http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 55

இதழ் 55
[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்
மணியான மணி
திரும்பிப்பார்க்கிறோம் - 27
கழுகுமலை பயணக் கடிதம் - 1
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2
Silpi's Corner-07
Thirumeyyam- 2
மாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்
மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்
கோட்டகாரம்
இதழ் எண். 55 > இலக்கியச் சுவை
மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்
க.சங்கரநாராயணன்
இந்திய கலாச்சாரம் சார்ந்த இலக்கியங்களில் இதிஹாஸங்களும் புராணங்களும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. வேதத்தின் கருத்துக்களை விளக்க நண்பனைப்(सुहृत्सम्मितता) போலக் கதைகளைக் கூறி கருத்துக்களை எடுத்துச் சொல்ல புராணங்கள் தோன்றின என்பர். இத்தகைய புராணங்களில் மூல புராணங்களாகப் பதினெண் புராணங்கள் கூறப் படுகின்றன. இவற்றை வேதவ்யாஸரே இயற்றியதாக மரபு வழி சார்ந்த நம்பிக்கைகள் கூறுகின்றன. ஆயினும் ஆய்வியலார் இவை பல காலகட்டங்களில் இயற்றப் பட்டக் கதைகளின் தொகுப்பு என்று கருதுகின்றனர். கி.மு மூன்றாம் நூற்றாண்டு துவங்கி கி.பி ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு வரையில் இத்தகைய நூல்கள் தொகுக்கப் பட்டனவென்று ஆய்வாளர்களின் கருத்து. இத்தகைய புராணச் செய்திகள் வரலாற்றிற்குப் பெருமளவு பயன்படாவெனினும் சிற்சில குறிப்புக்கள் வரலாற்று ஆய்வாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன. புராணங்களில் மிகப் பழையதாகக் கருதப் படும் விஷ்ணுபுராணம் அசோகனைப் பற்றியும் மௌர்ய வம்சத்தைப் பற்றியும் தெரிவிக்கிறது. வாயுபுராணம் கௌடல்யரைப் பற்றியும் சந்த்ரகுப்த மௌர்யனைப் பற்றியும் குறிப்பிடுகிறது. இத்தகைய குறிப்புகளைக் கொண்டு ஓரளவு சிற்சில கோணங்களைக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
மேலும் அப்போதைய இந்தியாவின் நிலப் பகுப்புக்களையும் இவற்றின் மூலம் ஓரளவு ஊகிக்க முடியும்.

தென்புலக் குறிப்புக்கள்
வடபுலத்தில் இயற்றப் பட்டவையாகக் கருதப் படும் இத்தகைய நூல்களில் தென்புலம் சார்ந்த குறிப்புக்கள் செவிவழி சார்ந்த அல்லது கற்பனையான குறிப்புக்கள் எனக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. வேதகாலத்தில் தென்புலத்தில் ஆந்த்ரர்களைப் பற்றிய குறிப்பு காணப் படுகிறது. ஐதரேய ப்ராஹ்மணத்தின் ஏழாம் அத்யாயத்தின் 18 ஆம் செய்யுள் ஆந்த்ரர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பிறகு வந்த தர்மசாஸ்த்ர நூல்கள் த்ராவிடம் முதலான நாடுகளைப் பற்றித் தெரிவிக்கின்றன. இதிஹாஸ புராணங்களைப் பொறுத்தவரை இயற்றப் பட்ட காலங்கள் வேறுபடுவதால் அவற்றில் உள்ள குறிப்புக்களை வரலாற்றிற்கு ஏற்க இயலாது என்று பேராசிரியர்.கே.ஏ. நீலகண்ட சாஸ்த்ரியார் சோழர்கள் என்னும் நூலில் குறிப்பிட்டாலும் சுவடியியலின் பின்புலத்தில் ஒரு கூற்றை நோக்க வேண்டியுள்ளது. பொதுவாக இதிஹாஸ புராணங்களின் சுவடிகள் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பேரளவில் கிடைத்துள்ளன. இவற்றை பதிப்பிக்குங்கால் புலப் பதிப்புகளாகக் கொள்ளும் போது தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்று நாற்றிசைப் புலப் பதிப்புகளை முன்னிறுத்தினர். ஒரு புலம் முழுமையும் கிடைக்கும் சுவடிகளில் கதை மாறுபடாது பாடபேதங்கள் அல்லது பிற்சேர்க்கைகள் மட்டுமே இடம் பெறும். ஆகவே புலப் பதிப்புகளில் ஒரு புலம் சார்ந்த பதிப்பிலிருந்து அந்தப் புலத்தின் ப்ரதேசத்தைச் சார்ந்த மாறுபாடுகள் மட்டுமே நிலவும். இந்த சுவடியியல் கூற்றின் அடிப்படையில் தென்னிந்தியப் புலப் பதிப்புகளில் மட்டுமே தென்னகத்தைச் சார்ந்த தகவல்களில் மாறுபாடுகள் தோன்றும். வடபுல பதிப்புகளில் பழைய தகவல்களே இடம்பெறும். எடுத்துக்காட்டாக மஹாபாரதத்தில் அர்ஜுனனின் தீர்த்தயாத்ரையைக் குறிப்பிடும் போது அவன் மணலூர் சென்று பாண்ட்யனின் மகளான சித்ராங்கதையை மணந்த்தாக தென்னிந்தியப் புலப்பதிப்புகள் குறிப்பிடுகின்றன. ஆயின் மற்றைய புலப் பதிப்புகள் மணலூரிற்குப் பதிலாக மணிபூருக்குச் சென்றதாகக் குறிப்பிடுகின்றன. (இதனை அடிப்படையாகக் கொண்டே ரவீந்த்ரநாத் தாகூர் மணிபூரின் சித்ராங்கதையின் கதையை சிறுகாவியமாக்கினார்.) ஒரு உகரக் குறியிலும் ஒரு எழுத்திலும் மட்டுமே மாறுபாட்டைக் கொண்டு தென்னிந்தியப் பதிப்புகளில் ஏற்பட்டுள்ள மாறுபாடு இதனால் புலனாகிறது. ஆகவே வடபுலப்பதிப்புக்களை மட்டுமே நோக்கினால் இத்தகைய தென்னிந்திய மாறுபாடுகளற்ற வடபுலம் சார்ந்த தென்புலத்தின் நோக்கு தெளிவாகும். மேலும் கி.பி மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு தோன்றிய எந்த அரசும் புராணங்களில் இடம் பெறாததும் நோக்கற்பாலது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் பல்லவர், இக்ஷ்வாகு, விஷ்ணுகுண்டி, கங்கர் போன்ற எந்த வம்சமும் புராணங்களில் குறிப்பிடப் படவில்லை. வடபுலத்தும் குப்தப் பேரரசைத் தவிர பிற்காலத்துத் தோன்றிய அரசுகள் எவையும் இடம்பெறவில்லை. ஆகவே கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னிருந்த அரசுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன எனக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

மூஷிகர்கள்
இவர்கள் கேரளத்தில் கோலோச்சியவர்கள். இவர்களின் நாடு ஹைதராபாத்திற்கு அருகில் இருந்திருக்கலாம் என்று முனைவர். ஸாவித்ரி ஸக்ஸேனா குறிப்பிடுகிறார். (Geographical Survey of the Puranas). ஆயினும் இந்நாடு கேரளத்தில் உள்ள மூஷிக வம்சத்தையே குறிப்பதாகக் கொள்ளலாம். பனிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட மூஷிகவம்ச மஹாகாவ்யம் இவர்களுடைய தோற்றத்தைப் பற்றிய புராணச் செய்தியைக் கூறுகிறது. முதலில் இந்த நாட்டின் பரப்பளவு கொல்லத்தின் தென்பகுதியிலிருந்து கன்யாகுமரி வரை இருக்கலாம் என்று எண்ணப் பட்டது. பிறகு இந்த காவ்யத்தின் அடைப்படையில் தற்போதைய கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களைக் கொண்ட கொளத்துநாடே மூஷிகவம்சத்தின் நாட்டுப் பகுதி என்னும் முடிவிற்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர். மூஷிகர்கள் பின்னர் கோலாத்ரிகள் என்று வழங்கப் பட்டனர். இந்தக் காவ்யத்தின் பதினாலாம் ஸர்கம் சோழர் படையெடுப்பைக் குறிப்பிடுகிறது. இது ராஜராஜனின் படையெடுப்பையே குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்..
இவற்றுள் தமிழகத்தின் முக்கியப் பேரரசுகளான சேர, சோழ மற்றும் பாண்டியப் பேரரசுகள் எல்லா இலக்கியங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. இவற்றில் பொதிந்துள்ள கருத்துக்களை வரலாற்று முறையில் ஏற்பது சற்று கடினமே என்றாலும் அந்தத் தகவல்களின் திரட்டு ஏதேனும் ஒரு கோணத்தை ஏற்படுத்த கூடும். எடுத்துக்காட்டாக சோழர்களின் தலைநகரம் காஞ்சீபுரம் என்றும் (ஸ்கந்தபுராணம் 2.2.26.5) பாண்டியர்களின் தலைநகரம் உரகபுரம் என்றும் (ரகுவம்சம் 6.59) வடபுல இலக்கியங்களில் பதிவாயுள்ளது. உரகபுரம் என்பது நாகப்பட்டினம் என்று பேராசிரியர். ஹுல்ஸ் அவர்களும் உறையூர் என்று பேராசிரியர்.நீலகண்ட சாஸ்த்ரியாரும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய குறிப்புகளை ஒன்று சேர்த்துப் பார்ப்பதன் மூலம் தென்புலம் நோக்கிய வடவியல் நோக்கை அறிய முடியும்.

கேரளர்கள்
பொதுவாக முடியுடை மூவேந்தர்களின் தோற்றத்தைப் புராணச் செய்திகள் இருவிதமாகக் குறிப்பிடுகின்றன. யயாதியின் வழியில் துர்வஸு என்னும் மன்னன் தோன்றினான். அவனுடைய வழித் தோன்றலான ஜனாபீடனின் மகன்கள் கேரளர், சோழர், பாண்டியர் மற்றும் குல்யர்கள் என்று மத்ஸ்ய(பூர்வம் 48.4.5), வாயுபுராணங்கள்(உத்தரம் 37.6) குறிப்பிடுகின்றனர். இந்த நால்வரும் ஆண்டீரனின் மகன்கள் என ப்ரஹ்மபுராணம்(11.147-148) குறிப்பிடுகிறது. மஹாபாரதத்தின் ஆதிபர்வம் கேரளர்கள், விச்வாமித்ரருக்கும் வஸிஷ்டருக்கும் இடையிலான போரில் காமதேனுவின் மகளான நந்தினியிடமிருந்து உருவானதாகக் குறிப்பிடுகிறது. கேரளர்கள் விந்த்யத்தின் தென்பகுதியில் வசிப்பதாக வாயு, மத்ஸ்ய, பாகவத, மார்கண்டேய, ப்ரஹ்ம புராணங்களும் மஹாபாரதமும் குறிப்பிடுகின்றன.

வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தாகாண்டத்தில் ஸுக்ரீவன் வானரங்களை பல திசைகளுக்கும் அனுப்பும்போது தென்திசை நாடுகளைக் குறிக்கும் தறுவாயில் கேரளர்களையும் குறிபிடுகிறான். (கிஷ்கிந்தாகாண்டம் 41.42)
பொதுவாக பாண்டியர் மற்றும் சோழர்களோடு சேர்த்தே கேரளர்களும் குறிப்பிடப் படுகின்றனர். மேலும் இவர்களோடு சேர்த்து த்ரிகர்த்தர்களும் குறிப்பிடப் படுகின்றனர். மஹாபாரதப் போரில் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டதாகக் கர்ண பர்வம் (121. 14.15) குறிப்பிடுகிறது. மேலும் இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் ஸ்கந்த புராணத்தைச் சேர்ந்த வேங்கடாசலமாஹாத்ம்யம், அக்னிபுராணம், வாமனபுராணம், ப்ருஹுத் தர்மபுராணம் முதலியவற்றில் காணப் படுகின்றன.

சோழர்கள்
சோழர்களும் முன்னர் குறிப்பிட்டபடி ஜயாபீடன் அல்லது ஆண்டீரனின் வழித்தோன்றல்களாகப் புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளனர். சிற்சில இடங்களில் த்ரவிடர்கள்(பத்மபுராணம் ஸ்வர்ககண்டம் 6.53) என்னும் சொல் சோழர்களைக் குறிப்பதாக உள்ளது. சில இடங்களில் சோழர்களைத் தவிர த்ரவிடர்கள் என்ற சொல்லும் ஒரே சூழலில் இடம் பெற்றுள்ளது.
வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தாகாண்டத்தில் ஸுக்ரீவன் வானரங்களை பல திசைகளுக்கும் அனுப்பும்போது தென்திசை நாடுகளைக் குறிக்கும் தறுவாயில் சோழர்களையும் குறிபிடுகிறான். (கிஷ்கிந்தாகாண்டம் 41.42)
சோழமன்னன் ஒருவன் யுதிஷ்டிரரின் ராஜஸூய யாகத்தில் பங்கெடுத்ததாகவும் அதற்காகப் பரிசு பொருள் கொண்டு சென்றதாகவும் ஸபாபர்வம் குறிப்பிடுகிறது. (3.34) சோழர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் திக்விஜயத்தின் போது அவரால் வெல்லப் பட்டதாக மஹாபாரதத்தின் த்ரோண பர்வம் குறிப்பிடுகிறது. (7.11). இவர்கள் பாண்டவர்களின் பக்கம் போரிட்டதாக கர்ண பர்வம் தெரிவிக்கிறது (8.12). மஹாபாரதத்தின் ஹரிவம்சம்(32.123), வாயுபுராணம் (26.141-142), ப்ரஹ்மபுராணம் (6.50) முதலியவற்றில் ஸூர்ய குலத்தைச் சேர்ந்த ஸகரன் என்னும் மன்னனின் எதிரிகளுக்குச் சோழர்கள், கசர்கள் முதலானோர் உதவி செய்ததால் அவர்களின் க்ஷத்ரியத்தன்மையை இழக்கச் செய்ததாக தெரிவிக்கின்றன. ஆயின் இந்தக் குறிப்பு சோழர்களைப் பற்றியதல்ல என்று பண்டார்க்கர் என்னும் அறிஞர் கருதுகிறார். இவர்கள் பாண்ட்ய கேரளர்களோடு சேர்த்துக் குறிப்பிடப் படாததால் சோழர்களாக அல்லாமல் சுளிகர்களாக இருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார். (Political History of Ancient India, P 358). மேலும் சோழர்களைப் பற்றிய குறிப்புகள் வாயுபுராணம் (45.124) மத்ஸ்யபுராணம் (114.46) வாமனபுராணம் (13.47), ப்ரஹ்மபுராணம் (6.50) அக்னிபுராணம் (277.3) பத்மபுராணம் பூமிகண்டம் (94.34) உத்தரகண்டம் (108.5) ப்ரஹ்மாண்டபுராணம் (63.140) முதலான நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் பத்மபுராணத்தில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட சோழவேந்தன் ஒருவனின் விஷ்ணுபக்தி விளக்கப் பட்டுள்ளது.

பாண்டியர்கள்
மற்ற இருவரையும் விட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புக்களே புராண நூல்களில் அதிகம் காணப் படுகின்றன. பாண்டியர்களைப் பொறுத்த வரை அவர்களுடைய பொதிகைச் சந்தனமும், முத்துக்களும், அவர்களின் கோட்டைக் கதவும் முக்கியமாக புராண நூல்களில் இடம்பெற்றுள்ளன. மற்ற இருவரைப் போல பாண்டியர்களும் ஜனாபீடன் அல்லது ஆண்டீரனுடைய மகனான பாண்டியனின் வழித்தோன்றல்களாகவேக் குறிப்பிடப் படுகின்றனர். வால்மீகி வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தாகாண்டத்தில் ஸுக்ரீவன் வானரங்களை பல திசைகளுக்கும் அனுப்பும்போது தென்திசை நாடுகளைக் குறிக்கும் தறுவாயில் பாண்டியர்களையும் குறிபிடுகிறான். (கிஷ்கிந்தாகாண்டம் 41.44). அப்போது பாண்டியர்களின் அழகான முத்துக்கள் பதிக்கப் பட்ட கதவுகளைக் காண்பீர் என்று அவன் கூறும் வர்ணனை மிக அழகானது. (இந்த வர்ணனையைக் கொண்டே இது கவாடபுரத்தைப் பற்றிய குறிப்பு எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். கவாடம் - கதவு)

பாணினியினால் இயற்றப் பட்ட வடமொழி இலக்கணம் பாண்ட்யன் என்னும் சொல்லிற்கு விளக்கத்தைத் தருகிறது. (4.1.171) அந்த விளக்கத்தில் பாண்டுவின் வழித்தோன்றல்களுக்கு ட்யன் என்னும் விகுதியினால் பாண்ட்யன் என்னும் சொல் தோன்றுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் குறிப்பினைக் கொண்டு பண்டார்க்கர் பாண்டு என்னும் பழங்குடியினம் மதுரா பகுதியை அடுத்திருந்து பிறகு தென்னகம் நோக்கிச் சென்றதாகக் குறிப்பிடுகிறார். மேலும் அங்கிருந்து புலம் பெயர்ந்து வந்ததன் அடையாளமாகவே தங்கள் தலைநகருக்கு மதுரை என்று பெயர் சூட்டியதாகவும் இப்படி புலம் பெயர்ந்தவர்கள் பழைய இடத்தின் நினைவாகப் பெயர் சூட்டுவது இயல்பே என்பதனையும் சுட்டிக் காட்டுகிறார். (Political History of Ancient India, P 329) இந்த கோணத்தை நிறுவ ஒரு சான்றும் இல்லையெனினும் இப்படியொரு கோணத்தில் பார்வை விழுந்திருப்பதும் அறியற்பாலதாகும்.

சோழர் மற்றும் கேரளர்களில் எவர் பெயரும் குறிப்பிடப் படவில்லை. ஆனால் மஹாபாரதம் ஸாரங்கத்வஜன், மலயத்வஜன் என்னும் இரு பாண்டிய மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. ஸ்ரீ கிருஷ்ணரின் திக்விஜயத்தின் போது பாண்டியர்களின் கதவைப் பிளந்து ஸாரங்கத்வஜனின் தந்தை அவரால் கொல்லப் பட்டதால் வெகுண்டெழுந்த அவன் படையைப் பெருக்கி த்வாரகையை நோக்கிப் படையெடுக்க முற்பட்டதாகவும் நண்பர்களால் தடுத்து நிறுத்தப் பட்டதாகவும் த்ரோணபர்வம் குறிப்பிடுகிறது (7.23). ஸஹாதேவனின் திக்விஜயத்தில் பாண்டியர்கள் அவனால் வெல்லப் பட்டதை ஸபாபர்வம் குறிப்பிடுகிறது. (3.88). யுதிஷ்டிரரின் ராஜஸூய யாகத்தில் அவருக்குப் பரிசு பொருள் அளித்ததாக ஸபாபர்வம் குறிப்பிடுகிறது. (2.14). பாண்டிய மன்னன் ஒருவன் த்ரௌபதியின் ஸ்வயம்வரத்தில் இருந்ததாக ஆதிபர்வம் தெரிவிக்கிறது. (1.ஸ்வயம்வரபர்வம்). மேலும் இவர்கள் பாண்டவர்கள் பக்கம் இருந்து போரிட்டதாக த்ரோணபர்வம் தெரிவிக்கிறது. அப்போது மலயத்வஜன் என்னும் மன்னன் மிக வீரத்தோடு போரிட்டு கௌரவப் படையைக் கலங்கடித்ததையும் பிறகு அச்வத்தாமனால் வீழ்த்தப் பட்டு வீரமரணம் அடைந்ததையும் அந்தப் பகுதி குறிப்பிடுகிறது. (7.21). இப்படி மலயத்வஜன் (பொதிகைக் கொடியோன்), ஸாரங்கத்வஜன் (மான்கொடியோன்) போன்று கொடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெயர்கள் காரணப் பெயர்களாக இருக்கக் கூடும். மேலும் இவர்களைப் பற்றிய குறிப்பு ப்ரஹ்மபுராணம் (11.148, 35.3, 48.57-67), ஸ்கந்தபுராணம் ப்ரஹ்மோத்தரகண்டம் (4.38), பத்மபுராணம் ஸ்ருஷ்டி கண்டம் (45.163), ப்ரஹ்மாண்ட புராணம் (16.56) அக்னிபுராணம் (277.3) ப்ருஹத்ஸம்ஹிதா (4.10, 6.8, 11.56, 16.10) முதலிய நூல்களில் காணப் படுகின்றன.

கௌடல்யரின் அர்த்தசாஸ்திரம் முத்துக்களின் வகைகளைக் குறிக்கும் போது பாண்டிய காவடிகம் (பாண்டியர் கதவிலுள்ளது) என்னும் ஒருவகை முத்தினைக் குறிப்பிடுகிறது. (2.11) காளிதாஸரால் இயற்றப் பட்ட ரகுவம்சம் தசரதரின் தாயான இந்துமதியின் ஸ்வயம்வரத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.(6.58-59) இங்கு பாண்டியனைப் பற்றியும் அவனுடைய மாலையினைப் பற்றியும் பொதிகைச் சந்தனத்தைப் பற்றியுமான வர்ணனைகள் மிக அழகியவை. this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.