http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 71
இதழ் 71 [ மே 15 - ஜூன் 14, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
முனைவர்.இரா.குணசீலன் . தமிழ் விரிவுரையாளர் . கே.எஸ் .ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். http://gunathamizh.blogspot.com/ சென்ற இதழின் தொடர்ச்சி... குறுந்தொகையில் விடுகதை வினாநிலை விடுகதை தன் தலைவியின் கூந்தல் மணத்தைவிட சிறந்த மணம் வேறெந்தப் பூக்களிலும் உள்ளதா? என்று ஞிமிறிடம் கேட்கும் தலைவனின் கூற்று முழுமையான விடுகதையைக் கேட்டு, பதிலை எதிர்பார்ப்பது போலவே உள்ளது. பாடல் இதோ, 2. குறிஞ்சி - தலைவன் கூற்று கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே. -இறையனார். இப்பாடலின் வழி இக்கருத்தை உணரலாம். இயைபுநிலை விடுகதை நிலத்தைவிடப் பெரியது வானைவிட உயரமானது கடலைவிட ஆழமானது எது? என்று இன்று யாரையாவது கேட்டால் அவரவர் அறிவுக்கு ஏற்ப ஏதாவதொன்றைச் சொல்வார்கள். ஆனால் சங்கஇலக்கியம் பயின்றவர்களை இக்ககேள்வியைக் கேட்டால் உடனே சொல்வார்கள் 'காதல்' என்று. பாடல் இதோ, நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.” குறுந்தொகை -3 குறிஞ்சி - தலைவி கூற்று அம்மா சேலையை மடிக்க முயாது அப்பா காச எண்ண முடியாது அது என்ன? (விடை – வானம் - நட்சத்திரம்) என்பது போலவே இக்குறுந்தொகைப்பாடல் உள்ளது. அளக்கலாகா கூறுகளை விளக்கும் முயற்சியே இவை போன்ற விடுகதைகளாகும். புதிர் நிலை விடுகதை தலைவியைச் சந்தித்து மகிழும் இடத்தைத் தோழியிடம் கேட்கிறான் தலைவன். தோழியோ நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்துப் புதிர் போடும் முறையில் பதில் சொல்கிறாள். ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும் துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம் கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும் ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே. (குறுந்தொகை 113 மருதம் - தோழி கூற்று மாதீர்த்தனார்.) ஊர்க்கு அணிமையில் பொய்கை உள்ளது. சிறு காட்டாறு அப்பொய்கைக்குத் தூரத்தில் இல்லை. அவ்வாற்றில் இரைதேடும் நாரையன்றி வேறு எவ்வுயிரும் அடைதல் இல்லை. நாங்கள் எம் கூந்தலுக்கு செங்கழுநீர் மலர் பறிக்க அங்கு செல்வோம். பெரிய பேதமை கொண்ட தலைவி அங்கும் வருவாள் என்கிறாள் தோழி. 'ஆற்றங்கரைக்கு வந்தால் தலைவியைப் பார்க்கலாம் என்று தலைவனுக்கு நேரிடையாகப் பதில் கூறாமல் தோழி பதில் சொல்லும் முறை புதிர் நிலை விடுகதை போல உள்ளது படித்து இன்புறத்தக்கதாகவுள்ளது. சிந்திக்கத்தூண்டும் விடுகதை இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிவான் என்று அஞ்சி வருந்தினாள் தலைவி. அவள் மனநிலையை அறிந்த தலைவன், என் தாயும் உன் தாயும் என்ன உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவினர்? நானும் நீயும் இதற்கு முன்னர் எந்நிலையில் உறவுடையவர்களாக இருந்தோம்? என்று கேட்கிறான். எவ்விதத்திலும் தமக்கு இதற்கு முன் உறவு இல்லை என்பதே தலைவியின் மனதில் தோன்றும் பதில். செம்மண் நிலத்தில் சேர்ந்த மழைத்துளி போல நீயும் நானும் சேர்ந்தோம் என்ற தலைவனின் பதில். தலைவன் இனிதன்னை நீங்கமாட்டான் என்ற மனநிம்மதியைத் தலைவிக்கு அளிப்பதாகவுள்ளது. பாடல் இதோ, 'யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர் யானும் நீயும் எவ் வழி அறிதும் செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.' குறுந்தொகை 40 – செம்புலப் பெயர்நீரார். என்ற பாடல் தலைவியின் மனதில் சிந்தனையைத் தூண்டி பதில் வழி மனமகிழ்ச்சியைத் தருவதாக அமைகிறது. உறவு நிலை விடுகதை. வெளிநாடுகளில் ஒரு பெண் தன் காதலையோ திருமணத்தையோ தன் பெற்றோரிடம் மிகவும் சாதரணமாக, மகள் - அப்பா நேற்று மாலை எனக்கு திருமணம் முடிந்துவிட்டது. அப்பா – ஓ அப்படியா. பரவாயில்லை மகளே இந்தமுறைதான் எங்களை அழைக்கவில்லை. அடுத்தமுறையாவது தவறாது அழைப்பாயா? என்று கேட்பது ஒன்றும் உலக அதிசயமல்ல. வெளிநாட்டு மரபுகளைத் தழுவி தமிழர்களும் மாறிவருவது கண்கூடு. இன்று ஒரு தமிழ்ப் பெண் தன் காதலையோ திருமணத்தையோ பெற்றோரிடம் சொல்வதற்குத் தயங்கினாலும் சொல்வதில் பெரியளவுக்கு தயக்கமோ, சிக்கலே இருப்பதில்லை. ஆனால் சங்ககாலத்தில் ஒரு பெண் தன் காதலைப் பெற்றோரிடம் தெரிவிப்பது என்பது இயலாதவொன்றாகவே இருந்தது. தலைவி தன் காதலைத் தோழியிடம் தெரிவிக்க, தோழி செவிலியிடம் தெரிவிக்க, செவிலி நற்றாயிடம் தெரிவிக்க, நற்றாய் தந்தையிடம் சென்று மகளின் காதலைச் சொல்வாள். இதுவே சங்ககால மரபு. அகவன் மகளே அகவன் மகளே மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டேஅவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே. குறுந்தொகை 23. குறிஞ்சி - தோழி கூற்று -ஒளவையார். இப்பாடலில் தலைவி அகவன் மகளிடம், 'இன்னும் பாடுக பாட்டேஅவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.' என்று தலைவனின் குன்றம் பற்றி பாடலையே தலைவி மீண்டும மீண்டும் விரும்பிக்கேட்பதை அருகாமையில் இருக்கும் செவிலியோ, நற்றாயோ கேட்டு தன்மகள் காதல் வயப்பட்டுவிட்டாள் என்பதை உணர்வர் இதுவே சங்ககால மரபு. இப்பாடலை தலைவி தாயரிடம் கேட்கும் விடுகதையாகக் கொள்வது பொருத்தமாக அமையும். நிறைவுரை. வாய்மொழிப்பாடல்களின் வழிவந்தவையே சங்கப்பாடல்கள் என்பதால் வாய்மொழிக்கூறுகள் பலவும் சங்கப்பாடல்களில் பொதிந்திருக்கின்றன. அவற்றுள் 'விடுகதை' என்னும் வாய்மொழி மரபும் பாடல்களில் இழையோடி இருக்கக் காண்கிறோம். இன்று பேச்சு வழக்கில் யாராவது பேசுவது புரிந்தும் புரியாமலும் இருந்தால் என்ன புதிர்போட்டுப் பேசுகிறாய்? என்று கேட்பது வழக்கம். அது போல சங்கப்பாடல்கள் பலவற்றிலும் பேச்சு மரபுகளினூடே விடுகதைப் பண்பு இயைபுற அமைந்திருப்பது உற்று நோக்கி இன்புறத்தக்கதாகவுள்ளது. கேள்வி கேட்டல், சிந்தனையைத் தூண்டுதல், மறைபொருளாகக் கூறுதல், உவமையாகக் கூறுதல், சுற்றி வளைத்துக் கூறுதல் தத்துவப் பொருளாகக் கூறுதல் போன்ற பல்வேறு விடுகதைப் பண்புகளையும் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |