http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 90

இதழ் 90
[ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

திரும்பிப்பார்க்கிறோம் - 37
திருமங்கலம் விக்கிரம சோழீசுவரம்
Poovalaikkudi Pushpavaneswara
ஆவூர் மாடக்கோயில்
Chola Ramayana 01
36 ஆண்டுக்கால அதிசயம்
இதழ் எண். 90 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப்பார்க்கிறோம் - 37
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி,

கமல், ராம், கோகுல் கைவண்ணம் இல்லாமல் வெளியான சென்ற இதழ் எனக்குச் சுவைக்கவில்லை. துடிப்பான, அந்த ஆற்றல் மிகு இளைஞர்களின் எண்ண ஓட்டங்களைக் கண்ணுறாமை குறையாகவே இருந்ததென்றாலும் சுமிதாவின் கட்டுரைகள் சற்றெ அந்தக் குறையை ஈடு செய்ததெனலாம். எத்தகு பணிச் சூழல் இருந்தாலும் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட வரலாற்றிற்கு நாளும் சில நிமிடங்களையாவது என் இனிய இளவல்கள் ஒதுக்கித் தந்தால் தமிழ்நாட்டின் வரலாறு வெளிச்சமுறும்.

சென்ற மடலில் சித்ரமேழிப் பெரியநாட்டார் கல்வெட்டைக் கண்டறிந்த செய்தியுடன் முடித்திருந்தேன். 1990 நவம்பர்த் திங்கள் 3, 4ம் நாட்களில் மூன்றாவது களப் பயணமாகப் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டக் கோயில்களைப் பார்வையிடுவதெனத் தீர்மானித்தோம். இந்தியத் தொல்லியல்துறையின் புதுக்கோட்டை மாவட்டப் பராமரிப்பு அலுவலர் திரு. வாசுதேவன், புதுக்கோட்டை அருங்காட்சியகக் காப்பாட்சியர் திரு. ஜெ. ராஜாமுகமது, வணக்கத்திற்குரிய அடிகளார் பெருந்தகை இவர்கள் மூவருக்கும் அவர்தம் ஆளுகையில் இருந்த நிறுவனங்களைப் பார்வையிட்டுப் பயிற்சி பெறப் பட்டயக்கல்வி மாணவர்கள் வரவிருப்பது குறித்துத் தகவல் தந்தேன். மாணவர்கள் நிறுவனங்களுக்கு வரும்போது வாய்ப்பமையின் நேர்முகம் வழங்கி அவர்களை ஆற்றுப்படுத்துமாறும் கேட்டிருந்தேன்.

3. 11. 1990 காலை எட்டு மாணவர்களுடன் எங்கள் பயணம் தொடங்கியது. பேராசிரியர் திருமாறனின் மகள் தென்றலும் ஆறுமுகத்தின் மகள் ஆனந்தவல்லியும் உடன் வந்தனர். வழக்கம் போல் ஆறுமுகமும் கலந்துகொண்டார். எங்கள் முதல் நிறுத்தமாக திருமெய்யம் குடைவரைக் கோயில்கள் அமைந்தன. ஏற்கனவே குடைவரைக் கோயில்களைப் பார்த்த அனுபவம் மாணவர்களுக்கு இருந்தமையால் மெய்யம் கோயில்களை மிக எளிதாக அவர்களால் விளங்கிக்கொள்ள முடிந்தது. காலைச் சிற்றுண்டி முடிந்ததும் 11 மணியளவில் பூலாங்குறிச்சிக்குப் பயணமானோம். அவ்வூர்ப் பாறையின் சரிவில் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டுகளை நளினியின் வழிகாட்டலில் மாணவர்கள் படிக்க முயன்றனர். அதுநாள்வரை அக்கல்வெட்டை நானும் பார்த்திராததால் மாணவர்களுடன் மாணவனாக அக்கல்வெட்டைப் படிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இரண்டு கல்வெட்டுகள் இருப்பதை மட்டுமே அப்போது எங்களால் அறியமுடிந்தது. ஆனால், மூன்று கல்வெட்டுகள் வெட்டப்பட்டிருந்தமை பின்னாளில் ஆவணம் இதழில் வெளியான பேராசிரியர் சுப்பராயலுவின் கட்டுரையைப் படித்த பிறகே தெரியவந்தது.







சரிவு வழுக்கலாக இருந்தமையால் படிப்பதற்குப் பெரிதும் சிரமப்பட்டோம். இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக முயன்றதில் சில வரிகளையே படியெடுக்க முடிந்தது. மதிய உணவு பிள்ளையார்பட்டியில் ஏற்பாடாகியிருந்தது. அங்கிருந்த கோயில் சார்ந்த உணவுக்கூடத்தில் குன்றக்குடித் திருமடத்தின் ஆதரவில் உணவு முடிந்ததும் பிள்ளையார்பட்டிக் குடைவரையையும் கோயிலையும் பார்த்துவிட்டுக் குன்றக்குடி சென்றொம். அங்கு முருகன் கோயிலையும் மலை மேலிருந்த பழந்தமிழ்க் கல்வெட்டையும் குடைவரைகளையும் பார்வையிட்ட பிறகு தவத்திரு அடிகளாருடன் கலந்துரையாடும் பேறு பெற்றோம். திருப்புத்தூரில் இரவு உணவிற்கும் தங்குவதற்கும் ஏற்பாடாகியிருந்தது.

நவம்பர் நான்காம் நாள் திருப்புத்தூர்த் திருக்கோயிலை ஆய்வு செய்தோம். எங்களால் புதிதாகக் கண்டறியப்பட்டிருந்த கல்வெட்டுகளின் பாடங்களை மாணவர்கள் சரிபார்த்தனர். முற்பாண்டியர் காலச் செப்புத்திருமேனிகளையும் கிரந்த, தமிழ்க் கல்வெட்டுகளையும் விமானத்தின் கட்டுமானத்தையும் விரிவான அளவில் ஆராய்ந்து முற்பாண்டியர் கலைமுறை, சமூகம் பற்றிய தெளிவை அவர்களால் பெறமுடிந்தது. மதிய உணவு கோயில் வளாகத்திலெயே அளிக்கப்பட்டது. கோயில் நிருவாகத்தினருக்கும் அலுவலர்களுக்கும் நன்றி கூறி விடை பெற்றோம். இந்தப் பயணத்தின்போது பாண்டியர் பகுதிக் குடைவரைகளையும் கற்றளிகளையும் கல்வெட்டுகளையும் பலவகையான சிற்பங்களையும் காணும் பேறு வாய்த்தமைக்காக மாணவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்புத்தூர் ஆய்வுகளுக்கு இசைவளித்து, விருந்து புரந்து, உரையாடி வாழ்த்தி மகிழ்வித்த அடிகளார் பெருந்தகையின் பேரன்பிற்கு மாணவர்கள் பெரிதும் நன்றிக்கடன்பட்டனர். வழியெல்லாம் பேராசிரியர் திருமாறன் இது குறித்தே உரையாடி வந்தார்.

புதுக்கோட்டையில் அரசு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டோம். வாசுதேவனையோ, ராஜாமுகமதையோ காணக்கூடவில்லை. நவம்பர் 10, 17, 18 மூன்று நாட்களும் சுந்தரர் பதிகங்கள் பற்றிய ஆய்வுரையும் பழந்தமிழ்க் கல்வெட்டுகள் பயிற்சியும் மாணவர்களுக்கு அமைந்தன. சுந்தரர் பதிகங்களைத் திறனாய்வுப் பார்வையில் நான் முன் வைக்க, பழந்தமிழ்க் கல்வெட்டுகள் காட்டும் வரலாற்றுத் தரவுகளைப் பற்றி நளினி உரையாற்றினார். 19. 11. 1990 அன்று நடந்த க. இ. சுக்குணி ஐயா நினைவுப் பொழிவில், 'தமிழில் வரலாற்றுப் புதினங்கள் ஒரு பார்வை' என்ற தலைப்பில் அமுதசுரபி ஆசிரியரும் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருமான திரு. விக்க்ிரமன் உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு இராதாகிருட்டிணன் தலைமையேற்றார்.

நவம்பர் இறுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து வந்த மடலில் பல்கலைக்கழக செனட் பேரவையின் உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு என்னை நியமித்திருப்பதாகத் தகவல் இருந்தது. ஏற்கனவெ மூன்றாண்டுகள் செனட் பேரவையின் உறுப்பினராக இருந்த எனக்கு அது இரண்டாம் வாய்ப்பாக அமைந்தது. முதல் வாய்ப்பைத் தந்தவர் அப்போது துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஞானம் என்றாலும் அவருடன் ஆறு மாத காலமே பணியாற்ற முடிந்தது. அவரை அடுத்து வந்த பேராசிரியர் முத்துக்குமரனுடன் பணியாற்றிய இரண்டரை ஆண்டுக் காலம் பல்கலைக்கழக நடைமுறைகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவியிருந்தமையால் இரண்டாம் வாய்ப்பின்போது பல்கலைக்கு இயன்றது செய்ய முடிந்தது. அந்த மூன்றாண்டுகளும் பேராசிரியர் முத்துக்குமரனே துணைவெந்தராகத் தொடர்ந்தமை பல சிறப்பான பணிகளைப் பல்கலையில் மேற்கொள்ள வழியமைத்தது.

1989-90ம் ஆண்டில் இந்திய மருத்துவமன்றத் திருச்சிராப்பள்ளிக் கிளையின் துணைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த நான் 1990 நவம்பரில் மன்றத்தின் 1990-91ம் ஆண்டிற்கான தலைவரானேன். மருத்துவர் மீ. சா. அஷ்ரப் செயலாளராகவும் மருத்துவர் சு. பழனியாண்டி துணைத்தலைவராகவும் மருத்துவர் ஜ. லட்சுமி நாராயணன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மருத்துவர் அர. பார்த்தசாரதி கலைப்பிரிவுச் செயலாளரானார். தலைவர் பொறுப்பேற்ற முதல் கூட்டத்தில் தொடக்க உரையைத் தமிழில் நிகழ்த்தினேன். இந்திய மருத்துவ மன்றத் திருச்சிராப்பள்ளிக் கிளையின் வரலாற்றில் ஆண்டு நிறைவு விழாவில் தலைவர் உரை தமிழில் அமைவது அதுவே முதல் முறை. தலைவர் பொறுப்பில் இருந்த ஓராண்டு முழுவதும் நிகழ்ந்த அனைத்துக் கூட்டங்களிலுமே என் உரை தமிழில்தான் அமைந்தது. தொடக்க உரையைப் பாராட்டிய மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்த உரைகளுக்கும் உளங்கனிந்த வாழ்த்துத் தெரிவித்தனர். மருத்துவ மன்றக் கூட்டங்களில் தமிழ் இடம்பெறுமாறு செய்தமை மனநிறைவளித்தது.

1991ல் இந்திய மருத்துவ மன்றத்தின் தேசிய மாநாட்டைத் திருச்சிராப்பள்ளியில் நிகழ்த்த அஷ்ரப் விரும்பினார். அதற்கு முன் சிராப்பள்ளியில் தேசிய மாநாடு நிகழ்ந்திராமையால் அதை நடத்திக்காட்டுவது நம் கிளைக்குப் பெருமை சேர்க்கும் என்று அவர் கூறியபோது நாங்கள் அனைவரும் கூடிப் பணியாற்ற உளங்கொண்டோம். நான் தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து அதற்காக உழைக்கத் தொடங்கினோம்.

டிசம்பர்த் திங்களில் தஞ்சாவூரைச் சேர்ந்தத் திரு. ஆறுமுக சீதாராமனின் நாணயவியல் தொடர்பான வகுப்புகள் அமைந்தன. தமிழகத்தின் வெள்ளி முத்திரைக் காசுகள், சங்க காலக் காசுகள், இருமொழிக் காசுகள், சோழர் காசுகள் இவை குறித்து ஒரு வகுப்பும் தஞ்சாவூர், மதுரை நாயக்கர் காசுகள், டச்சு, பிரஞ்சுக் காசுகள், ஆற்காடு நவாபு காசுகள் இவை குறித்து ஒரு வகுப்பும் அமைந்தன. வகுப்பின்போது அனைத்துக் காசுகளையும் மாணவர்கள் கையில் கொடுத்து அவர்கள் அவற்றை நன்கு பார்க்கவும் எழுத்துப் பொறிப்புகளைப் படிக்கவும் வாய்ப்பு அமைத்துத் தந்த சீதாராமன், மாணவர்களைக் கொண்டு அக்காசுகளைப் படம் வரையச் செய்தார்.

சீதாராமன் தினமணியில் திரு. மகாதேவனின் வழிகாட்டலில் அரிய காசுகள் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியவர். தமிழ் நாட்டில் வேறு எந்த நாணய சேகரிப்பாளரிடமும் இல்லாத பல்வெறு பழங்காசுகளைக் கொண்டிருப்பவர். காசியல் தொடர்பான கருத்தரங்குகளில் பங்கேற்றுப் புதிய கண்டுபிடிப்புகள் குறித்துக் கட்டுரைகள் வழங்கியவர். அவரால் வெளிச்சத்திற்கு வந்த சங்க கால முத்திரை மோதிரம் தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள பழங்காலப் பொருட்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். என் பார்வைக்கு அதை அவர் காட்டியபோது அந்த முத்திரை மோதிரத்தில் இருந்த ஆண், பெண் இணையின் அழகில் நான் எனை இழந்தது உண்மை. மிகச் சிறந்த அந்தக் கலைப்பொருள் தற்போது இருக்குமிடம் தெரியவில்லை.

நவம்பர் இறுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து வந்த மடல் தகுதி காண் பருவச் சீர்தூக்கல் குழுவின் உறுப்பினராக என்னை நியமித்திருப்பதாகவும் 5. 12. 1990 அன்று நிகழவுள்ள தகுதி காண் தேர்விற்கு வருமாறும் தெரிவித்தது. தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடக்கலைத் துறையின் பேராசிரி யர் முனைவர் இரா. பவுன்துரையின் தகுதி காண் தேர்வு அன்று நிகழ்ந்தது. திரு. பவுன்துரையின் கட்டுரைகள், ஆய்வேடுகள் அனைத்தையும் படித்துப் பார்த்த நிலையில் அவரது பணி குறித்த என் கருத்துக்களை எழுத்துருவாகத் தந்தேன். அது சமயம் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த அமரர் சி. பாலசுப்பிரமணியம் அந்த எழுத்துருவின் அடிப்படையில் என்னிடம் உரையாடினார்.

பேராசிரியர் பாலசுப்பிரமணியம் என் தந்தையாரிடம் பெரும் ஈடுபாடு கொண்டவர். எங்கள் குடும்பத்திற்கு நன்கு பழக்கமானவர். நான் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோதே என்னை அறிந்தவர். என்னுடைய ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து அறிந்த நிலையில் என் உழைப்பில் நம்பிக்கை வளர்த்தவர். என் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டு தேவையான நேரங்களில் உரிய வழிகாட்டல்களை வழங்கியவர். அப்பெருந்தகை துணைவேந்தராக இருந்த மூன்றாண்டுக் காலமும் எனக்கு அவருடன் நெருங்கிய தொடர்பிருந்தது.

பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் தம்முடைய உலகாய்தம் எனும் நூலை எனக்களித்தார். அந்நூலைப் படித்த அளவில் அது குறித்து ஒரு பொழிவு அமைக்கவேண்டும் என்று விரும்பி நெடுஞ்செழியனைத் தொடர்புகொண்டேன். பெரியார் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் கா. மோகன்ராம் அந்நூலை அறிமுகப்படுத்தித் திறனாய்வு செய்வார் என்று நெடுஞ்செழியன் தெரிவித்தமையால் 15. 12. 1990 அன்று திருமதி சி. சுப்புலட்சுமி அம்மை நினைவுப் பொழிவாக அதை அமைத்தேன். பேராசிரியர் திருமாறன் தலைமை தாங்க, மோகன்ராம் உரையாற்றினார். நெடுஞ்செழியன் ஏற்புரை நல்கினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த துணைவேந்தர் முத்துக்குமரன் நூலின் உள்ளடக்கத்தில் பெரிதும் ஈடுபாடு காட்டியதுடன் தமிழ்நாட்டுத் தத்துவஇயல் குறித்துப் பல்கலையில் ஒரு கருத்தரங்கம் அமைக்கவும் விரும்பினார்.

டிசம்பர் 22, 23ம் நாட்களில் கட்டடக்கலை வகுப்பும் கல்வெட்டுப் பயிற்சி முகாமும் அமைந்தன. பைஞ்ஞீலி கோயிலில் காலை 9. 00 மணி முதல் மாலை 7. 00 மணிவரை நிகழ்ந்த பயிற்சி முகாமில் அனைத்து மாணவர்களும் ஆளுக்கொரு கல்வெட்டைத் தேர்ந்தெடுத்துப் படித்ததுடன் மசிப்படியும் எடுத்துப் பயிற்சி பெற்றனர். கட்டட உறுப்புகளை அடையாளம் காணும் தேர்வும் நிகழ்த்தப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் இரண்டையுமே சிறப்பாகச் செய்தனர். கல்வெட்டின் பொருளறிந்து செய்தி எழுதும் பயிற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். சொற்றொடர்கள் அமைக்கத் தமிழகனும் திருமாறனும் உதவினர். டிசம்பர் 29ல் வைணவ இலக்கியம் பற்றித் திருமாறன் வகுப்பெடுத்தார்.

1991 ஜனவரி முதல் நாளில் அனைவரும் இணைந்து புத்தாண்டு விருந்து கொள்ள இளைய மாணவர்கள் விரும்பினர். அதையேற்று அன்று மாலை 6. 30 மணியளவில் அரிஸ்டோ விடுதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. நான் என் வாழ்வரசியுடனும் பிள்ளைகளுடனும் கலந்துகொண்டேன். திருமதி வாணி தம் குடும்பத்துடன் வந்திருந்தார். அனைத்து மாணவர்களும் கலந்துகொண்ட அந்தப் புத்தாண்டு விருந்து விழாவை ஆறுமுகம், நளினி, வீராசாமி, இராமகிருஷ்ணன் ஆகிய நால்வரும் ஏற்பாடு செய்திருந்தனர். அரிஸ்டோ உரிமையாளரான மருத்துவர் அஷ்ரப் விழாவிற்கான அனைத்து உதவிகளையும் செய்து தந்தார். குடும்பச் சந்திப்பாக அமைந்த அந்த விழா விளையாட்டு, கலந்துரையாடல், விருந்து எனச் சிறக்க அமைந்தது.



5. 1. 1991 மையத்தின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாளாக அமைந்தது. நடுவண் அரசின் கல்வெட்டு நிறுவன ஆய்வறிஞர் திரு. கே. ஜி. கிருஷ்ணன் அன்று என்னைச் சந்திப்பதற்காகச் சிராப்பள்ளி வந்திருந்தார். வாய்ப்பாக அன்று மாலை மாணவர்களுக்கு வகுப்பிருந்தது. பல்லவர் செப்பேடுகள் பற்றிய அறிமுக உரையை நளினி நிகழ்த்திக் கொண்டிருந்தார். அறிஞர் கிருஷ்ணனின் கல்வெட்டாய்வு அனுபவங்கள் மாணவர்களுக்குக் கிடைத்தால் பெரும் பயன் விளையும் எனக் கருதி மாணவர்களிடையே உரையாற்றுமாறு கேட்க அவரும் இசைந்து உரையாற்றினார். கல்வெட்டு நிறுவனத்தின் அமைப்பு, பணிகள், கல்வெட்டுப் படியெடுக்கும் முறை, சில முதன்மையான கல்வெட்டுகள் பற்றிய விளக்கம் என அவர் உரை எளிமையாகவும் சிறப்பாகவும் அமைந்தது. நளினியின் புதிய கல்வெட்டுக் கண்டுபிடிப்புகளைப் பெரிதும் பாராட்டிய அவர் மையம் கல்வெட்டியலுக்கு ஆற்றிவரும் பணிகளை வாழ்த்தினார். அவருடன் தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பருகூர் கிருஷ்ணன் வந்திருந்தார். அவரும் தம் பங்கிற்குச் சில கூறி மகிழ்ந்தார்.

ஜனவரி 6, 10, 18ம் நாட்களில் நடந்த வகுப்புகளில் பள்ளன்கோயில், தண்டந்தோட்டம், கசாக்குடிச் செப்பேடுகள் பற்றி நளினி உரையாற்றினார். 19 1. 91 அன்று சந்திரனின் தலைமையில் சிராப்பள்ளி அறுவை மருத்துவ வல்லுநர் அ. ஜமீர்பாஷா 'பார்வைப் பரிசுகள்' என்ற தலைப்பில் தம்முடைய அமெரிக்கப் பயணம் பற்றிய படக்காட்சி உரை நிகழ்த்தினார். பிப்ருவரியில் திருவரங்கத்தைச் சேர்ந்த முனைவர் பிரேமா நந்தகுமார் வடமொழி இலக்கிய வரலாறு குறித்து வகுப்பெடுத்தார். இந்து நாளிதழிலும் தினமணியிலும் வடமொழி, தெலுங்கு இலக்கியங்கள் தொடர்பாகப் பல கட்டுரைகளைப் படைத்தவர் அவர். சிறுகதை, கட்டுரைகள், வரலாறு எனப் பல நூல்களின் படைப்பாளியாகவும் விளங்கியவர்.

சிராப்பள்ளிப் பெரம்பலூர் நெடுஞ்சாலையில் 48 கி. மீ. தொலைவிலுள்ள சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸில் கட்டுரை வெளியிட விரும்பிய திரு. கோபாலன் என்னிடம் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். நான், நளினி, அகிலா மூவரும் ஜனவரி இறுதியில் சிறுவாச்சூர் சென்றோம். கண்ணகியோடு தொடர்புடைய தலவரலாற்றைப் பெற்றிருந்த அக்கோயில் மிகவும் பிற்பட்ட காலக் கட்டுமானமாகும். கருவறையில் இருக்கும் மதுரகாளி அம்மனைக் கண்ணகியின் வடிவமாகவே கோயிலார் கொண்டுள்ளனர். அக்கோயிலைப் பற்றிய கட்டுரை 3. 2. 1991 எக்ஸ்பிரஸில் வெளியானது.

9. 2. 1991ல் ஸ்ரீதரன் சோழர் கலைமரபுகளை மாணவர்களுக்கு விளக்கினார். தஞ்சாவூரில் சில காலம் பணியாற்றிய அனுபவம் அவர் உரையைச் செழுமையாக்கியது. அடுத்த நாள் மாணவர்கள் நளினியின் வழிகாட்டலில் கல்வெட்டாய்வில் ஈடுபட்டனர். 16. 2. 1991 அன்று பிரேமா நந்தகுமார் 'திராவிடக் கவிதைகள்' என்ற தலைப்பில் சிறந்ததோர் உரை நிகழ்த்தினார். என் வகுப்புத் தோழர்கள் மருத்துவர்கள் பெருமாள், நிர்மலா அறக்கட்டளை வழி அமைந்த அப்பொழிவில் முனைவர் அவ்வை நடராசன் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

19. 2. 1991 அன்று எறும்பியூருக்கு அருகிலிருந்த சோழமாதேவிச் சிற்றூரில் கண்டறியப்பட்டிருந்த கயிலாசநாதர் கோயில் கல்வெட்டுகளைப் படிப்பதற்காக நளினியும் அகிலாவும் அங்குச் சென்றனர். முன்பே மாணவர் இராஜேந்திரதேவன் நான், நளினி மூவரும் சோழமாதேவி சென்று கோயிலையும் கல்வெட்டுகளையும் பார்த்து வந்திருந்தோம். மிகவும் சிதைந்த நிலையில் இருந்த அதன் விமானத்தையும் சிற்பங்களையும் ஆராய்ந்து குறிப்பெடுத்தோம். கல்வெட்டுகளைப் படிக்க நேரமின்மையால் அன்று அப்பணி கூடவில்லை.

நளினி, அகிலா படியெடுத்து வந்த கல்வெட்டுகளுள் பல முதலாம் இராஜராஜர் காலக் கல்வெட்டுகளாக இருந்தன. சோழ மாதேவி இராஜராஜரின் தேவியர்களுள் ஒருவர். அவர் பெயரால் அமைந்த சோழமாதேவிச் சதுர்வெதிமங்கலம் பற்றிய சுட்டலை எறும்பியூர்க் கல்வெட்டுகளிலேயே நாங்கள் பார்த்திருந்தோம். அவ்விடத்தைக் கண்டறியவும் கருதியிருந்தோம். தேடும் பணியை நாங்கள் தொடங்கும் முன்னரே சோழமாதேவி எங்களைத் தேடி வந்தது. அச்சிற்றூரைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தம் ஊரில் இடிந்து, சிதைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் கோயில் ஒன்று இருப்பதாக மஜீதிடம் தகவல்தர, மஜீது என்னிடம் கூற, நானும் நளினியும் இராஜேந்திரதேவனுடன் அங்குச் சென்றோம்.

அங்கிருந்த கல்வெட்டுகளில் மூன்று கல்வெட்டுகள் சிறப்பான செய்திகளை உள்ளடக்கியிருந்தன. ஆற்று வாரியம், நாள் வாரியம் பற்றிய தரவுகளை ஒரு கல்வெட்டும் உவச்சர்கள் இரண்டாயிரவன் மல்லன், திருவரங்க நாராயணன் அம்பி இவர் களுக்குத் தரப்பட்ட உவச்சக்காணி, ஊரிலிருந்த வீரசோழ விண்ணகர் இவை பற்றி மற்றொரு கல்வெட்டும் பகவத்பாதீயம் ஸாரிரக பாஷ்யத்துக்குச் சிதானந்த படாரர் செய்த பிரதீபகம் ஆன வர்த்திகம் வக்கணிப்பார்க்கு விருத்தியாக விட்ட நிலம் பற்றிப் பிறிதொரு கல்வெட்டும் தகவல் கொண்டிருந்தன. கல்வெட்டுகள் பெரிதும் சிதைந்திருந்ததால் முழுமையான அளவில் செய்திகளைப் பெறக்கூடவில்லை. பின்னாளில் சிற்பி இராமன் அக்கோயிலைத் திருப்பணி செய்து அதை அழிவில் இருந்து காப்பாற்றினார்.

20. 2. 1991 அன்று பொறியியல் வல்லுநரும் தமிழறிஞருமான திரு. கொடுமுடி சண்முகம் மையத்திற்கு வருகை தந்தார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிக் கலந்துரையாட வந்த அவரைப் பட்டயக்கல்வி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு செய்தேன்.

திரு. சண்முகம் சிறந்த தமிழ்ப் பற்றாளர். அனைவருடனும் இணக்கமாகப் பழகும் ஆற்றல் கொண்டவர். புலவர் செ. இராசு போன்றொருடன் இணைந்து கொங்கு உட்படப் பல இதழ்களை நடத்தியவர். வரலாறு, இலக்கியம் தொடர்பான சில சிறு நூல்களையும் வெளியிட்டவர். பொதுப்பணித் துறையில் செயற்பொறியாளராகப் பணியில் இருந்த அவருடைய உழைப்பால் விழுப்புரம் பயணியர் மாளிகை பல அரிய சிற்பங்கள், கல்வெட்டுகளின் காட்சியகமாக மாறியது. வரலாற்று ஆய்வாளர்கள் அனைவருக்கும் அவருடைய அலுவலகம் வேண்டும் உதவிகளைச் செய்யும் நட்பகமாக விளங்கியது. அவருடைய அநுபவ உரை கல்வெட்டாய்வில் இருந்த சிக்கல்களை மாணவர் களுக்குத் தெளிவுபடுத்தியது. தேடலின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது.
என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது தென்னாற்காடு மாவட்டக் கோயில்களை ஆய்வு செய்ய அழைத்ததுடன் தாம் விழுப்புரம் பிரிவில் பணியாற்றுவதால் ஆய்வின்போது தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை எளிதாகச் செய்துதர முடியும் என்றும் ஊக்கப்படுத்தினார். அவர் தலைமையில் விழுப்புரத்தில் இயங்கிய இலக்கிய அமைப்பில் அது போழ்து உரையாற்ற வேண்டும் என்றும் கூறினார். அவருடைய அன்பான அழைப்பு தென்னாற்காடு மாவட்டக் கோயில்களை ஆய்வு செய்யும் அரிய வாய்ப்பை எங்களுக்கு நல்கியது. அதற்கேற்றாற் போல் புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் நாடகப்பள்ளியும் தொடர்ந்து பல ஆண்டுகள் கருத்தரங்குகளிலும் பாடத்திட்டக் குழுக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளுமாறு அழைத்தன.

துணைவேந்தர் திரு. ச. முத்துக்குமரன் பெரியபுராணத்தைப் பல்துறை அறிஞர்களின் நோக்கில் ஆய்வு செய்ய விழைந்தார். அந்த விழைவைச் செயல் வடிவாக்கக் கருதியவர் பெரிய புராணத்தில் ஆர்வமுடைய பல்துறை அறிஞர்களுடன் அது குறித்துக் கலந்துரையாடினார். பெரியபுராணத்தை அனைவரும் கூடி வாரம் இருமுறை படிப்பது எனத் தீர்மானமானது. பல்கலைக் கழக ஆசிரியர் திறன் வளர் பள்ளியில் முதல் அமர்வு அமைந்தது. ஆங்கிலத்துறைப் பேராசிரியர் திரு. ஜோசப், பொருளியல் துறைப் பேராசிரியர் திரு. சி. தங்கமுத்து, சமுதாயவியல் துறைப் பேராசிரியர் திரு. சங்கர், நிலஅறிவியல்துறைப் பேராசிரியர் திரு. கணேஷ், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திரு. இராம கிருஷ்ணன், சிராப்பள்ளி மாவட்டக் காடுசார் அலுவலர், நான் என அக்குழு அமைந்தது. எங்களில் ஒருவர் பெரியபுராணப் பாடல்களைப் படித்துப் பொருள் கூற மற்றவர்கள் அப்பொருள் தொடர்பாக வினாக்கள் எழுப்பி, ஆய்வு நோக்கில் விடைகளைக் காணல் வழக்கமானது. ஏறத்தாழ இரண்டாண்டுகள் தொடர்ந்து பெரியபுராணம் படித்தோம். அந்தப் படிப்பு பெரியபுராணத்தில் எத்தகு தகவல் புதையல் உள்ளடங்கியுள்ளது என்பதை எங்கள் அனைவருக்குமே தெளிவாக்கியது.

படிப்பின்போது சைவ சித்தாந்தம் பற்றி ஒருவர் கேள்வி கேட்டார். சைவசித்தாந்தம் என்றால் என்ன? இக்கருத்தமைப்பு எப்போது தோன்றியது? யாரால் உருவாக்கப்பட்டது? இது தமிழ் மண் சார்ந்த சிந்தனைதானா? என்றெல்லாம் தொடர் கேள்விகள் எழுந்தன. நாங்கள் அனைவருமே அவரவர்க்குத் தெரிந்த வகையில் விளக்கங்கள் கூறியபோதும் அனைவரும் ஏற்கக்கூடியவிதத்தில் அவ்விளக்கங்கள் அமையவில்லை. தக்கார் யாரையேனும் அழைத்து விளக்கம் பெறலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அப்போது துணைவேந்தர் யாரை அழைக்கலாம் என்று கேட்டார். நான் உடனே தவத்திரு அடிகளார் பெருந்தகையின் பெயரைச் சொன்னேன். அனைவருமே அவரினும் தகுதி உடையார் இருக்கமுடியாது என்று மகிழ்ந்தனர். மையத்தில் நடைபெற்று வந்த திங்கட்பொழிவு வரிசையில் மார்ச்சு மாதப் பொழிவாகத் தவத்திரு அடிகளாரின் பொழிவை அமைத்துக் கொள்ளலாம் என மொழிந்தேன். துணைவேந்தர் தலைமை ஏற்க இசைந்தார். அடிகளார் பெருந்தகையைத் தொடர்பு கொண்டபோது மிகுந்த மகிழ்வுடன் எங்கள் பெரியபுராணப் படிப்பைப் போற்றியவர், 'சைவ சித்தாந்தமும் வாழ்வும்' என்ற தலைப்பில் உரையாற்றுவதாகக் கூறினார். அவரது இசைவு எங்களை மகிழ்வித்தது.

3. 3. 1991 அன்று காலை 10. 30 மணி அளவில் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் வரவெற்க, திரு. முத்துக்குமரன் தலைமை உரையாற்ற மையத் திங்கட்பொழிவுகளின் மூன்றாமாண்டு தொடக்க விழா களைகட்டியது. தவத்திரு அடிகளார் பெருந்தகை திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் நினைவுப் பேருரையாகச் சைவ சித்தாந்தத்தையும் மனித வாழ்க்கையையும் இணைய நோக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக அமைந்த அவ்வுரை எங்கள் ஐயங்களைப் பெருமளவிற்கு நீக்கியதெனலாம். பெரியபுராணப் படிப்புக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அடிகளார் உரை பற்றி அவர்களிடம் கேட்டபோது அந்த உரைக்குப் பிறகுதான் சைவசித்தாந்தம் வாழ்க்கை அனுபவங்களின் பிழிவே என்ற தெளிவு கிடைத்ததாகக் கூறினர்.







மையத்தின் சார்பாக டாக்டர் மா. இராசமாணிக்கனார் நினைவு விருது வழங்கும் திட்டத்தை 1991ல் கைக்கொண்டோம். எங்கள் உள்ளங்களில் நிறைந்த அறிஞர் பெருந்தகை இந்தியத் தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற துணை மேலாண் இயக்குநர் திரு. கூ. ரா. சீனிவாசனுக்கு முதல் விருதை வழங்கிச் சிறப்பிக்கலாம் என்ற என் கருத்தை மைய நிருவாக உறுப்பினர்களின் கூட்டத்தில் முன் மொழிந்தபோது அனைவரும் நிறைவுடன் ஏற்றனர். எங்கள் விருப்பத்தைக் கூ. ரா. சீனிவாசனிடம் தெரிவித்தபோது அவர் பெரிதும் மகிழ்ந்தார். தமிழுக்கும் வரலாற்றுக்கும் அளப்பரிய தொண்டாற்றிய இராசமாணிக்கனாரின் பெயரால் அமைந்த விருதைப் பெறுவதென்பது பேறுடைய செயலாகும். அவ்விருது பெற என்னைத் தேர்ந்தெடுத்தமைக்கு உளமார்ந்த நன்றி என்று கைகளைப் பற்றியபடி அவர் கூறியமை என்னைப் பெரிதும் நெகிழ்வித்தது.

இணையற்ற அப்பெருந்தகைக்குத் தக்கார் கொண்டே விருது வழங்கவேண்டும் என்று கருதியிருந்த எங்களுக்குத் தவத்திரு அடிகளார் பொழிவு வாய்ப்பானது. அந்த நாளிலெயே அவரது திருக்கைகளாலெயே தம் வாழ்நாளெல்லாம் கல்வெட்டு, கோயிற்கலை, அகழாய்வு என அனைத்துத் துறைகளிலும் உழைத்து முத்திரை பதித்த திரு. கூ. ரா. சீனிவாசனுக்கு விருது வழங்கச் செய்ய முடிவெடுத்தோம். பேராசிரியர் திருமாறன் விருதையும் பெறுநரையும் தமக்கே உரிய தனித்தன்மையோடு சிறக்க அறிமுகப்படுத்தி அவையை மகிழ்வித்தார். அடிகளார் பெருந்தகை சட்டமிடப்பட்ட பாராட்டுப் பட்டையத்தைக் கூ. ரா. சீனிவாசனுக்கு வழங்கிப் பொன்னாடைபோர்த்திச் சிறப்புச் செய்தார். கலங்கிய விழிகளுடன் கூ. ரா. சீனிவாசன் ஏற்புரை நிகழ்த்தினார். இந்த அரிய நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எ.சுப்பராயலு, கா. இராசன், செ. இராசு, அ. கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறையின் சார்பில் அறிஞர் சீனிவாசனுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினர்.

தவத்திரு அடிகளார் அன்று எங்கள் இல்லத்தில் உணவு கொள்ள இசைவு தெரிவித்திருந்தார். அவரது செயலர் கவிஞர் திரு. மரு. பரமகுருவின் வழிகாட்டலில் என் வாழ்வரசி அடிகளார் தேவைக்கேற்பச் சமைத்திருந்தார். அவரும் துணைவேந்தரும் கூ. ரா. சீனிவாசனும் இரண்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஒருங்கமர்ந்து எங்கள் இல்லக் கூடத்தில் உணவருந்திய அந்தக் காட்சி என்றென்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும். சைவசித்தாந்தமும் கோயில்களும் தமிழும் வரலாறும் ஒன்றிணைந்தாற்போல் உணர்ந்தேன் நான்.

அன்று மாலை இந்திய மருத்துவ மன்றத் திருச்சிராப்பள்ளிக் கிளையின் பொங்கல் விழா நிகழ்ந்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் கு. திருமாறன், க. இந்திரஜித், தே. சந்திரன், இரா. இராமமூர்த்தி, ப. ஆறுமுகம், இளசைசுந்தரம் கலந்துகொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியர் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மகிழ்வித்தார். பட்டிமன்றத்தைத் தொடர்ந்து சாண்டில்யனின், 'கன்னிமாடம்' நாடகம் அரங்கேறியது. மருத்துவர் சு. தியாகராஜனின் மேடைக் கதையாக்கமும் உரையாடல்களும் நன்கு அமைந்திருந்தன. மருத்துவர் அர. கணேசன் நாடகத்தை இயக்கியிருந்தார். அந்நாடகத்தில் கதைத் தலைவன் அபராஜிதனாக நான் நடித்திருந்தேன்.

தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல்துறைப் பேராசிரியர் பருகூர் அ. கிருஷ்ணனின் தகுதி காண் பருவச் சீர்தூக்கல் தேர்விற்கு வருமாறு பதிவாளர் மடல் எழுதியிருந்தார். அந்தத் தேர்வு 15. 3. 1991 அன்று நடைபெற்றது. சேலம் மாவட்டக் கல்வெட்டுகள் பற்றிய கிருஷ்ணனின் ஆய்வெட்டை ஆராயும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அந்த ஆய்வெட்டைப் படித்த நிலையில் பல பிழைகளும் குறைகளும் இருப்பதை உணர்ந்தேன். துறைத்தலைவர் சுப்பராயலுவுடன் அது குறித்து உரையாடினேன். என் கருத்துப்படிச் செய்யுமாறு அவர் கூறவே, அந்த ஆய்வேட்டின் குறைகளைச் சரி செய்து மீள வழங்குமாறு கிருஷ்ணனிடம் தெரிவித்தேன்.

துணைவேந்தரைச் சந்தித்தபோது என் கருத்தை ஏற்ற அவர், என்னைக் கலந்துகொண்டு உரிய திருத்தங்களை ஆய்வெட்டில் மேற்கொள்ளுமாறு கிருஷ்ணனுக்கு அறிவுறுத்தினார். அந்தத் தேர்வும் அதன் முடிவும் கிருஷ்ணனுக்கு வருத்தம் தந்ததை நான் உணர்ந்தேன். என்றாலும், பிழைகள் மலிந்திருந்த அந்த ஆய்வேட்டைத் துறைப் பேராசிரியரின் தகுதி மதிப்பீடு செய்யும் அளவுகோலாகக் கொள்ள என் உள்ளம் ஒருப்படவில்லை. பல முறை சிந்தித்த பிறகே என் முடிவைப் பேராசிரியர் சுப்பராயலுவிடமும் துணைவேந்தரிடமும் தெரிவித்தேன். உண்மைகளை நிலைநாட்டப் பல இழப்புகளைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதற்காக வருந்துவது நியாயமாகாது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்

(வளரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.