![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 79
![]() இதழ் 79 [ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2011 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
(சென்ற இதழின் தொடர்ச்சி) புதிய அறக்கட்டளை ஊரகப் பெருமாள் கோயிலில் இருந்து கச்சிப்பேட்டைச் சேர்ந்த நான்கு குடியிருப்பாளர்கள் 200 கழஞ்சு பொன்னை முதலாகப் பெற்றுக்கொண்டு அதனால் வரும் ஆண்டு வட்டி முப்பது கழஞ்சினால் கோயிலில் சித்திரைத் திருவிழா எடுக்க ஒப்புதலானது. இவ்விழா ஏழு நாட்கள் நிகழ்ந்தது.
இதன் வட்டிக்கான சித்திரைத் திருவிழாச் செலவினங்கள்
இந்தச் செலவினங்களை முடிக்கும் இடத்தில் 'ஆகப் பொன் நேர்' என்று குறிப்பதன் வழி, வட்டித் தொகையான முப்பது கழஞ்சும் பயன்படுத்தப்பட்டு வரவும் செலவும் நேராகிவிடுவது உணர்த்தப்படுகிறது. இந்தப் பகுதியிலுள்ள நான்கு செய்திகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. i) ஏற்கனவே கோயிலில் ஒன்பது இசைக் கலைஞர்கள் இருந்தபோதும் சித்திரை விழாவுக்கென்று சிறப்பு உவச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கென விழாச் செலவினத்தில் முன்கூட்டியே திட்டமிட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ii) சிவிகை, காவுதல் போன்ற அழகிய தமிழ்ச் சொற்களின் பயன்பாடு. பின்னாளில் பல்லக்காகிப் போன சிவிகை, இன்று முற்றிலுமாய் வழக்கொழிந்து போன சொல்லாகும். காவுதல், தோளில் கவ்விச் சுமத்தகைக் குறிக்கும்.12 அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் வரும் 'அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை' என்ற குறளுக்குப் பொருள் கூறும் இடத்தில் காவுதல் என்ற சொல்லைப் பரிமேலழகர் பெய்துள்ளார்.13 iii) 'கொட்டி செய்யும் தேவர் அடியர்க்குக் கொற்றுக்கும் பூசனைக்குமாக' என்னும் சொற்றொடருக்குப் பொருள் கூறுமிடத்தில், 'ஏழு நாட்களும் கூட்டமாக வந்து வழிபடும் அடியார்களுக்குரிய உணவிற்கும் பரிசுகளுக்குமாக' என்று விளக்கம் தருகிறார் திரு. எச். கிருஷ்ணசாஸ்திரி.14 கொற்று என்ற சொல் சிறப்பமைந்த, இறை வழிபாட்டையும் குறிப்பன. இந்நிலையில் இச்சொற்களுக்கு உணவு, பரிசுகள் என்று பொருள் தந்திருப்பது பொருத்தமாகத் தெரியவில்லை. சித்திரைத் திருவிழாவில் ஏழு நாட்களும் கூட்டமாக வந்து வழிபடும் திருமால் அடியவர்களுக்கு அவரவர் குழுக்களுக்கும், அக்குழுக்கள் செய்யும் வழிபாட்டிற்குமாய்ப் பொன் ஒதுக்கப்பட்டது என்பதே நேரிய பொருளாகும். இன்றைக்கும் பல பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி போன்ற பெருவிழாக்களின்போது, இதுபோன்ற மாலடியார் கூட்டங்கள் சிறுசிறு குழுக்களாகப் பல ஊர்களில் இருந்து, இசைக் கருவிகளுடன் சேர்ந்திசை பாடிவந்து, தங்கியிருந்து, வழிபட்டுச் செல்வதையும், அக்குழுவினர்க்கு ஊராரும் கோயிலாரும் உரிய மரியாதைகள் செய்வதும் கண்கூடாகும்.15 iv) கண்டழிவு என்ற சொல் பிற செலவுகள் (Miscellaneous) என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேசொல் செப்பேட்டின் மற்றோர் இடத்திலும் இதே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகோயிலுள் குறைவுள்ளன நிவந்தம் பாராதே கண்டழிவிலே செய்வதாகவும், கோயிற் செயற்பாடுகளில் அல்லது தேவைகளில் அறக்கட்டளை அமைப்புக்குள் வராது எதுவும் விடப்பட்டிருக்குமானால், அறக்கட்டளையில் சொல்லப்படவில்லையே என்றிருந்து விடாமல், அதைப் பிற செலவினங்களின்கீழ் செய்யலாம் என்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்றளவும் எதிலும் அடங்காத அல்லது பிடிபடாத செலவுகளைப் பிற செலவினங்கள் என்ற தலைப்பின்கீழ் தள்ளி விடுவது நடைமுறையாய் இருப்பதை நினைக்கையில், கண்டழிவையும், அதற்கெனச் செய்யப்பட்ட பொன் ஒதுக்கீட்டையும், அந்த முன்னோக்கு எண்ணத்தையும் போற்றாமல் இருக்க இயலவில்லை. சித்திரைத் திருவிழா செலவினங்களுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் பற்றிப் பேசி முடித்த நிலையில், கச்சிப்பேட்டைச் சேர்ந்த கம்புழான்பாடியாரும், அதிமானப் பாடியாரும், கஞ்சகப்பாடியாரும், ஏற்றுவழிச்சேரியாரும் அவ்விழாவில் விளக்குப் பிடித்தல், கொடி எடுத்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டுமெனக் கூறும் செப்பேடு அடுத்து, சோழா நியமம் என்னும் குடியிருப்பின் வரலாற்றை எடுத்து வைக்கிறது. சோழா நியமம் இக்குடியிருப்பின் பழங்குடிகள் தோளாச் செவியரான ஏலாக் கையர் என்று அழைக்கப்பட்டனர். பழைய வழக்கப்படி இவர்கள் வரிகள் செலுத்த வேண்டியதில்லை என்ற நிலைமை இருந்தது. இக்குடிகள் எண்ணிக்கையில் குறைந்த காரணத்தால் வெளியிடங்களில் இருந்து இக்குடியிருப்புக்கு வந்து குடியமர்ந்தவர்களும், பழைய வழக்கப்படி வரிகள் ஏதும் செலுத்த வேண்டாமென்று விலக்களிக்கப்பட்டது. அதற்கு மாறாக ஒவ்வொரு வீட்டிற்கும் திங்கள்தோறும் நாழி உழக்கு எண்ணெயும், இருநாழி அரிசியும் இக்கோயிலுக்கு இவர்கள் வரியாகச் செலுத்தவேண்டும். இந்த எண்ணெய் கோயிலில் சந்தி விளக்கெரிக்கப் பயன்படும். கச்சிப்பேட்டு நகரத்தார் தாம் விதித்திருக்கும் வேறெந்த வரிகளையும் இச்சோழா நியமத்தாரிடமிருந்து பெறக்கூடாது. மதுரையும் ஈழமும் கொண்ட பரகேசரியான முதலாம் பராந்தக சோழரின் பதினெட்டாம் ஆட்சியாண்டிலேயே நகரத்தாரால் திட்டம் செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டை மீறி இச்சோழா நியமத்தார் வேறு வரிகள் செலுத்தவேண்டுமென்று யாரேனும் சுட்டினால் அவர்கள் கங்கைக்கும் குமரிக்கும் இடையிலுள்ளார் செய்த பாவங்களையெல்லாம் கொள்வார் என்று செப்பேடு சாபமிடுகிறது. சோழா நியமத்துப் பழங்குடிகளின் பெயர்கள் கவனத்தைக் கவர்கின்றன. தோளாச் செவியர் - தோட்கப்படாத காதுகளை உடையவர்கள். ஏலாக்கையர் - எதையும் ஏற்காத கைகளை உடையவர்கள். இப்பெயர்களின் சிறப்பும், இக்குடிகளின் வரலாறும் ஆய்வுக்குரியன. அடிக்குறிப்புகள் 12. அறிஞர் வீ.ப.கா. சுந்தரனார் அஞ்சல் வழி தந்த விளக்கம். 13. திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், முதற்பகுதி, அறத்துப்பால், மதுரைப் பல்கலைக் கழக வெளியீடு, 1972, பக். 49. இத்தகவலைத் தந்தவர் புலவர் திரு. பி. தமிழகன். 14. SII vol III, Part III, P. 274. 15. 3-1-193 அன்று நடந்த வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின்போது தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கவரம் ரங்கநாதப் பெருமாள் குடைவரைக்கு ஆய்வுக்குச் சென்றிருந்தபோது இதுபோல் கோட்டி செய்யும் தேவரடியார் பலரை நேரில் கண்டு உரையாடியதில் பல பயனுள்ள தகவல்கள் கிடைத்தன. இதுபோல் ஒரு குழுவினர் மல்லைக்கு அருகிலுள்ள நென்மேலியிலிருந்து திருப்பதிக்குக் கால்நடையாகக் கோலாட்டம் ஆடியவாறே சென்றதையும் காண முடிந்தது. அவர்களிடமும் உரையாடித் தகவல் பெறப்பட்டது. (தொடரும்) [திருச்சிராப்பள்ளி டாக்டர். மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் வெளியிடும் வரலாறு ஆய்விதழ் -1 ல் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி] this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
||||||||||||||||||||||||||||||||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |