http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 90

இதழ் 90
[ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

திரும்பிப்பார்க்கிறோம் - 37
திருமங்கலம் விக்கிரம சோழீசுவரம்
Poovalaikkudi Pushpavaneswara
ஆவூர் மாடக்கோயில்
Chola Ramayana 01
36 ஆண்டுக்கால அதிசயம்
இதழ் எண். 90 > கலையும் ஆய்வும்

கும்பகோணம் வட்டம் பட்டீசுவரத்திற்கு அருகே திருமேற்றளியை அடுத்துள்ளது ஆவூர். சம்பந்தரின் பதிகம் பெற்ற1 இவ்வூர்ப் பசுபதீசுவரர் கோயில் மாடக்கோயிலாகும்.2 வளாக வாயிலிலுள்ள ஐந்து தளக் கோபுரத்தின் கருங்கல்லால் ஆன கீழ்த்தளம் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நாகபந்தப் பாதம் பெற்ற எண்முக அரைத் தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் உத்திரம், கிழக்கில் வெறுமையாகவும் பிற திசைகளில் பூதவரி பெற்றுத் திகழும் வலபி, கந்தர்வத்தலைகள் பெற்ற கூடுகளுடனான கபோதம் இவற்றுடன் விளங்குகிறது. மேற்றளங்களும் கிரீவம், சிகரம் இவையும் செங்கல் கட்டுமானங்கள். சுதை உருவங்கள் கீழ்த்தள ஆரத்தின் கிழக்கு முகத்தில் மட்டுமே காணப்படுகின்றன. கோபுரத்தின் இருபுறத்தும் வளரும் மதில் சூழ் வளாகத்தின் கிழக்குப் பகுதியில் பிள்ளையார், பலித்தளம், நந்தி, கொடிமரம் இவை அமைந்துள்ளன.வளாக மண்டபம்

வளாகத்தின் வடகிழக்கில் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் வெறுமையான கூரையுறுப்புகள், கபோதம் கொண்டமைந்த மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. அதன் சுவர்களில் மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டப்பஞ்சரங்கள் மேற்கில் ஆறும் வடக்கில் நான்கும் கிழக்கில் ஆறும் என அமைய, பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற ஆழமான கோட்டங்கள் முத்திசைகளிலும் திசைக்கு ஒன்றாய் உள்ளன.

சுற்றுத் திருமுன்கள்

வளாகத்தின் மேற்கில் தென்பகுதியில் ஒருதள வேசர விமானத்தில் நிருதி விநாயகரும் இடைப்பகுதியில் ஒருதள வேசர விமானத்தில் தனுஷ் சுப்பிரமணியரும் வடபகுதியில் ஒருதள நாகர விமானத்தில் யானைத்திருமகளும் இடம்பெற்றுள்ளனர். இலலிதாசனத்தில் உள்ள மகுடமற்ற சிதைந்த இடம்புரி நிருதி விநாயகரின் முன்கைகளில் வலப்புறம் தந்தம், இடப்புறம் மோதகம். பின்கைக் கருவிகள் சிதைந்துள்ளன.

முன்கைகளில் அம்பும் வில்லும் கொண்டு பின்கைகளில் வஜ்ரம், சக்தி இவற்றுடன் காட்சிதரும் சுப்பிரமணியரின் தலையில் கரண்டமகுடம். பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், புலிமுகக் கச்சுடனான சிற்றாடை அணிந்துள்ள அவரின் இருபுறத்துள்ள தெய்வானை, வள்ளி இவர்தம் வெளிக்கைகள் நெகிழ, உள்கைகளில் மலர். தேவியர் இருவரும் சடைமகுடம், ஸ்வர்ணவைகாக்ஷம், பட்டாடை அணிந்துள்ளனர். சுப்பிரமணியர் கோயில் முகமண்டபத்தில், 'ஸ்ரீமுத்திரண்டர்' என்ற பெயருடன் சண்டேசுவரர் அமர்த்தப்பட்டுள்ளார். சடைமகுடம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம் இவற்றுடன் சுகாசனத்தில் உள்ள அவரது வலக்கையில் மழு. இடக்கை தொடைமீது உள்ளது.

வெற்றுத்தளம்

வளாகத்தின் நடுவில் 4. 65 மீ. உயர வெற்றுத்தளமும் அதன் மேலிருக்குமாறு இறைவன், இறைவி விமானங்களும் அவற்றின் முன் அமைந்த மண்டபங்களும் சுற்றும் காட்சிதருகின்றன. முன்மண்டப வெற்றுத்தளம் கண்டம், கபோதம், பூமிதேசம் எனும் தாங்குதள உறுப்புகளும் வெதிகைத்தொகுதியும் நாக பந்தப் பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவரும் பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் உத்திரம், வாஜனம், பூதவரி பெற்ற வலபி, கபோதம் இவையும் கொண்டு விளங்குகிறது. இவ்வெற்றுத்தளத்தின் கிழக்குமுகத்தில் உள்ள மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டப்பஞ்சரம் வெறுமையாக உள்ளது.வெற்றுத்தளத்தின் தெற்கில் காணப்படும் 23 படிகள் கீழ்ப்பகுதியில் துளைக்கைப் பிடிச்சுவரும் மேற்பகுதியில் பட்டையான பிடிச்சுவரும் கொண்டுள்ளன. மேற்பிடிச்சுவரின் இறுதிப்பகுதியில் சங்க, பத்ம நிதிகள் இடம்பெற்றுள்ளன. படிகள் முடியும் இடத்திற்குச் சற்று முன்பாகத் தென்புறம் விரியும் தளம் சோமாஸ்கந்தர் விமானம், முகமண்டபம் இவற்றிற்கான வழியாக உள்ளது.

படிகளின் முடிவில் உள்ள முன்மண்டபம் வடக்கில் ஆடவல்லானுக்கான ஒருதள நாகரத் திருமுன்னும் வடக்குச் சுற்றுக்கான வாயிலும் பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் புறச்சுவர் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், எளிய நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்ற செங்கல் கட்டுமானமாய் உள்ளது. அதன் கிழக்குச் சுவரில் பெருஞ்சாளரம் ஒன்றும் குறுஞ்சாளரங்கள் மூன்றும் காட்டப்பட்டுள்ளன.

சோமாஸ்கந்தர் விமான வெற்றுத்தளம்

உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், எளிய நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள், உத்திரம், தாமரை வலபி, கபோதம் பெற்றுக் கருங்கல் கட்டுமானமாய் அமைந்துள்ள இவ்வெற்றுத்தளத்தின் மேலெ செங்கல் கட்டுமானமாய்ப் பிடிச்சுவர் உள்ளது. வெற்றுத்தளத்தின் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. சோமாஸ்கந்தர் விமான வெற்றுத்தளம் மேற்குப் பகுதியில் இறைவன் விமானத்திற்கான வெற்றுத்தளத்துடன் ஒன்றுமிடத்து, செங்கல் கட்டுமானமாய் மூன்று இடைவழிகளுடன் வளைவுத் தலைப்புப் பெற்ற மாளிகையொன்று காட்டப்பட்டுள்ளது. மூன்று இலிங்கத்திருமேனிகளைக் கொண்டுள்ள அதன் தாங்குதளமும் கூரையும் உறுப்பு வேறுபாடற்ற நிலையில் அமைந்துள்ளன.சோமாஸ்கந்தர் விமானத்திற்கு அழைத்துச் செல்லும் தெற்குத் தளத்தின் முதற் பகுதியைத் தாங்கும் வெற்றுத்தளம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, பாதம் பெற்ற உயரமான எண்முக அரைத்தூண்கள் பெற்றுப் போதிகைகளோ, உத்திரம் தவிர்த்த கூரையுறுப்புகளோ இன்றிப் பிடிச்சுவர் தாங்குகிறது. இவ்வெற்றுத்தளத்தின் கிழக்கு முகத்தில் அமைந்துள்ள மகரதோரணத்தில் ஊர்த்வஜாநு கரணப் பிள்ளையார் காணப்படுகிறார். இடமுழங்கால் உயர்த்தப்பட்டுள்ளது. வல முன் கை தந்தம் கொள்ள, பின்கையில் அங்குசம். இட முன் கை அர்த்தரேசிதத்தில் அமைய, பின்கையில் பாசம். இடம்புரித் துளைக்கை இடக்கை மோதகத்தைச் சுவைக்கிறது. பிள்ளையாரின் இருபுறத்தும் மேலிருக்குமாறு கவரிகள் உள்ளன. தெற்குத் தளத்தின் இரண்டாம் பகுதியைத் தாங்கும் வெற்றுத்தளம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நெடுஞ்சுவர், கூரையுறுப்புகள் பெற்று, மேலே பிடிச்சுவரும் கொண்டுள்ளது.

சோமாஸ்கந்தர் விமானம், முகமண்டபம்

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர் வெட்டுத் தரங்கப் போதிகைகள், மதலை வலபி, கபோதம் பெற்றுள்ள சோமாஸ்கந்தர் விமானத்தின் சாலைப்பத்திகள் புறந்தள்ளியுள்ளன. முப்புறத்தும் உள்ள கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. இருதள வேசரமாய் அமைந்துள்ள அதன் கிரீவகோட்டங்களில் கிழக்கில் மட்டும் முருகன் தேவியருடன் காட்சிதருகிறார். இவ்விமானம் இறைவன் விமானத்திலிருந்து பிடிச்சுவரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. விமானக் கட்டமைப்பிலுள்ள முகமண்டபத்தில் சாலைப் புறந்தள்ளலோ, கோட்டங்களோ இல்லை.

இறைவன் விமான வெற்றுத்தளம்

இறைவன் விமானம், முகமண்டபம் இவற்றைத் தாங்கும் வெற்றுத்தளம் கபோதபந்தத் தாங்குதளம், நாகபந்தப் பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள், தாமரை வலபி, கபோதம், பூமிதேசம் கொண்டு அமைந்துள்ளது. மேலே பிடிச்சுவர். விமானத்திற்கான பகுதியில் சுவரின் முப்புறத்தும் உருளை அரைத்தூண்களின் அணைப்பில் கோட்டங்கள் உள்ளன. வடக்கு, மேற்குக் கோட்டங்கள் வெறுமையாக அமைய, மண்டப முகப்புப் பெற்றுள்ள தெற்குக் கோட்டத்தில் சோழர் காலச் சிற்பமாக ஆலமர் அண்ணல் இடம்பெற்றுள்ளார். சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், உருத்திராக்கமாலை, தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை, வீரக்கழல் இவற்றுடன் வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் வலப்புறம் அக்கமாலை, பாம்பு. இடப்புறம் தீச்சுடர். வல முன் கை சின்முத்திரையில் அமைய, இட முன் கையில் சுவடி.

மேற்குக் கோட்டம் வெறுமையாக இருந்தபோதும், கோட்டத்தின் இருபுறத்தும் உள்ள சுவரில் விஷ்ணுவும் நான்முகனும் வணக்கமுத்திரையில் காணப்படுவதால் அக்கோட்டத்தில் இலிங்கோத்பவர் இடம்பெற்றிருந்ததாகக் கொள்ளலாம். முகமண்டபத்திற்கான வெற்றுத்தளப் பகுதியில் தென்புறம் கோட்டம் இல்லை. வடக்குக் கோட்டம் வெறுமையாக உள்ளது. வெற்றுத்தளத்தின் மேல் வளரும் பிடிச்சுவர் வடபுறத்தே முகமண்டபத்துடன் முடிகிறது. அதையடுத்து மேற்பகுதியில் பெருமண்டபமும் கீழ்ப்பகுதியில் பெருமண்டபம் தாங்கும் வெற்றுத்தளமும் தொடர்கின்றன.

பெருமண்டப வெற்றுத்தளம்

இறைவன் விமான வெற்றுத்தள அமைப்பிலேயே பெருமண்டப வெற்றுத்தளமும் அமைந்துள்ளது. சுவரில் மகரதோரணத் தலைப்பிட்ட நான்கு கோட்டங்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு வெறுமையாக உள்ளன. மண்டபம் பெற்றுள்ள முதற் கோட்டத்தில் மகிடாசுரமர்த்தனியும் அடுத்துள்ள சிறிய மண்டபக் கோட்டத்தில் கொற்றவையும் இடம்பெற்றுள்ளனர். மகிடத்தலை மீது நிற்கும் மர்த்தனி பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டு கரண்டமகுடம், மகர, பனை யோலைக் குண்டலங்கள், சரப்பளி, ஸ்வர்ணவைகாக்ஷம், பட்டாடை அணிந்தவராய் வல முன் கையில் காக்கும் குறிப்புக் காட்டுகிறார். இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. அதே அமைப்பில் உள்ள கொற்றவை மர்த்தனிக்குச் சற்றுக் காலத்தால் முற்பட்டவர். வடக்கு வளாகத்தில் தனித் திருமேனியாக மரத்தடியில் இருத்தப்பட்டுள்ள அழகிய கொற்றவைச் சிற்பமும் சிறு கோட்டக் கொற்றவையை ஒத்துள்ளது.

பெருமண்டபம்

பெருமண்டபத்தின் புறச்சுவர் வடபுறத்தே உறுப்பு வெறுபாடற்ற தாங்குதளம், வெதிகைத்தொகுதி, நாகபந்தப் பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள், வெறுமையான வலபி, கபோதம் பெற்றுச் சுவர்ப்பகுதியில் ஆறு கோட்டப் பஞ்சரங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்று சாளரமாக்கப்பட்டுள்ளது. தென்புறத்தில் தாங்குதளம் இடம்பெறவில்லை. ஏனைய அனைத்தும் வடபுறம் போலவே அமைந்துள்ளன. சுவர்ப்பகுதியில் உள்ள ஐந்து கோட்டப் பஞ்சரங்களும் வெறுமையாக உள்ளன.

அம்மன் கோயில் வெற்றுத்தளம்

தாங்குதளமோ, தூண்களோ அற்ற நெடுஞ்சுவர், கூரையுறுப்புகள் பெற்று விளங்கும் வெற்றுத்தளம் அம்மன் விமானங்களையும் ஆடவல்லான் விமானத்தையும் தாங்குகிறது. அதன் மீது பிடிச்சுவர். வெற்றுத்தளத்தின் வடகிழக்குப் பகுதியில் வளரும் படிவரிசை மேற்றளத்திற்கு அழைத்துச் செல்கிறது. இப்படிவரிசை வடகிழக்கு வளாகப் பெருமண்டபத்தை ஒட்டி அமைந்துள்ளது.

முன்மண்டபம்

தெற்கு, வடக்கு இருபுறத்திருந்தும் வளரும் படிகள் முன்மண்டபத்தை அடைகின்றன. இம்மண்டபத்தின் வடக்கில் ஒரு தள நாகர விமானமாக ஆடவல்லான் திருமுன் அமைந்துள்ளது. திருமுன் நுழைவாயிலின் இருபுறத்தும் வண்ணம் பெற்ற சுதைவடிவங்களாகக் காவலர்கள் காட்சிதருகின்றனர். வாயிலின் மேலே விரியும் சாலையில் ஆடவல்லான் சிற்பம் உள்ளது. முன்னுள்ள முன்றில் தூண்களின் மேற்சதுரத்தில் முருகனும் விநாயகரும் இடம்பெற்றுள்ளனர். முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்கும் இம்மண்டபத்தின் மேற்கில் இடைமண்டபம் அமைந்துள்ளது.

இடைமண்டபம்

உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், எளிய நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெறுமையான கூரையுறுப்புகள் கொண்டுள்ள இடைமண்டபத்தின் வடசுவர் ஆடவல்லான் திருமுன்னுக்கும் அம்மன் விமானங்களுக்கும் இடைப்பட்டுக் காட்சியளிக்கிறது. தென்சுவர் நெடுஞ்சுவராக வெறுமையான கூரையுறுப்புகளுடன் அமைந்துள்ளது. இச்சுவரின் தென்மேற்கில் பெருவாயிலும் தென்கிழக்கில் சாளரம் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகளுடன் கூரை தாங்கும் இம்மண்டபத்தின் வடபுறத்தே மங்களாம்பிகை, பங்கஜவல்லித் திருமுன்கள் சிறு முகமண்டபத்துடன் அமைந்துள்ளன. இரண்டு திருமுன்களுக்கும் தனித்தனியே நந்தி காட்டப்பட்டுள்ளது. தூண்களின் சதுரங்கள் சில தாமரைப் பதக்கம் பெற்றுள்ளன.

அம்மன் விமானங்கள்

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நாகபந்தப் பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு ஒருதள வேசரமாய் அமைந்துள்ள இரண்டு அம்மன் விமானங்களும் இடைவெளியின்றி இணைந்துள்ளன. அவற்றின் சுவர்க் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. இரண்டு இறைவியருள் சடைமகுடரான மங்களாம்பிகை பின்கைகளில் அக்கமாலை, மலர் கொண்டுள்ளார். முன்கைகள் காக்கும் குறிப்பிலும் கடிய வலம்பிதத்திலும் உள்ளன. கரண்டமகுடம் அணிந்துள்ள பங்கஜவல்லியின் கைகளும் மங்களாம்பிகையை ஒத்துள்ளன. இவ்விரு திருமுன்களையும் அடுத்துத் தனித்த நிலையில் சுகாசனத்திலுள்ள இறைவியின் வலக்கையில் மலர். இடக்கை கடகத்திலுள்ளது.

பெருமண்டபம்

முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்கும் பெருமண்டபத்தின் மேற்கில் முகமண்டபமும் இறைவன் விமானமும் அமைந்துள்ளன. முகமண்டபத்தின் இருபுறத்தும் உள்ள திறப்புகள் விமானச் சுற்றுக்கு வழி தருகின்றன. பலித்தளமும் நந்தியும் பெற்றுள்ள இம்மண்டபத்தின் தென்கிழக்கு மேடையில் ஐந்து பைரவர் சிற்பங்கள் உள்ளன. சுவரில் காணப்படும் இலிங்க வழிபாட்டுச் சிற்பத்தில் சடைமகுடம், தாடி, மீசை பெற்றுள்ள பெரியவர் வழிபாட்டில் உள்ளார். அவருக்கும் இலிங்கத்திருமேனிக்கும் இடையில் தூபக்கலசம், வஜ்ரமணி, சங்கு இவை உள்ளன. இலிங்கபாணத்தின் மேல் பூச்சரம் அமைய, பெரியவரின் பின் கைக்கட்டிய நிலையில் ஆடவர் ஒருவரைக் காணமுடிகிறது. தனிச் சிற்பமாய் முனிவர் ஒருவர் வணக்கமுத்திரையில் உள்ளார். ஒளிவட்டம், கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை இவற்றுடன் சந்திரனைக் காணமுடிகிறது.

மண்டபத்தின் தென்புறத்தே எழுவர் அன்னையர் கச்சு அணிந்து சுகாசனத்தில் உள்ளனர். அவர்தம் வல முன் கை காக்கும் குறிப்பில் உள்ளது. பிராமி, கெளமாரி, வைணவி, வராகி, இந்திராணி ஆகிய ஐவரின் இட முன் கை கடகத்தில் அமைய, சாமுண்டியும் மகேசுவரியும் முழங்கால்மீது இருத்தியுள்ளனர். சடைமகுடம், சரப்பளி பெற்றுள்ள பிராமியின் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை. மகேசுவரியின் பின்கைகளில் முத்தலை ஈட்டியும் பாசமும் உள்ளன. பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி அணிந்துள்ள கெளமாரியின் பின்கைகளில் சக்தி, வஜ்ரம். வைணவியும் வராகியும் சங்கு, சக்கரம் கொண்டுள்ளனர். இந்திராணியின் வலப் பின் கையில் அங்குசம். இடப் பின் கைக் கருவியை அடையாளப்படுத்தமுடியவில்லை. சரப்பளி, மண்டையோட்டு முப்புரிநூல், தோள், கை வளைகள், வலச்செவியில் பனையோலைக் குண்டலம், இடச்செவியில் பிணக்குண்டலம் அணிந்துள்ள சாமுண்டியின் பின்கைக் கருவிகளையும் அடையாளப்படுத்தக்கூடவில்லை.

இறைவன் விமானம்

துணைஉபானம், தாமரை உபானம், பிரதிபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நாகபந்தப் பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள், தாமரை வலபி, கூடுவளைவுகளுடனான கபோதம் பெற்றுச் சாலைப் புறந்தள்ளலுடன் விளங்கும் விமானக் கீழ்த்தளம் 5. 75 மீ. பக்கமுடையது. இருதள வேசரமாக விளங்கும் விமானத்தின் மேற்றளமும் மேலுள்ள கர்ணகூடங்களும் கிரீவம், சிகரம் இவையும் செங்கல் கட்டுமானமாக உள்ளன. இரண்டாம் தளத்தின் சுவர்கள் சுதையுருவங்களால் நிரப்பப்பட்டுள்ளன. உருளை அரைத்தூண்கள் அணைத்துள்ள மகரதோரணத் தலைப்பிட்ட சுவர்க் கோட்டங்களில் மேற்கில் இலிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் இடம்பெற்றுள்ளனர். தெற்குக் கோட்டம் வெறுமையாக உள்ளது.

சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், புலிமுகக் கச்சு இருத்தும் சிற்றாடை அணிந்துள்ள இலிங்கோத்பவரின் பின்கைகளில் மழு, மான். முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை கடியவலம்பிதமாக உள்ளது. சடைமகுடம், பூட்டுக் குண்டலங்கள், இடைக்கட்டுடனான பட்டாடை, புலிமுகக் கச்சு அணிந்து பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் ஏந்தியுள்ள நான்முகனின் வல முன் கை காக்கும் குறிப்பில் அமைய, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது.

இரண்டாம் தளச் சாலைக் கோட்டங்களில் தென்புறத்தே வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் மேற்கில் சுகாசனத்தில் தேவியருடன் விஷ்ணுவும் வடக்கில் தேவியருடன் நின்றகோலத்தில் நான்முகனும் இடம்பெற்றுள்ளனர். கிரீவ கோட்டங்களில் தெற்கில் இயமனும் மேற்கில் தேவியருடன் உத்குடியில் விஷ்ணுவும் வடக்கில் தேவியருடன் நின்றகோலத்தில் நான்முகனும் கிழக்கில் உமையுடன் சுகாசனத்தில் சிவபெருமானும் இடம்பெற்றுள்ளனர்.

விமானக் கட்டமைப்பிலுள்ள முகமண்டபத்தில் சாலைப் புறந்தள்ளல் இல்லை. கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. முகமண்டபத்தின் வடசுற்றிலுள்ள ஒருதள நாகர விமானத்தில் சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சிற்றாடை அணிந்து சுகாசனத்திலுள்ள சண்டேசுவரரின் வலக்கையில் மழு. இடக்கை தொடைமீதுள்ளது. முகமண்டபத்தின் வாயிலைக் காக்கும் காவலர்கள் பின்கைகளைப் போற்றி முத்திரையிலும் முன்கைகளுள் ஒன்றை எச்சரிக்கை முத்திரையிலும் கொண்டுள்ளனர். தெற்கர் உருள்பெருந்தடி கொள்ள, வடக்கர் மழு பெற்றுள்ளார்.

வாயிலின் தென்புறத்தே காவலரை அடுத்துள்ள ஆடல் விநாயகர் இடக்காலை ஊன்றி வலக்காலை அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்தியுள்ளார். முன்கைகளில் வலப்புறம் தந்தம். இடப்புறம் மோதகம். பின்கைகளில் வலக்கையில் அங்குசம். அர்த்தரேசிதத்தில் உள்ள இடக்கை பாசத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி உள்ளது. கரண்டமகுடம், அலங்கார உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்துள்ள அவரது இடம்புரித் துளைக்கை இடக்கை மோதகத்தைச் சுவைக்கிறது.

கருவறையில் இறைவன் சதுர ஆவுடையாரும் உருளைப் பாணமுமாய்ப் பசுபதீசுவரர் என்ற திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார்.

கல்வெட்டு

இங்கிருந்து படியெடுக்கப்பட்டிருக்கும் மூன்றாம் இராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கோயில் நிலங்களின் பட்டியலைத் தருவதுடன், ஆவூர் நித்தவிநோத வளநாட்டின் கீழிருந்த ஆவூர்க் கூற்றத்தின் கீழ் இயங்கிய தகவலையும் முன்வைக்கிறது.3

குறிப்புகள்

1. சம்பந்தர் 1 : 8. பத்திமைக் கால மகளிரின் சொல் ஆற்றலையும் கவிபாடும் திறத்தையும் இப்பதிகத்தின் வழி சம்பந்தர் எடுத்துரைத்திருக்கும் பாங்கு சிறப்பிற்குரியது.

2. ஆய்வு நாட்கள்: 1. 4. 1983, 27. 1. 2001, 3. 4. 2010. இக்கோயில் பற்றிய முதல் கட்டுரை 1999ம் ஆண்டு அமுதசுரபி தீபாவளி மலரில், 'ஆவூர்ப் பழம்பதி' என்ற தலைப்பில் வெளியானது.

3. இ. க. அ. 1911 : 81.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.