http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 44

இதழ் 44
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!
கூத்தம்பூண்டியான் வலசுக் குடைவரைகள்
அப்பர் என்னும் அரிய மனிதர் - 1
திரும்பிப் பார்க்கிறோம் - 16
The Chola Temple at Pullamangai(Series)
யாருக்கு யார் பகை?
முல்லை மகளே!! வாள் மங்கையே!!
தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1 & 2
இதழ் எண். 44 > கலைக்கோவன் பக்கம்
அப்பர் என்னும் அரிய மனிதர் - 1
இரா. கலைக்கோவன்
தமிழ்நாட்டின் தவப்பெருஞ் செல்வர்களுள் தேவாரம் பாடிய மூவர் குறிக்கத்தக்கவர். திருமுறைகள் பன்னிரண்டாய் உருவெடுத்தும், அவற்றைப் பாடியருளிய திருமுறை வேந்தர்கள் பலராய் வாழ்ந்திருப்பினும், தேவாரம் எனும் புகழ்ச் சொல்லால் அரவணைக்கப்பட்ட திருமுறைகள், மூவர் முதலிகளின் மூத்த தமிழ்ப் பதிகங்களே. தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றியெழுதிய பெருமையை வரலாறு மிகச் சிலருக்கே வழங்கி மகிழ்கிறது. சமயத்துறையில் அத்தகு பெருமையைப் பெற்றவர்களுள் தேவாரம் பாடிய அப்பரும் சம்பந்தரும் சிறப்பானவர்கள். இவ்விருவருள் தம் பண்பு நலன்களால், பங்களிப்பால், பதிகச் சிறப்பால் பெருமையின் உச்சியில் பெருமிதத்தோடு வீற்றிருப்பவர் அப்பர் பெருமான். தேவார மூவரில் அப்பருக்குத் தனியிடம் உண்டு. அவர் பல முதல்களுக்கு உரிமையாளர்.

ஒரு சமயத்தைத் தழுவி, அதில் உயர்நிலை எய்தி, தவிர்க்க முடியாத காரணங்களுக்காகப் பின் அச்சமயத்தைத் துறந்து மற்றொரு சமயத்திற்கு மாறி, மாறிய அந்த சமயத்திலும் உயர்நிலை எய்திக் கரைகண்ட முதல் மனிதர், தமிழ்நாட்டில் அப்பர் பெருமான்தான். சம்பந்தரும் சுந்தரரும் திருஅவதாரன் செய்ததாகத் திருத்தொண்டர்புராணத்தில் சேக்கிழார் எழுதுவார். அப்பர் பிறப்பைக் குறிக்கும்போதோ திரு மயங்கிப்போக, அவதாரம் செய்தாரென்று மட்டுமே சுட்டுவார். திரு அவதாரம் செய்தவர்களிடையே, வெறும் அவதாரம் செய்த இவர்தான், 'திருக்கோயில் தொண்டு' என்னும் உயரிய சிந்தனையை மக்கள் நெஞ்சில் நிலைநிறுத்தப் பாடுபட்ட முதல் மனிதர். கதவடைப்பில் தொடங்கி ஒத்துழையாமை வரை எத்தனையோ போராட்டங்களைக் கண்ட தமிழ்நாட்டில், உண்ணாநோன்பை பொதுநோக்கிலமைந்த ஓர் அறப்போராக, ஆதிக்கம் நீக்கக் கைக்கொள்ளப்பட்ட அமைதிப் போர்முறையாக முதன்முதல் மேற்கொண்ட பெருமை அப்பர் பெருமானையே சாரும். சிவத்தளியாக இருந்த ஆறைவடதளியைச் சமணர் கைப்பற்றியது அறிந்த அளவில், அவ்விடத்திலேயே அமர்ந்து உண்ணாநோன்பிருந்து அப்பெருந்திருக்கோயில் மீண்டும் சிவத்தளியான பிறகே பயணம் தொடர்ந்த அறப்போராளி அப்பர் பெருமான்.

சேக்கிழார் கூற்றின்படி பார்த்தால், தேய்ந்த உடலும் தேயாத உள்ளமுமாய் இறைவனைத் தேடிய முதல் மனிதர் அப்பர்தான். களபம், கஸ்தூரி கேட்ட இளைஞர்களுக்கெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றிக் கேட்டதைத் தந்த சிவபெருமான், இந்தக் கிழவரை மட்டுமே ஊனுந் தோலும் உருக, ஊர் ஊராய் அலையவைத்துக் காட்சிதந்தார். சிவபெருமானால் அதிகம் அலைக்கழிக்கப்பட்டவர்களுள் அப்பர் முதல்வர். 'நின்பணி பிழைக்கிற் புளியம் வளாரால் மோதுவிப்பாய்' என்று இறைவனுக்கே வன்முறைச் சிந்தனை வழங்கிய முதற் கவிஞர் அப்பர். தமக்காகவும், உறவுகளுக்காகவும் இறைவனிடமே நெல்லும் தங்கமும் இன்னபிற பொருளும் என வரிசை கேட்டவர்களிடையே, பொருள் கேட்காத ஒரே புனிதர் அப்பர்தான். தலைக்குக் கீழ் வைத்த கோயிற் செங்கற்கள் தங்கமானபொது அதைக் கோயிற்சொத்து என்றும் பாராமல் தம்மோடு கொண்டுசென்றவர் சுந்தரர். தந்தைக்காய்ப் பொருள் கேட்டுத் தங்கம் பெற்றவர் சம்பந்தர். கேட்டறியாத அப்பருக்கோ புல்லோடும் புழுதியோடும் தங்கமும் தேடிவந்தது. ஆனால் அவரோ புல்லையும் பூண்டையும் போலவே தங்கத்தையும் புழுதியாய் மதித்துத் துரட்டியால் தள்ளிய தூயவர்.

சைவ, வைணவ பக்தி இலக்கியங்களில் பழமொழிகளை, மரபுச் சொற்றொடர்களை அப்பர் பயன்படுத்தியிருப்பதுபோல் வேறெந்தத் திருத்தொண்டரும் நாயன்மார்களோ, ஆழ்வார்களோ பயன்படுத்தவில்லை. அந்த வகையிலும் அப்பருக்கே முதலிடம். 'முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே', 'ஏதன் போருக்கு ஆதன் அகப்பட்டேன்', 'இருட்டறையில் மலடு கறந்து ஏய்த்தவாறே', 'விளக்கிருக்க மின்மினித்தீ காய்ந்தவாறே', 'பாழூரில் பயிக்கம் புக்கு எய்த்தவாறே' என்று அவர் ஒப்புமைக்குச் சான்றாக்கியிருக்கும் இம்முதுமொழிகள் தனி ஆய்வுக்குரியன.

ஒரே பதிகத்தில் பத்திற்கும் மேற்பட்ட விலங்கு, பறவையினங்களை இணைத்துப் பார்த்து, அவற்றின்பால் தமக்குள்ள அன்புள்ளத்தை வெளிப்படுத்திக் கொண்ட முதல் கவிஞரும் ஒரே கவிஞரும் அப்பரே. களிறு, பன்றி, குரங்கு, கோழி, குயில், மயில், பகன்றில், சேவல், நாரை, பைங்கிளி, நாகு ஆகிய இவை தத்தம் இணையுடன் தழுவியும் ஆடியும் கூடியும் பிணைந்தும் வருவதாகவே திருவையாற்றுப் பதிகம் களிகொண்டு பேசுகிறது. அன்புவயப்படுதலை அனைத்து உயிர்களிடமும் கண்ட அப்பர் பெருமானின் அருள்நோக்கை என்னென்று வியப்பது!

இறைப்பாடல்களுக்கு தாண்டகப் பாவகையைத் தேர்ந்து, எட்டுத் திருத்தாண்டகங்கள் பாடி மகிழ்ந்த முதற்கவிஞர் பெருந்தகை அப்பர்தான். அவர் பாடிய குறுந்தொகைகள் பன்னிரண்டு. தமிழிலக்கிய உலகின் தாண்டகக் குறுந்தொகை வேந்தராகத் திகழும் அவரை விஞ்ச இதுநாள்வரையிலும், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளிலுமாய் இன்னொருவர் தோன்றவில்லை. தமிழ்நாட்டு சமயப் பெரியார்களுள் அதிக அளவில் தண்டிக்கப்பெற்ற ஒரே மனிதரும் அப்பரே. முதல் மனிதரும் அப்பரே. நீற்றறை, நஞ்சு, யானைக்கால் இடறல், கடல் என மரணவாயிலை நான்குமுறை சந்தித்தவர் அவர். 'முடிந்து போவார்' என்று நினைத்தவர் முன் முடிவில்லாதவன் பெயரைச் சொல்லியே முளைத்தெழுந்த ஏன் கிளைத்துமெழுந்த முதல் மனிதர் அப்பர்.

தேவார மூவரில் சம்பந்தரும் சுந்தரரும் இயற்பெயர்களால் வாழ்கின்றனர். அப்பரோ இறைப்பெயரால் வாழ்கின்றார். அவர் இயற்பெயரை இழந்தவர். யாரும் அவரை மருள்நீக்கியாய்க் காண்பதில்லை. இறைவனிட்ட நாவுக்கரசும், சம்பந்தர் தந்த அப்பருமே நிலைத்துப்போயின. அந்த வகையிலும் அவருக்கே முதலிடம். தேவார மூவரில் ஒருவர் ஆணையிட்டு வாழ்ந்தார் (சம்பந்தர்). ஒருவர் அடிமையாகிப் போனார் (சுந்தரர்). அப்பர் ஒருவரே ஆணையிடவும் செய்தார்; அடிமையாகவும் இருந்தார். அதற்குக் காரணம் இறைவனிடம் அவர் கொண்ட அன்பின் நெகிழ்வு. சம்பந்தருக்கு சிவபெருமானிடம் தந்தையென்ற உரிமை இருந்தது. சுந்தரருக்கு தலைவரென்ற கடமை இருந்தது. அப்பருக்கோ இதுபோன்ற தளைகளில்லை. அதனால்தான் அவரால் தேவைப்பட்டபோது ஆணையிடமுடிந்தது. தேடிச் சரணடைந்து அடிமையாகவும் முடிந்தது. தூய அன்பின் வயப்பட்டதால் இறைவன் அவருக்கு நண்பனாகவும் தெரிந்தார்; தந்தையாகவும் இருந்தார். அது அவருடைய பேறு. அதனால்தான் அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ என்று அனைத்துவகை உலக உறவுகளிலும் இறைவனைக் கட்டிப்போட்டுக் களிப்படைய அப்பரால் முடிந்தது. அந்த வகையிலும் உறவுச் சங்கிலிகளில் உலக முதல்வனைப் பிணைத்த முதல் பெருமையும் அவருக்கே.

இறையாடல் பற்றி சம்பந்தரும் அவன் ஆடும் களம் பற்றிக் காரைக்கால் அம்மையும் பாடியுள்ளபோதும் அவிநயம் பாடிய முதல் மனிதர் அப்பரே. ஆகார்யம், ஆங்கிகம், வாசிகம், சாத்விகம் எனும் நான்கு வகையான அவிநயமும் இறையாடலில் காட்டும் முதல் தமிழ்ப் பெருங்கவிஞர் அப்பர் பெருமானே. இந்நான்கனுள் ஆகார்யம் ஆடற்கலைஞர் கொள்ளும் ஒப்பனை, கருவிகள், அணிகலன்கள், உடை ஆகியவற்றுடன் களம், ஒலி, ஒளி முதலியவற்றையும் உள்ளடக்கும். உரையாலும் பாட்டாலும் ஆடலின் பொருளைப் பார்வையாளருக்கு எடுத்துச் சொல்வது வாசிகம். உடலுறுப்புகளால் பாடலின் அல்லது கதையின் பொருள் வெளிப்படுத்தப்படுவது ஆங்கிக அவிநயம். ஆடற்பொருள்வழி ஆடுநரின் உள்ளத்தெழும் உணர்வுகளை வெளிப்படுத்துவதுடன், அவற்றைக் காண்போரும் அநுபவித்துக் கிளர்ந்தெழச் செய்வது சாத்விகம். இந்நால்வகை அவிநயங்களையும் இறையாடலில் இனிதுறப் பொருத்தி நிரல்பட வழங்கிய முதற்கவிஞர் அப்பர்.

தமிழ்நாட்டுத் திருக்கோயில் தலங்களை அதிக அளவில் அடையாளம் காட்டியிருப்பவர் அப்பர்தான். திருத்தலக்கோவை, அடைவுத் திருத்தாண்டகம் என்று மட்டுமல்லாமல், தனியூர்ப் பதிகங்களில்கூட அதிக அளவிலான திருத்தலங்களுக்கு வெளிச்சமிட்டிருப்பவர் அப்பரே. அப்பெருந்தகையின் சுட்டலால் வாழ்வு பெற்ற திருக்கோயில்களின் எண்ணிக்கை, இருண்டகால சமய வரலாற்றை மாற்றியெழுத வல்லது. திருக்கோயில் தலங்களைப் பின்னொட்டுக் கொண்டு பிரித்து வகைப்படுத்திச் சொன்ன முதல் ஆய்வாளர் அப்பர் பெருமான்தான். பள்ளி, குடி, ஊர், காடு, வாயில், சுரம், ஆறு, வீரட்டம் எனும் பின்னொட்டுக்களோடு முடியும் ஊர்களையும் மலைக்கோயில்களையும் பட்டியலிட்டுப் பாடியிருக்கும் இப்பெருந்தகையைப் பின்பற்றியே பின்னாளில் திரு. ரா.பி. சேதுப்பிள்ளை, 'ஊரும் பேரும்' எழுதினார். கோயில் வகைகளைப் பதிகங்களில் இனம்காட்டிய முதல் மனிதரும் ஒரே மனிதரும் அப்பர்தான். கோயிற்கட்டடக்கலை ஆய்வுகளுக்கு அவர் பதிகங்களே பிள்ளையார் சுழி. கொகுடிக்கோயில், ஞாழற்கோயில், கரக்கோயில், இளங்கோயில், பெருங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், தூங்கானை மாடமென்று அப்பர் காலத்துக் கோயிற் கட்டமைப்புகள் பல்வகைப்பட்டிருந்தன. அவற்றைப் பதிவு செய்த பெருமை நாவுக்கரசருக்கே உரியது.

(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.