![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 61
![]() இதழ் 61 [ ஜுலை 15 - ஆகஸ்ட் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அவனைக் கண்ட அந்தநாள். விழிமொழியால் பேசிய நாள் அது. விழிவழியே வந்த காதல் இதயத்தில் நிறைந்தது. என்புவரை சென்று உயிரைத் தாக்கியது. எனக்கு மட்டுமா இந்த நிலை? அவனுக்கு? கண் வழியே நெருப்புப் பூக்கள் உடலெங்கும் மலர்ந்த தருணம் அது. விழிமொழியால் பேசப்படாத வார்த்தைகளை விரல்மொழியால்தானே பேச இயலும். விழிமொழிக்குக் காதல் என்று பெயரிட்டால், விரல்மொழிக்குக் காமம் என்று பெயரிடலாமே! விழியும் விரலும் பேசினால்தானே அன்பின் அத்தியாயங்கள் வாழ்க்கை என அரங்கேறும். இதை அவன் உணர்ந்தானா? உணரவில்லையே! அவனை விரும்பி, இணைந்து, பிணைந்து கொள்ள என் துயர் தீர்க்க அவன் வரவில்லை. என்னை ஊரறிய ஏற்றுக் கொள்ளவும் எந்த முனைப்பும் காட்டவில்லை. எனக்குள் மலர்ந்த அக்னிப்பூக்கள் அவனுக்குள் மலரவில்லையா? என் துன்பம் தீர்ப்பார் யார்? காதல் என்று வந்துவிட்டால் தூது செல்ல ஒருவர் வேண்டுமே! என் நிலையறிந்து என் நோய் களைவார் ஒருவர் வேண்டுமே! இந்தத் தோழி என் நிலையறிந்தும் கண்டுகொள்ளவில்லை. கண்டும் காணாதவள் போல் இருக்கிறாளே! என் உயிரோடு அல்லவா போராடுகின்றன அவனின் நினைவுகள்! கலைந்து செல்லும் மேகம், ஊர்விட்டு ஊர்செல்லும் நதி, தினம் வந்துபோகும் சூரியன், மரக்கிளைதோறும் பேசிச் செல்லும் குருவி, இவற்றில் ஒன்றிற்குக்கூட என் துயர் சொல்லத் தெரியாதே! தோழி நீ அல்லவா எனக்குத் தூது செல்லவேண்டும். அறத்தோடு நிற்காமல் தொலைவில் நின்று தொடர்பே இல்லாததுபோல் இருக்கிறாயே. இது சரியா? தனிமை வேதனை தருகிறது. அவனை என்னோடு தழுவி ஏற்றுக்கொள்வது எப்பொழுது? கள்ளினும் இனிதாயிற்றே இந்தக் காமம்? காதலுடன் தனிமையில் போரடும் இந்தப்போர் என்று முடிவுக்கு வரும்? தினமும் ஒரு மௌனப் போர்க்களம் என்னுள்ளே நிகழ்கிறது. முடிவே இல்லாததுபோல் தோன்றுகிறது. தானாகவே முடியுமோ அல்லது இதைத் தடுத்து நிறுத்துவார் உளரோ? வருத்துகிறது, வதைக்கிறது, கொல்கிறது, கணங்கள் தோறும் தொடர்கிறது இந்த மௌனப்போர். குறுந்தொகைத் தலைவியின் காதல் போர்க்களம் இது. இதோ பாடல். கண்தர வந்த காமஒள் எரி என்பு உற நலியினும், அவரோடு பேணிச் சென்று, நாம் முயங்கற்கு அருங்காட்சியமே வந்து அலர் களைதலை அவர் ஆற்றலரே; உய்த்தனர் விடாஅர் பிரித்துஇடை களையார் குப்பைக் கோழித் தனிப்போர் போல, களைவார் இலை - யான் உற்ற நோயே குறுந்தொகை : 305 : குப்பைக்கோழியார் : மருதம் காப்பு மிகுதிகண், தோழி அறத்தோடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது. விளக்கம்: விழியினால் தரப்பட்ட காமமாகிய ஒளிமிகுந்த தீ, உள்ளத்தளவில் நில்லாமல், எலும்புவரை சென்று வருத்துவதாயினும், அவரை விரும்பிச் சென்று வருத்துவதாயினும், அவரை விரும்பிச் சென்று, அவரோடு ஒத்துத் தழுவுவதற்கு அரியநிலையில் அவரைக் காண்பதற்குக் காட்சியுடையேன். வரைவுடன் வந்து என் வருத்தத்தை நீக்குதலை அவரும் செய்திலர். என்னைத் தன் மனையகத்துச் செலுத்தியும் விடார். வெற்றி தோல்விகளுக்கிடையே விலக்கி வரைந்து கொள்ளுதலும் செய்திலர். குப்பையில் மேய்ந்து கொண்டிருக்கும் கோழிகள், தாமே நிகழ்த்தும் போர் போல அதுவாக முடியுங்காலத்தில் முடியுமேயன்றி, நான் கொண்ட நோய் களைவார் ஒருவரும் இலர். சேரிக் கோழிகளுக்கிடையே நிகழும் போராயின் உய்ப்போர், காண்போர், களைவோர் இருப்பர். ஆனால் இது குப்பைக் கோழிகள் தமக்குள் செய்யும் போர். அதனால் காண்பவர் மகிழ்ச்சியோ வருத்தமோயின்றி அலட்சியத்துடன் நோக்குவர். குப்பைக் கோழிகள் தம்முள் பொருது, தானாகவே நீங்குதல் வேண்டும் அல்லது குருதி சிந்தி மாய்தல் வேண்டும். ஏனென்றால் காண்போர், களைவோர், உய்ப்போர் யாரும் இலர். தலைவியும் காமநோயும் நிகழ்த்தும் மௌனப்போர், குப்பைக் கோழிகள் நிகழ்த்தும் தனிப்போருக்கு ஒப்பாக உவமிக்கப்படுள்ளது. நாகரிகமாகவும், நயமாகவும் தலைவியின் காமப்போரை விளக்குகிறார் புலவர். சீரிய கருத்தாக்கம், ஒரு நிகழ்வின் நுட்பமான பதிவு. இது சார்ந்தே இப்பாடலைப் பாடிய புலவருக்கு "குப்பைக் கோழியார்" என்ற சிறப்புப் பெயர் இயல்பாய் அமைந்துவிட்டது. சங்ககாலப் புலவர்களின் மதிநுட்பமும், கருத்துச் செறிவும் சொற்களுக்கும் அப்பாற்பட்டன. அழகான குறுந்தொகையே! உன்னை நேசிக்க, வியக்க, இரசிக்க இப்பாடலின் கருத்தாக்கம் ஒன்று போதுமே! this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |