http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 55

இதழ் 55
[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்
மணியான மணி
திரும்பிப்பார்க்கிறோம் - 27
கழுகுமலை பயணக் கடிதம் - 1
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2
Silpi's Corner-07
Thirumeyyam- 2
மாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்
மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்
கோட்டகாரம்
இதழ் எண். 55 > தலையங்கம்
வரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

வரலாறு என்னும் தங்கத்தை எந்தெந்த மூலப்பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கலாம்? சுருக்கமாக விடைகூற முடியாத அளவு கடினமான கேள்வி. எதில்தான் வரலாறு இல்லை? என்ற எதிர்க்கேள்விதான் இதற்கு ஓரளவு சரியான விடையாக இருக்கமுடியும். டாக்டர். கலைக்கோவன் அவர்கள் அடிக்கடி கூறுவதுபோல், வரலாறு என்பது தனியாக இல்லை. நம்மிலும், நம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களிலும் வரலாறு கலந்தே இருக்கிறது. நாம்தான் அதைச் சரியாக இனங்கண்டு பிரித்தெடுக்கவேண்டும். சமகாலத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள்தான் எதிர்காலத்தில் வரலாற்றை அறிய உதவும் என்பது வரலாறு பற்றிய சிலரது கருத்து. இன்னும் சிலர், செப்பேடுகள் கூறுவது மட்டும்தான் வரலாறு; கல்வெட்டுகள் பொய்ச்செய்திகளைத் தருபவை என்று அறியாமையில் இருப்பார்கள். இன்னும் சிலரோ, அந்தக் காலத்தில் எழுதி வைத்தவை அனைத்துமே கற்பனைகள்; இத்தனை ஆண்டுகள் கழித்து அன்று நடந்ததை எப்படிக் கண்டறிய முடியும்? என்று விதண்டாவாதம் பேசுபவர்களாக இருப்பார்கள். பூனை கண்களை மூடிக்கொண்டதுபோல் இப்படி எத்தனைபேர் அறியாமையில் உழன்றாலும், உண்மை என்றைக்கும் உறங்காது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல், அறிவியல்பூர்வமான முறையான வரலாற்றாய்வு செய்யும் ஆய்வாளர்களால் அவ்வுண்மை வெளிப்பட்டே தீரும்.

கல்வெட்டுகளில் மட்டும் இல்லை; செப்பேடுகளில் மட்டும் இல்லை; இலக்கியங்களில் மட்டும் இல்லை; இவை எல்லாம் சேர்ந்ததே வரலாறு. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று துணைபுரியும் காரணிகள். தரவுகள் மட்டுமல்ல; கலைகளும் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. கட்டடக்கலை, சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலையையும் சான்றுகளாகக் கொண்டு வரலாற்றை வரையலாம். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வதைப்போலவே வரலாற்றுத்துறையிலும் அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். வரலாற்று ஆய்வுகளில்தான் அதிக அளவு முரண்பாடுகள் காணப்படுவதுபோல் தோற்றமளிக்கும். அறிவியல் ஆய்வுகள் முந்தைய ஆய்வுகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு ஒரு திடமான முடிவை முன்வைக்கின்றன. ஆனால் வரலாற்று ஆய்வுகளில் ஊகங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதால், ஆய்வாளர்கள் அவரவர் கற்பனைத்திறனுக்கேற்ப முரண்பாடுகளை வளர்க்கிறார்கள் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அறிவியல்பூர்வமான அணுகுமுறையால் ஊகங்களுக்கும் ஓர் உறுதியான வடிவம் தரமுடியும். எதன் அடிப்படையில் ஒரு கருத்தை ஊகிக்கிறோம் என்பதைப் பொறுத்தது அது. தம் மனம்போன போக்கில் வரலாற்றுத்துறையில் ஆய்வு முடிவுகளை அள்ளித் தெளிக்கும் அளவுக்கு அறிவியல் துறைகளில் கூறமுடியாது என்று சிலர் உளறுவதையும் கேட்கிறோம். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. வரலாற்றுத்துறையிலும் பல ஆய்வுகள் அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டு, திடமான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு தான்தோன்றித்தனமான ஆய்வு முடிவுகள் வரலாற்றாய்வாளர்களால் தவறென்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆய்வு என்றால் என்னவென்றே சரியாகப் புரிந்துகொள்ளாத ஆய்வாளர்கள் வேண்டுமானால் ஆய்வு நெறிமுறைகளைத் தத்தம் கொள்கைகளுக்கேற்ப வளைக்கலாம். ஆனால் அவற்றை வாசிப்பவர்களால் எளிதில் இனங்கண்டு கொள்ளமுடியும்.

கலைகளில் ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு ஒரு சிக்கல் காத்திருக்கிறது. இதுகாறும் கலைகளில் ஆய்வு செய்த வரலாற்றறிஞர்கள் 'கலைமுறை' என்ற ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மாமல்லபுரம் மற்றும் காஞ்சிபுரத்திலிருக்கும் பல்லவர்களின் நினைவுச்சின்னங்களை ஆய்வு செய்துள்ள அறிஞர்களின் நூல்களை வாசித்தால், இந்தக் கலைமுறை என்றால் என்னவென்று ஓரளவு புரிந்துகொள்ளலாம். தலைமுறையையும் கலைமுறையையும் குழப்பிக்கொள்ளும் ஆய்வாளர்களே அதிகம். உதாரணமாக, இராஜசிம்மரின் கலைமுறைக்கும் பரமேசுவரவர்மரின் கலைமுறைக்கும் அடுத்தடுத்த தலைமுறை என்பதால், சிறிதளவு வேறுபாடு மட்டுமே காணப்படும். பல்லவர் வரலாற்றாய்வில் பழம்தின்று கொட்டைபோட்ட டாக்டர்.கூ.இரா.சீனிவாசன் அவர்களையே தடுமாறவைத்த விஷயம் இது. ஓரளவு தெளிவான நிலையிலிருக்கும் சிற்பங்களை ஆராய்வதிலேயே இத்தனை இடர்கள் இருக்கின்றனவென்றால், சிதைந்துபோன ஓவியங்களைப் பற்றிக் கூறவேண்டியதே இல்லை. தஞ்சைப் பெரியகோயில் தரைத்தள சாந்தார நாழியிலுள்ள ஓவியங்களை ஆராய்வதிலும் சில குளறுபடிகள் அரங்கேறுகின்றன. அவ்வோவியங்களை ஆய்வுசெய்த யாருமே ஓவியத்திலிருப்பவர் இராஜராஜசோழர் என்று எப்படிச் சொல்கிறோம் என்பதை ஆதாரங்களுடன் விளக்கியதே இல்லை. பெரியகோயிலில் இருப்பதால் அவரைத்தவிர வேறு யாராக இருக்கமுடியும்? என்பதுதான் அனைவரின் வாதமாக இருக்கிறது. என் வீட்டில் ஒரு படம் இருக்கிறது என்பதாலேயே அது என்னுடைய படம் ஆகிவிடாது. ஊகங்களை விட்டுவிடுவோம். அனைவருக்கும் தெரிந்த கதையான சுந்தரர் ஓவியத்தொகுதியிலிருக்கும் உருவங்களை அடையாளப்படுத்துவதிலும் எத்தனை முரண்பாடுகள்? அந்த சுந்தரரே மீண்டும் வந்து விளக்கினால்தான் உண்டு. அல்லது அவருக்கு பதிலாக வாணன் வந்தும் வழிகாட்டலாம்.

பாதுகாக்கப்பட்ட ஓவியங்களின் நிலைமையே இவ்வாறென்றால், வெட்டவெளியில், வெயிலிலும் மழையிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அல்லல்படும் பழங்காலப் பாறை ஓவியங்களைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். வரலாற்று ஆய்வாளர்களாலோ அல்லது மானிடவியல் ஆய்வாளர்களாலோ அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாத துறை இது எனலாம். இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது புதிய பாறை ஓவியங்களைக் கண்டறிந்து வருகிறார்கள். இந்து நாளிதழும் அவற்றை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சென்னையில் பாறை ஓவியக் கண்காட்சி நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்தப் பாறை ஓவியங்களில் உள்ள சிறப்பு என்னவெனில், கல்வெட்டாய்வாளர்களால் மிகக் கடினமானதாகக் கருதப்படுவதும், ஆரம்பகால எழுத்துமுறையைக் கொண்டிருந்ததுமான தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் ஏற்பட்ட காலகட்டத்திலும் அதற்கு முன்பும் வரையப்பட்டவை. தமிழ்பிராமிக் கல்வெட்டுகளும் பாறை ஓவியங்களும் அருகருகே காணப்படும் இடங்கள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றன. தமிழ்பிராமிக் கல்வெட்டுகளை ஆராய்பவர்கள் இவ்வோவியங்களையும் சேர்த்து ஆய்வு செய்தல் நலம் பயக்கும். ஆய்வை முழுமைப்படுத்தும்.

இதுபோல் வரலாற்றாய்வின் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு செம்மைப்படுத்துதல்களும் ஆய்வு மேம்பாடுகளும் இன்றைய முக்கியத் தேவையாக இருக்கின்றன. வரலாற்று ஆர்வலர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைத் தக்கவைக்க உதவுபவை ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள்தான். அத்தகைய முடிவுகள் நேர்மைத்திறத்துடனும் அறிவியல் முறையிலும் அமைந்தாலொழிய வரலாற்றாய்வையும் முடிவுகளையும் குறைகூறுபவர்கள் கூறிக்கொண்டேதான் இருப்பார்கள். தான் எடுத்த முடிவை எந்த வழிமுறையில் எடுத்தோம் என்பதைத் தெளிவுபட விளக்கினாலே போதுமானது. அவற்றின் நம்பகத்தன்மை வாசகர்களைச் சரியாகச் சென்றடையும். இந்த வழிமுறை எழுதப்படும்போதே ஆய்வாளரின் மனசாட்சி தவறுகளைச் சுட்டிக்காட்டிவிடும். அதையும் மீறிப் பொய்யுரைப்பவர்களை வரலாற்று ஆர்வலர்கள்தான் சரியாக இனங்கண்டு ஒதுக்க வேண்டும்.

அன்புடன்
ஆசிரியர் குழுthis is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.