http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 45

இதழ் 45
[ மார்ச் 16 - ஏப்ரல் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

குறத்தியறை
திரும்பிப் பார்க்கிறோம் - 17
அப்பர் என்னும் அரியமனிதர் - 2
இராஜராஜனின் வாசுதேவனே நம:
கழனி சூழ் பழனம் பதி
Alathurthali in Malayadipatti
1000 ரூபாய்த் திட்டம்
நினைத்தது நடந்தது
இதழ் எண். 45 > கலையும் ஆய்வும்
இராஜராஜனின் வாசுதேவனே நம:
ரிஷியா
தஞ்சைத்தரணி புண்ணியம் கோடி செய்த பூமி. தஞ்சைவானம், அழகியவானம். திரும்பும் திசையெல்லாம் எழிலார்ந்த கோவில் கோபுரங்கள், முகில்கள் உறவாடிச் செல்லும் விமானங்கள் என அவ்வெளியை அலங்கரிக்கின்றன. அந்த அழகிய வானத்தையும், இந்தப் புண்ணிய பூமியையும் இணைக்கும் பாலமாய் மண்ணில் உதித்த திவ்யச் சூரியனாய் மிளிர்வது இராஜராஜீசுவரமுடையார் திருக்கோவில்.

பல குடை நீழலும் தன்குடைக்கீழ்க் கண்ட மன்னாதி மன்னான இராஜராஜசோழனின் புதுமையான பார்வைகள், உன்னத மனோரதங்கள், பெரிதனினும் பெரிய சாதனைகள் எல்லாமே ஈடு இணையற்றவை, தனித்துவம் நிறைந்தவை. அரிது, அரிது வேறு எங்கினும் காண்பது அரிது, இத்தகைய மனித சிந்தனை உயர்வுதனை. அந்த அரிய சிந்தனை வளத்தினை அதிகமாகப் பெறும் பேறு செய்துள்ளது, இராஜராஜீசுவரமுடையார் திருக்கோவிலின் கருவறையின் வடக்குச்சுவரும், வடக்குவச்சுவர்ப் பகுதியும் அற்புதமான எழில்மிகு சிற்பத்தொகுதிகள், சிந்தனையைத் தூண்டும் கல்வெட்டு நெடுந்தொடர்கள் என்றும் விளங்கிக்கொள்ள இயலாத புதிர்கள் பல நிறைந்த பகுதி அது.

திருக்கோவிலின் வடக்கு ஜகதியில் சிதலம் அடைந்துள்ள ஒரு நெடுங்கல்வெட்டுத் தொடரில் ". . . . . . . . ஸ்ரீ ராஜராஜன் என்றும் நாமம் உடையன" என்ற கல்வெட்டு வரி என்னை மிகவும் கவர்ந்தது. முழுவதும் படிக்க இயலாத தொடர்கள் நிறைந்த பகுதியாயினும், அது என்னவாக இருக்கும் என்று மனம் அலைபாய்ந்தது. கால அவகாசம் இன்மையால் கடந்த ஜனவரியில் அக்கல்வெட்டுத் தொடரை முழுமையாகப் படித்து ஆராயாமல் திரும்பவேண்டியிருந்தது.

இராஜராஜீசுவரத்து வைணவ மூர்த்திகள்

தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுப்பில் மேற்கண்ட "ஸ்ரீ ராஜராஜன் . . . . . . ." என்ற கல்வெட்டுக் குறிப்புகளைத் தேடியபோது, வியப்பு கலந்த புதிர் ஒன்று காத்திருந்தது. ஸ்ரீவாசுதேவா என்ற நாமம் கொண்ட வெள்ளியிலான பிரதிமம் மூன்றினைத் திருக்கோவிலில் நிறுவியுள்ளார், இராஜராஜசோழன்.

சைவசமயக் கோவிலில் வைணவ மூர்த்தியா? ஸ்ரீவாசுதேவர்கள் மூவரும் மட்டும்தானா? வேறு வைணவ மூர்த்தியும் இடம்பெற்று இருந்ததா? இராஜராஜசோழன் என்றால் தனித்துவம் என்று பொருள் உண்டே! என் தேடல் தொடர்ந்தது. தேடல் வீண்போகவில்லை. மகாவிஷ்ணுக்கள் என்ற திருப்பெயர் கொண்ட நான்கு கரங்களுடைய செப்புத்திருமேனி ஒன்றையும் நிறுவியுள்ளார். வைணவ மூர்த்திகளுக்கு வழிபாடு நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், சைவசமயத் திருக்கோவிலான இராஜராஜீசுவரத்தில் வைணவ மூர்த்திகள் உயர்வான இடம் பெற்றிருந்தனர் என்பது திண்ணம். இராஜராஜசோழனின் சமயப்பொறைக்கு இதுவும் ஒரு தெளிவான நற்சான்று.

வெள்ளி திருப்பரிக்கலங்கள்

வடக்குப் பகுதி ஜகதியில், சிந்தனையைத் தூண்டக்கூடிய அரிய அந்த ஒரு கல்வெட்டுப் புதையல் காலத்தின் மீளாநதியில் கரைந்துவிட்டிருந்தது. ஆனாலும், தன் சுவடுகளை ஆங்காங்கே பதித்துவிட்டிருந்தது. காதலே துணையாக, பொறுமையே அணியாகக் கொண்டு கிழக்கு மேற்கு நடைபயின்று, எஞ்சியுள்ள கல்வெட்டு வரிகளைச் சிரமத்துடன் படிக்க நேர்ந்தது. அது இராஜராஜசோழனின் கொடைக் கல்வெட்டில் தான் கொடுத்த திருப்பரிக்கலங்களின் ஆவணப் பட்டியலின் பதிப்பைக் கல்வெட்டில் பொறித்துள்ளார். திருப்பரிக்கலங்கள் (பூசைப்பொருட்கள்) எல்லாமே முழுக்க முழுக்க வெள்ளியிலானவை.

தன் சொந்தப் பண்டாரங்களில் இருந்து கொடுத்தவையும் - சேரனையும் பாண்டியனையும் வென்று கொணர்ந்த வெள்ளிப் பரிக்கலங்கள் பற்றியும் - சேரனையும் பாண்டியனையும் வென்று கொணர்ந்து வெள்ளியால் செய்த திருப்பரிக்கலங்கள் பற்றியும் பேசுகிறது இக்கொடைக்கல்வெட்டுத் தொகுதி.

இராஜராஜசோழன் தான் கொடுத்த தானப்பொருட்களான இத்திருப்பரிக்கலங்களுக்குத் தன் விருப்பப்பெயரான சிவபாதசேகரன் என்ற திருநாமத்தையும் தன் சொந்த முடிசூட்டு பெயரான ஸ்ரீஇராஜராஜன் என்ற திருநாமத்தையும் சூட்டியுள்ளார். (அட! பாத்திரங்களுக்குக் கூடத் தன் உயர்வான உன்னதமான பெயர்கள்). வெள்ளியிலான கொடைப்பொருட்களைப் பற்றிப் பேசும் ஒரே கல்வெட்டுத் தொடர் இதுவே.

அப்பொருட்கள் இதோ:

1. காளங்கள் (இசைக்கருவி)
2. தளிகைகள் (உண்கலம்)
3. மண்டைகள் (வாயகன்ற பாத்திரம்)
4. குடங்கள்(சிறுபாத்திரம்)
5. கலசப்பானைகள்
6. மூக்கு வட்டகைகள் (கிண்டி)
7. கை வட்டகைகள் (2 மூக்குகள் உள்ள கிண்டி)
8. பிங்காளங்கள் (பாத்திரம்)
9. நெய் முட்டைகள் (நெய் விடும் சிறு கரண்டிகள்)
10. படிக்கங்கள் (பூசைக்கலம்)
11. சட்டுவங்கள் (அகப்பை)
12. வட்டிகல்கள் (கிண்ணங்கள்)
13. கச்சோளங்கள்
14. பிரபைகள் (திருவாசி)
15. தட்டங்கள் (தட்டுக்கள்)
16. இலைத்தட்டு (வெற்றிலை வைக்க)
17. மடல்கள்-குறு நெடு(திருநீறு வைக்க)

இக்கல்வெட்டுத்தொடரின் கடைப்பகுதியில் தான் ஸ்ரீவாசுதேவர் இடம் பிடிக்கிறார்.

வைணவ பாஞ்ச ராத்ர மூர்த்தி

வாசுதேவா செய்தி சொல்லும் கல்வெட்டுத்தொடர், ". . . . . ஸ்ரீ வாசுதேவர் ஒருவர் வெள்ளி நூற்று முப்பதின் கழஞ்சு. . . . . . . . . . . .
. . . . . . . . . . இத்தேவர் ப்ரபையிற் சுடர்களி சுருக்கின. . . . . . . . கழஞ்சரையே. . . . . . . ."

வைணவ ஆகமங்களின் சம்பிரதாயங்கள் இருவகைப்படும். அவை 1) வைகானசம், 2) பாஞ்சராத்திரம். இவற்றிடையே பல வேறுபாடுகள் உள்ளன. பாஞ்சராத்திரம் கூறும் திருமாலின் வியூகமூர்த்திகளில் முதன்மையானவரே வாசுதேவர். மற்றவர்கள் முறையே சங்கர்ஸணர், பிரத்யும்னர், அநிருத்தர் ஆவர். திருமாலின் திருநாமங்கள் பனிரெண்டு. அப்பனிரெண்டுக்கும் தனித்தனித் திருக்கோலங்கள் உண்டு. இத்திருக்கோலங்கள் எல்லாம் மேற்சொன்ன நான்கு வியூகங்களில் இருந்து தோன்றியதாகச் சொல்கிறார்கள். முதன்மையான வாசுதேவ வியூகத்திலிருந்துதான் கேசவன், நாராயணன், மாதவன் தோன்றியதாகக் கூறுகிறார்கள். இந்தப் பாஞ்சராத்ர தத்துவத்தின் முதன்மையான வியூகத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து இராஜராஜசோழன் வெள்ளியிலான படிமைகள் மூன்று செய்து நிறுவியுள்ளார். வாசுதேவரின் படிமைக்கு நடந்த வழிபாடுகள் பற்றிய குறிப்புக்கள் கல்வெட்டுத் தொகுதியில் இடம்பெறவில்லை, வாசுதேவரின் படிமை பற்றிய விளக்கமும் தரப்படவில்லை. ஆதலால், விரிவான ஆய்விற்கு ஸ்ரீவாசுதேவரை உட்படுத்த இயலவில்லை.

சைவத் திருக்கோவிலில் வைணவ மூர்த்திகளும் இடம்பெற்றுள்ளார்கள். இராஜராஜசோழனின் பார்வைகள் தனி நோக்குடையவை. புரியாத புதிர்கள் அவை. அவரே நேரில் வந்து விளக்கினால்தான் ஒரளவுக்குப் புரியும் என் போன்றோருக்கு.

நட்புக் காலத்தின் ஒரு நாட்குறிப்பு

06-03-08 அன்று பிரதோசம், மகாசிவராத்திரி என்ற காரணங்களைச் சுட்டி, மேலும் லண்டன் வாழ் நண்பரான இருதயசிகிச்சை நிபுணரான டாக்டர். நாகராஜன் அவர்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு இராஜராஜீசுவரம் பயணம் மேற்கொண்டேன். கல்வெட்டுச் சிதறல்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டேன். பின்பு நண்பரும் வந்து சேர்ந்துகொண்டார். இராஜராஜசோழன் மேல் அளவற்ற மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர், பண்பாளர், மென்மையானவர். பல சிற்பத்தொகுதிகளைக் காண்பித்துப் பல கேள்விகளை என்னிடம் வினவினார். எனக்குத் தெரிந்த அளவுக்குப் பதில் உரைத்தேன். ஆனால், அவர் எழுப்பிய வினாக்கள் பல என்னைச் சிந்திக்க வைத்தன. இராஜராஜனை நான் ஒரு சதவீதம்தான் புரிந்து வைத்திருக்கிறேன் என்பதைச் சொல்லாமல் புரியவைத்தார். சிற்பங்களைப் பற்றியெல்லாம் பின்னர் படிக்கலாம் என்று நினைத்திருந்த என்னைப் பெரிதும் கலவரப்படுத்திவிட்டார். வாழ்நாளை வீணாக்கி விட்டோமோ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். இனிமேல் சிற்பங்கள் பேரிலும் கவனத்தைச் செலுத்தவேண்டும் என்று சங்கல்பம் செய்துள்ளேன். ஒரு வாழ்நாள் போதுமா? போதாது. பெரும்பாரத்தை மனதில் ஏற்றிவிட்டு நண்பர் விடைபெற்றார். நாட்டியாஞ்சலி நடந்து கொண்டிருந்தது. சொர்ணமால்யா, திருமதி. பத்மா சுப்ரமணியத்தின் நாட்டியம். ஆடவல்லானே அபிநயம் பிடித்திருந்தால்கூட என் பார்வைகள் விமானத்தை விட்டு அகலாது. ஒன்றும் புரியவில்லையே என்று விமானத்தோடு கதைத்தேன். எழுந்து செல்ல மனமில்லாது தவித்தேன். ஒவ்வொரு முறையும் இராஜராஜீசுவரத்துத் திருக்கோவிலைக் காதலோடு அணுகிப் புரிதல், தெளிதல் இல்லாமல் தோல்வியோடு விடைபெறுகிறேன்.

காற்றும் மழையும்
நிலமும் விசும்பும்
கதிரொளியும் நிலவொளியும்
உன்னை வாசித்துக் கடக்கின்றன. . . . . . .
நான் என்று? எப்போது?
இராஜராஜனே!
இராஜராஜசுவரமே!


மனம் கதறியது. காதல் என்றால் சுகமான வலிதானோ! ஒம் நமோ பகவதே வாசுதேவாய நம: சொல்லிக்கொண்டே திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வெளியே வந்தேன். மீண்டும் வருவேன்! மற்றுமொரு "நாளை" யில், இராஜராஜனே!

குறிப்பு : இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்வெட்டுப் பிரதி தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2ல் 91வதாக இடம்பெற்றுள்ளது.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.