http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 70
இதழ் 70 [ ஏப்ரல் 16 - மே 15, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
குடைவரைகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் அரிமழம் சாலையில் கடியாபட்டிக்கும் இராயவரத்திற்கும் இடைப் பட்ட குலால கோட்டையூர் எனும் ஊரின் புறத்தே காணப்படும் தாழ்வான பாறையில் கிழக்குப் பார்வையாகக் கருவறை மட்டுமே பெற்றுள்ள குடைவரைக் கோயில் அகழப்பட்டுள்ளது.1 குடைவரைக்கு முன்னுள்ள தரையில் பின்னாளைய பலித்தளம் காணப்படுகிறது. 1. 39 மீ. உயரம், 2. 05 மீ. அகலம் பெற்றுள்ள கருவறை முன்சுவரின் நடுவில் 1. 39 மீ. உயரம், 82 செ. மீ. அகலம் உள்ள திறப்புச் செய்து மேல், கீழ் நிலைகளுடன் வாயில் அமைக்கப் பட்டுள்ளது. சற்று அகலமாக உள்ள கீழ்நிலை கருவறைத் தரைமீதும் வாயிலுக்கு முன்னும் ஒரு தளமென நீண்டுள்ளது. தென்வடலாக 1. 70 மீ. நீளம், கிழக்கு மேற்காக 1. 19 மீ. அகலம், 1. 43 மீ. உயரம் பெற்றுள்ள கருவறையின் சுவர்களும் கூரையும் முழுமையுற்ற நிலையில் வெறுமையாக உள்ளன.2 8 செ. மீ. அளவிற்கு நீட்சி பெற்றுள்ள கூரை வடிவமைக்கப்படாத கபோதமாக அமைய, முன்சுவர் ஒட்டிய இருபுறப் பாறைச்சரிவுகளும் மேலிருந்து கீழாக அகலப்பட்டுத் தெற்கில் 59 செ. மீ. அளவும் வடக்கில் 58 செ. மீ. அளவும் அமைந்து தளம் ஒன்றில் முடிகின்றன. நிலத்திலிருந்து 48 செ. மீ. உயரத்தில் உள்ள இத்தளம் தென்வடலாக 2. 29 மீ. நீளம், கிழக்கு மேற்காக 67 செ. மீ. அகலம் பெற்றுள்ளது. வாயிலுக்கு நேரிருக்குமாறு தளத்தின் நடுப்பகுதியில் இரண்டு அகலமான படிகள் வெட்டப்பட்டுள்ளன. கீழ்ப்படி நிலத்திலிருந்து 32 செ. மீ. உயரத்தில் உள்ளது. படிகளை ஒட்டிய தளத்தின்பகுதி சற்றே உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது. கருவறையின் தரையில் ஜகதி, கண்டம், கம்பு, வடிவமைக்கப்படாத தாமரை வரி, பெருவாஜனம், மேற்கம்பு எனும் உறுப்புகள் பெற்ற தாய்ப் பாறையிலான 50 செ. மீ. உயர வேசர ஆவுடையார் கருவறைப் பின்சுவருடன் ஒன்றிய நிலையில் உருவாகியுள்ளது.3 அதன்மீது 45செ.மீ. உயர வேசர பாணம் உள்ளது. முழுக்காட்டு நீர் கருவறையில் பரவாது வெளியேற வாய்ப்பாகக் கோமுகத்திற்குக் கீழுள்ள தரைப்பகுதியை ஒட்டிப் பாறையிலேயே வரம்பும் முன்சுவரின் வடபுறத்தே துளையும் தளத்தில் வடிகாலும் இடம்பெற்றுள்ளன. கருவறையில் கல்விளக்கொன்று காணப்படுகிறது. 1. ஆய்வு நாள் 14. 3. 2010. உடனிருந்து உதவிய சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறை முதுகலை ஆய்வு மாணவி மு. பி. நந்தினி, இந்தியத் தொல்லியல்துறை மெய்யம் வட்ட உதவியாளர் திரு. இரா. மோகன் இருவருக்கும் உளமார்ந்த நன்றி உரியது. இக்குடைவரையைப் படத்துடன் தம் கட்டுரையொன் றில் குறிப்பிட்டுள்ள ஜெ.ராஜாமுகமது இது இராயவரத்தில் இருப்பதாக எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைக் கோயில்கள், ஆவணம், 19, பக். 174-175. ஆனால், குடைவரை குலால கோட்டையூரில் உள்ளது. இந்தக் குடைவரை இறைவன் பெயரை மலைக்கொழுந்து ஈசுவரர் என்று ஜெ. ராஜாமுகமது குறிப்பிடுகிறார். மலைக்கொழுந்தீசுவரர் என்ற பெயரில் இராயவரத்தில் வேறொரு குடைவரைக் கோயில் இறைவன் உள்ளார். கோட்டையூர்க் குடைவரை இறைவனுக்குப் பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. 2. கருவறையின் உள்பகுதி முழுவதும் முற்றுப்பெறாத நிலையில் இருப்பதாக ஜெ.ராஜாமுகமது எழுதியிருப்பது சரியன்று. மு. கு. நூல், ப. 175. 3. தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரையின் கருவறையிலும் பின்சுவரோடு ஒன்றிய ஆவுடையாரைக் காணக்கூடாமை குறிப்பிடத்தக்கது. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |