http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 101

இதழ் 101
[ நவம்பர் 2013]


இந்த இதழில்..
In this Issue..

சர் இராபர்ட் புரூஸ் புட் நினைவு அறக்கட்டளை
காலங்காலமாக வண்ணமடிக்கப்பட்டு...
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 2
Chola Ramayana 10
Thirumeyyam - 7
மகேந்திர விஷ்ணு கிருகம்
தேடலில் தெறித்தவை - 8
சிற்பங்கள் ஓவியங்கள் காட்டும் தலவரலாறுகள்
மரபுக் கட்டடக்கலை - 01
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 2
மூங்கிலரிசி அடிசில்
இதழ் எண். 101 > கலையும் ஆய்வும்
சிற்பங்கள் ஓவியங்கள் காட்டும் தலவரலாறுகள்
கி.ஸ்ரீதரன்
தமிழ்நாடு என்றாலே பக்தி மணம் கமழும் திருக்கோயில்கள்தான் எல்லோருடைய மனதிலும் தோன்றும். திருக்கோயில்கள் தமிழகக் கலை வரலாற்றுக்குப் பல அரிய சான்றுகளைத் தருகின்றன. சிற்பம் ஓவியம் இசை போன்ற நுண்கலைகள் திருக்கோயில்களைச் சார்ந்தே விளங்கின.

நமக்கு நல்வாழ்வளிக்கும் இறைவனை வழிபட திருக்கோயில்களுக்குச் செல்கிறோம். ஓவ்வொரு கோயிலுக்கும் என்று சிறப்பான தலவரலாறு உண்டு. அத்தல வரலாற்றினை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் சிற்பமாகவும் ஓவியமாகவும் கலைஞர்கள் வடித்து வைத்துள்ளதை பல திருக்கோயில்களில் காண முடிகிறது. சில கோயில்களில் கோபுரத்தில் சுதைச் சிற்பமாகவும் தலவரலாறுகளை அமைத்திருப்பார்கள். இவ்வாறு தலவரலாறுகளை வெளிப்படுத்தும் சிற்ப ஓவியச் சான்றுகளை இனிக் காண்போம்.

திருவானைக்கா

பஞ்ச பூதத் தலங்களில் ஒன்றான திருவானைக்கா அப்பு (நீர்) தலமாக சிறப்புடன் விளங்குகிறது. இங்கு கோயில் கொண்டு விளங்கும் இறைவனை அப்பர் பெருமான் 'செழுநீர்த்திரள்' என்று போற்றுகிறார். இத்தலத்தில் இறைவன் ஜம்பு (நாவல்) மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார்.

ஒரு சமயம் சிவபெருமான் யோக நிலையில் ஆழ்ந்திருந்தார். அப்போது தான் அருகே இருக்கும்போதே ஈசன் தவநிலையில் இருப்பதை எண்ணி அம்மை சிரித்தாள். இதனால் இறைவியை பூவுலகம் சென்று தவம் செய்யக் கட்டளையிட்டார் இறைவன். இறைவி நாவற்காடான இந்த ஜம்புகேசுவரத்தைத் தேர்ந்தெடுத்து இறைவனை நீரினால் அமைந்த சிவலிங்க வடிவமாக அமைத்து வழிபட்டாள் என்று தலவரலாறு கூறுகிறது. இந்த இறைவியின் பூஜையை நினைவு கூறும் வகையில் இன்றும் இக்கோயிலில் உச்சிக்கால பூஜையின்போது குருக்கள் அம்மன் போன்று புடவை உடுத்தி ருத்ராட்ஷ மாலையணிந்து சிவபூஜை செய்யும் அரிய காட்சியைக் காணலாம்.

மேலும் இத்தலத்தில் சிலந்தியும் யானையும் நாவல் மரத்தின் கீழிருந்த இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றன. யானை சிவபெருமானின் கணங்களுக்குத் தலைவனாகும் பதவியை ஏற்றது. சிலந்தி கோச்செங்கட் சோழராக அவதரித்து தனக்குக் கருணை காட்டிய இறைவனுக்கு உலகம் வியக்கும் வண்ணம் மாடக்கோயில்கள் எழுப்பிப் புகழ் பெற்றது.

சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தல் செய்து
உலந்தவன் இறந்தபோதே கோச்செங்கணானுமாக
கலந்த நீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே!

என்று அப்பர் பெருமான் தமது பதிகத்தில் இந்நிகழ்வைப் போற்றுவதைக் காணலாம்.




பழமை வாய்ந்த இத்தல வரலாறு இறைவன் சன்னிதிக்குச் செல்லும் வழியில் ஒரு தூணில் சிற்ப வடிவமாக வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இச்சிற்பத்தில் நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கம் உள்ளது. அருகே தேவி வழிபடும் நிலையில் காணப்படுகிறார். யானை மலர் கொண்டு இறைவனை வழிபடுகிறது. மேற்பகுதியில் சிலந்தியும் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக இந்தச் சிற்பத்தில் திருவானைக்காவின் தலவரலாறு முழுவதுமே அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளது.

திருவோத்துர்

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற தலங்களுள் எட்டாவது தலமாக செய்யாறு - திருவோத்தூர் வேதபுரீசுவரர் திருக்கோயில் விளங்குகிறது. சைவ சமய வரலாற்றில் இக்கோயிலுக்குச் சிறப்பிடம் உண்டு. திருஞானசம்மந்தப் பெருமான் திருவண்ணாமலையாரை வழிபட்ட பின்னர் இக்கோயிலுக்கு வந்தார். அப்போது ஒரு அடியார் வருத்தமாகக் காணப்பட, இறைவனுக்காக வைத்த பனைகளெல்லாம் ஆண்பனையாய் ஆயின. உமது இறைவன் அருளிருந்தால் இப்பனைகளைக் காய்க்கும்படி செய்யலாமே? என்று சமணர்கள் திருஞானசம்மந்தரிடம் ஏளனம் செய்தனர்.

சம்மந்தப் பெருமான் வேதபுரீசுவர ரைத் துதித்து நீங்கள்தாம் அருள்புரிய வேண்டும் என வேண்டி

பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி ஏத்தாரில்லை..

என்று துவங்கி

குரும்பை யாண் பனையீன் குலையோத்தூர்
அரும்பு கொன்றையடிகளைப்
பெரும் புகலியுண் ஞானசம்மந்தன் சொல்
விரும்புவதோர் வினைவீடே'

என்று பதிகம் பாட, ஆண் பனைகளெல்லாம் பெண் பனைகளாகிக் குலை தள்ளிய அற்புதம் இங்கு நடந்தேறியது. அதனால் இத்தலத்தின் தல விருட்சமாக இன்றும் பனைமரமே விளங்குகிறது.




இத்தலவரலாற்றைச் சித்தரிக்கும் விதத்தில் ஒரு கற்சிற்பம் வழிபாட்டில் உள்ளது. இச்சிற்பத்தில் ஞானசம்மந்தப் பெருமான் சிவலிங்கத்தை வழிபடும் நிலையில் காணப்படுகிறார். அருகே பனைமரம் குலைகளுடன் காட்சியளிக்கிறது. இவ்வாறாக இத்தலத்தில் நடந்த அற்புத வரலாறு இங்கே சிற்ப வடிவில் இடம்பெற்றுள்ளது.

திருந்துதேவன்குடி

கும்பகோணம் அருகே திருந்துதேவன்குடி என்ற தலம் அமைந்துள்ளது.

மருந்த வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடி தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே

என ஞானசம்மந்தப்பெருமான் போற்றுகிறார்.

இங்கே இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்யப்படுகின்ற எண்ணை மருத்துவ குணம் உடையதாக விளங்கி அன்பர்களுக்கு நலமளிக்கின்றது.




இத்தல இறைவனை நண்டு பூஜித்து மோட்சமடைந்த தாகத் தலவரலாறு கூறுகிறது. அதனால்தான் இறைவனுக்கு கற்கடகேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டதாம். இத்தல வரலாற்றை இறைவன் சன்னிதிக்குச் செல்லும் வழியில் முன்மண்டபத் தூண் ஒன்றில் அமைந்துள்ள சிற்பம் வெளிப்படுகிறது. இதில் ஒரு நண்டு சிவலிங்கத்தை பூஜிக்கும் வடிவில் உள்ளது.

திருவதிகை - திருத்துறையூர்

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அருகே திருவதிகை - திருத்துறையூர் ஆகிய இரு தலங்கள் உள்ளன. திருவதிகையில் இறைவன் திரிபுர அசுரர்களை அழித்த வரலாறு சுதைச்சிற்பமாகக் கருவறை விமானச் சுவரில் காணலாம்.




இவ்வூருக்கு அருகில் உள்ள திருத்துறையூர் சிஷ்டகுருநாதேசுவர ர் திருக்கோயிலில் வந்து இறைவனை சுந்தரர் வழிபட்டு தவநெறியை வேண்டிப் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகின்றது.

மலையார் அருவித்திரண் மாமணியுந்திக்
கலையாரக் கொணர்ந்தெற்றியோர் பெண்ணை வடபால்
கலையாரல் குற்கன்னியாராடுந் துறையூர்த்
தலைவா! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே

என்று சுந்தப் பெருமான் போற்றுவதைக் காணலாம்.

இக்கோயில் கருவறைத் தென்சுவரில் இறைவனும் இறைவியும் அமர்ந்திருக்க அவர்கள்முன் சுந்தரர் வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இறைவன் அருள் வழங்கும் கோலத்தில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். சுந்தரர் வாழ்வோடிணைந்த இக்கோயில் தலவரலாறு இவ்வாறு சிற்ப வடிவில் காணப்படுவதை அனைவரும் கண்டு மகிழ வேண்டும்.

திருவாமாத்தூர்

விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் திருக்கோயிலில் நந்தி - காமதேனு இரண்டும் தவமிருந்து கொம்புகளைப் பெற்றதாக தலவரலாறு கூறுகின்றது. கோபுர நுழைவாயிலில் இக்காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

மயிலாபூர்

சென்னை நகரில் உள்ள மயிலாபூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் தேவி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்ட தலவரலாறு தனிச்சன்னிதியில் சிற்ப வடிவில் வழிபாட்டில் உள்ளதைக் காணலாம்.




திருவாடனை

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை திருத்தலத்தில் யானையும் ஆடும் இறைவனை போற்றி வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. இதனை எடுத்துக்காட்டுவது போல் கோயில் கோபுரத்தில் ஒரு சுதைச்சிற்பம் காணப்படுகிறது.

திருக்கச்சூர்

சென்னைக்கு அருகில் உள்ள திருக்கச்சூர் திருத்தலத்தில் திருமால் ஆமை வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டதாக அக்கோயில் தலவரலாறு குறிப்பிடுகிறது. இத்தல இறைவனை கச்சபேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இத் தலவரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் இக்கோயில் தூண் ஒன்றில் திருமால் ஆமை வடிவம் கொண்டு சிவபெருமானை வழிபடுவதைப்போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

கோயில் தேவராயன்பேட்டை

கும்பகோணம் அருகேயுள்ள கோயில் தேவராயன்பேட்டையில் உள்ள திருக்கோயில் மச்சபுரீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. பெரிய புராணத்தில் இத்தலம் திருச்சேலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை மீன் ஒன்று வழிபட்டதால் இறைவனுக்கு மச்சபுரீசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இப்புராண நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில் கோயிலின் முன்மண்டபத்தில் சிவலிங்க வடிவிலான இறைவனை மீன் வழிபடுவது போன்ற சிற்பம் காணப்படுகிறது.




திருப்பறியலூர்

சிவபெருமானின் வீரச்செயல்களை எடுத்துக்கூறும் தலங்கள் எட்டு. இதனை அட்டவீரத் தலங்கள் என்பர். மயிலாடுதுறை - செம்பனார் கோயில் அருகே உள்ளது 'திருப்பறியலூர் வீரட்டம்' எனும் திருத்தலம். இதனைப் பரசலூர் என்று மக்கள் அழைக்கின்றனர். இறைவன் வீரபத்திரரை ஏவித் தக்கனை அழித்த திருத்தலம் இது. இப்புராண வரலாறு கோயிலின் கருவறைத் தென்புறச் சுவற்றில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. கர்வமடங்கிய தக்கன் சிவபெருமானை வணங்குவதுபோல் இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோயில் அனைவரும் கண்டு வணங்க வேண்டிய தலமாகும்.

திருமாந்துறை

கும்பகோணம் வட்டத்தில் சூரியனார் கோயில் அருகே திருமாந்துறை எனும் திருத்தலத்தில் யோகநாயகி உடனாய அட்சயநாதர் திருக்கோயில் சிறப்பாக வழிபடப் பெறுகிறது. இக்கோயிலின் கோபுர நுழைவாயிலில் இக்கோயிலின் தலவரலாறு ஒரு தொகுப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத் தொகுதியில் இறைவனை கணபதி வழிபடல், கிளி வடிவில் அம்மனை வழிபடல், சூரியன் இறைவனை வழிபடல், முனிவர்கள் வழிபடல், இறைவனுக்கு கீழே இசைக்கலைஞர்கள் கருவிகளை இயக்குதல் மற்றும் அட்சயதீர்த்தம் எனும் திருக்குளம் ஆகிய அனைத்தும் வடிக்கப்பெற்றுள்ளன. அனைத்து தலவரலாறு நிகழ்வுகளும் ஒரே சிற்பத்தொகுதியில் காணக்கிடைக்கும் அரிய திருக்கோயில் இது.

ஆவுடையார் கோயில்

தமிழகத் திருக்கோயில்களுள் அற்புதக் கலைப்படைப்பாலும் அரிய வழிபாட்டு முறையாலும் சிறப்பிடம் பெற்று விளங்குவது ஆவுடையார் கோயில் எனப்படும் திருப்பெருந்துறை திருத்தலம். திருவாதவூரர் எனும் மாணிக்கவாசகப் பெருமான் குருந்த மரத்தின் கீழ் சிவயோகி வடிவில் எழுந்தருளியிருந்த இறைவனை தரிசித்து அவரிடம் சிவஞானம் பெற்று திருவாசகத்தைப் பாடியருளினார். ஒவ்வொரு வாசகமும் மாணிக்கம்போல் அமைந்த தனால் இறைவனே அவருக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டியருளினார்.




இக்கோயிலில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் சன்னிதியில் இறைவன் அவரை ஆட்கொண்ட நிகழ்வு ஒரு ஓவியத் தொகுப்பாகக் காணப்படுகிறது. இதில் இறைவன் அவருக்கு 'ஸ்பரிச தீட்சை' அளித்தது, 'மாணிக்கவாசகர் எனும் தீட்சாநாமம் கொடுத்து உபதேசித்தது', 'மாணிக்கவாசகருக்குத் திருவடி தீட்சை' அளித்தது ஆகிய காட்சிகள் வண்ண ஓவியங்களாகக் காட்சி தருகின்றன. ஒவ்வொரு ஓவியத்திற்குக் கீழும் அந்நிகழ்ச்சி பற்றிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது சிறப்பானது.

பெரும்பாலான தமிழகத் திருக்கோயில்களில் தலவரலாற்று நிகழ்ச்சிகள் சிற்பங்களாகவும் சுதைச் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் வடிக்கப்பட்டுள்ளன. இவை அத்திருக்கோயிலின் தலவரலாற்றுச் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டி அமைக்கப்பட்டவையாகும். அடுத்த முறை திருக்கோயில்களுக்குச் செல்லும்போது அங்குள்ள இத்தகைய கலைப்படைப்புக்களையும் கவனமாக இனம் கண்டு போற்றுவோம்!this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.