http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 71
இதழ் 71 [ மே 15 - ஜூன் 14, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
'செய்யும் தொழிலே தெய்வம்' என்பது கலித்தொகைக் காலத்திலேயே உணரப்பட்ட உண்மை. தலைவனின் ஒழுக்கம் குறித்து ஐயப்பட்டு வாடும் தலைவியிடம், 'அவன் பெண்டிர் நின்னையொழியல் பிறர் இல்லை. அதனை நன்கு உணர்ந்துகொள்' என்று தனக்குத் தெய்வமாகிய தேரைத் தொட்டுச் சூளுரைக்கிறான் பாகன் ஒருவன். அவன் உரைத்தது பொய்ச்சூளா, மெய்ச்சூளா என்பதை நாமறியோம். ஆனால் தேரோட்டிக்குத் தேரே தெய்வமாயிருந்ததையும், அதன்மீது செய்யப்படும் 'சத்தியம்' ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் நோக்க அந்நாளில் தொழில் தெய்வக் கோட்பாடு வழக்கிலிருந்தமையை நன்குணரலாம். விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர, புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி, வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார, இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு, நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போல பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத் தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர! 'ஒரு நீ பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்து, தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்கொல் ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய; 'மடுத்து அவன் புகுவழி மறையேன்' என்று யாழொடும் எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான்கொல் அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின்கண் எடுத்துக்கொள்வது போலும் தொடி வடுக் காணிய; 'தணந்தனை' எனக் கேட்டு, தவறு ஓராது, எமக்கு நின் குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல் கணங்குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி, அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய; என்று, நின் தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர் யார்? நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ! மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு, ஆராத் துவலை அளித்தது போலும், நீ ஓர் யாட்டு ஒரு கால் வரவு. கலித்தொகை : 71 முற்றிய கதிரை விலங்குகளிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும் காக்கத் தினைப்புனத்தே பரண் அமைத்துக் காவலிருந்தனர் அந்நாளில். காலை முதல் மாலை வரை கதிர் காக்கத் துணையிருந்தான் கதிரவன். அந்தப் பகல் காவலில் இளநங்கையரே பெரும்பங்கு கொண்டனர். இரவுக் காவல் ஆடவர்க்குரியது. முழுநிலவுக் காலத்தே வெளிச்சமிருக்கும். நிலவு தேய்ந்து வளரும் காலத்தில் என்ன செய்வது? தினைப்புனப் பரணில் அகல் விளக்கேற்றி வெளிச்சம் கொண்டனர் அந்நாள் குறிஞ்சியர். அந்த அகிலின் புகை வானூரும் மதியின் ஒளியையே மழுங்க வைத்ததாம். காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள், தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான், நீள் நாக நறுந் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால், பூண் ஆகம் உறத் தழீஇப் போத்தந்தான் அகன் அகலம் வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே; அவனும்தான், ஏனல் இதணத்து அகிற் புகை உண்டு இயங்கும் வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரை, 'தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும் கான் அகல் நாடன் மகன்; சிறுகுடியீரே! சிறுகுடியீரே! வள்ளி கீழ் வீழா; வரைமிசைத் தேன் தொடா; கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர் அல்ல புரிந்து ஒழுகலான்; காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின் வாங்கு அமை மென் தோட் குறவர் மட மகளிர் தாம் பிழையார், கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும் தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்' என ஆங்கு, அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட என்னையர்க்கு உய்த்து உரைத்தாள், யாய்; அவரும் தெரி கணை நோக்கி, சிலை நோக்கி, கண் சேந்து, ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி, 'இருவர்கண் குற்றமும் இல்லையால்' என்று, தெருமந்து சாய்த்தார் தலை தெரியிழாய்! நீயும் நின் கேளும் புணர, வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து குரவை தழீஇ யாம் ஆட, குரவையுள் கொண்டுநிலை பாடிக்காண்; நல்லாய்! நல் நாள் தலைவரும் எல்லை, நமர் மலைத் தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர்கொல்? புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில், நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ; நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ; விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொலோ; பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங் கேண்மை கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொலோ; மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ; என்னை மன் நின் கண்ணால் காண்பென்மன், யான் நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என் கண் மன; என ஆங்கு, நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ, தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனமாக, வேய் புரை மென் தோட் பசலையும், அம்பலும், மாயப் புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்க, சேய் உயர் வெற்பனும் வந்தனன் பூ எழில் உண் கணும் பொலிகமா, இனியே! கலித்தொகை : 39 தலைவர்களின் பிறந்த நாட்களில் தொண்டர்கள் திருக்கோயில்களுக்குப் படையெடுத்து இறைவழிபாடு செய்வதும், தேரிழுப்பதும், தீமிதிப்பதும், மண்சோறு உண்பதும் நாளிதழ்களில் நாளும் பார்க்கும் செய்திதான். இந்த அரிய (!) செயல்கள் இன்று நேற்றுப் பழக்கமா? கலித்தொகைக் காலத்திலிருந்து இருந்து வருவனதாம். தலைவர்களிடம் குடிமகள் கொண்டிருந்த அன்பு அவர்தம் நலம் வேண்டி நிலத் தெய்வத்திற்கு மடை கொடுக்குமளவு அந்நாளில் வளர்ந்திருந்தது. அதுவே இந்நாளில் மண்சோறு வரை நீண்டிருக்கிறது. இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல அகல் அல்குல், தோள், கண், என மூவழிப் பெருகி, நுதல், அடி, நுசுப்பு, என மூவழிச் சிறுகி, கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு, அகலாங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால், 'நகை வல்லேன் யான்' என்று என் உயிரோடு படை தொட்ட இகலாட்டி! நின்னை எவன் பிழைத்தேன், எல்லா! யான்; அஃது அவலம் அன்று மன; ஆயர் எமர் ஆனால், ஆய்த்தியேம் யாம், மிக; காயாம்பூங் கண்ணிக் கருந் துவர் ஆடையை, மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர் ஆயனை அல்லை; பிறவோ அமரருள் ஞாயிற்றுப் புத்தேள் மகன்; அதனால் வாய்வாளேன்; 'முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும், பேர் அமர் உண்கண்ணும், நல்லேன், யான்' என்று, நலத்தகை நம்பிய சொல்லாட்டி! நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்! சொல்லாதி; 'நின்னைத் தகைத்தனென்', 'அல்லல் காண்மன்; மண்டாத கூறி, மழ குழக்கு ஆகின்றே, கண்ட பொழுதே கடவரைப் போல, நீ பண்டம் வினாய படிற்றால் தொடீஇய, நிற் கொண்டது எவன் எல்லா! யான்,' கொண்டது, அளை மாறிப் பெயர்தருவாய்! அறிதியோ அஞ் ஞான்று, தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல், இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், என் நெஞ்சம் களமாக் கொண்டு ஆண்டாய்; ஓர் கள்வியை அல்லையோ; நின் நெஞ்சம் களமாக்கொண்டு யாம் ஆள, எமக்கு எவன் எளிதாகும்; புனத்துளான் என்னைக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ; இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ; தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ; அனைத்து ஆக, வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால், சேய்த்து அன்றி, அண்ணணித்து ஊர் ஆயின், நண்பகல் போழ்து ஆயின், கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன வெயிலொடு, எவன், விரைந்து சேறி உதுக்காண்; பிடி துஞ்சு அன்ன அறை மேல, நுங்கின் தடி கண் புரையும் குறுஞ் சுனை ஆடி, பனிப் பூந் தளவொடு முல்லை பறித்து, தனி, காயாந் தண் பொழில், எம்மொடு வைகி, பனிப் படச் செல்வாய், நும் ஊர்க்கு; இனிச் செல்வேம், யாம்; மா மருண்டன்ன மழைக் கண் சிற்றாய்த்தியர் நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை, அவை ஆ முனியா ஏறு போல், வைகல், பதின்மரைக் காமுற்றுச் செல்வாய்; ஓர் கட்குத்திக் கள்வனை; நீ எவன் செய்தி, பிறர்க்கு; யாம் எவன் செய்தும், நினக்கு; கொலை உண்கண், கூர் எயிற்று, கொய் தளிர் மேனி, இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார் நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி; மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் தலையினால் தொட்டு உற்றேன், சூள்; ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின் தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர் வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமல், காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத் தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை, ஆம்பற் குழலால் பயிர் பயிர் எம் படப்பைக் காஞ்சிக் கீழ்ச் செய்தேம் குறி. கலித்தொகை : 108 மேற்கண்ட சங்கத் துணுக்குகள் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் வெளியிடும் வரலாறு ஆய்விதழ் தொகுதி 7-ல் வெளியானவை. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |