http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 40
இதழ் 40 [ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
சேக்கிழாரின் பெரியபுராண நாயகர் சுந்தரரின் வாழ்க்கையைப் படிக்கும்போது சில இடங்களில் நெருடல் ஏற்படுகிறது. குண்டையூர் நிகழ்வு அவற்றுள் ஒன்று. திருவாரூருக்குத் தென்கிழக்கில் உள்ள சிறந்த ஊர் குண்டையூர். சேக்கிழாரால் பேரூர் என்று போற்றப்படும் இவ்வூரில் வாழ்ந்த வேளாளப் பெருமகனார் ஒருவர் சுந்தரர் மீது கொண்ட அன்பின் காரணமாகச் செந்நெல், பொன்னொத்த பருப்பு, தீங்கரும்பு போன்றவற்றைச் சுந்தரருக்கு அமுதாகும்படி நீண்ட பல நாள்களாகத் தவறாமல் பரவையின் மாளிகைக்குப் படிகொடுத்து வந்தார். ஒருமுறை மழை சரியாகப் பெய்யாமல் வளங்கள் சுருங்கின. அதனால், சுந்தரருக்கு வழக்கம் போல் அனுப்பவேண்டிய அளவில் படித்தரம் அனுப்பமுடியாத நிலை குண்டையூர்க் கிழாருக்கு ஏற்பட்டது. 'வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல்லெடுக்க இன்று குறையாகின்றதே என் செய்வேன்?' என்று பெருங்கவலையுற்று, உண்ணாது, அன்றிரவு துயில் கொண்ட கிழார்தம் கனவில் இறைவன் தோன்றினார். 'ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம்' எனக் கூறிய இறைவன் குபேரனை ஏவிக் குண்டையூர் எல்லை நிறையும்படி நெல்லை மலையாகக் குவிக்கச் செய்தார். காலையில் எழுந்த குண்டையூர்க் கிழார் விண்தோயக் குவிந்திருந்த நெல்மலை கண்டு வியப்புற்று இறைவனருள் உணர்ந்து, மகிழ்ந்து, நன்றி பாராட்டி, 'இந்நெல்வளத்தை யாரால் எடுத்துச் சென்று நாவலூராருக்குத் தரமுடியும்? இதைச் சுந்தரரிடமே சொல்வோம் எனக் கருதித் திருவாரூருக்குச் சென்றார். சுந்தரர் அவரை எதிர்கொண்டார். சுந்தரரை வணங்கிய கிழார், 'பண்டெலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று தடையாக, அண்டர்தம் பிரானார் தாமே நெல்மலை அளித்தார். இறைவன் தந்த நெல்மலையை மனிதர்களால் எடுத்துவர முடியும்போல் எனக்குத் தோன்றவில்லை. இனி இது என்னால் ஆகும் பணியன்று' என்றார். அது கேட்ட சுந்தரர், 'இறைவன் அருளால் இந்நெல் உமக்கு அளிக்கப்பட்டது' என்று கூறிக் கிழாருடன் குண்டையூருக்குச் சென்றார். குண்டையூரில் குவிந்து கிடந்த நெல்மலை கண்டு வியந்த சுந்தரர் மிக அதிசயமுற்று, இறையருளைத் தொழுது போற்றி இந்நெல்லைப் பரவையின் இல்லத்திற்குக் கொண்டுபோக இறைவனே ஆளைத் தந்தால்தான் உண்டு எனக் கருதி, ஆள்வேண்டுமென இறைவனைக் கேட்டுப் பாடக் குண்டையூர் நீங்கித் திருக்கோளிலி வந்தார். 'வாள்னகண் மடவாள் வருந்தாமே' என்ற பதிகத்தைத் திருக்கோளிலியில் சுந்தரர் பாடப் 'பகற்பொழுது கழிந்ததும் பரவை மனை அளவன்றி மிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையுமாறு புகப்பெய்து தருவன நம் பூதங்கள்' என்று விண்ணொலி கேட்டது. அவ்வளவில் இறையருள் போற்றி வணங்கிய சுந்தரர் வழிப் பதியெல்லாம் வணங்கி ஆரூர் அடைந்து பூங்கோயில் இறைவனை இறைஞ்சி, நீங்காப் பெருமகிழ்வுடன், பாங்கானார் புடைசூழ்ந்து போற்றிடப் பரவை மாளிகை அடைந்து, பரவைக்கு நடந்தன கூறி, அவருடன் மிக இன்புற்றிருந்தார். இறைவன் ஆணையிட்டதால் இரவில் குறட்பூதங்கள் பலவாய் வந்து குண்டையூர் நெல்மலையைப் பரவையின் மாளிகையில் நிறைத்து ஆரூர் முழுவதும் நெல்மலையாக்கி மறைந்தன. விடியலில் எழுந்த ஆரூர் மக்கள், எங்கும் குவிந்திருந்த நெல்மலை கண்டு வியந்து, 'பரவைக்குச் சுந்தரர் அளித்தது இது' என்று போற்றினர். வெளியே எங்கும் போக, வர வழியில்லாமல் போனதால் செயலற்றுத் தம் இல்லங்களுக்குள்ளேயே நுழைந்த மக்கள், 'பரவையார்க்கு இவ்வளவு நெல்லையும் வைத்துக் கொள்ள இடமில்லையே' என்று பலப்பல பேசி நின்றனர். சுந்தரர் தமக்களித்த நெல் கண்டு மகிழ்ந்த பரவை, 'அவரவர் வீட்டெல்லைக்கு உட்படும் நெற்குன்றெல்லாம் அவரவர்க்கே உரியது. எடுத்துக் கொள்ளலாம்' என்று முரசறையச் செய்தார். மக்கள் மகிழ்வுடன் நெல்மலையை அள்ளித் தத்தமது வீடுகளில் கொண்டு குவித்தனர். பரவை மகிழ்ந்து வன் தொண்டரைப் பணிந்தார். சேக்கிழார் சொல்லும் குண்டையூர் நெல் கதை இது. இந்தக் கதையைப் படித்ததும் நமக்குச் சில கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விகளை மீண்டும் மீண்டும் சிந்திக்கும்போது அவை பெரிதும் நியாயமானவையாகவே தோன்றுகின்றன. 1. குண்டையூர்க் கிழார், நெல், மலையாய் நிறைந்த செய்தியைச் சுந்தரருக்குத் தர வருகிறார். எதிர்கொண்ட சுந்தரர் அச்செய்தியை அறிகிறார். உடன் கிழாருடன் குண்டையூருக்குச் செல்கிறார். ஏன்? கிழாரின் சொற்களில் நம்பிக்கை இல்லையா? 2. கிழார் வழக்கமான படித்தரத்திற்குத் தடை நேர்ந்ததே என்று வருந்துகிறார். ஆனால், தாவென்று இறைவனைக் கேட்கவில்லை. இறைவன் தாமாகவே தருகிறார். இதைக் கிழாரே குறிப்பிடுகிறார். இப்படி இறைவன் தாமாகவே தந்தமைக்குக் காரணம் சுந்தரர் படித்தரத்திற்குத் தடை ஏற்பட்டதே என்பதாலா? சுந்தரர் படித்தரத்திற்குத் தடையென்றதும் கேளாமலேயே கொடுத்த இறைவன் பஞ்சம் வருத்தும் குண்டையூர் மக்கள்பால் கருணை கொள்ளாமை ஏன்? கிழாரின் கனவில்கூட இறைவன் மிக எச்சரிக்கையாக, 'ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம்' என்று கூறுவது, எங்கே தப்பித் தவறிக் கிழார் அதிக நெல் இருப்பது கண்டு அனைவருக்கும் தந்துவிடப் போகிறாரோ என்ற அச்சத்தாலா? அல்லது கிழாரையும் சுந்தரரையும் சோதித்தறியும் நோக்கமா? 3. குண்டையூரைச் சேக்கிழார் பேரூர் என்கிறார். அப்படியானால் அப்பேரூரிலுள்ள சிவத்தலத்தைப் பாடாமல், அங்கேயே உதவி கோராமல், பக்கத்திலுள்ள திருக்கோளிலி வந்து சுந்தரர் பாடுவதும் உதவி கேட்பதும் எதனால்? 4. சிவக்கவிமணி அவர்கள் சுந்தரர் குண்டையூரைப் பாடாது திருக்கோளிலி வந்து பாடியதற்குக் காரணமாக, ஊருக்குள் நுழைய முடியாதவாறு நெல்மலை வழியடைத்திருந்ததைச் சுட்டுகிறார். ஊருக்குள் ஆள் இயங்க இயலாவண்ணம் நெல்மலை வழியடைத்திருந்ததென்றால், குண்டையூர்க் கிழார் எப்படி ஆரூர் வந்திருக்க முடியும்? சிவக்கவிமணியாரின் காரணம் பொருந்தவில்லை. 5. நெல்லளித்த இறைவனை, நெல்லளித்த இடத்தில் பாடாமல் திருக்கோளிலியில் வந்து பாடியதற்குக் காரணம் தன்னலமாக இருக்குமா? சுந்தரரின் பதிகம் இதற்குச் சான்றாகிறது. 6. குண்டையூரில் பஞ்சம் என்பதைச் சுந்தரர் அறிவார். கிழார் அனைத்தும் கூறியுள்ளார். மேலும் சுந்தரரே, 'இந்ந்ல் உமக்கு அளிக்கப்பட்டது' என்கிறார். இந்நிலையில் குண்டையூரில் அவ்வளவு நெல்லைப் பார்த்ததும் தொண்டராகிய சுந்தரர் என்ன செய்திருக்க வேண்டும்? கிழாரிடம் கூறி, நெல்லை ஊரார் அனைவருக்கும் அள்ளிப் பங்கிட்டுத் தருமாறு செய்து, எஞ்சியதை ஆள்கொண்டு தன் மனைக்குக் கொணர்ந்திருக்கலாம். ஆனால், நெல்மலையைப் பார்த்ததும் சுந்தரர் நினைப்பதே வேறு! 'எண்ணில்சீர்ப் பரவைஇல்லத்து இந்நெல்லை எடுக்க ஆளும் தண்ணிலவு அணிந்தார் தாமே தரிலன்றி ஒண்ணாது' குண்டையூர்ப் பஞ்சத்தைக் கொஞ்சமும் நினையாது, பரவையே நினைவாக, அவ்வளவையும் அவர் இல்லத்துக்கே எடுத்துச்சென்று வைத்துக்கொள்ளும் எண்ணத்தில் ஆள்கேட்க முற்படும் சுந்தரரின் பண்புநலம் நம்மை வருத்துகிறது. 7. குண்டையூர்ப் பஞ்சம் தீர்த்து, எஞ்சிய நெல்லைத் தாம் எடுத்துக் கொண்டிருந்தால் சுந்தரருக்குப் பூதங்களே தேவைப்பட்டிரா. இறைவனுக்கும் வேலை குறைந்திருக்கும். திருக்கோளிலிக்குப் பதிலாகக் குண்டையூரும் பாடல் பெற்ற தலமாகியிருக்கும். இத்தனைக்கு வழியிருந்தும் ஏன் செய்யவில்லை சுந்தரர்? 8. சுந்தரர் பரவை வீட்டுக்கே நெல் மொத்தமும் வரவேண்டுமென்று நினைக்கிறார். ஆனால், இறைவன், 'பரவை மனையளவு மட்டுமின்றி மிகப் பெருகும் இந்நெல்லினை திருவாரூர் நிறையும்படி நம் பூதகணங்கள் கொணர்ந்து சேர்க்கும்' என்கிறார். இங்கு இறைவன் சுந்தரரைச் சோதிக்கிறார். அல்லது சேக்கிழார் சுந்தரரை அடையாளம் காட்டுகிறார். 9. இறைவன் கூறியதுபோல் ஊர் முழுவதும் நெல் குவியும் எனத் தெரிந்த சுந்தரர், இரவு திருவாரூருக்குத் திரும்பியதும் ஊர் மக்களைக் கூட்டி இச்செய்தி சொல்லி அனைவரையும் ஆங்காங்கு குவியும் நெல்லைக் கொள்ளச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் பரவையிடம் மட்டும் செய்தி சொல்லி, அவரோடு மிக இன்புற்றிருக்கிறார். சுந்தருக்குப் பகிர்ந்துண்டு மகிழும் எண்ணமில்லையா? அல்லது ஊர் முழுவதும் நெல் வந்து சேருமென்று சொன்ன இறைவனின் சொல்லில் நம்பிக்கையில்லையா? 10. நெல் வருமென்று சுந்தரர் சொல்லச் செய்தியறிந்த பரவையும், ஊராரை அழைத்து இத்தகவல் கூறி அனைவரும் நெல் கொள்ளலாமென்று அறிவிப்புச் செய்யவில்லை. அதற்கு மாறாக, நெல்மலை குவிந்த நிலைகண்டு, ஊர்மக்கள்கூடி, 'இவ்வளவு நெல்லையும் பரவையார் எங்கு கொண்டுபோய் எப்படிச் சேர்த்து வைப்பார்?' என்று கேள்வி எழுப்பிய பிறகே, பரவை, 'அவரவர் வீட்டுக்கு முன் உள்ள நெல்லை அவரவர் எடுத்துக் கொள்ளலாம்' என்று முரசறையச் செய்கிறார். இது அச்சத்தால் விளைந்த அறமாகத் தோன்றுகிறது. அற உணர்வுடன் இம்முரசறைதல் நிகழ்வதாயிருந்தால் முன்னாள் இரவே நடந்திருக்கவேண்டும். ஒருவேளை இறைவன் செய்வானோ, மாட்டானோ எனக் கருதி இரவு சொல்லாமல் இருந்திருந்தால் காலைக் கருக்கலில் எழுந்து, நெல் குவிந்து கிடப்பதை உறுதிசெய்து கொண்ட உடன் முரசறைந்திருக்கலாம். இரண்டும் செய்யாமல், மக்கள் தமக்குள்ளாக, 'இவ்வளவு நெல்லையும் இந்த அம்மையார் எங்கு, எப்படி வைத்துக் கொள்வாள்?' என்று ஐயமெழுப்ப, எங்கே இது வேறுவிதமாகப் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகப் பரவை, அனைவரும் நெல்லை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரியப்படுத்தினாற் போல் காட்சியமைகிறது. நிலைமை இப்படியிருக்கப் பரவையின் முரசறைவு அவரது பெருமையைப் புலப்படுத்துவதாகச் சிவக்கவிமணி கூறுவது பொருந்தவில்லை. 11. சுந்தரர் குண்டையூர் நெல்லைச் சிவபெருமானே ஆரூருக்குக் கொணர்ந்து தரவேண்டுமென்று கேட்டதும் அச்சத்தால்தானோ என்று தோன்றுகிறது. சுந்தரர் விரும்பியிருந்தால் அவரது பரிசனங்கள், தொண்டர்கள் உதவி கொண்டு, ஆளுக்கொரு வண்டி கட்டச் சொல்லி நெல்லை ஆரூருக்குக் கொணர்ந்திருக்கலாம். ஆனால், பஞ்சம் தலை விரித்தாடும் குண்டையூரில், திடீரென இறையருளால் வந்த நெல்லை, வெளியூர் ஆட்கள் வந்து அள்ளிச் செல்ல முயன்றால், ஊரார் ஒருப்படார், தொல்லை தரலாம் எனக் கருதியே சுந்தரர், நெல்லை அகற்ற இறையுதவி நாடினாரோ என்றெண்ணத் தோன்றுகிறது. அந்த உதவியையும் குண்டையூரில் கேட்க அவர் அச்சப்பட்டிருக்கிறார். தாம் கேட்கும் செய்தி வேறு யாருக்கும் தெரிந்து தொல்லையாகிவிடக் கூடாதே என்று கருதியோ என்னவோ திருக்கோளிலிக்குச் செல்கிறார். நெல்மலை குவிந்ததுமே பஞ்சத்தால் வாடும் குண்டையூர் மக்கள் அதைக் கொண்டிருக்கலாமே என்றொரு கேள்வியும் பிறக்கிறது. கிழார் விட்டிருக்கமாட்டார். மேலும் திடீரென வந்த நெல்மலை மக்களுக்குத் தயக்கத்தையும் அச்சத்தையும் தந்திருக்கும். 'இது இறை வேலை; பொறுத்திருப்போம். இறைவன் இதைச் சுந்தரருக்குத் தந்ததாகக் கிழார் சொல்கிறார். சுந்தரர் வந்து மக்களுக்கும் தருவார்' என்றெல்லாம் எண்ணிக் கிழாரின் மீதுள்ள மதிப்பாலும் சுந்தரரின் மீதுள்ள நம்பிக்கையாலும் மக்கள் பொறுத்திருந்து ஏமாந்திருக்கலாம். இந்நிலையில் சுந்தரரின் திருக்கோளிலிப் பதிகம் காட்டும் காட்சி நம்மை மேலும் வருத்துகிறது. அவரது பாடலை ஊன்றிப் படித்தால்தான் உண்மை நிலை தெளிவாகும். 'வாளன கண்மடவாள் அவர் வாடிவருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன் ஆளில்லை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே' 'குண்டையூரில் சில நெல் கிடைக்கப்பெற்றேன். அதை எடுத்துச் செல்ல ஆளில்லை. பரவை வாடி வருந்தாதபடி அதைக் கொணர்ந்து தர உதவிடுக' இது சுந்தரர் வாக்கு. சுந்தரர் நெல்லைப் பெறவில்லை. பெற்றவர் குண்டையூர்க் கிழார். தந்தவர் இறைவன். இந்த உண்மையைப் பதிகத்தில் கூறாமல், ஏதோ இவர் நெல் பெற்றது இறைவனுக்குத் தெரியாதது போலவும் அதை எடுத்துச்செல்ல உதவி மட்டும் போதுமென்பது போலவும் பாட்டு அமைந்துள்ளது. குண்டையூரில் கிடைத்த நெல், 'உன்னருளால்' என்று பதிகத்தின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படாமையுடன், அதைப் பெற்றுத் தந்தவர் குண்டையூர்க் கிழார் என்பதையும் சுந்தரர் சொல்லாமல் விட்டிருப்பது குழப்பமூட்டுகிறது. கிழாருக்குப் பதிகத்தில் இடமளித்துப் பெருமை சேர்க்க சுந்தரர் விழையவில்லையா? அல்லது சேக்கிழார் புதுக்கதை புனைந்துள்ளாரா? மேலும் நெல் எடுத்துச் செல்ல 'ஆளில்லை' என்று தவறான தகவல் தருகிறார் சுந்தரர். 'முடியவில்லை' என்று சொல்லி உதவி கேட்கலாம். ஆனால், ஆளில்லை என்கிறார். ஆரூர் திரும்பும்போது ஆட்கள் வருகின்றனரே எப்படி? இவர் குண்டையூர் வரும்போதும் அவ்வாட்களை அழைத்து வந்திருக்கலாமே. ஏன் அவ்வாறு செய்யவில்லை? இங்குதான் சுந்தரர் அடையாளம் காட்டப்படுகிறார். ஆட்களை அழைத்து வந்தால், நெல் பெற்ற செய்தி வெளித்தெரியும். அனைவருக்கும் பங்கு தரவேண்டியிருக்கும், குழப்பமாகும் என்றல்லவா தனியராய்ப் பயணம் மேற்கொள்கிறார்! அதனால் அல்லவா இறைவனிடம் நெல்லைப் பரவை வீட்டுக்குக் கொணர்க என்று கேட்கிறார். ஆனால், இறைவனும் பூதங்களும் சேர்ந்து அவரை வம்பில் மாட்டி வைக்கிறார்கள். அவரது பதிகங்களில் வரும், 'பரவை வாடி வருந்தாமே', 'பரவை பசிவருத்தம் அது நீயும் அறிதியன்றே', 'பரவையவள் வாடுகிறாள்' எனும் அடிகள் நமக்குக் குழப்பத்தையே உண்டாக்குகின்றன. பரவை ஏதோ பசியால் துன்பமுற்றிருப்பது போலவும் அதைத் தவிர்க்க உடனடியாக நெல் வேண்டுமென்பது போலவும் கிடைத்திருக்கும் இந்த நெல்லை இறைவன் விரைந்து ஆரூர் கொணர்ந்து தரவேண்டும் என்பது போலவும் இப்பாடலடிகள் பொருள் தருகின்றன. பெற்றதோ சிலநெல் என்கிறார். அதை எடுத்துச் செல்ல எதற்கு ஆட்கள்? பரவை பசி வருத்தமுற்றிருக்கிறாள் என்பது எப்படி உண்மையாக முடியும்? இந்தப் பதிகத்தைப் படிக்கும்போது செய்திகள் முன்னுக்குப் பின் முரணாக நமக்குத் தோற்றம் தருகின்றன. பரவைக்குப் பசியாம்; பரவை வாடுகிறாராம்! பரவையின் பசி தாங்காது அதற்கென இவர் நெல் பெற்றது போலப் பாடுகிறார். இந்த நெல்லை யாரிடமிருந்து எங்கிருந்து பெற்றார்? பதிகத்தில் விடையில்லை! பெற்றது சில நெல் என்கிறார். அதை எடுத்துச்செல்ல இறைவனிடம் ஆட்கள் வேறு கேட்கிறார். இவரே ஆள் ஏற்பாடு செய்து அந்தச் சில நெல்லை எடுத்து வந்திருக்கலாமே! எல்லாவற்றிற்கும் மேலாகப் பரவைக்கு ஏன் பசித் துன்பம்? அந்த அம்மை ஆரூர்க் கோயிலில் ஆடும் ருத்ர கணிகை. இக்கணிகையர் வளமாக வாழ்ந்தமையைப் பல கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. நாவலூர் நம்பியும் செல்வச் செழிப்புள்ளவர். இருந்தும், பரவைக்குப் பசியாம்! சேக்கிழாரின் கதை நோக்கிலிருந்து பதிகத்தைப் பார்த்தால், சுந்தரர் இறைவனுக்குத் தவறான தகவல்கள் தருவது போல் தோன்றுகிறது. சுந்தரர் பதிகப்படிப் பார்த்தால் சேக்கிழார் புனைகதை செய்திருப்பதாகத் தோன்றுகிறது. இரண்டில் எதன்படி பார்த்தாலும் சில அடிப்படைக் கேள்விகளும் பிறக்கின்றன. 1. சுந்தரர் சில நெல் பெற்றது எங்கு, எப்படி, எதன் பொருட்டு? 2. சில நெல்லை எடுத்துவர அவரிடமே ஆளில்லையா? அல்லது நெல் மலையைத்தான் கண்பட்டுவிடுமெனக் கருதிச் சிலநெல் என்கிறாரா? 3. பரவை உண்மையாகவே பசியால் வாடினாரா? அப்படியானால் குண்டையூரில் கிடைத்த நெல்லில் சிறிதளவு உடனே கொண்டுபோய் பரவைக்கு உணவாக்கிடாமல், இறைவனைத் தேடித் திருக்கோளிலி போய் ஆள் கேட்டுப் பாடுகிறாரே சுந்தரர், என்ன நியாயம் இது? 4. ஊர் முழுவதும் பஞ்சமென்கிறார் சேக்கிழார். அப்படியிருக்கப் பரவையின் பசி மட்டும்தான் சுந்தரருக்குத் தெரிந்ததா? ஊர் முழுவதும் சுற்றிப் பதிகம் பாடும் இவருக்குப் பிறர் பசியும் வருத்தமும் தெரியவில்லையா? விதை நெல்லை உணவாகத் தந்து வறுமையில் உழன்றவரும் தொண்டர், ஊர் முழுவதும் பசியால் துடிக்க, கிடைத்த நெல்லையெல்லாம் பரவையின் பசித்த வயிறு காட்டித் தனக்கே கொணர்ந்து சேர்க்க வேண்டுமென்று ஆள் உதவி கேட்கும் இவரும் தொண்டரா? அப்படியானால் தொண்டர் என்பதற்கான அளவுகோல்தான் எது? 5. சேக்கிழார் கூற்றுப்படிப் பார்த்தால் பரவை பசியுடன் இருந்ததாகத் தெரியவில்லை. ஆரூர் அடையும் சுந்தரர் மகிழ்வுடன் பரவை மாளிகையடைந்து அவருடன் மிக இன்புற்றிருந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். 6. சுந்தரர் பதிகம் உண்மையா? சேக்கிழார் கூற்று உண்மையா? சேக்கிழார் கூறும் குண்டையூர்க் கதை கற்பனையென்றால், அவரை வரலாற்றாசிரியர் என்கிறார்களே, ஊர், ஊராகப் பயணம் செய்து அவர் செய்தி திரட்டியதாகக் கூறுகிறார்களே அவையெல்லாம் தவறான தகவல்களா? அல்லது சேக்கிழார் வரலாறு பாதி, கற்பனை பாதியென்று கதை செய்திருக்கிறாரா? அப்படியானால் பெரியபுராணம் ஒரு வரலாற்றுப் புதினமா? குண்டையூர் நெல் கதை மட்டுமன்று, சுந்தரர் வாழ்வில் நடைபெற்றிருக்கும் பல சம்பவங்கள், அவரது பதிகங்கள் வழியும் சேக்கிழாரின் புராண வழியும் நமக்குள் இப்படிப்பட்ட பொருள் பொதிந்த கேள்விகளை வளர்க்கத்தான் செய்கின்றன. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |