http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 45

இதழ் 45
[ மார்ச் 16 - ஏப்ரல் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

குறத்தியறை
திரும்பிப் பார்க்கிறோம் - 17
அப்பர் என்னும் அரியமனிதர் - 2
இராஜராஜனின் வாசுதேவனே நம:
கழனி சூழ் பழனம் பதி
Alathurthali in Malayadipatti
1000 ரூபாய்த் திட்டம்
நினைத்தது நடந்தது
இதழ் எண். 45 > சுடச்சுட
குறத்தியறை
மு. நளினி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலிலிருந்து கடுக்கரை செல்லும் வழியில் அமைந்துள்ளது குறத்தியறை. அழகியபாண்டியபுரம் அடையும் முன்பு உள்ள பிரிவிலிருந்து ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூரின் புறத்தே காணப்படும் மலைச்சரிவில் தெற்குப் பார்வையாக 1. 77 மீ. உயரம் 95 செ. மீ. அகலம் இருக்குமாறு அகழப்பட்டுள்ள கருவறைக்குப் பின்னாளில் மரத்தால் வாயில் அமைத்து சிமெண்ட்டுப் பூச்சும் செய்துள்ளனர். வாயிலின் அகலம் 80 செ. மீ., உயரம் 1. 30 மீ.

குதிரை லாடம் போலக் குடையப்பட்டிருக்கும் கருவறையின் தரை, கூரை, சுவர்கள் அனைத்தும் சீர்பெறா நிலையிலேயே விடப்பட்டுள்ளன. கிழக்கு மேற்காக 1. 52 மீ. நீளம், தென்வடலாக 1. 13 மீ. அகலம் 2.04 மீ. உயரம் பெற்றுள்ள கருவறையின் பின்சுவரில் தரையிலிருந்து 40 செ. மீ. உயரத்தில் அமையுமாறு கோட்டம் ஒன்று அகழ்ந்து விஷ்ணு உருவாக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வகழ்வால் பின்சுவரின் கீழ்ப்பகுதி ஒரு மீட்டர் அகலத்தில் விஷ்ணு நிற்க வாய்ப்பான தளம் போல வடிவெடுத்துள்ளது. தளத்தின் மேல் விளிம்பிலிருந்து கூரை 1. 37 மீ. உயரத்தில் உள்ளது. கோட்டத்தின் இருபுறமும் நன்கு வடிவமைக்கப்படாத நான்முக அரைத்தூண்கள் என சுவர்த் துண்டுகள் அமைய, மேலே முழுமை உறாதனவாய்ப் போதிகைகள். அவற்றின் விரிகோணக் கைகள் தாங்குமாறு வரையறுக்கப்பட்டுள்ள உத்திரம் விஷ்ணுவின் தலைப்பகுதிக்காக அவ்விடத்தில் மட்டும் தன்னில் பெரும்பகுதியை இழந்து மெலிந்துள்ளது. வாஜனம், வலபி, கபோதம் இடம்பெறவில்லை.

பின்சுவரில் சமபாதநிலையில் காட்சிதரும் விஷ்ணுவின் சிற்பம், தொடர்ந்த எண்ணெய்ப்பூச்சால் உறுப்புகள் தேய்ந்து மழுங்கி உள்ளது. தலைச்சக்கரம் பெற்ற கிரீடமகுடம், குண்டலங்கள் இவற்றை அடையாளம் காணமுடிந்தாலும் குண்டலங்களை இன்னவை என உறுதிப்படுத்தக் கூடவில்லை. பின்கைகளில் வலப்புறம் சங்கு, இடப்புறம் சக்கரம். முன் கைகளில் வலக்கை இடுப்பில் அமர, இடக்கை இடுப்பருகே ஏந்தலாக உள்ளது. நிவீத முப்புரிநூல், கச்சம் வைத்த பட்டாடை, முடிச்சுத் தொங்கல்களுடனான இடைக்கட்டு இவை அமைந்திருக்கும் விதம் சிற்பத்தின் காலத்தைக் கி. பி எட்டாம் நூற்றாண்டாகக் கொள்ளவைக்கிறது.

இக்கருவறைக் குடைவரையின் வெளிப்புறத்தே பாறைச்சரிவின் மேற்கில் ஒரு கோட்டமும் கிழக்கில் ஒரு கோட்டமும் அகழப்பட்டுள்ளன. 89 செ. மீ. உயரம், 63 செ. மீ. அகலம் பெற்ற மேற்குக் கோட்டத்தில் பிள்ளையார் இடஒருக்களிப்பில் சற்று மாறுபட்ட இலலிதாசனத்தில் வலம்புரியாய்க் காட்டப்பட்டுள்ளார். கரண்டமகுடம், சரப்பளி, தோள், கைவளைகள், சிற்றாடை கொண்டு காட்சிதரும் அவருடைய வலத்தந்தம் முழுமையாக இருக்க, இடத்தந்தம் இல்லை. கடகத்தில் உள்ள பின்கைகள் சிதைந்துள்ளன. வலமுழங்கால் மேல் உள்ள வலக்கைப் பொருளைச் சிதைவின் காரணமாக அடையாளப்படுத்தக் கூடவில்லை. இடமுன்கை தொடை மேல் கடகமாக உள்ளது. பாதத்தின் மேற்புறம் தெற்குப் பார்வையாகுமாறு இடக்கால் கிடையாக அமைய, வலக்கால் குத்துக்காலாகப் பாதம் பார்சுவத்தில் திருப்பப்பட்டுள்ளது.

47 செ. மீ. அகலம், 71 செ. மீ. உயரம் பெற்றுள்ள கிழக்குக் கோட்டத்தில் சிற்பம் உருவாக்கும் முயற்சி தொடக்கத்திலேயே கைவிடப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது. வடிவமே இல்லாத நிலையிலும் இவ்வகழ்வை, 'அவ்வையார் அம்மன்' என்று உள்ளூர் மக்கள் வழிபடுவதை அறியமுடிந்தது.

குறத்தியறைக் கருவறைக் குடைவின் மிக எளிய அமைப்பு, அதன் இருபக்கக் கோட்டங்கள், உள்ளிருக்கும் சிற்பங்கள் கொண்டு அதன் தோற்றத்தைக் கி. பி. எட்டாம் நூற்றாண்டாகக் கருத இடமுண்டு. கருவறையில் விஷ்ணுவும் வெளிக்கோட்டத்தில் பிள்ளையாரும் இடம்பெற்றிருக்கும் பாங்கு, குடைவரையை உருவாக்கியவர்களின் சமய ஒத்திசைவு உள்ளம் காட்டுவதாகக் கொள்ளலாம். வைணவத்தின் உள்ளடக்கமாகக் கி. பி. எட்டாம் நூற்றாண்டிலேயே பிள்ளையார் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதவும் இடமுண்டு.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.