![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 78
![]() இதழ் 78 [ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2011 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
குடைவரைகள்
கோயில், இறைவன், அலுவலர்கள் குடுமியான்மலைக் கல்வெட்டுகள் இரண்டு முதன்மை இறைப்பெயர்களைத் தருகின்றன. குடைவரை இறைவன் முற்சோழர் கல்வெட்டுகளில் திருமேற்றளிப் பெருமானடிகள் என்றும் பிற்சோழர் கல்வெட்டுகளில் திருமேற்றளி மகாதேவர் என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.51 கட்டுமானக் கோயில் இறைவன் திருநலக்குன்றத்துப் பரமேசுவரர், திருமூலட்டானத்துப் பெருமானடிகள், திருமூலட்டானத்துப் பரமேசுவர், திருநலக் குன்றத்து மகாதேவர் எனும் பெயர்களில் அறியப்பட்டார்.52 மாகேசுவர கண்காணிகள், தேவகன்மிகள், கோயிற் கணக்கர், கைக்கோளர் இவர்கள் கீழ், கோயில் நிருவாகம் இருந்தது. பல்வேறு காலகட்டங்களில் பணியிலிருந்த இவ்வலுவலர் பெயர்கள் கல்வெட்டுகளில் விரவிக் கிடக்கின்றன. வீரபாண்டியர் ஆட்சிக்காலத்தில் கோயிலில் சைவாச்சாரியம் செய்தவர்களாகத் திருவேங்கடம் உடையான் திருச்சிற்றம்பலப் பண்டிதன், நாலாயிரபட்டர் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர். தேவரடியார்களாகத் துக்கையாண்டாள் மகள் நாச்சியாரும் நாச்சி உமையாழ்வியும் பெரியநாட்டாசாரியார் மகள் சாந்திக் கூத்தியான நாச்சி மலையாழ்வியும் திருச்செந்துறைப் பாண்டி திருநோக்கழகியாளும் இருந்தனர். தேவகன்மிகளுள் ஒருவராக ஆளவந்த பிள்ளையும் கோயிற் கணக்குகளாக நலக்குன்றம் உடையாரும் சேந்தவனப்பெருமாளும் விளங்கினர். கோனாட்டுக் காரையூரில் மன்னர் வீரபாண்டியர் இருந்தபோது கோயில் தானத்தார் சந்தித்துக் கோயிலுக்குச் சொந்தமான மேல்மணநல்லூர் நிலத்தை இறையிலியாக்க வேண்டினர்.53 சுந்தரபாண்டியர் காலத்தில் தேவகன்மிகளில் ஒருவராக எதிரிலிச் சோழரும் கோயிற் கணக்காகப் பெரியநாட்டுப் பிரியனும் நாட்டுக் கணக்காகக் குன்று சூழ் நாட்டு வேளானும் கைக்கோளக் கணக்காகக் குடுக்கும் தியாகி வேளாரும் அமைந்தனர். எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரரின் 36ம் ஆட்சியாண்டில் இக்கோயிலில் இருந்த சிற்பாசிரியர்களாக வீரபாண்டி, பொற்கோயில், பிரகடகண்டன், காடுவெட்டி இவர் தம் பெயர் கள் இடம்பெற்றுள்ளன.54 மேற்றளி இறைவன் குடுமியான்மலையிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளுள் ஒன்பது கல்வெட்டுகளே குடைவரை இறைவனைப் பற்றிப் பேசுகின்றன. இவ்விறைவனுக்கு அளிக்கப்பட்ட விளக்கறம் கூறும் ஐந்து கல்வெட்டுகளுள், முதலாம் ஆதித்தருடையதாகக் கொள்ளத்தக்க இராஜகேசரிவர்மரின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, தாங்கிக் கண்ணனைச் சாத்தி நங்காடன் கழஞ்சுப் பொன் அளித்ததாகக் கூறுகிறது. அம்முதலைப் பெற்ற சாமிராகன் திங்கள் தோறும் நாழி நெய்யளித்து விளக்கேற்ற வகை செய்தார்.55 நல்லூர் நாட்டு வள்ளியூர் நக்கன் சங்கரன் இறைவன் திருமுன் நந்தாவிளக்கு ஏற்றுவதற்காக ஏழரைத் துளைப்பொன் அளித்தார்.56 முதற் பராந்தகரின் மகனான இளவரசர் இராஜாதித்தருக்குச் சாந்து அமைத்தளித்த முனைப்பாடி அதியரையமங்கலத்தைச் சேர்ந்த ஓலைவீரட்டன் இங்குப் பகல் விளக்கு எரிக்க மூன்றரைத் துளைப்பொன் அளித்தார்.57 இரண்டாம் இராஜராஜரின் ஐந்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, குலோத்துங்க சோழக் கடம்பராயரின் அகம்படி மறமுதலிகளில் ஒருவரான நூற்றன் பெரியானான வீரம் அழகியான் பல்லவரையன் நந்தாவிளக்கொன்று ஏற்ற வாய்ப்பாக 48 ஆடுகள், 13 பசுக்கள் இவற்றுடன் விளக்குத் தண்டும் தந்தமையை வெளிச்சப்படுத்துகிறது.58 மேற்றளியில் இரண்டு நந்தாவிளக்குகள் ஏற்ற வாய்ப்பாக விக்கிரமசோழரின் ஆட்சிக்காலத்தில் குலோத்துங்க சோழக் கடம்பராயர் புள்ளங்குடி ஊராரிடம் இருபது பொன்னுக்கு நிலமொன்று வாங்கிக் கோயிலுக்களித்தார். அந்நிலத்தின் மீதான இறை, குடிமை இவற்றை ஊராரே கோயிலுக்குச் செலுத்துமாறு ஆவணம் அமைந்தது. இரண்டாம் இராஜராஜரின் பதினோராம் ஆட்சியாண்டின்போது தாம் அளித்த 20 பொன்னுக்கு ஈடாக 12 எருமைகளைக் கோயிலுக்களித்த கடம்பராயர், அந்நிலத்தைக் கோயில் சிவஅந்தணர்களான மாறன் குன்றன், அம்பலக்கூத்தன், முடிவிலாமுதல், திருமாணி திருவை, சூற்றிக் குன்றன் உள்ளிட்டாருக்கு உபையமாகத் தந்தார்.59 மேற்றளி இறைவனுக்கென ஏழுநாட்கள் நடத்தப்பட்ட மாசி மக விழாவில் நாளும் 15 மாகேசுவரர்கள் உண்ண வாய்ப்பாகப் பரம்பையூர்ச் சடையன் கலச்சி ஐந்து துளைப்பொன் அளித்தார். இக்கொடை சடையன் நம்பியின் நினைவு போற்றி அளிக்கப்பட்டது.60 சாத்தம் பிடாரி மேற்றளி இறைவனுக்கு ஐந்து கழஞ்சுப் பொன் சாலையூட்டாக அளித்து அதன் வழி வரும் பழவரிசி, நெய் இவற்றால் மாகேசுவரர் உண்ண வகை செய்தார்.61 துக்கை யாண்டாள் மகள் நாச்சி மேற்றளி இறைவனுக்காக எழுந்தருளுவித்த திருக்காமக்கோட்டத்து நாச்சியார் உருவுடை மலை மங்கைக்குப் பூசை, திருப்பணி, நிவந்தங்கள் இவற்றுக்கு உடலாக அமைந்த மேல்மணநல்லூர் நிலம் வீரபாண்டியர் காலத்தில் இறையிலியாக்கப்பட்டது.62 கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் சுபானு ஆண்டு (கி. பி. 1527) தைத்திங்கள் இரண்டாம் நாள் வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டு, இக்குடைவரை இறைவன் நெடுங்காலம் பூசையற்று இருந்த நிலையில் திப்பாநாயக்கர் குமாரன் இராகுல நாயக்கர் அந்தன்குடியில் பூசைக்கு நிலமளித்துக் கோயிலை வழிபாட்டிற்குக் கொணர்ந்த தகவலைத் தருகிறது.63 நலக்குன்றத்து இறைவன் நலக்குன்றத்து இறைவன், இறைவி சார்ந்த கல்வெட்டுகள் விளக்கறம், படையல், வழிபாடு, விழாக்கள் குறித்துப் பல தரவுகளை முன்வைக்கின்றன. விளக்கறம் இராஜாதித்தர் பதினைந்து கழஞ்சுப் பொன்னளித்து நலக்குன்றத்து இறைவன் முன் இரண்டு நந்தாவிளக்குகள் ஒளிரக் காரணமானார்.64 தயாநிதியார், நங்கை விக்கிரமகேசரியாருக்காக ஏழரைக் கழஞ்சுப் பொன்னளித்து நந்தாவிளக்கொன்று எரியச் செய்தார்.65 வரகுணனாட்டிப் பெருமாள் ஏழரைக் கழஞ்சுப் பொன் தந்து இக்கோயிலில் நந்தாவிளக்கேற்றியதுடன், அவ்விளக்கெரிய வாய்ப்பாக நிலைவிளக்கொன்றும் தந்தார்.66 நங்கை நளதேவியார் ஏழரைக் கழஞ்சுப் பொன் கொடையளித்து நந்தாவிளக்கொன்று இவ்வளாகத்தில் ஒளியெழுப்பக் காரணமானார்.67 அரசு அலுவலர்களாகக் கொள்ளத்தக்க உறத்தூர்க் கூற்றத்துப் புதுக்குடியைச் சேர்ந்த மயிலைத் திண்டனான அவந்தியகோவப் பல்லவரையர், பராந்தக அதளையூர் நாடாள்வாரான கடம்பன் எட்டி, இடையள நாட்டு இஞ்சல் கிழவன் குழியன் ஆச்சனான அரிகுலாந்தக வாரணப் பேரரையன் ஆகியோர் ஆளுக்கு ஏழரைக் கழஞ்சுத் துளைப்பொன்னளித்து இக்கோயில் வளாகத்தில் நந்தாவிளக்குகள் ஒளிர உதவினர்.68 அவந்தியகோவப் பல்லவரையர் அளித்த பொன்னுக்கு ஊராரிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.69 சிராப்பள்ளியில் சோமரசன்பேட்டைக்கு அருகில் உள்ள பெருங்குடியில் அமைந்திருக்கும் பெருமுடி பரமேசுவரர் கோயிலை எடுப்பித்த பெருமகனார் இந்தப் பல்லவரையர்தான். பெருமுடிக் கல்வெட்டு இவரைச் செம்பியன் உறத்தூர் நாட்டுக் கோனான மயிலைத் திண்டன் என்றழைக்கிறது.70 மலைநாட்டைச் சேர்ந்த சங்கரன் குன்றப்போழன் முதல் பராந்தகரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் ஏழரைக் கழஞ்சும் பதினாறாம் ஆட்சியாண்டில் ஏழரைக் கழஞ்சும் தந்து இக்கோயில் வளாகத்தில் இரண்டு நந்தாவிளக்குகள் ஏற்றச் செய்ததுடன், விளக்குகள் எரிப்பதற்காக நிலைவிளக்குகளும் அளித்தார்.71 அவருடைய மகனாகக் கொள்ளத்தக்க போழன் குமரனும் இக்கோயிலில் நந்தாவிளக்கொன்று ஒளிர ஏழரைக் கழஞ்சுப் பொன் அளித்ததுடன், நிலைவிளக்கு ஒன்றும் தந்துள்ளார்.72 முதற் பராந்தகரின் பதினாறாம் ஆட்சியாண்டில் இக்கொடையை உருவாக்கிய குமரன், மலைநாட்டுக் கொடுங் கோளூர் ஆலஞ்சேரியில் வாழ்ந்தவர். குன்றப்போழன் கொடையும் போழன் குமரன் கொடையும் குடைவரை முகப்பிலுள்ள தென்புற அரைத்தூணின் வடமுகத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக வெட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புலிவலத்து அரங்கன் கள்வனும் சீரகநல்லூர்ச் சேந்தனும் வேரியன்குடி ஏறன்சிகனும் கூத்தக்குடி நண்பன் துணையனும் தலைக்கு ஏழரைக் கழஞ்சுத் துளைப்பொன் அளித்து ஆளுக் கொரு நந்தாவிளக்கேற்ற, புள்ளங்குடி எட்டி குளவன் நாற்பது கழஞ்சுப் பொன் தந்து நந்தாவிளக்கொளிரக் காரணமானார்.73 தாழி ஆரூரனும் பொதுவன் எச்சில் மண்டையும் தலைக்கு ஏழு கழஞ்சுத் துளைப்பொன் அளித்து நந்தாவிளக்கேற்ற, உள்ளாறன் செருவிடை அரிஞ்சிகை ஏழரைக் கழஞ்சுப் பொன்னும் நிலை விளக்கொன்றும் அளித்து இறைவன் திருமுன் நந்தாவிளக்கெரிய வகை செய்தார்.74 கொடும்பாளூர்ச் சேனாபதிகள் மதுராந்தக இளங்கோவேளார் விளக்கேற்றக் கொடையளித்தார். கல்வெட்டுத் தொடர்பின்றி இருப்பதால் பிற விவரங்களை அறியக்கூடவில்லை.75 முற்சோழ மன்னர் ஒருவரின் மூன்றாம் ஆட்சியாண்டின்போது பாகன் சர்ப்பதேவன் நலக்குன்ற இறைவன் முன் விளக்கேற்றத் துளைப்பொன் அளித்தார். பாண்டிய நாட்டுக் களக்குடியில் இருந்து மீண்டபோது அவர் இவ்வறத்தைச் செய்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.76 நந்தாவிளக்குகள் ஏற்ற, வளவன் பேரரையனான அரிஞ்சிகைப் படாரனும் பரம்பையூர்க் காடங்கியும் ஏழரைக் கழஞ்சுப் பொன் அளிக்க, கவிசியன் செட்டி சிரிகண்டர் துளைப்பொன் தொண்ணூறு அளித்துள்ளார்.77 பூதை என்பார் தம்மையும் தம் அன்னையையும் சாத்தி எட்டுக் கழஞ்சளித்து நந்தாவிளக்கு ஒன்று எரியச் செய்தார்.78 விழுப்பேரரையன் வேளான் புகழனைச் சாத்தி அவர் அன்னை உதயன் கலிமதி ஒரு நந்தாவிளக்கு ஏற்றினார். அதற்காக ஏழு கழஞ்சுப் பொன் தரப்பட்டது.79 காரையூர் வேளான் பொன்னனான செம்பியன் கோனாட்டு வேளான் நந்தாவிளக்கொன்று ஏற்ற வாய்ப்பாக 96 ஆடுகளும் விளக்குத்தண்டு ஒன்றும் அளித்தார். கோயில் சிவஅந்தணர்கள் குரவடி தெற்றி உள்ளிட்டாரும் குன்றன் தேவன் உள்ளிட்டாரும் இவ்வாடுகளைப் பெற்றுக்கொண்டு கேரளாந்தகன் உழக்கால் நாளும் உழக்கு நெய் கொண்டு விளக்கேற்ற இசைந்தனர்.80 இடையாற்றூர் வேளான் பொற்காமனான உத்தமசோழ மூவேந்த வேளான் முக்கால் காசுக்கு வெண்களர் நிலம் ஒன்றை வாங்கித் திருத்தி நன்னிலமாக்கி நலக்குன்றம் கோயில் சிவ அந்தணர்களிடம் அளித்தார். நிலவிளைவு கொண்டு இறைத் திருமுன் நந்தாவிளக்கொன்று ஏற்ற ஒப்பிய அந்தணர்கள் வேளான் அளித்த நிலைவிளக்கையும் பெற்றுக்கொண்டனர்.81 கூடலூர்நாட்டுப் பெருங்கூற்றக்குடி அரிஞ்சிகை ஆழி நந்தா விளக்கொன்று ஏற்றினார்.82 பாண்டிய மன்னர் மாறஞ்சடையரின் காலத்தில் நந்தாவிளக்கு ஏற்ற அறம் செய்யப்பட்டது.83 கவிசியன் பெருமாள்விடங்கன் மூன்றேமுக்கால் கழஞ்சுப் பொன்னளித்துப் பகல் விளக்கேற்ற, சேந்தன் நக்கனைச் சாத்தி நான்கு கழஞ்சுப் பொன்னளித்துப் பகல் விளக்கேற்ற வகை செய்யப்பட்டது.84 கோயிலுக்குத் தரப்பட்ட பசுக்களை விற்றுக் கொண்ட பொன் வருவாயில் ஒரு பகுதி கொண்டும் தாழி ஆரூரன் அளித்த துளைப்பொன் கொண்டும் பகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.85 கண்ணன் காடனைச் சாத்திக் கோயிலில் திருவிளக்கொன்று ஏற்ற வாய்ப்பாக அவரது அன்னையார் நக்கம் புல்லியார் நான்கு துளைப்பொன் அளித்தார்.86 அண்ணல்வாயில் கூற்றத்துப் பெரும்பயன் அரங்கனான முப்பேருடையானைக் கிளியூர் ஒளிவேளார் சாத்தன் தனிப் பிணக்கு முத்தன் பிணங்கினமையில், அரங்கனைச் சாத்திச் சந்திவிளக்கொன்று ஏற்ற வாய்ப்பாகச் சாத்தன் 42 ஆடுகள் அளித்தார்.87 வேளாரின் போகியார் அம்பலக் கூத்தியாரைச் சாத்தி அவர் தம்பி மூவேந்த வேளார் கோயிலுக்கு ஆடுகள் அளித்து விளக்கு ஏற்றினார்.88 கோயிலில் சோதிமாலை ஒன்று அமைப்பதற்காக நக்கீரன் மாணிக்கம் ஏழரைக் கழஞ்சுப் பொன்னளித்தார்.89 வேளான் காவன் நெல்வேலி ஊராரிடம் விலைக்குப் பெற்ற குடிக்காடு ஒன்றைக் குடிநீங்காத் தேவதானமாக நந்தாவிளக்குப்புறமாக்கிக் கோயிலுக்குத் தந்தார்.90 நந்தாவிளக்கு ஒன்று ஏற்ற விசுவநாயக்கர் தமக்கு வந்த வரியினங்களைத் தந்துதவினார்.91 சில கல்வெட்டுத் துணுக்குகள் கோயில் பண்டாரத்திடம் பொன் பெற்றுக் கொண்டு விளக்கேற்ற நெய்யளித்தவர்களின் பெயர்களைத் தருகின்றன.92 வழிபாடு - படையல் - திருப்பணி மதுராந்தக இருக்குவேளாரான ஆதித்தன் விக்கிரமகேசரி, நலக்குன்றத்து இறைவனுக்குத் தேவகுடியாக மன்றாடி படாரன் தளியனை வழங்கியமையுடன், தேவதானமாக முனைநரியார் மருதங்குடி எனும் ஊரையும் அளித்தார். இறைவனுக்கான திருச்சென்னடை முதலாகவும் நாளும் திருஅமுது படைக்கவும் அளிக்கப்பட்ட மருதங்குடியின் ஒரு பகுதி வருவாய், ஆராதிக்கும் யோகியருக்கு நாளும் முக்குறுணி நெல்லும் கச்சோணமும் (ஒரு வகைப் பாத்திரம்) அளிக்கப் பயன்பட்டது. இறைவனுக்கு நாளும் உழக்கு நெய்யமுது படைக்க அவரே ஏழரைக் கழஞ்சுப் பொன்னும் அளித்தார்.93 மகிமாலைய இருக்குவேளின் குதிரையம்மான் சந்தையன் சிறு காலைச் சந்தியின்போது இறைவனுக்குப் பால் முழுக்காட்டுச் செய்யவும் மூன்று சந்திகளிலும் இறைவனுக்குப் பாலமுது, நெய்யமுது படைக்கவும் வாய்ப்பாக முப்பத்தொரு பசுக்களைக் கோயிலுக்குக் கொடையாகத் தந்திருந்தார்.94 ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த பூதை தம் சார்பாகவும் தம் தாயார் சார்பாகவும் இறைவனுக்குத் திங்கள் தோறும் இருநாழி அரிசி, ஒரு பிடி நெய், உரியளவுத் தயிர் கொண்டு திருவமுது படைக்கப் பொற்கொடை அளித்திருந்தார்.95 முதல் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டின்போது நெரிஞ்சிக்குடி ஊரார் விளையா வெண்களராய்க் கிடந்த நிலத் துண்டொன்றைத் திருநலக்குன்றத்து சேத்ரபாலரின் திருவமுது, அவர் திருமுன் எரிய விளக்கொன்று இவற்றிற்காக விற்றனர்.96 பத்திமை பூண்டோர் இறைவனுக்குத் தந்திருந்த பசுக்களைக் 'கள்ளி கொள்ள காக்கமாட்டாது' விற்ற கோயிலார், அதன்வழி வந்த பொன் கொண்டு பல அறங்களை மேற்கொண்டனர். அவற்றுள் இறைவனுக்களிக்கப்பட்ட நெய்யமுதும் ஒன்று.97 இறைவனுக்கான நித்த நிவந்தங்களுக்காக விசலூரில் ஆறு வேலி நிலமும் கீழ்மணநல்லூரில் நான்கு வேலி நிலமும் புதுவூரில் பத்து வேலி நிலமும் மன்னரால் தேவதான இறையிலியாக்கித் தரப்பட்டன.98 தொண்டை மண்டலத்து புத்திரன் வெங்கப்பரய்யன் நிலக்கொடை அளித்தார்.99 குடுமிநாதர் திருமுன்னில் அபிஷேகபுறமாக விட, வழுத்தூர்ச் சீர்மை அரச பல்லவராயரான அச்சுதப் பல்லவராயர் மகன் மல்லப்பப் பல்லவராயர் சிகாநல்லூர் ஊராரிடம் முப்பது பொன்னுக்கு நன்செய், புன்செய், நிலம் பெறு நீர் விலைக்குப் பெற்றார். அத்துடன் கீழை வீதியில் தேர்முட்டிக்குத் தெற்கே அமைந்த மனைகள் பதினைந்தும் திருமஞ்சணம் எடுக்கச் சம்பளக் காணியாகத் தரப்பட்டன.100 அரச பண்டார அலுவலரான வாலுநாயக்கர் வேண்டுகோளை ஏற்றுத் திருமலைதேவ மகாராயர் இறைவனின் வழிபாடு, படையல் இவற்றுக்காக இடைதுறை ஊரின் வருவாயை உவந்தளித்தார்.101 பெரியநாச்சியின் திருப்பள்ளியெழுச்சிச் சந்திக்கு அமுதிடக் கண்ணன் எதிரிலிப் பெருமாளான குலோத்துங்க சோழக் கடம்பராயன் இரண்டு மா நிலத்தை நாற்பத்தெண்ணாயிர நம்பியிடம் ஒப்புவித்தார்.102 இரட்டபாடி கொண்ட சோழ வளநாட்டு மூன்று படைப் பொற்கோயில் கைக்கோளர்கள் நலக்குன்றம் கோயிலில் தாங்கள் எழுந்தருளுவித்திருந்த கைக்கோள நாயகர், நம்பிராட்டியார் திருமேனிகளுக்கான திருஅமுது, கறியமுது, மிளகு, நெய், பாக்கு இவற்றிற்காகவும் மத்தியான சந்தியில் அளிக்கப்பட்ட சட்டிச் சோறு இரண்டுக்காகவும் பானையிடும் குயவர், விறகிடுவார் இவர்கட்கான ஊதியத்திற்காகவும் மார்கழி, மாசி, பங்குனித் திருவிழாக்களில் இவ்விறைத் திருமேனிகள் எழுந்தருளும் மூன்று நாட்களுக்கான செலவினங்களுக்காகவும் திருப்பாவாடைக் காசாக இருபத்தைந்து காசுகள் ஆண்டுதோறும் அளித்தனர். ஆண்டுதோறும் அதைச் செலுத்தும் பொறுப்பு கைக்கோளக் கணக்கிடம் ஒப்புவிக்கப்பட்டது.103 நலக்குன்ற இறைவன் திருப்புதியது அமுது செய்தருள மேல்மணநல்லூர் ஊரார் பிராந்தன் வயக்கலை கண்ணப்பன் உள்ளிட்டாருக்கு உழுது பயிரேற்றி, முற்றூட்டும் (முழு விளைவும்) தரும் வகையில் தந்தனர். இறைவனுக்கு அமாவாசைப் புறமாகத் தாம் வயக்கிய நிலத்துண்டுகள் இரண்டளித்த விக்கிரம சோழீசுவரமுடையார் கோயில் தேவகன்மி கோதண்டன், விரையாதான் உலகமுண்டான் பங்குனித் திருநாளன்று கைக்கோள நாயகருக்கு எண்ணெய்க்காப்புச் செய்ய வாய்ப்பாகச் சிகாநல்லூரில் வயக்கல் நிலமொன்றை அளித்தார்.104 விசலூர் ஊரவரிடம் ஒப்படைக்கப்பட்ட நலக்குன்றத்து இறைவனின் திருநாமத்துக்காணி நிலவிளைவிலிருந்து பெறப்பட்ட நெல், திருநாட்களின்போது இறைத்திருமேனிக்குச் சாந்து சாத்தி, மண்டபத்தில் எழுந்தருளுவித்துத் திருப்பாவாடை அமுதளிக்கும் செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இறைத்திருமேனி மண்டபத்திற்கு எழுந்தருளாத திருநாட்களின் போதும் ஊரார் நாளொன்றுக்கு இரண்டு கலமாகக் கோயிற் கணக்கரிடம் நெல் வழங்க ஏற்பாடானது.105 காமக்கோட்ட ஆளுடைநாச்சியின் திருப்படிமாற்று உள்ளிட்ட நிவந்தங்களுக்குக் குடிநீங்காத் தேவதானமாக அழகிய மணவாளச் சதுர்வேதிமங்கலத்து பட்டர்கள் அளித்த நிலத்திற்கான கீழிறை, பசானம், சிறுகோடைப் புன்பயிர்க் கடமை இவற்றை இருபத்தெட்டாம் ஆட்சியாண்டு முதல் தவிர்த்து நிலத்தை இறையிலியாக்கினார் குலசேகரர்.106 காமக்கோட்ட நம்பிராட்டிக்கான திருப்படிமாற்று உள்ளிட்ட நிவந்தங்களுக்காகவும் திருநாட்களில் சாந்து சாத்தி இறைத்திருமேனி எழுந்தருளும்போது சிறப்பு அமுது படையலிடவும் வடகோனாட்டு மருங்கூரை இறையிலித் தேவதான மாகக் காங்கேயராயர் அளித்தார். அத்துடன் கோயிலாரிடம் பெற்ற அந்தராயம் இருபத்தைந்து அச்சினையும் தவிர்த்தார்.107 வென்று மாலையிட்ட பல்லவராயர் மகன் ஸ்ரீரங்கநாதப் பல்லவராயர் நலத்திற்காக நலக்குன்ற இறைவனுக்குத் திருமேனி வென்று மாலையிட்டான் கொடையளித்தார்.108 சங்கரன் கண்டனான கலிகடிந்த பாண்டியதேவன் இறைவனுக்குத் திருவேட்டைத் தோப்பமைக்க நிலமளித்தார். அத்தோப்பு தியாகஞ்சிரியான் திருவேட்டைத் தோப்பு என்றழைக்கப்பட்டது.109 இறைவனுக்குக் குடிநீங்காத் தேவதானமாக விசலூர் நன்செய் நிலம் பத்து மா மலையாழ்வியால் வழங்கப்பட்டது. இந்நிலவிளைவு கொண்டு கோயிலில் அழகிய சேமன் திருவெடுத்துக்கட்டி அமைத்து, அதற்கான திருப்பணிகளை மேற்கொள்ளவும் எஞ்சிய விளைபொருளைப் பண்டாரத்தில் சேர்க்கவும் முடிவானது.110 இறைவன் சாந்து சாத்தி, மண்டபம் எழுந்தருளும் திருநாள் தோறும் திருப்பாவாடை அமுது வழங்க வாய்ப்பாக மூன்று மா நிலம் வழங்கப்பட்டது.111 பெருங்கூற்றக்குடியைச் சேர்ந்த பொதுவன் நக்கன் கூற்றக்குடி பரமேசுவரருக்கு நாள்வழிபாட்டிற்கும் படையலுக்குமாகக் கால் வேலி நிலத்தைத் தேவதானமாகத் தந்தார். வீரசோழ இளங்கோவேள் ஆணைப்படி இந்நிலத்தை ஊரார் இறையிலியாக்கினர்.112 கோயில் திருப்பணிக்காக இறைவனின் திருநாமத்துக்காணியாக விளங்கிய இலுப்பைக்குடி வயல் 73, 300 காசுக்குத் துக்கையாண்டாள் மகள் நாச்சிக்கு விற்கப்பட்டது.113 விழாக்கள் பங்குனி உத்திரம் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்பட்டது. பெருவாயில் நாட்டுச் சிறு சுனையூரைச் சேர்ந்த பூதை தம் சார்பாகவும் தம் தாயார் சார்பாகவும் தந்திருந்த இரண்டரைக் கழஞ்சுப் பொன்னால் இவ்வேழு நாட்களும் ஐந்து அந்தணர்கள் இங்கு உணவருந்தினர்.114 செவலூரைச் சேர்ந்த பட்டம் படாரியான பாண்டியதியரைசி பங்குனி உத்திர விழாவிற்காக இக்கோயிலுக்குப் பத்துத் துளைப்பொன் கொடையளித்தார். விழா நடந்த ஏழு நாட்களும் அப்பொன்னின் பலிசை கொண்டு, நாளொன்றுக்கு இருபது அந்தணர்களுக்கு உணவிடப்பட்டது. நாடுரி அரிசி, கறி ஒன்று, தயிர் மூன்றாழாக்கு, பாக்கு ஒன்று என இவ்வுணவு அமைந்தது. உணவைச் சமைத்தளித்தவருக்கு முந்நாழி அரிசியும் பாத்திரம் அளித்த வேட்கோவருக்கு நாடுரி அரிசியும் விறகு கொணர்ந்தவருக்கு நாழியரிசியும் தரப்பட்டன.115 கோச்சடைய மாறனின் பத்தாம் ஆட்சியாண்டின்போது நென்மலி நாட்டு நாகன்குடிக்காட்டைச் சேர்ந்த சாத்தனும் தேவன் கணபதியும் ஏழுநாள் திருவிழாவின்போது அறஞ் செய்ய வாய்ப்பாகக் கழஞ்சுப் பொன் கொடையளித்திருந்தனர்.116 மலைமண்டலத்துக் குளத்தூரைச் சேர்ந்த கலிகடிந்த பாண்டிய தேவன் வெள்ளாற்றுக் கீழ்க்கரையில் சிகாநல்லூர்ப் பற்றில் தாம் அமைத்துத் தந்த தியாகஞ்சிரியான் திருவேட்டைத் தோப்பில் மார்கழி, மாசி, பங்குனித் திருவிழாக்களின்போது, மூன்று நாட்கள் திருவேட்டைக்காக இறைவன் எழுந்தருளிப் பாவாடை அமுது செய்தருள வாய்ப்பாகத் தோப்பில் இருந்த சேரபாண்டியன் திருமண்டபத்தில் விளையினும் விளையாவிடினும் ஆண்டு தோறும் பத்துக் கலம், ஐந்து குறுணி நெல் நாட்டார் அளக்குமாறு வகை செய்திருந்தார். கோனாட்டு நாட்டாரும் கோயில் தானத்தாரும் இணைந்து சிகாநல்லூர் வயலில் இறைவன் திருநாமத்துக்காணியான நிலத்தில் அறந்தாங்கித் தடியால் அளக்கப்பட்ட இரண்டு மா நிலத்தைப் பாண்டிய தேவருக்கு நற்காசு மூவாயிரத்துக்கு விற்றனர். இந்நிலம் இறைவனுக்கு அவர் அளித்திருந்த திரு வேட்டைத் தோப்பில் இருந்த சேரபாண்டியன் மண்டபத்தைப் பார்த்துக்கொண்டவர்களுக்கு வாழ்வூதியமாக அமைந்தது. நில விளைவில் கடமை, கீழிறை கொள்ளோம் என நாட்டார் உறுதி கூறி ஆவணம் பதிவுசெய்துள்ளனர். நலக்குன்றம் உடைய இறைவனுக்குத் தேவதானமாகப் பாண்டியதேவன் தந்த முக்குளத்து வயலின் திருவாயில் முகவணை ஏறத் தலையரிந்த கைக்கோளன் உடையநாச்சி மகன் கூத்தனின் தியாகம் போற்றி, அவர் உறவுமுறையாருக்கு உதிரப்பட்டியாக இரண்டு மா நிலம் அளிக்கப்பட்டது.117 அப்பெருமகன் ஏற்பாடு செய்திருந்த ஆவணித் திருநாள் கொண்டாட்டத்தின்போது, ஆனையமர் வென்ற கோன் அழகப் பெருமாள் பிறந்த நட்சத்திரமான உத்திரத்தில் இறைவன் தீர்த்தமாடி ஒன்பது நாள் சிறப்புடன் எழுந்தருளவும் ஆண்டுதோறும் பவித்திரம் சாத்தியருளவும் அரசர்கள் அஞ்சப் பிறந்தானான கடம்பராயன் முக்குளத்து வயலும் குளமும் துலுக்கராயன் குழியும் இறையிலித் தேவதானமாகத் தந்தார்.118 சிறப்புச் செய்திகள் முதலாம் இராஜேந்திரரின் பதினாறாம் ஆட்சியாண்டின் போது இலுப்பைக்குடி உள்ளிட்ட சில ஊர்களின் அரசு சார் வரியினங்கள் திருநலக்குன்ற இறைவனின் நிவந்தங்களுக்காக மன்னரால் அளிக்கப்பட்டன. இவ்வாணைக்கான திருமந்திர ஓலைநாயகங்களாகக் கங்கை கொண்டானும் துளாருடையானும் அமைந்தனர். உடன்கூட்டத்து அதிகாரிகளாகப் பேருடையான் குடிதாங்கிச் சேடனாரும் சோழ மூவேந்த வேளானும் இருந்தனர்.119 குலோத்துங்கசோழக் கடம்பராயரின் அணுக்கி சுந்தி தாயிலும் நல்லாள் ஐம்பது காசுக்குச் சண்டேசுவர விலையில் நிலம் பெற்றுச் சிங்கன் ஆச்சியின் நினைவாகக் கோயிலுக்கு அளித்தார்.120 வெற்றிலைப் பாக்கும் மெய்ப்பூச்சும் முதற் குலோத்துங்கரின் முப்பத்தாறாம் ஆட்சியாண்டின்போது இரட்டபாடி கொண்ட சோழ வளநாட்டு நாட்டார், மூன்று படைப் பொற்கோயில் கைக்கோளர், பழியிலி ஐநூற்றுவர் எனும் மூன்று அமைப்பினரும் சேர்ந்து அந்நாட்டில் வந்திறங்கின வெற்றிலைக்குத் தரகு கொண்ட இனியநின்றான் சகஸ்ரன், அருளாள சகஸ்ரன் என்பார் ஆண்டுதோறும் இறைக் கோயிலுக்கு முப்பதினாயிரம் பாக்கும் வெற்றிலைக்கட்டு எழுநூற்றைம்பதும் தருமாறு பார்த்துக்கொள்வோம் என்று உறுதியளித்தனர். பின்னர் இப்பொருட்களில் பாதியை மேற் சொன்ன இருவரும் தருவதென்றும் மறுபாதியை தாமோதிரன் கிருஷ்ணனான சிறுத்தொண்டநம்பி தருவதென்றும் ஒப்பந்தமானது. குலோத்துங்கரின் நாற்பத்தெட்டாம் ஆட்சியாண்டு முதல் இவர்களே இறைவன் திருமெய்ப்பூச்சுக்கென திங்களுக்கு ஐந்து திரமம் என்ற கணக்கில் ஆண்டுக்கு அறுபது திரமம் தருவதெனவும் முடிவு செய்யப்பட்டது.121 புதுமண்டபம் சுந்தரபாண்டியரின் மூன்றாம் ஆட்சியாண்டின்போது கோயில் நீராட்டு மண்டபத்தின் வடபகுதியில் திருநட்டப் பெருமானுக்காகப் புதுமண்டபம் எழுப்பப்பெற்றதால் அங்கு இருந்த கல்வெட்டுகள் பொன்னன் காங்கேயன் உத்தரவிற்கேற்பப் படியெடுக்கப்பட்டு வேறிடத்தில் வெட்டப்பட்டன. அது போலவே, கோயிலின் இரண்டாம் சுற்று வாயில் இடையூறாக இருந்தமையால், அதை மாற்றிப் பெரிய வாயில் அமைக்கப்பட்டது. காங்கேயர் ஆணைப்படி இம்மாற்றத்தைச் செய்தவர்கள் அங்கிருந்த கல்வெட்டுகளைப் படியெடுத்து வேறிடத்தில் வெட்டச்செய்தனர். கல்வெட்டுகளைப் படியெடுத்தவர்கள் அவற்றில் தமக்குப் புரியாதிருந்த எழுத்துக்களைப் புதிய பொறிப்பில், 'இதுக்குப் பின்பு இருபதெழுத்துத் தெரியாதது' எனச் சுட்டியுள்ள நேர்மை போற்றற்குரியது.122 இப்படி வெட்டப்பட்ட கல்வெட்டுகளுள் ஒன்று முதற் பராந்தகரின் முப்பத்து மூன்றாம் ஆட்சியாண்டின்போது ஈழப் போருக்குச் சென்ற பராந்தகன் குஞ்சிரமல்லனான வீரசோழ இளங்கோவேள் கீழ்மணநல்லூரில் ஒரு வேலி நிலம் இறைவனுக்களித்த செய்தியைத் தருகிறது. இந்நிலம் யோகியருக்குத் திருவமுதளிக்கப் பயன்பட்டது.123 முதற் குலோத்துங்கரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டின்போது சோலை மனத்துளானான வளவன் பல்லவதரையனுக்குக் குடிநீங்காத் தேவதானமாக நிலமொன்று நலக்குன்றத்து ஊராரால் விற்கப்பட்டது. அது கொண்டு மார்கழித் திருநாளுக்குப் பல்லவதரையன் நிவந்தமளித்தார். கோயில் சேதிராயன் மண்டபத்தில் வெட்டப்பட்டிருந்த இக்கல்வெட்டு, சுந்தர பாண்டியரின் நான்காம் ஆட்சியாண்டின்போது நிகழ்ந்த கட்டமைப்பு மாற்றங்களினால் பொன்னன் காங்கேயராயர் உத்தரவினால் வேறிடத்தில் மாற்றி வெட்டப்பட்டது.124 செருந்திவனநாயகர் திருத்தோப்பு இறைவனுக்குத் திருத்தோப்புச் செய்யத் தேவன் கிழவனான சோழ திவாகர மூவேந்த வேளார் நிலம் தேட, கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டு நாட்டாரும் கோயில் தானத்தாரும் இறைவன் திருநாமத்துக்காணியில் 320 குழிப் புன்செய் நிலத்தை 1260 அன்றாடு நற்காசுகளுக்கு விற்றனர். பதினாறடிக் கோலால் அளக்கப்பட்ட அந்நிலத்தின் எல்லைகளில் திருச்சூலம் பொறிக்கப்பட்டுச் செருந்திவன நாயகர் திருத்தோப்பு என்று பெயரிடப்பட்டது. இக்கல்வெட்டில் கோயிலில் இருந்த திருமடமாக அனுசாரம் பிச்சை மடம் குறிக்கப்படுகிறது. நந்தவனத்தில் பணி செய்தாருக்கு இறையிலிக் காராண்கிழமையாகச் சிகாநல்லூர் வயலில் இரண்டு மா நீர்நிலம் வாங்கித் தரப்பட்டது.125 இக்கோயில் சிவஅந்தணர்களிடமிருந்து இருபது அன்றாடு நற்காசுகளுக்குப் பெற்ற நிலத்துண்டைச் சிகாநல்லூர் முனையில் ஆதித்தன் கோதண்டன் திருநாள் செலவினங்களுக்காகக் கோயிலுக்களித்தார். விளைவின் ஒரு பகுதி ஊரிலிருந்த மடத்திற்கு வந்தவர் உணவருந்த வழங்கப்பட்டது.126 களவும் தண்டனையும் வீரபாண்டியரின் இரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இக்கோயிலில் நிகழ்ந்த களவை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.127 கோயில் பண்டாரத்திலிருந்த நகைகளையும் பொன்னையும் கோயில் சிவஅந்தணர்கள் திருடிப் பயன்படுத்திக் கொண்டனர். களவு வெளிப்பட்டபோது கோனாட்டின் கீழிருந்த நாட்டார், நகரத்தார், ஊரார் அனைவரும் கோயில் காங்கேயராயன் திருமண்டபத்தில் கூடி விசாரணை நிகழ்த்தினர். குன்றன் செருந்திவனப் பெருமானான எதிரிலிச் சோழ பட்டன், தானும் கோயில் தச்சரும் இணைந்து அறுபது பொன் களவாடியதாகவும் எஞ்சிய பொன்னைப் பிற சிவஅந்தணர்கள் எடுத்துக் கொண்டதாகவும் கூற, அவையார் அவ்அந்தணர்களை விசாரிக்க, அவர்கள் தாங்கள் திருடவில்லை என்றனர். மத்துக்குறிச்சியில் சாமந்தனார் திருமுன் தர்மாசனத்து பட்டர்களிடம் கேட்டு, அங்கு விதித்தபடி சத்தியம் செய்யுமாறு அவ்அந்தணர்களிடம் அவையார் கூறினர். அகத்தீசுவரம் உடையார் திருக்கோயிலில் சாமந்தனார் திருமுன் திருப்பாமாலை திருக்கூட்டத்து இறங்கல் மீட்டாரும் வைராகிகளும் அமர்ந்திருக்க, குற்றம் சாட்டப்பட்ட அந்தணர்கள் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் பிடித்தனர். பெரியாரன் தேவன், குன்றன் பங்கன், குன்றன் மாறன் புற்றிடங் கொண்டான், குன்றன் பிரம்பன் சங்கூதி ஆகியோர் கைகள் வெந்தமையால் அவர்களைக் குற்றம் செய்தவர்களாகவும் சிவத்துரோகிகளாகவும் அவை அறிவித்தது. இலுப்பைக்குடியிலிருந்த அவர்தம் நிலங்கள் கோயில் திருநாமத்துக்காணியாக அறிவிக்கப்பட்டன. அவற்றுள் சில நிலத்துண்டுகள் குற்றவாளிகளால் ஏற்கனவே விற்கப்பட்டனவாகவும் ஒற்றிக்குத் தரப்பட்டனவாகவும் இருந்தமையால், விற்கப்பட்ட நிலங்களுக்கு வாங்கியவர்கள் தந்த விலைத்தொகை கோயில் பண்டாரத்தால் அளிக்கப்பட்டது. ஒற்றிக்குத் தரப்பட்ட நிலங்கள் இழப்பீடு தரப்படாமல் ஒப்பந்தம் நீக்கிய நிலையில் கோயிலால் கொள்ளப்பட்டன. ஊர் இரண்டாம் அடைவைச் சேர்ந்த கைக்கோளர் நித்தியாண்டிச் சிலம்பன், அம்மைச்சியார் அகலமீன்ற நாயகியின் பட்டைக்காறையைத் திருடி விற்றார். களவு கண்டறியப்பட்டுச் சிலம்பனைப் பிடித்தவர்கள் அவர் கையை வெட்டியதுடன் காணியாட்சியும் இழக்கச்செய்து ஊரை விட்டு விரட்டினர். பட்டைக்காறைக்கான விலைக்கும் குறளைப் பணத்துக்கும் (தகாது ஈட்டிய பணம்) ஈடாகப் பத்துப் பொன் அளிக்குமாறு சிலம்பனின் பங்குக்காரருக்குக் கோயிலார் உத்தரவிட, அவர்கள் அப்பொன்னைத் தரஇயலாத நிலையில் சிலம்பனின் காணியாட்சியை விற்றுப் பணம் கொள்ளுமாறு தெரிவித்தனர். அதனால், கோயில் பரிகலத்தாரில் சோலைச்சி மகள் பல்லவராய மாணிக்கத்தாளுக்குப் பத்துப் பொன்னுக்கு அக்காணியாட்சி விற்கப்பட்டது. இரண்டாம் அடைவினரின் ஆவணம், சண்டேசுவரப் பட்டயம், மல்லப்பப் பல்லவராயப் பண்டாரத்தார் பட்டயம் இவை விற்பனை ஆவணங்களாக மாணிக்கத்தாளுக்கு வழங்கப்பட்டன. காணியாட்சி உரிமைக்கு உட்பட்டவையாக நன்செய், புன்செய், மாவடை, மரவடை, சாரடை (மீன்பிடி வருவாய்), கோயில் சுதந்திரம், கைக்கோளக் காணி, தேவடிமைக் காணி, சகல ஆதாயம் என்பன குறிக்கப்பட்டுள்ளன. கி. பி. 1616ல் உருவாக்கப்பட்ட இவ்ஆவணத்தை எழுதியவராகக் கோயில் கணக்கு நல்லதம்பி கோனாட்டு வேளான் குறிக்கப்பட்டுள்ளார். இதற்குச் சான்றாளர்களாகப் பரமேசுவரபட்டனும் சிவப்பிரகாச பட்டனும் இருந்தனர்.128 திருப்பணி முதல் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டின்போது கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டு நாட்டார், நகரத்தார், கிராமத்தார், வன்னியர், படைப்பற்றுகள் ஆகியோர் நலக்குன்றம் கோயில் காங்கேயராயன் மண்டபத்தில் கூடிக் கோயில் நிருவாகிகளிடம் கோயில் திருப்பணிக்காகக் கோனாட்டு இருபத்துநான்கு காத வட்டத்தில் உள்ள காணியாளர்களான அந்தணர், செட்டியார், வேளாளர் இவர்கள் அனைவரும் ஆண்டொன்றுக்கு, ஆளொன்றுக்கு அரைப் பணம் தருவதாகவும் இளமையார், படைப்பற்றுகள் இவற்றைச் சேர்ந்தவர்கள் கால் பணம் தருவதாகவும் குடிமக்கள், பறையர், பள்ளர் ஆகியோர் அரைக்கால் பணம் அளிப்பதாகவும் இப்பணத்தைக் கோயில் தானத்தாரும் வயிராகிகளும் ஆண்டு தோறும் தண்டித் திருப்பணி செய்தல் வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.129 ஓடிப்போனவர் நிலம் விசலூரைச் சேர்ந்த ஆழ்வான் தேவன் தாம் செலுத்த வேண்டிய கடமை, அச்சு ஆகிய வரியினங்களைச் செலுத்தாமல் ஊரைவிட்டு ஓடியதால், அவற்றை ஊரவை செலுத்தும் நிலை ஏற்பட்டது. ஆழ்வான் தேவனின் சார்பில் வரி செலுத்த யாரும் இல்லாமையால் அவருடைய நிலமான குளப்பட்டியை ஊரார் விற்பனைக்குக் கொணர்ந்தனர். கலிகடிந்த பாண்டிய தேவர் 1500 அன்றாடு நற்காசுகள் அளித்து அந்நிலத்தைப் பெற்றார். எதிர் காலத்தில் அந்நிலத்திற்கான கடமை இறுப்பதற்காக 500 காசுகள் ஊராரால் கொள்ளப்பட்டன. இறைவனுக்கென பாண்டிய தேவர் அமைத்த திருவேட்டைத் தோப்பிற்கான திருவீதியில் மதில் எழுப்பவும் திருவேட்டைக்காக இறைவன் எழுந்தருளும் விழாநாட்களில் அங்கு விளக்கெரிக்கவும் படையலிடவும் அந்நிலம் வாங்கப்பட்டது. அங்கு எழுந்தருளிய இறைவன் சுந்தர நாயனார் என்று கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்.130 கைமாறிய நிலம் நலக்குன்றத்துக் கைக்கோளர் ஜயதுங்கநாயன் இறைவன் தேவதானமான மருங்கூரை விலைக்குப் பெற்று அனுபவித்து வந்தார். கோனாட்டு நாட்டாரும் கோயில் தானத்தாரும் அந்நிலத்துக்குரிய பங்காக ஜயதுங்கநாயனைத் திருக்கோபுரத் திருப்பணிக்கு மூன்று அச்சு அளிக்குமாறு செய்தனர். அத்துடன் ஒரு மா நிலத்துக்குக் கடமை, வினியோகம் உட்பட எண்கல நெல்லும் கீழிறையும் என மருங்கூர் நிலம் முழுமைக்கும் வரி இறுக்குமாறு செய்தனர். ஆடிக் குறுவையின்போது ஒன்று பாதி இறுக்க அறிவுறுத்தினர். இம்மருங்கூர் நிலம் பின்னாளில் சண்டேசுவர விலையாகப் பொன்னம்பலவன் உய்யவந்த பெருமாளான காங்கேயருக்குக் காணியாக விற்கப்பட்டது. ஜயதுங்கநாயனின் உறவினரான புவனிமுழுதுடைய பல்லவதரையன், அவரும் அவருடைய பிள்ளைகளும் மருங்கூரில் இல்லாமையால் நிலம் பற்றிலியாக உள்ளதென்று காங்கேய ராயரிடம் சொன்னார். அந்நிலம் தம்மால் வாங்கப்பட்டதற்கான ஓலையைப் பல்லவதரையன் மக்களிடம் காட்டிய காங்கேயராயர், அந்நிலம் நலக்குன்றத்துத் திருக்காமக்கோட்ட நாச்சி யாருக்குத் தேவதானமாக அளிக்கப்பட்ட செய்தியைக் கூறி, நிலத்தைப் பல்லவதரையன் மக்கள் உழுது, பயிரிட்டு அனுபவித்துக் கொண்டு நிலவரியான கடமையை ஆளுடைநாச்சிக்கு அளிக்குமாறு பிடிபாடு செய்து கொடுத்தார்.131 முத்தரையர் ஆவணங்கள் கோனாட்டு முத்தரையன் உள்ளிட்டாருக்கு அவர்தம் செயற்பாடுகளைச் சுட்டிக் கோயில் தானத்தார் பிடிபாடு அளித்தனர். ஊரில் இறப்பு நேர்ந்தால் கட்டையிட்டு, முக்காடிட்டு, தீச்சட்டிக் கொண்டு, சுளுந்து கொளுத்தி, பிணம் காத்து நின்ற அவர்தம் செயற்பாடுகள் இனி வேண்டாம் என்றும் நன்மைக்கு மட்டும் பந்தல், சுளுந்து என உரிய முறைமைகள் செய்து, தானத்தாருக்கும் ஊராருக்கும் தேவைப்படும் நன்மைக்கு உண்டான செயல்கள் செய்து அவர்கள் சுகத்தில் இருக்குமாறு உத்தரவாயிற்று. அதிகாரம் சிவந்தெழுந்தார் ஆiஙுப்படி அமைந்த இந்த ஆவணத்தைக் கோயில் கணக்கு குடுமி கோனாட்டு வேளான் எழுதியுள்ளார்.132 மன்மத ஆண்டு ஆனித்திங்களில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, பட்டடை காத்தும் பிணத்தின் முன்னே முக்காடிட்டு நடந்தும் செயற்பட்ட விசலூர்க் கோனாட்டு முத்தரையர், செருந்திவன முத்தரையர் உள்ளிட்டாரைப் பிற ஊர் வலையர் கள் சாதி நீக்கி ஈனம் செய்தமையால், அவர்கள் குடி பெயர்ந்தனர் என்றும் அது கேள்வியுற்ற மல்லப்பப் பல்லவராயர் பட்டடைக் காவலும் முக்காடிடுதலும் இனி வேண்டாம் என்று உத்தரவிடக் கோயில் பண்டாரிகள் அதை நிறைவேற்ற உளம் கொண்டனர் என்றும் கூறுகிறது.133 முறிகள் கி. பி. 1742ல் கோயில் தலத்தாரிடை ஏற்பட்ட அடைவு முறைமை தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்டன.134 வீரபாண்டியரின் பதினேழாம் ஆட்சியாண்டின்போது புல்வயல் உள்ளிட்ட ஐந்து ஊரார் சிகாநல்லூர்க் குடுமியார் உதயப்பெருமாள் உள்ளிட்டார் தங்கட்குச் செய்த நன்மைகளை முன்னிட்டு நிலத் துண்டொன்றை அளித்துத் தீர்வுமுறி தந்தனர். இத்தீர்வு முறியை ஊர்க் கணக்கு உலகு தொழ நின்றான் எழுதியுள்ளார்.135 நளஆண்டு ஆவணித்திங்கள் இருபதாம் நாள் வெட்டப் பட்டுள்ள கல்வெட்டு, இரண்டு கூட்டத்தாருக்கு இடையே ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் அவற்றின் காரணமான கொலைகள் இவற்றை விவரிப்பதோடு, சில இறப்புகளுக்குப் பின் அவ்விரு கூட்டத்தாரும் பகை, பழி மறந்து வாழ்வதாகப் பகை முறி செய்துகொண்ட தகவலையும் முன்வைக்கிறது.136 கோயில்கள்- மடங்கள் இக்கோயில் கல்வெட்டுகளினால் மேல்மணநல்லூர் விக்கிரம சோழீசுவரம், திருநலக்குன்றத்து நாகீசுவரம், நாற்பத் தெண்ணாயிரவன் மடம், இன்பகன் திருமடம், கோனாடன் மடம், அனுசாரம் பிச்சை மடம் ஆகியன வெளிச்சத்திற்கு வருகின்றன. மேல்மணநல்லூரில் அகவயல், குடிக்காடு இவை இரண்டும் திருவிக்கிரம சோழீசுவரமுடைய நாயனாருக்குத் தேவதானமாகவும் அரைவேலி நிலம் திருநலக்குன்றமுடைய நாயனார் கோயில் நாற்பத்தெண்ணாயிரவன் திருமடத்துக்கு மடப்புறமாகவும் விடப்பட்டிருந்தன. சிகாநல்லூர்க் கோதண்டன் மேல்மணநல்லூர் ஊராரிடம் அன்றாடு நற்காசு இருபத்தைந்துக்கு நிலத்துண்டொன்றை விலைக்குப் பெற்று, அதைக் குடிநீங்காத் தேவதானமாக உடைய கோவன் சோழன் பொறுப்பில் விக்கிரம சோழீசுவரம் உடையாருக்கு அளித்தார். குடிமை, கீழிறை கோயிலுக்கு இறுத்து எஞ்சிய விளைவைச் சோழன் கொள்ள முடிவானது.137 கைக்கோளன் பட்டன் திருவுடையானான கண்டரமாணிக்கப் பல்லவரையன் அனந்தராமன் ஒரு காசுக்கு நிலம் வாங்கி இறையிலியாக்கிக் கோனாடன் மடப்புறமாக அளித்தார். அதில் அரை மா நிலம் மடம் மெழுகிக் குடியிருப்பானுக்கு அளிக்கப்பட்டது. காணி நிலம் பானை அளித்த குயவனுக்குத் தரப்பட்டது. மடத்திற்கு விறகளித்தவர் காணி நிலம் பெற்றார். எஞ்சிய நில விளைவு கொண்டு இறைவனின் மாசி, பங்குனித் திருநாட்களில் மடத்தில் மாகேசுவரருக்கு உணவளிக்கப்பட்டது.138 அகிலாண்டேசுவரி திருமுன் மண்டபங்களுக்கு வெளிப் புறத்தே உள்ள கற்பலகையில், 'திருநலக்குன்றத்து இராகுத்த ராயன் ஆனாயம் அஞ்சினான் புகலிடம்' என்று எழுதப் பட்டுள்ளது. கல்வெட்டு வரிகளுக்குக் கீழே முக்காலியின் மேல் நிறைகுடமும் அதன் இருபுறத்தும் பக்கத்திற்கொரு குத்து விளக்கும் செதுக்கப்பட்டுள்ளன.139 இராமசாமி ஐயர் மேற்பார்வையில் பிச்சைய்யன் மணியத் தில் பைரவர் திருமுன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டமையை மார்கழிப் பன்னிரண்டாம் நாள் வெட்டப்பட்டுள்ள கல்வெட் டொன்று தெரிவிக்கிறது.140 பாடல் கல்வெட்டுகள் இக்கோயில் வளாகத்திலிருந்து ஒன்பது பாடல் கல்வெட்டுகளும் ஊரின் பிற பகுதிகளிலிருந்து ஏழு பாடல் கல்வெட்டுகளும் படியெடுக்கப்பட்டுள்ளன.141 கோயில் வளாகத்திலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளுள் எட்டு, இரண்டாம் கோபுர வாயிலில் இடம்பெற்றுள்ளன. இப்பாடல் கல்வெட்டுகளுள் பெரும்பான்மையன பொன்பரப்பின மகதைப் பெருமாள், வடுகெறிந்த மகதேசன், இராஜராஜதேவன் பொன்பரப்பினான் எனும் பெயர்களில் அமைந்த வாணாதராயரைப் போற்றுகின்றன. சில, பாண்டிய மன்னனைக் கொண்டாடுகின்றன. ஒரு பாடல் கொடிகளைப் பற்றியும் மற்றொரு பாடல் குடுமிநாதர் பற்றியும் பேசுகின்றன. பெண்பாற் சொற்கள் இக்கோயில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள கூத்தி,142 அணுக்கி,143 தேவரடியாள்,144 போகியார்145 எனும் நான்கு பெண்பாற் சொற்களுள் ஆண்பால் இணையற்ற சொல்லாக போகியார் மட்டுமே அமைந்துள்ளது. செல்வாக்குள்ள மனிதர்களின் பெயர்களுடன் இணைந்து வரும் இச்சொல் (வாணாதராயரின் போகி யார்), அவரவர்தம் காமக்கிழத்தியரைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். நெருக்கமானவர் எனும் பொருளில் அணுக்கி, அணுக்கர் (இராஜேந்திர சோழரின் அணுக்கியார்) எனும் சொற்கள் கல்வெட்டுகளில் கையாளப்பட்டுள்ளன. போகியாரினின்று ஏதோ ஒரு நிலையில் வேறுபட்டிருந்தமையாலேயே, நெருக்கமானவர்களைக் குறிக்க அணுக்கி என்னும் சொல் பயன்பட்டது போலும். கூத்தி எனும் சொல்லாட்சி ஆடுமகளைக் குறிக்கத் தேவரடியாள், கோயிற் பணிமகளைச் சுட்டப் பயன்பட்டது. தேவரடியாள் ஆடல் நிகழ்த்துனராகவும் இருந்தார். ஆனால், கூத்தி ஆடல் தவிர்த்த பிற பணிகளைச் செய்தமைக்குச் சான்றுகளில்லை. தேவரடியாள் என்ற சொல் வழக்கிலிருந்த காலத்திலேயே தேவடிமை என்ற சொல்லும்146 வழங்கியது. இவ்விரண்டு நிலைகளுக்கும் உள்ள வேறுபாட்டை அறியக்கூடவில்லை. சிவன் கோயில் எல்லைகளைக் குறிக்க சிவபெருமானின் கருவிகளுள் ஒன்றான முத்தலை ஈட்டி பொறிக்கப்பட்ட பலகைக் கற்கள் பயன்படுத்தப்பட்டன. கல்வெட்டுகள் இவற்றைத் திரி சூலத் தேவர்களாகவே குறிக்கின்றன. 'எழுந்தருளுவித்த திருச்சூலத் தேவர்களுக்கு உட்பட்ட நிலம்' என்கிறது ஒரு கல்வெட்டு.147 குடைவரையின் காலம் குடைவரை முகமண்டப மேற்குச் சுவரிலுள்ள பரிவாதினிக் கல்வெட்டின் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டாகக் கருதப்படுவதால், குடைவரையின் காலத்தையும் அதுவாகவோ அல்லது அதற்குச் சற்று முற்பட்டதாகவோ மட்டுமே கொள்ளமுடியும். முற்சோழர் காலத்தில் ஓரளவிற்கேனும் புரக்கப்பட்ட குடைவரை இறைவன் தொடர்ந்து வந்த காலங்களில் நலக்குன்ற இறைவன் பெற்ற அணைப்பைப் பெறாது போனமையின் காரணம் தெரியவில்லை. வீரபாண்டியர் காலத்தில் குடைவரை இறைவனுக்கு நாச்சியார் கோயில் அமைக்கப்பட்டமை, அக்காலகட்டத்தே மேற்றளியார் பெற்றிருந்த சிறப்பைக் காட்டுவதாகக் கொள்ளலாம். எனினும், தொடர்ந்து இவ்விறைவன் புரக்கப்படாமையைக் கிருஷ்ணதேவராயரின் கி. பி. 1527ம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகிறது. தொண்டைமான் படியமைப்புப் போல அவ்வப்போது கவனிக்கப்பட்ட நிலை இருந்தபோதும், தொடர் கவனிப்பற்ற சூழல் இக்கோயிலைப் பல நூற்றாண்டுகளாக இருளடையச் செய்துள்ளமை துன்பம் தரும் உண்மையாகும். குறிப்புகள் 51. IPS : 34, 57, 77, 135, 181. 52. IPS : 22, 37, 238. 53. IPS : 366. 54. IPS : 406. 55. SII 13 : 296; IPS : 34. 56. SII 17: 374. 57. IPS : 78. கொடையாளியை ஓலைவீரட்டள் எனும் பெண் பாலாகக் கொள்ளும் சொ. சாந்தலிங்கம், அப்பெண் மூன்று பொன் தந்ததாகக் கூறியுள்ளார். மு. கு. நூல், ப. 30. 58. SII 22 : 370. 59. IPS : 135. 60. IPS : 57. 61. SII 17 : 356. 62. IPS : 366. 63. IPS : 741. 64. IPS : 80. 65. SII 13 : 288. 66. SII 19 : 155. 67. SII 19 : 241. 68. SII 19 : 436; 14 : 50; 17 : 374. 69. SII 19 : 362. 70. வரலாறு 5, பக். 20-21. 71. SII 19 : 387, 363. நிலைவிளக்குச் செய்ய ஏழு மா பொன் தந்த தாக எழுதியுள்ளார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 30. 72. SII 17 : 380. ஊரும் பெயரும் தவறாகப் பதிவாகியுள்ளன. 73. SII 19 : 38, 154, 386; 13 : 213, 289. சிலவற்றில் ஊரும் பெயரும் தவறாகப் பதிவாகியுள்ளன. 74. SII 19 : 152, 443, 415. நிலைவிளக்கிற்கு ஏழு மா பொன் தந்ததாக எழுதியுள்ளார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 30. 75. IPS : 191. 76. தினமணி, 25. 3. 2002. 77. SII 19 : 420, 416; 14: 50, Fragment 2. கொடையாளியின் பெயரை வளவன் பொறையன் ஆயின அறஞ்சிறை பிடாரன் எனக் குறித்துள்ளார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 30. 78. SII 17 : 349. 79. SII 19 : 421. 80. SII 22 : 371; IPS : 229. 81. SII 22 : 371. 82. SII 19 : 442. பெருங்காடன் எனக் குறித்துள்ளார் சொ. சாந்த லிங்கம். மு. கு. நூல், ப. 30. 83. SII 14 : 30. 84. SII 13 : 326, 327. 85. SII 19 : 151; 14 : 50, Fragment 3. 86. SII 19 : 178. 87. IPS : 215. 88. IPS : 235. 89. SII 19 : 153. 90. IPS : 542. 91. IPS : 753. 92. IPS : 50, 53. 93. SII 19: 414; SII 17: 368. 94. SII 13 : 23. 95. SII 17 : 349. 96. The Hindu, 25. 3. 2002. 97. SII 19 : 151. 98. IPS : 166, 182. 99. IPS : 756. 100. IPS : 866. 101. SII 22 : 378. 102. SII 22 : 357. 103. IPS : 248. 104. IPS : 190. 105. IPS : 374. 106. IPS : 549. 107. IPS : 983, 984. 108. IPS : 1090. 109. SII 22 : 354, 355. 110. SII 22 : 359. 111. SII 22 : 361. 112. SII 22 : 369. 113. SII 22 : 352. 114. SII 17 : 349. 115. SII 17 : 377, IPS : 67. 116. SII 14 : 50, Fragment 1; IPS: 238. 117. SII 22 : 354, 355; வரலாறு 11, ப. 17. பூவாலைக்குடிப் பெருமண்டப மேல்நிலையில் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டும் முகவணை பற்றிக் குறிப்பிடுகிறது. தினமணி, 13. 10. 2010. 118. IPS : 304. 119. IPS : 234. 120. IPS : 188. 121. IPS : 125. 122. SII 22 : 364; IPS : 248, 221. திருச்சிராப்பள்ளி மாவட்டம் நத்தமாங்குடி ஆதிமூலநாதப் பெருமாள் கோயிலில் காணப்படும் மூன்றாம் குலோத்துங்கரின் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் இதே போன்ற சுட்டல்களு டன் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முழுமையான தரவுகளுக்கு: மு. நளினி, இரா. கலைக்கோவன், நத்தத்தில் பழையதும் புதியதும், தளிச்சேரிக் கல்வெட்டு, பக். 240-261. 123. IPS : 255. 124. IPS : 506. 125. IPS : 266. 126. SII 22 : 368. 127. IPS : 601. 128. IPS : 867. 129. IPS : 285. 130. IPS : 301. 131. IPS : 521, 517. 132. IPS : 906. 133. IPS : 926. 134. IPS : 880. 135. IPS : 600. 136. IPS : 960. 137. IPS : 190, 187. 138. IPS : 221. 139. சொ. சாந்தலிங்கம், மு. கு. நூல், ப. 68. 140. சொ. சாந்தலிங்கம், மு. கு. நூல், ப. 68. 141. IPS : 651 - 655, 673 - 76, 1092; SII 22 : 381, 382, 385. 142. IPS : 486. 143. IPS : 188. 144. IPS : 367. 145. IPS : 235. 146. IPS : 867. 147. IPS : 542. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |