![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 34
![]() இதழ் 34 [ ஏப்ரல் 16 - மே 15, 2007 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
(தொடர்ச்சி...) ஆரம் ஒவ்வொரு தளத்தின் கூரையிலும் சுற்றிலும் அமையும் உறுப்புகளை ஆரமென்பர். ஆரத்தில் கூடங்கள், சாலைகள் (23), பஞ்சரங்கள் (24) ஆகிய உறுப்புகள் தலைமையுறுப்புகளாய் அமைய, அவற்றை இணைக்கும் ஆரச்சுவர் மிகச் சிறிய நாசிகைகளுடன் துணையுறுப்பாய் இடம்பெற்றிருக்கும். தலைமை ஆர உறுப்புகள் அனைத்தும் நாசிகைகள் பெற்றிருக்கும். இவற்றின் நாசிகைகளிலும் ஆரச்சுவர் நாசிகைகளிலும் சிற்பங்கள் அல்லது சுதையுருவங்கள் இடம்பெறுதல் இயல்பு. சில ஆர உறுப்புகள் ஆறு அங்கங்கள் பெற்றமைவதும் உண்டு (25). மேலுறுப்புகள் இறுதித் தளக் கூரைக்கு மேல் கழுத்து, தலை, குடம் காணப்படும். வேதிகையெனும் மேடையமைப்பின் மீது கழுத்துப் பகுதி உள்ளடங்கக் காட்டப்பட்டிருக்கும். அதன் சுவரில் சிற்பங்கள் இருக்கலாம் (26), கோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். அவற்றில் சிற்பங்களோ, சுதையுருவங்களோ அமையும் (27). சிகரம் எனும் விமானத்தின் தலைப்பகுதி நாசிகைகளுக்கான தலைப்புகளைப் பெற்றுப் பல்வேறுவிதமான அழகூட்டல்களுடன் காணப்படும். அவை பற்றிய அனைத்துத் தரவுகளையும் விரிவாகப் பதிவு செய்தல் வேண்டும். கோபுரத்தின் உட்பகுதி கோபுரத்தின் உட்பகுதியிலுள்ள வாயில்நிலைகள், உட்புறச் சுவர், மேடைகள், கூரைப்பாளங்கள், தூண்கள் என அனைத்தும் நோக்கி அவை பற்றிய தரவுகளைப் பதிவுசெய்ய வேண்டும். சில கோயில்களில் கோபுர உட்பகுதித் தூண்கள் சிறுசிறு செவ்வகங்கள் அல்லது சதுரங்களாகப் பகுக்கப்பட்டுச் சிற்பங்களால் புனையப்பட்டிருக்கும். திருவதிகை வீரட்டானேசுவரர், திருவண்ணாமலை அண்ணாமலையார், விருத்தாசலம் விருத்தகிரீசுவரர், திருப்பைஞ்ஞீலி நீலிவனநாதர், சிதம்பரம் நடராசர், திருவாரூர்த் தியாகேசர், குடந்தை நாகேசுவரர் கோபுரங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இச்சிற்பப் புனைவுகளை விரிவான அளவில் ஆராய்ந்து தரவுகள் சேகரிக்கும்போது, திசைவாரியாகத் தூண்களின் வரிசை எண்ணையும், ஒவ்வொரு தூணிற்கும் கீழிருந்து மேல் அல்லது மேலிருந்து கீழாகச் சிற்ப வரிசை எண்ணும் தவறாமல் குறித்திடல் குழப்பம் தவிர்க்கும் உத்தியாகும். கோபுரத்தின் கூரைப்பாளங்களில் குறியீடுகள் வெட்டப்பட்டிருக்கலாம். செண்டு, மீன் என அரசச் சின்னங்கள் இருக்கலாம். கோபுரங்களின் உட்பகுதியில் படிகள் இருப்பின், அனுமதி பெற்று மேலேறிச்சென்று கோபுரத்தின் உட்பகுதியையும் விரிவான ஆய்வுக்குட்படுத்தலாம். திருப்பராய்த்துறைத் தாருகாவனேசுவரர் (28), திருவானைக்கா சுந்தரபாண்டியன் கோபுரம் (29) போன்றன இத்தகு படியமைப்புகளையும், மேற்றளங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. துணை விமானங்கள் இறைவி கோயில் விமானம், திருச்சுற்றிலுள்ள பிற விமானங்கள் ஆகியவற்றையும் முதன்மை விமானம் போலவே அடி முதல் நுனிவரையில் விரிவான ஆய்விற்கு உட்படுத்தித் தரவுகளைப் பதிவுசெய்ய வேண்டும். கருவறைகளிலுள்ள இறைத் திருமேனிகளைச் சிற்பங்களை ஆய்வு செய்யுமாறு போலச் செய்து தரவுகள் சேகரிக்க வேண்டும். அனைத்து விமானங்களின் உட்புறமும் பொள்ளலாக உள்ளதா (30), கூரைத் தடுப்புப் பெற்றுள்ளதா (31) என்பதை இயலுமிடங்களில் கண்டறிவது விமானக் கட்டுமானம் பற்றி அறிய உதவும். திருச்சுற்றுகள் திருச்சுற்றுகள் சில கோயில்களில் ஒன்றுக்கு மேற்பட்டு அமைவதுண்டு. சில திருச்சுற்றுகள் மாளிகையமைப்புப் பெற்றிருக்கும். சில கோயில்களில் விமானங்களைச் சுற்றித் திருநடை மாளிகை அமைப்பு இருக்கும். உள்திருச்சுற்றுகள் தூண்கள் பெற்றிருக்கும். இத்தூண்களின் அமைப்புமுறை, உறுப்புகள், இவற்றிலுள்ள சிற்பங்கள் (32), கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கூர்ந்தறிந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். திருச்சுற்று மாளிகைகள் தாங்குதளமோ துணைத்தளமோ பெற்றிருக்கலாம். இம்மாளிகைகளில் தனிச்சிற்பங்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் திருச்சுற்று மாளிகைகளை முழுமையாக ஆராயவேண்டும். கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலில் அரிய பூப்பலகை ஒன்றைத் திருச்சுற்று மாளிகையில் இருந்துதான் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர் முனைவர் அர. அகிலா கண்டுபிடித்தார் (33). கல்வெட்டோடு கூடிய இப்பூப்பலகை அக்கோயிலை ஆராய்ந்து எழுதியுள்ள பல அறிஞர்களின் பார்வைக்குச் சிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துக் கட்டுமானங்களிலும் புறச்சுவர்களை ஆய்வது போலவே அவற்றின் உட்சுவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். திருச்சுற்றுகளின் அக, புறச்சுவர்களையும் நன்கு ஆராய்தல் அவசியம். திருப்பணிகளால் அருமையான சிற்பங்கள் பல இடம்பெயர்ந்து இத்தகு சுவர்களில் இடம்பெற்றுவிடுகின்றன. திருமழபாடித் திருக்கோயிலில் இரண்டு அரிய ஆடற்சிற்பங்கள் திருச்சுற்றுச் சுவர்களில் இடம்பெற்றுள்ளமையை இங்கு நினைவுகூரலாம் (34). கீழையூர்த் தென்வாயில் ஸ்ரீகோயிலின் பெருமண்டப அகச்சுவரில் பழுவேட்டரையர் கல்வெட்டு இடம்பெற்றுள்ளது (35). திருப்பணியாளர்களின் கைகள் எந்தச் சேதத்திற்கும் துணிந்தவை என்பதால் கோயில் வளாகத்தின் எப்பகுதியையும் தரையுட்பட கவனிக்காது விடுதல் கூடாது. திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோயில் திருச்சுற்றுத் தரையில் இசைக்கருவிகள் பற்றிய ஆதித்த சோழரின் கல்வெட்டுப் பதிக்கப்பெற்றிருந்தது (36). அதே கோயிலின் திருச்சுற்று மாளிகைக் கூரையிலிருந்து இதுநாள் வரையும் படியெடுக்கப்படாத மாறஞ்சடையன், முதற் பராந்தகர், முதல் இராஜேந்திரர் கல்வெட்டுகள் உள்ள தூண்கள் கண்டறியப்பட்டுப் படியெடுக்கப்பட்டன (37). கோயில் வளாகத்தில் எங்கு எது இருக்கும் என்று கூறமுடியாதென்பதால் நாட்டத்தோடும் விழிப்போடும் தேடுதல் வேண்டும். செப்புத்திருமேனிகள், ஓவியங்கள் கோயில் வளாகத்துள்ள செப்புத் திருமேனிகளை ஆய்வு செய்ய அனுமதி கிடைத்தால், சிற்பங்களை ஆய்வு செய்வது போலவே அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தித் தரவுகள் சேகரிக்கலாம். ஓவியங்களின் காலத்தை அவற்றில் பயனபடுத்தப்பட்டிருக்கும் வண்ணம், கோடுகளின் தன்மை, உருவங்களின் கண்கள், ஆடையணிகலன்கள் கொண்டு நிர்ணயிக்கலாம். பல்வேறு அரசமரபுகளின் காலங்களில் வரையப்பெற்ற ஓவியங்களைப் பார்த்து வைப்பது பயன் தரும். பிற்கால ஓவியக் காட்சிகள் பெரும்பாலானவற்றில் எழுத்து விளக்கங்கள் இடம் பெறுவதால் அவ்வெழுத்துக்களும் காலநிர்ணயத்துக்கு உதவும் (38). ஓவிய ஆய்வில் ஓவியங்களின் காலம், அவை வெளிப்படுத்தும் வரலாறு, புராணம் ஆகியன கவனிக்கப்படல் வேண்டும். சிற்பங்கள் சிற்பங்களை அவற்றின் அளவு, இடம்பெற்றிருக்கும் கட்டுமானப்பகுதி, வெளிப்படுத்தும் நிகழ்வு, வடிவ அமைப்புக் கொண்டு பல்விதமாக வகைப்படுத்தலாம். அழகூட்டல்கள், உருவங்கள் என்று பிரித்து, உருவங்களில் இறைமேனிகள், மனித வடிவங்கள், பிற உயிரினங்கள் என உட்பகுப்புச் செய்து கொள்வது எளிமையானது. அழகூட்டல்களையும் இடம்நோக்கி வகைப்படுத்தலாம். கல்வெட்டுகள் கல்வெட்டுகள் கட்டுமானத்தின் எப்பகுதியிலும் இருக்கக்கூடும் என்பதால் ஓர் ஒழுங்கிலான முழுமையான தேடல் தேவை. கோபுரத்தில் தொடங்கிச் சுற்றுகள், துணை விமானங்கள், அவற்றின் முன்னுள்ள மண்டபங்கள், முதன்மை விமானம், அதன் முன்னுள்ள மண்டபங்கள் என வரிசைப்படுத்தித் தொகுக்க வேண்டும். கல்வெட்டுகள் சுண்ணாம்புப் பூச்சுக்குள் மறைந்திருக்கும் என்பதால் பூச்சுக்களை அகற்றித் தேடல் வேண்டும். திருக்கோட்டியூர் பெருமாள் கோயில் திருச்சுற்றுச் சுவரின் சுண்ணாம்புப் பூச்சுக்குள் மறைந்திருந்த நாயக்கர் கால ஓவியங்களை இந்நூலாசிரியர்கள் வெளிப்படுத்தியமையை இங்கு நினைவுகூரலாம் (39). கல்வெட்டுகளை எண்ணிட்டுப் பார்வைப் படிப்புச் செய்ததும், அவை குறிக்கும் மன்னர் பெயர், ஆட்சியாண்டு, செய்தியின் தன்மை ஆகியவற்றைத் தனியே தொகுத்திடின், ஆய்வுக்குரிய கோயிலின் சமய, சமுதாய, அரசியல் தொடர்புகளும் பொருளாதார நிலையும் தெரியவரும். கல்வெட்டுகளுள் சில முந்து திருப்பணிகளின் காரணமாகத் தொடர்பற்று இருக்கலாம் (40). சில முற்றுப்பெறாமல் நிற்கலாம் (41). சில கல்வெட்டுகள் துண்டுகளாகச் சிதறியிருக்கலாம். பொறுமையும் விடாமுயற்சியும் விட்டுப்போன தொடர்ச்சிகளைப் பெற்றுத்தரும் (42). காலநிர்ணயம் கல்வெட்டுத் தரவுகளே கோயில் கட்டியவர் பெயரையும் கட்டப்பட்ட காலத்தையும் காரணத்தையும் தரக்கூடும். திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் விமானத்திலுள்ள கல்வெட்டு அதைக் கட்டியவராகப் பூதி ஆதித்தபிடாரியை இனங்காட்டுகிறது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தை, 'நாம் எடுப்பித்த திருக்கற்றளி' என்று முதலாம் இராஜராஜர் பெருமையோடு அங்குள்ள கல்வெட்டொன்றில் குறிப்பிடுகிறார். கல்வெட்டுகள் கட்டியவரையோ, கட்டப்பட்ட காலத்தையோ அடையாளம் காட்டாத நிலையில், கட்டட அமைப்பும் சிற்பங்களும் கொண்டே காலத்தையும் நிர்ணயிக்க வேண்டும். காலநிர்ணயத்துக்குப் பெரிதும் துணைநிற்பன முதன்மை விமானத்துக் கீழ்த்தளத் தூண்களே. இத்தூண்களின் போதிகைகள் தரங்கம் பெற்றிருப்பின் அவற்றைப் பல்லவர் கட்டமைப்பாகவும் (43) தரங்க எழுச்சிகளுக்கிடையே குளவு பெற்றிருப்பின் முற்சோழர் கட்டுமானமாகவும் (44) கொள்ளலாம். வெட்டுப் போதிகைகள் முதலாம் இராஜராஜர் காலம் முதல் காணப்படுகின்றன (45). நாணுதல், மதலையமைப்புடன் கூடிய போத்டிகைகள் முதற் குலோத்துங்கர் காலக் கட்டுமானங்களில் இடம் பெற்றுள்ளன. நாணுதல்களின் கீழ்ப்பகுதியில் சிறு மொட்டுப் போன்ற குமிழ் அமைக்கப்பட்டிருப்பதை மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில் தூண்களில் காணலாம். வெட்டுப் போதிகைகளும் இக்காலக் கோயில்களில் தொடர்ந்துள்ளன. தூணின் பாதப்பகுதியில் நாகபந்தம் இடம்பெறுவதை இரண்டாம் இராஜராஜர் காலம் முதல் காணமுடிகிறது. தாராசுரத்து ஐராவதேசுவரம் சிறந்த எடுத்துக்காட்டாகும். பிற்பாண்டியர் தூண்களின் போதிகைகள் தரங்கம், வெட்டு இரண்டும் பெற்றுள்ளன. திருக்கோளக்குடிக் கோயில் கட்டுமானங்களை இதற்குச் சான்றாகக் கூறலாம். இவ்வமைப்பு நெடுங்காலம் பின்பற்றப்பட்டது. சிற்பங்களை இன்ன காலத்தன என்று உறுதிப்படுத்துவதற்கு உரிய நெறிமுறைகளும் எடுத்துக்காட்டுகளும் கொண்ட நூல்கள் இல்லை எனினும், சில பொதுவான வழிகாட்டல்களின் அடிப்படையில் அதிக வழுவின்றிக் காலத்தைச் சுட்டமுடியும். 3. அறிதல் தரவுகளைத் தொகுத்துக் காலநிர்ணயம் செய்தபிறகு, அக்கோயில் தொடர்பான நூல்கள், கட்டுரைகள், கல்வெட்டுப் பாடங்கள் ஆகியவற்றுடன், தொகுத்த தரவுகளை ஒப்பிட்டு, முரண்படுவனவற்றைக் களத்தில் சரிபார்த்துத் தரவுகளை நேர்செய்து கொள்ளவேண்டும். கட்டுமானம், சிற்பம், கல்வெட்டு எனும் தலைப்புகளின் கீழ்த் தொகுத்துள்ள அனைத்துத் தரவுகளையும் ஆய்வுத் தலைப்புக்கேற்ற பல்வேறு உட்தலைப்புகளின் கீழ்ப் பிரித்துக் காலநிரலாக வகைப்படுத்த வேண்டும். இது கோயிலின் வயதுக்கேற்ற வரலாற்றை வழங்கும். 4. தெளிதல் ஆய்வுக்கு உட்பட்டிருக்கும் கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் அமைந்துள்ள கோயில்கள், ஆய்வுக் கோயிலின் சமகாலக் கோயில்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அதன் வழி முகிழ்க்கும் தரவுகளை முடிவுரையாகப் பயன்படுத்தலாம். அறிதலும் தெளிதலுமே அணுகி ஆராய்ந்து தொகுத்த தரவுகளை வரலாறாகக் கட்டமைக்கின்றன. பின்குறிப்புகள் 23. இவற்றைப் பல்லவர் குடைவரைகளில்தான் முதன்முதலாகக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டு மாமல்லபுரம் வராகர் குடைவரை. 24. பஞ்சரம் முதன்முதலாக மாமல்லபுரம் ஒற்றைக்கல் தளிகளான அத்யந்தகாமம், நகுலசகாதேவரதம் ஆகியவற்றில்தான் அறிமுகமாகிறது. 25. பழுவூர் அவனிகந்தர்வ ஈசுவர கிருக வளாகத்திலுள்ள தென்வாயில் ஸ்ரீகோயில் ஆறங்கச் சாலை பெற்றுள்ளது. பனைமலைத் தாளகிரீசுவரர் கோயில் ஆறங்கச் சாலை, கூடம் பெற்றுள்ளது. 26. திருவெண்காட்டீசர் கோயில், மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில் விமானங்களின் கழுத்துப் பகுதி இத்தகு சிற்பங்களைக் கொண்டுள்ளன. 27. அற்புதமான கிரீவக் கோட்டச் சிற்பங்களை அவனிகந்தர்வ ஈசுவர கிருக வளாகத்து வடவாயி, தென்வாயில் ஸ்ரீகோயில்களில் காணலாம். கொடும்பாளூர் நடுத்தளி, தென் தளிகளிலும் கூட இத்தகு அரிய சிற்பங்கள் உள்ளன. 28. மு.நளினி, இரா.கலைக்கோவன், தாருகாவனேசுவரர் கோயிலும் கல்வெட்டுகளும், வரலாறு-8, பக். 87. 29. இரா.கலைக்கோவன், திருவானைக்கா சுந்தரபாண்டியன் கோபுரம், பதிப்பிக்கப்படாத கட்டுரை. 30. பொள்ளலான விமானங்களுக்குச் சிறந்த சான்று தஞ்சாவூர் இராஜராஜீசுவரம். 31. பெரும்பாலான விமானங்கள் கூரைத் தடுப்புப் பெற்றுள்ளன. எ-கா. சதுர்வேதிமங்கலத்து உருத்திரகோடீசுவரம். 32. திருவையாறு ஐயாறப்பர் கோயில் சுற்று மாளிகைத் தூண்களில் பல அரிய ஆடற்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. 33. தினமணி, 27-10-1994. 34. M.Nalini, R.Kalaikkovan, Rare Karana Sculptures from Thirumalapadi, Quest Historica, Vol. I No. 2, Oct.2002, pp.43-50. 35. இரா.கலைக்கோவன், பழுவூர்ப் புதையல்கள், கழக வெளியீடு, சென்னை, 1989, ப.97 36. வாருணிக்குக் கலைக்கோவன், தினமணி 16-3-1999. 37. The Hindu, 6-3-1999. 38. தினமணி, 11-4-1990; 30-9-1990. 39. மாலைமுரசு, 18-8-1990. 40. மு.நளினி, இரா.கலைக்கோவன், உருத்திரகோடீசுவரம் கோயிலும் கல்வெட்டுகளும், வரலாறு 11, பக். 107-154. 41. மேற்படி. 42. மு.நளினி, விட்டுப்போன தொடர்ச்சி, வரலாறு 2, பக். 42-45. 43. மாமல்லபுரம் ஒற்றைக்கல் தளிகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமையும். 44. பசுபதி கோயில் பிரம்மபுரீசுவரர் விமானம் இத்தகு போதிகையைப் பெற்றுள்ளது. 45. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் இவற்றைப் பார்க்கலாம். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |