http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 79

இதழ் 79
[ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?
மாங்குடி
அறிவர் கோயில் - 1
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 4
பழனி முத்தையா பிள்ளை
பேய்த்திருவிழா
இதழ் எண். 79 > தலையங்கம்
நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

மேற்கண்ட கேள்வியைக் கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியிருந்தது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பதவிகளில் இந்துக்களை மட்டுமே நியமிக்கும் முயற்சிக்கும் இக்கேள்வி முட்டுக்கட்டை போட்டது. வழக்கின் சாரம் இதுதான். 2009ம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commission) கல்வெட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச்சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்டப்படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும் (Diploma in Epigraphy) முடித்திருந்த திரு. நல்லா முகமது என்பவர் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார். விண்ணப்பதாரர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் இல்லை என்ற காரணம் குறிப்பிடப்பட்டு, தேர்வாணையம் நல்லா முகமதுவின் விண்ணப்பத்தை நிராகரித்தது. கல்வெட்டாய்வாளர் அல்லது தொல்லியல் அலுவலர் பதவிக்குச் சமயம் தடையாக இருப்பின், நினைவுச்சின்னப் பாதுகாப்பாளர் (Curator) என்ற பதவிக்காவது தனது விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்வாணையத்தைக் கோரியிருந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, திரு. நல்லா முகமது அவர்கள் தனக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்கு எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று காரணம் கூறி, நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க முடியாது என்று கூறியது. இதைத் தொடர்ந்துதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, மேற்கண்ட கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர்.

கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் ஆய்வுக்காக நாங்கள் நினைவுச்சின்னங்களை நோக்கிப் பயணப்பட்டபோது, பலதரப்பட்ட காப்பாளர்களைச் சந்தித்திருக்கிறோம். வறுமையின் கோரப்பிடியில் வாழ்க்கையைச் சிரமப்பட்டு நகர்த்திக் கொண்டிருந்தும், பார்வையாளர்கள் தரும் சிறு அன்பளிப்புகளைக்கூட மறுப்பவர்களையும், ஒரே தொல்லியல் வட்டத்திலிருந்தும் தொலைவிலிருக்கும் இரண்டு மூன்று குடைவரைகளை அங்கே சிறிதுநேரம், இங்கே சிறிதுநேரம் என்று மிதிவண்டியில் அலைந்து பாதுகாப்பவர்களையும், யாராவது துறையின் அனுமதியோடு பார்வையிட வருகிறார்கள் என்று தெரிந்தபிறகே நினைவுச்சின்னத்துக்கு வருகை தருபவர்களையும் கண்டிருக்கிறோம். இப்படிப் பல நினைவுச்சின்னங்களை ஒருவரே பாதுகாக்கவேண்டிய நிலை, ஆள் பற்றாக்குறையினால்தான் என்று தொல்லியல் துறை அதிகாரிகளே வருந்திக் கூறியதையும் கேட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில், நினைவுச்சின்னப் பாதுகாப்பாளராகப் பணிபுரிய ஆவலாக உள்ள ஒருவரை, 'வடமொழி தெரியவில்லை' போன்ற அற்பக் காரணங்களால் நிராகரிப்பது நியாயம்தானா? ஒரு நினைவுச்சின்னக் காப்பாளருக்கு எதற்காக வடமொழி தெரிந்திருக்க வேண்டும்? வடமொழிக் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் கல்வெட்டாய்வாளர்களுக்கு வேண்டுமானால் இவ்விதி பொருந்தலாம். ஆனாலும் அவ்வடமொழிக் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய இந்துக்களை மட்டுமே நியமிக்கவேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

சமஸ்கிருதம் என்ன, யாராலுமே கற்றுக்கொள்ள இயலாத ஒரு மொழியா? அல்லது இந்துக்களைத் தவிரப் பிற மதத்தவர்கள் கற்றுக்கொள்ள ஏதாவது தடை இருக்கிறதா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 16ல் 1வது பிரிவு அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அரசுப்பணிகளில் சம உரிமையை உறுதியளித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு மட்டும் தனது பதவிகளுக்கு இப்படியொரு நிபந்தனையை விதிக்கும் உரிமை எங்கிருந்து கிடைத்தது என்று சாடியிருக்கிறது நீதித்துறை. அது மட்டுமின்றித் தன் கண்டனத்தைக் கீழ்க்கண்ட வாசகங்களால் பதிவு செய்துள்ளது.

"The authorities cannot make it appear that the department of archaeology is a wing of the Hindu Religious and Charitable Endowment (HR&CE) Board... There are other religions such as Buddhism, Jainism, Christianity and Islam, which also had their own sway over the political and geographical boundaries in the areas now known as Tamil Nadu. Therefore, when authorities called for applications for the posts of archaeologists or epigraphists, they ought not to have made blanket reservation in these posts for candidates belonging to Hindu religion alone."

இந்து சமய அறநிலையத்துறையின் பிரிவு போன்று தொல்லியல் துறை செயல்படாமல் இருக்க வேண்டுமானால், பிற மதங்களுடனும் சாதிகளுடனும் நல்லிணக்கமாகச் செயல்படும் பக்குவம் அத்துறையின் அதிகாரிகளுக்கு இருக்கவேண்டும். குறிப்பாக இத்தகைய பணியிடங்களை நிரப்பும் அதிகாரம் கொண்ட உயரதிகாரிகளுக்கு வேண்டும். தன் மதத்தின்மீதும் சாதியின்மீதும் பற்றுக் கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால் அப்பற்று பிறர் மீதான துவேஷமாக மாறக்கூடாது. இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். புத்தம், சமணம், கிறித்தவம், இசுலாமியம் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கும் சுதந்திர நாடு என்பதை மறந்து, 'இந்துக்களின் நாடு இந்தியா' என்ற கொள்கையை ஆதரிப்பதில் முன்னணியில் நிற்பவர்களாலும் மதத்தின் பெயரால், மதவழித் தேசியத்தின் அடிப்படையில் தனிநாடு வேண்டும் என்று கோருபவர்களாலும்தான் இவ்வாறு நல்லிணக்கமாகச் செயல்பட முடியாது. பிற மதத்தவரை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் வெறுப்பு கடுகளவேனும் அடிமனதில் குடிகொண்டிருக்கும். ஒரு மனிதன் தனது தனிப்பட்ட வாழ்வில் இத்தகைய கொள்கைகளைப் பின்பற்றுவது அவனுடைய உரிமை. ஆனால், அத்தனிமனிதன் அரசு அதிகாரியாக ஆகும்போது, அதுவும் பிற மதத்தவர்களும் அத்தனிமனிதனை வேலைக்கு அமர்த்தியிருக்கும் அரசாங்கத்தின் அங்கம் எனும்போது, தனது தனிப்பட்ட கொள்கைகளை விலக்கி வைப்பதே நேர்மையான அதிகாரிகளுக்கு அழகு. எப்படி ஒரு வரலாற்றாய்வாளர் தனது ஆய்வின் முடிவுரையை எழுதும்போது தனது மொழி, அரசியல், மதச்சார்புகள் அம்முடிவைப் பாதிக்கக்கூடாதோ, அவ்வாறே ஓர் அரசு அதிகாரியும் துறை சார்ந்த முடிவுகளை எடுக்கும்போதோ, அம்முடிவுகளைச் செயல்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கும் உத்தரவுகளிலோ தனது மொழி, அரசியல் மற்றும் மதச்சார்புகள் குறுக்கிடக்கூடாது. தொடர்புடைய அதிகாரிகள் புரிந்து நடந்தால் தமிழக வரலாறு வளம் பெறும்.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.