http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 55

இதழ் 55
[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்
மணியான மணி
திரும்பிப்பார்க்கிறோம் - 27
கழுகுமலை பயணக் கடிதம் - 1
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2
Silpi's Corner-07
Thirumeyyam- 2
மாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்
மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்
கோட்டகாரம்
இதழ் எண். 55 > பயணப்பட்டோம்
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு
ரிஷியா
மீறமுடியாத அன்புக்கட்டளை

முன்னிரவின் சுகமான நேரம். அன்று 11-11-2008 செவ்வாய்க்கிழமை. மேற்கில் உதிக்கும் முழுநிலவை இரசித்தவாறு உலவிக் கொண்டிருந்தேன் மாடியில். செல்பேசி அழைத்தது. டாட் காம்மின் பிரம்மாவிடமிருந்து அழைப்பு. உரையாடலின் ஊடே நாளை ஐப்பசி முழுநிலவு, நான் கங்கைகொண்ட சோழபுரம் செல்ல உள்ளேன் என்று கூறினேன். அவர் மலரும் நினைவுகளில் மூழ்கி ஆடவல்லானின் அற்புதப் புன்னகை பற்றிச் சொன்னார். இவ்வளவு சிலாகிக்கிறாரே என்று வியந்தேன். தஞ்சை ஆடவல்லானையும் அவர் புகழ, 'அச்சச்சோ! விமானத்தின் வடக்குப் புறத்தையே நான் இன்னும் தாண்டவில்லை' என்று சொன்னேன். விமானம், சாந்தாரம், சுவரைக் குறுக்கி என்றெல்லாம் அவர் பேச, நானோ இன்னும் இராஜராஜேஸ்வரத்து சாந்தாரத்தையே பார்த்ததில்லை என்று கூறினேன்.

ஓ.கே. நீங்கள் ஒரு பயணக்கட்டுரை எழுதவேண்டும் என்றார். எனக்குப் பயணக்கட்டுரை பழக்கமில்லை. டாட் காம்மில் எல்லோரும் அழகாய் எழுதுவார்கள் என்று தெரியும். தயக்கம் என்னைப் பீடிக்க, அவர்மேல் உள்ள மரியாதை காரணமாக மறுக்க முடியவில்லை. அன்று மாலை 5 மணிக்கு மேல்தான் என் அம்மா 'சரி சரி, கங்கைகொண்ட சோழபுரம் செல்வோம்' என்று சம்மதம் தெரிவித்தார். நான் இவ்வருடம் சதயவிழாவிற்குச் செல்லவில்லை. எந்தவொரு வீட்டுப் பாடமும் படிக்காமல், முன்னேற்பாடும் செய்யாமல் திடீர்ப் பயணம். என் நண்பர் கிச்சு வேறு என்னை ஏளனம் செய்திருந்தார். 'இன்னும் பிள்ளையாண்டான் கோயிலைக் கண்டுகொள்ளவில்லையா?' என்று.

நிலமயக்கங்கள்

பனிக்கலையாத காலை வேளை ஜெயங்கொண்டம் பேருந்தில் பயணம். சோழவளநாட்டின் இதுவரை நான் பார்த்திராத வளமான பகுதியில் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தது பேருந்து. நிலமென்னும் நல்லாள் அன்றைய காலையில் சுந்தரப் பேரழகியாய் மிளிர்ந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை மரகதப்பட்டை உடுத்தியிருந்தாள் பூவாளூர், காட்டூர் பகுதிகளில்.

நெல்வயல்கள் வாழைத்தோப்புகளுடனும், கரும்புக் காடுகளுடனும் நெருங்கிப் பழகும் நிலங்கள், சோழக் காற்றோடு உறவாடும் தென்னஞ்சோலைகள், இடையிடையே கானகங்கள், அங்கங்கே குறுக்கிடும் கான்யாறுகள், கான்யற்றின் குறுக்கே எழுந்த பாலங்கள், சிறுசிறு கிராமங்கள், கூரைவீடுகள், மச்சுவீடுகள், பேருந்துப் பயணிகளுக்குக் கையசைத்து ஓவென்று உற்சாகக் கூச்சலிடும் பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் எனக் கண்ணுக்கு விருந்தளித்தாள் சோழநிலமகள். பிறகு சிறுநகரங்களான அங்காடித் தெருக்களுடன் கூடிய புள்ளம்பாடி, கல்லக்குடியைக் கடந்தது பேருந்து.

எங்கோ பிறந்து, வளர்ந்து, இங்கு மறை பரப்ப வந்து தமிழ்மொழிமேல் ஏற்பட்ட பற்றால் தமிழுக்கு அருந்தொண்டுகள் புரிந்து தேம்பாவணி படைத்த வீரமாமுனிவர் உலாவிய மண்ணான வடுகர்பேட்டை பூமி, டால்மியாபுரம் எனக் கடந்தது பேருந்து முன்னோக்கி. பரமார்த்தகுரு கதைகள் நியாபகத் திரையில் வந்துபோயின. வாழ்க வீரமாமுனிவர்.

சிமெண்ட் ஆலையின் புகைமண்டலம் பனிமூட்டத்துடன் சேர்ந்துகொள்ள வெளுத்த வானில் கரிப்புகைச் சுருள்கள். பொய்யுர், புராதனக் கீழ்ப்பழுவூர், முந்திரிக்காடுகள், நீர்நிலைகள் தேடிப் பறக்கும் கொக்குக் கூட்டங்கள், பனங்காடுகள், நகரத்தில் முற்றிலும் மறைந்துவிட்ட சிட்டுக்குருவிகள், பழைய சிவன்கோயில் குளம், அதன் படித்துறையில் குளிக்கும் மஞ்சள்முகங்கள் எனக் கண்ணைக் கொள்ளைகொண்ட ஊர்கள் யாவும் விரைந்து பின்னோக்கி மறைந்தன.

கூழம்பந்தல் என்னும் கங்காபுரி நோக்கி

செழித்து வளர்ந்த சோளக் காடுகள், சாமந்தி மலர்த் தோட்டங்கள், கறுத்த சாலையின் தோழிகளாய் சிவந்த செம்மண் குறுக்கு சாலைகள், திண்ணை கொண்ட வீடுகள், செம்மண்ணில் புரண்டெழுந்த களிற்றானைகளை ஒத்த மச்சுவீடுகள், ம்... ம்... சோழவளநாடு இன்றும் பெரும் செல்வச் செருக்கோடு வளமாய்த்தான் உள்ளது.

தூக்கம் கண்ணைச் சுழற்ற, சரி கண்ணுக்கெட்டிய தூரம்வரை பசுமைத் தாயகம்தானே! கொஞ்சம் அயர்வோம் என்று நினைத்து ஒரு குட்டித்தூக்கம். விழித்தபோது உடையார்பாளையம் வந்துவிட்டது. சாலைவளைவில் ஒரு பழமையான கோயில் செடிகளும், புதர்களும் சூழக் கற்குவியலாய்க் காட்சியளித்தது. ஏன் உடையார்பாளையத்து மக்கள் இதைக் கவனிக்கவில்லை? புலிக்கொடிகள் வானளாவிப் பட்டொளி வீசிப் பறந்த அந்த உயர்ந்த மாடமாளிகைகள் இன்றில்லை. கம்பீரமாய்க் காட்சியளித்த இராஜபாட்டை, தேரோடும் இராஜவீதிகள் ஒன்றுகூட இல்லை. ஜெயங்கொண்ட சோழபுரமோ ஒரு சிறுநகரமாய்த் திகழ, மனம் கனத்தது. அன்றைய கங்காபுரி இப்படியா இருந்திருக்கும்?

மஞ்சள், சிவப்பு நிறம்கொண்ட குத்துச்செடிகள் கண்ணையும் கருத்தையும் கவர, செங்காந்தள் பூங்காடுகளோ என நான் சொல்ல, அம்மா மறுக்க, செங்காந்தள்கள் அதிகமாய் ஈழத்தில் அல்லவா உண்டு. ஏக்கர் ஏக்கராகப் பயிர் செய்திருக்கிறார்களா என்னவாக இருக்கும்? உடையார்பாளையத்து விவசாயி ஒருவர், 'இங்கே கண்வலிக்கிழங்கு' சாகுபடி நிறையச் செய்கிறோம். அந்தக் காடுதான் இது' என்று பெருமையாகச் சொல்ல, மனம் உற்சாகம் கொண்டது.

ஒருவீட்டில் வயதான மூதாட்டி இராட்டையில் நூற்றுக் கொண்டிருந்தார். காந்தியக் கிராமமோ? வறண்ட பெரிய ஏரிகள், சிறுசிறு குளங்கள், வதிவாய்க்கால்கள், ஊருணிகள் எல்லாம் பின்னோக்கிச் செல்ல, ஒன்று புரிந்தது. வானம் பார்த்த பூமி. ஆகவே இந்தப் பக்கம் ஏரிப்பாசனம்தான். கிழக்காலே பாயும் வடவாற்றை நான் பார்க்கவில்லை. தண்ணீரைத் தேக்கி உழவு செய்து வளம் கண்டிருக்கிறார்கள். காடுவெட்டி ஏரிகள், குளங்கள் அமைத்துப் புதிதாய் நிர்மாணித்துள்ளார்கள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் புதிய தலைநகரை. கூழம்பந்தல், கங்கைகொண்ட சோழபுரம் என்னும் கங்காபுரியாய் மாறிவிட்டிருந்தது, வெற்றி பெறுவதையே விளையாட்டாய்க் கொண்ட பரகேசரி இராஜேந்திர சோழனால் அன்று.

கண்டேன் கண்ணுக்கினியதாய்

12-11-2008 அன்று விழாக்கோலம் பூண்ட ஊரென இன்றைய கங்காபுரி திகழ்ந்தது. எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. தஞ்சைக்குச் செல்லும்போது ஏற்படும் பரவசமும், நெஞ்ச இடிப்புகளுடன் கூடிய பரபரப்பும் இல்லாமல் அமைதியான மனதுடன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன். கண்ணுக்கினியதாய்க் கண்டேன் கோயில் விமானத்தை. அப்பாடா! தந்தைவேறு, பிள்ளைவேறு. நிம்மதி. பெருத்த நிம்மதி.

ராயர் கோபுரம் என இரண்டு மொட்டைத்தூண்கள், மதிற்சுவர்களைக் காணவில்லை. இடித்தபின் எஞ்சியவை இந்தத் தூண்களும், கல்மேடைகளும்தானோ? அடுத்த நுழைவாயில் சோதனைச் சாவடியாய் மாறிவிட்டிருந்தது. முன்பெல்லாம் ஸ்வாமிதான் மனிதர்களைக் காப்பாற்றினார். தாத்தா பாட்டி அப்படிச் சொன்னார்கள். ஆனால், இப்போது மனிதர்கள்தான் ஸ்வாமியைக் காப்பாற்றுகிறார்கள். அதான் ஏகப்பட்ட சோதனை, உணவுப் பாத்திரம் உட்பட. ஓ! படைத்து, காத்து, அழிப்பதால் மனிதர்களும் ஸ்வாமி ஆகிவிட்டார்கள். சிவசிவா! நாராயணா! சிவநாராயணா! காப்பாறு.

உயர்ந்த மதிற்சுவர்கள் அழிவின் வார்ப்புகள் கொண்டு திகழ, மனமோ வலித்தது. அன்று இருந்ததுபோல் இன்று காணக் கொடுத்து வைக்கவில்லையே. இவ்வளவு அகலம் குறைவான அகழியா அமைத்திருப்பார்கள்? உள்ளே சென்றேன். கொடிமரத்தின் பீடம் மட்டும் இருக்க, அடுத்ததாய்ப் பலிபீடம். அடுத்துச் சுண்ணம் பூசிய பெரியநந்தி.

கல் நந்தியா என்று அம்மா வினவ, தட்டிப் பார்த்துக் கல்நந்தி என்றேன். இல்லை, சுதை என்று அம்மா சொல்ல, கல், சுதை, சுதை, கல் என்று மாறிமாறி ஒரு சிறிய விவாதம் பண்ணி முடிவில் விவாதம் நிறைவுபெறாமல் நின்றுபோனது.

நெய்தல் மலர்ந்த மருதம்

நல்ல பழக்கம்தான் என்னிடம் ஒன்றும் கிடையாதே. எல்லோரும் பிரதட்சிணமாகச் செல்ல, நான் அப்பிரதட்சணமாக வடப்புப்புறம் நோக்கி விரைந்தேன். நீண்ட மக்கள் வரிசையில் நிற்கத் தோன்றவில்லை. சிம்மக் கிணற்றினைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சண்டிகேஸ்வரர் திருமுன்னை நோக்கி நடந்தேன். அதன் அருகே இருந்த ஒரு மரம் சிறிய உருண்டையான காய்களை என்மேல் சொரிய, நிமிர்ந்து நோக்கினால் நெய்தல் நிலத்துப் புன்னைமரம் இங்கே மருதநிலத்தில். நெய்தல்நிலப் புன்னை மலர்களை மருதநில மகளிர் தலையில் சூடிக்கொண்டனரே!!

அடுத்ததாய்ச் சண்டிகேஸ்வரர் சன்னிதி. அதன்முன் ஓதுவார் ஒருவர் தேவாரப்பண் இசைக்க, இரண்டேபேர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். மற்றவர்களுக்குக் கவனிக்க நேரம் ஏது?

"நங்கடம்பனைப் பெற்றவர் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே."


சண்டிகேஸ்வரர் திருமுன் நிற்க ஆர்வம் இடம் கொடுக்கவில்லை. வடக்கு வாசல் அருகே வந்தேன். ஹாய் சச்சு!! அட! நம்ம சரஸ்வதிங்க!

கலைவாணியே நம:

வடக்குப்புற ஆதிதளத்தில் என் கண்ணில் பட்ட முதற்சிற்பம் ஞானசரஸ்வதி. புகைப்படம் எடுக்க காக்கிச்சட்டையிடம் அனுமதிகோரி வி.ஐ.பி வரிசையில் நுழைந்து தடுப்புக் கயிறுகளினூடே நெளிந்து நின்று புகைப்படம் எடுத்தேன். யாரோ ஒரு வி.ஐ.பி, 'இங்கே என்ன பண்றீங்க?' என்று அதட்ட, 'சார் போட்டோ' என்று மென்று விழுங்கினேன். முறைத்துவிட்டு உள்ளே சென்றார். (அவர் வேலையை அவர் பார்க்க வேண்டியதுதானே?) பத்மபீடத்தில் அமைதியாய் அழகு மிளிர அமர்ந்திருந்தாள். மேற்புற வலதுகரத்தில் அக்கமாலை ஏந்தி, கீழ்ப்புற வலதுகரம் உபதேச முத்திரை காட்ட, மேற்புற இடதுகரம் குண்டிகையைப் பிடித்திருக்க, கீழ்ப்புற இடதுகரம் ஓலைச்சுவடிகளைப் பற்றியிருக்க ஆழ்ந்த அறிவின் அமைதி அவள் முகத்தில் தவழ ஞானமே உருவாய்க் கலைவாணி அருள்பாலித்தாள்.

என்னைக் கவர்ந்தது அவள் அணிந்திருந்த முப்புரிநூல். தோள்வழியாக, மார்பினூடே இறங்கி, இடையில் முடிந்திருந்தது. பெண்கள் பூணூல் அணியலாமா என்ற கேள்வி மனதில் தோன்றியது. கலைவாணியே உன் கருணையை என்மீது அபரிமிதமாய்ப் பொழிவாயாக என மனதாரச் சேவித்துக் கொண்டு படிகளைவிட்டு இறங்கினேன். வியாழன் தோறும் உத்தமர் கோயிலில் நான் வணங்கும் ஞானசரஸ்வதிகூட இத்தனை எழிலரசி அல்ல. உத்தமர் கோயிலில் அரங்கேறிய பிரப்னோதி நகைச்சுவை மனத்திரையில் தோன்ற எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். ஞான சரஸ்வதியே நம:

சண்டேச அருளாள அண்ணல்

கலைவாணிக்கு நேர் எதிரே அருள்புரியும் அய்யனாய் சண்டேச அனுக்கிரகமூர்த்தி. க்யூ வரிசைக்குத் திரும்பிப்போய்ச் சுற்றிக்கொண்டு வந்து படியேறினால், அதே விரட்டல்கள். நான் விட்டுவிடுவேனா? இன்று ஒருநாள் கூத்துதானே. ஆடு மகனே ஆடு. காதில் வாங்கிக் கொள்ளாமல் புகைப்படம் எடுத்தேன். கூப்பிய கரங்களுடன் சண்டேசர் அமர்ந்திருக்க, பார்வதியுடன் வீற்றிருக்கும் சிவன் தன் கீழிரு கரங்களால் மலர்மாலையை சண்டேசரின் தலையில் அணிவிக்கிறார்.

சண்டேசர் காட்டும் சிரம் தாழ்த்திய பணிவும் பக்தியும் நுணுக்கமாய் வடிக்கப்பட்டுள்ளது. பக்கச் சுவர்களில் சண்டேசரின் வாழ்க்கை நிகழ்வுகள் சிற்பங்களாய்ச் செதுக்கப்பட்டிருக்கிறது. சண்டேசரைச் சுட்டி இவர்தான் இராஜேந்திரசோழன் என்று ஒருவர் எனக்குச் சொன்னார். ஓ! அப்படியா என்று ங்ஏ என்று நான் பார்க்க, அவரோ மறுபடியும் சொன்னதையே மறுமுறை சொல்லிவிட்டுக் கோயிலினுள் சென்றார். வழக்கம்போல் வாடிக்கைக் கதையை உலவவிட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. கூப்பிய கரங்களுடன் ஒரு சிற்பம் தென்பட்டால் போதும். உடனே அந்த ராஜா, இந்த மகாராஜா என்று கதை பகர்வார்கள். ம்.. ம்.. படியை விட்டு விலகுங்கள் என்று அழைப்பு வந்தவுடன் இறங்கிவிட்டேன். கலையெழில் பொழியும் சிற்பத் தொகுதிகளை ஓரிரு நிமிடங்களில் முழுமையாக இரசித்து விடமுடியுமா?

வடக்குப்புற விமானத் தளமொன்றில் நந்தி தன் மனைவியுடன் அணுக்கமாய் வீற்றிருந்தார். நந்தியாரின் மனைவி பெயர் என்ன? 'சுவஜா'வோ என்று யோசித்த வண்ணம் நின்றேன். அதற்குள் ஒரு காக்கி என்னிடமிருந்த தொலைநோக்கியை வாங்கிக்கொண்டார். ஓ! விமானத் தளச் சிற்பங்களை நோக்கப் போகிறார் என்று நினைத்தால், அவரோ தூரத்தே பட்டுச்சரிகை, மல்லிகை தேவதைகளை நோட்டம்விட, அய்யோ என் தொலைநோக்கியைத் தருவாரா, மாட்டாரா என நான் பீதியடைய, சில நிமிஷங்கள் யுகங்களாய் எனக்குத் தோன்றியது. நல்லவேளை கொடுத்துவிட்டார். வடமேற்கு மூலையில் விமானத் தளத்தில் கஜவாகனனாய்க் கம்பீரத் தோற்றத்துடன் ஆறுமுகப் பெருமான் அமர்ந்திருந்தார். அவருக்கு ஒரு ஹாய் சொல்லிக்கொண்டேன்.

காலாந்தக மூர்த்தி, துர்க்கை எனச் சிற்ப எழில்கள் என்னைச் சற்றே பயம் கொள்ளவே செய்தன. என்ன சோகமோ தெரியவில்லை. தாடி சகிதமாய் நின்றார் அவர்.

(தொடரும்)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.