http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 64

இதழ் 64
[ அக்டோபர் 15 - நவம்பர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

விழிப்புடன் கொண்டாடுவோமா?
மதுரகவி நந்தவனம் - காவிரிக்கரையில் களர் நிலமா?
மதுரகவி நந்தவனம் - திருக்கோயில் நிர்வாகத்தார் விளக்கம்
வரிக்கல்வெட்டு
திருமலை
வரங்கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே!!!
மாடக்கோயில்களும் மேடைக்கோயில்களும் (அ) களப்பிரர் காலம் இருண்டகாலமா?
நாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை
மனமே! தேய்புரி பழங்கயிறே!
இராஜகேசரி - ஒரு விமர்சனம்
இதழ் எண். 64 > தலையங்கம்
விழிப்புடன் கொண்டாடுவோமா?
ஆசிரியர் குழு


வாசகர்களுக்கு வணக்கம்.

சென்ற மாதம் வரலாறு டாட் காம் மின்னிதழில் வெளியாகியிருந்த மதுரகவி நந்தவனம் தொடர்பாக வெளியாகியிருந்த கடிதத்துக்கு உரிய மதிப்பளித்து, மறுமொழி அனுப்பியிருந்தனர் திருவரங்கம் திருக்கோயில் நிர்வாகத்தார். அவர்களுக்கு வரலாறு டாட் காம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு, அக்கடிதத்தை அப்படியே இந்த மாதம் வெளியிடுகிறது.

கடந்த ஓரிரு மாதங்களில் ஏராளமான விழாக்கள் நடந்து முடிந்திருக்கின்றன. வியாபார நிறுவனங்களும் பெரும் இலாபத்தைக் கொழித்திருக்கும். சென்ற மாதம் தீபஒளி சமயத்தில் சென்னையைப் பார்த்திருந்தவர்களுக்கு இதில் ஏதும் ஐயம் எழாது. ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு இதே தீபஒளி சமயத்தில் பார்த்ததற்கும், இந்த ஆண்டு பார்த்ததற்கும் மலையளவு வேறுபாட்டை உணரமுடிந்தது. மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்தது ஒரு காரணமாக இருக்கலாம். அண்டை அயலார் கொண்டாடுகிறார்களே, நாமும் எப்பாடுபட்டாவது விமரிசையாகக் கொண்டாடிவிடவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்ததாலும் இருக்கலாம். வணிக நிறுவனங்களின் அதிரடித் தள்ளுபடிகளும் விலைக்குறைப்பு விளம்பரங்களும் மக்களைச் சிறிதுசிறிதாக மூளைச்சலவை செய்வதாலும் இருக்கலாம். இது தமிழர் பண்டிகையா என்ற சிந்தனையை எல்லாம் தாண்டி, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும்போது நான் மட்டும் ஏன் தனிமைப்பட்டுப் போகவேண்டும் என்ற எண்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்படிப் பல்வேறு காரணிகளால் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தீபஒளியைக் கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இப்பண்டிகையைக் கொண்டாடும் விதத்திலும் பல்வேறு மாறுதல்கள் நடந்து வருகின்றன. இந்த மாற்றங்களுக்கு மிக முக்கியக் காரணம் தொலைக்காட்சிகள்தான். இலவச வண்ணத் தொலைக்காட்சி வந்தபிறகு, தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இருபது தமிழ் நிகழ்ச்சிகளையாவது பார்க்கமுடியும். இந்த இருபது தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பழைய புதிய திரைப்படங்களையும், அவ்வப்போது புகழுடன் இருக்கும் நடிகர் நடிகைகளின் நேர்காணல்களையும் மாற்றி மாற்றி ஒளிபரப்பி, பண்டிகைகளின் நோக்கத்தையே மக்களை மறக்கச் செய்துகொண்டிருக்கின்றன. இருப்பதிலேயே மக்கள் தொலைக்காட்சி மட்டுமே சினிமாவை நம்பிச் சீரழியாமல், தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்காமல், அந்தந்தப் பண்டிகைகளுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதற்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

உழைக்கும் மக்களின் களைப்பையும் சலிப்பையும் நீக்கி உற்சாகமூட்டி, நண்பர்களுடனும் உற்றார் உறவினர்களுடனும் ஒன்றாகக்கூடி மகிழ்ச்சியாய்க் கழித்து, மனதைப் புதுப்பிக்கும் நோக்கத்தில்தான் பண்டிகைகள் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டன. ஒவ்வொரு வட்டாரத்திலும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுவதும் அந்தந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஈடுபட்டிருக்கும் தொழில்களைப் பொறுத்துத்தான். உழவும் தொழிலும் முக்கியத் தொழில்களாக இருந்த தமிழகத்தில் தீபஒளிக்கு முக்கியத்துவம் குறைவாகத்தான் இருந்திருக்கவேண்டும். பெரும்பாலானவற்றில் வட இந்தியர்களை முன்னோடிகளாகக் கொள்ளும் அடிமை மனப்பாங்கு வளர்ந்து வருவதற்கு இதுவே சான்று. ஆனால் கேரளத்தில் இந்த அளவுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுவதில்லை.

கேரளம் என்றதும் நமக்குத் தோன்றுவது இன்னொரு வியப்பு. மலர்களின் வண்ணத்திருவிழா திருவோணம்தான் அது. திருவிழா நடக்கும் பத்து நாட்களும் மாநிலமே விழாக்கோலம் பூண்டுவிடுகிறது. பூகோள வேறுபாடின்றி, சாதிய வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி, கேரளம், மலையாளம், மலையாளிகள் என்ற உணர்வுடன் கேரளத்தில் மட்டுமின்றி, மலையாளிகள் வசிக்கும் இந்தியாவின் இதர இடங்களிலும், வெளிநாடுகளிலும்கூடக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மத வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடப்படும் வெகுசில திருவிழாக்களில் இது ஒன்று என்பதே இதன் சிறப்பம்சம். மதத்தின் பெயரால் சகிப்புத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நம் நாட்டில், இது எப்படி சாத்தியமாகிறது? எப்படி இத்திருவிழாவில் மதம் மூக்கை நுழைக்காமல் இருக்கிறது என்று வியப்பாகத்தான் இருக்கிறது. கர்நாடகத்தில்கூடத் தசராவைப் பிற மதத்தவர்கள் கொண்டாடுகிறார்களா என்பது சந்தேகமே.

ஓணம் போன்றே தமிழகத்திலும் எல்லா மதத்தவராலும், தமிழன் என்ற அடையாளத்தை முன்னிறுத்திக் கொண்டாடப்படவேண்டிய பண்டிகை ஒன்று இருக்கிறது. அதுதான் பொங்கல் திருவிழா. பண்டைக் காலத்தில் எல்லா மதத்தவரும் கொண்டாடினார்கள் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு காலத்தில் எல்லா மதத்தினரும் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு. எனவே, அனைவரும் கொண்டாடியிருக்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. உழவுத்தொழிலில் ஈடுபட்டிராவிட்டாலும், உணவுக்கு ஆதாரமாக இருக்கும் உழவர்களைப் போற்றும் விதமாகவாவது கொண்டாடியிருக்கவேண்டும். இதுவரை கொண்டாடவில்லை என்றாலும், இனியாவது கொண்டாடவேண்டும். இந்தியாவிலிருக்கும் மற்ற இனங்களிலிருந்து தமிழனை வேறுபடுத்திக்காட்டும் கூறுகளில் இந்தப் பொங்கல் பண்டிகை முக்கியமான ஒன்று. ஓணம் பண்டிகையின்போது எப்படி மதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மலையாளி என்ற உணர்வு முன்நிற்கிறதோ, அதுபோலப் பொங்கல் பண்டிகையின்போதும் மதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தமிழன் என்ற உணர்வு மேலோங்கவேண்டும். கேரளத்தவர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.

தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயத்தொழில் நலிந்து வரும் இக்காலகட்டத்தில், தான் உழவுத்தொழிலில் ஈடுபடாவிட்டாலும், நாம் சோற்றில் கைவைக்க நமக்காகச் சேற்றில் கால்வைக்கும் விவசாயிகளுக்கு நன்றி கூறுவதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டியது நம் அனைவரது கடமை. தமிழன் தனது பண்டிகையைக் கொண்டாடுவதற்குக்கூட அரசாங்கம் ஊக்கப்படுத்தி வற்புறுத்த வேண்டியிருக்கிறது. இந்தநிலை மாறி, பொங்கலுக்கு அதற்குரிய முக்கியத்துவம் தந்து, மதங்கடந்து போற்றவேண்டும் என்பதே வரலாறு டாட் காம் தமிழினத்திற்கு விடுக்கும் வேண்டுகோள். இன்னும் ஓரிரு மாதங்களில் பொங்கல் பண்டிகை வரவிருக்கிறது. அதற்குள் விழிப்படைந்து, பொங்கலைக் கொண்டாட முற்படுவோமா?

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.