப்புறம் நீங்களும் நாவல் எழுதி உலகத்தை உய்விக்கலாம் !

இப்போது சொல்லுங்கள் - நாவல் படிப்பதென்பது சிறந்ததொரு கலைதானே ?
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.