http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 70

இதழ் 70
[ ஏப்ரல் 16 - மே 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டு வாசித்தல் கடமையா? உரிமையா?
குலால கோட்டையூர்க் குடைவரை
ஆய்ங்குடி மலைக்கொழுந்தீசுவரர் குடைவரை
உளிகளின் மாயா உலகில்
சங்க இலக்கியத்தில் விடுகதை
புத்தகத் தெருக்களில் என்னுடன் - "மகுடநிலா"
இதழ் எண். 70 > பயணப்பட்டோம்
உளிகளின் மாயா உலகில்
ரிஷியா
(கும்பகோணம் திரு. சு.சீதாராமன் அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்)

ஒருநாள் மாலை செல்பேசியில் எனக்கும் சீதாராமன் சாருக்கும் கடுமையான வாக்குவாதம். புள்ளமங்கை போன்ற அற்புதமான கோயிலைப் பார்த்துவிட்டுப் பராந்தகன் பெருமையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று என்னுடன் சொற்போர் நடத்தினார். சரி போகலாம் என்றால் தகுந்த சந்தர்ப்பம் அமையாமல் இருந்தது. சமீபத்தில் நண்பர் திரு. விஜய் ஓர் அமைதியான கோயிலுக்குப் (far away from the madding crowd) போகலாம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்க, தக்க வழித்துணை என்று மகிழ்ந்து ஏற்றுக்கொண்டேன். நண்பர் திரு. பத்மநாபன் செல்பேசியில் வழிகாட்டினார். ஏப்ரல் 3ம் தேதி பயணப்பட்டோம் சோழநாட்டை நோக்கி... சங்க இலக்கியம், வரலாறு, அரசியல், மனோதத்துவம் என சுவாரசியமான கலந்துரையாடல் பயணத்திற்கு இனுமை கூட்டியது.

புள்ளமங்கை கிராமம் :-

வானவீதியில் சூரியன் உச்சியை நெருங்கும் வேளை கோயிலை அடைந்தோம். அன்புடன் சாவியைக் கொடுத்தார் காவல்காரப் பாட்டி. கதவைத் திறந்து உள்ளே நோட்டம் விட்டால், வெகு சாதாரணமாய் இருந்தது. கோயில் அருகே வசித்த கௌசல்யா என்ற குட்டி தேவதை எங்களுடன் இணைந்து கொண்டாள். அன்பான, பண்பான குழந்தை அவள்தான் எங்கள் உடைமைகளுக்குக் காவல் தெய்வம். மெல்லக் கோயிலின் பின்புறம் நகர்ந்தோம். மண்தரையில் நிற்க முடியவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாயிருந்தது. அதைவிட வேறொரு தாக்கம் அதிகமிருந்தது.

காத்திருந்த மாயவலை :-

அர்த்த மண்டபத்தின் தெற்கு வெளிப்புறத்தில் விநாயகர் சிலை தாமரைப் பீடத்தில். விநாயகருக்குப் பிடித்தமான வாழைப்பழம், மோதகம் ஏந்திய பூதகணங்கள் நம்மைப் பார்த்துக் குறும்பாய்ச் சிரித்தன. ஜகதியில் இருந்த திரு. இராஜராஜ சோழனின் கல்வெட்டு கண்ணில்பட, ஆஹா! காதல்வலை எனக்காகவே காத்திருந்தது போலிருந்தது. ஐந்தடிக் குழிக்குள் இறங்கிவிட்டேன். கல்லூரி ஒன்றினைப் பற்றி உரைப்பதாக இருந்தது கல்வெட்டு. மாயவலையில் சிக்கிக்கொண்டால் ஒருநாள் போதாது மீண்டுவர என முடிவுசெய்து, குழியைவிட்டு மேலேறினேன்.

மூவர் கூட்டணி :-

பிரம்மா, சிவா, விஷ்ணு மேற்குச் சுவரில் கூட்டணி அமைத்திருந்தனர். இப்படியொரு இளமையான பிரம்மனை நான் இங்குதான் கண்டேன். அடடா! அற்புதம். லிங்கோத்பவர் தொகுதியில் இடம்பெறும் விஷ்ணுவும் மிக இளமையான தோற்றம் கொண்டவர். அதிகம் இரசிக்க வேண்டுமெனில் திரு. கோகுலின் வர்ணனைகளை ஒருமுறை படிக்கவும். கற்களையும் உயிர் ஊட்டக் கற்ற சோழச் சிற்பியின் சிந்தனையையும் அவன் கைகளில் விளையாடிய உளியையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.

இளங்கோவின் கொற்றவை :-

ஒரு பக்தர் தன் தலையைப் பலியாகக் கொடுக்க, வேறொருவர் தன் தொடையை அரிந்து பலிகொடுக்க, இளம்பெண்ணாக ஒருபுறம் ஒயிலாய் சாய்ந்தபடியே மகிடத்தலை மேல் நிற்கும் துர்க்கை. இளங்கோ பாடிய வேட்டுவவரி என் ஞாபகத் திரையில் ஓடியது.

"ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்து
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்.
சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமண் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்"

சிலப்பதிகார வரிகள் பாடும் எழிலரசி இவளோ என வியக்க வைத்தாள். மார்பில் முப்புரிநூல் அணிந்திருந்தாள் அந்த மெல்லிடையாள்.

எனக்குள் பலமுறை எழும் கேள்வி இது. பெண்கள் முப்புரிநூல் அணியலாமா? இப்பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்ததா? இன்றும்கூட, பெண்கள் பூணூல் அணியும் வழக்கம் புனே அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைமுறையில் உள்ளதாக டாக்டர். கிருபாளினி தனது அக்னிஹோத்திரம் நூலில் எழுதியுள்ளார். பெண்களுக்கு மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட உரிமைகளில் இதுவும் ஒன்றோ?

இராமகாதை உரைக்கும் பல சிற்றுருவச் சிற்பத் தொகுதிகள் பலவற்றைக் காணலாம். வாலி, இராமன், இலட்சுமணம், சீதாதேவி, இராவணன் என்று நாம் சந்தித்து மகிழலாம். இது சிற்பிகளின் கலைக்களம். பெரும் பிரம்மாண்டங்களையே கண்டு இரசித்து, சுகித்து மகிழ்ந்த எனக்கு இது ஒரு வியப்புக்குரிய அற்புதச் சிற்பவெளியாய்த் தோன்றியது.

ஆடற்கரணச் சிற்பங்களுக்கும் குறைவில்லை. குழு ஆடல், தனி ஆடல், பரதக்கலையின் ஸ்வஸ்திகக் கரணம் எனப் பார்த்துப் பார்த்துப் பரவசம் அடையலாம். இது புகழ் பூத்த புள்ளமங்கையா அல்லது புன்னகை பூத்த சிற்பவனமா? ஒரு சிறிய கோயில் மனத்திற்கு இவ்வளவு கலைச்சுகம் தர இயலுமா? நிசப்தமான அமைதியும் அடக்கமான அழகும் இங்கு ஆர்ப்பாட்டமாய்க் குடிகொண்டுள்ளது.

முற்சோழர்களின் கலைப்பார்வையை விளக்கும் சிற்பக் களமாய் விளங்கும் இக்கோயில் வழங்கும் வரலாற்றுத் தரவுகளுக்கும் குறைவில்லை. நுந்தா விளக்கெரிய மாடலன் நக்கன் சாமி வழங்கிய நிலக்கொடை, திரு. இராஜராஜசோழனின் ஆட்சிக் காலத்தில் ரிக், சாம வேதம் இசைக்க சாத்தப் பெருமக்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை என ஒரு சில கல்வெட்டுகளை மட்டும் என்னால் அடையாளம் காண முடிந்தது. எல்லாவற்றையும் நுணுகிப் படிக்கக் குறைந்தது ஒரு திங்களாவது வேண்டுமே.

வியந்த விந்தை மனிதர் :-

துர்க்கை சன்னதி முன் அமர்ந்து கௌசியுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, திரு. குமார் பட்டர் வந்தார். பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின் உரையாடல்களின்போக்கு கோயில் சம்பந்தமாகப் பலவற்றையும் தொட்டுச் சென்றது.

"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நான் வரவேற்கிறேன் என்று அழுத்தமான குரலில் கூறினார்". என்னிடம் இப்படி முற்போக்குச் சிந்தனையுடன் உரைத்த முதல் அந்தணரும் கடைசி அந்தணரும் அவரே. வியப்பு, அதிர்ச்சி, பெருமிதம் எல்லாம் என்னை ஒருசேரப் பீடித்தது. ஒருசிறிய கிராமத்தில், அவ்வளவாய்ப் பிரபலமில்லாத கோயிலின் அர்ச்சகர் ஒருவர் இவ்வாறு உறுதியாய் மொழிந்தது என்னை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. மிக எளிமையாய்த் தோற்றமளித்த ஒரு கிராமத்து மனிதரின் உள்ளம் பெரியாரிஸம் பேசியது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. எத்தனை பரந்த உள்ளம்! விசாலமான சமத்துவ நோக்கு! இத்தகைய மனிதர்களால்தான் உலகம் இன்னும் சுகமானதாய் உள்ளது. புள்ளமங்கைக் கோவிலைப் போன்றே இவரும் ஓர் அற்புத மனிதர். ஒருவேளை விளக்கெரிக்கக்கூட வருமானம் ஒன்றுமில்லாத கஷ்டஜீவனம் ஆனாலும் மனதளவில் பெரிய செல்வந்தர் அவரே. புள்ளமங்கைக் கோயில் அவரின் பாரம்பரியச் சொத்து. வரலாற்றுக்காக அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவரின் மன உறுதி என்னைப் பூரிப்படைய வைத்தது.

ஓர் இராஜபேரிகை :-

திருக்கோயிலின் ஒருமூலையில் ஒரு பழமையான முரசு உள்ளது. அதன் மேல்பாகம் மூடிய தோல்பகுதி முற்றிலுமாய் இப்போது இல்லை. அதனால் அதை ஒரு கண்டைனர் போல் சாமான்களைப் போட்டுள்ளனர். அன்பு வாசகர்களே! உங்களில் யாருக்கேனும் முரசு கருவிகளின் தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் இதைச் சரிசெய்ய முன்வரலாம். பொருளாதார உதவி செய்ய நினைப்பவர்கள் திரு. குமார் பட்டரை அணுகலாம். வரலாற்றின்மேல் மரியாதை உள்ளவர்கள் உதவ முன்வந்தால் போதும்.









































ஏன் என்ற கேள்வி :-

நிறைவான ஸ்வாமி தரிசனம். எல்லாம் முடிந்தது. புள்ளமங்கை மகாதேவரிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். நண்பருக்கு நிறைவான மகிழ்ச்சி. அமைதியான ஒரு கோயில். ஆடம்பரம் இல்லாத மக்கள். சோழ உளிகள் விளையாடிய சிற்பவனம் மனதில் நிலையாய்க் குடிகொண்டு விட்டது.

மனதில் பல கேள்விகள். நாம் ஏன் பிறந்தோம்? பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம். இது மட்டுமே வாழ்க்கையா? இன்றைக்கு நம் பண்டைய வரலாற்றினால் நமக்கு என்ன பயன்? வரலாற்றை ஏன் கோயில்களில் தேடவேண்டும்? கோயில்களால் என்ன மகா நன்மை விளைந்துவிடப் போகிறது? ஏன்? எதற்கு? யாருக்காக?

அதுசரி, மனித உறவுகளையே முதலீடாகக் காணும் மனோபாவம் வந்துவிட்டபின் கோயிலில் உறையும் தெய்வங்கள் எம்மாத்திரம்?

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? (பிரபல சாமியார்களிடம் என்பதைக் கொஞ்சம் மறந்து விடலாம்) நம் வாழ்வின் தேடல்கள்தான் என்ன? நாம் எதற்குக் கோடிகளைச் சம்பாதிக்கிறோம்? (பிரபல சாமியார்கள் ஆனந்தமாய் வாழ்வதற்கு என்பதை மறந்து விடலாம்) எங்கே ஆத்மார்த்த சுகம் கிடைக்கும்? (ஓ! அப்படி வேற ஒன்று உண்டா?) பாரதிதாசனார் கூறும் கடுகு உள்ளம், துவரை உள்ளம், தொன்னை உள்ளம். இதுதானா நமது உள்ளம்?

அட நீங்க வேற! தமிழ்மக்கள், வரலாறு, கோயில் என்று பேசிக்கொண்டு எந்த உலகில் வாழ்கிறீர்கள்? இந்த உலகத்துக்கு வாருங்கள் ரிஷி. முடியவில்லையே என்னால்!

"இப்பல்லாம் குழந்தை, அந்தக் கோயில் அம்மனுக்குத்தான் சீசன். அதனால நம்ம கோயில்ல கூட்டம் இல்ல. வருமானமும் கம்மி" எனக் கோயில் பட்டர்கள் பேசும் வேதனைகளைக் கேட்கும் அவலம் எனக்கு. எல்லாவற்றையும் சுமந்துகொண்டு இந்த வாழ்க்கையே வரம் எனச் சுகித்து மகிழ்கின்றேன். என் தமிழ் முன்னோர்கள் எனக்கு இவ்வளவு கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். இனிவரும் என் பின்னோர்களுக்கு என்னால் என்ன செய்ய இயலும்? அதைச் செய்வேன் வரலாற்றின் கரத்தைப் பற்றிக்கொண்டு. வாசகர்கள் முன்வரவேண்டும் உறுதுணையாக எங்கள் முயற்சிகளுக்கு.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.