http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 72

இதழ் 72
[ ஜூன் 16 - ஜூலை 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆயிரம் ஆக்கங்கள்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 1
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - இனிய பயணம்
நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர்கள் குழு
பங்கேற்பாளன் பார்வையில் செம்மொழி மாநாடு
விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை
நலமிகு கார்த்திகையே!
இதழ் எண். 72 > பயணப்பட்டோம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - இனிய பயணம்
ஸ்தபதி வே.இராமன்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான அறிவிப்பைச் செய்தித்தாள்களில் பார்த்தவுடன் மாநாட்டில் கலந்து கொள்வதென முடிவு செய்தேன். ஆய்வரங்க அமர்வுப் பொருண்மைகளில் நான் கற்றறிந்த கட்டடக்கலை எனும் பொருள்பற்றி ஆய்வு செய்யலாம் எனவும் தீர்மானம் செய்தேன்.

எனது இந்த விருப்பத்தை முதலில் டாக்டர். இரா.கலைக்கோவன் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். எழுதுங்கள் என்றார். அவர்கள் தந்த ஊக்கம் உற்சாகத்தைத் தந்தது.

கோயிற் கட்டடக்கலையில் எப்பொருள் எதைக் குறித்து ஆய்வு செய்வது? கோயிற் கட்டடப்பகுதியில் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் எடுத்து ஆய்வு செய்யலாம் எனச் சிந்தனை செய்தபோது ஏராளமான தரவுகள் மனதில் நிலைநின்றன.

சோழப் பேரரசர்கள் வழிகாட்டலில் தமிழகப் பெருந்தச்சர்கள் ஏராளமான கட்டுமானக் கற்கோயில்களை உருவாக்கித் தம் கலையுணர்வை வெளிப்படுத்தியிருக்கும் முறை போற்றுதலுக்குரியதாகும். கற்கோயில் அமைப்பில் சிறப்பிற்குரிய அங்கமாகக் கருதப்படுவது பித்தி எனப்படும் பாதச்சுவர் பகுதியாகும். இந்தப் பகுதியில்தான் கட்டட எழிலைக் கூட்டும் அலங்கார அணிகளான வேதிகை, அரைத்தூண்கள், தேவகோட்டங்கள், பஞ்சரங்கள், சமய சமுதாயச் சிற்பங்கள், தோரணங்கள் என இடம்பெறச் செய்து புதிய கலைவடிவத்தைத் தொழில்நுட்பத்துடன் புகுத்தித் தமிழகத் தச்சர்கள்தம் கட்டுமானத்திறம், பொறியியல் திறன் வெளிக்கொணரச் செய்துள்ளதை வெளிப்படுத்தலாம் எனவும் முடிவு செய்தேன்.

ஆய்வின் தலைப்பாகக் கோயிற் கட்டடக்கலை மரபு - பாதச்சுவர் வடிவமைப்பும் தொழில்நுட்பமும் (சோழர் கலைமுறை) என அமைத்துக்கொண்டேன்.

திருச்சி மாவட்டம் நான் வசிக்கும் ஊர். எனவே இம்மாவட்டத்தில் உள்ள சோழர் கலைமுறையிலான கற்கோயில்களில் சில ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

எறும்பியூர் - எறும்பீசுவரர்
திருத்தவத்துறை - சப்தரிஷீசுவரர்
திருச்செந்துறை - சந்திரசேகரர்
பெருங்குடி - பெருமுடியீசுவரர்
கோபுரப்பட்டி - அமலீசுவரர்
திருமங்கலம் - சாமவேதீசுவரர்

ஆகிய கோயில்கள் வரலாற்றுச் சிறப்பாலும் கலைச்சிறப்பாலும் சிறப்புக் கொண்டவை. ஆதித்தன் காலம் முதலாக இராசராசன் காலம் வரையில் பாதச்சுவர்ப் பகுதியில் இடம்பெறும் உறுப்புகளின் வடிவமைப்பில் மாற்றம், வளர்ச்சிக் கூறுகள், கட்டுமானத்திறன், தொழில்நுட்பம் மற்றும் அழகூட்டல்கள் ஆய்வுப் பொருள்களாக எடுத்துக்கொண்டேன்.

ஆய்வுச்சுருக்கம் எழுதப்பட்டுக் குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பிவைக்கப்பட்டது. எனது ஆய்வுக்கட்டுரை ஆய்வரங்க அமைப்புக் குழுவினரால் ஏற்கப்பட்ட கடிதம் கண்டு எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பெருமகிழ்வு கொண்டனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பலநாட்டு அறிஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு எளிதானதல்லவே!

ஆய்வுக் கட்டுரை முழுமையாகத் தயார் செய்யப்பட்டு மீண்டும் டாக்டர். கலைக்கோவன் அவர்களிடம் கொடுத்து அறிவுரை கேட்கலாம் என்று அவர்களை நேரில் போய்ப் பார்த்தேன். அவர்கள் வேறு மாநிலம் செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நேரம் இல்லையே என்றார்கள். என் முகம் வாடியது. எனக்குப் பேசவும், எழுதவும் வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டிய அவர்களிடம் இதுபோன்ற பதிலை எதிர்நோக்கவில்லை. முகவாட்டத்துடன் திரும்பிய என்னை 'ராமன்' என்றழைத்தார்கள். திரும்பிப் பார்த்தேன். எனது ஆய்வேட்டினைப் பெற்றுக்கொண்டு இரவில் பார்த்துவிடுகிறேன் என வாங்கிக் கொண்டார்கள். மகிழ்வுடன் திரும்ப்னேன்.

மறுநாள் அவர்களை நேரில் சந்தித்தேன். திருத்தம் செய்தும், நெறிப்படுத்தியும் எப்படிப் பேசவேண்டும் எனவும் கூறியது என்னிடம் கொண்ட அன்பு காரணமாக என்பதையும் அறிந்தேன். அவர்களுக்குப் போதுமான நேரம் இல்லாதபோதும், கட்டடக்கலை - பஞ்சரம் அமைபுக் குறித்து விவாதித்தோம். கட்டுரை, ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பார்வைக்கு அனுப்பப்பட்டது.

சில நாட்களுக்குப் பின்ன்ர் ஆய்வரங்கம் தொடக்கவிழா அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றது. அழைப்பிதழ் கட்டமைப்பு, தமிழர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த அகழாய்வில் கிடைத்த செங்கற் கட்டட அமைப்பும், பதுமைகள், காசுகள், ஓவியம் யாவும் சிறப்பாக இடம்பெற்ற அழைப்பிதழ் மனதைக் கவர்ந்தன.

அடுத்த சில நாட்களில் மாநாடு தொடக்கவிழா மற்றும் நிறைவுவிழா அழைப்பிதழ்கள் கிடைக்கப்பெற்றன. இவைகளின் கட்டமைப்பும் மனதை நிறைவு செய்தன. இதுபோன்ற அழைப்பிதழ்களை நான் பெற்றதில்லை. எனது உறவினர்கள், நண்பர்களிடமும் காட்டிப் பெருமை கொண்டேன்.

22-5-2010 அன்று என் பயணத்தைத் திருச்சியிலிருந்து தொடர்வண்டி (Train) மூலம் கோவை சென்றடைந்தேன். மாலை நேரத்தில் கோவையின் எழிலும், பருவநிலையும் மனதில் எழுச்சியூட்ட, தகவல் சேவை மையம் சென்று தகவல் கேட்டபோது அவர்கள் மிகவும் அன்புடன் வரவேற்று நான் தங்கக்கூடிய விடுதியை அடையாளம் காட்டினார்கள்.

தங்கும் விடுதி சென்றவுடனேயே பொறுப்பு அலுவலர்கள் இன்முகத்துடன் வரவேற்று அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அலுவலர்கள் பையும், புத்தகங்களும், அடையாள அட்டையும் வழங்கினார்கள்.

23ம் தேதி காலை அலுவலர்கள் காலை உணவு தயார்நிலையில் இருப்பதையும், அழைத்துச் செல்லப் பேருந்தும் இருப்பதையும் தெரிவித்தார்கள். காலை உணவு அருந்திட உணவகம் சென்றபோது திகைப்பு. என்னுடன் துறையில் பணிபுரிந்த அலுவலர்கள், அறிமுகமான அறிஞர்கள் பலரையும் பார்த்தபோது குடும்பவிழா போல அமைந்தது. குளிர்சாதனப் பேருந்து, வழியெங்கும் பாதுகாப்பு, மகிழ்ச்சி, திகைப்பு இவற்றுடன் பயணித்த எனக்கு மாநாட்டுப் பந்தலையும் எனக்கு முன்னதாகவே கூடி அமர்ந்திருந்த அறிஞர்களையும் கண்டு மகிழ்வு கொள்ளாமல் யாரும் இருக்க முடியாது.

குறிப்பிட்ட நேரத்தில் மாநாடு தொடங்கியது. அதில் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தொடங்கிய இந்த விழாவில் மாநிலத் துணைமுதல்வர் அவர்களின் வரவேற்புரையும், மையநோக்கப் பாடலும் நெஞ்சில் நிற்பனவாகும் என்றால் மிகையில்லை.

தொடக்க விழாவுக்குப் பின்னர் வளாகத்தில் இனிய உணவு. சுவையான உணவு. உணவிற்குப் பின்னர் தொல்காப்பியர் அரங்கத்தை, ஆய்வரங்கம் வளாகத்தைச் சுற்றிப் பார்த்த காரணத்தால் இனியவை நாற்பது ஊர்வலத்தை நேரில் காண இயலவிலை. கட்டுரையாளர் என்ற முறையில் ஊர்வலம் காண அடையாள அட்டை இருந்தபோதிலும் ஊர்வலத்தைக் கண்டுகளிக்க இயலாத நிலையில் வருத்தத்துடன் எனது அறையிலிருந்தபடியே தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்துப் பரவசம் கொண்டேன். மனதில் நீங்காத இடத்தைப் பெற்றது இனியவை நாற்பது.

24ம் தேதி ஆய்வரங்கத் தொடக்கவிழா. முன்னிலை வகித்த முனைவர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வில் ஸ்விட்மேன், முனைவர் அஸ்கோ பர்போலா, முனைவர் கிறிஸ்டினா முரு ஆகியோர்களது உரை சிறப்பாக அமைந்திருந்தது.

தொடர்ந்து ஆய்வரங்கப் பொழிவு. ஆய்வரங்கம் முகப்புப் பெயர்கள் மனதில் நிலைத்து நிற்பனவாகும்.

பொதுவாகப் பலநாட்டு அறிஞர்களின் கருத்துகளைக் கேட்கமுடிந்தது. பல அறிஞர்களின் நட்பு கிடைத்தது.

முடிவாக எல்லா நாட்களும் இனிய நாட்களாகக் கழிந்தன. வாழ்வில் என்றும் மறக்க இயலாத இனிய நாட்களாக எனக்கு அமைந்தது.

தமிழக அரசுக்கும், எனக்கு உதவிய எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.