http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 101

இதழ் 101
[ நவம்பர் 2013]


இந்த இதழில்..
In this Issue..

சர் இராபர்ட் புரூஸ் புட் நினைவு அறக்கட்டளை
காலங்காலமாக வண்ணமடிக்கப்பட்டு...
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 2
Chola Ramayana 10
Thirumeyyam - 7
மகேந்திர விஷ்ணு கிருகம்
தேடலில் தெறித்தவை - 8
சிற்பங்கள் ஓவியங்கள் காட்டும் தலவரலாறுகள்
மரபுக் கட்டடக்கலை - 01
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 2
மூங்கிலரிசி அடிசில்
இதழ் எண். 101 > கலையும் ஆய்வும்
மகேந்திர விஷ்ணு கிருகம்
ச.சுந்தரேசன்
நான் வேலூர் பால்பண்ணையில் பணிபுரிந்து வந்த நேரம் அது.

மகேந்திரரின் மற்றொரு குடைவரைக் கோயிலான மகேந்திரவாடி செல்லலாமென்று ஒரு நாள் தோன்றவே அதற்காக ஆயத்தமானேன். மகேந்திரவாடி அரக்கோணம் அருகே உள்ளதென்பதை அறிந்தபோது மனதில் இலேசான கலக்கம் தொற்றிக் கொண்டது. காரணம், அரக்கோணம் பகுதி சாலைகளின் அருமை பெருமைகள் அப்படி!

அரக்கோணம் வட்டத்தில் இயங்கி வந்த பால் உற்பத்தியாளர் சங்கங்களின் தரும் பாலை பால்வண்டிகளில் ஏற்றி வேலூர் பால் பண்ணைக்கு கொண்டு வருவதற்குள் மோசமான சாலைகளால் பயண நேரம் அதிகரித்து பாலே திரிந்து போய்விடுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!(ஹி..ஹி...அந்த சங்கங்களுக்கு நல்லபடியாக மூடுவிழா நடத்தி வெகு காலம் ஆகி விட்டது.)

ஆனால், மகேந்திர விஷ்ணு கிருகத்தைக் காணும் ஆவல் எனது மலைப்பினைப் போக்கியது. மேக மூட்டம் உடன் வர எனது பயணம் காலை 7 மணிக்கு வேலூரிலிருந்து மகேந்திரவாடி நோக்கித் துவங்கியது. என்னுடன் நிகான் D90 கேமிராவும், அதற்குத் துணயாக நான் புதிதாய் வாங்கியிருந்த MANFROTTO TRIPODடும் பயணித்தன. வாகனம் “வெள்ளை கேட்”டிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் திரும்பிய போது இலேசாகத் தூவானம் துவங்கியது. பயணித்த காரின் மிதமான வேகமும், குளிர்ந்த காற்றும் டாக்டர் கலைக்கோவன் அவர்களின் 'மகேந்திரர் குடைவரைகள்' நூலில் மகேந்திரவாடியைப் பற்றி விவரிக்கும் வரிகளை நினைவூட்டின.

“சிறப்பு மிக்க மகேந்திரபுரத்தில், மகேந்திர தடாகக்கரையில் பாறையைப் பிளந்து முராரியின் திடமான பெரிய விஷ்ணு கிருகத்தினை எடுப்பித்தவர் குணபரன். மனிதக் கண்களை மகிழ்விக்கும் அழகிய இத்திருக்கோயில் நல்லவர்களால் மிகவும் போற்றப்படும் தலமாகும்”.

அந்த நூலில் “மகேந்திர விஷ்ணு கிருகம்” அத்தியாயத்தில் என்னைக் வெகுவாக சிந்திக்க வைத்த பகுதி இதுதான். குடைவரையில் அமைந்துள்ள பல்லவ கிரந்த கல்வெட்டின் சாரமான இப்பகுதி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

என்ன சொல்ல விழைந்திருப்பார் மகேந்திரர்?

மகேந்திபுரத்தில் ஏதோ ஒரு நிலப்பரப்பில் "சிவனே" என்றிருந்த பாறை ஒன்றை அகழ்ந்து விஷ்ணு கோயிலை எடுப்பித்து, கோயில் கைங்கர்யங்களின் தேவைக்கு குளிர் தடாகம் ஒன்றினையும் செய்வித்தவர், தன்னுடைய கலையார்வத்தால் உருவாக்கிய கோயிலுக்கு "மனிதக் கண்களை மகிழ்விக்கும் அழகிய இத்திருக்கோயில்" என்று உறுதிமொழி தருகிறார்; ரிசர்வ் வங்கி கவர்னர் ரூபாய் தாளுக்கு தருவது போல!! கவர்னர் தரும் உறுதிமொழி ஒரு லட்சத்தினை தாண்டாது. ஆனால் குணபரன்" என்று கல்லில் அழுத்தமாய் கையெழுத்து இட்டுச் சென்றிருக்கும் மகேந்தரின் உறுதிமொழி காலம் கடந்து இன்றும் நம்முடன் பேசிக்கொண்டிருக்கிறது.

சரி....மனிதக் கண்களை மகிழ்விக்க வேண்டிய அவசியம் இவருக்கு ஏன் வந்தது? போர்க்களங்களில் மனித உயிர்களைப் பற்றிக் கவலைப்படாதவராயிற்றே இவர்? இந்த நான்கு வரிகள் காட்டும் அவரது மென்மையான மறுபக்கதான் எத்தனை வியப்பிற்குரியது? கல்லில் வடிக்கப்பட்டிருக்கும் இந்த வரிகளை எழுதும் போது அவர் மனதில் கடவுள் மீதும் குடிமக்கள் மீதும் எத்தனை காதலாய், எத்தனை கரிசனமாய் உணர்வுகள் ஓடியிருக்கும்? இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.

காரின் சக்கரங்கள் வழு வழு பாதையிலிருந்து விலகி தட..தட வென்று ஓடுவதைக் கேட்டு திடுக்கிட்டு சுய நினைவிற்கு வந்தேன். ஆம்..கார், பாணாவரம் சாலையில் இறங்கி ஓடிக் கொண்டிருந்த்து. தூறல் நின்று வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. கடைத்தெருவில் குகைக் கோயிலுக்கு வழி கேட்டேன். புரியாமல் சிறிது நேரம் விழித்து விட்டு அருகிலிருந்தவர் துணையுடன் செல்லும் வழி சொன்னார்.

சில நிமிட ஓட்டத்திற்குப் பின் முள் கம்பி வேலி அடைத்த நிலபரப்பின் மையப் பகுதியில் பெரிய பாறை ஒன்றும், அதன் அருகே சிறியதாய் ஒன்றும் தெரிந்தது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் மகேந்திர விஷ்ணு கிருகத்தினைக் காண வந்த எங்களை முள்கம்பி வேலியும் பூட்டப்பட்டிருந்த இரும்புக் கதவுகளும் வரவேற்றன.

வேலூரிலிருந்து புறப்பட்டு இத்தனை தூரம் வந்த நம்மால் இன்று பார்க்க முடியுமா என்றே லேசாக கிலி தட்டியது. வீதியில் சென்றவர்களிடம் இந்த கேட்டிற்கு சாவி யாரிடம் இருக்கும்? எப்போது அவர் வந்து திறப்பார்? என்று கேட்டேன் எனக்கு கிடைத்த விடை "தெரியாது" என்பது தான்.யாரையும் எதிர்பார்த்தால் இன்று நமது நோக்கம் நிறைவேறாது என்று தெளிவாக புரிந்தது. வீதியில் நடமாட்டம் இல்லாதது மனதிற்கு தைரியம் அளித்தது. சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்து விட்டு அந்த இரும்பு கேட்டின் மீது ஏறி உள் பக்கம் இறங்கினேன். சிறிய வயதில் மாங்காய் பறிக்க வேலி தாண்டியது இத்தருணத்தில் ரொம்பவும் கைகொடுத்தது. எனது கார் ஓட்டுனர் கேமிராவினையும், ட்ரைபாட் ஸ்டாண்டினையும் வெளிப்புறத்திலிருந்து கொடுத்தார். பின்னர் அவரும் தாண்டிக் குதித்து என்னைப் பின்பற்றினார். (ம்ம்ம்...அவர் வாங்கி வந்த வரத்தின் விசேஷம் போலும்!!)
இரு மருங்கிலும் முள்வேலிக் கம்பியடைத்த பாதையினூடே நடந்தோம். நன்கு செப்பனிடப்பட்ட மண் தடத்தின் இரு பக்கத்திலும் மழைத்துளி தங்கிய புல் தரையும் மனதிற்கு இதம் அளித்தன.குறுகலான பாதை சரேரென்று விரிந்து பரந்த வெளியினைக் காட்டியது. சுமார் நூறு அடி கடந்து சென்றதும் எதிர் பட்டது கிழக்கு நோக்கி நிற்கும் மகேந்திரரின் மகேந்திர விஷ்ணு கிருகம்.
ஆஹா! பொட்டல் வெளியில் தான் கண்ட தனிப் பாறை ஒன்றிற்கு இப்படியொரு சாகா வரம் அளித்துள்ளாரா, மகேந்திரர்? சுமார் 20X20 அளவிலான பாறையில் இத்தனை அழகான கவிதையைப் படைத்த குணபரர் நிஜமாகவே விசித்திரசித்தர் தான் என்று வியப்பிலாழ்ந்தேன்.குடைவரையின் நேர் எதிர்ப்புறத்தில் நிலக்கடலை வயல்களைத் தாண்டி அகன்ற பள்ளமான நிலப்பரப்பு தெரிந்தது. ஓ....! இது தான் "மகேந்திர தடாகமா? ஆஹா! இந்த கோயிலையும், இந்த தடாகத்தினையும் உருவாக்கியவர் மஹா ரசிகராகத்தான் இருக்க வேண்டும் இல்லையா!!


குடைவரையின் அமைப்பு


பாறையின் இரு மருங்கிலும் சமமாக இடைவெளி விட்டு இடைப்பட்ட பகுதியை கச்சிதமாய் செவ்வக வடிவில் அகழ்ந்து இக்குடைவரை உருவாக்கப்பட்டிருக்கிறது. முகப்பில் கிழக்கு நோக்கிய நிலையில் இரண்டு முழுத் தூண்களும், இவ்விரு தூண்களுக்கு வடக்கில் ஓர் அரைத் தூணும், தெற்கில் மற்றொரு அரைத் தூணும் அமைந்துள்ளன. தரை மட்டத்திலிருந்து சற்றே உயர்ந்து அமைந்துள்ள குடைவரையை அடைய கருங்கல்லினாலான படியொன்று பின்னாளில் அமைக்கப் பெற்றுள்ளது.முழுத்தூண்கள் சதுரம், கட்டு, சதுர அமைப்பில் உள்ளன. தூண்களின் கீழ்ச் சதுரம் மேற்சதுரத்தை விட அளவில் பெரிதாக அமைக்கப் பெற்றுள்ளன. கீழ்ச் சதுரங்களிலும், மேற்சதுரங்களிலும் சித்திர வேலைப்பாடமைந்த சதுர வடிவத்திற்குள்ளாக மிகவும் அற்புதமான வேலைப்பாட்டுடன் தாமரைப்பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

அரைத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் போன்ற எவ்வித அமைப்புகளுமின்றி எளிமையாக அமைக்கப் பெற்றுள்ளன. இவ்விரு அரைத்தூண்களின் மேற்பகுதியில் சதுர கட்டங்களுக்கு நடுவே தாமரைப் பதக்கங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அரைத்தூண்களின் கிழக்கு முகங்களில் இப்பதக்கங்கள் பாதியளவே காட்டப் பட்டுள்ளன.

தெற்கு அரைத்தூணின் தாமரைப் பதக்கத்தின் கீழே அதனை ஒட்டியவாறு மகேந்திரரின் நான்கு வரி கொண்ட பல்லவ கிரந்தக் கல்வெட்டு காணப்படுகிறது. என்னை மிகவும் கவர்ந்த இந்த வரிகளை கட்டுரையின் துவக்கத்தில் கண்டோம்.


மகேந்திரர் கல்வெட்டு


முகப்பில் உள்ள முழுத்தூண்களும், அரைத்தூண்களும் மேற்புறத்தில் அமைந்திருக்கும் தமது வளைந்த போதிகைக் கைகளால் உத்திரப் பகுதியைத் தாங்குமாறு காட்டப் பெற்றுள்ளது.
முகப்பினைத் தாண்டி உள்ளே சென்றால் நம்மை முக மண்டபம் வரவேற்கிறது. முக மண்டபத்தின் கூரையும், தரையும் கச்சிதமாக மேடு பள்ளங்களின்றி அமைக்கப் பட்டுள்ளன. இரு பக்கச் சுவர்களிலும் எவ்வித சிற்ப வேலைப்பாடுகளும் காணப்படவில்லை.

இரண்டாம் வரிசைத்தூண்களுக்கும் கருவறைக்கும் இடையே அர்த்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபத்தினைப் போலவே அர்த்த மண்டபத்தின் தரை மற்றும் கூரை சமன் படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.அர்த்தமண்டபத்தின் பின் சுவரில் கருவறை அமைந்திருக்கிறது. கருவறைக்கு செல்ல மூன்று படிக்கட்டுக்கள் உள்ளன. தரையில் துவங்கும் கீழ்ப்படி அரைவட்ட வடிவமாய் மற்றிரு படிகளிலிருந்து மாறுபட்டுள்ளது. கருவறை வாயிலின் இருபுறங்களிலும் பக்கத்திற்கு இரண்டாக நான்கு அரைத்தூண்கள் காட்டப்பட்டு இரண்டு அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி கோட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருபக்க கோட்டங்களில் ஆளுயர ஆண் வாயிற்காவலர்கள் சிற்பங்கள் அகழப்பெற்றுள்ளன. கருவறையில் பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்மரின் மூர்த்தம் ஒன்று உள்ளது.

மகேந்திர போத்தரையர் எடுப்பித்த ஏழு குடைவரைகளுள் சிறிய குடைவரை இதுவாகும். ஆறு குடைவரைகளை சிவபெருமானாருக்கு எடுப்பித்த மகேந்திரர் விஷ்ணுவிற்காக எடுப்பித்த குகைக்கோயில் இது ஒன்றே ஆகும். மனதார பாராட்டுமாறு இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் இவ்விடத்தை அழகுற பராமரித்து வருகின்றனர்.

போதிய நேரமும், வாய்ப்பும் இருப்பின் ஒருமுறை நீங்களும் சென்று வாருங்கள்.

ஒருவேளை அப்படி நேரம் கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. வாய்ப்பினை நீங்களே உருவாக்கிக்கொண்டு சென்று வாருங்கள்!this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.