http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 40

இதழ் 40
[ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

புலவரும் புரவலரும்
பஞ்சவன்மாதேவீசுவரம்
சில நேரங்களில் சில கேள்விகள்
திரும்பிப் பார்க்கிறோம் - 12
வீரபுரத்து விநாயகர்
Silpis Corner (Series)
Silpi's Corner-02
சங்ககாலத்து உணவும் உடையும் - 4
நெஞ்சம் அழைத்தது! நேயம் தடுத்தது!
இதழ் எண். 40 > இலக்கியச் சுவை
சங்ககாலத்து உணவும் உடையும் - 4
மா.இராசமாணிக்கனார்

கச்சை - கச்சு

குறிஞ்சி நிலத்தலைமகன் (காதலன்) நுண்ணிய வேலைப்பாடமைந்த கச்சையைக் கட்டியிருந்தான் (குறிஞ்சி, அடி. 125). மதுரையை இரவில் காவல் காத்தவர் நீலக் கச்சையை அணிந்திருந்தனர் (ம.கா. அடி, 639).

அருச்சுனன் பூத்தொழில் பரந்த கச்சையை அணிந்திருந்தான் என்று சிறுபாணாற்றுப்படை செப்புகிறது (அடி. 239). நல்லூர் நத்தத்தனார் அருச்சுனனை நேரிற் கண்டவரல்லர்; அவன் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்குப் பிற்பட்டவர். அவர் வீமனைப் பற்றிச் சொல்லவந்த இடத்தில்,

"பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்"

என்று அருச்சுனனற்கு முன்னவன் என்று சுட்டியுள்ளார்; அருச்சுனனைப் "பூவிரி கச்சைப் புகழோன்" என்று புகழ்ந்துள்ளார். அவர் அவனது கச்சைக்குச் சிறப்புத் தந்துள்ளதைக் கூர்ந்து கவனிப்பின், அருச்சுனனைப் போன்ற சிறந்த போர் வீரர் தமிழகத்தில் 'பூவிரி கச்சை'யை அணிந்திருந்தனர் போலும் எனக் கருத வேண்டுவதாயுள்ளது. அரசமாதேவி மார்பில் வம்பு (கச்சு) வலித்துக் கட்டியிருந்தாள் என்று நெடுநல்வாடை கூறுகிறது (அடி, 149-150).

படம் - மெய்ப்பை

இக்காலத்தில் 'சட்டை' எனப்படுவது அக்காலத்தில் 'படம்' எனப்பட்டது. தொண்டை நாட்டுப் பெருவழிகளைக் காவல் காத்த வீரர் சட்டை அணிந்திருந்தனர் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. 'படம்புக்கு-சட்டையிட்டு' என்பது நச்சினார்க்கினியர் உரை (அடி, 69).

'படம்புகும் மிலேச்சர்' என்பது முல்லைப்பாட்டுத் தொடர் (அடி, 66). மிலேச்சர் அயல் நாட்டார்; அவருட்சிலர் பாசறையில் அரசனது இருக்கையைக் காத்து வந்தவர்; ஊமையர்; சட்டை அணிந்திருந்தனர்.

சங்க காலத்தில் யவனர் தமிழகத்துடன் வாணிகம் செய்தனர். அவருட்சிலர், மதுரை, பூம்புகார், வஞ்சி போன்ற தமிழரசர் தலைநகரங்களிலும் துறைமுகப் பட்டினங்களிலும் வாணிகத்தின் பொருட்டுத் தங்கியிருந்தனர். அந்த யவனர் வடிம்பு தாழ்ந்து பெருக்குஞ் செறிதலையுடைய புடைவை(1)யுடையை அரையில் அணிந்திருந்தனர்; அரைக்குமேல் 'மெய்ப்பை' (சட்டை)யை அணிந்திருந்தனர் (முல்லைப்பாட்டு, அடி, 59-61).

கள்ளைப்பருகி மதுரைத்தெருக்களில் இராக்காலத்தில் திரிந்த மிலேச்சர், முன்னும் பின்னும் தொங்கலாக அறுவையைத் தொங்கவிட்டுச் சென்றனர் என்பது நெடுநல்வாடையில் கூறப்பட்டுள்லது (அடி, 33-35).

அழுக்கேறிய கந்தலாடை சிதாஅர் (பொ.ஆ.படை, அடி, 154) எனவும், சிதர்வை (பெ.ஆ.படை, அடி, 468). எனவும் வழங்கப்பட்டது.

வேறு ஆடைகள்

முருகப்பெருமான் 'நலம்பெறு கலிங்கம்' உடுத்திருந்தான் என்பது திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது (அடி, 109). முருகன் உடுத்திருந்தது செம்மை நிறம் பெற்ற ஆடை என்று நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். அப்பெருமான் இடையில் உதரபந்தத்தின்மேல் உடுத்துத் தொங்கவிட்ட மென்மையுடைய துகில் அவன் குறமகளிரொடு குரவைக் கூத்தாடுகையில் நிலத்திற் பொருந்தியது (அடி, 213-214).

திருப்பரங்குன்றத்துச் சோலையில் முருகனது சிறப்பைப் பாடி விளையாடிய சூரர்மகளிர், இந்திரகோபத்தை ஒத்த நிறம்பிடியாத (சாயம் வற்றாத) இயல்பான சிவப்பாகிய பூவேலைப்பாடமைந்த துகிலை உடுத்திருந்தனர்.

"கோபத் தன்ன தோயாப் பூந்துகில்" (முருகு, அடி, 15).

'துணங்கைக் கூத்தாடிய பூதங்கள் துகிலை உடுத்தன போல' (பெ.ஆ.படை, அடி. 234-235) என்பது உவமையாகக் கூறப்பட்டுள்ளது. "இங்குத் 'துகில்' என்பது வெள்ளையாடையை' என்பது நச்சினார்க்கினியர் உரை.

திருவாவிநன்குடியில் முருகனை வழிபட்ட முனிவர் மரப்பட்டைகொண்டு செய்யப்பட்ட உடையை (மரவுரி உடையை) உடுத்திருந்தனர் (அடி, 126).

கந்தருவர் (இசைவாணர்) புகையை முகந்தால் ஒத்த (மிக மெல்லிய) அழுக்கேறாத தூயவுடையினை அணிந்திருந்தனர்.

"புகைமுகந்தன்ன மாசில் தூவுடை" (அடி, 138).

ஏரகத்து முருகன் கோயில் அருச்சகர் அரையில் காழகம் உடுத்திருந்தனர்.

"புலராக் காழகம் புலர வுடீஇ" (அடி, 184).

'காழகம்-கலிங்கம்' என்பது நச்சினார்க்கினியர் உரை. நெடிய கரையையுடைய நீல நிறப் புடைவை காழகம் எனப்பட்டது (ம.கா. அடி, 598).

பாசறையில் அரசற்குக் கூடாரம் அமைக்கப்பட்டது. கூடாரத்தைச் சுற்றிலும் மதில்போல் வளைத்துக் கட்டப் பயன்பட்ட முரட்டுத்துணி கண்டம் எனப்பட்டது (முல்லை, 44). 'கண்டம்-மதிள் திரை' என்பர் நச்சினார்க்கினியர். அது, 'கண்டத்திரை, பல்வண்ணத்திரை' எனவும் பெயர் பெறும் என்று நச்சினார்க்கினியர் சிந்தாமணியில் (செ. 647,873 உரை) கூறியுள்ளார்.

உடைக்குரிய பெயர்கள்

இதுகாறும் கண்ட சான்றுகளால் நாம் அறியத்தகுவன யாவை?

'துகில், அறுவை, கலிங்கம்' என்பவை மிகவுயர்ந்த மெல்லிய வேலைப்பாடமைந்த ஆடைகள், அவற்றை அரசரும் செல்வரும் உடுத்தனர்; மேலாடையாகவும் பயன்படுத்தினர்; கடவுளர் திருவுருவங்களுக்கும் அணிவித்தனர். காழகம் என்பது ஒருவகை ஆடை. அதனை அருச்சகர் அணிந்திருந்தனர். முனிவர் மரவுரி தரித்திருந்தனர்; கானவர், வீரர், காவலர் ஆகியோர் கச்சை அணிந்திருந்தனர்; அவற்றுள் நீலக்கச்சை குறிப்பிடத்தக்கது, அரசமாதேவி மார்பில் கச்சுக் கட்டியிருந்தாள்; பட்டாடைகளும் வழக்கில் இருந்தன; அரசியல் அலுவலர் சட்டை அணியும் வழக்கம் இருந்தது; அழுக்கேறிய கிழிந்த கந்தலாடை 'சிதாஅர்' என்றும் 'சிதர்வை' என்றும் பெயர் பெற்றது என்னும் விவரங்கள் இதுகாறும் கண்ட சான்றுகள் கொண்டு அறியப்படும்.

காழகம்

காவிரிப்பூம்பட்டினத்திற்குப் பல நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட பொருட்கள் வாணிகத்திற்கு வந்திருந்தன. அவற்றுள் காழகத்துப் பொருள்களும் இருந்தன (ப.பாலை, அடி 191). 'காழகம்-கடாரம்' என்பது நச்சினார்க்கினியர் கூற்று. மலாய் நாட்டில் மேல்கரை ஓரமாயுள்ள 'கடே' என்னும் இடமே பண்டைக்காலத்தில் 'கடாரம்' எனப்பட்டது. அதனை வென்ற முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி 1012-1044) தன்னைக் 'கடாரம் கொண்டான்' என்று வழங்கிக் கொண்டான். கடாரம் என்ற காழகத்திலிருந்து நெய்து அனுப்பப்பட்ட ஆடை 'காழகம்' எனப்பட்டது போலும்! ஏரகத்து அருச்சகர் இதனை அணிந்திருந்தனர் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இது தமிழ்நாட்டு ஆடை வகைகளுள் கூறப்படாதது கவனிக்கத்தகும்.

கலிங்கம்

இன்றைய ஒரிஸ்ஸா மாநிலம் பண்டைக் காலத்தில் கலிங்கம் என்ற நாடாயிருந்தது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தமிழரசர் கூட்டணியை அழித்ததாகத் தன்னைக் கூறிக்கொண்ட காரவேலன் கலிங்கநாட்டுப் பேரரசனாவான். கலிங்கநாடு உயர்ந்த மெல்லிய ஆடைகளுக்குப் பண்டுதொட்டே பெயர் பெற்றது. கலிங்கர் கடல் வாணிகத்திலும் பெயர் பெற்றவர். 'கொள்ளேகால்' என்னும் ஊரில் நெய்யப்படும் ஆடை 'கொள்ளேகால்' என்றே கூறப்படுதல் போலக் கலிங்கநாட்டு ஆடை 'கலிங்கம்' என்றே பெயர் பெற்றிருக்கலாம்.

(முற்றும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.