![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 90
![]() இதழ் 90 [ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2012 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சிங்காரச் சென்னையில் அமைந்திருக்கும் சுற்றுலா மையங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத்தை 'அதிசயம்' என்று வர்ணிக்கத்தான் ஆசை. ஆனால் அதிக எதிர்பார்ப்புகளுடன் சென்றிருந்ததாலோ என்னவோ, மனது நிறைவடையவில்லை. குடும்பத்தினரின் விருப்பத்தால் வள்ளுவர் கோட்டத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் அரைநாளைச் செலவழிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பொதுவாகக் கண்காட்சிகளுக்குச் சென்று துணிகள் வாங்குவதில் விருப்பம் இல்லையென்றாலும், அதிலும் பெண்கள் உடை வாங்கும்போது உடன் சென்று காத்திருக்கும் துன்பத்தைத் தவிர்க்க விரும்பினாலும், செல்லுமிடம் வள்ளுவர் கோட்டம் என்பதால் சம்மதித்தேன்.
இத்தனை ஆண்டுகள் சென்னையிலேயே இருந்துகொண்டு, ஒருநாளாவது இதைச் சென்று பார்க்க வேண்டும் என ஏன் தோன்றவில்லை? குறிப்பாகக் காரணம் ஏதும் இல்லை. வெளியூர்ப் பயணங்களை நண்பர்களுடன் திட்டமிட்டுப் பல இடங்களுக்குச் சென்று வந்தாலும், உள்ளூர்தானே, எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம்தான். இதுபோலத்தான் மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயிலும். ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்கு முன்னர் முனைவர் கலைக்கோவன் மற்றும் முனைவர் நளினி ஆகியோருடன் சென்று வந்ததுதான். அதன் பின்னர் ஓரிருமுறை குடும்பத்தினருடன் சென்றதெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதும் சரபர் வழிபாட்டு நேரமாதலால் உள்ளே சென்று ஆற அமரப் பார்க்கும் துணிவேற்படவில்லை. இந்த வரிசையில் எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் தக்ஷிணசித்ரா எனப் பல இடங்கள் அடங்கும். 1976ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது சிற்ப வல்லுனர் முனைவர் வை. கணபதி ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டது இந்நினைவுச் சின்னம். தரைத்தளத்தில் ஓர் அரங்கமும் அதன் பின்புறம் திருவாரூர்த் தேரை நினைவுபடுத்தும் விதத்தில் 133 அதிகாரங்களும் சுருக்கமாகச் சிற்பத்தில் வடிக்கப்பட்ட தேரும் இருக்கின்றன. தரைத்தளத்திலிருந்து தேருக்குள் சென்று பார்க்கலாம் என்று முயன்றபோது 'உள்ளே நுழைய அனுமதி இல்லை' என்ற பலகை சங்கிலியால் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. சற்று அண்ணாந்து பார்த்தபோது தேரின் மேற்றளமும் அரங்கத்தின் இரண்டாம் தளமும் இணைக்கப்பட்டிருப்பதும் அதில் சில தலைகளும் தெரிந்ததால், ஒருவேளை இரண்டாம் தளம் வாயிலாகத்தான் தேருக்குள் நுழையமுடியும் போலிருக்கிறது என்றெண்ணினேன். முதற்றளத்திலுள்ள குறள் மண்டபத்தில் இவ்வள்ளுவர் கோட்டம் தொடர்பான புகைப்படவரிசை இருக்கிறது என்று ஒரு நண்பர் மூலமாகக் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போது அத்தகைய புகைப்படங்களைக் காணமுடியவில்லை. சுவர்களில் கண்ணாடிகளுடன் கூடிய காலி மரச்சட்டங்களும் எதிர்ப்புறத்தில் கற்பலகைகளில் அதிகாரவாரியாக வெட்டப்பட்ட குறள்களும் மட்டுமே காணப்படுகின்றன. முதல் தளத்தைச் சுற்றி வந்தபிறகு இரண்டாம் தளத்தின் மீதேறித் தேரை அடைந்தபோதுதான் அங்கும் அதே பலகையின் படி ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. தேருக்குள் அனுமதி மறுக்கப்பட்டது ஏனென்று தெரியவில்லை. அங்கு நிலவிய சூழலை வைத்துக் காரணத்தை ஊகிக்க முயன்றபோது காதலர்களாக இருக்கலாம் என்று தோன்றியது. கொளுத்தும் வெயிலில் மெரினா கடற்கரையாக இருந்தால் என்ன? வள்ளுவர் கோட்டத்தின் மொட்டைமாடியாக இருந்தால் என்ன? முக்காடு இருந்தால் போதும் என்ற வண்ணம் இருந்தார்கள். தேருக்குள் அமர்ந்திருந்த திருவள்ளுவரை அருகில் சென்று பார்க்க முடியாமையால் என்னைவிடச் சிபிக்குத்தான் ஏமாற்றமாக இருந்தது. தேரைச் சுற்றிலும் ஒவ்வொரு அதிகாரத்தையும் சுருக்கமாக ஒவ்வொரு சிற்பமாக வடித்திருந்தார்கள். மேலிருந்து பார்த்தபோது கயமை, இரவுஅச்சம், இரவு ஆகிய அதிகாரங்களின் சிற்பங்கள் தெரிந்தன. அவ்வதிகாரங்களின் குறள்கள் இன்னின்னவென்று தெரியாததால் அச்சிற்பங்கள் என்ன சொல்ல வருகின்றன என்பதை அறியமுடியவில்லை. அடுத்தமுறை திருக்குறள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்ப் பார்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். தரைத்தளம் ஒரு துணிக் கண்காட்சிக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஓர் இலக்கிய நினைவுச் சின்னத்தின் உள்ளரங்கத்தை இப்படிப்பட்ட கண்காட்சிகளுக்குப் பயன்படுத்துவது சரியா? அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமணம் முதலான விருந்து நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்திருப்பதைப் போன்று இங்கும் செய்தால் என்ன? இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி என்று விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டாமா? என்று மனம் பலவாறு எண்ணியது. பிறகு வளாகத்தை ஒருமுறை சுற்றி வந்தபோதுதான், வள்ளுவருக்காக வருபவர்களைக் காட்டிலும், அங்கு நடக்கும் கண்காட்சி முதலான நிகழ்ச்சிகளுக்கு வரும் பார்வையாளர்கள்தான் அதிகம் என்ற உண்மை புரிந்தது. இலக்கிய நிகழ்ச்சிகள் சென்னையில் தொடர்ந்து நடைபெறுவதில்லை. அப்படியே நடந்தாலும் குளிரூட்டப்பட்ட அரங்குகளையே விரும்புகிறார்கள். இந்த நிலையில், இதுபோன்ற கண்காட்சிகளுக்கும் வாடகைக்கு விடவில்லை என்றால், மக்கள் வரத்தே இல்லாமல் பாழடைந்து போக வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் ஓர் இடத்திற்குத் தமிழில் பெயர் சூட்டப்பட்டு, பல ஆண்டுக்கால மொழிச்சீரழிவிற்குப் பிறகும் இன்றும் அதே தமிழ்ப் பெயரால் அழைக்கப்படும் மிகச்சில இடங்களுள் வள்ளுவர் கோட்டமும் ஒன்று. ஆங்கிலம் விரும்பிகளான சென்னைவாசிகளுக்கு வள்ளுவரின் பெயர் அவ்வளவாகத் தொந்தரவு தரவில்லை போலும். பெரும்பாலானவர்களின் நாக்கில் 'வள்ளுவர்' என்பது 'வல்லுவர்' என்று ஆனாலும், இந்நினைவுச் சின்னம் நிலைத்து நின்று தமிழொளி பரப்புவதற்காகக் கண்காட்சி போன்ற சிறுசிறு சமரசங்கள் தேவை என்றுதான் தோன்றுகிறது. கண்காட்சிக்காக வரும் ஒரு சிலரேனும் அந்தக் கொஞ்ச நேரத்திலாவது வள்ளுவரைப் பற்றி நினைப்பார்கள் அல்லவா? வேறென்ன சொல்ல? ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |