Issue No. 68
இதழ் 68 [ பிப்ரவரி 27 - எஸ். ராஜம் சிறப்பிதழ் ]
இந்த இதழில்..
In this Issue..
|
தேனெடுத்து மலர்தூவி ஜென்மம் நூறாய் சிந்தையினுள் கந்தனையே தேக்கி நோற்றால் ஊனுக்குள் சங்கீத ஊற்றுப் பொங்கும் உள்ளத்தை உருக்குகிற குரல்கி டைக்கும். வானோர்க்கும் இவ்விதியே பொருந்தும் என்றால் மரபிசையின் வல்லமைசேர் ராஜத் துக்கோ ஆனதுவும் எத்தனையோ ஜன்மம் சொல்வீர் அற்புதமாய்க் குரல்வளந்தான் அமைந்த தற்கே. (1)
வாணியிவர் குரல்வழியே வடிவங் கொண்டால் மறுபடியும் விரல்வழியே வண்ணம் பெற்று பேணுகிற தெய்வதங்கள் வரிசை யாகப் பேசுகிற சித்திரமாய் மிளிர்ந்ததென்னே! பூணுகிற புகைப்படமும் கலைகள் நூறும் பொலிந்திவர்க்குள் பூத்துநின்ற விதந்தான் என்னே! சாண்வெளிக்குள் அண்டமெலாம் சமைந்த தைப்போல் சதகோடித் திறமிவர்க்குள் பொலிந்த தென்னே! (2)
கற்றதுவோ மேற்குவகைச் சித்தி ரத்தை; கவர்ந்ததுவோ பயிற்சியினில் பதக்கம் ஆனால் பற்றதுவோ நம்மரபின் தடத்துக் குள்ளே பாணியெலாம் அஜந்தாஎல் லோரா அன்றோ! முற்றிலுமே நம்மரபில் தோய்ந்த உள்ளம் மோகித்து அதற்குள்ளே ஆழ்ந்தும் விட்டால் விற்றிடுமோ தன்திறத்தை இல்லை என்றால் விட்டிடுமோ கலைச்சிறப்பின் நாட்டம் தன்னை. (3)
பாடுவதால் சிலவகையாம் ராகம் தம்மை பலமழியும்; நோய்கூடும்; ஆயுள் கேடு மூடுகவாய் என்றெல்லாம் சொன்ன பேர்கள் மூடர்களாம் எனும்படிக்கு அவற்றைப் பாடி தேடிவரும் நலமெல்லாம் கூடிப் பல்க திடமாகத் தொண்ணூறைத் தாண்டக் கண்டோம். வாடாதே என்னைப்பார் சாட்சி நானே வந்திங்கே பாடவற்றை என்றார் அன்றோ! (4)
விடுத்தவர்கள் எல்லோரும் தெளிந்து கொண்டு மீண்டுவரும் விளக்காகக் கடலின் ஓரம் எடுத்ததொரு கலங்கரையாய் வாழ்நாள் எல்லாம் இந்தியநல் லிசைசித்ரம் என்றே வாழ்ந்து தொடுத்ததொரு மாலையென வாசம் வீசி தொண்டாற்றி ஒளிவீசி மைலாப் பூரின் நடுத்தெருவில் ராஜனென வாழ்ந்து சென்றார் நாமகளும் பூமகளும் ஆசி சொல்ல. (5)
குரல்வழியே விரல்வழியே கோடிக் கோடி குற்றாலம் உமக்குள்ளே வீழ்ந்த போது நிரல்நிரலாய் ரசிகர்களின் நெஞ்சம் எல்லாம் நெக்குருகிப் பரவசத்தில் ஆழ்ந்த துண்டு வரலாறு உம்பெயரை வணங்கிப் போற்றி மங்காத புகழுமையே சூழ்ந்து பொங்க பெருகிவரும் ரசிகர்களின் உள்ளந் தன்னில் பேராது என்றென்றும் வாழ்ந்தி ருப்பீர்! (6)
this is txt file
|
வீடியோ தொகுப்பு
Video Channel
நிகழ்வுகள்
Events
சிறப்பிதழ்கள்
Special Issues
புகைப்படத் தொகுப்பு
Photo Gallery
|