http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 92

இதழ் 92
[ பிப்ரவரி 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

திரும்பிப்பார்க்கிறோம் - 39
Malayakkovil
தேடலில் தெறித்தவை - 1
சேய்ஞலூர்
Chola Ramayana 03
நெய்யுடை அடிசில்
இதழ் எண். 92 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப்பார்க்கிறோம் - 39
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணிக்கு,

தஞ்சாவூர் திரு. கோவிந்தராசனை அறங்காவலராகக் கொண்டிருந்த கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர் கோயில் கருணாசாமி கோயில் என்றே உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டது. செம்பியன்மாதேவி திருப்பணியான அக்கோயிலில் உள்ள அம்மையப்பர், ஆடவல்லான் திருமேனிகள் சிறப்புக்குரியன. பொதுவாக அம்மையப்பர் திருமேனிகளில் வலப்புறம் சிவபெருமானும் இடப்புறம் உமையும் காட்டப்பெறுவது மரபு. ஆனால், வசிஷ்டேசுவரர் கோயில் அம்மையப்பர் சிற்பம் வலப்புறம் அம்மையையும் இடப்புறம் எம்பெருமானையும் கொண்டுள்ளது. மிக அரிதான இம்மாற்றம் திருவையாறு, திருவேதிகுடி விமான மேற்குக் கோட்டங்களில் உள்ள அம்மையப்பர் திருமேனிகளிலும் காணப்படுகிறது.


திருவையாறு அம்மையப்பர்



திருவேதிக்குடி அம்மையப்பர்


ஆடவல்லான் திருமேனி பிற செம்பியன்மாதேவிக் கோயில்களில் காணுமாறு இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட அமைப்பில் இருந்தது. முயலகன் முதுகின் மீது வலப்பாதத்தை இருத்தி, ஆனந்தத்தாண்டவம் ஆடும் இறைவனின் சடைமகுட முகப்பில் கொக்கிறகுகளின் அடர்த்தியான பின்னணியில் மண்டையோடு. சென்னியும் இருபுறமும் பரந்த விரிசடையுமாய் ஆடல் நிகழ்த்தும் இறைவனின் இருத்திய திருவடியின் இடப்புறம் மூன்று கைகளும் மூன்று கால்களும் கொண்டு ஆனந்தத்தாண்டவமிடும் பிருங்கி காட்டப்பட்டுள்ளார்.

அவரது வலக்கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை வேழமுத்திரையில் நீட்டப்பட்டுள்ளது. இடப் பின் கை அர்த்தரேசிதத்தில் அமைய, இட, வலக்கால்கள் மண்டலத்தில் உள்ளன. நடுக்கால் முழங்கால் அளவில் மடித்து உயர்த்திய நிலையில் ஆனந்தத்தாண்டவத்திற்கே உரிய அமைப்பில் வலப்புறம் வீசப்பட்டுள்ளது. சடைமகுடமும் விரிசடையுமாய்க் காட்சிதருபவர், கீழே பேருருவாய் அமர்ந்திருக்கும் காரைக்கால் அம்மையைப் பார்த்தவாறு ஆடுகிறார்.

கருடாசனத்தில் பேய் உருவில் தசை நார்களும் எலும்புகளும் வெளித்தெரியுமாறு உள்ள காரைக்கால் அம்மையின் வலக்கை உயர்ந்து போற்ற, இடக்கை வலமுழங்கால் அருகே வியப்பில் விரிந்துள்ளது. இது போன்ற வடிவத்தில் ஆனால், மாறுபட்ட அமர்வில் காரைக்கால் அம்மையைத் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்து ஓவியக்காட்சியில் பார்க்கமுடிவதை நளினி கூறினார். அந்த எண்ணவோட்டம் சரியானதாகவே எனக்கும் தோன்றியது.

வலப்புறம், இறைவனின் தூக்கிய திருவடிக்குக் கீழே நான்கு பூதங்களும் வாணனும் காளியும் காட்டப்பட்டுள்ளனர். இடப்பாதத்தைப் பார்சுவமாகத் திருப்பி, வலக்காலை அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்தியுள்ள காளியின் மண்டல நிலைக்கேற்ப இட முன் கை அர்த்தரேசிதமாய் வீசப்பட்டுள்ளது. வலக்கைகளுள் முன்கை காக்கும் குறிப்பில் அமைய, பின்கை முத்தலைஈட்டி ஏந்தியுள்ளது. இறைவியின் இடப் பின் கையில் தலையோடு. அம்மைக்கும் இறைவனின் இருத்திய திருவடிக்கும் இடைப்பட்ட குழிவில் அமர்ந்துள்ள விரிசடைப் பூதம் சங்கூத, காளிக்குக் கீழ் அமர்ந்துள்ள மற்றொரு பூதம் புல்லாங்குழல் இசைக்கிறது. அம்மையின் தலைக்கு மேலிருக்குமாறு வலப்புறத்துள்ள நந்திமுகப் பூதம் மத்தளம் வாசிக்க, அதற்குக் கீழே நிற்கும் விரிசடைப் பூதம் இலைத்தாளங்களைத் தட்டுகிறது. அதன் முகம் வலப்புறம் திரும்பியுள்ளது. கால்களைக் குறுக்கீடு செய்து கீழே அமர்ந்திருக்கும் வாணன் மடியில் இருத்திய ஐமுகக் குடமுழவை இறைவன் ஆடலுக்கேற்ப இசைக்கிறார். தமிழ்நாட்டுச் சோழர் கோயில்களில் காணப்படும் ஆடவல்லான் சிற்பங்களில் இந்த அளவிற்கு இசைக் கலைஞர்களையும் உடன் ஆடுவாரையும் போற்றி வியக்கும் பேயரசியாய்க் காரைக்கால் அம்மையையும் கொண்டு விளங்கும் ஒரே ஆடவல்லான் சிற்பமாகக் கருந்திட்டைக்குடிக் கருணாசாமிகோயில் ஆடல்அரசரைக் குறிப்பிடலாம்.


கருந்திட்டைக்குடி அம்மையப்பர்



கருந்திட்டைக்குடி ஆடவல்லான்


நளினி இக்கோயிலில் கண்டறிந்த ஐந்து கல்வெட்டுகளுள் நான்கு மிக முதன்மையான செய்திகளைக் கொண்டிருந்தன. அவை அனைத்துமே இறைவனின் விமானம், அர்த்தமண்டபம் இவற்றின் ஜகதி, குமுதம் ஆகிய தாங்குதள உறுப்புகளில் வெட்டப்பட்டிருந்தன. தாங்குதளத்தை ஒட்டி வடக்கிலும் தெற்கிலும் கட்டப்பட்டிருந்த மேடையை ஓரளவிற்கு அகற்றிய நிலையிலேயே அவை கண்டறியப்பட்டன. அவற்றைப் படிப்பது எளிதான செயலாக இல்லை. மேடைக்குக் கீழே ஓர் ஆள் மட்டுமே தவழ்ந்து செல்லக்கூடிய நிலையில் வழியிருந்தது. மேடையை முழுவதுமாக அகற்ற முடியாத சூழலில் மெல்லிய உடல்வாகு கொண்டிருந்த வீராசாமி அவ்வழியில் ஒளிவிளக்குடன் நுழைந்து கல்வெட்டுத் தொடராகப் படிக்குமாறு இருப்பதையும் அவ்வழியில் ஒருவர் நுழைந்து படிக்கமுடியும் என்பதையும் கண்டறிந்து தெரிவித்த பிறகு நளினி அங்குச் சென்று அரும்பாடுபட்டு அக்கல்வெட்டுகளைப் படிக்க வெளியிலிருந்த நாங்கள் எழுதிக்கொண்டோம்.

உத்தமசோழரின் 14ம் ஆட்சியாண்டில் (கி. பி. 983) வெட்டப்பட்டிருந்த கல்வெட்டு பீமப்பையார் மகளார் சிலவையார் முதலாம் பராந்தகரின் 38ம் ஆட்சியாண்டில் (கி. பி. 945) ஆவூர்க் கூற்றத்து மணலொக்கூர் ஊராரிடம் நிலம் விலைக்குப் பெற்று இறைவனுக்கும் இறைவிக்குமாய்க் கொடையளித்த தகவலைத் தந்தது. அக்கொடை கல்வெட்டாகப் பொறிக்கப்படாமல் நெடுங்காலம் ஓலையிலேயே இருந்தது. உத்தமசோழரின் பதினான்காம் ஆட்சியாண்டில் திருநறையூர் நாட்டுக் குறுக்கை உடையான் அவ்வோலை தம்மிடம் இருப்பதாகச் சிறுவேலூருடையானிடம் கூறி ஓலையைக் காட்டத் தகவல் அறிந்த கோயிலார் அவ்வோலைச் செய்தியைக் கல்வெட்டாக்கினார். கோயிலுக்குரிய அந்நிலம் தொடர்பாக எத்தகு தடையும் இடையூறும் ஏற்படாது அதன் இறையிலி உரிமையைக் காத்து உரிய அறத்தைச் செய்வதாகப் பழையாற்றைச் சேர்ந்த கிழான் அப்பன் வேம்பன், மண்டை தாழி, கலிவிசையன், அணிகால நக்கன் ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.

இக்கோயில் இறைவியான உமாபட்டாரகியைச் சிலவையார் தம் மகளாகக் குறிப்பிடுவது சிறப்புக்குரியதாகும். இது போல் வயலூரைச் சேர்ந்த சேந்தன் காரி என்னும் பெருமாட்டி திருக்கற்றளிப் பரமேசுவரர் கோயில் இறைவியான உமாபட்டாரகியைத் தம் மகளாகத் தத்தெடுத்து இறைவிக்கும் இறைவனுக்கும் மணம் செய்வித்து மகிழ்ந்ததுடன் தமக்குச் சீதனமாய் வந்த நிலம் முழுவதையும் இறைவிக்குரிய வழிபாடு, படையல் இவற்றிற்காய் எழுதி வைத்த செய்தியைச் சிராப்பள்ளிக் குமார வயலூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுவதை இங்கு ஒப்புநோக்கலாம்.

மேற்குக் குமுதம், ஜகதி இவற்றிலிருந்து படியெடுக்கப்பட்ட முதலாம் இராஜராஜரின் 29ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி. பி. 1014) அரசரின் பெருந்தரத்து அலுவலர் வளவன் சூற்றி கோயில் ஆடவல்லாரின் நம்பிராட்டியாராக பரமேசுவரியை எழுந்தருளுவித்து அவ்வம்மையின் திருமுன் 'ஸ்ரீராஜராஜன்' என்ற பெயரில் சந்திவிளக்கு ஏற்றப் பன்னிரண்டு காசுகள் தந்ததாகக் கூறுகிறது. கல்வெட்டில் முதலாம் இராஜராஜர் கோயிலாருக்கு அறுநூறு காசுகள் தண்டம் விதித்த குறிப்புக் காணப்படுகிறது. இத்தண்டம் எதற்காக விதிக்கப்பட்டது எனக் கூறும் கல்வெட்டு வரிகளில் தெளிவில்லை.

தெற்கு ஜகதியில் படியெடுக்கப்பட்ட உத்தமசோழரின் 11ம் ஆட்சியாண்டுக் (கி. பி. 980) கல்வெட்டு, இராஜகேசரிவர்மரின் (சுந்தரசோழர்) 17ம் ஆட்சியாண்டில் சிவிகையார் சேரியைச் சேர்ந்த பெண்டாட்டி பொய்யிலி தம் மகன் அரையன் வீரசோழன் நினைவாகக் கோயிலில் நந்தாவிளக்கேற்ற கொடையளித்த தகவலைத் தருகிறது. அவ்விளக்கிற்குத் தேவையான நெய்யில் பாதியைத் தரும் பொறுப்பை இடையர் முள்ளூரன் சிவன் வழித் தளியுடையார் நால்வர் ஏற்றனர். என்ன காரணத்தாலோ அவ்வறக்கட்டளை நிறைவேற்றப்படவில்லை. கோயில் ஸ்ரீகாரியம் மிலட்டூர் உடையாரான மார்த்தாண்ட மூவேந்த வேளார் இது குறித்து விசாரித்துத் தவறியவர்களுக்குத் தண்டம் விதித்தார். இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மிலட்டூர் தற்போது மெலட்டூர் என்ற பெயரில் தஞ்சாவூரிலிருந்து 17 கி. மீ. தொலைவில் உள்ளது. பாகவதமேளா எனும் நாட்டிய நாடகம் ஆண்டுதோறும் இங்குத் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஜகதியிலிருந்து படியெடுக்கப்பட்ட இரண்டாம் இராஜாதிராஜரின் ஏழாம் ஆட்சியாண்டுக் (கி. பி. 1170) கல்வெட்டு ஐம்பது கோயில் காணியுடைய குடிமக்கள், தஞ்சாவூர் நகரத்தார் கலந்து பேசி இசைவு கண்டு மேற்கொண்ட முடிவைத் தெரிவிக்கிறது. இம்முடிவு திருஆணை என்றும் உலகுடை முக்கோக்கிழானடிகள் ஆணை என்றும் சுட்டப்பட்டுள்ளது. முற்காலத்தே கருந்திட்டைக்குடியில் இருந்த தலைநிலம், கடை நிலம் இவை சரியான முறையில் கூறிட்டு அனுபவிக்கப் படாமையால் மன்னரின் ஏழாம் ஆட்சியாண்டில் கூறிட்டுக் கரையெடுத்தபடி அனுபவிக்கத் தீர்மானமானது.

கருந்திட்டைக்குடியில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகள் அனைத்துமே சோழர் காலத்தில் அவ்வூரில் நிகழ்ந்த தவறுகளையும் அவை சரிசெய்யப்பட்ட முறைகளையும் சுட்டு வனவாய் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் போது ஏற்கனவே அக்கோயிலில் இருந்து 1897ல் படியெடுக்கப்பட்டுத் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 5ல் பதிப்பிக்கப்பட்டிருந்த முழுமையடையாத சில கல்வெட்டுப் பாடங்களின் விட்டுப்போன தொடர்ச்சிகளையும் கண்டந்தோம். அவற்றை வரலாறு முதல் தொகுதியில் உரியவாறு பதிவுசெய்தோம்.

நிறுவனங்களின் சார்பில் கல்வெட்டுகளைப் படியெடுத்துப் பதிப்பிப்பது ஒருவரே செய்யும் பணியன்று. கல்வெட்டைப் படியெடுப்பவர் ஒருவர். அப்பணியை மேற்பார்வையிடுபவர் மற்றொருவர். படியெடுத்த மசிப்படிப் பாடத்தைப் படித்து அச்சேறச் செய்பவர் பிறிதொருவர். பல காரணங்களினால் இம்மூவருக்குள் பணித் தொடர்பு இல்லாமல் போவதுண்டு. அதன் விளைவாகவே பதிப்பிக்கப்பட்டுள்ள பாடங்கள் சிலவற்றில் பிழைகளும் தொடர்பின்மையும் காணப்படுகிறது. பதிவான கல்வெட்டுகளைக் களங்களில் மீளப்படிக்கும் ஆய்வாளர்கள் பதிப்பிக்கப்பட்டுள்ள பாடங்களோடு ஒப்பிட்டு நிறை, குறைகளைச் சரிசெய்வது வரலாற்றிற்கு மேன்மை சேர்க்கும். எங்கள் மைய ஆய்வர்கள் இப்பணியை ஒரு தொண்டாகவே தொடர்ந்து செய்து வருவது எங்கள் ஆண்டு ஆய்விதழான வரலாற்றின் தொகுதிகளைப் பார்ப்பவர்க்குப் புரியும்.

மார்ச்சு 23, 24ம் நாட்களில் ஆறுமுக சீதாராமன் சோழர், பல்லவர், பாண்டியர் காசுகள் பற்றி வகுப்பெடுத்தார். பல மரபுப் பேரரசர்களின் காசுகளை நேரிடையாகப் பார்க்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றனர். 31. 3. 1991ல் புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் கருத்தரங்கம் இருந்தமையால் அதில் உரையாற்ற நான் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தென்னாற்காடு மாவட்டக் கோயில்கள் சிலவற்றைக் காணலாம் என்று கருதிப் பட்டயக்கல்வி மாணவர்கள் விழைந்தால் உடன் வரலாம் என்று தெரிவித்தேன். திருமாறன், இலலிதாம்பாள் இருவர் மட்டுமே உடன் வந்தனர். 27. 3. 1991 பகல் புறப்பட்டு விழுப்புரம் அடைந்தோம். கொடுமுடி சண்முகம் விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் அறைகள் ஏற்பாடு செய்திருந்தார். அன்று மாலை அவருடைய இலக்கிய அமைப்பில் உரையாற்றினேன்.

28. 3. 1991 காலை விழுப்புரம் சிவன்கோயிலைப் பார்வையிட்டுக் கல்வெட்டுகள் படித்தோம். திரு. சண்முகத்தின் நண்பர் ஆசிரியர் வீரராகவனும் அவர் துணைவியார் திருமதி மங்கையர்க்கரசியும் தங்கள் பள்ளி வண்டியில் எங்களை அழைத்துச் சென்று அவர்கள் கண்டுபிடித்திருந்த அரசலாபுரம் கோழிக் கல்வெட்டைக் காட்டினர். அரசமரத்தடியில் காணப்பட்ட அந்நடுகல் ஒரு கோழிக்காக எடுக்கப்பட்டதாகும். 'முகையுரு மேற்சேரிகு யாடிக் கருகிய கோழி' என்ற அக்கல்வெட்டின் பாடம் 'முகையூரில் நடந்த கோழிப்போரில் மேற்சேரி மக்களின் சார்பில் கலந்துகொண்டு உயிர்விட்ட கோழியின் சிற்பம்' என்ற பொருளில் அமைந்திருந்தது. பின்னாளில் திரு. சண்முகம் அச்சிற்பத்தை விழுப்புரம் பயணியர் மாளிகைக்குக் கொணர்ந்து அங்கு அவர் உருவாக்கியிருந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

கிராமம் சிவலோகநாத ஈசுவரர் திருக்கோயில் இரண்டு விதங்களில் என்னைக் கவர்ந்தது. அங்கிருந்த கண்டபாதச் சிற்பங்களுள் குடக்கூத்துச் சிற்பம் போல் எண்ணிறந்த குடங்களோடு கூத்து நிகழ்த்திய ஆடவரை அதற்கு முன்போ, பின்போ நான் கண்டதில்லை. வலமேற்கையில் இரண்டு குடங்கள், இடமேற்கையில் ஒரு குடம், வலக்கணுக்கால் மேல் ஒரு குடம், இடமுழங்காலருகே ஒரு குடம் எனப் பல்குடக் கூத்தராக அவர் காட்சியளித்தார். வலக்கை இடுப்பிலும் இடக்கை அர்த்தரேசிதத்திலும் அமைய, செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். மேலே அவரது இருபுறத்தும் காட்டப்பட்டிருந்த சாமரங்கள் அவரை வாணனது ஊரில் குடக்கூத்து நிகழ்த்திய திருமாலாய் அடையாளப்படுத்தின.

மற்றொரு கண்டபாதச் சிற்பம் நாங்கள் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் பார்த்த கண்ணப்பர் கண் அகழும் சிற்பத்தை ஒத்திருந்தது. இங்கும் கண்ணப்பர் அமர்ந்தபடி கண்ணை அகழ, சிவலிங்கத்திலிருந்து வெளிப்படும் கை அச்செயலைத் தடுக்குமாறு காட்டப்பட்டுள்ளது. பின்னாளில் இது போல் சிற்பங்களை இராஜராஜருக்கு முற்பட்ட சோழர் கோயில்களில் பலவாய்ப் பார்க்க நேர்ந்தபோதுதான் சிவலிங்கத்தில் கால் பதித்துக் கண்ணகழ்ந்த கண்ணப்பர் சேக்கிழார் காலப் புதுச் சிந்தனை என்பது தெளிவானது. கிராமம் கோயில் கொற்றவை குறிப்பிடத்தக்கவர்.

அன்று மாலை திருவரங்கம் (தென்னாற்காட்டிலும் திருவரங்கம் என்ற பெயரில் ஊர் உள்ளது.) அரங்கநாதசாமி கோயிலுக்குப் போனோம். கோயிலின் வெளிச்சுற்றில் இருந்த நெற்குதிர் கருத்தைக் கவர்ந்தது. அது போன்ற நெற்குதிர்களைத் திருவானைக்காவல், திருவரங்கம், திருப்பாலைத்துறை ஆகிய இடங்களில் ஏற்கனவே பார்த்துள்ளமை நினைவுக்கு வந்தது. ஜம்பையிலுள்ள புகழ் பெற்ற அதியமான் கல்வெட்டைப் பார்க்கவும் படிக்கவும் வாய்த்தது. 'ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி' என்னும் அக்கல்வெட்டு கி. பி. முதல் நூற்றாண்டினதாகும். அதுவரை பார்த்த பழந்தமிழ்க் கல்வெட்டுகளிலேயே திருத்தமாகவும் அழுத்தமாகவும் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டாக ஜம்பைக் கல்வெட்டைக் கருதினோம்.

அடுத்த நாள் திருப்பாதிரிப்புலியூர், திருவதிகை, திருவாமூர் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். திருவதிகை வீரட்டானேசுவரம் பல்லவர் காலக் கோயிலாகும். கோபுர வாயிலில் தொடராக ஆடற்சிற்பங்கள் இருப்பதைக் கண்ட இலலிதாம்பாள் அங்கேயே நின்று அவற்றை ஒவ்வொன்றாக அடையாளப்படுத்த முயற்சித்தார். நளினி பக்கத்திலிருந்த பரமேசுவரவர்மரின் கல்வெட்டைப் படித்தார். நானும் மற்றவர்களும் விமானத்தின் கீழ்த்தளத்திருந்த சுதையுருவங்களைப் பார்வையிட்டோம். பிறகு இலலிதாம்பாளுடன் இணைந்து அங்கிருந்த ஆடற்சிற்பங்களையும் பிற சிற்பங்களையும் ஆராய்ந்து குறிப்பெடுத்தோம்.


திருவதிகை விமானம்


கரணச் சொல்லாக்கத் தேர்வின்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நான் சந்தித்த ஆய்வாளர் செல்வி வடிவுதேவி திருவதிகை ஆடற்சிற்பங்களை ஆய்வுசெய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளமை நினைவிற்கு வந்தது. பின்னாளில் செல்வி கல்பகம் கரணங்கள் குறித்து ஆய்வுசெய்வதற்காக என்னிடம் வந்தபோது திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் ஆடற்சிற்பங்களையும் விரிவான அளவில் ஆய்வுக்குட்படுத்தித் தரவுகள் சேகரித்தோம். அதற்காக அங்குச் சென்ற பயணங்களும் அப்போது நிகழ்ந்த கலந்துரையாடல்களும் அவற்றின் பயன்களும் மறக்க முடியாதவை.

நாங்கள் அடுத்துச் சென்ற திருவாமூர் அப்பர் பெருமானின் பிறப்புத் தலம். அப்பர் பெருந்தகையை எனக்கு மிகவும் பிடிக்கும். வரலாற்றுச் செறிவுடைய அவருடைய பதிகங்களில் உளம் இழந்திருந்தமையால் திருவாமூர் எனக்குள் மிகுந்த கிளர்ச்சியை உண்டாக்கியது. கோயில் வளாகத்தில் பூத்துச் செழித்திருந்த சரக்கொன்றை வேங்கையின் மைந்தன் ரோகிணியை நினைவூட்டியது. அப்பரின் திருவதிகைப் பதிகத்தை நினைத்தவாறே கோயிலுக்குள் நுழைந்தேன். மிக எளிய கோயிலாக இருந்தபோதும் எளிதில் அதை விட்டு அகல அப்பரும் சரக்கொன்றையும் விடவில்லை.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.