http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 38

இதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ]
3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

தரிசனம் கிடைக்காதா!!!
பிராமி தோன்றிய இடமும் உடையாளூர் அறக்கட்டளையும்
கதை 11 - ஒளி
திரும்பிப் பார்க்கிறோம் - 10
இராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு)
இராஜசிம்மர் நினைத்தார்; இராஜராஜர் முடித்தார்
A Megalithic Pottery Inscription and a Harappan Tablet : A case of extra-ordinary resemblance
Agricultural Terms in the Indus Script - 2
அங்கும் இங்கும் (ஆக. 15- செப். 15)
Silpi's Corner-Introduction
Silpi's Corner-01
Links of the Month
ஆனங்கூர் - உத்தமரா? பராந்தகரா?
நீலப் பூக்களும் நெடிய வரலாறும்
இதழ் எண். 38 > கதைநேரம்
ஆண்டு நிறைவு மலர் சிறப்புச் சிறுகதை


திருவாலவாயுடையானைப் போன்றதொரு நல்லவனுக்கு - அப்பிராணிக்கு - ஆனாலும் இத்தனை சோதனைகள் ஏற்படக்கூடாது என்று சொன்னால் ஏற்பீர்களா, மறுப்பீர்களா ?

விஷயத்தைக் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லிவிடுகிறேன்.

உடையானுக்கு பரம்பரை பரம்பரையாக விவசாயம் தொழில். தொண்டை மண்டலத்தில் சோழ கேரள நல்லூரில் கையகலத்திற்கு நிலம். வருடத்திற்கு இரண்டு போகம் விதைத்து - உழுகுடிகளை வைத்து வேலைபார்த்து - வானம் பொய்க்காமலிருந்து - ஒரு வழியாகப் பால் கட்டி நெல் விளைந்து கதிர் முற்றி அறுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். விளையும் நெல்லில் இராஜாங்கத்துக்கும் ஊரோமுக்கும் தண்டமாக இறை வேறு அளந்தாக வேண்டும் ! இத்தனை சிக்கல்களையும் மீறி ஏதோ வயிற்றுக்குக் குறையில்லாமல் காலட்சேபம் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

"இருந்தது" என்று இறந்தகாலத்தில் குறிப்பிடுகிறேன் - ஏனெனில் கடந்த ஒரு வாரத்தில் அந்த ஜீவனத்திற்கும் கேடு வந்துவிட்டது. நிலம் பறிபோய்விட்டது ! சொந்த மாமனே ஏதோ பழைய முறி ஓலையைப் பஞ்சாயத்தாரிடம் பத்திரமாகக் காட்டி நிலத்தைப் பறித்துக்கொண்டுவிட்டான். அது எந்தக் காலத்திலோ உடையானுடைய முப்பாட்டன் எழுதிய ஓலை... அதில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய நில எல்லைகளையும் தற்போதைய நில எல்லைகளையும் குறிப்பிட்டு ஊராரைக் குழப்பி மாமன் நிலம் தன்னுடையதுதான் என்று ஒரேயடியாகச் சாதித்துவிட்டான் ! தன்னுடைய நிலத்தைத்தான் உடையான் இத்தனை காலம் உடைமையாக்கிக்கொண்டிருந்தானாம் - நியாயப்படி பார்த்தால் அதற்குப் பிரதியாக தன்னுடைய நிலத்தில் வாழ்நாள் முழுக்க அவன் உழுகுடியாய் வேலை செய்ய வேண்டுமாம் - ஏதோ சொந்த அக்காள் மகன் என்பதால் போனால் போகட்டும் என்று விட்டுவிடுகிறானாம் - எப்படி இருக்கிறது கதை ?

மாமன்காரன் கட்டுவது அண்டப் புளுகு ஆகாசப்புளுகு என்று தெரிந்தாலும் ஊரில் செல்வாக்கு மிகுந்த அவனை எதிர்த்து உடையானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கண்ணெதிரே நடக்கும் அக்கிரமத்தைப் பார்த்து ஊரார் கையையும் வாயையும் கட்டிக்கொண்டு கிடந்தார்கள் ! அப்படி மீறிக் கேள்வி கேட்ட ஓரிருவருக்கும் அடியாட்களின் "பரிசு"தான் கிடைத்தது.

வாழ்க்கையே வெறுத்துவிட்டது உடையானுக்கு. இனி யாருக்காக / எதற்காக வாழவேண்டும் என்றெல்லாம் வினோதமான கேள்விகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. சொந்த ஊரில் பிழைப்பை ஏறக்கட்டிவிட்டு வெளியூருக்குச் சென்று பிழைக்கலாமென்றான் - ஆனால் அங்கும் உதவிக்கரம் நீட்டுவதற்கு ஆட்கள் வேண்டுமே ? உடையானைப்போன்ற அனாதைக்கு அதுவும் சாத்தியப்படவில்லை. நண்பர்கள் மெல்ல விலகத் தொடங்கினார்கள். அவன் மீது பரிதாபப்பட்டவர்கள்கூட ஜாடை மாடையாக அவனது கஷ்டகாலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டார்களே தவிர உதவி செய்கிறோமென்று ஒருவர்கூட முன்வரவில்லை.

சட்டென்று மிகத் தனியானவனாக உணர்ந்தான் உடையான். நாள் தவறாமல் வழிபட்டு வந்ததற்கு நல்ல வழி காண்பித்து விட்டார் மனுகுல கேசரீ......ச்சுரமுடையார் ! ஒரு தவறும் செய்யாமல் இத்தனை சோதனைகளை இந்த நல்லவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறானே - இவனது வாழ்வில் ஒரு விளக்கேற்றி வைப்போம் என்று எண்ணாத தெய்வமும் ஒரு தெய்வமா ? சீச்சீ ! இதையா இத்தனை நாட்கள் வழிபட்டுக்கொண்டிருந்தோம்...? மாமன் மட்டுமல்ல - இந்த உலகத்தில் எல்லோரும் சுயநலமிகள்தான். குறிப்பாக இந்த நாசமாய்ப்போன சோழ கேரள நல்லூரில் அத்தனை பேரும் கடைந்தெடுத்த சுயநலவாதிகள் - அல்லது கஷ்ட காலத்தில்கூட அடுத்தவனுக்கு உதவத் தைரியமில்லாத கோழைகள் ! செத்தாலும் வேற்று மண்ணில் சாக வேண்டுமே தவிர பாவம் பிடித்த இந்த மண்ணில் சாயக்கூடாது !

அந்த மாலை நேரத்தில் கற்றளிக்கருகில் நின்றுகொண்டு நீண்ட நேரமாக வானம் பார்த்துச் சிந்தித்துக்கொண்டிருந்தவன் சட்டென்று இலக்கின்றி பனங்காட்டின் வழியே உத்தமச் சோழ நல்லூருக்குச் செல்லும் பாதையில் இறங்கிவிட்டான்....! எதற்காகச் செல்கிறோம் - எங்கே செல்கிறோம் என்று எந்தத் தீர்மானங்களும் அவனிடம் இல்லை. இந்த ஊரில் இனி ஒரு கணம் கூட இருக்கக்கூடாது - அவ்வளவுதான். பாவம் பிடித்த இந்த மண்ணிலிருந்து எவ்வளவு தூரம் விலகிப் போய்விடுகிறோமோ அவ்வளவு நல்லது.

நல்லூருக்குச் செல்லும் பாதை மிக நீண்டது என்பது தெரியும்தான். ஆள் அரவமற்ற அந்தப் பனங்காட்டுப் பாதையில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு சென்றாலே இரண்டு ஜாமத்துக்கு மேல் ஆகிவிடும்.... சாதாரணமாக மாலை நேரத்தில் அந்தப் பக்கம் யாரும் தலை வைத்துப் படுப்பது கிடையாது. உடையானே இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் ஒரு நாள்கூட அந்தப் பக்கம் போனது கிடையாது.

என்னவோ - அந்தப் பக்கமாகத்தான் போகவேண்டுமென்று தோன்றிவிட்டது. நடக்கத்துவங்கிவிட்டான். மெளனமாகத் தலையைக் குனிந்தபடி ஊரைக் கடக்கும் அவனை அந்தப் பகுதி மரங்களும் செடிகொடிகளும் பாறைகளும் ஜந்துக்களும் அழுதுகொண்டே கையசைத்து வழியனுப்பி வைத்தன.

அவன் மெல்ல நடந்துகொண்டேயிருந்தான். அவனைச் சுற்றி ஒரு இருள் மெளனமாகப் படர்ந்தது. சற்று தூரத்தில் "கர்.....ர்...ரக்" என்னும் மண்டூகங்களின் ஒலியும் தூங்குமூஞ்சி மரங்களின் புர்....புர்... என்னும் ஒலியும் கேட்கத்துவங்கின.

அவன் நடந்து போய்க்கொண்டேயிருந்தான்.

வழக்கமாக இரவு நேரங்களில் தனியாக வெளியில் தலைகாட்டக்கூட பயப்படுபவன் அன்று எந்த பயமுமின்றி பாம்புகளும் தேள்களும் நடமாடும் அந்தப் பாதையில் எந்தக் கவலையுமில்லாமல் நடந்துகொண்டிருந்தான். ஏதாவது கட்டு விரியன் கடித்து வைத்தால் ? நல்லதுதான். விஷமேறிச் சாகலாம். கடிக்கவில்லையா ? கவலையில்லை - பசியால் செத்துவிட்டுப் போகிறது. அல்லது வழியில் ஏதாவது பாழுங்கிணற்றில் தவறிப்போய்க் கால்வைத்துக் கீழே விழுந்துவிட்டால்கூட நல்லதுதான். கண்ணீர் வழிந்து வழிந்து உப்பேறிப் போயிருந்த கன்னங்களைத் துடைத்துக்கொண்டான். வாழும்வரை முழுக் கோழையாக வாழ்ந்தாயிற்று. சாகும்போதாவது வீரனாகச் சாவோம் !

இருட்டு மிக அதிகமாகிப் பாதையே மறைந்துபோவதற்குள் நிலவு வந்துவிட்டது. வானத்தையே அடைத்துக்கொண்டு பெரிதாக சித்தரை மாதத்துப் பெளர்ணமி நிலவு. ஏதோ வெறியில் தொடர்ந்து நடந்துகொண்டேயிருந்தான். நல்லூர் வருவதற்கு இன்னும் வெகு தூரம் இருக்கிறது... இருந்தால் என்ன ? நடந்து பார்த்துவிட வேண்டியதுதான். உடலில் கடைசிச் சொட்டு பலம் இருக்கும் வரை கால்களை எட்டப் போட்டு நடக்க வேண்டியது - அப்படி முடியவில்லையென்றால் அப்படியே மயங்கி விழவேண்டியது. நாய் நரிகளுக்கு உணவாகிவிட்டுப் போகிறோம் !

பனங்காடு ஒரு வழியாக முடிந்து ஒற்றை மரக் காடு ஆரம்பித்தது. "ஒற்றை மரக் காடு" - காரணப்பெயர். ஒற்றை ஒற்றையாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளிவில் காட்டு மரங்கள் வளர்ந்து நிற்க, இடையில் புல் பூண்டு விளையாத பாழும் தரிசு நிலம்.....

கண்கள் பசி மயக்கத்தில் லேசாகச் சொருகத் துவங்கின - உடையான் வயிற்றை நனைத்து இரண்டு நாட்கள் ஆகிறது ! கேட்பாரில்லை.... சுற்றிலும் இருக்கும் பொருட்கள் மங்கி இரண்டிரண்டாகத் தெரிகின்றன - இன்னும் அதிக நேரம் தாங்காது... கால்களில் தள்ளாட்டம் அதிகரித்து...

மயங்கி விழும் அந்தக் கடைசிக் கணங்களிலும் நேரத்திலும் பாழாய்ப்போன மாமன் மகள் விக்கிரம சீலியைத்தான் நினைத்துக்கொண்டான் உடையான் ! உன் மனோரதம் நிறைவேறிவிட்டதடி - நான் கடைசியில் நீ நினைத்தபடி நாசமாய்த்தான் போய்விட்டேன்...

உதட்டில் ஒரு புன்னகையுடன் சரிந்து விழுந்தான்.

நிலவு லேசாகக் கழுத்தை நீட்டி அவனை எட்டிப் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டது.


***********************************************************************************************


சட்டென்று முழிப்புத் தட்ட.... இமைகள் மெல்லப் பிரிந்தன. எங்கே இருக்கிறோம் ? அடக் கடவுளே - அத்துவானக் காட்டில் நாதியின்றி தன்னந்தனியாக விழுந்து கிடக்கிறோமா என்ன....

மயங்கி எத்தனை நேரம் ஆகியிருக்கும் ? அடடா, நிலவு உச்சிக்கு வந்து விட்டதே ? நள்ளிரவு தாண்டி விட்டதா என்ன ? இனி உடலில் மிச்சமிருக்கும் பலத்தைச் சேகரித்துக்கொண்டு உத்தமச் சோழ நல்லூர் வரைக்கும் செல்வது சாத்தியமானதுதானா ? எவ்வாறு மயக்கம் தெளிந்து எழுந்தோம்..? ஏதோ "பொர்...."ரென்று சப்தம் கேட்டது போலிருந்ததே - பிரமையா என்ன ?

சுற்றுப்புரங்கள் அந்தகார மோனத்தில் பேரமைதியில் ஆழ்ந்திருக்க... திடீரென்று மீண்டும் அவனுக்குப் பின்னால் அந்த "பொர்....." சப்தம் கேட்க ஆரம்பித்தது !

என்னவென்று பார்ப்பதற்காகத் திரும்பினான். திரும்பியவன் வாய் ஆச்சரியத்தில் அப்படியே அகலப் பிளந்தது ! ஆஹா ! இதென்ன ஆச்சரியம் ? புல் பூண்டு முளைக்காத அந்தப் பொட்டல் வெளியில் இப்படியொரு பெரு வெளிச்சம் ? என்ன அதிசயம் இது ? ஒருவேளை... ஒருவேளை... நாம் இறந்துபோய் விட்டோமா ? தன்னை அழைத்துப் போகத்தான் யம கிங்கரர்கள் வந்திருக்கிறார்களோ என்னவோ ? இல்லையே - உடலில் இன்னும் உணர்ச்சி இருக்கிறதே....கிள்ளினால் வலிக்கிறதே...

தவிர்க்க முடியாத ஆர்வம் உந்தித் தள்ள, அதனை நோக்கி நடந்தான்.

ஒளி மெல்ல மெல்ல அவனை உள்வாங்கிக் கொண்டது.


***********************************************************************************************


சோழ கேரள நல்லூரில் அந்த சித்திரை மாதத்து அதிகாலை பொல பொலவென்று விடிந்தது. வீட்டுப் புழக்கடைகளில் பசுக்களின் "ம்மா..." சப்தமும் அதனைத் தொடர்ந்து "சர்....சர்..."என்று பால் கறக்கும் கறவை சப்தங்களும் கேட்கத் துவங்கின.

விக்கிரம சீலிக்கு முழிப்புத் தட்டியது. கட்டிலிலிருந்து எழுந்தாள். கொண்டையை முடிந்துகொண்டு வாசலைப் பெருக்கி சாணி தெளித்துக் கோலம் போடலாம் என்று வெளியில் தென்னந் துடைப்பத்துடன் வெளியில் வந்தாள். வாசலில் சேர்ந்திருந்த குப்பைகளை துடைப்பத்தைக் கொண்டி படபடவென்று விலக்கிக்கொண்டிருக்கும்போது...

இரண்டு கால்கள் அவளுக்கு முன்னால் வந்து நின்றன. புதிய பாதரட்சைகள் அணிந்த கம்பீரமான கால்கள்....

யாரது ? என்று நிமிர்ந்தவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது ! வந்து நின்றவன் திருவாலவாயுடையான் ! அவனுடைய புதிய ஆடைகளும் அணிமணிகளும்..... கோமாளியைப் போலல்லவா தெரிகிறான் ? என்று நினைத்துக்கொண்டே முகத்தைப் பார்த்தவள் திடுக்கிட்டாள். அது பழைய முகமில்லை... அந்த கோழைத்தனமும் அறியாமையும் காணாமல்போய் உறுதியான கம்பீரம் கலந்த ஆண்மை அதில் பரிணமித்தது ! உடையானா இப்படி ஒரே நாளில் மாறிப் போய்விட்டான் ?

"சீரிளங்கோ வேளார் இருக்கிறாரா ?" - என்ன தைரியம் ? அப்பாவின் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறான் ?

"நீங்கள்.... நீ......"

"கூப்பிடுகிறாயா ?" - அந்தக் குரலில் ஒரு அதட்டல் இருந்தது. கேலிபேசலாம் என்று நினைத்தவளை அந்தக் குரல் மிரட்டிவிட்டது. என்ன திமிர் இவனுக்கு ? என்று நினைத்துக்கொண்டே முற்றத்தை அடைந்து குரல் கொடுத்தாள்...

"அப்பா ! உங்களைப் பார்ப்பதற்காக "யாரோ ஒருவர்" வந்திருக்கிறார்...."

வாசலுக்கு வந்த சீரிளங்கோ வேளார் உடையானின் உடைகளையும் முகபாவத்திலும் ஏற்பட்டிருந்த மாற்றங்களை அந்தக் காலை நேரத்தில் சரிவரக் கவனிக்காதவராய்....

"என்னடா, என்ன சமாச்சாரம் ? என் நிலத்திலேயே உழுகுடியோய் வேலைக்குச் சேர்வதென்று முடிவு செய்து விட்டாயா ?"

"அந்தப் பொய் ஓலையை எடுத்து வாருங்கள் !"

"என்னடா, பொய் மெய்யென்று பிதற்றுகிறாய் ? அதுதான் பஞ்சாயத்திலேயே முடிவாகிவிட்டதே...."

"எடுத்துக்கொண்டு வருகிறீர்களா இல்லையா ?"

"என்ன, என்னையே மிரட்டுமளவிற்குப் போய்விட்டதா ? யாரிடம் என்ன பேசுகிறோமென்று தெரிந்துகொண்டுதான்....." - சடாடென்று அவர் எதிரே பார்க்காத வேகத்தில் கன்னத்தில் பளீரென்று ஒரு அறை விழுந்தது ! பேய் அறை ! "அம்மா !" என்று அலறியபடியே மண்ணில் வீழ்ந்தார் ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்டவரான சீரிளங்கோவேளார் !

"அடேய், எங்கேயடா போய்த் தொலைந்தீர்கள் ? அவனைக் கைவேறு கால் வேறாக வெட்டுங்கள் !" - அவருடைய அலறல் வீட்டின் நாலாபக்கங்களிலும் எதிரொலித்தது.....

வாசலில் தேங்காய் நார் உரித்துக்கொண்டிருந்த இருவர் கடப்பாறைகளுடன் அவனை நெருங்கினார்கள்.....

ஓங்கி ஒரே குத்து !

உடையான் சட்டென்று விலகிக்கொள்ள - கடப்பாறைகள் மண்ணில் பாய்ந்தன. அடுத்த கணம் அவர்களின் முதுகுகளில் இரும்பு உலக்கையாக உடையானின் கால்கள் "நச்"சென்று பதிய..."அம்மா !" என்கிற அலறல் கோடிவீட்டு உவச்சர் பண்ணை வரை கேட்டது. இருவருக்கும் முதுகெலும்பு முறிந்துவிட்டது ! ஒடிசலான தேகத்துடன் மடங்கி மடங்கி நடக்கும் உடையான் பாதங்களிலா இத்தனை பலம் ?? பேய் ஏதாவது அவன் உடலில் புகுந்துகொண்டு விட்டதா என்ன ?

அடுத்த அரை நாழிகையில் சீரிளங்கோவேளாரின் அத்தனை வேளக்காரர்களுக்கும் கை - கால் - கழுத்து - அல்லது முதுகெலும்புகள் முறிந்தன. ஒரே ஒரு சிலம்பக் கம்பை வைத்துக்கொண்டு அத்தனை பேரையும் சுழற்றி சுழற்றி உடையான் சுளுக்கெடுப்பதை கொஞ்சம் பதைபதைப்புடனும் நிறைய பயத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தாள் விக்கிரம சீலி ! இவனை... மன்னிக்கவேண்டும்... இவரையா இத்தனை நாட்கள் உதாசீனம் செய்துகொண்டிருந்தோம் ?


***********************************************************************************************


அதற்குப்பிறகு எல்லாமே மாறிவிட்டது.

சீரிளங்கோ வேளார் எந்த ஓலையைக் காட்டி அவனது சிறு நிலத்தைப் பிடுங்கிக்கொண்டாரோ அதோ ஓலையின் பழைய எல்லைகளைத் துல்லியமாக அளந்து பார்த்ததில் வேளார் வைத்துக்கொண்டிருந்த நிலத்தில் பாதி ஆலவாயுடையானுக்குச் சொந்தமானதாக இருந்தது ! பேராசைப்பட்டுப்போய் ஒரு பெரும் பூதத்தைக் கிளப்பிவிட்டுவிட்டு விட்டோமே - யானை தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்ட கதையாகிவிட்டதே - என்று வேளார் நொந்து போனார்.

அது மட்டுமல்ல - வேளாரின் ஆட்களை உடையான் தன்னந்தனியனாக அடித்துப்போட்டது ஊரில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணிவிட்டது. அதுவரை வேளாருக்கு அடங்கி நடந்துகொண்டிருந்த பலரும் இப்போது அவரை தைரியத்துடன் எதிர்க்கத் துவங்கினார்கள். வேளார் பொய்க் காரணங்கள் கூறி ஊரில் பல்வேறு நிலங்களையும் காலப்போக்கில் மெல்ல மெல்ல வளைத்திருந்தார். அவர்கள் அனைவரும் இப்போது உடையானின் தலைமையில் அவருக்கெதிராக அணிதிரண்டுவிட்டனர். அவரவருடைய பட்டயங்களைக் கொண்டுவரச்சொல்லி நிலங்களை சரியானபடி அளந்து எல்லைக்கற்களை நட்டுவிட்டான் உடையான். அவனை எதிர்த்து வேளாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. திடீரென்று ஒரே நாளில் காற்று அவன் பக்கம் ஒட்டுமொத்தமாகத் திரும்பிவிட்டதைப்போல் காணப்பட்டது.

சோழ கேரள நல்லூரில் அருள்பாலித்துவந்த மனுகுல கேசரீச்சுரமுடையார் வேளாரின் வாயில் அகப்பட்டுக்கொண்டு அன்றாடும் புகுந்து புறப்பட்ட கதை சொல்லுந் தரமன்று. இறைவன் என்றும் பாராமல் தன் ஆத்திரத்தையெல்லாம் அவர்மீதே காட்டினார் வேளார். ஏனெனில் அந்த ஊர் இருந்த நிலைமையில் அவர் ஒருவர்தான் வேளாரின் வசவுகளை பொறுமையாக வாங்கிக்கொண்டு மெளனம் காத்தார்.


***********************************************************************************************


விக்கிரமசீலி புழக்கடை அறையில் மாட்டுத்தொழுவத்திற்கு அருகே விட்டத்தை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தாள். ஒன்றும் தோன்றவில்லை. வாழ்க்கை திடீரென்று சூனியமாகிவிட்டதுபோல் காணப்பட்டது. அவளுக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த திருப்பாப்புலியூர் வரன் என்ன காரணத்தினாலோ தட்டிக் கழிந்துவிட்டது. வேளாரின் துர்தசைக்குக் காரணம் அவரது ஒற்றை மகளின் ஜாதகம்தான் என்று எவரோ கதைகட்டிவிட, அவளது வீட்டிலேயே மரியாதை பெரிதும் குறைந்து விட்டது. வேளாரோ இந்த வதந்திகளை நம்பவும் முடியாமல் நம்பாமலிருக்கவும் முடியாமல் இரண்டுங்கெட்டான் நிலைமையில் இருந்தார்.

ஒன்றும் சொல்வதற்கில்லை. எல்லாம் கெட்ட நேரம், அவ்வளவுதான்.

அறையின் வாயிலில் ஆள் அரவம்... வேளார்தான். தன் பெண் தனியாக இருக்கும் நிலைமை வேளாரின் கல் மனதையும் கரைத்து விட்டது.

"ஏனம்மா இப்படி விட்டத்தை வெறித்துக்கொண்டு தன்னந்தனியே உட்கார்ந்திருக்கிறாய் ? உன் தோழிகளெல்லாம் எங்கே ?"

"அவர்கள் கொஞ்ச நாட்களாக என்னைப் பார்க்கப் பிரியப்படுவதில்லை அப்பா ! என்னைப் பார்த்தாலோ பேசினாலோ அவர்களுக்குக் கெடுதல் வந்துவிடுமென்று அவர்கள் வீட்டில் சொல்லிவைத்திருக்கிறார்கள்...."

"இராணியைப்போல் ஊரை வளைய வந்தாயே அம்மா ! உன் நிலைமையா இப்படி ஆக வேண்டும்...." - தோள் துண்டால் வாயை மூடிக்கொண்டு மெளனமாகக் கண்ணீர் உகுத்தார் வேளார்.

"பாதிரிப்புலியூரிலிருந்து ஏதாவது செய்தி...."

"ஒன்றும் வரவில்லையம்மா - வரும் என்றும் தோன்றவில்லை. என் கேடுகாலம் எப்படியோ அம்மங்குடிக் கிழாருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது போலும்..."

"ஒருவேளை ஜோசியர்கள் சொல்வதிலும் உண்மை இருக்குமோ என்னவோ அப்பா - என்னுடைய தரித்திரம்தான்...."

"சீச்சீ ! அப்படியெல்லாம் சொல்லாதே அம்மா... நீ பிறந்த பிறகுதான் என் வாழ்க்கை நல்ல நிலைமைக்கு வந்தது. எத்தனை நாட்கள் என் வாயாலேயே நான் அதனைக் கூறியிருக்கிறேன் என்று உனக்குத் தெரியாதா என்ன ? அந்த உடையானை இத்தனை தூரம் பகைத்துக்கொண்டிருக்க வேண்டாமென்று தோன்றுகிறது..."

"இல்லையப்பா - என்னவோ மர்மமானது நேர்ந்திருக்கிறது. கடைந்தெடுத்த கோழை அவர் ! நானே பலமுறை சீண்டிப் பார்த்திருக்கிறேன் - சுரணையற்ற ஜென்மம்... என்ன சொன்னாலும் என்னைச் சுற்றிச் சுற்றித்தான் வருவார். சட்டென்று என்னவோ நேர்ந்திருக்கிறது. நான் வேண்டுமானால் தனிமையில் அவரைக் கண்டு பேசி நல்ல வார்த்தை சொல்லி வரட்டுமா அப்பா ?"

"வேண்டாமம்மா - அவன் துஷ்டன். ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால்...."

"தனியாக வரும் பெண்பிள்ளையைத் தாக்கும் அளவிற்கு நடந்துகொள்வார் என்று தோன்றவில்லை. ஒரு முயற்சி செய்து பார்க்கிறேனே...."

"பார்த்துச் செய் அம்மா - மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள் - நான் வேண்டுமானால் ஆட்களைத் துணைக்கு அனுப்பட்டுமா ?"

"வேண்டாமப்பா - நான் பார்த்துக்கொள்கிறேன் !"

உண்மை என்னவெனில் சீலிக்குத் தன்னுடைய மிகுந்த அழகைப் பற்றிய கர்வம் இன்னும் மிச்சமிருந்தது. தன்னுடைய மோகனாஸ்திரத்திற்கு உடையான் நிச்சயம் படிவான் என்று எதிர்பார்த்தாள். ஒரு முயற்சி செய்து பார்க்கிறது... அவளுடைய அகராதியில் தோல்வி என்பதும் உண்டோ ?


***********************************************************************************************


மாலை வெய்யில் மெல்ல விமானத்தின் பின்புறம் மடங்கிங்கொண்டிருந்தது.

கோயிலுக்குப் பின்னால் அமைந்திருந்த மேடையில் தன்னந்தனியனாக அமர்ந்திருந்த உடையானின் நாசியை மல்லிகைப்பூ மணம் மெல்லத் தாக்கியது. திரும்பினான்.

விக்கிரம் சீலி ! முடிந்தவரை தன்னை அழகுபடுத்திக்கொண்டு வந்திருந்தவள், அவனைப் பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு தலைகுனிந்து நின்றாள்.

"சீலி, நீயா..."

"ஆம் - நான்தான் அத்தான்...." - அவளது குரலில் கொஞ்சல் தெரிந்தது.

"என்ன வேண்டும் ?"

"ஒன்றும் வேண்டாம் - கோயிலுக்கு வந்தேன். நீங்கள் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். சரி, இரண்டு வார்த்தைகளாவது பேசிவிட்டுப் போவோமென்று...."

"நான் பல முறை உன்னை அணுகிப் பேச முயன்ற போதெல்லாம் என்னை உதாசீனம் செய்வாயே - தோழிகளிடம் என்னைப் பற்றி, நான் அணிந்திருக்கும் ஆடைகளைப் பற்றியெல்லாம் கேலிபேசுவாயே... அதெல்லாம் என்னாயிற்று சீலி ? எதற்காக இந்தப் புது வெட்கம் ?"

கோபப்படாதே... கோபம்தான் அத்தனை விஷயங்களுக்கும் சத்துரு. இவனிடம் நல்ல வார்த்தையாகப் பேசி விஷயத்தை கிரகிக்க வேண்டும். இவனிடம் ஏதாவது பூதம் புகுந்துகொண்டுவிட்டதா என்பதைக் கண்டறிய வேண்டும். நோஞ்சான் பயலுக்கு எப்படி இத்தனை பலம் வந்தது ? மந்த புத்திக்காரனுக்கு திடீரென்று எப்படி புத்தி கூர்மை வந்தது ? ஏதோ இரகசியம் இருக்கிறது...அதனைக் கண்டுபிடிக்காமல்...

"என்ன சீலி ! அப்படி வெறிக்கப் பார்க்கிறாய் - இன்றைக்கு நான் அணிந்திருக்கும் ஆடை அணிமணிகளைப் பற்றி ஏதாவது கேலி பேசேன்..."

அவனுடைய ஆடைகளை அப்போதுதான் கவனித்தாள். புத்தம் புதியதாக கஞ்சி ஏற்றி... எத்தனை கம்பீரமாகத் தெரிகிறான்... தெரிகிறார்.. இவரையா உதாசீனம் செய்தோம் ?

வினோதமான ஒரு எண்ணம் அப்போது சீலிக்குத் தோன்றியது. இவனை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும் ? இவனுக்கு நம்மேல் விருப்பம் இருந்தால் இவனையே கல்யாணம் கட்டிக்கொண்டு போகிறது... அப்பாவின் வாழ்க்கையும் அத்துடன் சரியாகிவிடும் - எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ! முடிவு செய்துவிட்டாள் அவள்....

சுற்றும் முற்றும் பார்த்தபடி மெல்ல அவன் தோளில் கையை வைத்தாள். கண்களில் காமம் தெரிந்தது.

"கையை எடு சீலி !" - இவர் உடம்பு ஏன் இப்படிக் கொதிக்கிறது ?

"ஏன் - என்னைக் கண்டாலே இப்போது பிடிக்காமல் போய்விட்டதா என்ன ? ஏதோ உங்களின் அருமை தெரியாமல் கேட்பார் பேச்சைக் கேட்டுக்கொண்டு உங்களை அவமதித்தது உண்மைதான் - அதற்கு மன்னிப்புக் கேட்கத்தான் உங்களிடம் வந்தேன். பெண்புத்தி பின்புத்தி என்பது உண்மைதான். என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் !"

அழுதுகொண்டே சட்டென்று நிலத்தில் வீழ்ந்தாள் சீலி. அவளுடைய தலை அவன் பாதங்களில் பதிந்தன. காரியம் நடக்க வேண்டும். அதற்காகக் காலைப் பிடிக்கலாம் - தவறில்லை. ஊர்ப்பயல் எவரும் இன்னும் அவளைப் பார்த்துவிடவில்லை. பேயும் பெண்ணுக்கு இரங்கும் என்கிறார்கள். இவனது - சே, புருஷனாகப் போகிறவரை இன்னமும் மரியாதையில்லாமலே குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன் - இவருடைய - மனம் இரங்காதா என்ன ?

"எழுந்திரு சீலி !" - அவன் அவளது தோளைத் தொட்டு மெல்ல அவளை உயர்த்தினான். தங்க பஸ்பம் வேலைசெய்யத் துவங்கிவிட்டது. காரியம் முடிந்த மாதிரிதான்.

"உன்னை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது சீலி !"

"ஏன் - ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என்னைக் கட்டுவதற்கு உங்களைவிட வேறு யாருக்கு உரிமை இருக்கிறது ?"

"இல்லை - உனக்கு நிலைமையை எப்படிச் சொல்லிப் புரியவைப்பதென்று தெரியவில்லை !"

"ஏன் விலக்கி விலக்கிப் பேசுகிறீர்கள் ? எத்தனை நாட்கள் என்னை ஆசை ஆசையாய் சுற்றி வந்திருக்கிறீர்கள் ? இப்போது நான் உங்களின் காலடி நிழல் தேடி வந்திருக்கிறேன்... அபயம் என்று வந்தவளை விலக்குவதுதான் ஆண்மைக்கு அழகா...."

பலவிதங்களிலும் அவன் மறுத்தும் அவள் பிடிவாதமாக இருக்க, ஒரு கட்டத்தில் அவன் கடுப்பாகி தன்னுடைய ஆடைகளை விலக்கி...

"இதோ பார் !"

அடுத்த கணம் சீலி அப்படியே மயங்கி விழுந்தாள்.


***********************************************************************************************


மாலையில் வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்ற பெண் இன்னமும் வந்து சேரவில்லையே என்ற பதைபதைப்பிலிருந்த வேளார் மெல்ல இருட்டுக் கட்டிக்கொண்டிருந்த வாயிலுக்கு வந்தார். கோயிலுக்குச் செல்வதாகத்தான் கூறிச் சென்றாள்.. ஒருவேளை...

வாயில் திண்ணையில் யாரோ படுத்திருப்பதைப்போல் தெரிகிறது ? சற்று நெருங்கிப் பார்த்தால்... ஐயோ ! இது சீலியல்லவா ? ஆடைகள் நெகிழ்ந்துபோய் - ஏன் இப்படி மயங்கிக் கிடக்கிறாள் ?

"அம்மா ! அம்மா ! அடேய் ! எவராவது தண்ணீர் எடுத்து வாருங்கள் !"

எவரும் வராமல் போகவே வேளாரே தட்டுத் தடுமாறிக்கொண்டு அரைகுறை வெளிச்சத்தில் உக்கிராண அறையிலிருந்து நீர் எடுத்துக்கொண்டு வந்து பெண்ணின் முகத்தில் தெளித்தார். நல்ல வேளை ! உடலில் அசைவு தெரிகிறது....

"அப்பா !"

"என்னம்மா ஆயிற்று ! கோயிலுக்குச் சென்றவள் இங்கே விழுந்து கிடக்கிறாய் ?"

"ஒ....ஒன்றும் தெரியவில்லையே அப்பா.... ஏதோ மங்கலாக நினைவுகள்...."

"அவனை சந்தித்தாயா ? விபரீதமாக ஒன்றும் நடந்துவிடவில்லையே...."

"ஒன்றும் நடக்கவில்லை. அவரை சந்தித்தது நினைவில் இருக்கிறது - என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று காலில் வீழ்ந்தேன் !"

"சீச்சீ ! அந்தப் பரதேசிப் பயல் காலிலா என் பெண் வீழ்ந்தாள் ? கேட்பதற்கே வெட்கம் பிடுங்கித் தின்கிறது !"

"அவசரப்படாதீர்கள் ! ஒரு எண்ணத்தோடுதான் அப்படிச் செய்தேன் - என்னை திருமணம் செய்து கொள்ள அவர் மறுத்தார்... நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தேன்... அப்புறம்...."

"அப்புறம் ? அப்புறம் என்ன நடந்தது ?"

"அதுதான் ஒரே குழப்பமாக இருக்கிறதப்பா - ஒன்றும் அதற்குப்பிறகு ஞாபகத்தில் இல்லை... நீங்கள் நீர் தெளித்த பிறகுதான்..."

"ஐயோ ! தனியாகப் போன உன்னிடம் தகாத முறையில் ஏதாவது...."

"நீங்கள் பயப்படுவதுபோல் ஒன்றும் நடக்கவில்லை - கவலைப்படாதீர்கள் ! ஆனால் மிகுந்த அதிர்ச்சி தரும் சம்பவம் ஏதோ அங்கு நடந்ததாக ஞாபகம். இனி அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமப்பா - நாம் நமது வழியைப் பார்த்துக்கொண்டு போவோம் !"

"சரிதானம்மா...."


***********************************************************************************************


அதன் பிறகு ஒருவர் வழியில் மற்றவர் தலையிடவில்லை. உடையானின் நிலம் பொன்னாய் விளைந்தது. வருடத்திற்கு மூன்று போகம் கண்டான் அவன். கையில் புரண்ட செல்வம் காதுகளிலும் கழுத்திலும் குழைகளாகவும் நகைகளாகவும் வெளிக்காட்டிக்கொண்டது. ஊரார் அவனை உடையார் என்று மரியாதையுடன் அழைக்கத் தலைப்பட்டார்கள். பஞ்சாயத்தில் ஒரு முக்கியஸ்தனானான் அவன். அவனைக் கேட்காமல் ஊரில் நல்லது கெட்டது நடக்கவில்லை. தஞ்சைக்கு இரண்டு முறை சென்று அதிகாரிகளிடம் பரிச்சயம் செய்து கொண்டான் உடையான்.

தனக்கு நல்ல வழி காண்பித்த மனுகுல கேசரீச்சுரமுடையாருக்கு நொந்தா விளக்கு வைக்கவும் அம்மாவாசை போனகம் அமுது செய்ய பொலியூட்டாக தங்கக் காசுகள் நிவந்தம் அளித்தான். அந்த நிவந்தத்தை கோயில் மூலப்பருதையார் சார்பில் சீரிளங்கோவேளாரைக்கொண்டே வாங்கிக்கொள்ளச் சொன்னதுதான் வேடிக்கை.

ஊரே அவனை வாழ்த்தியது.


***********************************************************************************************


சரியாக ஒரு வருடம் கழிந்தபின்...

ஒரு நாள் மாலை.

கேசரீச்சுரமுடையார் விமானத்திற்கு நேர் மேலே சித்திரா பெளர்ணமி நிலவு வானில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்தது.

கோயிலின் தெற்கு வாயிலுக்கருகில் தன்னந்தனியனாக தன்னுடைய பூர்வீக நிலத்துக்கருகில் உடையான் மீண்டும் நின்றான். ஊரைப் பார்த்தான். சிரித்துக்கொண்டான்.

மீண்டும் அதே வழியில் - உத்தமச் சோழ நல்லூருக்குச் செல்லும் பனங்காட்டுப் பாதையில் - மெல்லக் கால்பதித்தான்.

எந்தவித யோசனையுமின்றி - மிக நிதானமாக - அவன் பாதங்கள் பனங்காட்டைக் கடந்தன.

ஒரு நாழிகை - இரண்டு நாழிகைகள் - ஒரு ஜாமம் - நேரம் சென்று கொண்டேயிருந்தது. அவன் அலுப்பு சலிப்பின்றி - பசி மயக்கமின்றி - மெல்ல ஏதோ ஒரு திசையைக் குறிவைத்து நடந்துகொண்டிருந்தான்.

ஏறக்குறைய இரண்டு ஜாம நேரத்திற்குப் பின் அவன் எதிர்பார்த்த இடம் வந்தது. ஒற்றைமரக்காட்டின் தரிசுப் பொட்டலில் அனாதையான ஒரு இடம்.

அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் நிதானமாக அமர்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு மெல்லக் கண்களை மூடினான்.

காத்திருக்க ஆரம்பித்தான்.


***********************************************************************************************


நேரம் எத்தனை கழிந்ததென்று சரியாகத் தெரியவில்லை. முழிப்புத் தட்டியபோது மீண்டும் முதுகின் பின்புறம் "பொர்...." சப்தம் கேட்டது.

அதே பழைய சப்தம். பழைய ஒளிவெள்ளம்.

அவன் முகம் மலர்ந்தது. எந்தத் தயக்கமுமின்றி மெல்ல அந்த ஒளியை நோக்கி நிதானமாக நடக்கத் துவங்கினான்.

ஒளிக்கோளத்தை நெருங்கும்போதில் அதன் நாவு திறந்துகொண்டது. மெல்ல உள்ளே நுழைந்தான். உள்ளே சில சப்தங்கள் கேட்டன. பலத்த புகையின் நடுவே காணப்பட்ட உருவங்கள் பூமியின் உயிரினங்களைப்போல் தெரியவில்லை. பேசிய பாஷையும் கர்... புர்...ரென்று...

"பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டது...."

"தகவல்களெல்லாம் பதிவாகியிருக்கின்றதா என்று பார்..."

ஒரு இயந்திரக் கரம் அவனது மேலாடைகளையும் கீழாடைகளையும் சடாடென்று களைய - அவன் எந்த உணர்ச்சியுமின்றி கண்கொண்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்..

இயந்திரக் கரங்கள் அவன் இடுப்புக்குக் கீழ் புதைக்கப்பட்டிருந்த கருவியை ஆர்வத்துடன் மெல்லப் பிரித்தெடுத்தன.. "நல்ல பதிவு - தரவுகள் தொகுக்கப்பட்டுவிட்டன. நூறாண்டுகளில் பூமி முன்னேறியிருக்கிறது - ஆனால் இன்னும் ஆபத்தானவர்களாக வளரவில்லை..."

"சரி..இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து வருவோம் - கிளம்பு !"

"ஏய் 28689, உன்னை யாராவது அடையாளம் கண்டுகொண்டார்களா ? அவர்களை அழித்துவிட்டாயா ?"

"ஒரே ஒரு பெண்தான் கண்டுபிடித்தாள் - அவளது ஞாபகங்களை மட்டும் அழித்துவிட்டேன். ஆளைக் கொன்றால் பிரச்சனை வருமென்று தோன்றியது..." - அவன் ஒரு இயந்திரம்போல பதில் சொன்னான்.

"சரி - இதனை பதிவுச்சாலைக்கு அனுப்பிவிட்டு அசலை வெளியில் விடு !"

ஏதோ வேதியியல் சாகசத்தில் ஒரு வருடம் உறைந்து கிடந்த நிஜ திருவாலவாயுடையானின் உடல் நிமிடங்களில் மீண்டும் உயிரூட்டப்பட.. அடுத்த அரை நாழிகை நேரத்தில் மீண்டும் அதே பாதையில் - அதே பழைய நிலையில் - பழைய நினைவுகளுடன் - அவன் படுக்கவைக்கப்பட்டான்.

ஒளி வெள்ளம் மெல்ல மேலெழும்பிற்று.


***********************************************************************************************


சட்டென்று முழிப்புத் தட்ட.... இமைகள் மெல்லப் பிரிந்தன. எங்கே இருக்கிறோம் ? அடக் கடவுளே - அத்துவானக் காட்டில் நாதியின்றி தன்னந்தனியாக விழுந்து கிடக்கிறோமா என்ன....

மயங்கி எத்தனை நேரம் ஆகியிருக்கும் ? அடடா, நிலவு உச்சிக்கு வந்து விட்டதே ? நள்ளிரவு தாண்டி விட்டதா என்ன ? இனி உடலில் மிச்சமிருக்கும் பலத்தைச் சேகரித்துக்கொண்டு உத்தமச் சோழ நல்லூர் வரைக்கும் செல்வது சாத்தியமானதுதானா ? சாத்தியமாகித்தான் ஆகவேண்டும். தரித்திரம் பிடித்த அந்த ஊருக்குள் தலைவைத்தே படுக்கக் கூடாது..... எப்படியாவது - நடந்தாவது தவழ்ந்தாவது - நல்லூருக்குப் போய்....

மனுகுல கேசரீச்சுமுடையார் ஒரு வழியாக விழித்துக்கொண்டார்.

வேகவேகமாய் எழுந்தவனின் கீழாடை கருவேல முள்ளில் மாட்டிக்கொண்டு அவனை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுக்க..

அடடா ! இதென்ன ? கிளம்பும்போதே அச்சான்யமாக ஆடை மாட்டிக்கொண்டுவிட்டதே.... அவனை "மேற்கொண்டு போகாதே" என்று எச்சரிப்பதைப்போல்....

கொஞ்சம் யோசித்தான்.

வருவது வரட்டுமென்று மீண்டும் ஊருக்குச் செல்லும் பாதையிலேயே திரும்பினான்.


(முற்றும்)
கல்வெட்டுச் செய்தி
சளுக்கை. வந்தவாசி தாலுக்காவில் ஒரு சிறிய கிராமம். கல்வெட்டுக்களில் இதன் பண்டைய பெயர் சோழகேரள நல்லூர்.

இவ்வூரில் மனுகுல மாதேவீஸ்வரர் என்னும் சிவபெருமான் கோயிலும் சாகர நாராயணப் பெருமாள் என்னும் திருமால் கோயிலும் அமைந்துள்ளன.

சிவபெருமான் கோயிலின் அர்த்தமண்டபத் தென் சுவரில்தான் இந்த அதிசயமான கல்வெட்டு அமைந்துள்து.

திருக்கோயில் - சளுக்கை மனுகுல மாதேவீஸ்வரர் திருக்கோயில்

இடம் - அர்த்தமண்டபத் தென் சுவர்

காலம் - விக்கிரமச் சோழதேவரின் நான்காவது யாண்டு

கல்வெட்டு எண் - 468 / 1920

கல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - தென்னிந்தியக் கோயில் சாசனங்கள்

கல்வெட்டுப் பாடம்

சளுக்கை கல்வெட்டு


என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா ?

கதையில் வந்ததைப் போலவே திருவாலவாயுடையான்.. சீரிளங்கோவேளார்.... என்னும் பெயர்கள்...

அம்மாவாசை.. பொலியூட்டு... நிவந்தம்... சோழ கேரள நல்லூர்......... மனுகுல கேசரீச்சுரம்....

"கல்வெட்டுக் கதை என்கிற பெயரில் ஒரு அறிவியல் புனைகதையை (Science fiction) எழுதி ஜல்லியடித்துவிட்டு அதற்குக் ஆதாரமாக ஒரு நொந்தா விளக்குக் கல்வெட்டு வேறா காண்பிக்க முயல்கிறாய் ? உன்னை...." என்று நீங்கள் அடிக்க வருவதற்குள்.. அடி ஜுட் !this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.