http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 101
இதழ் 101 [ நவம்பர் 2013] இந்த இதழில்.. In this Issue.. |
பண்டு தொடங்கி இன்றுவரை தமிழர்களின் வாழ்வியலுடன் இணைந்து வருகின்றது சோற்றுணவு. அரிசியில் நீரைப் பெய்து புழுக்கினால் அது சோறாகின்றது. மருத திணையின் பிரதான உணவு இந்நெற்சோறாகும். நெல்லில் மட்டுமல்ல, பிற கூலங்களிலிருந்தும் பெறப்பட்ட உணவை சமைத்து உண்டனர் நம் பண்டைய தமிழர்கள். அத்தகைய ஒரு உணவு வகைதான் மூங்கிலரிசி அடிசில்.
மழை கொஞ்சி விளையாடும் மலைகளைக் கொண்ட குறிஞ்சி நிலத்தில் நெடிதுயர்ந்த மூங்கில்கள் அதிகம். எனவே மூங்கிலரிசிச் சோறு ஒரு முக்கிய உணவு வகையாகக் கொள்ளப்பட்டது. மலைப்படுகடாம் வழியே விரியும் அன்றைய உணவியல் காட்சி ஒன்று. இன்புளிக் கலந்து மாமோராக க் கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து வழையமை சாரல் கமழ்த்துழைக நறுமலர் அணிந்த நாறிரு முச்சிக் குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி.. (மலைப்படுகடாம் - 179-185) விளக்கம்; மூங்கில் நெல்லின் அரிசியோடு மோரை நீராகப் பெய்து புளி கலந்து சமைத்த சோற்றினை பலவித ஊன்களோடு நறுமலர் சூடிய குறமகள் விருந்தினர்க்குப் படைத்து விருந்தோம்பல் புரிவாள் என்பதாம். இதேபோல் மேலும் ஒரு அகநானுற்றுக் காட்சி காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் அவர்களின் வரிகளில்... பாலை ----- இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல் நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் ஒலிகழை நெல்லின் அரிசியோ டோராங் கானிலைப் பள்ள அளைபெய் தட்ட வானிணம் உருக்கிய வா அல் வெண்சோறு புகரைத் தேக்கின் அகலிலை மாந்து.. (அகநானுறு 400;107;5-10) விளக்கம்; ஆண் மானினை பெரும்புலியொன்று கொன்று தின்றது. அதன் எஞ்சிய ஊன் பாறையில் காய்ந்து கிடக்கின்றது. பாலைச் சுரத்தின் வழியே சென்ற மக்கள் அவ்வூனினைக் கண்டு மகிழ்ந்தனர். காய்ந்த ஊனையும் மூங்கில் நெல்லின் அரிசியையும் தயிரையும் சேர்த்து வெண்சோறாக்கி அதைத் தேக்கின் இலையில் வைத்து உண்டதாகப் பாடல் வரிகள் நவில்கின்றன. சங்கப் பாடல்களைக் கூர்ந்து அவதானிக்கும்போது திணை சார்ந்த உணவுப் பழக்கங்கள் மட்டுமே உணவியல் வழக்காயிருந்தது என்று கூறவியலாது. குறிஞ்சி நிலத்து மூங்கிலரிசி உணவினை பாலை நிலத்தின் மக்கள் உண்டு களிக்கும் காட்சியினை மேற்கண்ட பாடல் வரிகளில் காணலாம். மிகவும் உடல் நலம் பயக்கும் மூங்கிலரிசிச் சோற்றுணவு மலைவாழ் மக்களிடம் இன்றும் வழக்கில் உள்ளது. ஈழத்தின் சில பகுதிகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது இவ்வுணவு. எளிய உணவாக இருந்தாலும் வலிமையைத் தரும் சத்துணவு என்பது உணவியல் வல்லுனர்களின் கூற்றாகும். வழக்கொழிந்துபோன சங்க கால உணவு வகைகளில் மூங்கில் அரிசிச் சோற்றுணவும் ஒன்றாகும். பண்டைய தமிழ் உணவியல் மரபுகளை மீண்டும் புதுப்பித்து இன்றைய தமிழன் நலம் கண்டு வாழும் நாள் விரைவில் வரவேண்டும். (ஆனந்த விகடன் இதழில் ஆறாம்திணை எனும் தொடரை எழுதி வரும் திரு கு.சிவராமன் அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.)this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |