http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 55

இதழ் 55
[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்
மணியான மணி
திரும்பிப்பார்க்கிறோம் - 27
கழுகுமலை பயணக் கடிதம் - 1
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2
Silpi's Corner-07
Thirumeyyam- 2
மாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்
மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்
கோட்டகாரம்
இதழ் எண். 55 > இலக்கியச் சுவை
கோட்டகாரம்
க.சங்கரநாராயணன்
கல்வெட்டு மற்றும் செப்பேடுகளின் ஆய்வு தொடங்கியபோதே அவற்றிலுள்ள கலைச்சொற்களுக்கானப் பொருளைத் தேடும் ஆய்வும் துவங்கியது. இன்றளவும் தொடரும் இந்த ஆய்வில் சிற்சில சொற்களுக்குப் பொருள் சரிவர விளங்கவில்லை. பல கல்வெட்டுக்களை ஒப்புநோக்குதன் மூலமே ஒரு கலைச்சொல்லுக்கு விளக்கம் அளிக்கமுடியும். இத்தகைய ஆவணங்கள் வெளியிட்ட காலத்தில் சில சொற்கள் வடமொழிச் சொற்களின் மருவிய வடிவங்களாகக் காணப்படுகின்றன. ஆகவே தமிழரசர்களால் வெளியிடப் பட்டச் சாசனங்களை மட்டுமின்றி மற்றைய அரசர்களால் வடமொழியில் வெளியிடப் பட்ட சாசனங்களையும் ஒப்பு நோக்குவதன் மூலம் இத்தகைய கலைச்சொற்களின் உண்மையான பொருளைப் பெறமுடியும். அத்தகையக் கலைச் சொற்களில் ஒன்று கோட்டகாரம் அல்லது கொட்டகாரம் என்று வழங்கப் படும் சொல்.
ஊர்களைத் தானமாக வழங்கும்போது அதில் உள்ளடங்கிய பகுதிகளையும் குறிப்பிட்டு வழங்குவர். எடுத்துக்காட்டாக மீன்படு பள்ளமும் தேன்படு பொதுமமும், புற்றும் தெற்றியும் என்று அதில் உள்ளடங்கிய பகுதிகளை விளக்கி இவை உள்ளடங்கிய நிலம் அனைத்தையும் தானமாகக் கொடுதசததாகச் சாசனங்கள் குறிப்பிடும். அப்படி தானமாக வழங்கப்படும் பகுதிகளில் உள்ளடங்கியதாகக் குறிப்பிடப் படும் பகுதிகளில் ஒன்று கோட்டகாரம் என்னும் பகுதியாகும்.

செப்பேடுகளில் கோட்டகாரம்
கொட்டகாரம் என்னும் சொல் இரண்டாம் நந்திவர்மனின் கொற்றங்குடிச் செப்பேடு (பல்லவர் செப்பேடு முப்பது, பக் - 243), ந்ருபதுங்கவர்மனின் பாகூர் செப்பேடு (பல்லவர் செப்பேடு முப்பது, பக் - 271), சுந்தரசோழனின் அன்பில் செப்பேடு (எபிக்ராபியா இண்டிகா 15), பெரிய லெய்டன் செப்பேடு (எபிக்ராபியா இண்டிகா 22) போன்ற செப்பேடுகளில் இடம்பெற்றுள்ளது. திருவாலங்காட்டுச் செப்பேடு (தென்னிந்திய கல்வெட்டு -3, எண் 205) கோட்டகம் என்று குறிப்பிடுகிறது. கரந்தைத் தமிழ்ச்சங்கச் செப்பேடு கோட்டகாரம் என்று (பக்கம் 218) குறிப்பிடுகின்றன. இவற்றிற்கு முன்புப் பதிப்பிக்கப் பட்ட தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகளில் இரண்டாம் தொகுதியி தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுக்கள் வடசுவர் மேற்பகுதி கல்வெட்டில் (தென்னிந்திய கல்வெட்டுக்கள் 2, பக் 55,57) கோட்டகாரம் என்னும் சொல் பயின்று வந்துள்ளது. இந்தச் சொற்களுக்குப் பொருள் கூறிய திரு.ஹுல்ஸு அவர்கள் மலையாள அகராதியில் கொட்டாரம் என்னும் சொல்லிற்கான பொருளை மேற்கோள் காட்டி அரண்மனையாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அன்பில் செப்பேட்டைப் பதிப்பித்த திரு.டி.ஏ.கோபிநாதராவ் அவர்கள் திரு.ஹுல்ஸு அவர்களின் குறிப்பினை மேற்கோள்காட்டி வடமொழியிலுள்ள கோஷ்டாகாரத்தோடு ஒப்பிட்டுள்ளார். ஆயினும் அரண்மனை என்னும் பொருளையே கொண்டுள்ளார். கரந்தைச் செப்பேட்டின் முன்னுரையில், திருவாலங்காட்டுச் செப்பேட்டின் மொழிபெயர்ப்பில் கோட்டகம் என்னும் சொல்லிற்கு கோசாலை(கோஷ்டகம்) என்று பொருள் தரப்பட்டுள்ளது குறிப்பிடப் பட்டுள்ளது. தானிய கொட்டகை என்பது அதற்குச் சரியான பொருளாக இருக்கலாம் என்றும் அந்த முன்னுரை குறிப்பிடுகிறது. தமிழ் லெக்சிகனில் கோட்டகம் மற்றும் கோட்டகாரத்திற்கிடையே சிறுகுழப்பம் இருப்பதாக கர்ந்தைச் செப்பேட்டின் முன்னுரை குறிப்பிடுகிறது. கோட்டகாரம் என்னும் சொல்லோடு கிடங்கு என்னும் சொல் இடம்பெற்றிருப்பதால் தானியக் கிடங்கு என்பது பொருத்தமான பொருளாகலாம் எனவும் அந்த முன்னுரை குறிப்பிடுகிறது. பேராசிரியர் நீலகண்டசாஸ்த்ரியார் கோட்டகாரம் என்பதற்குத் தானியக் கிடங்கு என்றும் கோட்டகம் என்பதற்கு ஆழமான குள்ம் என்றும் பொருள் கொண்டுள்ளார். (சோழர்கள் பக் 578). லெய்டன் செப்பேட்டின் முன்னுரையும் கோட்டகாரம் என்னும் சொல்லிற்கு தொழுவம் அல்லது அரண்மனை என்னும் பொருளைத் தருகிறது. (எபிக்ராபியா இண்டிகா 22, பக் 262).
இவற்றுள் எபிக்ராபியா இண்டிகாவின் 18 ஆம் தொகுதியில் 119 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாம் நந்திவர்மனின் பட்டடமங்கலச் செப்பேட்டின் முன்னுரையில் திரு.கே.வி.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் கோட்டகாரம் என்னும் சொல் கோஷ்டீக்ருஹம் என்னும் வடமொழிச் சொல்லாகலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தச் சொல் கோசாலையைக் குறிப்பதாகவும் சிலநேரங்களில் அரண்மனை என்னும் பொருளிலும் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கல்வெட்டுக்களில் கோட்டகாரம்
உத்தமசோழனின் கோனேரிராஜபுரக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள கோட்டகாரம் என்னும் சொல்லிற்கு பரந்த தரைப்பகுதி என்னும் பொருள் கொள்ளப் பட்டுள்ளது. தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 19 இல் 344 ஆம் எண்ணாக வெளியிடப் பட்டத் திருவிடைமருதூர் கல்வெட்டு கொட்டகாரம் என்னும் சொல்லைக் கொண்டுள்ளது. இதற்கு நெற்களஞ்சியம் என்று பொருள் தந்துள்ளார் முனைவர். ஆர்.கே. அழகேசன் (கல்வெட்டுக்கள் காட்டும் கலைச்சொற்கள், பக் 302.) மேலும் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி மூன்றில் 69 ஆம் எண்ணிலும் தொகுதி 1 இல் 155 ஆம் பக்கத்திலும் வெளியாகியுள்ள முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களும் கோட்டகாரம் என்னும் சொல்லைக் கொண்டுள்ளன.

வடஇந்தியச் செப்பேடுகளில் கோட்டகாரம்
எபிக்ராபியா இண்டிகாவின் 22 ஆம் தொகுதியில் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ள ஸோகௌரா செப்பேடு அசோகனுக்கு முற்பட்டதாகக் கருதப் பட்டது. இந்தச் செப்பேடு ப்ராஹ்மி லிபியில் அமைந்தது. இந்தச் செப்பேடு ப்ராக்ருத மொழியில் கோடாகலாம் என்ற சொல்லைக் கொண்டுள்ளது. இதன் முன்னுரை கோடகலாம் என்பது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ள கோஷ்டாகாரமே எனத் தெரிவிக்கிறது. மேலும் ஆத்யயிகம் எனப்படும் பஞ்சக் காலத்திற்காகத் தானியத்தைச் சேர்க்கும் கிடங்கு என்ற பொருளும் இந்த செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது. கோஷ்டாகாரத்தைக் குறிக்கும் மிகப் பழையச் செப்பேட்டுப் பயன்பாடு இது எனலாம். மேலும் அதன் முன்னுரையில் அசோகனு முற்பட்டதென இன்று வரை ஒத்துக் கொள்ளப் படும் மஹாஸ்தான கல்வெட்டும் கோஷ்டாகாரத்தைக் குறித்த்தே எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
அப்படியே இரண்டாம் சில்ஹார போஜனால் வழங்கப் பட்ட வடமொழிச் செப்பேடு ஒன்று எபிக்ராபியா இண்டிகாவின் இருபத்தொன்பதாம் தொகுதியில் வெளியாகியுள்ளது. இந்தச் செப்பேடு டிஸம்பர் 1, 1182 இல் வெளியிடப் பட்டதாக முன்னுரை தெரிவிக்கிறது. இந்தச் செப்பேட்டில் லோகணநாயகனால் உருவாக்கப் பட்ட மடத்தின் கோஷ்டாகாரத்தின் பராமரிப்பிற்காகவுமான நிவந்தம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் முன்னுரையில் கோஷ்டாகாரம் என்னும் சொல்லிற்கு தானியக் கிடங்கு என்ற பொருள் வழங்கப் பட்டுள்ளது.

எபிக்ராபியா இண்டிகாவின் இருபதாம் தொகுதியின் பின்னிணைப்பில் 326 ஆம் பக்கத்தில் சாஹுமான மன்னன் இரண்டாம் ப்ருத்விராஜனின் வடமொழிக் கல்வெட்டு குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் கோஷ்டகம் என்னும் சொல் கிடங்கு என்னும் பொருளோடு இடம்பெற்றுள்ளது.
வடமொழி இலக்கியங்களில் மனுஸ்ம்ருதி ஆயுதாகாரம் (ஆயுதச்சாலை), தேவதாகாரம் (கோவில்) போன்றவற்றோடு கோஷ்டாகாரத்தையும் குறிப்பிடுகிறது. இதன் உரையில் கோஷ்டாகாரம் என்ற சொல்லிற்கு தானியக் கிடங்கு என்ற பொருளே தரப் பட்டுள்ளது. மஹாபாரத்தின் ஆதிபர்வத்தின் 119 ஆம் அத்யாயம் அரசனை வாழ்த்தும் தறுவாயில் தனம், தானியம் முதலியவை செறிந்த கோஷ்டாகாரத்தை உடையவனாய் வாழி என்று குறிப்பிடுகிறது.

கௌடல்யரின் அர்த்தசாஸ்திரத்தில் கோஷ்டாகாரம் என்னும் சொல்லின் பொருளும் அதனை அமைக்க வேண்டிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. அர்த்தசாஸ்திரத்தின் இரண்டாம் அதிகரணத்தில் இருபத்துமூன்றாம் அத்யாயம் கோஷ்டாகாரத்தைப் பற்றி விளக்குகிறது. இதற்கு உரை எழுதியுள்ள கணபதி சாஸ்த்ரியார் கோஷ்டம் என்பது வயிறு. அதற்கானத் தானியங்களை லக்ஷணத்தால் குறிக்கும். அதனுடைய ஆகாரம் – சேமிப்பிடம், கோஷ்டாகாரம் என்று பொருள் கூறியுள்ளார்.
மேலும் தானியங்களை வகைப்படுத்தி அவற்றைப் பாதுகாத்து பகிர்ந்தளிக்கும் முறையும் இந்த அத்யாயத்தில் விவரிக்கப் பட்டுள்ளது.

அவ்வாறே கோஷ்டகம் என்னும் வடமொழிச்சொல்லிற்கும் உள்ள பல்வேறு பொருள்களில் தானியக் கிடங்கும் ஒன்று என்று வாசஸ்பத்யம் என்ற வடமொழிக் கலைகளஞ்சியம் குறிப்பிடுகிறது.
முன்பு கண்ட செப்பேடுகளில் பெரும்பாலும் தானமாக வழங்கப் பட்டவை சிற்றூர்களாகும். சிற்றூர்களின் உள்ளடங்கிய பகுதியாக அரண்மனைகளி இருந்திருக்க வாய்ப்புக்கள் குறைவே.
மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் கோஷ்டாகாரம் என்பதன் மருவிய வடிவமே கோட்டகாரம் அல்லது கொட்டகாரம் என்பது விளங்குகிறது. கோட்டகம் என்று வழங்கப்படுவதும் கோசாலையைக் குறிக்காமல் கோட்டாகாரத்தின் மறுபெயரே என்பது தெளிவாகிறது. மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள கொட்டகாரம், நாகப்பட்டணத்தின் அருகிலுள்ள கொட்டாரக்குடி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோட்டகரம் போன்ற ஊர்கள் களஞ்சியங்களாக உருவாக்கப் பட்டிருக்கலாம் என்றும் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அபிதான சிந்தாமணி என்னும் தமிழ்க் கலைக்களஞ்சியம் வாய்ச்சியர் என்னும் சொல்லின் பொருளில் நெற்கொட்டாரத்தைக் குறிப்பிடுகிறது. மேலும் பெருங்கதை, சீவக சிந்தாமணி போன்ற நூல்களும் கொட்டாரத்தைக் குறிப்பிடுகின்றன.

இத்தகைய கோஷ்டாகாரங்களைக் கட்டும் விதத்தை அர்த்த சாஸ்திரத்தின் இரண்டாம் அதிகரணத்தின் இருபத்து மூன்றாம் அத்யாயம் தெரிவிக்கிறது. நன்கு சுட்ட செங்கற்களாலான தூணை உடையதும் நான்கு திசைகளிலும் சாலைகளை உடையதும் ஒரு வாயிலை உடையதும் பல அறைகளை உடையதும் இருபுறமும் அகன்ற தூண்களை உடையதும் வெளிச்சுவருக்கும் உட்சுவருக்குமிடையே இடைவெளி (அபஸாரம்) உடையதுமாக கோஷ்டாகாரத்தையும் பண்யாகாரத்தையும் (கருவூலம்) உருவாக்க வேண்டும் என்று அந்த அத்யாயம் குறிப்பிடுகிறது. இத்தகைய சாலைகளை அகழி வைத்தும் நெருப்பிலிருந்து காக்கும் உபாயங்களினாலும் காக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் அந்தந்தப் பகுதிகளுக்கு உரியதான தெய்வங்களை நிறுவி அவற்றைப் பூசிக்கும் பூசாரி வேடங்களில் ரஹஸ்ய காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது. அப்படி கருவூலத்திற்கும் கோஷ்டாகாரத்திற்கும் தெய்வமாகத் திருமகளை நிறுவச் சொல்லியும் குறிப்பிடுகிறது. கோஷ்டாகாரத்தில் மழையின் அளவை அளக்க ஒருமுழ அளவுள்ள சதுரக் குழியை வைக்க வேண்டும் என்றும் இந்த அத்யாயம குறிப்பிடுகிறது. மேலும் தானியத்தைக் கொள்ளும் போது தூயதும் (உமியற்றது) எடை முழுமையுள்ளதுமான தானியத்தைக் கைக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது. அப்படி கொள்ளாதுபோனால் அதன் அதிகாரிக்கு அதன் விலையின் இருமடங்கைத் தண்டமாகக் கொள்ள அறிவுறுத்துகிறது.

விச்வகர்மரால் இயற்றப் பட்ட சிற்பசாஸ்திரத்தின் அறுபத்தைந்தாவது அத்யாயம் தானியக் கிடங்கை அமைக்கும் முறையைப் பின்வருமாறு விவரிக்கிறது.
கோவில், அரண்மனை, வீடு போன்ற கட்டிடங்களில் தானியக் கிடங்கை அமைப்பசு சுபத்தைக் கொடுக்கும். ஆகவே இலக்கணப்படி அதனை நிர்மாணிக்க வேண்டும். கோயில்களில் வாயுமூலை (வடமேற்கு) அல்லது ஈசானமூலையில் தானியக் கிடங்கை அமைக்க வேண்டும். அரசர்களின் அரண்மனைகளில் குபேர திசையில் (வடக்கு) மதில்களின் நடுவே அமைக்க வேண்டும். மனிதர்களுக்கான வீடுகளில் சோஷதேவர் அல்லது ரோகதேவருக்கான (இவ்விரு தேவர்களும் பதவின்யாஸத்தில் நடுவில் ப்ரஹ்மாவில் ஆரம்பித்து இருபத்து மூன்று மற்றும் இருபத்து நான்காவது இடத்தை உடையவர்கள் என்று மயமதம் குறிப்பிடுகிறது)வாஸ்து ப்ரதேசங்களில் அமைக்க வேண்டும். கிராமம், நகரம் முதலானவற்றில் இரு முற்றங்கள் கூடும் இடத்தில் உள்ளேயோ அல்லது வெளியேயோ அமைக்க வேண்டும். சதுர வடிவில் கிழக்கு வடக்கு அல்லது மேற்கு நோக்கி வாயிலை அமைக்க வேண்டும். இரண்டு அல்லது நான்கு கதவுகளையும் அமைக்கலாம் (இதன் உரையான ப்ரமாணபோதினீ இரு வாயில்கள் வெவ்வேறு திசைகளில் அல்லது ஒன்றன் மீது ஒன்றாக அமைக்க வேண்டும் என்று பொருள் கூறியுள்ளது.) அளவுகள் வேறுபடும் போது ஆறு அல்லது எட்டு வாயில்களையும் அமைக்கலாம் கீழே பட்டிகையோடும் கனபட்டிகையால் அலங்கரிக்கப் பட்டகதாகவும் அமைக்க வேண்டும். கதவில் பசு, தெய்வம், குபேரன் அல்லது தானியதேவதையின் உருவத்தைப் பொறிக்க வேண்டும். (உரை ஓவியமாய் தீட்டுவது அல்லது செதுக்குவது என்று பொருள் கூறுகிறது). சற்றுக்கடினமாந நிலங்களில் உயரமாகவும் சில இடங்களில் பூமியின் அடியில் நிலவறையாகவும் அமைக்கலாம்.(உரைப்பகுதி மேல் கட்டப் படுவதற்கு ஊர்த்வதான்யக்ருஹம் என்றும் நிலவறையான கிடங்கிற்கு பூமிதான்யக்ருஹம் என்றும் பெயர் அளித்துள்ளது). படிக்கட்டோடு சேர்ந்ததாகவும் சுண்ணாம்பு வளைச் செங்கற்கள் முதலானவை சேர்ந்த்தாகவும் உறுதியான அமைப்போடு கூடியதாகவும் அறைகளை உடையதாகவும் அமைக்க வேண்டும். அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற்போலவும் ஆற்றலுக்குத் தகுந்தாற்போலவும் உறுதியான அடித்தளத்தோடும் அமைக்க வேண்டும். கற்களாலான சுவற்றையும் அமைக்கலாம். தூண்களோடும் அமைக்கலாம்.

இப்படி விச்வகர்மீய வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
ஸமராங்கணஸூத்ரதாரம் என்றும் மற்றொரு சிற்பசாஸ்திரநூலின் இரண்டாம் அத்யாயத்தின் இருபத்தியிரண்டாம் ச்லோகம் அரசனின் அரண்மனையில் தெற்குமூலையின் வலப்புறத்தில் கோஷ்டாகாரத்தை அமைக்க வேண்டும் எனக்குறிப்பிடுகிறது.
தஞ்சை நாயக்கர் காலத்தில் கட்டப் பட்ட திருப்பாலைத்துறை களஞ்சியத்தை திரு.குடவாயில். பாலசுப்ரமணியன் அவர்கள் தன்னுடைய தமிழகக் கோயில் மரபு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்தக்களஞ்சியம் செங்கல்லால் கட்டப் பட்டது. செங்கற்றூணையும் உடையது. இரண்ட்டுக்குக் கொண்ட இந்தக் களஞ்சியத்தின் கூரை கூம்பு வடிவானது. முதலிரண்டு அடுக்குகள் இருவாயில்களையும் மூன்றாம் கூம்புக்கூரை ஒரு வாயிலையும் பெற்றுள்ளது. கிட்டத் தட்ட இந்த அமைப்பு அர்த்தசாஸ்திரம் மற்றும் சிற்பசாஸ்திர கட்டமைப்பைக் கொண்டுள்ளதைக் காணலாம். this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.