![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 70
![]() இதழ் 70 [ ஏப்ரல் 16 - மே 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். இந்த இதழும் தாமதமாக வெளிவருவதைப் பொறுத்தருளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தாமதத்திற்கு உரிய காரணங்கள் இல்லாமல் இல்லை. அதைப்போலவே, இத்தலையங்கத்தில் நாம் புலம்பித் தீர்த்திருப்பதற்கும் உரிய காரணங்கள் உண்டு. நேரடியாக விஷயத்துக்கு வருவோமே!! அளவில் பெரியதான சில கோயில்களில் கல்வெட்டுகளை வாசிப்பதற்குப் பெரும் கெடுபிடிகள் இருக்கும். கல்வெட்டுகளை வாசித்துக் கொண்டிருக்கும்போது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் எட்டிப் பார்க்கும் அப்பாவிகள் முதல் 'இங்கே எழுதியிருப்பதைப் படிக்கிறீர்களா? என்ன எழுதியிருக்கிறது?' என்று கேட்டு மூக்கை நுழைக்கும் ஆசாமிகள் வரை அவரவர் கடமையை அவரவர் செய்தாலும், கோயில் நிர்வாகமும் அதன் தலையாய கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. என்ன கடமை என்கிறீர்களா? அதுதான் கல்வெட்டுகளை எவரும் எளிதில் படித்துவிட முடியாதபடி இரும்புக் கதவுகள் கொண்டு மூடிவிடுவது. பழனி திருக்கோயிலில் இப்படித்தான் நடந்திருக்கிறது. கருவறையைச் சுற்றி உள்ள சுவர்களில் நிறையப் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை அருகில் சென்று படிக்க முடியாதபடி, பல அடுக்குகளாலான இரும்புக் கதவுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. தூரத்தில் இருந்து பார்த்தால், ஏதோ எழுதப்பட்டிருப்பது தெரியுமே தவிர, என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியாது. எவ்வளவு முயன்றாலும் முடியாதுபோய்க் கடைசியில் கோயில் நிர்வாகத்திடம் சென்று கதவுகளைத் திறந்துவிடக் கேட்டால், அதெல்லாம் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் திறக்கப்படாது என்றோர் அருமையான பதில் வரும். நம் ஊர்க் கோயில்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சமீபத்தில் சென்ற ஓரிரு பயணங்களின்போது உணர்ந்து வியக்க முடிந்தது. நுழைவாயிலில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவியான 'மெட்டல் டிடெக்டர்' வைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் அதன் வழியாகத்தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும். நல்ல ஏற்பாடுதான். ஆனால், இது தர்ம தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு மட்டுமே. பணம் கொடுத்துக் கடவுளைக் குறுக்கு வழியில் காண விழையும் நல்ல உள்ளங்களுக்கு எந்தவிதப் பாதுகாப்புச் சோதனைகளும் கிடையாது. இது எப்படி இருக்கிறதென்றால், குறைவான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களை இட ஒதுக்கீட்டின்வழி மேற்படிப்பில் சேர்த்தால், கல்வியின் தரம் குறைந்து விடும் என்று கூச்சலிடுபவர்கள், மதிப்பெண் தகுதியே இல்லாமல் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பணத்தை மட்டும் கொண்டு மேனேஜ்மெண்ட் கோட்டாவில் அதே மேற்படிப்பில் சேரும்போது வாயை மூடிக்கொண்டிருப்பதைப் போலிருக்கிறது. கோயிலுக்குச் சேதம் விளைவிக்க எண்ணும் தீவிரவாத இயக்கம், நுழைவுக்கட்டணம் செலுத்தத் தயங்காது என்பது வெள்ளிடைமலை. அப்படியே ஏதாவதொரு உயரதிகாரியைப் பிடித்து இந்தப் பாதுகாப்புச் சோதனைகளைத் தாண்டிவிட்டாலும், அடுத்த கட்டத்தில் சனி உட்கார்ந்து இருக்கும். 'அதான் எல்லாக் கல்வெட்டுகளிலும் என்ன எழுதியிருக்கின்றது என்பதை வேறொரு சுவரில் வெட்டி வைத்திருக்கிறோமே' அல்லது 'பிரசாதக் கடையில் விற்கும் தலபுராணப் புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறோமே, அதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்' என்று பதில் வரும். உண்மைதான். வேறொரு சுவரிலோ அல்லது தலபுராணப் புத்தகத்திலோ கல்வெட்டுகளின் பொருள் இருக்கும்தான். ஆனால் அவற்றை யார் படியெடுத்தார்கள், யார் பொருள் கண்டுபிடித்தார்கள், அப்பொருளை யார் சரிபார்த்தார்கள் போன்ற விவரங்கள் ஏதும் இருக்காது. அக்கல்வெட்டுச் சுருக்கத்தின் நம்பகத்தன்மையைத் தெரிந்து கொள்ளாமலேயே அச்சுவற்றைப் பார்த்துத் தன் தலைவிதியை நொந்துகொள்ள வேண்டியது கல்வெட்டறிஞர்களின் தலையாய கடமைகளில் ஒன்று. அச்சுவற்றிலேயே தலையை முட்டிக்கொள்வது அவரவர் விருப்பம். பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கருவறையைச் சுற்றித் தடுப்பு அமைக்கப்படுவது அவசியம்தான். ஆனால் அதே சமயம், அங்கிருக்கும் கல்வெட்டுகளை வாசிக்க அறிஞர்களுக்கு வழிவகை செய்து தரவேண்டியதும் கோயில் நிர்வாகத்தின் கடமை. யாரோ ஒரேயொரு அறிஞர் ஒரு கல்வெட்டைப் படியெடுத்துவிட்டால், அதை மற்ற அறிஞர்களும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது சரியல்ல. அதே கல்வெட்டை இரண்டாவதாக ஓர் அறிஞர் வாசிக்கும்போது முதலாமவர் ஏதாவது தவறவிட்டிருந்தால், அவற்றைச் சரிசெய்ய முடியும். அல்லது புதிய கோணத்தில் ஆராய முடியும். தான் வாசிக்க விரும்பும் கல்வெட்டை வாசிக்க வேண்டியது ஒவ்வொரு கல்வெட்டறிஞரின் உரிமை. அதற்கு உரிய வழிவகைகளைச் சட்டத்திற்குட்பட்டுச் செய்து தரவேண்டியது மாநில அரசு மற்றும் மைய அரசுத் தொல்லியல் துறைகளின் கடமை. இதை உணர்ந்து செயலாற்றினால், பெரும்பாலான கல்வெட்டுகள் புதிய பார்வையில் அணுகப்பட்டுப் புதிய வரலாற்றுத் தரவுகள் வெளிவரும் என்பதில் ஐயமில்லை. அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |